கொடுமக்காரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 2, 2022
பார்வையிட்டோர்: 3,898 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல – ஒரு அம்மா இருந்தா. அவளுக்கு மூணு ஆம்பளப் பிள்ளைக, ஒரு பொம்பளப் பிள்ள. மூணு மகங்களுக்கு கலியாணமாச்சு. மகளும் கலியாணமாகிப் போயிட்டா.

இந்த அம்மா இருக்காளே, ரொம்பக் கொடுமக்காரி. மருமகள்கள, இந்தண்ட – அந்தண்ட அசய விடமாட்டா. எதயும் வாங்கி, வாய்க்கி ருசியாத் திங்க விடமாட்டா. இந்த மூணு மருமகள்களும், மாமியாள வெளில வெரட்டணும்ண்டு திட்டம் போட்டாங்க. ஒரு திட்டங் கூடப் பலிக்கல.

ஒருநா, காலைல, மூத்த மருமக, ஒங்க மகளப் பாம்பு கடிச்சிருச்சாம்ல, நீங்க போயிப் பாக்கலயாண்டு கேட்டா.

இத உம்மண்டு நெனச்சு, மக மேல இருக்ற பாசந் தாங்க மாட்டாம, மக இருக்ற ஊருக்குப் போறா. –

மாமியா போகவும், இவங்க ஆசப்பட்டதெல்லாம் வாங்கித் திங்கணும்ண்டு நெனச்சு, மூத்த மருமக கரும்புச் சவளம் வாங்கித் திண்டா. நடு மருமக தோச சுட்டுத் திண்டா. கட்சி மருமக கோழி அடுச்சு, கொழம்பு வச்சா. கொழம்பு கொதிக்கயில, மாமியா வந்திட்டா. வரவும், மருமகளுகளுக்குக் கையும் ஓடல, காலும் ஓடல.மாம

வந்ததும், வராததுமா, ஓங்க மக நல்லா இருக்காளாண்டு மூணு வேரும் மொத்தமாக் கேட்டாங்க. கேக்கவும், மாமியாகாரி, நல்லாப் பாத்தா, வாசல்ல கரும்புச் சக்க கெடக்குது. தோச சுட்ட அடையாளம் இருக்குது. கோழிக் கொழம்பு மணக்குது. இதெல்லாம் நல்லா தெருஞ்சுகிட்டா. தெருஞ்சுகிட்டு, அத ஏ…ங் கேக்குறீங்க?

ஏ…மகளக் கடிச்ச பாம்பு….

இருந்திச்சாம் – இருந்திச்சாம்

கரும்புச் சவளம் தண்டில – படம்

எடுத்திச்சாம் – எடுத்திச்சாம்

சுட்ட தோசத் தண்டில – ஏ… மனசு

கொதிச்சிச்சாங் – கொதிச்சிச்சாங்

கோழிக கொழம்பப் போல – ண்டு –

சொல்லிப் பொய்யா அழுதாளாம். கோழிக் கொழம்ப மாமியா கண்டுட்டாண்ட்டு, கட்சி மருமக தூக்கிக்கிட்டு போயி குப்பயில கொட்டிட்டா, அது மழயில நனஞ்சு, பூஞ்சான் புடுச்சுக் கெடந்திச்சாம். மின்னல் வெட்டினதால காளானாப் போச்சாம். வச்ச கொழம்ப, மாமியாளும் திங்காம மருமகளும் திங்காம, வெறு மனசால வீணாப் போச்சு. மாமியாதா மருமக்க திங்கட்டுமிண்டு விட்டென்னா? இந்தப் பொம்பளைக, பா….வம், மாமியாளுக்கு குடுத்தென்னா ? சரி….. சரி… நீங்க சண்ட புடிக்காதீங்க. மாமியாளுக்கு ஏத்த மருமக. மாமியாளும் மருமகளும் எங்க ஒத்துமயா இருக்காங்க?

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், பண்பு விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *