கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 19, 2016
பார்வையிட்டோர்: 9,134 
 
 

மாலை மணி ஆறு.

அலுவலகத்திலிருந்த அனைவரும் வெளியேறி விட்டனர். அவன் மட்டும்

பியூன் சிங்காரத்தின் வரவிற்காக காத்திருந்தான். சிறிது நேரத்தில் சிங்காரம் ஒரு அசட்டுச் சிரிப்புடன், “சார் போகலாமுங்களா…கருக்கல்ல போனாத்தான் சீக்கிரம் திரும்பியாரலாம்” என்றான்.

இவன் ஒரு புன்சிரிப்புடன் மேஜையின் இழுப்பறைகளைப் பூட்டிவிட்டு, சாவிக் கொத்துகளை கையில் எடுத்துக் கொண்டு மின் விசிறியையும் விளக்கையும் அணத்துவிட்டு சிங்காரத்தைத் தொடர்ந்தான். வெளியே இருந்த தன்னுடைய ஸ்கூட்டரில் சிங்காரத்தை அமரவைத்து அவன் சொன்ன வழியில் ஸ்கூட்டரை செலுத்தினான்.

அவன் தன் அழகான மனைவியை முதல் பிரசவத்திற்காக அவளின் பிறந்த வீட்டிற்கு அனுப்பிய இந்த இரண்டு மாதங்களில் விரக தாபத்தால் மிகவும் தவித்துப் போயிருந்தான்.

இரண்டு நாட்கள் முன்பு, மதிய உணவு இடைவெளியின்போது பேச்சு வாக்கில் சிங்காரம், தன்னால் ‘அதற்கு’ ஏற்பாடு செய்ய முடியும் என்று சபலப் படுத்தியதன் விளைவு – இப்போது அவனுடன் சென்று கொண்டிருக்கிறான்.

ஒரு மணி நேர சவாரிக்குப் பிறகு, ஊருக்கு வெளியே உள்ள ஒரு கிராமத்தை சென்றடைந்தார்கள். குறுகலான ஒரு தெருவின் முனையில் ஸ்கூட்டரை நிறுத்தச் சொன்னான் சிங்காரம்.

நன்கு இருட்டியிருந்தது.

சிங்காரத்துடன் தெரு வழியே நடந்தான். தெருவின் இரு மருங்கும் குடிசைகளும் ஆங்காங்கே சில காரை வீடுகளும் இருந்தன. பெரும்பாலான குடிசைகளில் காடா விளக்கு சிமிடடிக் கொண்டிருந்தது.

தெருவினூடே அடிக்கடி கடக்க நேர்ந்த சாக்கடைகளும், அவற்றில் புரண்டு கொண்டிருந்த பன்றிகளும், புதிதாக வரும் இருவரின் பிரவேசத்தை தனது மூக்கின் சிலேட்டுமப் படலத்தால் உணர்ந்து கொண்டமையால் இவர்களைப் பார்த்து குரைத்த நாய்களும், இரவில் ஆக்கிச் சாப்பிடும் குடிசைகளிலிருந்து வெளிவந்த மசால் குழம்பின் தூக்கியடிக்கும் வாசனையும்.. புதிய சூழ்நிலையில் இவனுக்குச் சென்னையின் புற நகர் வித்தியாசமாகத் தெரிந்தது.

மாடியுடன் கூடிய ஒரு பழைய வீட்டின் முன் இருவரும் நின்றார்கள்.

சிங்காரம் இவனை அங்கேயே இருக்கும்படி சைகை செய்துவிட்டு வீட்டின் முன்புற இருட்டினுள் சென்று, “சொர்ணாக்கா, சொர்ணாக்கா” என்று இருமுறை குரலை உயர்த்திக் கூப்பிட்டான்.

“சொர்ணாக்கா இல்லன்னே, கிராக்கிய இட்டுக்கினு இப்பத்தான் கோடம்பாக்கம் போயிருக்கு. இன்னிக்கு நைட்டுக்கு ஒரு பெரிய கை நம்ம மனோன்மனிய புக் பண்ணியிருக்கு” என்று கரகரத்த குரலில் சொல்லியபடி வஸ்தாது ஒருவன் வாயில் புகையும் பீடியுடன் அவன் எதிரில் வந்தான்.

சிங்காரம் அவனை சற்று தள்ளிக் கொண்டுபோய் கசமுசவென்று எதோ ரகசிய குரலில் பேசிவிட்டு திரும்பி இவனிடம் வந்து, “சார், நான் உங்களிடம் சொன்ன ஆளு மனோன்மணி, அவ இப்ப இங்க இல்ல, ஆனா இதே வீட்டு மாடியில வேறு ஒண்ணு இருக்குதாம், தொழிலுக்கு புச்சாம். வேணுமான்னு இந்த ஆளு கேக்கான்” என்றான்.

வஸ்தாது பீடிய புகைத்தபடி இவனைப் பார்த்தவாறு இவனது பதிலுக்காகக் காத்திருந்தான்.

சிங்காரம் ஏற்கனவே அழகாக தன்னிடம் வர்ணித்திருந்த மனோன்மணி இல்லையென்றதும் இவனுக்குச் சப்பென்று ஆகிவிட்டது. எனினும் தான் இன்னொரு தடவை இதற்காக பெட்ரோல் செல்வழித்துக்கொண்டு வர முடியாது, தவிர இருட்டில் செய்யப் போகின்ற காரியத்துக்கு அழகென்ன, அசிங்கமென்ன என்று தன்னை சமாதானப் படுத்திக்கொண்டு, “சரி” என்று சிங்காரத்திடம் தலையாட்டினான்.

வஸ்தாது பீடியைக் கீழே போட்டு அணைத்துவிட்டு அங்கிருந்தபடியே வீட்டின் மாடியை நோக்கி, “எ புள்ள சிமிக்கி, ஆளு வந்திருக்கு, லைட்டைப் போடுன்னு” குரல் கொடுக்க, சிறிது நேரத்தில் மாடியறையில் லேசாக வெளிச்சம் பரவியது.

அடுத்த சில நிமிடங்களில் பணம் இவனிடமிருந்து சிங்காரத்தின் வழியாக வஸ்தாதின் கைக்கு மாறியது.

“சார் இப்படிப் போங்க” என்று வீட்டை ஒட்டி வெளிப்புறமிருந்த மாடிப்படிகளை இவனிடம் காண்பித்தான் வஸ்தாது.

“நான் ஸ்கூட்டராண்ட நிக்கேன், முடிச்சுட்டு மெதுவா வாங்க” என்று கண்ணை அசிங்கமாக சிமிட்டியபடி சென்றான் சிங்காரம்.

இவன் இருட்டின் குறுகிய மாடிப் படிகளில் ஏறிச்சென்றான். படிகளும் சுவரும் சிதிலமடைந்திருந்தன.

தலையில் கொத்து மல்லிகைப் பூவுடன் இவனை மாடி வராண்டாவில் எதிர்கொண்டாள் சிமிக்கி. அவள் அருகில் சென்று நின்றான் இவன்.

“உள்ளார போய் குந்துய்யா” என்றாள்.

அவள் இவ்விதம் தன்னை ஒருமையில் குறிப்பிட்டது இவனுக்கு என்னவோ போல் இருந்தது.

அறையினுள் சென்றான்.

சுவர்களும் தரையும் காரை பெயர்ந்து, அறுபது வாட்ஸ் பல்பின் ஒளியில் அந்த அறை அழுது வடிந்து கொண்டிருந்தது.

எண்ணைப் பசையுடன் கூடிய தலையணையும், பீய்ந்த பாயும் போடப்பட்டிருந்த கட்டிலின் ஓரத்தில் கூச்சத்துடன் அமர்ந்தான்.

முற்றிலும் அந்நியமான இடத்திற்கு வந்திருந்ததால், இவனுக்கு மனதை என்னவோ செய்தது.

அவள் உள்ளே வந்தாள். இவனை நிமிர்ந்துகூடப் பாராது, சர்வ அலட்சியமாக திரும்பி சற்றுக் குனிந்து கதவைத் தாழிட்டாள்.

அவ்விதம் அவள் குனிந்த நிலையில் பெரியதாகத் தெரிந்த அவள் பிருஷ்ட பாகங்களைப் பார்க்கையில் இவன் மனம் படபடத்தது.

கதவைத் தாழிட்டவள், தன் தலையில் இருந்த மல்லிகைப் பூவை அலுங்காது எடுத்து சுவருடன் ஒட்டியிருந்த மாடத்தில் பத்திரமாக வைத்தாள். தலை மயிரை விரித்து விட்டாள். அதை ஒருமுறை உதறி முடிந்து கொண்டையிட்டுக் கொண்டாள்.

தன்னை மாதிரி பலர் இவளிடம் இந்த இரவில் வரலாம். எனவே இன்று முழுதும் இதே மல்லிகைப் பூவைக் கசங்க விடாது காப்பாற்றியாக வேண்டிய அவளின் அவசியத்தை இவன் தன்னுள் உணர்ந்து கொண்டான்.

பக்கவாட்டில் திரும்பி இவனை முதன் முறையாக ஏறிட்டுப் பார்த்தாள்.

உறவுக்கு முதல் படியாக இவன் அவளைப் பார்த்து புன்னகத்தான். அவள் சிரிக்கவில்லை. சிறிது சமாளித்துக்கொண்டு, பேச்சை ஆரம்பிப்பதற்காக ”உன் பெயரென்ன?” என்று கேட்டான்.

“யோவ் முந்தானைய விரிச்சு தொழில் பண்ற என்னை மாதிரி பொம்பளைங்களுக்கு நிரந்தரமான பெயர் ஊர்ன்னு ஒண்ணும் கிடையாதுய்யா. கண்ணகி, சீதைங்கிற பெயர்களைத் தவிர என்ன வேனுமின்னாலும் வச்சுக்கய்யா” என்றவள் அவன் அருகில் வந்தமர்ந்து மிக மெல்லிய பரிதாபமான குரலில், “யோவ் ரூபாய அந்த வஸ்தாதுகிட்ட

குடுத்துட்டையே, அவன் குடிச்சுட்டு வந்து நிப்பான்யா… நான் நல்லா சாப்பிட்டு மூணு நாளாச்சு, வயித்த பசிக்குதுய்யா, ஒரு இருபது ரூபா எனக்கு போட்டுக் கொடுய்யா, உன்ன முடிச்சுட்டு வெளிய ஓட்டல்ல போய் வயிறார சாப்பிடனும்யா” என்றாள்.

இதைச் சொல்லி முடிக்கையில் அவள் கண்கள் குளமானது.

அவளின் அகோர வயிற்றுப் பசிக் கொடுமையின் முன், தன் உடல் பசி அடிபட்டுப் போய், அவளிடம் பரிதாப உணர்வு இவனுக்கு மேலோங்கியது.

ஆசைகள் பொசுங்கிப்போய் ஆன்ம பலம் அதிகரிப்பதை உணர்ந்தான்.

ஒன்றும் பேசத்தோன்றாது, ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை அவள் கையில் திணித்துவிட்டு, கட்டிலைவிட்டு எழுந்தான்.

திகைத்துப் போனவளாய், “என்னய்யா எந்திரிச்சுட்டே?” என்றாள்.

“எனக்கு நேரமாச்சு, நான் போறேன்” என்று முனகியபடி அறைக்கதவை திறந்தான். அவள் இதை எதிர் பார்க்கவில்லை.

“இந்தாய்யா நீ குடுத்த ஐம்பது ரூபாய் … நீதான் ஒண்ணுமே பண்ணலையே” என்றவளை பொருட்படுத்தாது படிகளில் விரைந்து இறங்கி தெருவில் நடக்கலானான்.

தான் மிகவும் சீப்பாகி விட்டதாகத் தன்னுள் நினைத்துக் கொண்டான்.

தார்மீகத்தின் படியும், சட்டத்தின் அடிப்படையிலும் தான் செய்யவிருந்தது மிகவும் தவறான காரியம் என்பதை உணர்ந்தான்.

கேவலம் திருமணத்திற்கு முன் தன்னால் தீவிரமாகக் காக்கப்பட்ட தன் பிரம்மச்சர்யம், திருமணமாகி அழகான தன் மனைவி தந்த சுகத்திற்குப் பிறகும் – தற்போது அவள் இங்கு இல்லாத ஒரே காரணத்தால் – ஒரு வேசியிடம் சோரம் போகவிருந்த தன் நிலையை எண்ணி நொந்து கொண்டான்.

உள்ளங்கையகலமுள்ள சதை கோளத்திற்கு, அது தரும் சுகத்திற்கு, காசு கொடுத்து தன ஆண்மையை அடமானம் வைக்கவிருந்த, தன்னுடைய நிலையை எண்ணி சுய பச்சாதாபம் கொண்டான்.

இவனைக் கண்டதும் சிங்காரம் புகைத்துக் கொண்டிருந்த பீடியை காலின் கீழே போட்டு அணைத்துவிட்டு, “என்ன சார், முடிஞ்சுதா?” என்றான்.

தன் மன நிலைய விளக்கிச் சொன்னால் இவனுக்கு என்ன புரிந்துவிடப் போகிறது என்று நினைத்தவன், பதிலேதும் பேசாது தன் ஸ்கூட்டரைக் கிளப்பினான். சிறிது நேர மெளன சவாரிக்குப் பிறகு, சிங்காரத்தை வழியில் இறக்கி விட்டான்.

அவனது கையில் ஒரு ஐம்பது ரூபாய்த் தாளை திணித்துவிட்டு கிளம்ப எத்தனித்தவனிடம், “சார், உங்களுக்கு வேணுமின்னா வர சனிக்கிழமை மனோன்மனிய உங்க வீட்டுக்கு ஒரு நைட்டுக்கு ரேட் பேசி இட்டார சொல்லிரலாம்” என்றான்.

இவனுக்கு உடம்பு கூசியது. தன் பால் அவனுக்கு இருந்த மரியாதையைத் தானே குறைத்துக் கொண்டமையை எண்ணிக் குறுகிப் போனான்.

வீட்டையடைந்ததும் டிரெஸ்ஸிங் டேபிளின் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தபோது, ஒரு குற்றவாளியைப் பார்ப்பதுபோல் உணர்ந்தான். தானும், தன் மனைவி நிர்மலாவும் சேர்ந்த நிலையில் இருந்த புகைப் படத்தை உற்றுப் பார்த்தான்.

எதற்கும் கோபப் படாமல் அன்பால், சிரிப்பால் தன்னை அரவணைத்து ஆதரிக்கும் தன் மனைவிக்கு, தான் செய்யத் துணிந்த துரோகத்தை நினைத்த போது அவன் கண்களில் நீர் முட்டியது.

அரை மணி நேரம் ஷவரில் குளித்துவிட்டு வந்ததும், மனம் சற்று நிம்மதி அடைந்தது.

சுவாமிக்கு விளக்கேற்றி வைத்துவிட்டு, தினமும் தான் காலையில் சொல்லும் கந்தர் சஷ்டி கவசத்தை அன்று இரண்டாம் முறையாகச் சொன்னான்.

“எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்’

எத்தனையடியேன் எத்தனை செய்தாலும்

பெற்றவன் நீ பொறுப்பது உன் கடன்”

குரல் உடைந்து வெடித்து அழுதான்.

படுக்கும் முன் பீரோவைத் திறந்து நிர்மலாவின் புடவைகளை அள்ளி

எடுத்து தன் மீது போர்த்துக்கொண்டு, புடவையிலிருந்த அவளின் வாசனையை நுகர்ந்தான்.

மனதளவில் அவன் தன ஏகபத்தினி விரதத்தை முறித்துக் கொண்டாலும்,

உடலளவில் அவன் ஏகபத்தினி விரதனாகவே தூங்கிப் போனான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *