கேள்விகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 27, 2014
பார்வையிட்டோர்: 10,682 
 
 

”அம்மா, நீ இப்ப கோபமாவா இருக்கே?”

“இல்லடா கண்ணா, ஏன்? என்ன வேணும் என் ராஜேஷுக்கு? இங்க வா.”

“ம்….ஒண்ணுமில்லம்மா. வந்து…..வந்து…..”

“எ பி சி டி எல்லாம் எழுதி முடிச்சிட்டியா?”

“ஓ! பெருசு, சின்னது ரெண்டுமே முடிச்சாச்சும்மா.”

”குட்! அப்புறமா அம்மாக்கு காட்டு, என்ன?”

”சரிம்மா. ம்……அம்மா!”

“சொல்லுடா.”

”போன வாரம் கூட என்ன உன் ஸ்கூலுக்கு கூட்டிண்டு போன இல்ல?”
“ஆமா. ஒனக்கு புடிச்சிருந்ததா?”

”ரொம்ப புடிச்சிருந்தது. அப்புறம்…….போன மாசத்தில ஒரு நாள், அதுக்கு முன்னாடி ஒரு தரம்.”

”மறுபடியும் வரணுமா? சரி. ஒனக்கு ஸ்கூல் இல்லாதன்னிக்கு நீயும் எங்கூட ஸ்கூலுக்கு வரலாம், சரியா?”

”சரிம்மா. அம்மா, நீ பசங்களுக்கு சொல்லித்தர்ர ‘குட் ஹாபிட்ஸ்’ எனக்கு ரொம்ப பிடிக்கும்மா.”

”நிஜமாவா? எந்த நல்ல பழக்கங்கள்ளாம் ஒனக்குப் பிடிக்கும்?”

“சிலதெல்லாம் எனக்கு நல்லா ஞாபகமிருக்கும்மா.”

”அப்படியா? சரி. இப்ப போய் ஏதாவது கதைப்புத்தகம் படி, இல்ல உன் குக்கூவுடன் விளையாடு. அம்மாவுக்கு நிறைய வேலை இருக்கு, ஓகே?”

”ம்..சரிம்மா. அம்மா, நேத்து நம்ம ஒரு கல்யாணத்துக்கு போனோமே?”

“ஆமா அதுக்கென்ன இப்போ?”

”நமக்குக் கூட பேப்பர் கப்ல ஜூஸ் குடுத்தாங்களே?”

”க்கும், நீதான் வேண்டான்னுட்டியே.”

”அத குடிச்சப்புறம் நீ காலி பேப்பர் கப்ப சேர் அடியிலயே வெச்சுட்டம்மா.”

”ஓ.”

“அப்புறம் நம்ம ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்துல உக்காந்து சாப்பிடப்போனோம்.”

”ஆமா. ஒனக்கு சாப்பாடு பிடிச்சிருந்ததுன்னு சொன்ன இல்ல?”

”ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா நீதான் இலைலயே நெறைய மீத்திட்ட.”

”கரெக்ட்! எனக்குப் பிடிக்காத சில ஐடமெல்லாம் போட்டாங்க, அதான்.”

”பூனைங்கன்னா ஒனக்கு பிடிக்காதாம்மா?”

”என்னது, பூனையா?”

“ஆமாம். ஒனக்கு பூனைன்னா பிடிக்குமா பிடிக்காதான்னு கேட்டேன்.”

”ம்…………….தெரியலயே. அவ்வளவா பிடிக்காது, ஏன் கேக்கற?”

”இல்ல……அன்னிக்கு அந்த ப்ரௌன் கலர் பூனை வாயில ஒரு குட்டி பூனைய கவ்விண்டு நம்ம வீட்டுக்கு வந்தப்ப…..”

“நான் அத துரத்திவிட்டேன். நம்ம வீட்ல பூனைங்க வந்து அசிங்கம் பண்ணிட்டுப் போறது எனக்குப் பிடிக்காது!”

”அத துரத்த அது மேல நீ சுடுதண்ணிய ஊத்தினயேம்மா.”

”அப்படியா? ஞாபகமில்ல. சரி நீ போய் உன் டாய்ஸ வெச்சுண்டு வெளையாடு, போ.”

”அம்மா.”

“இப்ப என்னடா?”

“நாளைக்கு ஸ்கூல்ல என்ன குட் ஹாபிட் சொல்லித்தரப்போறம்மா?”

“……………………………………………………………………………”

“அம்மா, நீ இப்ப கோபமாதானே இருக்க?”

”இல்லடா, ராஜா.”

ஆமாம், இப்ப நான் என் மேலயே கோபமாத்தான் இருக்கேன்..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *