பூங்கொடி அதிகாலையில் எழுந்து, படுத்து கிடந்த பாயை சுருட்டி ஒரு மூலையில் வைத்தவள், வேகமாக காலை கடன்களை முடித்து விட்டு, அடுப்பை பற்ற வைத்த தண்ணியை சூடாக்கினாள், கணவன் நவநீதனும் கண் விழித்து விட்டான், மழை பெய்யும் சத்தம் கேட்டது எழுந்து சமையலறை பக்கம் வந்தான், காலையில் மழை பெய்கின்றது, இன்று எப்படி தான் வியாபாரம் நடக்குமோ தெரியவில்லை என்று முணுமுணுத்தப் படி வந்தவனிடம், உனக்கு வெயில் அடித்தாலும் பிரச்சினை, மழை பெய்தாலும் பிரச்சினை என்று சிரித்தாள் பூங்கொடி, உனக்கு என்னடி தெரியும், இன்று வெள்ளிக்கிழமை, மழை பெய்தால் கோயிலுக்கு சனம் குறைவாக தான் வருவார்கள், பிறகு எப்படி நம்முடைய பூ வியாபாரம் நடக்கும் என்றான் நவநீதன், சாமி கும்பிட நினைத்தவர்கள் எப்படியும் வருவார்கள், நீ அதை நினைத்து கவலைப் படாதே, பல்லை தேய்ச்சிட்டு வா, சுக்குத் தண்ணி வச்சி தாரேன் என்றாள் அவள், மழை என்றால் போதும், சுக்கு தண்ணி வைச்சி ஒப்பேத்திப்புடுற என்றான் அவன், பால் கொஞ்சம் தான் இருக்கு, நம்ம புள்ள எந்திரிச்சி காப்பி கேட்கும் என்றாள் பூங்கொடி, அதே போல் கண்ணை கசக்கி கொண்டு அம்மா எனக்கு காப்பி தாரியா என்று வந்து நின்றாள் குழலி, முதல் போய் பாயை சுருட்டி எடுத்து வைத்திட்டு, பல்லை தேய்ச்சிட்டு வா, பத்து வயதாகி விட்டது இன்னும் அம்மா சொல்லனும் என்றாள் பூங்கொடி, நான் பாயை சுருட்டி எடுத்து வைத்து விட்டேன், உனக்கு இருட்டில் கண்ணு தெரியவில்லை என்றாள் மகள், ஆமாடி இருட்டில் தெரியவில்லை தான், உனக்கு பழைய சாதத்தை தாளிச்சி தாரேன் எடுத்துக்கிட்டு போரியா பாடசாலைக்கு என்றாள் பூங்கொடி, சரி எதையாவது தா, சாப்பிட இருந்தால் போதும்,ஒழுங்காக சுத்தி கொடு, நேற்று கீழே கொட்டப் பார்த்தது என்றாள் குழலி, உனக்கு ஒரு டிப்பன் பாக்ஸ் வாங்கனும் என்று நினைக்கிறேன், அதற்கு முடிய மாட்டேங்குது என்றாள் அம்மா.
எனக்கு அது எல்லாம் வேண்டாம், எப்போதும் போல வாழை இலையில் போட்டு கடதாசியில் சுத்தி தா அது போதும் எனக்கு என்றாள் மகள், இன்னைக்கு மழை பெய்கிறது,உன்னுடைய கிழிந்த சப்பாத்துக்குள் தண்ணி போய் நனைந்து விடுமே என்றாள் பூங்கொடி, அது கொஞ்ச நேரத்தில் காய்ந்து விடும், இல்லை என்றால் வகுப்பில் கொஞ்ச நேரம் கலட்டி வைப்பேன் மிஸ் ஒன்னும் சொல்ல மாட்டார்கள் என்றாள் அவள்,குடும்பத்தின் வறுமை குழலிக்கு நன்றாகவே தெரியும், பூ கட்டி சம்பாதிக்கும் பணத்தில் இந்த ஓட்டை வீட்டுக்கு ஒரு வாடகை, அது போக குழலியை படிக்க வைப்பதுவே பெரிய விடயம், அதனால் எதையும் சமாளித்து பழக்கப் பட்டவள் குழலி, அம்மா அப்பாவை தொல்லை படுத்தக் கூடாது என்பதில் கவனமாக இருப்பாள் அவள், மூவரும் பழைய சாதத்தை சாப்பிட்டு முடித்தார்கள் தாளித்த பழைய சாதத்தை தனிதனியாக பொட்டலம் கட்டி குழலியின் பைக்குள் ஒன்றுடன் தண்ணீர் போத்தலில் தண்ணீர் நிறைத்து அதையும் சேர்த்து வைத்து மூடினாள், மற்றயதை தனது பைக்குள் வைத்து தண்ணீர் போத்தலையும் எடுத்துப் வைத்து விட்டு, வெளியில் எட்டிப் பார்த்தாள் பூங்கொடி, மழை அதிகமாகவே இருந்தது, இப்படி மழை பெய்கிறதே என்று மனதில் நினைத்தப் படி வாசலில் நின்றாள் அவள், என்னடி இப்படி நின்றால் சரிவருமா,வா பூ கூடைகளை வெளியில் எடுத்து வைப்போம் என்றான் நவநீதன், இருவரும் சேர்ந்து வெளியில் பூ கூடைகளை எடுத்து வைத்து அதன் மேல் பொலித்தீனை போட்டு ஒரு நாடாவில் கூடையை சுற்றி கட்டினார்கள்,கதவை பூட்டி விட்டு கையில் பையுடன், தலையில் பூ கூடையை சுமந்தப்படி நடக்க ஆரம்பித்தார்கள், குழலி பழைய குடையை பிடித்துக் கொண்டு, பாடசாலை பையுடன் அவர்கள் பின்னாடியே நடந்தாள்.
பாடசாலை ஆரம்பிப்பது தாமதமாக தான், குழலியை தனியாக வீட்டில் விட முடியாது,அதனால் அவர்கள் பூ கட்டி கொடுக்கும் இடத்திற்கு போய் இருந்து விட்டு, பாடசாலை ஆரம்பிக்கும் அரைமணித்தியாலத்திற்கு முன்பாக பக்கத்தில் இருக்கும் பாடசாலைக்கு நடந்து போய் விடுவாள் குழலி, பாடசாலை முடிந்தப் பிறகும் வீட்டுக்கு போக மாட்டாள்,பூ கட்டும் இடத்திற்கு வந்து விடுவாள், பூங்கொடி ஏழு மணியளவில் வீட்டுக்கு புறப்படும் மட்டும் மழையோ வெயிலோ குழலி அமைதியாக உட்கார்ந்து ஏதாவது படிப்பாள், இல்லை என்றால் பூ கட்டுவதற்கு கொஞ்சம் பழகுவாள்,நவநீதன் குழலி கையில் வடை ஒன்னு வாங்கி கொடுப்பான், அதுவும் எந்த நாளும் இல்லை, அதை சாப்பிட்டு ஏழு மணிக்கு அம்மாவுடன் வீட்டுக்கு வந்து விடுவாள் குழலி, அதன் பிறகு அவசரமாக சாதத்தை வடித்து,ஒரு குழம்பை வைத்து நவநீதன் ஒன்பது மணிக்கு வருவான் மூவரும் சாப்பிட்டு படுக்க பத்து மணியாகி விடும்,அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து,பழைய சாதத்தை தாளித்து கையோடு எடுத்துக் கொண்டு,வெளிச்சம் வரும் முன்பே பூ வியாபாரம் செய்ய ஓடி வந்து விடுவார்கள், இன்றும் பூ கூடைகளை கோயில் தெருவில் ஓர் இடத்தில் வைத்தார்கள், பழைய பெரிய குடை ஒன்று நட்டு வைத்து இருந்தது அதன் கீழ் மேஜை ஒன்று போட்டு வைத்து இருந்தார்கள்,இது தான் நவநீதனும், பூங்கொடியும் வியாபாரம் செய்யும் இடம்,கூடையில் இருந்த பூக்களையும்,பூமாலையும் எடுத்து வைத்தார்கள், மிகுதியை கூடைக்குள் வைத்து மேஜை அடியில் தள்ளி வைத்தார்கள்,ஒரு ஊதுபத்தியை பற்ற வைத்து வைத்துவிட்டு,கோயிலை பார்த்து ஒரு கும்பிடு போட்டு விட்டு வியாபாரத்தை தொடங்கினார்கள்,குழலி கோயிலுக்குள் போய் உட்கார்ந்துக் கொண்டாள் மழை சாரல் அதிகமாக இருந்ததனால்,வழமையாக வியாபாரம் செய்யும் இடம் இது தான்.
இப்படி ஓடி ஓடி உழைத்தால் மட்டுமே அரை வயிறு சாப்பிட முடியும்,சில நேரங்களில் தொடர்நது மழை பெய்தால்,பூக்கள் வரவும் வராது, விலை அதிகரிக்கும், வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையும்,ஒவ்வொரு நாளும் நிரந்திரமில்லாத வருமானம், இந்த தொழிலை விட்டால் வேறு எதுவும் தெரியாது இருவருக்கும், பரம்பரை தொழிலாக செய்து வருகிறார்கள் ஆனால் முன்னேற்றம் எதுவும் இல்லை, அதற்காக கவலை படுவதும் இல்லை,கடவுள் எங்களை இந்தளவில் சரி வைத்திருக்கார் இது போதும் என்று நினைக்கும் மனது மூவருக்கும், அதற்கு காரணம் கோயில் வாசலில பிச்சை எடுப்பதற்கு ஒரு கூட்டமே உட்கார்ந்து இருக்கும், அதை பார்க்கும் போது இவர்கள் மனதில் அப்படி தான் தோன்றும்,அன்று ஒரு குடும்பம் காரில் வந்து இறங்கியது, அமிர்தா அவளின் கணவன் விக்னேஷ்வரன் மகள் மாதங்கி மகன் ஐங்கரன் வந்து இறங்கியவர்கள் இவர்கள் தான் அமிர்தா பட்டுப் புடவை கட்டி,கழுத்து நிறைய நகைகள் போட்டு ஜம்மென்று இருந்தாள், மாதங்கி கழுத்திலும் அம்மாவிற்கு எந்த விதத்திலும் நானும் குறைந்தவள் இல்லை என்பதற்காக நகைகளை அள்ளி போட்டுக் கொண்டாளோ என்று நினைக்கும் அளவிற்கு அவள் உடம்பிலும் நகைகள் மின்னியது,அப்பா,மகன் கழுத்தில் தங்க சங்கிலி,கையில் பெரிய மோதிரங்கள்,கைசங்கிலி என்று மின்னியது.
நால்வரும் குடையை பிடித்து நடந்து வந்தார்கள்,அவர்களை கண்டதும் நகை கடை வைத்திருப்பவர்களாக இருக்கும் என்று பூங்கொடிக்கு தோன்றியது,அமிர்தா பூ வாங்க பூங்கொடியிடம் வந்தாள்,வந்தவள் பூக்களின் விலையெல்லாம் கேட்டு விட்டு,என்னம்மா இவ்வளவு விலை கூட சொல்லுற என்றாள் அவள்,இல்லையம்மா பூ விலையெல்லாம் கூடி விட்டது என்றாள் பூங்கொடி, தலைக்கு வைப்பதற்கு மல்லிகை சரமும்,சாமி கும்பிடுவதற்கு உதிரி பூக்களும் வாங்கியவள்,தன் கணவனிடம் பணத்தை வாங்கி கொடுத்துவிட்டு,தன் தலையில் மல்லிகை சரத்தை வைத்துக் கொண்டு,மிகுதியை மகளிடம் நீட்டினாள், எனக்கு வேண்டாம் என்றாள் மகள், அமிர்தா அதட்டியதும் வேண்டா வெறுப்பாக வாங்கி தலையில் வைத்தவள்,இது தான் நான் உங்களிடம் சேர்ந்து எங்கும் வருவது இல்லை என்றாள் மகள்.
நால்வரும் கோயில் போய் சிறிது நேரத்தில் வெளியில் வந்தார்கள்,ஐங்கரனின் பிறந்த நாள் அதற்காக வந்தவர்கள்,அவன் பெயரில் ஓர் அர்சனையை கொடுத்து விட்டு,அவசரமாக வெளியேறும் போது, வாசல் பக்கம் பிச்சை எடுப்பதற்கு ஒரு கூட்டமே உட்கார்ந்து இருந்தார்கள்,இவர்களுக்கு வேறு வேலையில்லை,என்னிடம் சில்லரை இல்லை,உன்னிடம் இருந்தால் போட்டு விட்டு வா என்றான் விக்னேஷ்வரன் அமிர்தாவிடம், உங்களிடம் எப்போது தான் சில்லரை இருந்தது என்று அதட்டினாள் அமிர்தா, சரி விடு அம்மா என்னிடம் இருக்கு என்று மாதங்கி கொடுத்தாள், இருந்ததை அனைவருக்கும் போட்டு விட்டு வந்த அமிர்தா கோயில் வரும் போது சில்லரை எடுத்து வர தெரியாதா இவ்வளவு பிச்சைகார கூட்டம் உட்கார்ந்து இருக்கு சில்லரை போடாமல் வரமுடியுமா என்றாள் கணவனிடம்
ஆமாம் வரும் போது எல்லாம் சில்லரை போட்டால்,நான் பிச்சைக்காரன் ஆகி உட்கார்ந்து இருக்க வேண்டியது தான் என்றான் அவன்,நாங்கள் என்ன அடிக்கடியா கோயில் வருகிறோம், என்றாவது ஒரு நாள் எட்டி பார்க்கின்றோம் எங்களை அவர்கள் என்ன நினைப்பார்கள் என்றாள் அமிர்தா, இந்த பிச்சைக்காரக் கூட்டம் எங்களைப் பற்றி என்ன நினைத்தால் நமக்கு என்ன என்னை மதிக்க ஒரு கூட்டமே இருக்கு என்றான் விக்னேஷ்வரன்,இந்த மாதிரி இடங்களில் பணம் போட்டால் அதுவும் மதிப்பாக தான் இருக்கும்,எங்களை தெரிந்தவர்கள் யாராவது கோயில் வந்து இருந்தால் என்றாள் அவள் அதுவும் உண்மையாக தான் பட்டது அவனுக்கு,மற்றவர்கள் நம்மை கவனிக்க வேண்டும் என்பதற்காகவே உதவி செய்து பழக்கப்பட்டவர்கள், அந்த நேரத்தில் விக்னேஷ்வரனின் கைதொலைபேசி ஒலித்தது,எடுத்து எரிந்து விழுந்துக் கொண்டே வேகமாக வாகனத்தை நோக்கி நடந்தான்,அவன் குடும்பமும் அவன் பின்னுக்கு ஓடியது என்று தான் சொல்ல வேண்டும்,அனைவரும் அவசரமாக வாகனத்தில் ஏறி பறந்து போனார்கள்,பூங்கொடி இது அனைத்தையும் கவனித்தப் படியே வியாபரத்தை நடத்திக் கொண்டு இருந்தாள்,மனதில் சிரிப்பாகவும் வந்தது, எவ்வளவு பணம் இருந்தும் மற்றவர்களுக்கு உதவும் மனமில்லை,அப்படியே உதவினாலும் மற்றவர்களுக்கு அது தெரிய வேண்டும் என்று நினைக்கும் இவர்களுக்கு தான் காலம்.
கோயில் வந்து சாமி கும்பிட கூட நேரம் இல்லாம் பணம் சம்பாதிக்க ஓடிக் கொண்டு இருக்கின்றார்கள் என்று தோன்றியது பூங்கொடிக்கு,வயிறார கஞ்சி குடிக்க வழியில்லை என்றாலும் நம் வீட்டில் சந்தோஷத்திற்கு குறைவில்லை,எந்த நேரமும் கலகலப்பாக இருக்கும் நவநீதன்,எதற்கும் ஆசைப் படாத குழலி என்று மனதில் நினைக்கும் போதே சந்தோஷமாக இருந்தது,நவநீதன் மாலை கட்டிக் கொண்டே, என்னடி சிரித்துக் கொண்டே வியாபரத்தை கவனிக்கிறாய் என்றான், அது ஒன்றும் இல்லை இப்போது வந்து இறங்கிய குடும்பத்தை கவனித்தீயா? என்றாள் அவள்,ஆமாடி மாலை கட்டுவதை விட்டுப்புட்டு வந்து போறவங்களை பார்த்துக் கொண்டு இருந்தால் நல்லா தான் இருக்கும் என்றான் அவன்,உனக்கு ஒன்னும் தெரியாது என்றாள் அவள், ஆமாடி அது என்னமோ உண்மை தான் என்று சிரித்தான், வேலையை கவனித்தப் படியே அதையெல்லாம் கொஞ்சம் கவனிக்கனும் ஐயா, நமக்கும் பொழுது போக வேண்டாம் என்றாள்
அவள்,நான் பார்க்க நீ என்ன வந்து போறவர்களை பார்த்துக் கொண்டிருக்க என்று என்னிடம் நீ சண்டைக்கு வரவில்லை என்றால் நான் தாராளமாக பார்க்கிறேன் என்றான் அவன்,உடனே வேண்டாம் ஐயா நீ யாரையும் பார்க்க தேவையில்லை,வேலையை மட்டும் பார்த்தால் போதும் என்றாள் அவள் இது தாண்டி நீ என்று சிரித்தான் நவநீதன்.
விக்னேஷ்வரன் வேகமாக வாகனத்தை ஓட்டினான்,ஏன் இவ்வளவு வேகம் என்றாள் அமிர்தா நான் போய் ஆபிஸ் வேலையை கவனிக்க வேண்டாமா? தலைக்கு மேல் அவ்வளவு வேலை இருக்கு,ஈவினிங் வேறு பார்டி,அதற்கு செய்த ஏற்பாடு எல்லாம் சரியாக இருக்கா என்று பாக்கனும் என்றான்,அது ஏல்லாம் நன்றாக தான் இருக்கும், அப்படி இடத்தில் தானே ஏற்பாடு பன்னி இருக்கோம், கொஞ்சமா பணம் கட்டி இருக்கோம் அந்த பணத்துற்கு சரி நன்றாக தான் செய்து தருவார்கள் என் லேடிஸ் கிலபில் சொன்னதால் தானே அந்த இடத்தை பார்த்தோம் என்றாள் அவள்,அது தான் எனக்கு பயமாக இருக்கு என்றான் ஐங்கரன்,மாதங்கியும் ஆமாம் எனக்கும் அந்த பயம் இருக்கு மம்மி என்றாள், உங்கள் இருவருக்கும் எதில் தான் திருப்தி இருக்கு,எதிலும் இல்லை இதில் மட்டும் என்ன திருப்தி அடையப் போறீங்கள் என்றாள் அமிர்தா,முதல் உனக்கு இருக்கா என்றான் விக்னேஷ்வரன், அப்படி கேளுங்கள் டேடி என்றாள் மாதங்கி,ஏன் நான் நன்றாகத் தான் இருக்கேன் என்றாள் அவள் சூடாக, என்னுடைய பர்த்டே உங்கள் சண்டையை ஆரம்பித்து விடாதீங்கள் என்றான் ஐங்கரன், சரி சரி வீடு வந்து விட்டது, இறங்கி போங்கள் நான் ஈவினிங் வந்து அழைத்துக் கொண்டுப் போகிறேன் என்று கூறிவிட்டு வேகமாகச் சென்று விட்டான் அவன்.
அன்றைய நாள் மழை தொடர்ந்து பெய்துக் கொண்டே இருந்தது,பூங்கொடி நவநீதனிடம் என்னையா இன்று இப்படி மழை பெய்கின்றது என்றாள், ஆமாடி வீட்டில் இருந்து இருக்கலாம் என்றான் அவன்,வீட்டில் இருந்து என்னையா பன்னுவது,இனி தொடர்ந்து மழைக் காலம் தானே என்றாள், ஆமாடி அதிகமாக மழை பெய்தால்,வீட்டில் இருப்பது நல்லது, இப்படி மழையில் நனைந்துக் கொண்டு எவ்வளவு நேரம் வியாபாரம் பன்னுவது என்றான் அவன்,அதைப் பார்த்தால் எப்படி சாப்பிடுவது என்றாள் பூங்கொடி, அது எல்லாம் ஏதாவது சமாளித்துக் கொள்ளலாம்,மழையில் நனைந்து,பத்து நாள் உடம்பிற்கு முடியாமல் போனால்,அதைவிட அதிகமாக மழை பெய்யும் நாட்களில் வீட்டில் இருப்பது நல்லது என்றான் நவநீதன்,குழலியும் நனைந்துக் கொண்டு வரும் என்று பூங்கொடி சொல்லும் போதே அம்மா என்று வந்து நின்றாள் குழந்தை,என்னம்மா இப்போதே வந்து விட்ட நனைந்து விட்டீயா என்றான் நவநீதன்,ஆமா அப்பா,அது பரவாயில்லை என்றாள் அவள், நீ பூவெல்லாம் எடுத்து கூடையில் வை வீட்டுக்கு போகலாம் என்றான் மனைவியிடம், இன்னும் பொழுது சாயவில்லை என்றாள் அவள்,மழை நேரத்தில் வாடி போகலாம் என்றான்,மூவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள் குழலி தலையை துவட்டிக் கொண்டாள், மூவருக்கும் காப்பி போடுவதற்கு போனாள் பூங்கொடி,ஒரு வாழைக்காய் இருந்தது காப்பி போடும் நேரத்தில் அதை மெல்லிதாக நறுக்கி பஜ்ஜி போட்டு எடுத்தாள் என்றாவது ஒரு நாள் இருப்பதை வைத்து ஏதாவது செய்து கொடுப்பாள் நேரம் கிடைத்தாள்.
சூடான காப்பியுடன் பஜ்ஜியை சாப்பிட்டார்கள் மூவரும்,நல்லா இருக்கு அம்மா என்றாள் குழலி,மழை நேரம் உன் அப்பாவிற்கு இப்படி எல்லாம் சாப்பிட பிடிக்கும், நமக்கு தான் செய்ய வசதியும் இல்லை,நேரமும் இல்லை என்றாள்,ஏண்டி இப்போது தான் செய்து சாப்பிட்டோமே இது போதும்டி இதை விட என்ன வேண்டும் என்றான் நவநீதன்,மூவரும் சிறிது நேரம் தரையில் உட்கார்ந்து கதை பேசினாரகள்,குழலி அப்பா மடியில் சாய்ந்து அப்படியே தூங்கி போனாள், என்னடி உன் பொண்ணு இந்த நேரம் தூங்குது என்றான், பாவம் குளிர் தூங்கட்டும் விடு ஐயா என்றாள் பூங்கொடி,எந்த நாளும் இப்படி தான் மழை பெய்யும் போலிருக்கு,கோயில் பக்கத்தில் சின்ன கடை ஒன்று போட முடியாமல் இருக்கு என்றான் நவநீதன், அதற்கும் நிறைய பணம் தேவை இதுவே போதும்,மழை காலத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்,இன்னும் இரண்டு வருடத்தில் புள்ள வயதுக்கு வந்து விடும், இதற்கு சடங்கு செய்யனும்,அதற்கு நாலு பணம் சேர்த்து வைக்கனும் ஐயா என்றாள் பூங்கொடி, ஆமாடி ஏதாவது பன்னனும் திருமணத்திறகு மாலை கட்டி கொடுத்தால் கொஞ்சம் பணம் வரும், நிறைய ஓடர் எடுக்க பயமாக இருக்கு,சரியான நேரத்திற்கு கட்டி கொடுக்கனும், அது நமக்கு முடியுமா என்றான், முடியும் ஐயா விதவிதமாக மாலை கட்டி கொடுக்க முயற்சி பன்னுவோம்,அப்படியான நாட்களில் நாங்கள் இரண்டு பேரும் வீட்டில் இருந்து கட்டுவோம் என்றாள் அவள் கோயிலுக்கு நாங்கள் கட்டிக் கொடுக்கும் மாலையே நன்றாக தான் இருக்கு என்று அர்ச்சகர் சொன்னார் என்றான் நவநீதன்,அவரிடம் கேட்டுப் பார்த்தால் என்றாள் பூங்கொடி, கேட்டுப் பார்த்து ஏதாவது பன்னனும் என்றான் அவன்.
நாட்கள் வேகமாக ஓடியது,ஒரு நாள் எனக்கு இரண்டு மாலைகள் வேண்டும் என்று ஒரு பொண்ணு வந்து நின்றது,இந்தப் பொண்ணை இதற்கு முன்பு பார்த்த மாதிரி இருக்கே என்று பூங்கொடிக்கு தோன்றியது,சாமிக்கு சாத்தவா என்றான் நவநீதன்,இல்லை எனக்கு கல்யாண மாலை வேண்டும் என்றதும்,பூங்கொடிக்கு சட்டென்று ஞாபகம் வந்தது,அன்று காரில் வந்த பொண்ணு என்று,யாருக்கு அம்மா கல்யாணம் என்றாள் பூங்கொடி எனக்கு தான் என்றாள் மாதங்கி, என்னம்மா அம்மா அப்பா வரவில்லை என்றாள் பூங்கொடி,அவர்களை உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்கும் போதே அவளின் முகம் வேர்த்துப் போனது, எங்களுக்கு அவர்களையும் தெரியும்,உன்னையும் நன்றாக தெரியும் என்றாள் பூங்கொடி, நவநீதன் பூங்கொடியை பார்த்தான்,அவள் அவனிடம் கண்ணை அசைத்து விட்டு, மாதங்கியிடம் என்ன காதல் கல்யாணமா என்றாள் பூங்கொடி,ஆமாம் அம்மா அப்பாவிற்கு விருப்பம் இல்லை என்று மென்று விழுங்கினாள் மாதங்கி, என்னம்மா அதற்காக வீட்டை விட்டு வந்து யாருக்கும் தெரியாமல் கட்டிகப் போறீயா என்றாள் பூங்கொடி,ஆமாம் அவர் என்னை விரும்புகிறார், நானும் அவரை விரும்புகிறேன் என்றாள் அவள்,கையில் ஒரு பை வைத்திருப்பதை பூங்கொடி கவனித்தாள்,என்னம்மா இதில் வீட்டில் உள்ள நகை நட்டா என்றாள்,மாதங்கிக்கு முகம் வேர்த்துப் போனது,ஆமாம் என்றாள் சரியம்மா என் மீது நம்பிக்கை இருந்தால் இந்த பையை இங்கு வைத்து விட்டு உன் காதலினிடம் போய் மாலை வாங்கியப் போது என் பையை காணவில்லை என்று அவனிடம் சொன்னப் பிறகு என்ன நடக்குது என்று பார்த்து விட்டு பிறகு உன் காதலனை கட்டிக்க என்றாள் பூங்கொடி.
அதுவெல்லாம் முடியாது,நீங்கள் சொல்வதை நான் ஏன் கேட்க வேண்டும், மாலையை மட்டும் தாங்கள் எனக்கு தாமதம் ஆகுது என்று அதட்டலாகவே சொன்னாள் மாதங்கி, இது சரிபட்டு வராது,இந்த புள்ள அப்பனுக்கு போனை போட்டு விஷயத்தை சொல்வோம் என்று நவநீதனை பார்த்தாள் பூங்கொடி, இரு இரு இந்த புள்ள அப்பன் போன் நம்பர் என்னிடம் இருக்கு எடுக்கிறேன் என்று அவனுடைய பழைய போனை கையில் எடுத்தான்,மாதங்கி பதறிப் போய் வேண்டாம் அவசரப் படாதீங்கள் என்றாள்,நான் போய் சொல்கிறேன் என்றாள், சரி உன் பையை கவனமாக பார்த்துக் கொள்கிறேன், உனக்கு நம்பிக்கை இல்லை என்றாள், இந்த ஆளையும் கூட்டிக்கிட்டுப் போ,ஐயா நீ போய் ஒரு ஓரமாக நில்லு, அந்தப் புள்ள பேசட்டும் என்று நவநீதனையும் மாதங்கியுடன் அனுப்பி வைத்தாள், இந்த காலத்துப் புள்ளைங்க எதை நம்பி வருதுகளோ தெரியவில்லை என்று நினைத்துக் கொண்டே மாதங்கியின் பையை கவனமாக ஓரத்தில் வைத்து விட்டு அவள் வியாபாரத்தை கவனிக்க ஆரம்பித்தாள்.
மாதங்கி தயங்கி கோயில் உள்ளே போனாள்,நவநீதனும் சென்று ஓர் ஓரத்தில் நின்றான்,மாதங்கியை கண்டவுடன் ஒரு இளைஞன் அவசரமாக அவள் பக்கத்தில் வந்து எங்கு போன இவ்வளவு நேரம் ஆகுது என்று அதட்டினான், மாலை வாங்கப் போனேன் அப்போது என் பையை யாரோ திருடிக் கொண்டு போய்விட்டார்கள் அருண் என்றாள் அவள் உனக்கு அறிவு இல்லை, இப்போது மாலையா முக்கியம்,பணம் நகை எல்லாம் போய் விட்டதா என்றான் அருண்,ஆமாம் வீட்டில் இருந்த நகைகளை
அள்ளிப் போட்டேன் அது நிறைய தான் இருந்தது,பணம் இரண்டு லட்சம் இருக்கும் எல்லாம் தற்போது போய் விட்டது என்று அழுதாள்,இப்போது அழுது என்ன பிரஜோனம், உனக்கு எல்லாம் கொஞ்சமும் கவனம் இல்லை,என்ன செய்வது என்று எனக்கும் ஒன்றும் புரியவில்லை என்றான் அருண்,சரி அதைப் பற்றி பிறகு பார்ப்போம்,தற்போது நேரம் போகின்றது,முதல் என் கழுத்தில் தாலியை கட்டு,பிறகு காவல் நிலையம் போய் புகார் கொடுக்கலாம் என்றாள் மாதங்கி,அருணுக்கு கோபம் அப்படி தான் வந்தது,என்ன விளையாடுறீயா,நீ கொண்டு வரும் பணத்தில் தானே நான் ஏதாவது செய்து முன்னேற வேண்டும் என்று முன்பே சொன்னேன்,தற்போது நாங்கள் கட்டிக்கிட்டு கஷ்டப் படனுமா, நீ வேறு பெரிய இடத்தில் வாழ்ந்தவள்,உன்னை கஷ்டப் படுத்த நான் விரும்பவில்லை என்றான் அவன்,எவ்வளவு கஷ்டம் என்றாலும் நான் சமாளிப்பேன், இப்போது என் கழுத்தில் தாலியை கட்டு அருண் என்றாள் மாதங்கி, அவன் உனக்கு நான் சொல்வது புரியவில்லையா என்று அதட்டினான்,பிறகு பாப்போம் இப்போது வீட்டுக்கு போ என்றான்,உன்னை நம்பி வந்து,நகைகளையும் தொலைத்து விட்டு நிற்கிறேன்,வீட்டுகு போ என்று சாதாரணமாக சொல்லுற என்றாள் அவள்.
உன் நன்மைக்காக தான் சொல்கிறேன்,பிறகு நாங்கள் கட்டுவதைப் பார்ப்போம், இப்போது வீட்டுக்கு போ என்று அவசரப் படுத்தினான் அவன்,அப்ப என்னை கட்ட மாட்ட உன்னை நம்பி தானே வந்தேன் என்று அழுதாள் அவள், முதல் அழுகையை நிறுத்து, உனக்கு அறிவு இருக்கா, உன் நகை பணத்தை வைத்து தானே ஏதாவது செய்து முன்னேறி,சந்தோஷமாக வாழ்வோம் என்று முடிவுப் பன்னினோம், இப்போது அதற்கு வழியில்லாமல் போய் விட்டது,இப்போது நீ வீட்டுக்குப் போ, பிறகு கட்டலாம் என்றான் அருண், சந்தோஷமாக வாழ்வதற்கு பணம் முக்கியம் இல்லை அருண்,நாங்கள் கட்டி சந்தோஷமாக வாழ்வோம் என்றாள் அவள், உனக்கு புரியாது இப்போது போ என்று பிடிவாதமாக சொன்னான் அருண் அவள் அமைதியாக வெளியேறினாள், நவநீதன் அவள் பின்னாடியே வந்தான், என்னம்மா உன் காதலன் உன் கழுத்தில் தாலி கட்டிட்டானா என்றாள் பூங்கொடி,இல்லை அம்மா என்று கண் கலங்கினாள்,அழாதே அன்று உன் குடும்பத்துடன் நீ கோயில் வருவதை பார்த்தேன், மகாலட்சுமி மாதிரி இருந்த,உன் கழுத்தில் அவ்வளவு நகைகள் இருந்தது,எனக்கு சந்தேகமாக இருந்தது உன்னை எவனோ ஏமாத்துறான் என்று எனக்கு பட்டது, அதனால் தான் அம்மா அப்படி சொன்னேன், உன் அப்பாவையெல்லாம் நமக்கு தெரியாது அம்மா, நீ ஏமாந்து போக கூடாது என்று நினைத்தேன்,உன்னை காதலிக்கிறவனை கட்டு,உன் சொத்துக்களை காதலிக்கிறவனை எப்போதுமே கட்டாதே சந்தோஷமாக வாழ முடியாது,மாதங்கியின் பையை எடுத்துக் கொடுத்து இதில் எல்லாம் சரியாக இருக்கா என்று பார்த்துக் கொள் என்றாள் பூங்கொடி, ரொம்ப நன்றியம்மா என்றாள், எனக்கு நன்றி சொல்வது எல்லாம் இருக்கட்டும், கடவுளுக்கு நன்றியை சொல்லு, யாரையும் கூடுதலாக நம்பி சட்டென்று முடிவு எடுக்காதம்மா என்றாள், ஐயா இவளுக்கு ஒரு ஆட்டோடை பிடித்து கொடு என்றாள் நவநீதனிடம், கண்கள் கலங்கியப் படி மாதங்கி ஆட்டோவில் ஏறி வீட்டுக்குப் போய் சேர்ந்தாள், அவளை காப்பாற்றிய சந்தோஷத்தில் வியாபாரத்தை இருவரும் கவனித்தார்கள்.