கைத்தடி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 7, 2023
பார்வையிட்டோர்: 3,839 
 
 

“டேய் கிட்டு ! இங்க வாடா!”

ஈ.ஸி.சேரில் சாய்ந்திருந்த தாத்தா கிச்சாமி அழைக்க வெளியில் விளையாடச் செல்ல விருந்த கிட்டு அவர் அருகில் சென்று நின்று கொண்டான்.

“என்ன தாத்தா, எதுக்குக் கூப்பிட்டே? சீக்கிரம் சொல்லு, என் ஃப்ரெண்ட்ஸெல்லாம் காத்துண்டிருப்பா.” அவன் அவசரம் அவனுக்கு.

“டேய், அதோ மூலையில் இருக்கற தடியை எடுத்துண்டு வா!”

கிச்சாமி சுட்டிக் காட்டிய இடத்தில் இருந்த கைத் தடியைக் கொண்டு வந்து கொடுத்தான்.

தடியை பவ்யமாக வாங்கினார் கிச்சாமி. அதை வாத்ஸல்யம் பொங்க பார்த்தார்.

பார்க்க பார்க்க பரவசமாக இருந்தது. கண்களை மூடி தன் இரண்டு கைகளாலும் வருடினார். வேலை முடிந்தது என நினைத்து கிட்டு நைசாக நழுவப் பார்த்தான் கிட்டு.

“இருடா கிட்டு! உங்கிட்ட கொஞ்சம் பேசணும். ஒரு அஞ்சு நிமிஷம் எனக்காகக் காத்திரு.”

தாத்தாவின் கெஞ்சல் அவனைக் கட்டிப் போட்டது. அவர் ஏதோ சொல்லப் போகிறார் என தெரிந்தது. அப்படியே நின்றபடி இமைக்காமல் தாத்தாவையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

கிச்சாமி கேட்டார். “கிட்டு, இந்தத் தடிக்கு என்ன வயது இருக்கும்?”

திடீரென தாத்தா இப்படி கேட்டதும் ஒன்றும் புரியவில்லை கிட்டுவிற்கு. கைத்தடிக்கும் தனக்கும் சம்பந்தமேயில்லை. அப்படி இருக்கும் போது அதன் வயது பற்றி ஏன் தன்னிடம் விசாரிக்க வேண்டும் என்று எரிச்சல் ஏற்பட்டது. இருந்தாலும் பதிலைச் சொன்னால் தப்பிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது.

“ம்..ஐம்பது வருஷம் இருக்குமா?” என்றான் தாத்தாவை நோக்கி.

“ம்ஹூம், இல்லடா.”

“நூறு…”

“கெடையாது..”

தன் தலையை வலதுகை ஆள்காட்டி விரலால் சொரிந்து கொண்டவன், “அய்யோ தாத்தா நீயே சொல்லு!”

“அடேய், முன்னூறு வருஷமாச்சுடா இதனோட வயது!”

கிட்டு வாய் பிளந்தான். “அம்மாடி! தாத்தா, ஒனக்கு முன்னாடி கொள்ளுத் தாத்தா எள்ளுத் தாத்தா இவாள்ளாம் யூஸ் பண்ணியிருப்பா, இல்லையா?”

கிச்சாமி தன் பொக்கை வாய் விரிய சிரித்தார்.

“ஆமாண்டா ! சரியாச் சொன்னே! இந்தத் தடி பர்மாத் தேக்குனால செஞ்சதுன்னு கேள்வி! கைப்பிடி கீழே பாரு இந்தத் தடி செஞ்சதோட தேதியும் வருஷமும் இருக்கும்.”

தாத்தாவிடமிருந்து தடியை வாங்கி கவிழ்த்து கைப் பிடியின் கீழ் கண்களை நுணுக்கிக் கொண்டு பார்த்தான் கிட்டு. 6-11-1721 என்று செதுக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

பெருத்த ஆச்சரியம் ! இப்படிக் கூடச் செய்வாளோ என்ற மலைப்பும் தோன்றியது.

அதைவிட ஆச்சரியம் தடியை தூக்கிப் போடாமல் வழி வழியாக உபயோகித்துக் கொண்டு வரும் சந்ததியினைரை நினைத்து பெருமையும் ஏற்பட்டது.

தடியை அவனிடமிருந்து வாங்கிய கிச்சாமி, “இதோ பார்ரா, எனக்கப்பறம் உங்கப்பன் இதை யூஸ் பண்ணிப்பான். அவனுக்கப்புறம் நீ யூஸ் பண்ணனும் தெரியறதா? தூக்கிக் குப்பையில் போடக்கூடாது!”

“தாத்தா, இதை ஒரு பொக்கிஷமா நான் போற்றுவேன். எனக்கப்பறம் கூட இந்தக் கைத்தடி தன்னோட பயணத்தத் தொடரும். இது உறுதி!” கண்கள் விரியச் சொன்ன கிட்டுவைப் பார்க்க சந்தோஷமாயிருந்தது கிச்சாமிக்கு.

“ரொம்ப நன்னாச் சொன்னே! சரி நீ கெளம்பு!”

கிட்டு கிளம்பி விட கைத் தடியை தன் மீது வைத்துக் கொண்டார் கிச்சாமி. தடியின் பிடியை வலது கையால் அடிக்கடி தடவிப் பார்த்துக் கொண்டார். அதில் தன் தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா இவர்களின் ஸபரிசத்தை மானசீகமாக உணர்ந்தார்.

சிலிர்ப்பு ஏற்பட்டது.

மூன்று வருடங்கள் ஓடி விட்டது. ஈ.ஸி. சேர் இருக்கிறது. கிச்சாமி இருக்கிறார்.

அவர் பார்யாள் அலமேலு இருக்கிறார். கைத்தடியும் இருக்கிறது. ஆனால் தனக்குப் பிறகு அதை உபயோகிக்க சந்ததியினர் இப்போது இல்லாமல் போய்விட்டனர்.

கார் விபத்து ஒன்றில் கிச்சாமியின் மகன், அவன் பார்யாள், மற்றும் அவர்களின் ஒரே மகன் கிட்டு மாட்டிக் கொண்டு உயிரோடு எரிந்து சாம்பலாயினர்.

அமரர்களாகிவிட்ட அவர்கள் படத்தில் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அடிக்கடி படத்தைப் பார்த்து அழுது கொண்டிருந்தார் கிச்சாமி. மூலையில் கிடந்த கைத்தடி அழவும் தெரியாமல் சிரிக்கவும் தெரியாமல் இருக்கிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *