கேள்வியின் நாயகி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 14,988 
 
 

தனது கல்யாண உறவுமனிதர்களினால் ஏற்பட்ட விபரீத விளைவுகள் குறித்து, வெளிப்படையாக நந்தினி எந்த ஒரு இக்கட்டான நேரத்திலும் கூட எவரோடும் மனம் திறந்து பேசியதில்லை. அப்படியான சந்தர்ப்பங்களில் உயிர் வெளிச்சம் கொண்டிருக்கிற தன்னுடைய மிகவும் புனிதமான உண்மைத் தன்மையை நிலை நிறுத்தி ஒரு வார்த்தை கூட வாய் திறந்து பேச முன் வராமல் தான் மெளன கவசம் பூண்டு அமைதி காத்தது மிகப் பெரிய தார்மீகக் குற்றமாய் இப்போதுதான் அவளுக்கு உறைத்த்தது. அது செல்லரித்துப் போன வாழ்க்கையின், குரூரமான சவால்களையே எதிர் கொண்டு பழகிப் போன இறுதித் தருணம்.

அப்போது அவள் அவளாக இல்லை அவள் மனதில் மட்டுமில்லை உடம்பிலுமே ஒன்றும் மிஞ்சாமல் போன வெறுமையின் தணலில் தீக்குளித்துக் கொண்டு, இருப்புக் கொள்ளாமல் அவள் இருந்த நேரம்… மிக மந்தமான ஓர் இளங்காலைப் பொழுது. அவளை .இழப்புகளுக்கே பழக்கப்படுத்தி, வாழக் கற்றுக் கொடுத்த அவளுடைய வாழ்க்கையின் ஆதர்ஸ நாயகன் இப்போது அவளோடு இல்லை. .வேலை காரணமாக அவர்களை விட்டுப் பிரிந்து மன்னாரில் இருக்கிறான் எப்போதாவது அபூர்வமாக அவனிடமிருந்து கடிதம் வரும் அன்பு விடுபட்டுப் போன இறுகிய மனோநிலையில் அவன் என்ன வேதத்தையா எழுதி விடப் போகிறான்.? வேதத்தையே எதிர்பார்த்து ஏங்கி நிற்பவளுக்கு தலையில் இடி இறங்கின மாதிரி அவன் கடிதம் அவளை உதிரம் கொட்ட வைக்கும். அவளுடைய வாழ்க்கை யுகத்தில் கடைசியில் மிஞ்சியது கண்ணீரே காவியமான அவளை அழித்து ஒழித்துக் கொண்டிருக்கும் இந்த உதிரக் கடல் தான் . அதையும் தாண்டி அல்லது வேறுபட்டு மனம் நிற்பது போலச் சில வேளைகளில் அவளுக்கு உணர்வு தட்டும் தான் அழியாத ஆத்மாவே தான் என்று அறிவு பூர்வமாக உணர்கையில் கறைகள் நிறைந்த, சலனம் கொண்ட வாழ்க்கை பற்றிய நினைப்புத் தானாகவே கழன்று போகும்.. தன்னை இந்த நிலையில் கண்டறிந்து கொள்ள ஒரு மகா புருஷன் இம் மண்ணிலல்ல, விண்ணிலிருந்து தன்னைத் தேடிக் குதித்து வருவானென்று அவள் காத்திருந்தது என்னவோ உண்மைதான். அதற்குப் பதிலாக வந்தது ஒரு மானுட பூதம். பேர் தான் பெண். கண் கொண்டு உணர்வுபூர்வமாக விழித்துப் பார்த்தால் கடும்போக்கான ஓர் ஆணே பெண் வேடம் கட்டி ஆட வந்த வெறும் நிழல் பொம்மை போல உருவம் காட்டி மறையும் ,அவள் வேறு யாருமில்லை. நந்தினியின் சொந்த மாமியேதான் இப்படி உறவுகளென்று உறுத்திச் சரித்து விட்டுப் போகிற முட்படுக்கை மீது பாவம் இந்த நந்தினி. அவளின் பாவப்பட்ட வாழ்க்கையில், இப்படி எத்தனை முட்படுக்கைகள் அவளை நெருப்புத் தின்று அழவைத்திருக்கும்.

இன்று அப்படி அழக்கூட முடியாத நிலை அவளுக்கு.. வெளிவாசல் படி மீது குழந்தையை மடியில் போட்டபடி,வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு அவள் உட்கார்ந்திருக்கிற போது முற்றத்தில் குவிந்திருக்கிற பலாவிலைக் குப்பையைக் காலால் கிளறி மிதித்தபடி மாமியின் சன்னதக் கோலம் அவள் முன்னால் விசுவரூபமெடுத்து வந்து சேர்ந்த போது அதை எதிர்கொள்ளத் திராணியற்று அவள் நிலைகுலைந்தாள். மடியில் குழந்தை வேறு கனக்கிறது ஒரு வயதுப் பெண் குழந்தை. உயிர் ஊசலாடும் பாதி மயக்கத்தில் அது கண்களைச் செருகிக் கொண்டு கிடக்கிறது அதற்கு வயிற்றோட்டமும் வாந்தியுமாகி ஒரு கிழமைக்கு மேலாகிறது நாட்டு வைத்தியம் செய்தும் நின்றபாடில்லை இதனால் நந்தினிக்கும் ஓய்வு ஒழிச்சலில்லாத வேலைப் பளு. இரவு தூக்கமும் போனது.. வீடு வாசல் பெருக்காமல், முற்றம் வேறு கூட்டாமல் அவள் ஏன் இப்படிச் செயலிழந்து இருக்கிறாள்? அது மட்டுமல்ல எல்லாம் ஒழிந்து போன வெறுமையின் நிழல் சின்னமாக அவள் இருக்கிறாளே! கழுத்திலே காதிலே ஒன்றுமில்லாமல் தாலி கூடக் கழன்று போன வெறுமையுடன் அவளைப் பார்க்கச் சகிக்காமல் மாமிக்குப் பற்றிக் கொண்டு வந்ததே பெருங்கோப நெருப்பு அந்தச் சுவாலை விட்டெரியும் நெருப்புக்கு ஆகுதியாக அவள் மனம் மட்டுமல்ல உயிரும் கூடத்தான்
உணர்விழந்த நிலையில் நந்தினி தன்னை மறந்து அதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“என்ன நந்தினி உன்ரை குடும்ப லட்சணம் நல்லாயிருக்கு கொம்மா! உங்களுக்கு ஒன்றும் சொல்லித் தரேலை. அங்காலை பவானியைப் பார். உன்னை விட எத்தனை வயசு இளையவள். எப்படிக் குடும்பம் நடத்துறாள் தெரியுமோ?” நீ என்ன இப்படியிருக்கிறாய்” ஒரு செய்காரியமும் தெரியாமல் நீ கல்யாணம் முடிச்சிருக்கப்படாது”

அதைக் கேட்க நந்தினிக்குத் துக்கம் நெஞ்சை அடைத்தது. தனது உண்மை நிலையறியாமல் என்ன பேச்சுப் பேசி விட்டாள் இந்த மாமி. பவானியும் நானும் ஒன்றா? கல்யாணத்தன்றே காலில் பொன்னிறைக்கைகள் முளைத்துப் பறந்த இந்தப் பவானி எங்கே? நான் எங்கே? குரங்கின் கைப் பூமாலை மாதிரி நானாகிவிட்டிருக்கிறன். என்னைத் தோலுரித்து மாலை போடவே இந்தக் கல்யாணமென்ற பலிபீடம் எனக்கு.. இப்படித் தோலுரிந்து கிடக்கிற இழப்புகளுக்கெல்லாம் நானா காரணம்? என்னை இப்படிக் காவு கொள்வதற்காகச் சாத்தான்கள் வந்து என்னைச் சுற்றிக் குழி தோண்டிய போது மாமி ஏன் அதைக் கண்டு கொள்ளவில்லை? இது யார் விட்ட தவறு? கடவுளுக்குத் தான் வெளிச்சம்.. இப்படி வெளிச்சக் கண் கொண்டு பார்த்து, வேதம் சொல்ல மாமி ஒன்றும் கடவுளில்லையே. . அப்ப யார் கடவுள்? அதுவும் பிடிபட மறுக்கிறது”

மாமி இன்னும் அவளைச் சூறைடயாட வந்த ஒரு மானுப் பேய் போல் அங்கேயே நிலை தரித்து நின்று கொHடிருந்தாள். அவளது லெளகீகமயமான பேச்சின் சாரத்தை உள்வாங்கி நொந்து போன வலி மாறாமல் , நந்தினி திடீரென்று தார்மீகக் கோபம் தலைக்கேறியவளாய்க் குரலை உயர்த்தித் தீர்க்கமாக மாமியைக் கேட்டாள்.

“நீங்கள் மட்டும் சரியான ஆளோ?”

“நீ என்ன சொல்கிறாய்?”

“மழுப்பாதேங்கோ மாமி அடிபட்ட மாடு பாயுதென்று சொல்ல வாறன், எத்தனை நாளைக்கு நீங்கள் இப்படி முகமூடி போட்டுக் கொண்டு அலைவியள்? அது மட்டுமல்ல., மனிதரை நார் நாராய்க் கிழிச்சு வேடிக்கை பாக்கிறதென்றால் அத்துணை கொடூரப் பசி உங்களுக்கெல்லாம் நான் தெரியாமல் தான் கேக்கிறன். எனக்குத் தெரிஞ்ச நாள் முதல் உங்கடை அடுப்படியிலை பூனை தூங்கித்தான் நான் பாத்திருக்கிறன். எனக்குத்தான் செய்காரியம் பத்தாது… குடும்ப சங்கதிகளே தெரியாத அசடு நான்… உங்களுக்கு என்ன வந்தது? எவ்வளவு பெரிய கெட்டிக்காரி நீங்கள்.. உங்களாலை ஏன் சமைக்க முடியாமல் போனது? சொல்லுங்கோ மாமி”

”என்ன கதை கதைக்கிறாய் நீ. எனக்குப் பிரஷர் என்று உனக்குத் தெரியாதே?”

“தெரியும். எல்லாம் தெரியும்.. வடிவாயல்ல அதற்கு மேலேயும் தெரியும் நான் கூட உங்ளை மாதிரித் தான் இப்படி நான் ஒன்றுமே மிஞ்சாமல் அடியோடு வேரறுந்து சரிஞ்சு போனதுக்கு எனக்குச் செய்காரியம் தெரியாது என்பதல்ல காரணம். அதைக் கடவுள் தான் சொல்ல வேணும் உங்களுக்குப் புரியப்போறதில்லை“

உணர்ச்சி முட்டிப் பேசி முடித்து விட்டு நந்தினி நிறுத்தியபோது அவள் வாய் திறந்து அறிவு வெளிச்சமாகப் பிரகடனப்படுத்திக் கூறி விட்ட வாழ்க்கை பற்றிய வேதம் பிடிபட மறுத்ததால் மாமிக்குத் தலை சுற்றி மயக்கம் வரும் போலிருந்தது அதன் பிறகு அங்கு அவள் நிற்கவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *