கொரோனா பயம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 20, 2022
பார்வையிட்டோர்: 2,677 
 
 

முரளிக்கு மூக்கில் சளி அடைத்துக்கொள்ள மூச்சு விடுவதில் சிரமமாக இருந்தது.தலையில் பாறாங்கல்லை வைத்து அமுக்குவது போல் வலி ஏற்பட்டது.எச்சில் சுவையும் மறத்துப்போன நாக்கில் மறுப்பு சொன்னது.உடல் வெப்பம் கூடியிருந்தது.உடன் படுத்திருக்கும் மனைவி மலரின் நெற்றியில் கை வைத்து பார்த்தான்.நார்மலாக காட்டியது.

இரவு அதிக நேரம் கண்விழித்து செல்போனில் வீடியோ பார்த்ததால் காலை மணி ஏழைக்கடந்தும் குறட்டை சத்தத்துடன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவளை எழுப்ப மனமில்லாமல் கழிவறை வேலைகளை முடித்து விட்டு, பல்துலக்கி சரிந்த லுங்கியை ஏற்றி கட்டி, அதன் மேல் வெள்ளி அரணாவை இழுத்து விட்டவன் மட மட வென மாடியை விட்டு கீழே வந்து செல்போனில் பெயரைத்தேடி தன் மருத்துவ நண்பன் ரவியை தொடர்பு கொண்டான்.

“சளி,காய்ச்சல் இருந்தா உடனே ஹாஸ்பிடல் போய் கொரோனா டெஸ்ட் எடுத்திடு.வாரக்கணக்குல வீட்டு வைத்தியம் பண்ணிட்டு வற்றவங்களை காப்பாத்தறதுக்கு ரொம்ப கஷ்டப்படறோம்.நேத்தைக்கு ஒருத்தர் நூறு கிலோ வெயிட்,டிரிங்ஸ்,ஸ்மோக் பார்ட்டி வீட்ல சொன்னா கேட்காம ஒருவாரமா விட்டுட்டு அப்புறம் வந்து அறுபது சதவீதம் நுரையீரல் போயிடுச்சு.திணறிகிட்டிருக்காரு.பார்க்கவே மனசுக்கு கஷ்டமா இருக்கு.நாங்கெல்லாம் மருத்துவர்கள் எங்களோட உயிரை பணயம் வச்சு நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுக்கறோம்.நீங்கெல்லாம் தேவையில்லாம வெளில சுத்திட்டு இலக்காயிடறீங்க.ஆமா நீ எங்க போனே?”என்று கேட்டார் டாக்டர்.

“சொந்தக்காரர் இறந்துட்டார்.என் அப்பா போன போது எல்லா சடங்கும் அந்த குடும்பம் தான் பண்ணிணாங்க.அதான் கேட்ட உடனே ஓடிட்டேன்.அவரு நெஞ்சு வலி வந்து இறந்துட்டதாக சொன்னாங்க.அப்புறம் எப்படி சிம்டம்ஸ்னு தெரியல”என்றான் முரளி.

“நுறையீரல் பாதிக்கிறதால நெஞ்சு வலின்னு புரிஞ்சுக்கிறாங்க.டெஸ்ட் எடுத்திருந்தா தெரிஞ்சிருக்கும்.கொரோனா இருக்குன்னு சொல்லிருவாங்களோங்கிற பயத்துல சிலர் டெஸ்ட் எடுக்கிறதில்ல.இறந்தவங்ககிட்டிருந்து பரவாட்டியும் உயிரோட அவங்க குடும்பத்திலிருக்கிறவங்க கிட்டிருந்து பரவிடும்” என்று டாக்டர் ரவி சொன்னதைக்கேட்டு உடனே மருத்துவ மனைக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கச்சென்றான் முரளி.

வீட்டுக்கு திரும்பிய போது மனைவி மலர் குளித்து முடித்து வெள்ளைத்துண்டை கூந்தலுடன் இணைத்து சுருட்டி கட்டியவாறு பூஜைக்கு மலர் பறித்துக்கொண்டிருந்தாள்.

“எங்க திடீர்னு காணாம போயிட்டீங்கன்னுதான் போன்ல கூப்பிட்டேன்.சளி,காய்ச்சல்,ஆஸ்பத்திரின்னு சொன்னதும் நடுங்கி போயிட்டேன்.கல்யாணமாகி ஆறு மாசம் தான் ஆச்சு.மூணு மாசம் முன்ன உங்க அப்பா போனதுக்கே “மூலம் நட்சத்திர பொண்ணு வேண்டான்னு சொன்னமே கேட்டியா…?”ன்னு உங்கம்மா என்னை பாடா படுத்திட்டு, இதுவரைக்கும் என்னோட பேசாமயே இருக்காங்க.இப்ப நீங்களும்….” வார்த்தைகள் வராமல் விம்மி கண்ணீர் விட்டவளை கட்டியணைத்து ஆறுதல் சொல்ல அணுகியவன்,கொரோனா பயத்தால் திடீரென நெருப்பை கண்டது போல் மனைவியை நெருங்காமல் விலகி நின்றான்.

“கொரோனா இருக்கோ,இல்லியோ இறப்பையே மனம் அசை போடுது.ஆனா ஆசை,பேராசையெல்லாம் இப்போ குப்பைக்கு போயிடுச்சு.உசுரோட வாழ்ந்தா போதுனு தோணுது.நான் தனி ரூம்ல இருக்கறேன்.டிபன் கொடு”என்றவன் தன் அறைக்கு சென்றான்.

மறுநாள் கொரோனா உறுதியானதாக தகவல் வர சற்று ஆடித்தான் போனான் முரளி.தகவலை மனைவிக்கு சொன்ன போது அவள் கண்களில் கண்ணீர் கரைபுரண்டோடியது.

மருத்துவர் ரவியை தொடர்பு கொண்டபோது அவர் பணியில் இருந்ததால் எடுக்கவில்லை.உடனே அருகிலுள்ள மருத்துவ மனைக்கு சென்றான்.சில டெஸ்ட் எடுக்கப்பட்டது.

“உடனே நீங்க டெஸ்ட் எடுத்ததால பரவாயில்லை.முதல்ல பயப்படாதீங்க.கொரோனா மரணத்தை கொடுக்கிறதை விட,மன பயம் மரணத்தை கொடுத்திடும்.நீங்க தடுப்பூசி போட்டதால நோய் வந்தும் அதிகம் பாதிக்கல.சில மாத்திரைகள் கொடுக்கிறேன்.வீட்லயே தனிமைப்படுத்திக்குங்க.தொந்தரவு இருந்தா எந்த நேரமானாலும் என்னை கூப்பிடுங்க.தைரியமா போங்க சரியாயிடும்” என மருத்துவர் சொன்னபோது அவர் கடவுளாக தெரிந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *