சப்பாத்து

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 15, 2015
பார்வையிட்டோர்: 10,759 
 
 

‘மகள் எழும்புங்க. இஸ்கூலுக்கு லேட் ஆயிட்டு’

‘எனக்கு இஸ்கூல் போக ஏலாம்மா. தம்பி இரண்டுபேரயும் அனுப்புங்க’ என்று கூறிவிட்டு போர்வையை தலையோடு இழுத்து போர்த்திக்கொண்டாள் பரீனா.

மற்ற நாட்களில் அதிகாலையிலேயே எழுந்து தன் வேலைகளை எல்லாம் முடித்துக்கொண்டு, தாய்க்கு ஒத்தாசையாக ஏதாவது செய்துகொடுப்பாள். நேரம் வந்ததும் தம்பிகள் இருவரையும் எழுப்பி அவர்களையும் பாடசாலை செல்வதற்கு தயார் படுத்திவிடுவாள்.

எப்போதும் உற்சாகமாக எழுந்து பாடசாலைக்குச் செல்லும் தன் மகள் பரீனா இன்று ஏன் போக முடியாதென்கிறாள்? அப்படி என்றால் அவளுக்கு உடம்புக்கு முடியாமல் இருக்கும் என்று எண்ணிய அவளது தாய்,

‘பரீனா உடம்புக்கு ஏதும் முடியலயா?’ என்று கேட்டவாறு மகளின் நெற்றியிலும், கழுத்திலும் கைவைத்துப் பார்த்தாள்.

பரீனாவுக்கு காய்ச்சல் எல்லாம் ஒன்றுமில்லை. கழுத்து, நெற்றி எதுவும் கொதிக்கவில்லை. அவளுக்கு மனசுக்குள்தான் எல்லாவித கொதிப்புகளும் இருந்தது. பாடசாலை செல்லவே பிடிக்கவில்லை. வீட்டில் உம்மாவுடன் இருப்பதற்கே மிகவும் விரும்பினாள்.

ஆனால் பரீனா படிக்க முடியாமல் கடைசி மேசையில் இருப்பவள் அல்ல. அவள்தான் வகுப்பிலேயே முதலாவது அல்லது இரண்டாவது நிலைகளை தக்க வைத்துக்கொள்வாள். பொதுவாக ஒரு ஏழை மாணவியை சக நண்பிகளோ, ஆசிரியர்மாரோ தட்டிக்கொடுப்பது அன்று தொடக்கம் இன்று வரை வழமையில் இல்லைத்தானே. ஆதலினால் அவளுக்கு பாராட்டுகளோ, உற்சாகப்படுத்தல்களோ ஏதும் இருந்ததில்லை. தன் தாயின் ஊக்குவிப்பாலும், தந்தையின் உழைப்பாலும் அவள், தானே தன் நிலையை உயர்த்திக்கொள்ளப் பழகியிருந்தாள். ஐவேளை தொழுகையில்கூட தனது அறிவை விருத்தி செய்ய உதவுமாறு அல்லாஹ்விடம் மனம் உறுகி இறைஞ்சுவாள்.

தன்னைப் போன்றவர்களுக்கு கல்வி மாத்திரமே கைகொடுக்கும் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. அதனால் அவள் கல்வியைத்தான் உயிர்மூச்சாகக் கொண்டிருந்தாள். அவள் எட்டாம் தரத்தில்தான் கல்வி கற்கிறாள். என்றபோதும் உயர்தர வகுப்பு மாணவிகள் கூட பொது அறிவுக் கேள்விகளுக்கான விடைகளைக் கேட்க பரீனாவிடமே வருவார்கள். அந்தளவு ஞாபக சக்தியும், திறமையும் கொண்டவள் அவள்.

ஆனாலும் கூட பாடசாலையில் தமிழ்த்தின போட்டி, அறிவுக் களஞ்சியம், மீலாத் தின போட்டி, மாணவர் மன்றம் போன்றவை நடக்கும்போது தானாக முன்சென்று நிகழ்ச்சிகளுக்காக தன் பெயரைக் கொடுப்பது பரீனாவுக்கு சங்கடமாக இருந்தது. தனக்குள் திறமை இருக்கிறது என்பதை அறிந்த அவள் அப்படி செய்யாததற்கு காரணமும் இருந்தது. அதாவது அவ்வாறான போட்டி நிகழ்ச்சிகளுக்கு ஆசிரியரின் பிள்ளைகளே தெரிவு செய்யப்படுவார்கள் அல்லது முன்னமே அதற்குரியவர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பார்கள். அந்தந்த நிகழ்ச்சிகள் நிகழும்போது தான் தெரியும் இந்த ரகசியங்கள் எல்லாம்.

மாணவர் மன்றம் இருப்பதாய் அறியும்போது அவள் தன் வகுப்பாசிரியரிடம் சென்று,

‘டீச்சர் இந்த மாணவர் மன்றத்துல நானும் பாட்டு நிகழ்ச்சில கலந்துக் கொள்றனே’ என்று கேட்டபோது,

‘ஆ.. பரீனா.. மாஹிரா டீச்சர்ட மகள் தான் இந்த முறை பாட்டு நிகழ்ச்சிக்கு சேர்ந்திருக்கா’ என்றார்.

சேர்ந்திருக்கிறாவா அல்லது சேர்த்திருக்கிறார்களா என்ற கேள்வி எழுந்தாலும் அவளால் அந்த கேள்வியை கேட்க முடியாதல்லவா? அதனால்,

‘அப்போ பேச்சு நிகழ்ச்சில சேர்த்துக்குங்க. நா சீக்கிரம் பாடமாக்கிடுவேன்.’என்றாள்.

‘பரீனா உவைஸ் சேர்ட மகன் இந்த வகுப்புல பேச்சு திறமை மிக்கவன் என்று தெரியும்தானே. போங்க போய் இடத்தில உக்காருங்க’ என்றார் டீச்சர்.

இனிமேல் கேள்வி கேட்டகாதே என்பதை நாசூக்காக டீச்சர் சொல்லிவிட்டார். பரீனாவின் ஆசைக் கனவுகள் மண்ணாகிவிட்டது.

அவள் பாடசாலை வாசிகசாலையை நன்றாக உபயோகித்துக்கொள்வாள். வெள்ளிக்கிழமைக்கு சுமார் ஐந்நூறு பக்கங்கள் கொண்ட நாவல் ஒன்றை வாங்கிச் சென்றால் சனி, ஞாயிறுகளில் அதனை வாசித்து முடித்துவிடுவாள். அந்தளவுக்கு அவளுக்கு தேடல் இருந்தது.

ஒருநாள் பரீனாவின் தந்தைக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டது. அதனால் அவர் வேலைக்குச் செல்லவில்லை. வருமானம் குறைந்த நேரம் பார்த்து ஹஜ் பெருநாளும் நெருங்கிக் கொண்டிருந்தது. பெருநாள் என்றால் பரவாயில்லை. புது உடுப்பு இல்லாவிட்டால் பழையதை அணிந்துகொள்ளலாம். ஆனால் பரீனாவின் நான்கைந்து பாடக் கொப்பிகளின் தாள் தீர்ந்துவிட்டது. என்ன செய்ய வாப்பாவிடம் காசிருந்தால் வாங்கித் தந்திடுவார். ஆனாலும்கூட அவள் தன் தேவைகளை கூறியபோது அவர் கடனுக்குத்தான் கொப்பிகள் வாங்கிவந்தார். எல்லாமே எண்பது பக்க கொப்பிகள். அவையே அவள் வறுமையை ஊருக்கு காட்டிக்கொடுத்துவிடும் போலிருந்தது.

அடுத்த நாள் வகுப்பில் தன்னைப் போலவே மெலிந்த கொப்பிகளுடன் பரீனா இருந்தாள். பக்கத்தில் அமர்ந்திருந்த பிள்ளை 250 பக்கத்துக்கும் மேற்பட்ட தாள்கள் கொண்ட அட்லஸ் கொப்பிகள் வைத்திருந்தாள். அவள் பரீனாவின் எண்பது பக்க கொப்பிகளையும், பரீனாவையும் மாறி மாறிப் பார்த்தாள். ஆனால் எதுவும் சொல்லவில்லை. சற்று நேரத்தில் அப்பியாசங்களை கொடுத்துவிட்டு திருத்துவதற்காக வந்த மாஹிரா டீச்சர் பரீனாவைப் பார்த்த பார்வை இருக்கிறதே.. அதில் காணப்பட்ட ஏளனம் இருக்கிறதே.. அதைத் தாங்கிக் கொள்ள பரீனாவுக்கு மிகவும் கஷ்டமாகவும், வேதனையாகவும் இருந்தது.

இப்படியிருக்க ஹஜ் பெருநாளும் வந்தது. புதிய ஆடைகளை பரீனாவின் வீட்டில் யாரும் வாங்கவில்லை. வாங்கும் அளவுக்கு அவர்களுக்கு வசதியிருந்தால் தானே? ஹஜ் பெருநாளைக்கு பள்ளிக்குச் சென்று வரும்போது சிறுவர்; எல்லோருக்கும் பெருநாள் காசு கிடைத்தது.

பரீனாவுக்கும் பெருநாள் காசு கிடைத்து. அவற்றை பரீனா மிகவும் சந்தோசத்துடன் எண்ணிப் பார்த்தாள். கறுப்பு நிற சப்பாத்து ஒரு சோடி வாங்க வேண்டும் என்ற அவளது நெடுநாள் இலட்சியத்தை அடைய காசு போதாமல் இருந்தது. ஏற்கனவே அவள் பாவித்து வந்த சப்பாத்து பிய்ந்திருந்தது. எனவே அவள் தனது தாயிடம் இது பற்றி கதைத்தாள்.

அங்கே வந்திருந்த ஷரீப் தன் சகோதரியின் மகள் பரீனா சப்பாத்தை வாங்குவது பற்றியே கதைக்கிறாள் என்பதை உணர்ந்து பரீனாவை அழைத்தார். பிறகு தனது சைக்கிளில் அவளை அமர வைத்து சப்பாத்து கடைக்கு அழைத்துச் சென்றார்.

பரீனாவிடமிருந்த காசை எண்ணிப் பார்த்துவிட்டு மேலதிகமான தொகையை சேர்த்து புத்தம்புது கறுப்பு நிற சப்பாத்தை வாங்கிக் கொடுத்தார். அவளுக்கு மிகவும் சந்தோசமாயிருந்தது. இன்னும் மூன்று வாரங்களில் புதுவருடம் வந்துவிடும். புதுவருடத்தில் புதிய வகுப்புக்கு புதிய சப்பாத்தை போட்டுக்கொண்டு செல்லலாம்.. நண்பர்களிடம் காட்டி மகிழலாம்.. ஓடி விளையாடலாம்.. என்று பல கற்பனைகளில் ஆழ்ந்திருந்தாள்.

அவள் ஆசைப்பட்டபடியே அந்த நாளும் வந்தது. ஒரு சிட்டுக்ருவி போல அந்த கறுப்பு நிற சப்பாத்தைப் போட்டுக்கொண்டு நேரகாலத்துடனேயே பாடசாலைக்குச் சென்றாள். தன் நண்பிகளிடம் காட்டி மகிழ்ந்தாள். நண்பிகளும் மிகவும் சந்தோஷமாக அதைப் பார்த்து அதன் விலை பற்றியெல்லாம் கேட்டார்கள். தனக்கு பெருநாள் காசு கிடைத்ததில் இருந்து மாமா மீதி காசைப் போட்டு வாங்கித் தந்தது வரை கதையாக மகிழ்ச்சி பொங்க சொல்லி முடித்தாள்.

புது வருடத்தின் முதல் நாள் பாடசாலை தொடங்குவதற்கான மணி அடிக்கப்பட்டது. காலைக்கூட்டத்தில் எல்லோரும் வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள். பரீனா போன்ற ஓரிருவரைத் தவிர அனைவரும் புதிய உடைகள் உடுத்தி வெள்ளைப் புறாக்களைப் போன்று காணப்பட்டார்கள். காலைக்கூட்டம் நடந்து முடித்த பின்பு பாடசாலை பிள்ளைகளுக்கு ஒரு அறிவித்தல் சொல்லப்பட்டது. அதாவது இந்த வருடத்தில் இருந்து எல்லோரும் ஷவெள்ளை சப்பாத்து அணிந்து வர வேண்டும்| என்பதே அந்த அறிவித்தல். பரீனாவுக்கு தூக்கிவாரிப்போட்டது. ஆசை ஆசையாக காசு சேர்த்து மிகவும் கஷ்டப்பட்டு கறுப்பு நிற சப்பாத்து வாங்கியாகிவிட்டது. இப்போது திடீரென்று வெள்ளைச் சப்பாத்து வாங்கி வரச் சொன்னால் என்ன செய்வது? எப்படி அதை சாத்தியப்படுத்துவது? என்று குழம்பினாள்.

அடுத்த நாளும் பயந்தபடியே தன் புதிய கறுப்புச் சப்பாத்தை போட்டு வந்தாள். மாணவத் தலைவிகள் அவளுக்கு உபதேசம் செய்தார்கள். அதற்கு மறுநாளும் உபதேசம் செய்தார்கள். மூன்றாவது நாள் அதிபரிடம் கூட்டிச் செல்வதாகச் சொன்னார்கள். பரீனாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

வகுப்பாசிரியரும், வகுப்புத் தலைவியும் அவளது கறுப்பு நிறச் சப்பாத்தை ஒழித்துக் கட்டுவதிலேயே குறியாயிருந்தார்கள். ஏதோ செய்யக்கூடாத பெரிய தப்பை செய்தது போல அவளைப் பார்த்தார்கள். இறுதியில் பாடசாலை அதிபரும் பரீனாவுக்கு வெள்ளைச் சப்பாத்து போட்டுவரும்படி கடுமையாக எச்சரித்தார்.

பரீனாவுக்கு தாழ்வுச் சிக்கலாக இருந்தது. தான் ஒரு கோமாளியாக எல்லோரது பார்வைக்கும் விளங்குவதாக தனக்குள்ளே எண்ணிக்கொண்டாள். அவளுக்கு பாடசாலை வெறுத்துப்போனது. அதிபர், வகுப்பாசிரியர், மாணவத் தலைவிகள், வகுப்புத் தலைவி என எல்லோரையும் வெறுத்துப் போனது. அதனால்தான் பாடசாலை செல்ல முடியாது என்று படுத்துக் கிடக்கிறாள் பரீனா.

அவளது புதிய கறுப்பு நிறச் சப்பாத்து அநாதையாக கதவு மூலையில் வீசப்பட்டிருந்தது!!!

Print Friendly, PDF & Email

1 thought on “சப்பாத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *