சதாசிவம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 9,400 
 
 

சதாசிவம் பேருந்தைவிட்டு இறங்கியபோது இன்னமும் விடிந்திருக்கவில்லை.

அவனுக்குப் பயணத்தின் களைப்பை மீறிய ஒரு பதற்றம் பேருந்தைவிட்டு இறங்கியவுடன் வந்துவிட்டது. நேற்று இரவு தன்னுடன் சுந்தரி செல்போனில் பேசியதை அவன் நினைத்தபடி இருந்தான். அவள் டெல்லியில் இருந்து வரவில்லை.

ஒரு வருடமாக இதய நோயோடு இருந்த அத்தை சுப்புத்தாய் நேற்று இரவு இறந்துபோனாள். அவள் சதாவைப் பார்க்க வேண்டும் என்று முருகமூர்த்தியிடம் கேட்டு இருக்கிறாள். சதாவின் செல்போனுக்குத் தொடர்புகொண்டபோது, அது தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது. தொடர்ந்து அவர் முயற்சித்துக்கொண்டே இருந்தார். இறப்பதற்குச் சற்று முன்பாகத்தான் தொடர்பு கிடைத்தது. சுப்புத்தாய் இறந்துபோனாள். முருகமூர்த்தி தன் மனைவியின் சாவை முதலில் சதாசிவத்துக்குத் தான் சொன்னார். சதாவுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. “சுந்தரிக்கு சொல்லுங்க மாமா” என்றான். அவரும் சரி என்றார்.

சுப்புத்தாயின் மரணத்தை அனைவரும் எதிர்பார்த்துத்தான் இருந்தார்கள். மருத்துவர்கள் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அவர்களது ஊரில் இருந்து தினமும் மருத்துவரைப் பார்த்துவிட்டுச் செல்வது அலைச்சல் என்று ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்துக் குடியிருந்தார்கள். அந்த வீடு அவர்களுக்குப் போதிய வசதியாக இருந்ததால், அங்கேயே இருந்துவிடலாம் என்று தங்களது பூர்வீக இடத்தை மாற்றிக்கொண்டு வந்துவிட்டார்கள். சதா, அவர்கள் குடியிருக்கும் மதுரை வீட்டுக்கு இதுவரை சென்றது இல்லை. மருத்துவ மனையைத் தாண்டி இரண்டாவது சந்தில் உள்ள ஒரு அபார்ட்மென்ட்டில்தான் வாடகைக்கு வீடு பார்த்திருப்பதாக முருக மாமா சொன்னார். சதாசிவம், அந்த அதிகாலை நேரத்தில் போன் செய்து, முருகமூர்த்தி மாமாவைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று நினைத்தான். மருத்துவமனைப் பக்கமாகச் செல்லும் மாநகரப் பேருந்தில் ஏறினான்.

சதாவுக்கு சுப்பு அத்தை தன் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தது நினைவுக்கு வந்தது. முதல் தடவை மருத்துவமனையில் அவளை அனுமதித்திருந்தபோது, பார்க்கச் சென்று இருந்தான். சுப்புத்தாய் அத்தை அவனை அழைத்து அருகில் அமரவைத்தாள். “உனக்கு சுந்தரியைக் கல்யாணம் செய்து தரலைன்னு என் மேல கோபமா இருக்கியா?” என்று கேட்டாள். அத்தை இந்த நேரத்திலும் தன்னைப்பற்றிய கவலையாக இருக்கிறாளே என்று வருத்தப்பட்டான்.

“சும்மா அதையே நினைச்சுட்டு இருக்காதீங்க” என்று எழுந்துகொண்டான்.

“உனக்கும் மனசுல ஆசை இருக்கு. எனக்குத் தெரியும் சதா. அத்தை உனக்கு சுந்தரியைக் கல்யாணம் செய்து தராமல் ஏமாத்திட்டேன்னு கடைசி வரைக்கும் நினைச்சுட்டே இருப்பேல்ல” என்றவள், அவனைப் பார்க்காமல் “நான் செத்த பிறகும்கூட சுந்தரியையும் என்னையும்தானே நினைச்சுட்டே இருப்பே” என்றாள்.

அதைக் கேட்டதும் சதாவுக்கு அவனை அறியாமல் அழுகை முசுமுசுவென்று முட்டிக்கொண்டு வந்தது.

முருகமூர்த்தி மாமாவும் அறையில்தான் இருந்தார். அவர் “ஏன் ஊரில் இருந்து வந்தவனை இப்படி அழவைக்கிற? அவனுக்கு எல்லாம் தெரிஞ்சுதான் இருக்கும். நீதான் உன்னைய குற்றவாளி மாதிரி நினைச்சுட்டு இருக்கே. அவன்தானே சுந்தரிக்கு முன்னால் நின்னு கல்யாணம் செஞ்சுவெச்சான்” என்றார்.

சுப்பு அத்தையின் கண்களில் இருந்து நீர் வழிந்து சொட்டுச் சொட்டாக மடியில் விழுந்தது. அவன் அத்தையின் அழுகையை நிறுத்தி, கண்களைத் துடைத்துவிட்டான். அவள் இப்போதும் சுந்தரியைப் பற்றிதான் நினைத்துக்கொண்டு இருந்தாள். சுந்தரி தன்னை மன்னித்துவிட மாட்டாளா. தன்னை வந்து பார்க்க மாட்டாளா என்று ஏக்கமாக இருந்தாள்.

“அத்தைக்கு வேற எங்கேயாவது போய் இருக்கணுமின்னு ஆசை இருந்தா, கூட்டிட்டுப்போங்க மாமா” என்று அவரிடம் சொன்னான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லே. சுந்தரியை ஒருதடவை பார்க்கணுமின்னு சொல்றா. அவளுக்கு வேறென்ன ஆசை இருக்கப்போகுது” என்றார்.

சதாவுக்கும் அதுதான் அத்தையின் ஆசையாக இருக்கும் என்று தோன்றியது. அத்தையும் தன்னைப்போல சுந்தரியின் ஞாபகமாக இருக்கிறாள் என்று நினைத்தபோது, அவனுக்குச் சந்தோஷமாக இருந்தது. யாரா வது சுந்தரியுடன் பேசினால், அவள் மனம் மாறி வரலாம் என்று மாமாவிடம் சொன்னான்.

மாமா, “அவ எங்கே வரப்போறா. சுப்பு சொன்னதை இப்பவும் நினைச்சுட்டு கோபமா இருக்கா. பெத்த தாய் யாராவது தன் மகள் நல்லா இருக்கக் கூடாதுன்னு நினைப்பாங்களா? நீயே சொல்லு. உனக்கு நிச்சயம் செஞ்ச பிறகு, அவளோட விருப்பத்துக்கு, அவ காதலிச்ச பையனைக் கல்யாணம் செய்துக்கிட்டா. நாங்க அதுக்கு ஏதாவது இடைஞ்சல் செஞ்சோமா? ஏதோ ஒரு ஆத்திரத்தில் சுப்பு அப்படிப் பேசிட்டா. உங்க அத்தை, யாராவது செத்துப்போகணுமின்னு நினைப்பாளா, நீயே சொல்லு?”

“அத்தையோட மனசுக்கும், அவங்க மத்தவங்களுக்கு செஞ்ச துக்கும் அவங்க நல்லா இருக்கணும். நீங்க வேணா பாருங்க மாமா. அத்தைக்கு ஒண்ணுமில்லைன்னு சொல்லி வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. சுந்தரியும் வந்து பார்க்கத்தான் போறாள்.”

“உனக்கு சுந்தரி மேல அவ்வளவு நம்பிக்கை இருக்கா சதா?”

“ஏன் மாமா. நம்ம சுந்தரி என்ன அவ்வளவு கெட்ட பெண்ணா என்னா. கொஞ்சம் கோபப்படுவா, அப்புறம் சரியாப்போகும் மாமா.”

“இதுக்குத்தான் சதா உன்னைய உங்க அத்தை தலையில தூக்கிவெச்சு ஆடுறா. சுந்தரியை இன்னும் விட்டுக்கொடுக்காமப் பேசுறியே. இதைவிட யாருக்கு என்ன வேணும்?!” – அந்த வேதனையிலும் மாமா சிரித்தார். பழைய சிரிப்பு இல்லை. வெற்றிலை பாக்குக் கறையோடிய பற்கள் தெரியவில்லை. நாக்கு வெளுத்துப்போய் இருந்தது. யாருக்காகவோ சிரித்தார். பிறகு, தன் சிரிப்பை நிறுத்திவிட்டு, “உங்க அம்மாவுக்கு உடம்புக்கு சௌகர்யம் இல்லை சுந்தரி. உன்னைப் பாக்கணுமிங்கிறா. ஒரு தடவை வந்துட்டுப் போன்னு சொன்னதுக்கு, அவ என்ன சொன்னா தெரியுமா?” என்று சதாவைப் பார்த்தவர்… மெதுவாக, “அவ சாகட்டும். அப்புறம் வர்றேன்னு சொல்லு றாப்பா” என்று வாயைப் பொத் தியபடி அழுதார். அவனுக்கு நம்ப முடியவில்லை. அவரது தோளைப் பிடித்துக்கொண்டு “அழாதீங்க… அழாதீங்க…” என்று உலுக்கினான். அவர் அழுது கொண்டுதான் இருந்தார்.

சுந்தரி இப்படிப் பேசுபவள் இல்லை. அவள் பேசுவது பாட்டுப் பாடுவதுபோல இருக்கும். மகேஷ்கூட அவள் பாட்டுப் பாடுவதை விரும்பினான். அரைகுறையாகத் தெரியும் தமிழை வைத்துக்கொண்டு, அவன் சுந்தரியைக் காதலித்தான். சுந்தரிக்குப் பிடித்தமான பாடல் ஒன்று இருக்ககிறது. அவள் சந்தோஷமான பொழுதில் பாடலை முணுமுணுவென்று உதட்டை மெதுவாக அசைத்தபடி பாடுவாள். ‘உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே, கொள்ளும் இன்பமே, சொர்க்கம் வாழ்விலே’ மூன்று வரி மட்டும்தான் பாடுவாள். பிறகு, எல்லாம் ம்ம்ம் என்று ஊமைச்சி மாதிரி ம் கொட்டிக் கொண்டு இருப்பாள். அவள் பாடுகிற மூன்று வரியே போதுமானதுதான். முழுப் பாடலையும் பாட வேண்டியது இல்லை. ஆனால், கேட்பவர்களை ‘அடுத்து பாடு, அடுத்து பாடு’ என்று சொல்லத் தூண்டிவிடும். மகேஷ்தான் இந்த மாதிரி பாடலைக் கேட்டுக்கொண்டு, சுந்தரியின் கையால் சாப்பிடுவதற்குக் கொடுத்துவைக்கவில்லை என்று சதா நினைத்தான்.

மகேஷ் இறந்ததற்குத் தன் அம்மா தன்னைச் சபித்ததுதான் காரணம் என்று சுந்தரி நம்பிக்கொண்டு இருந்தாள். “நீ உன் புருஷனோடு சேர்ந்து வாழ மாட்டே. நாசமாப் போயிடுவே” என்று ஏதோ ஒரு ஆத்திரத்தில், திருமணமான புதிதில் திட்டினாள் சுப்பு அத்தை. அம்மாவின் வாக்குதான் தனது கணவனைக் கொன்றுவிட்டது என்று சுந்தரி நினைத்தாள்.

மகேஷுக்கு டெல்லியில் வேலை. அவரது வங்கியின் தமிழக தென் மாவட்டக் கிளையில் வேலை செய்த சுந்தரிக்கும் அவருக்கும் தொலைபேசி மூலம் உரையாடல் தொடர்ந்தது. அந்த உரையாடல், பரஸ்பரப் புரிதலோடு எதற்காகவோ காத்திருக்கும்படியான மனநிலையை அவர்களுக்குள் உருவாக்கியது. அந்த மனநிலைதான் காதலின் தொடக்கம் என்பதை இருவரும் உணர்ந்தனர். அதற்குள் சதாசிவத்துக்கும் சுந்தரிக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது. சுந்தரி யாரிடமும் சொல்லாமல், டெல்லி சென்று மகேஷைத் திருமணம் செய்துகொண்டாள். திருமணம் முடிந்து வந்தவளுடன் வீட்டில் சண்டை.

சதாசிவமும் அவனது நண்பர்களும் சுப்புத்தாயையும் அவளது கணவனையும் சமாதானம் செய்துவைத்தார்கள். சுப்புத்தாய் அவளைத் திட்டினாள். “நீ நாசமாப் போவே. நீ அவனோடு சேர்ந்து வாழ மாட்டே. தாலி அறுக்கத்தான் போறே” என்று கோபத்தில் திட்டினாள்.

சுப்புத்தாயின் வாக்குப் பலித்துவிட்டது. மகேஷ் இறந்துபோனான். வேலைக்குச் சென்ற மகேஷ் வீடு திரும்பவில்லை. கிளம்பிய ரயிலில் அவசரமாக ஏறியபோது கால் இடறி விழுந்துவிட்டான். ரயில் அவனை பிளாட்ஃபாரத்துக்குள் இழுத்துக்கொண்டது. ஒரு காலும் ஒரு கையும் நசுங்கி, பிய்ந்த நிலையில் அவனை மருத்துவமனையில் சேர்த்தார்கள். காப்பாற்ற முடியவில்லை. மகேஷ் இறந்த செய்தியை சதாவிடம்தான் சொன்னாள் சுந்தரி. பாஷை தெரியாத ஊரில் தனக்கு யார் இருக்கிறார்கள் என்று அழுதவளை இப்போது நினைத்தாலும் சதாவுக்குக் கண்கள் கலங்கிவிடும்.

சுந்தரியை ஊருக்கு அழைத்து வருவதற்கு முருகமூர்த்தி மாமாவும் சதாவும் டெல்லிக்குச் சென்றனர். வர முடியாது என்று சொல்லிவிட்டாள். அவளைச் சமாதானப்படுத்த முடியாமல் தோல்வியோடு திரும்பினார்கள். “அம்மா சொன்னது மாதிரியே நான் இப்போ நாசமாப் போயிட்டேன் சதா. மகேஷோட வாழ முடியாமப் போச்சு. அவங்ககிட்டே சொல்லு சதா” என்று கண்ணீரோடு சொன்னதை சதாவினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

சதாசிவம் அதற்குப் பிறகு எத்தனையோ முறை சுந்தரியுடன் பேசி இருக்கிறான். அவள் டெல்லியிலேயே இருக்கப்போவதாகச் சொல்லிவிட்டாள். அவளுக்கு மகேஷைப் பிடித்ததுபோல டெல்லியைப் பிடித்துவிட்டது. அம்மாவையும் அப்பாவையும் பிடிக்காததுபோல அவளது பிறந்த ஊரும் பிடிக்காமல் போய்விட்டது.

அதிகாலை மதுரையின் ஈரம் மிகுந்த காற்றும் சாலை ஓரத்தில் இருந்த கோயில்களினுள் மினுங்கிக்கொண்டு இருந்த விளக்குகளும் அவனை நிம்மதி இழக்கச் செய்தது. மருத்துவமனையின் அருகில் பேருந்து நின்றது. இறங்கிக்கொண்டான். அந்த நேரத்தில் பூக்கடைகள் எதுவும் திறந்திருக்கவில்லை. டீக்கடைக்குச் சென்று டீ கேட்டான். எதிரே இருந்த அந்த மருத்துவமனையைப் பார்க்கப் பிடிக்கவில்லை. டீ டம்ளரை வாங்கிக் குடித்தபடி, வேறு பக்கமாக முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

சுப்பு அத்தைக்கு இதய நோய். சுந்தரியை நினைத்து நினைத்து மனக் கவலையில் அவளது இதயம் பலவீனம் அடைந்துவிட்டது. சுப்பு அத்தைக்குத் தன் மரணம் அருகில் இருக்கிறது என்று தெரிந்திருக்கிறதுபோல. “உங்க மாமாதான் என்னோட இருந்து கஷ்டப்படுறாரு. நான் இறந்த பின்னாடி அவரை உன்னோடு கூட்டிட்டுப்போய் வெச்சுக்கோ சதா” என்று அழுதபடி சொன்னாள். அவளால் அதற்கு மேல் பேச முடியவில்லை. வாய் உலர்ந்திருந்தது. அவள் இந்த வார்த்தையை மட்டும் பேச வேண்டும் என்று நினைத்திருந்தாள்போல.

“ஏன் அத்தை இப்படிப் பேசுறீங்க. சுந்தரி இருக்கா. நான் இருக்கேன். எல்லோருமா மாமாவைப் பார்த்துக்கிடுவோம் அத்தை. நீங்க தைரியமா இருங்க” என்றான் சதாசிவம். அத்தைக்குப் பயம் வந்துவிட்டது என்று அவனுக்கு அப்போது தெரிந்துவிட்டது. அவள் தனது கட்டிலில் இருந்த உதிர்ந்த தலை முடியை எடுத்துக் கீழே போட்டபடி தலையைச் சதாவிடம் காட்டினாள். உச்சந்தலையில் கொத்தாக முடி கொட்டியிருந்தது. அவளது கண் புருவம் உதிர்ந்திருந்தது.

“நான் செத்துப்போனா… சுந்தரி வருவாளா? நீங்க அவளுக்கு போன் போட்டுச் சொல்லிடுங்க” என்று சொன்னாள். சரி… சரி என்று கேட்டுக்கொண்டு இருந்த முருகமூர்த்தி மாமா என்ன நினைத்தாரோ திடீரென்று முகத்தைப் பொத்திக்கொண்டு அழ ஆரம்பித்தார். “எனக்குன்னு யார் இருக்கா… இவ செத்த பின்னாடி எனக்கு யாரு இருக்கா சதா?” என்று அழுதார். அவரது ஆங்காரமான அழுகையை முதன்முதலாகப் பார்த்த சதாசிவம் பயந்துதான் போனான். சதாசிவம் இரண்டாவது முறையாக மருத்துவமனைக்குச் சென்று வந்த பிறகுதான் வேலை மாற்றல் கிடைத்தது. அதற்குப் பிறகு சுப்புத்தாய் அத்தையை அவன் பார்ப்பதற்கென வரவில்லை.

மருத்துவமனைக்கு அருகில் இருந்த தெருவில் நடந்தான். இரண்டு தெருக்கள் அருகருகே இருந்தன. அந்த அதிகாலை நேரத்தில்தானா எஃப்.எம். ரேடியோவில் ‘உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே… கொள்ளும் இன்பமே, செர்க்கம் வாழ்விலே’ என்ற பாட்டை ஒலிபரப்ப வேண்டும். யாரைக் குறை சொல்வது என்று தெரியவில்லை. தெருவின் வளைவில் திரும்பி நடந்தபோதுதான் அயன் வண்டிக்காரர் ஒருவர் துணிகளை மடித்து உதறியபடி நின்றிருந்தது தெரிந்தது. அவர்தான் ரேடியோவை வைத்திருந்தார். அவரிடம் “வெளியூர்க்காரங்க இங்க வந்து தங்கி இருந்தாங்க. உடம்புக்கு சௌகரியம் இல்லாம இறந்துபோனாங்க. அவங்க வீடு எங்கே இருக்குன்னு தெரியுமா?” என்று கேட்டான்.

அயன் வண்டிக்காரருக்குத் தெரியவில்லை. “எங்ககிட்டே காலையில் இருந்து ரெண்டு மூணு பேர் விசாரிச்சுட்டுப்போனாங்க தம்பி. எனக்கு எங்கன்னு தெரியலையே. இரண்டாவது தெருவுக்குப் போனா தெரியும். இப்படித் திரும்பிப் போங்க” என்றார்.

சதா இரண்டாவது தெருப் பக்கமாக நடந்தான். அந்தத் தெருவில் எந்த வீடும் திறந்து இருக்கவில்லை. ஆட்களும் யாரும் இல்லை. முட்டுச் சந்து முடிகிற இடத்தில் குப்பைகளாகத்தான் இருந்தன. வீடுகள் இல்லை. யாரிடம் விசாரிப்பது என்று தெரியவில்லை. நேரம் கடந்தபடி இருந்ததால், வேறு வழியின்றி மாமாவிடம் பேசினான். “மாமா, வீட்டுக்கு எந்தப் பக்கமா வரணும். எனக்கு வழி தெரியலை.”

“இப்போ நீ எங்க நீக்கிறே?”

“இங்கே மூணு தென்ன மரம் ஒண்ணா வரிசையா இருக்கில்ல. துணி தேய்க்கிறவரு பக்கத்திலேதான் நிக்கிறேன்.”

“சரி, அங்கேயே நில்லு. டூ வீலரில் யாரையாவது அனுப்புறேன்” என்றார். உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும்போதிலே பாட்டு முடிந்த நேரத்துக்குள் ஒருவர் டூ வீலரில் வந்து நின்றார். ‘நீங்கதானே சதா. வாங்க’ என்றார். சதாவும் ஏறி அமர்ந்துகொண்டான். அவன் நின்றிருந்த தெருவுக்கு அடுத்த சந்தின் வழியாக அவர்கள் சென்றார்கள். தன்னை அழைத்துச் செல்பவரிடம் சுந்தரி வந்துவிட்டாளா என்று கேட்கலாமா என்று நினைத்தான். யார் என்று தெரியாதவரிடம் எப்படி விசாரிப்பது?

டூ வீலர் அந்தத் தெருவுக்குள் நுழைந்தபோது, சதாவுக்குத் தெரிந்துவிட்டது. தூரத்தில் ஆட்கள் உட்கார்ந்திருந்தார்கள். மாமா, சதாவுக்காகத்தான் காத்திருந்தவர்போல நின்றிருந்தார். சங்கின் ஓசை மெதுவாகத் தொடங்கி, நீண்டு பெரிய சத்தமாகக் கேட்டது. மாமா அவனிடம் ஒன்றும் பேசவில்லை. அவனது தோள் பையை வாங்கி அருகில் இருந்த நாற்காலியில் வைத்தார். சதாவுக்கு மாமாவின் முகத்தைப் பார்க்க முடியவில்லை. அவர் இப்போதும் சுந்தரியின் வருகைக்காகத்தான் காத்துக்கொண்டு இருந்தார்.

சதாசிவம், சுந்தரி தன்னுடன் பேசியதைச் சொல்லலாமா, வேண்டாமா என யோசித்தான். அத்தையின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று அவரிடம் சொன்னான். அவனை அழைத்துச் சென்றார். சுப்பு அத்தையைக் கண்ணாடிப் பெட்டியில் வைத்திருந்தார்கள். மஞ்சள் தடவிய அவளது முகத்தை அவனால் பார்க்க முடியவில்லை. தயங்கித் தயங்கித்தான் நுழைந்தான். அத்தையின் கால் பக்கமாகச் சென்று நின்றுகொண்டான். அவளது உடல் முழுவதும் மாலை அணிவித்து இருந்தார்கள். கண்ணாடிப் பெட்டிக்கு உள்ளிருந்த டியூப் லைட் வெளிச்சத்தில் அவளது முகத்தைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. உறங்கியவள் போலக்கிடந்தாள்.

முருகமூர்த்தி, சதாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதார். “சுந்தரி வந்துருவாளா சதா. அவளுக்கு எங்க மேல கோபம் போயிருக்குமா சதா?” என்று கேட்டார். என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

நேற்றிரவு தன்னுடன் சுந்தரி பேசியதை அவன் நினைத்துக்கொண்டான். “நான் வர மாட்டேன் சதா. அம்மாவோட முகத்தை நான் மறந்துட்டேன். ஆனா, அம்மா பேசினதை நான் மறக்க மாட்டேன் சதா. மகேஷோடு சேர்ந்து வாழ முடியாமலே போச்சு சதா.”

முருகமூர்த்தி அவனை வெளியே அழைத்து வந்தார். வாசலில் விசாரிப்பதற்கு என வந்திருந்தவர்கள் சுந்தரியைப்பற்றி கேட்டுக்கொண்டு இருந்தார்கள். முருகமூர்த்திக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. தற்செயலாகத்தான் சதா அவர்களுக்குப் பதில் சொன்னான். “இன்னிக்குத்தான் மகேஷோட நினைவு நாள். போன வருஷம் இதே நாளில்தான், ரயில் விபத்தில் இறந்துபோனார்” என்று சொன்னான்.

சதாசிவம் சொல்லி முடித்த பிறகு, முருகமூர்த்தி நாற்காலியைவிட்டு எழுந்துகொண்டார். சங்கு ஊதிக்கொண்டு இருந்தவரின் அருகில் சென்றார். அவரைப் புரிந்துகொண்டவர்களைப்போல வந்திருந்தவர்கள் மயானக் கரைக்குப் புறப்படத் தயாரானார்கள். முருகமூர்த்தி தான் நின்றிருந்த இடத்தில் இருந்தபடி சுப்புத்தாயைப் பார்த்தார். பிறகு, சதாசிவம் நின்றிருந்த இடத்தைப் பார்த்தார். சதா அவரைப் பார்க்க முடியாதவனாக முகத்தைத் திருப்பிக்கொண்டான்!

– அக்டோபர் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *