கையெழுத்து…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 14, 2022
பார்வையிட்டோர்: 4,293 
 
 

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், வீடு சத்தமாக இருந்தது. மற்ற நாட்களெல்லாம் வீட்டில் ஆள் நடமாட்டம் குறைவு என்பதால் இன்று மட்டும் இப்படி ஒரு இரைச்சல். சத்தமில்லாத நாள்களில் வீட்டில் ஏற்பட்டிருக்கும் அலங்கோலத்தை எல்லாம் இன்றைக்குத்தான் மாற்றியமைக்க வேண்டும். ஆறுநாட்கள், கொஞ்சம் கொஞ்சமாக வீட்டில் உள்ளவர்கள் சேர்த்து வைத்த சோம்பேரித்தனம், வீட்டின் திரைத் துணியிலும் தொலைக்காட்சி மேல் இருக்கும் தூசியிலும், சமையல் அறை எண்ணெய் பிசுபிசுப்பு கொண்ட அடுப்பிலும் ஒட்டிக் கொண்டிருந்தன. அவ்வபோது செய்திருக்க வேண்டியதை செய்திருந்தால் இன்றைய விடுமுறை நாளை மற்றவர்களைப் போலவே மகிழ்ச்சி நிறைந்த உரையாடலில் மூலமாகவோ ஏதாவது பயண ஏற்பாட்டிற்கோ செலவு செய்திருக்கலாம். அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை. இப்போது மட்டுமல்ல, மணி இந்த வீட்டை வாங்கிய கடந்த 8 ஆண்டுகளாக இப்படித்தான் இருக்கிறது.

மணியின் மனைவி பவானியைப் பொருத்தவரை ‘இவரை திருத்தவே முடியாது’ என்ற முடிவுக்கு வருவதற்கு முன் பல முறை சொல்லியும் செய்தும் பார்த்தாகிவிட்டது. ம்ஹிம்.. மணி எதற்கும் மசியவே இல்லை. ஒரு நாள் இரு நாள் பழக்கமா உடனே மாற்றிக் கொள்ள. பள்ளியில் தொடங்கியப் பழக்கம் இது. அதிலும் குறிப்பாக மணியின் கையெழுத்தை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். அட…. அட….. என்ன அழகு எவ்வாறான எழுத்து வடிவங்கள் என்று மணி தனக்குத்தானேச் சொல்லிக் கொண்டாலும் கோழி கால் பட்ட மண் போலத்தான் நமக்குத் தெரியும். காக்கைக்கே தன் குஞ்சு பொன்னாகத் தெரியும் போது, மனிதனுக்கு மட்டும் கையெழுத்து உண்மை வடிவிலாத் தெரியப்போகிறது.

கையெழுத்தில் தொடங்கிய ஒழுங்கின்மை வீட்டிற்குள் நுழைந்தது. வீட்டில், கட்டிலைத்தான் முதன்முதலில் பாதித்தது அந்த ஒழுங்கின்மை. ஒழுங்கற்ற முறையில் இருக்கும் கட்டிலின் நிரந்தர வடிவத்தை கவனிக்க மறந்த பெற்றோரால், கட்டிலைத் தாண்டி ஒவ்வொரு இடமாக நுழைந்தது ஒழுங்கின்மை. கையெழுத்து, கட்டில், அப்புறமென்ன சமையல் அறையும் வாசற்படியும்தான் தொடர்ந்து பாதிக்கப்பட்டன.

சாப்பிட்ட பிறகு கழுவ வேண்டிய உணவுத்தட்டும், குப்பையில் போட வேண்டிய சாப்பிட்ட மிச்ச மீதியும் அப்படியே சமையல் அறையில் வைக்கப்பட்டது. ஒருவேளை முதல் நாளோ இரண்டாவது நாளோ இதனை கண்டித்திருக்கலாம். மணி இதனைத் தொடராமல் இருந்திருப்பான். ஒழுக்கின்மையும் வந்த வழியில் பின்னோக்கி சென்றிருக்கும். ஆனால் மணியின் பெற்றோர் அதனை செய்யவில்லை. ‘உங்க அப்பா பழக்கம் அப்படியே உனக்கும் ’ என பெருமையாய் சொன்ன அம்மாவும் அதைக்கேட்டு சிரித்த அப்பாவும் பெரிதாக எந்த தவறும் செய்திருக்கவில்லை. எறுப்பு ஊர தேயும் கல்லின் முதல் தேய்தலை எறும்பே அறிந்திருக்காதே. இதனையும் நாம் அந்த வகையில் சேர்க்கலாம்.

முன்பெல்லாம் வீட்டிற்குள் வரும் முன்பு தன் காலணியை அதற்கான குட்டி அலமாறியில் வைப்பது மணியின் வழக்கம். அதற்கென்றே அழகான பாதுகாப்பான குட்டி அலமாரி வாசல் அருகில் இருந்தது. மணியின் காலணி மட்டும் வலது காலுக்கானது வடக்கிலும், இடதுக் காலுக்கானது தெற்கிலும், இருக்கும். பல முறை காலணிகள் காணாமலும் போனது உண்டு. அலமாரியின் உள் வைக்கப்பட்ட பழைய நாளிதழை மாற்றுவதற்குள் புதுப்புது காலணிகளை மணியின் பெற்றோர்கள் வாங்கினர். தேய்ந்து போன காலணிக்கு பதில் புதிதாக வாங்கும் காலணியில் இருக்கும் திருப்தி காணாமல் போன காலணிக்கு பதிலாக வாங்குவதில் இல்லை. அதனை அவர்கள் பொருட்படுத்தவும் இல்லை. ம்.. அப்போதே பொருட்படுத்தியிருக்கலாம்.

படிப்பில் எந்த குறைபாடும் இல்லை. ஆம்… அதுவரையில் இல்லை என்றே சொல்லலாம். கட்டம் அமைத்து, கோடு கிழித்து, குழுக்கள் பிரித்த கால்பந்து விளையாட்டுக்கும்; கண்மூடித்தனாமான கால்பந்தாட்டத்திற்கும் வித்தியாசம் அவரவர் மனதில் மாறுபடும். மணிக்கு இரணாவதாய் சொன்னதில் ஆர்வம் எழுந்தது. பள்ளி இறுதியாண்டு விடுமுறையில் படிந்து சீவப்பட்டிருந்த முடியை வளர்த்து வானம் நோக்கி மாற்றினான். கறுமை நிறம் கொண்ட முடி, முன்புறம் மிட்டாய் வண்ணமாய் மினுக்கியது. புதிய தலைமுடியைக் கண்ட பெற்றோரின் கேள்விக்கு; பள்ளி விடுமுறைதானே என சமாளித்தான். அவர்களும் சரி என்றார்கள். இப்படிப்பட்ட பெற்றோர்க்கு நிச்சயம் மணி கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் இப்படி பட்ட மகன் கிடைக்க அந்த பெற்றோர், ம்.. என்ன சொல்வது..?

ஆரம்பபள்ளி முடித்து இடைநிலை பள்ளிக்குச் சென்றான். மூன்று நாள்கள், வானம் பார்த்த தலை முடியுடனே பள்ளியில் நடமாடினான் மணி. அதுவரையில் மணிக்கு இருந்த பழைய நண்பர்கள் மாறினர். தன்னைப் போலவே இருக்கும் புதுப்புது நண்பர்கள் வருகை மணிக்கு மேலும் கௌரவத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. ஒழுங்கின்மை அங்கு ஒழுக்கமின்மையாக பொறுப்பேற்றது. அதன் விளைவு சீக்கிரமேத் தெரிந்தது.

ஆறு ஆண்டுகள் தன்னுடன் படித்து வந்தவள் ப்ரேமா. நல்ல தோழியாக இருந்த ப்ரேமாவிற்கு காதல் கடிதம் கொடுக்கப் போகிறான். இச்செயலை மணியும் நினைத்திருக்க மாட்டான். கையெழுத்தில் வெளிவந்த ஒழுங்கின்மை, படுக்கை அறை, சமையல் அறை, அதன் ஊடே காலணி தொடர்ந்து தலைமுடி, நண்பர்கள் என மாறிமாறி தற்போது சிந்தனையிலும் நுழைந்துவிட்டது. ஒழுக்கமின்மையாக செயல்படத் தொடங்கியது.

காதல் கடிதத்திற்கு புதிய நண்பர்கள் துணையாய் இருந்தாலும்; அதனை தொடரும் எண்ணத்தைத் தூண்டியது என்னமோ பழைய மூளைதான். இந்த மூளையும் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சினை சேர்த்தது; பழக்கத்தில் உள்புகுந்த ஒழுக்கமின்மை. கையெழுத்தின் வழி தன்னை வெளிகாட்டும் போதே கவனித்திருக்கலாம். வயல்வெளியில் வளர்ந்து நிற்கும் புதர்கள் வயலையே மறைப்பது போல; இதுவரையில் மணியிடம் இருந்த நல்ல பண்புகளும் இயல்புகளும் இனி இல்லை.

ஆசிரியர் அடித்ததால் உள்ளங்கை சிவந்திருந்தது. காதல் கடிதம் குறித்து ப்ரியா எதனையும் சொல்லவில்லை. அவளது தோழி செய்ததற்கு இவள் என்ன செய்வாள். மணிக்கு அறிவுரை மட்டுமே கூறிய ப்ரியா இதனை செய்திருக்க மாட்டாள் என மணிக்கும் யோசனை வரவில்லை. ஆத்திரம் அவன் கண்ணையும் தன் தோழி இதுவரை காட்டிய நட்பையும் மறைத்தது. அவளின் அழகி என்ற நினைப்புதான் தனது இந்த அவமானத்திற்கு காரணம் என முடிவு செய்தான். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினான்.

நண்பர்களிடம் ஆலோசனை கேட்டான். கடந்த ஆண்டு வரை படிக்கவும் பாடங்களைப் பகிரவும் தேவைப்பட்ட நண்பர்கள் இல்லாமல் புதிய வரவுகள் மணிக்கு யோசனையைக் கொடுத்தார்கள். அதிகம் செல்லவில்லை. தந்தையின் பணப்பையில் கைவைக்கும் அளவுக்கு மட்டுமே தொகை இருந்தது. அமிலம் வாங்க பணமும் அதனை எடுக்க திட்டமும் கிடைக்கப் பெற்றான் மணி.
அமிலத்தை கண்ணாடி போத்தலில் கொடுத்த நண்பர்கள் மத்தியில் தனது திட்டத்தை விவரித்தான் மணி. படிக்கவும் அதன் படி நடக்கவும் போட வேண்டிய திட்டங்கள் இவை. இன்று தன் தோழி மீது வந்த வன்ம எண்ணதால் அவள் முகத்தினை சிதைக்கப் போடப்படுகிறது. அவள் பாவம் இல்லையா…? அவள் செய்யாத தவறுக்கு தன் முக அழகை இழக்கப் போகிறாள். இனி வாழ்நாள் முழுவதும் கோர முகத்துடன்தான் இருக்கப்போவதை நினைத்தால்… பாவம் அவள்.

மணி தனது நண்பர்களிடம் சொன்ன திட்டத்தினை செயல்படுத்த ஆயுத்தமானான். கால் சட்டைப் பையில் கண்ணாடி போத்தலுடன் வந்துக் கொண்டிருந்தான்.போத்தலில் அமிலம் தயாராய் இருந்தது. இந்த நேரம் ப்ரேமா தனியாக ஆங்கில வகுப்பிற்கு வருவாள். இன்று ஏனோ தாமதம். நல்ல மனிதனின் மனதினை கெடுக்கும் தீய எண்ணங்கள் போல; மணியின் அந்த புதிய நண்பர்கள் கூட்டத்திலும் ஒரு நல்லவன் இருந்திருக்க வேண்டும். அவன் நல்லவனா இல்லையா என்பதைவிட அந்த கூட்டத்தில் அவன் ஒரு கறுப்பு ஆடு என்றே சொல்லலாம். அப்படித்தன் இனி மற்றவர்கள் அவனை சொல்வார்கள். கறுப்பு ஆடு.

ப்ரேமாவுக்கு தன் மீது நல்ல எண்ணம் கிடைக்கலாம் என்ற எண்ணத்தில் கூட அந்த கருப்பு ஆடு இதனைச் செய்திருக்கலாம்.

பிரேமாவை பின் தொடர்ந்து வந்துக் கொண்டிருந்த அவளின் தந்தையையும் அவரின் நண்பர் ஒருவரையும் மணி கவனிக்கவில்லை. அவள் வழக்கத்திற்கு மாறாக பின்னால் திரும்பியும் ஏதோ பதட்டமுமாய் வருவதை தாமதமாகத்தான் கவனித்தான். ப்ரேமாவும் தன் கண்ணால் எதிரே வந்துக் கொண்டிருக்கும் மணிக்கு எதையோ சொல்ல முயற்சித்தால்.

கண் புருவத்தை உயர்த்தி தன் கால்சட்டைப் பையில் கையை வைத்தாள். பிறகு தன் கண்ணத்தில் கை வைத்தாள். அவள் பின்னால் கொஞ்சம் திரும்பும்படி காட்டிய செய்கையில் மணிக்கு புரிந்தது. மணி வந்த வேகத்திலேயே பின்னால் ஓட ஆரம்பித்தான். அவனது ஓட்டத்தில் வழக்கத்திற்கு மாறான வேகம் இருந்தது. ஓட்டத்தில் மட்டுமல்ல, மூளையிலும்தான்.

அதிவேகமாய் ஓடியவன், எப்படியோ கால் தடுக்கி கீழே விழுந்தான். கால்சட்டைப் பையில் வைத்திருந்த கண்ணாடி போத்தால் பையிலேயே உடைந்தது. பிறகென்ன ப்ரேமாவுக்காகக் கொண்டு வந்திருந்த அமிலம் தன் காலில் சிந்தியது. சிந்திய இடத்தில் தோல் பொசுங்கியது.

கண்விழித்து பார்த்த மணியின் முன் ப்ரேமாவும் அவளது தந்தையும் தந்தையின் போலிஸ்கார நண்பரும். அந்த நேரம், அவர்கள் நிகழ்த்திய உரையாடல் மணியின் மூளைக்குள் மின்சாரத்தை பாய்ச்சியது. உரையாடல்தான் எத்தனை விதமாக இருக்கிறது. கைகலப்பிற்கும் காரணமாகிறது, சில மன எழுச்சிக்கும் காரணமாகிறது. சரியான உரையாடல், சரியான நபர், சரியா நேரம், இதனை பொறுத்தே உரையாடலில் விளைவு மாறுபடலாம்.

மூளைக்குள் புகுந்த மின்சாரமும் காலில் வலிக்கும் பொசுங்கிய தோலும்; கிடைத்த தனிமையும் மணியை யோசிக்க வைத்திருக்க வேண்டும். இனி ப்ரேமா அவனுக்கு எதிரி அல்ல. இந்த சம்வத்திற்கு பிறகு மணியில் பெற்றோர் அவன் மீது கொண்டிருந்த கொஞ்சநஞ்ச அக்கறையையும் குறைத்தனர். அவர்களிடம் இருந்த இடைவேளி மணிக்கு மேலும் வலித்தது.
மனம் வருந்தி மன்னிப்பு கேட்டான் புதிய மணி. தங்கள் மீதும் தவறு இருப்பதை உணர்ந்தனர் பெற்றோர்.

மூளையில் இறங்கிய மின்சாரம் ஒவ்வொரு இடமாக பிரவேசித்தது. மணியின் சிந்தனை மாறியது, சிந்தனை செயலை மாற்றியது, செயல் பழக்கத்தை மாற்றியது, மாறியப் பழக்கம், அவனது வழக்கத்தை மாற்றியது, மணியின் வாழ்க்கை முறையும் மாறியது.

இது நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மணிக்கும் பவானிக்கும் திருமணம். இருவர்க்கும் ஆனந்தன் ஒரே வாரிசாகப் பிறந்தான். அவனுக்கும் திருமணம் முடிந்தது. இன்று பேரன் பேத்திகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை மணிக்கு அமைந்திருந்தது. இப்போது மணியின் வயது நாற்பத்தைந்து இருக்கலாம்.

கதையின் முடிவு 1

மணியின் படுக்கையறை அலங்கோலமாக இருந்தது. சாப்பிட்ட தட்டை அப்படியே வைக்கபட்டிருந்தது. மணி சாய்வு நாற்காலியில் சாய்ந்து யாருக்கோ கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார். மணியின் மையெழுத்து மீண்டும் அலங்கோலமாக மாறியிருந்தது.

கதையின் முடிவு 2

மணி தன் பேரனின் அறையில் நிற்கின்றார். அங்கே படுக்கையறை அலங்கோலமாக இருக்கிறது. பேரனின் புத்தகம் இன்றினை எடுத்த பக்கங்களைத் திறக்கின்றார். எழுத்துகள் ஒழுங்கற்ற முறையில் இருக்கிறது. தாத்தா மணி பேரனை கூப்பிடுகின்றார்.

கதையின் முடிவு 3
முன்றாவது முடிவாக, நீங்கள் நினைப்பதை எழுதுங்கள். கையெழுத்தை கவனியுங்கள். அவை ஒழுங்காக இருக்கின்றவா…?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *