கொழும்பு நகரத்துத் தேவதைகளும், ஓர் அகல் விளக்கும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 14, 2014
பார்வையிட்டோர்: 12,853 
 
 

மதுரா பார்வை மனிதர்களினிடையே எடுபடாமல் போன ஒரு கரும்புள்ளி நிழல் தான். அவளுடைய அந்தப் புறம்போக்கு வெளியழகைப் பற்றி சிலாகித்துப் பெருமையாகச் சொல்லிக் கொள்ளும்படியாக மிகவும் மேல் நிலையான மனதைக் கொள்ளை கொள்ளக் கூடிய, பளிங்கென ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்ற, ஒரு மானுட தேவதை போல, அவள் பிறக்க நேர்ந்திருந்தால், இன்று அவள் காலடிச் சுவடுகள் இந்த மண்ணிலல்ல விண்ணிலேயே இன்பச்சிறகு விரித்துப் பறந்து கொண்டிருக்கும்.

அந்தப் பாக்கியம் அவளுக்கில்லை. அழகிலும் நிறத்திலும் சோடை போன ஒரு சராசரி அழகிகளை விட அவள் அழகு தரத்தில் மிகவும் தாழ்ந்து விட்டதாய் பரவலாக ஒரு கருத்து உண்டு.

காட்சி நிறைவாகப் பிறக்கக் கூடிய தேவதைகளைக் கண் கொள்ளாக்காட்சி தரிசனமாகக் கண்டு களிப்பெய்துவதற்கு மனிதர்கள், அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்கள் கொழும்பை நோக்கிப் பயணித்த காலம் ஒன்று இருந்தது. அந்தக் கால கட்டத்திலேதான் மதுராவின் பிறப்பும் ஓர் எதிர் வினை போல வந்து வாய்த்தது. இன்று இருபது வயது நிறைவு கண்ட பருவ யுவதியாக அவள் இருக்கிறாள். கனவு ஓட்டமான சலன வாழ்க்கை பற்றி மிதமிஞ்சிய கனவு மிதப்புகள் அவளைப் பொறுத்தவரை இரண்டாம் பட்சம் தான். உயிரோட்டமான அவள் பார்வைக்கு எட்டுவதெல்லாம் என்றுமே அழிந்து போகாமல் ஏககாலத்திற்கும் ஒளி தரிசனமாக நின்று நிலைக்கின்ற வாழ்க்கையின் சத்திய இருப்புகள் மட்டும் தான். அந்த இருப்பை விட்டு விலகாத நிலையிலேயே அவளது கல்யாண வேள்விக்கான தருணம் கைகூடி வந்தது.

அப்போது அவள் படிப்பை முடித்து விட்டுக் கிராமத்தில் இருந்தாள் அந்தக் காலத்தில் எஸ் எஸ்ஸி படித்து முடித்தாலே பெரிய விடயம் தான் அவள் அது வரை தான் படித்து முடித்திருந்தாள் அதுவும் பாதி கிணறு தாண்டிய நிலைதான். கிணறு என்றதும் தான் நினைவுக்குவருகிறது ஏழாலையென்றால் கிணறு காவி என்று ஒரு பட்டப் பெயருண்டு. தண்ணீருக்காகக்கிணற்றையேகாவிக்கொண்டுவந்ததாகச் சொல்வார்கள்

மதுராவுக்குக் கிணற்றுத் தண்ணீர் குடிப்பதென்றால் மிகவும் சந்தோஷம் அதிலும் வாளியால் அள்ளி ஊற்றும் போது கைகளால் ஏந்தி வாங்கிக் குடிக்கிற சந்தோஷத்துக்கு ஈடாக எதுவுமேயில்லை என்பது அவள் நினைப்பு அந்தச்சந்தோஷம் ஒன்றுக்காகவே ஒரு கிராமத்து வாலிபனைத் தன் கணவனாக எதிர்பார்த்து அவள் தவம் கிடச்ந்த நேரம்

அது நடக்கிற காரியமா? கிராமமென்றாலே தோட்டக்கார மாப்பிள்ளை தான் கைகூடி வரும். அவள் வசதியாக வாழ வேண்டுமென்றால் கொழும்பிலே அரச உத்தியோகம் பார்க்கிற ஒருவனையல்லவா பார்க்க வேண்டும். அப்பாவின் நினைப்பு அது. போன வருடம் தான் மதுராவின் அக்கா சுகுணாவைக் கட்டிக் கொடுத்தார்கள். அவளுக்கு யாழ்பாணத்திலே புடவைக் கடை நடத்துகிற ஒருவனைத்தான் மாப்பிள்ளையாகத் தேர்ந்தெடுக்க முடிந்தது. மதுராவைப் பெரிய இடத்தில், கொழும்பிலே அரச உத்தியோகம் பார்க்கிற ஒருவனுக்குக் கட்டிக் கொடுக்க வேண்டுமெனத் தீர்மானித்து, அதற்கான கதவு திறந்த நேரம். அவளுக்காக அவர்கள் தெரிவு செய்த மாப்பிள்ளையின் பெயர் சங்கரன்.அவன் தூரத்துச் சொந்தமும் கூட.

பலவருடங்களாக அவன் கொழும்பிலே ஒரு எழுதுவினையனாகப் பணியாற்றி வருகிறான் சாதாரண கிளார்க் வேலைதான். அவனுக்கும் மதுராவுக்குமிடையிலே கல்யாணப் பேச்சு வார்த்தை, ஒரு இழுபறியாகப் போய்க் கொண்டிருந்த நேரம். ஜாதகப் பொருத்தம் உச்சத்தில் இருந்தாலும், அது ஈடேறுவதில் பல சிக்கல்களுக்கு அவர்கள் முகம் கொடுக்க நேர்ந்தது. அதில் பிரதானமாக அவளின் மாயவெளியழகு சார்பான அதீத விமர்சனக் கண்ணோட்டத்தின் நடுவே மதுரா ஒரு துன்பியல் கருப் பொருளாகச் சிக்கிக் கொள்ள நேர்ந்தது .

அது குறித்த ஒரு தகவல் தான் மதுராவின் தலையில் பேரிடியாக வந்து வீழ்ந்தது. .ஒரு தினம் சுகுணாவின் கணவன் பாபு டவுனிலுள்ள கடையை மூடி விட்டு இரவு எட்டு மணிக்கு வீடு திரும்பி வந்த போது, மதுரா வராந்தா ஜன்னலருகே நின்றவாறு வானத்து நிலவையே வெறித்துப் பார்த்தவாறு மெளனம் கனத்துப் போய் நின்றிந்தாள்.

அவள் நிற்பதையே கணக்கில் எடுக்காதவன் போல், முகம் இறுகி அறைக்குள் போனவன், அவசரமாகக் கதவை தாழ்ப்பாள் போட்டு மூடி விட்டுச் சுகுணாவோடு இரகசியக் குரலில் ஏதோ பேசுவது கேட்டது.

“ எழும்பு சுகுணா !இப்ப என்ன படுக்கை உனக்கு?உன்னோடு ஒரு முக்கிய விஷயம் கதைக்க வேணும். கேட்கிறியே?”

“சொல்லுங்கோ”

“உன்ரை கொப்பாவுக்கு ஏன் இந்த வீண் வேலை? பேசாமல் கிடக்கிறதை விட்டிட்டு”

“என்ன சொல்லுறியள்? எது வீண் வேலை? அப்படி என்ன வீண் வேலை அப்பா செய்து போட்டார்?”

“எல்லாம் மதுரா கல்யாண விஷயமாகத் தான் சொல்லுறன். இதைப் பற்றி என்ரை தம்பி சொன்னவன். மதுராவுக்குக் கொழும்பு மாப்பிள்ளை சரி வராதாம். ஏன் தெரியுமோ?”

“ஏனாம்?”

“கொழும்புக்குக் கொண்டு போய் வீட்டிலே சிறை வைச்சிருக்க முடியுமே உன்ரை தங்கைச்சியை?சங்கரன் வெளியிலே ஜோடி சேர்ந்து போறதென்றால் அதுக்கு ஒரு தகுதி வேண்டாமோ என்று என்ரை தம்பி கேட்கிறது நியாயம் தானே”

“அதுக்கு என்ன தகுதி வேணுமென்று எனக்குப் புரிகிற மாதிரிச் சொல்லுங்கோ”

‘”மக்கு. சரியான பட்டிக்காடு. நீ மட்டுமல்ல உன்ரை தங்கைச்சியும் தான். கொழும்புப் பொம்பிளையளைப் பற்றி நிறையச் சொல்லலாம். அவையின்ரை பளபளக்கிற அழகுக்கு முன்னாலை உன்ரை மதுரா தோற்றுப் போன மாதிரித் தான். அழகில்லாத,இவளைக் கூட்டிக் கொண்டு போய் கொழும்பிலே வைச்சிருக்க, சங்கரன் ஒன்றும் அசடல்ல. அதுக்கு வேறை ஆளைப் பாருங்கோ”

“மெல்லக் கதையுங்கோ மதுராவின்ரை காதிலை விழப் போகுது”

“நல்லாய் விழட்டும் கொப்பர் பேசினால் அவளுக்குப் புத்தி எங்கை போச்சுதென்று கேட்கிறன்”

வெளிவராந்தாவில் நின்று அதைக் கேட்க நேர்ந்த பாவம் மதுராவுக்கு. காலக் காற்றில் அள்ளுண்டு கரைந்து போகிற இந்த அழகு பற்றி உள் விழிப்பாக நிறையவே சிந்திக்கத் தெரிந்த அவளுக்கு அத்தான் சார்பான அவன் தம்பி கூறிய கொழும்புப் பெண்கள் பற்றிய அந்தப் புது வியாக்கியானம். எளிதில் ஜீரணமாக மறுத்தது. ஒரு காலத்திலும் பாபு முன்னிலைக்கே வராதவள்.

அவனோடு வாய் திறந்து ஒரு வார்த்தை கூடப் பேசியறியாதவள் .கொழும்பிலே வேலை பார்க்கிற ஒரு மணமகனை மணம் முடிக்க அழகுதான்

வேண்டுமென்று அவன் அறியாமையோடு சொன்னதைக் கேட்டு இது வரை கட்டிக் காத்த பொறுமையென்ற பொன் விலங்கு அறுந்து போக சத்திய வேதம் கூறவே தார்மீக சினம் கொண்டு வெளிப்பட்டு வரும் ஒரு தர்ம தேவதைபோல அறைக் கதவைத் திறந்து கொண்டு அவளின் நெருப்புக் கக்கிய பிரசன்னம் பாபு முன்னிலையில், ஒரு நிதர்ஸனப் பிழம்பாகத் திடுமென்று நேர்ந்தது

அந்தச் சுவாலை சுட்டெரிக்க ஒரு கணம் தடுமாறிப் போனான் பாபு. படுக்கையை விட்டெழுந்தவன் தன்னைச் சுதாரித்துக் கொண்டு நிமிர்ந்த போது உணர்ச்சி வசப்பட்டுக் கண்கலங்கியவாறே அவள் கேட்டாள்.

“அத்தான் உங்களை எதிர்த்துக் கேள்வி கேட்க நேர்ந்ததற்காக நான் வருத்தப்படுறன் இருந்தாலும் என்ரை உண்மை நிலையறியாமல் இதை நீங்கள் சொல்லியிருக் கூடாது. கொழும்புப் பெண்கள் அழகு தேவதைகள் தானென்றால் நான் ஆர்? புற இருளின் கறையைத் தின்னக் கூடிய ஓர் அகல் விளக்கு மாதிரி நானும் என் மனசும். இது ஏன் உங்களின்ரை கண்ணிலை படேலை.? சொல்லுங்கோ அத்தான்”

அவள் என்ன சொல்கிறாள்? உயிர் வார்ப்பான வேதமே கரை கண்டுவிட்ட தோரணையில், அவள் மனம் திறந்து பேசிய தத்துவார்த்தமான கொள்கைப் பிரகடன வார்த்தை அம்புகளால் துளைக்கப் பட்டு உயிர் விட்டவன் போல், அவன் வெகு நேரம் வரை எதுவுமே பேசத் தோன்றாமல் வாயடைத்து நிலை தடுமாறித் தன் வசமிழந்து நின்று கொண்டிருந்தான்

புடவை வியாபாரத்திற்காகப் பல தடவைகள் அவன் கொழும்பு போய் வருகிற போதெல்லாம் அந்தக் கொழும்பு நகரத்துத் தேவதைகளைக் காட்சி தரிசனமாக அவன் கண்டு வந்ததென்னவோ உண்மை தான். மதுராவை அவர்களோடு ஒப்பிட்டுத் தோற்றுப் போகுமளவுக்கு மிகவும் தரக் குறைவாகப் பேசி அவளை விளிம்பு நிலைக்குத் தள்ளி விட நேர்ந்த தனது வார்த்தைகளை விட்ட தவறுக்காக அவளிடம் மன்னிப்புக் கேட்டு மனம் வருந்தும் பாவனையில் பார்வை இளகச் சோகம் வெறித்து அவன் மெளனம் கனத்து நிற்பதைப் பார்த்து விட்டு மீண்டும் அவளே பேச்சைத் தொடர்ந்தாள்

“அத்தான்! உங்கடை இந்த வாயடைத்த மெளன நிலை சொல்லிலடங்காத சோகக் கனதியுடன் ஓர் உயிர் பாஷையாய் எனக்குப் புரியுது இதுக்கு நீங்கள் என்ன செய்வியள்? உங்கள் தம்பி சொன்னதைத் தானே நீங்களும் சொல்ல

நேர்ந்தது. உலகம் நம்புவது போல் அந்தக் கொழும்பு நகரத்துத் தேவதைகள் குறித்து எனக்கு எந்த மனவருத்தமுமில்லை. அவர்கள் யாரும் மிஞ்ச முடியாத தேவதைகளாகவே இருந்து விட்டுப் போகட்டும் இதுக்காக என்னை என் பெறுமதியான ஆத்ம விழிப்பு நிலை கண்ட உயிரின் பெருமைகளை மட்டம் தட்டிப் பேசி ஓரம் கட்ட நினைப்பதைத் தான் என்னாலை தாங்கமுடியாமலிருக்கு ஏனென்றால் நானொரு அகல் விளக்கு மாதிரி. என்னை நீங்கள் புரிஞ்சு கொண்டது இவ்வளவு தானா? அது தான் என்ரை மன வருத்தமெல்லாம்”

அதற்கு அவன் திடீரென்று குரலை உயர்த்திச் சொன்னான்.

“ மதுரா உன்ரை பேச்சைக் கேட்ட பிறகு தான் ,கனவுலகிலிருந்து விழித்த மாதிரி ஓர் உண்மை எனக்கு உறைக்குது நீ பாவப்பட்ட இந்த மண்ணின் கறைகளையே எரிச்சுச் சாம்பலாக்க வந்த என்றும் அணைந்து போகாத ஓர் அகல் விளக்கு மாதிரி ,என்று இப்ப எனக்கு நல்லாய் விளங்குது இது விளங்காமல் கொழும்பு நகரத்துத் தேவதைகள் பற்றிச் சொல்ல நேர்ந்தற்காக என்னை மன்னிச்சிடு, ஓர் அகல் விளக்கு மாதிரிப் பிரகாசிக்கின்ற உனக்கு முன்னால் அவர்களெல்லாம் உயிரற்ற வெறும் நிழல் பொம்மைகள் மாதிரி. என்ன, நான் சொல்வது சரிதானே?”

அவள் புரிந்து கொண்டு, தலை ஆட்டும் போது ஒரு யுகம் வென்ற பெருமிதத்தில் அவனும் கறைகள் நீங்கிய களிப்புக் கடலில் நீந்திக் கரையேறுவது போல சந்தோஷமாக ஒளி விட்டுச் சிரிக்கும் போது சுகுணாவும் முகம் மலர்ந்து சிரிப்புக் களை மின்ன நின்றது ஒரு சகாப்த காவியமே நிறைவு பெற்றது போல் மனம் குளிர்ந்து போன அந்த ஒரு கணம்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *