சக்தி கொடு!!!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2021
பார்வையிட்டோர்: 3,549 
 
 

“இந்த வருஷ லீவுக்கும் அம்மன்குடி போவேன்னு பரத் ஒத்த கால்ல நிக்கறானே..அங்க அப்பிடி என்னதான் வச்சிருக்கோ…??

இரண்டு மாசமும் தெருப்புழுதில வெளயாடி ஊர்மேஞ்சிட்டு கருத்துப் போய் ஆளே அடையாளம் தெரியாம வருவான்……….

லஷ்மண் , ராம் மாதிரி…. ஒரு டென்னிஸ்… வயலின்… ஸ்விம்மிங்னு போறதுக்கு ஆர்வம் இல்ல பாருங்கோ… நீங்க சொல்லப்படாதா….??? ”

பானு பொரிந்து தள்ளிவிட்டாள்…

நாதனுக்கும் ஒண்ணும் புரியவில்லை.. ஆனால் உள்ளூர அவருக்கு சந்தோஷம்தான்.

சொந்த அம்மாவாயிற்றே…. அதுவும் இந்த அறுபது வயதில் … தன்னந்தனியாய்… தன்னால் தான் போக முடியவில்லை…

பானுவும் போக மாட்டாள். அட்லீஸ்ட் ஒரு பேரனாவது பாட்டி மேல் இவ்வளவு கரிசனமாயிருக்கும் போது அதைக் கெடுப்பானேன்.

ஆனால் பானு சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது..

மற்ற இரண்டு பசங்களும் ஒரு நிமிஷம் வேஸ்ட் பண்ணாமல் .. ஃப்ரெஞ்ச் . டென்னிஸ் , என்று மாறி மாறி போகும் போது இவன் மட்டும் ‘ பாட்டி..பாட்டின்னு ‘ …!!!!!!

“பானு..நா சொல்லிப் பாக்கறேன். ஆனா உனக்கு தான் பரத்த பத்தி நன்னா தெரியுமே….பிடிச்சா பிடிச்ச பிடிதான்….!!!!

***

ராமநாதன் பானுமதி தம்பதிகளுக்கு மூன்று பையன்கள்.

ராம்..லஷ்மண்..பரத்..!!!!

நாதனுக்கு சொந்த ஊர் கும்பகோணத்தில் உள்ள அம்மன்குடி கிராமம்..

அக்ரஹாரத்தில் ஆறு கிரவுண்டில் நாலு கட்டு வீடு…பள்ளிக்கூடமெல்லாம் கும்பகோணத்தில் தான்..

அப்பா ராஜகோபாலன் பெரிய மிராசுதார். ஆறடி உயரத்தில் நெடுநெடுவென்று உயர்ந்த , சிவந்த , மெலிந்த உருவம்.. பின்னால் சின்னதாய் குடுமி…!!!!!

அவர் வைத்ததுதான் சட்டம். மறு பேச்சு பேச யாருக்கு தைரியம் வரும்… மனைவி பூரணி உட்பட…

பூரணியும் ராஜகோபாலனுக்கு சளைத்தவள் இல்லை…

அவளுடைய தகப்பனார் நடேச அய்யருக்கோ ஊரில் இருக்கும் நஞ்சை… புஞ்சையில்… பாதிக்குமேல் சொந்தம்.

ஆனால் அவர் பரம சாது…. அதிர்ந்து ஒரு வார்த்தை வராது…

பெண்ணும் அதே மாதிரிதான்… பார்க்க ரவிவர்மா ஓவியம் போல் பூரண அழகி… ஆனால் குட்டக்குட்ட குனியும் ரகம் இல்லை..

மௌனமாயிருந்து கொண்டே தனது காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் புத்திசாலி……

ஆஸ்த்திக்கும் ஆசைக்குமாய் அன்னபூரணி ஒருத்திதான்.

அவளும் சாஸ்திரம், சம்பிரதாயம் எல்லாம் தெரிந்து வளர்ந்த பெண்தான்.ஆனால் ஆணாதிக்கத்தை அவளுடைய குடும்பத்தில் அனுபவித்தே இல்லை.

ராஜகோபாலனின் அதிகார தோரணை அவளை முதலில் பயமுறுத்தியது..

போகப் போக அவர்மேல் ஒரு விதமான வெறுப்புணர்ச்சி தோன்ற ஆரம்பித்தது.

அவர் ஆட்டுவிக்கும் ஒரு பொம்மை போல இருப்பதற்கு அவள் தன்மானம் இடம் கொடுக்கவில்லை..

கோபாலின் ஒரு விதவைத் தமக்கை கூடவேயிருந்தார்.

அவர் மட்டும் இல்லாமலிருந்திருந்தால்….. நினைத்துப் பார்க்கவே தைரியமில்லை…!!!!!!

இதெல்லாம் சமாளித்துக் கொண்டவளுக்கு ஒன்றை மட்டும் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை..

அவருடைய பெண்கள் சகவாசம்… நினைக்கவே அருவருப்பாயிருக்கும்….

ஊருக்கே தெரிந்த விஷயம் தங்களுக்கு எப்படி தெரியாமல் போனது …???

அவருடைய நடத்தையைக் கூட அவள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.

ஆனால் ஒன்றுமே நடக்காத மாதிரி எல்லோரையும் அதிகாரம் பண்ணும் அவரது ஆணவப்போக்கு அவள் மனதை மிகவும் துன்புறுத்தியது..

எப்படியோ இரண்டு ஆண் குழந்தைகளும் பிறந்தன..

மூத்தவன் ராமநாதன் … அப்பாவிடமிருந்து ஒதுங்கியே இருந்தான் .

சின்னவன் கைலாசம் மூன்று வயது வரை பேசவில்லை…

பிறக்கும் போதே இருதயத்தில் ஏதோ கோளாறு… பத்து வயசு வரைதான் அவனுடைய ஆயுசு…

இப்போது நாதன் சென்னையில் பெயர் பெற்ற நாதன் & நாதன் ஆடிட்டிங் கம்பெனியின் பார்ட்னர்.

அப்பாவிடம் பைசா எதிர்பார்க்காமல் சுயமாகவே சம்பாதித்தது…

மனைவி பானுமதி ஒரு வக்கீல்..சமூக தொண்டில் முழு மூச்சாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டவள்.

சாம்புவைய்யர் சமயலைத்தவிர ஆல் இன் ஆல் …

நாதனின் வலது கை…!!!!

ராம்… லஷ்மண்.. பரத்… மூன்று பிள்ளைகள்..

ராஜகோபாலன் இரண்டு தடவைதான் பிள்ளை வீட்டிற்கு வந்திருக்கிறார். ராம்.. லஷ்மணனின் புண்ணியாஜனனத்துக்கு….

அப்புறம் எட்டி கூட பார்க்கவில்லை..நாதனுக்கும் ஒட்டவில்லை..

இரண்டு தடவை நாதனும் பானுவும் குழந்தைகளை கூட்டிக் கொண்டு அம்மன்குடி போயிருக்கிறார்கள்.

ராமுக்கும் லஷ்மணுக்கும் அங்கே அவ்வளவாய் பிடிக்கவில்லை… ஆனால் பரத் மட்டும் வரும்போது ” பாட்டி…. பாட்டி..” என்று அழுவான்..

ஏக்கத்தில் ஒரு தடவை ஜூரம் கூட வந்து விட்டது…

பூரணி மட்டும் வருஷத்துக்கு இரண்டு தடவை வந்து விடுவாள்.அதுவும் பரத் என்றால் உயிர்.கைலாசத்தை ஞாபகப்படுத்துவதால் கூட இருக்கலாம்…

அவளும் கணவனின் மறைவுக்குப் பின் வருவதை நிறுத்தி விட்டாள்..

இதெல்லாம் பழங்கதை… இப்போது பரத்துக்கு பாட்டியை பார்த்தே ஆகவேண்டும்…

அம்மன்குடி…..நினைவே காவிரி தண்ணீர் போல் இனித்தது..பத்தே வயசான பரத்தை தனியாக கும்பகோணம் அனுப்ப பயம்.

பூவையா நடேச அய்யரிடம் ஒட்டிக்கொண்டு நாற்பது வருஷம் ஆகிறது.. அவனை பூரணிக்கு துணையாக அனுப்பி விட்டார் நடேச அய்யர்…

சென்னை வந்து பரத்தை கூட்டிக்கொண்டு போய் ஒரு மாசம் கழித்து திரும்ப கொண்டு வந்து விடுவான்….

***

அம்மன்குடி.

நுழைந்ததும் இடது பக்கம் பெரிய திண்ணை….சாதாரணமாய் இவ்வளவு பெரிய திண்ணை யார் வீட்டிலும் கிடையாது…

நடுவில் ஒரு சாய்வு நாற்காலி…பக்கத்தில் ஒரு விசிறி கட்டாயம் இருக்க வேண்டும்…. கூடவே அந்த வருஷத்து பஞ்சாங்கம்…!!!!!

விசிறிகாம்பால் அடி வாங்கினவர்களும் உண்டு.

மூலையில் சிறிய மண் பானையில் குளிர்ந்த காவிரி தண்ணீர்.தினமும் அலம்பி நிரப்ப வேண்டும்.. மூடி மேல் வெங்கலச் சொம்பு…தினசரி தினமணி நாளிதழ் ….ஒரு குட்டி டிரான்ஸ்சிஸ்டர்…!!!!

குளிக்கும்… சாப்பிடும் நேரம் தவிர திண்ணையே கதி…

ஒரு நாளைக்கு இரண்டு.. மூன்று தடவைதான் அவருடைய தரிசனம் பூரணிக்கு கிடைக்கும்.அப்போதும் ஒரு கனிவான வார்த்தை… !!! ம்..ஹும்…!!

எப்போது வெளியே போவார்…. வருவார் என்பது யாருக்கும் தெரியாது…மாட்டு சலங்கை சத்தம் மட்டுமே அதற்கு சாட்சி……

கணபதி அவருடைய பூரண விசுவாசி .. கொன்று போட்டாலும் ரகசியத்தை வெளியில் விடமாட்டான்….

அடுத்து முதல் கட்டு… நாலு பேர் உட்கார்ந்து ஆடலாம்… அத்தனை பெரிய ஊஞ்சல்.. அப்புறம் ரேழி … முத்தம்…. அடுப்பங்கரை… சாமி அலமாரி ….காமிரா உள்..

தூணெல்லாம் தேக்கு…..

இரண்டாம் கட்டு…

மறுபடியும் ஒரு முத்தம்… ஸ்டோர் ரூம்…புழக்கடை….. அங்கே இருக்கும் இருட்டு அறைதான் மூன்று நாட்களுக்கு புகலிடம்… குளியலறை…கிணறு… பின்னால் மாட்டுக் கொட்டாய்…

மூன்றாம் கட்டு…. போய்க்கொண்டேயிருக்கும்….

முதல் முதலில் குழந்தையாய் அங்கு போனபோது வாசலுக்கும் கொல்லைக்கும் ஓடிக் கொண்டே இருப்பான்.

மாட்டுக் கொட்டாயிலேயே பழியாய் கிடப்பான்.

கன்னுக்குட்டி கௌரி அவனுடைய உற்ற தோழி…. கழுத்தைக் கட்டிக் கொண்டு விடவேமாட்டான்..

தைரியமாய் தாத்தா மடியில் போய் உட்காருவான்.. தாத்தா வெற்றிலையை போடும் போது காம்பை கிள்ளிக் குடுப்பான்… வாயில் வெற்றிலையை ஊட்டி விடுவான்…

மற்ற யாருக்குமே இல்லாத பந்தம் பரத்துக்கு மட்டும் எப்படி வந்தது ….?

இதோ இப்போது பத்து வயது பையனாய் பாட்டியைப் பார்க்க கிளம்பி விட்டான்….!!

***

பாட்டியை ஸ்டேஷனில் எதிர் பார்க்கவேயில்லை. அப்படியே கட்டிக் கொண்டான்.

“பரத்…எத்தன நாளாச்சு கண்ணா.. நல்ல ஒசந்து போய்ட்ட… அடையாளமே தெரியல…ஊர்ல எல்லோரும் சௌக்யமா ?? “

வீடு வரும் வரை எத்தனை கேள்விகள்..??

ஆனால் வீடு வந்ததும் அவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.. வீட்டு வாசலில் ஒரு பெரிய பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது.

பக்கத்தில் இருந்த ஒரு சின்ன வீட்டின் முன்னால் வண்டி நின்றது.

“பாட்டி… அதுதானே நம்மாம்…. இங்க இறங்கறோமே…!!”

“அட.. ஞாபகம் வச்சிண்டிருக்கியே …உள்ள வா…. போகப் போக விவரமா தெரிஞ்சுப்ப….!!!”

வீடு கச்சிதமாய் அழகாய் இருந்தது…

“போய் கைகால் அலம்பிண்டு நெத்திக்கு இட்டுண்டு சாமிய நமஸ்காரம் பண்ணிட்டு வா…. !!!நீ காப்பி குடிப்பியா …இல்லை போர்ன்விட்டாவா…. வெறும் பாலா…?”

“ஒண்ணும் வேண்டாம் பாட்டி…நீ குடிக்கிற காப்பிலேயே ஒரு வாய் குடு… முதல்ல ஒரு நமஸ்காரம் பண்றேன்…”

பூரணி அவனை அப்படியே வாரி அணைத்து நெற்றியில் முத்தமிட்டாள்..

“பரத்…நம்பாத்த தொறந்து விடறேன்.எல்லாம் சுத்தம் பண்ணி வச்சிருக்கு….உன்னிஷ்டம்போல என்ன வேணா பண்ணிக்கோ…. உன்னோட வீடுதாண்டா கண்ணா…. !!”

பரத்துக்கு மனசில் அரித்துக் கொண்டே இருந்தது… முதல் நாள் இரவு சுத்தமாய் தூங்கவில்லை..

” =பரத்…நீ எதையெதையோ மனசில போட்டு குழப்பிக்கிற… சமயம் வரும்போது எல்லாத்தையும் உங்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லப்போறேன்…

எப்பவும் மாதிரி கலகலப்பாக இரு… அதுதான் எனக்கு பிடிக்கும்…”

சின்னப் பையன் தானே…ஒரே நாளில் பழைய கலகலப்பு வந்துவிட்டது…

***

இரண்டு வயது குழந்தையாய் இருந்தபோது பாட்டி கையைப் பிடித்துக் கொண்டு கைலாசநாதர் கோவில் பிரகாரத்தை சுத்தி வந்தது இன்னும் பசுமையாக ஞாபகத்தில் இருந்தது.

அப்புறம் தாத்தா போனபோது பதிமூன்றாம் நாள் ….சுபசுவீகாரம் முடிந்த கையோடு எல்லோருடனும் வந்ததுதான் கடைசி.

இதோ …. பாட்டியுடன் மறுபடியும்….

மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் அம்மன்குடிகொண்டிருக்கும் ஸ்தலமல்லவா . …???

தேவி வனம் என்று அழைக்கப்படும் அவளின் இருப்பிடம் பார்க்க பார்க்க தெவிட்டா அழகு….

எப்போதுமே வீணையுடன் காட்சி அளிக்கும் கலைமகள் யோக நிலையில் அமர்ந்து அருள் பாலிக்கும் ஒரே கோவில்…

“பரத்.. உனக்கு இங்கதான் வித்யாரம்பம் பண்ணனும்னு எனக்கு ஆசை….ஆனா நடக்கல….நாம ஆசப்படறது எல்லாமே நடந்துட்டா ….????”

பாட்டி அவனுக்கு பிடித்ததையெல்லாம் அலுக்காமல் செய்து கொடுப்பாள்…

வெல்லதோசை….அடை…பால் பாயசம்… சர்க்கரைப்பொங்கல்.. கடலைஉருண்டை…மனோகரம்…போளி … கொழுக்கட்டை…

சாயங்காலம் விளக்கேற்றியதும் ஒரு மணி நேரம் பாராயணம்..

பூரணி நிறைய புராணக்கதைகள் சொல்லுவாள்.. ஹரிபக்தர்களின் மகிமையைக் கூறும் பக்தவிஜயத்திலிருந்து தினமும் ஒரு அத்தியாயத்தை அவனைப் படிக்கச் சொல்லுவாள்…

திரும்பி போகும்போது மனசு நிறைய மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்திருக்கும்….

***

இதோ பதினைந்து வயது பையனாய்…. இந்த ஐந்து வருஷத்தில் பாட்டியை முழுதும் அறிந்தவனாய் அம்மன்குடி வருகிறான் பரத்….

பூரணி , தான் சொன்னபடி அவனுக்கு நடந்ததை கொஞ்சம் கொஞ்சமாய் , ஒவ்வொரு தடவையும், சொன்ன கதை…..இதோ….!!!!!

“தாத்தான்னா ஊரே நடுங்கும். ரொம்பவே நாணயமானவர்.. காசு விஷயத்தில ரொம்ப கறாராய் இருந்தாலும் வேல செய்யரவாளுக்கு அள்ளி அள்ளி குடுப்பார்.

ஆனா யாராவது தப்பு பண்ணிட்டான்னு தெரிஞ்சா விசிறி காம்பு பிஞ்சிடும்..

எங்கிட்டே வந்த நாள் முதலே பெரிய பிரியமெல்லாம் கிடையாது.

காலம்பற குளிச்சு ஸ்வாமி ரூமுக்கு வந்து நெத்திகிட்டுண்டு போவார்.

சுடச்சுட காப்பி திண்ணைக்கு போகணம்… கொஞ்சம் ஆறியிருந்தாகூட அத்தன கோபம்…துண்டால பிடிச்சுட்டு தான் குடிப்பார்.ஒரு நாள் ஆறிப்போச்சுன்னு டம்ளரோட வீசி எறிஞ்சார்…..

அடுத்த நாள்லேர்ந்து கணபதி கிட்ட குடுத்து விட்டேன்.எம்மேல கோச்சுண்டு ஒரு வாரம் மௌன விரதம்….!!!

பத்து மணிக்கு டாண்ணு தட்டு வச்சாகணும் …இதுல உப்பில்ல…புளியில்லன்னு … ஒரு வார்த்த கூட சொல்ல மாட்டார். மௌனம்…மௌனம்….!!!

நேரமானா மட்டும் தான் துர்வாச அவதாரம்…

அப்புறம் சாயங்காலம் ஏழு மணிக்கு டிபன். படுக்க மட்டும்தான் உள்ள வருவார்.அதுவரைக்கும் நான் இருக்கேனா….செத்தேனான்னு கூட தெரியாது..

எனக்கு இப்படியிருந்து பழக்கமேயில்ல… வீட்ல மனுஷா இருந்தும் தனியா இருக்கிறது எவ்வளவு கொடுமைங்கறது அனுபவிச்சவாளுக்கு மட்டும்தான் புரியும்.

நல்லவேளை நிறைய புஸ்தகம் வீடு முழுக்க…எல்லாமே அத்தை எனக்கு குடுத்தது.

அத்தை மாதிரி ஒரு மனுஷிய பாக்க முடியாது..பத்து வயசில கல்யாணமாகி பதினெட்டு வயசுல புருஷனும் போயாச்சு…

இந்த விஷயத்தில உங்க தாத்தா தெய்வம் தான்.கூட வச்சிண்டு நல்லமாதிரியா கரைசேத்துட்டாரே…”‘

நாஇப்போ சொல்லப்போற விஷயம் எவ்வளவு தூரம் உனக்கு புரியும்னு தெரியல…எனக்கே கல்யாணம் ஆகி ஒரு வருஷம் கழிச்சு தான் தெரியும்…..!!!!

அவரும் சந்தேகப்படும்படியா நடந்துக்கவேயில்ல.

அப்போ நான் உங்கப்பாவ பிள்ளையாண்டிருந்தேன். ஆறு மாசம்னு நினைக்கிறேன்.

ஒருநாள் ராத்திரி ஆத்துக்கு வரவேயில்லை.ரொம்ப பயந்துட்டேன்.அப்போ அத்தையிருந்தா….

“அத்த ..அவரக்காணமே…பயம்மா இருக்குன்னு….” கையப் பிடிச்சுண்டு அழுதேன்.

“பயப்படாத பூரணி..நானே மின்னாடி அவனைப் பத்தி எல்லாத்தையும் சொல்லியிருக்கணும்…

நாங்க ரொம்ப தப்பு பண்ணிட்டோம்மா.. அவனுக்கு ஏன்தான் இப்படி புத்தி போனதோ தெரியல…நம்பாத்து பரம்பரைக்கே இல்லாத இந்த குணம்..

மூணு பொண் குழந்தைகளுக்கு அப்புறம் பொறந்ததாலேயோ என்னமோ அம்மா ரொம்பவே செல்லம் குடுத்து கெடுத்துட்டான்னு தோணறது.

பதினைந்து வயசு வரைக்கும் அம்மா பக்கத்துல தான் படுத்துப்பான். அம்மா போனதும் அப்படியே கூட்டுக்குள்ள ஒடுங்கிட்டமாதிரி…. யாரோடையும் பேசறதில்ல..

கொஞ்சம் கொஞ்சமாய் வெளில போக வர இருந்தான் . இங்க இருக்கிற காலேஜுக்கு போனான்னு பேருதான்.ஆனா படிச்சானான்னு தெரியல.

அரசல் புரசலாக காதில விழுந்தது… நடத்த சரியில்லை.. பொம்மனாட்டி சகவாசம் இருக்குன்னு கேள்விப்பட்டதும் குடும்பமே ஆடிப்போச்சு…

ஆனா யாருக்கும் அவன தட்டிக் கேட்க தைரியமில்ல. அம்மா கிட்டையே படுத்து பழகிட்டவனுக்கு பொண்ணோட கதகதப்பு வேண்டியிருந்தது போல இருக்கு….

கல்யாணம் ஆனா சரியாய்டும்னு லேசா எடுத்துண்டுட்டோம்னு தோணறது.

அத்த எங்கையப் பிடிச்சுண்டு அழுதூட்டா..

“பூரணி…நாங்கள்ளாம் சேந்து ஒனக்கு மகா பாபம் பண்ணிட்டோம். ஒரு நாள் அவனப்பாத்து கேக்கணும்…

“பதினெட்டு வயசில என் தலைமுடி மட்டுமில்ல என்னேட சந்தோஷம்… நிம்மதி.. ஏன்..மொத்த வாழ்க்கையும் தொலச்சிட்டு நிக்கற என்ன ஆத்துல வச்சிண்டு உன்னால எப்படிடா உனக்கு இந்த மாதிரி நடந்துக்க முடியறதுன்னு…..

நாக்க பிடிங்கிக்கறா மாதிரி கேக்கணும்னுட்டு…. அப்படி கேக்காட்டா இந்த கட்ட வேகாது…”

கேட்டாளா…இல்லையானுட்டு தெரியல”.

“பூரணி….கோபாலனுக்கு உம்மேல நிறைய ஆசையும் மதிப்பும் இருக்குன்னு நா நம்பறேன்….

உன்ன பார்க்கும்போதெல்லாம் அவனுக்குள்ள ஒரு குறுகுறுப்பு…..குத்த உணர்ச்சி..

வெளில போயி காச விட்டெறிஞ்சா மனசாட்சிக்கெல்லாம் பதில் சொல்லிண்டிருக்க வேண்டியதில்லையே……”

“அத்த தாத்தாவ நன்னாவே புரிஞ்சு வச்சிண்டிருந்தா …”

***

இந்த விஷயமெல்லாம் தெரியவரும் போது பரத்துக்கு இருபது வயது ஆகி விட்டது..

“பாட்டி.. இன்னும் நீங்க முக்கியமான விஷயத்தைப் பத்தி பேசவேயில்லையே..”

“தெரியும் ராஜா…அந்தப் பத்தி சொல்ற நேரம் வந்தாச்சு….

தாத்தா மேல எனக்கு கோபம் வந்ததுக்கு முக்கிய காரணமே அவர் கடைசிவர தன்னோட தப்ப ….அது என்ன எவ்வளவு காயப்படுத்தியிருக்குங்றத புரிஞ்சுக்காம சுயநலமா இருந்ததுதான்..

மனுஷனுக்குள் இத்தனை முரண்பாடா ?? தனக்கொரு நியாயம்..பிறத்தியாருக்கொரு நியாயமா ??

கைலாசம் போனதும் எங்களுக்குள்ள எல்லாமே முடிஞ்சு போச்சு… இரண்டு பேருக்கும் நடுவில இருந்த திரை ஒரு இரும்புச்சுவரா மாறிடுத்து.

நீ பொறந்தப்போ உன்ன பாக்க கூட வர மன நெலமையில இருக்கல. அப்புறம் கொஞ்சம் மனச தேத்திண்டுட்டேன்.

உன்னப்பாக்கும்போதேல்லாம் என்னோட கவலையெல்லாம் பஞ்சா பறந்து போய்டும்…

அப்புறமா நீங்கள்லாம் வந்து போன சமயம் நா எதையுமே காட்டிக்க விரும்பல.

எங்க இரண்டு பேருக்கும் நடுவுல கணபதி தான் ஒரு பாலமா இருந்தான்..

தாத்தா போய் காரியமெல்லாம் முடிஞ்சவுடனே நா என் நகையெல்லாம் வித்து இந்த வீட்ட வாங்கிட்டேன்.

ஒரு பெரிய பூட்டா எடுத்து பழைய வீட்ட பூட்டினதும்தான் எம்மனசுல இருந்த புயல் கொஞ்சம் அடங்கின மாதிரி தோணித்து…

அவரையே உள்ள வச்சு பூட்டின மாதிரி …….

என்னமோ ஒரு கூண்டுக்குள்ளேர்ந்து வெளில வந்த மாதிரி….

சில சமயம் நான் நெனச்சுப்பேன்…… விவாகரத்து கூட ஒரு வரப்பிரசாதமோன்னு…..

பிடிக்காம வாழற வாழ்க்கை ஒரு கொடுமை…இரண்டு பேர்ல யாரோ ஒருத்தர் தன்னோட சுயத்த இழந்தோ ….மறந்தோ வாழணும்னு என்ன அவசியம்…

ஒரே வீட்ல ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் பார்க்க பிடிக்காம….யாருக்காக….?? “

“பாட்டி …. எப்படி உங்களால தனியாவே …..!!!

இதெல்லாம் …..நினச்சா ரொம்ப பெருமையாவும் அதே சமயம் வருத்தமாகவும்….தாத்தா மேல ஆத்தரமாவும். .. !!!!!

உனக்கு இத்தன சக்தி எங்கேந்து வந்தது பாட்டி…??

“எல்லாமே அந்த மகிஷாசுரமர்த்தினி குடுத்த தைரியம் தான்…சூரன சம்ஹாரம் பண்ணினவளாச்சே….

அதெல்லாம் நிஜமோ …. கற்பனையோ… !!ஆனா மனசு வச்சா பொண்களால சாதிக்க முடியாதது எதுவுமில்லை…..”
.
” கண்ணா…. எனக்கு நீ ஒரு ஒத்தாச பண்ணனும்.. தாத்தா வீடு ஒனக்குத்தான்…..

நீ இந்த வீட்ட ஏதாவது ஒரு நல்ல காரியத்துக்காக பயன் படுத்தணும்னு என்னோடே ஆச….

அம்மன்குடியிலேயே உன்ன கட்டிப்போடறேன்னு அப்பா அம்மாவுக்கு எம்மேல கோபம் வரலாம்…….

நீ அப்பப்போ வந்து போற மாதிரி இருந்தா கூட போறும்….செய்வியா….???”

“பரத்.. இன்னொரு விஷயம்…. இதெல்லாம் யாருக்குமே தெரிய வேண்டாம்.இதக்கேட்ட உனக்கே தாத்தாவின் மேல ஆத்திரம் வருதே..

ஏற்கனவே அப்பாவுக்கு தாத்தா மேல அத்தன பெரிய மதிப்பெல்லாம் கிடையாது. இதுவும் தெரிஞ்சா அவர மனசிலேர்ந்து தூக்கி எறிஞ்சுடுவான். உன்னோட இருக்கட்டும்….”

“பாட்டி… நிச்சயமா பண்றேன்…ஆனா அதுக்கான சக்தி குடுன்னுமட்டும் என்ன ஆசீர்வாதம் பண்ணு பாட்டி…..”

பூரணி கதை முடிந்து விட்டது……..!!!!!

***

“நா ஆரம்பத்லேர்ந்து சொல்லிண்டிருக்கேன்.

எம்பேச்சுக்கு மதிப்பே இல்ல. ‘ பாட்டி..பாட்டின்னு அவா காலையே பிடிச்சு சுத்திண்டிருந்தானே…இப்ப பாருங்கோ…என்னமோ அனாத குழந்தைகளுக்கு பள்ளிக்கூடமாம்..!!!

அம்மன்குடியிலே பழியா கிடக்கானே…. எனக்கு படுத்தாலே தூக்கம் வரல..

கிளப்பில எல்லாரும் பரத் என்ன பண்றான்னு கேக்கறச்சே…. மனசு விட்டுப் போச்சு….”

“பானு..நீ படிச்சவதானே….நா ஒண்ணு சொன்னா எம்மேல பாயக்கூடாது….

நீங்களெல்லாம் லேடீஸ் கிளப்ல சோஷல் சர்வீஸ் பண்றேன்னு கிராமம் கிராமமா போய் என்ன பண்றேள்..???

ஏழக்குழந்தைகளுக்கும்..அனாதபசங்களுக்கும் எத்தன உதவி பண்றேள்…”

“அதத்தான் நானும் சொல்றேன்… ஏன் அந்த மாதிரி பண்ணக்கூடாது….???”

“கொஞ்சம் பொறுமையா கேளு…

நீ உன் வசதியெதையும் கொறச்சுக்காம…அதே சமயம் ஏழைகளுக்கும் உதவணம்னு சௌரியமா ஒரு வழிய தேர்ந்தெடுத்துட்ட…

உனக்குராத்திரில AC இல்லாம தூக்கம் வராது…

நானோ உனக்கும் ஒருபடி மேல…உக்காந்த இடத்திலேர்ந்து ஒரு செக் எழுதிக் குடுத்துட்டா எல்லாம் முடிந்ததுன்னு நெனைக்கிறவன்.. ….. …..

பெரிய பெரிய கார்ப்பரேட் எல்லாம் ஸ்பான்சர் பண்றதோட தங்க கடமை முடிஞ்சுட்டதா நினைக்கிறவா…

கம்பெனி டாக்ஸ் கட்ட வேண்டாமே…..தங்க கைலேர்ந்து கூட குடுக்கறதில்லை..

எல்லோருமே உதவி பண்ணனும்னு நினைக்கிறவாதான்… தப்பேயில்ல….

இதில நம்ப பரத் மாதிரி ஒரு சிலர் அவாளோடையே தங்கி….அவாளோட சாப்பிட்டு… தூங்கி…அவா வாழற வாழ்க்கய வாழ்ந்து…!!!!!

He is simply great…you should be proud of your son… our son…

திருப்பதிக்கு நேர ஹெலிபேட்ல போய் இறங்கறாவா இருக்கா….

கோவில் வாசல் வரைக்கும் காரில் போறவாளும் உண்டு..

சிலர் படியேறி வரேன்னு வேண்டிக்கிறா..

சிலபேர் பாத யாத்திரயாவே போறா…

எங்க அத்தை மாதிரி சிலபேர் மஞ்சத்துணில காச முடிஞ்சு போறவா கைல குடுத்துடுவா….

அவா அவா சௌர்யம்போல..

எது உண்மை பக்தின்னு சொல்லமுடியுமா….?????

பரத்த அவம்போக்குல விட்டுடும்மா….

அவனுக்கு ‘சக்தி குடு’ ன்னு நாம பிரார்த்தன மட்டும் பண்ணுவோமே…!!!!

அம்மன்குடில அம்பாள் மட்டும் குடியிருக்கறதா நா நெனைக்கல….

எங்கம்மாவும் இன்னமும் அங்க குடியிருக்கா…அவ பரத்துக்கு ஒரு குறையும் வராம பாத்துப்பா…..நம்பு….!!!

பாரதி சொன்னமாதிரி. …

“மனதில் உறுதி வேண்டும்…

வாக்கினிலே இனிமை வேண்டும்..

நினைவு நல்லது வேண்டும்….

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்….”

இயற் பெயர் சரஸ்வதி சூரியநாராயண்.தற்போது கோயமுத்தூர் வாசியாகிய நான் ' சரசா சூரி' எனும் பெயரில் நான்கு வருடங்களுக்கு மேலாக சிறுகதைகள் எழுதி வருகிறேன்... நுண்ணுயிரியலில் முதுகலைப் பட்டம் பெற்று, சில காலம் சிறப்புத் தேவை வேண்டும் குழந்தைகளுடன் பணியாற்றியதை , வாழ்வில் எனக்குக் கிடைத்த வரமாகக் கருதுகிறேன்..பெரிய குடும்பத்தில் பிறந்ததால் உறவுகளின் பெருமை அறிந்தவள்.சிறுவயதிலேயே நான்கு சகோதரிகள் இணைந்து' ஜாங்கிரி' எனும் கையெழுத்துப் பிரதியை நடத்தியது மகிழ்ச்சியான அனுபவம்..என்னுடைய…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *