கோமாவின் கணவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 8, 2023
பார்வையிட்டோர்: 2,764 
 
 

“மயினி..நான் கோமா பேசுறேன்..நேத்து ராத்திரி அருணோட அப்பாவுக்கு உடம்புக்கு சரியில்லாம ஐகிரவுண்டு ஆஸ்பத்திரில சேத்துருந்தோம்..இப்ப அதிகாலைல… இறந்துட்டாரு… இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம ஊருக்கு கொண்டு போயிருவோம்…”

கோமா நிதானமாய் சொல்லி விட்டு, அடுத்த எண்ணை தொடர்பு கொள்ள ஆரம்பித்தாள்.

” யாரு சரோஜாவா..நாந்தான்க்கா..இங்கே வந்தும் பிரயோசனம் இல்ல..இன்னைக்கு காலைல சீவம் போயிருச்சு..இனி அந்தப்பயல வச்சுக்கிட்டு எப்படி ஒத்தையில சமாளிக்கப்போறேனோ தெரியல..”

2010 ஆம் வருடத்திய கையடக்க டைரியைப் பார்த்து அடுத்த எண்ணிற்கு அடிக்க ஆரம்பித்தாள்.

நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். இது எப்படி அவளால் முடிகிறது?

படுக்கையில் அமர்ந்தபடி, தன் மொபைலில் ஒவ்வொருவருக்காய் பேசிக்கொண்டிருந்தாள். “அவன் ” பக்கத்தில்தான் தூங்குவதுபோல் படுத்திருந்தான். கேசம் கலைந்திருந்தது. முண்டாப்பனியன் தோள் பக்கம் சற்றே மடங்கி சுருண்டிருந்தது. திக்குப்பச்சை நிறத்தில் இருந்த சாரத்திற்கு வெளியே தெரிந்த அவனது கால்கள் கறுத்திருந்தன.

சுவாசம் மட்டும் தான் இல்லை.

நான் கொண்டு வந்திருந்த சம்படத்தை கொடுக்கவா வேண்டாமா என்ற யோசனையோடு கீழே வைத்தேன்.

“வீட்டு சாப்பாடு கொடுக்க முடிஞ்சா கொடுங்கன்னு டாக்டர் சொல்றாரு “

என்று நேற்று கோமா சொல்லியிருந்ததால், என் மனைவி சாப்பாடு கொடுத்து விட்டிருந்தாள். இனி பிரயோசனமில்லை.

தன்னுடைய கணவனின் இறப்பு செய்தியை, மனைவியே ஒவ்வொருவருக்காய் போன் செய்து தெரிவிக்கும் கொடுமை யாருக்கும் வாய்க்கக்கூடாது.

முதல் நபருக்குப் போன் செய்யும்போது அவள் குரல் கம்மியது. ஆனாலும் அழுது அரட்டவில்லை. அடுத்தடுத்து போன் செய்யும்போது,

ஒரு நிதானமும், உறுதியும் தென்பட்டது.

“கோமா..நான் வேணும்னா பண்ணட்டுமா..நம்பரை மட்டும் சொல்லு” என்றேன்.

“வேண்டாம் மாமா..நானே பார்த்துக்கறேன்..இந்த டைரில உள்ள ஆட்களிடம் எல்லாம் உங்களால விளக்கி சொல்ல முடியாது..” என்றபடியே தொடர்ந்தாள் கோமா.

“தெய்வு அத்தானா..இன்னும் கொஞ்ச நேரத்துல ஆம்புலன்ஸ் வண்டில அங்க வந்துருவோம்..அருண் கிட்ட இப்ப எதுவும் சொல்ல வேண்டாம்..நீர்மாலைக்கு வேணும்கிறத வாங்கி வையுங்க..வந்தவுடன் எடுக்குற மாதிரி..பிரமநாயகம் அண்ணன்கிட்டேயும் சொல்லி இருக்கேன்..கூடமாட இருப்பான்..கிளம்பும்போது இன்னொருக்க போன் பண்றேன் அத்தான்..” என்றவள் கண்கள் லேசாக கலங்கின.

“வர்றப்ப எனக்கு டைரி மில்க் சாக்லெட் வாங்கிட்டு வாப்பா..ன்னு அப்பாட்ட சொன்னான் அருண் பய..காலைக் கெந்தியபடி நடந்துக்கிட்டே சரி சரி ன்னு தலையாட்டிட்டு டாக்ஸில ஏறினாரு..உசுருல்லாத உடலோட திரும்பப் போறேன் வீட்டுக்கு..”

சேலை முந்தானையால் கண்களை துடைத்தபடி சொன்னாள் கோமா.

“ஊர் முழுக்க கடன் தான். என்ன கடன்னாலும், பய டைரி மில்க் கேட்டான்னா, ஞாபகமா வாங்கிட்டு வந்து, ராத்திரி பதினொன்றை மணிக்கு எழுப்பி கொடுப்பாரு..அந்தப் பயலை எப்படி வளக்கப்போறேன்னுதான் தெரியல..”

பையன் ஞாபகம் வரும்போது மட்டும் கண்ணீர் பொலபொலன்னு கொட்டுது அவளுக்கு.

” பேஷண்ட் குருநாதன்.. கூட இருக்குறது யாருங்க .”

வார்டின் கீழ்புறம் இருந்து வந்த சத்தம் கேட்டு, எழும்பி ஓடினாள் கோமா

அந்த வார்டில் இருந்த தலைமை செவிலியர் எதையோ நீட்டி கையெழுத்து வாங்கினாள்.

கால் நீட்டி படுத்திருந்த குருநாதனை உற்றுப்பார்த்தேன்.

மனுஷன் எந்தக் கவலையுமின்றி தூங்கிக்கொண்டிருந்தான். இருபது லட்சம் கடன். நமக்குத்தெரிந்தவரை உள்ள தொகை இது. இன்னும் எத்தனை பேரிடம் வாங்கி இருக்கிறானோ ?

எந்த தைரியத்தில் இவ்வளவு பணம் கடன் வாங்கினான் என்றே தெரியவில்லை. அவன் தலைமாட்டில் கோமாவின் கைப்பை இருந்தது.

கைப்பைக்கு அருகில் கதைப் புஸ்தகம் ஒன்று. வண்ணதாசனின்

“தீராநதி “. கோமா கதைப்புஸ்தகம் படிப்பாள்.


“நீங்க கதையெல்லாம் எழுதுவீங்களோ ? “

ஒரு கோடைகாலத்தில், எங்க வீட்டிற்கு ஒருமுறை கோமாவும், குருநாதனும் வந்திருந்தபோது தான் கோமா கேட்டாள். அவளுக்கு கல்யாணம் ஆன புதுசில் என்ற நினைவு.

என்னுடைய புத்தக அலமாரியைப் பார்த்து அதிசயித்து நின்றாள்.

“எவ்ளோ புத்தகம் ? இவ்வளவும் படிச்சு முடிச்சுடீங்களா”

கண்கள் விரிய கேட்டாள் அவள்.

எனது நூல் ஒன்றை எடுத்து நீட்டினேன்.

மகிழ்ச்சி பொங்க பெற்றுக்கொண்டவள் “ம்ம்..கையெழுத்துப் போட்டுக்கொடுங்க” என்று என்னிடம் நீட்டினாள்.

போட்டுக்கொடுத்தேன். அதன்பிறகு அவள் படித்த கதைகளைப் பற்றி பேசிக்கொண்டே இருந்தாள்.

கல்லூரிப்பருவத்தில், பாலகுமாரன் கதைகள், பிறகு நூலகத்தில் எடுத்துப்படித்த ஜானகிராமன் கதைகள்..விகடனில் தொடராக வந்த இந்துமதியின் ” தரையில் இறங்கும் விமானங்கள் “, வண்ணநிலவன் எழுதிய ” கம்பா நதி ” என்று சொல்லிக்கொண்டே வந்தாள்.

“கம்பாநதி படிச்சுருக்கியா ” என்றேன்.

“ம்ம்..படிச்சுருக்கேனே..அவரோட ” கடல் புரத்தில் ” நாவல் கூட படிச்சிருக்கேன்..பிலோமியை மறக்க முடியுமா” என்று அவள் சொன்னபோது, அது வரை நான் அறியாத கோமாவாய் தெரிந்தாள்.

அடுத்த தலைமுறை, தீவிரமாய் புத்தகங்கள் வாசிக்கிறது..பொன்னியின் செல்வனை தாண்டி வந்திருக்க மாட்டாளோ என்று எண்ணிய எனக்கு,

பிலோமியை அவள் சொன்னது சற்று ஆச்சரியமாய் இருந்தது.

“சித்தப்பா..முன்னீர்பள்ளம் ரயில்வே தண்டவாளத்தை தாண்டி ஒரு இடம் இருக்கு..பத்து சென்ட் நிலம்..ரொம்ப சீப் தான்..அம்பது அடியில தண்ணீ வரும். தேனா இனிக்கும்..” என்றபடியே அருகில் வந்து அமர்ந்தான் குருநாதன். அவன் என்னிடம் பேசிய முதல் பேச்சு இதுதான்.

அலமாரியில் அடுக்கியிருந்த புத்தகங்களை மறைத்தபடி உட்கார்ந்தான் அவன்.

முன்னீர்பள்ளம் இடத்தை உறவினர்கள் பலரிடம் தேனாக சொல்லி சொல்லியே இடங்களை விற்று விட்டான். ரியல் எஸ்டேட் பிசினஸில் கைதேர்ந்த ஆசாமி தான் என்று நினைத்துக்கொண்டேன். என்னைத்தவிர, அனைவருமே வாங்கி விட்டார்கள். வாங்கிய இடங்கள் முட்புதராய் கிடக்கின்றன.

ஒருமுறை, பழைய ஹூண்டாய் காரில் வந்து இறங்கினான்.

“சித்தப்பா..வண்டி வெறும் நாப்பதாயிரம் கிமீ. தான் ஓடியிருக்கு. ஒன்றரை லட்சம் தான்..பார்ட்டி கஷடத்தில் இருக்குறாப்ல..முடிச்சுருவோமா ” என்றான். அடப்பாவி..கார் புரோக்கர் தொழில் வேறா?

வேண்டாம் என்று சிரித்தபடியே மறுத்து விட்டேன்.

“உங்களை விடுறாப்ல இல்லை ” என்பதுபோல பார்த்துவிட்டு சென்றான். அவனுக்கு என்று ரெடிமேட் சிரிப்பு ஒன்று இருக்கிறது. அதை உதிர்த்து விட்டபடி நகர்ந்தான். இந்த சிரிப்பு தான் அவனுக்கு ஆயுதம்.

இந்த அஸ்திரத்தை அவன் வீசும்போது, பலரும் வீழ்ந்து விடுவார்கள்.

“ஏற்கனவே நாலு இடத்தை காட்டி ஒன்னு கூட வாங்கல மாப்ள..சவம்..ஒண்ணாவது வாங்கிப்போடுவோம்னு வாங்கினேன்..” என்று ஆலங்குளம் அத்தான் சொன்னபோது ” ஆஹா..இவரையே வளைச்சுப் போட்டுட்டானே ” என்றே தோணியது.

சிலர் கோமாவிற்காக வாங்கினார்கள். இடம் வாங்காவிட்டால், கோமா வருத்தப்படுவாள் என்று நினைத்தார்கள்.

சமயங்களில், இடத்தின் வரைபடத்தை காட்டி அவன் விளக்கம் கொடுப்பான்.

“நம்ம பிளாட்க்கு பக்கத்துல தான் கோகோ கோலா பேக்டரி ஒன்னு வரப்போகுது.. இதுல இருந்து ஒரு கிமீ.தூரத்துல தான்..நம்ம இடத்தோட விலை கிர்ர்ர்ர்னு ஏறிரும் பாருங்க..இதுல ஏழே ஏழு இடம் தான் இப்போ இருக்கு. ஏழாம் நம்பர் பிளாட்டு நம்ம தெய்வு அத்தானோட தம்பி பையனுக்கு.. எட்டாம் நம்பர் பிளாட்டு யாருக்கும் வேண்டாம்..யோசிப்பாங்க..நானே வாங்கிக்கறேன்..ஒன்பதாம் நம்பர் பிளாட்டு தான் வேணும்னு தென்காசி பெரியம்மை கேட்டு வாங்கிட்டாங்க..அப்புறம் பாத்தீங்கன்னா, பன்னிரெண்டாம் நம்பர் பிளாட்டு ஒன்னு கிடக்கு..வடக்க பாத்த மனை..ரொம்ப ராசியானது..”

வாய் வலிக்காமல் பேசிக்கொண்டிருப்பான் குரு.

குரு என்ற குருநாதன். எட்டாம் நம்பர் பிளாட்டில் கோமா என்று பென்சிலால் மார்க் பண்ணியிருப்பான்.
இப்படி அங்கெ உள்ளதை இங்கே போட்டு, இங்கே உள்ளதை அதில் போட்டு, கடனில் சிக்கிக்கொண்டான். ஒன்றல்ல இரண்டல்ல இருபது லட்சங்கள்..சொத்து என்று பார்த்தால், ஒட்டிக்கொண்டிருக்கும் பழைய ஹோண்டா பைக் மட்டும் தான்.


ஸ்ட்ரெச்சரில் தூக்கி வைத்தார்கள். பச்சைநிற சாரம் நெகிழ்ந்து அவிழ்ந்தது. சட்டென்று சாரத்தை பிடித்து முடிச்சுப்போட்டாள் கோமா.

எங்கோ எடுத்து சென்றார்கள்.

“போஸ்ட் மார்ட்டம் பண்ணிட்டுதான் கொடுப்பாங்களோ மாமா “

அவள் முகத்தில் கலவரம் தெரிந்தது.

“இது சூசைட் கேஸ் இல்லையே..விபத்தும் இல்ல..பின்ன என்ன..பாத்துக்கலாம்..” என்றேன்.

அந்த வார்டுக்கு பொறுப்பான நர்ஸ் வந்தார் ” கோமாங்கறது நீங்க தான..வந்து இதுல ஒரு கையெழுத்து போடுங்க..ஊருக்கு கொண்டு போறதுக்கு ஆம்புலன்ஸ் ரெடி பண்ணிட்டீங்களா ” என்றார்.

“இல்லீங்க..நீங்க தான் ஏற்பாடு பண்ணுவீங்கன்னு சொன்னாங்க..”

கோமா பதட்டத்துடன் சொன்னாள்.

“சொன்னாதானம்மா எங்களுக்குத்தெரியும்..வீகேபுரத்திற்கு தான கொண்டு போகணும்.. வேலுச்சாமி..ஆம்புலன்ஸ் வேன் இருக்குதா..”

சத்தமாய் வேலுச்சாமியை அழைத்தபடியே நர்ஸ் சென்றார்.

நான் கூடவே போனேன். வெளியே போயிருந்த இரண்டு வேன்கள் இன்னும் வந்து சேரவில்லையாம். எப்படியும் அரைமணி நேரத்தில் வந்து விடும். டவுண் வரை சென்றுள்ளது என்றார் ஒருவர்.

குருநாதன் படுத்திருந்த படுக்கையின் ஓரத்தில் கோமா அமர்ந்திருந்தாள்.

இன்னும் அரை மணிநேரமாவது ஆகும் ” அதை ” பெற்றுக்கொள்வதற்கு.

அவள் முகம் இருண்டு கிடந்தது.

தமிழ் எம்.ஏ. படித்திருந்த அவள் கொஞ்ச காலம் அருகில் இருந்த ஒரு நர்சரி பள்ளியில் டீச்சராக இருந்தாள்.

“இதென்ன உத்தியோகம்னு பார்த்துட்டு இருக்க..நாலாயிரம் ரூபாய் க்கு தொண்டைத்தண்ணி வத்த கிளாஸ் எடுக்கணுமாக்கும்..புண்ணாக்கு ரூபாய்..இதை நான் ஒரே நாள்ல சம்பாத்தியம் பண்ணிருவேன்..நாலு போன் போட்டம்னா போதும்..பயலைக் கவனி போதும் “

என்று ஒரே போடாகப் போட்டதன் விளைவு..இருந்த வேலையையும் விட்டு விட்டாள். மேல வீட்டு பாடலிங்கம் அண்ணாச்சி வாங்கித்தந்த வேலை அது.

“மாமா..ஏதாச்சும் வேலை கிடைக்குமா..” கோமாவின் குரல் கம்மியிருந்தது.

“கம்ப்யூட்டர் கோர்ஸ் ஏதும் படிச்சுருக்கியா ” என்றேன்.

“டைப் தெரியும்..” என்றாள்.

“அதெல்லாம் அந்தக் காலம்மா..இப்போ கம்ப்யூட்டர் யூஸ் பண்ணதெரிஞ்சுருக்கணும்.. சரி..முயற்சி பண்ணுவோம்..” என்றேன்.

“மூணு மாசத்துல எப்படியாச்சும் படிச்சுருவேன் மாமா..”

என்றவள், கீழே குனிந்து எவர்சில்வர் சம்படத்தை எடுத்தாள்.

நான் கொண்டு வந்திருந்தது. மூடியை திறந்தவள், உள்ளே இருந்த இட்லியை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்.
நேற்று மதியம் சாப்பிட்டதாக சொன்னவள், ஒரே மூச்சில் சாப்பிட்டு முடித்து விட்டு, பாட்டில் தண்ணீரை எடுத்து மடக் மடக் கென்று குடிக்க தொடங்கினாள்.

நான் கோமாவையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

– மார்ச் 2023

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *