கூட்டுத்தொகை ஐந்தும், குருவிகளும்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 13,908 
 
 

அந்த ஞாயிற்றுக்கிழமைதான், என் மனைவி மகேஸ்வரியையும், மகன் பிரபாகரனையும் சாத்தூரிலிருந்து கூட்டி வந்திருந்தேன். விடுமுறை முடிந்து, மறுநாள் பிரபாகரனுக்கு பள்ளி திறக்கவிருந்ததால், வேறு வழியின்றி இருவரையும் மாமியார் அனுப்பி வைத்திருந்தார்.

மகேஸ்வரியின் தம்பி கேசவனின் திருமண வேலைகள் இன்னும் நிறைய இருக்கிறது.

வந்தவள், அவள் இல்லாதிருந்த போது, வீட்டை, சமையலுக்கு பயன்படுத்திய பாத்திரங்களை, நான் எப்படி வைத்திருக்கிறேன் எனப் பார்வையிட்டாள்.

“”பரவாயில்லையே, நீட்டா வச்சிருக்கீங்களே,” என்றாள் பிரியமாய்.

KootuThogai“”அப்பா… நம்ம வீட்டுல, குருவி கூடு கட்டியிருக்குன்னு போன்ல சொன்னீங்களே… எங்கப்பா இருக்கு அந்தக் குருவிக்கூடு?” என்றான் பிரபாகரன்.

மரம் கிடைக்காத குருவி ஒன்று, வீட்டின் முகடற்ற பின்புறத்தில், பாத்திரம் விளக்குகிற மேடைக்குக் கீழ் செல்கிற பைப் லைனில் கட்டியிருந்த கூட்டை, அவனை கூட்டிச்சென்று காண்பித்தேன்.

கூட்டில் இருந்த நான்கு குருவிக் குஞ்சுகளும், பறக்க முயற்சி செய்து, கீழே கீழே விழுந்தபடி இருந்தன. பார்த்த பிரபாகரன், படு உற்சாகமாகினான்.

“”அப்பா… அப்பா… அந்த குட்டிக் குருவிய எடுத்துக் குடுங்கப்பா. கையில தொட்டுப் பார்க்கிறேன்,” என்றான்.

கீழே விழுந்திருந்த குருவிக்குஞ்சு ஒன்றை, பொத்தினாற்போல மெதுவாகத் தூக்கி, அவன் கையில் கொடுத்தேன். ஆர்வத்தை மிஞ்சிய பயத்தால், குருவியை வாங்காமல் பின்வாங்கினான். அவன் கையைப் பிடித்து, அதில் குருவிக் குஞ்சை உட்கார வைத்தேன். அவன் முகத்தில் கூடுதலாய் ஒரு சூரியன் பிரகாசித்தது.
தாய் – தந்தைக் குருவிகள், பின்பக்க காம்பவுண்ட் சுவரில் உட்கார்ந்து, “”என் பிள்ளையை விட்டுருங்கடா…” எனச் சொல்வதாய் நினைத்து, “கிர்ர்… கிர்ர்’ என்று கத்திக் கொண்டிருந்தன.

“”நாங்க லீவுல போயிருந்த போது, குருவி கூடு கட்டி, குஞ்சும் பொரிச்சிருச்சா?” என்றாள், எட்டிப் பார்த்த மகேஸ்வரி. அவளிடம் குருவிக் குஞ்சை நீட்டியதும் உள்ளே ஓடி விட்டாள்.

பிரபாகரனின் தோளில், குருவிக் குஞ்சை உட்கார வைத்து… இரு கைகளையும் விரித்து, அதில் உட்கார வைத்து… என, பல பல கோணங்களில் குருவிக் குஞ்சையும், பிரபாகரனையும் டிஜிட்டல் கேமராவில் படமெடுத்தேன். பின், குருவிக்குஞ்சை அதன் கூட்டிலேயே விட, அடுத்த வினாடியே, அது பறந்து கீழே விழுந்தது. மறுபடியும் எடுத்து கூட்டில் விட்டு விட்டு, பிரபாகரனை வீட்டிற்குள் அழைத்து வந்தேன்.

“”அப்பா… அப்பா… குருவி மறுபடியும் கீழே விழுந்திருச்சி.”

“”வா… வா அவங்க அம்மா பார்த்துக்கும்.”

தினசரி அலைபேசியில் பேசியிருந்தாலும், மதியம் வரை பேசுவதற்கும் விஷயமிருந்தது. மதிய உணவிற்குப் பின், பயணக் களைப்பினால் மகேஸ்வரியும், பிரபாகரனும் படுத்துறங்க, நான் வீட்டின் பின்புறம் வந்தமர்ந்து, பறக்க முயலும் குருவிக் குஞ்சுகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அலைபேசி ஒலித்தது. ஒளிர்ந்த திரையில், ஏதோவொரு, நம்பர். யாராய் இருக்கும் என யோசித்தபடி எடுத்தேன்.

“”வணக்கம். யாரு?”

“”அண்ணே… நான் சரவணன். என்னண்ணே… என் நம்பர் உங்கக் கிட்ட இல்லியா?”

“”ஓ… ஆடிட்டரா? சாரி சரவணன். பழைய மொபைல் தொலைந்து போச்சு. புது மொபைல் வாங்கி, டூப்ளிகேட் சிம் வாங்கி போட்டிருக்கேன்.”

“”அப்பிடியாண்ணே. வேற ஒண்ணுமில்லண்ணே… என் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு.”

“”சந்தோஷம் சரவணன்… நார்மல் டெலிவரியா… சிசேரியனா?”

“”சுகப்பிரசவம் தாண்ணே… பிரபாகரன் நல்லாயிருக்கானா?”

அரைமணி நேரத்திற்கும் மேலாக இருவரும் பேசிக்கொண்டிருந்தோம்.
பேசி முடித்த பிறகும், “தெரிந்தவர்களிடம் சொல்லும்படி’ சரவணன் சொன்ன ஒரு விஷயம், மனதை உறுத்திக் கொண்டேயிருந்தது.

கேசவனுக்கு ஆவணி 7ம் தேதி திருமணம் என்பது நினைவிற்கு வர, காலண்டரை எடுத்து, அது ஆங்கில மாதத்திற்கு எத்தனையாவது நாள் எனப் பார்த்தேன். ஆகஸ்ட் 23. கூட்டுத்தொகை ஐந்து. சட்டென என் மனதில் ஒரு உறுத்தல்.
அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த போது, 12:00 மணி அளவில், இனிப்பும், திருமண அழைப்பிதழுமாய் வந்தார் நிர்மலா மேடம்.

“”காத்திருந்து, காத்திருந்து, கடைசியில அமெரிக்க மாப்பிளையை பிடிச்சிட்டீங்க,” என்றபடி இனிப்பை எடுத்து வாயிலிட்டு சுவைத்தபடியே, திருமண அழைப்பிதழைப் பார்த்தேன்.

ஐந்தாம் தேதி திருமணம் என்றதும், சரவணன் சொன்னது நினைவுக்கு வந்தது. சட்டென என் முகம் மாறியிருந்திருக்க வேண்டும். நிர்மலா மேடம் அதை கவனித்து விட்டார்.

“”என்ன சார், தேதி சரியில்லையா?”

“”இல்ல இல்ல… அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல மேடம்.”

“”இல்ல சார்… தேதியை பார்த்ததும், உங்க முகம் சட்டுன்னு மாறிடுச்சு!”

“”இல்லைங்க…” சிரிக்க முயன்றேன்.

“”ஏதோ பிரச்னை இருக்கு… மறைக்காம சொல்லுங்க சார். இல்லைன்னா, இதையே நினைச்சிட்டு இருப்பேன். சொல்லிட்டீங்கன்னா நிம்மதியா இருக்கும்.”

“”அதாவது மேடம், ஒரு விஷயத்தை, சொல்லுறதுனால நன்மை அதிகமா, சொல்லாம இருக்கிறதால நன்மை அதிகமான்னு பார்த்துட்டு தான் சொல்லணும். அப்படி பார்த்தா, இதை சொல்லாம இருக்கிறதுல தான் நன்மை அதிகம்.”

நிர்மலா மேடம் மேற்கொண்டு வற்புறுத்தாமல், மற்ற பணியாளர்களுக்கு அழைப்பிதழ் வைக்க எழுந்து போய் விட்டார். முடித்து விட்டு மறுபடியும் என்னிடமே வந்தார்.

“”என்ன மேடம்… ரெசிக்னேஷன் கொடுத்துட்டீங்களா “”அதெல்லாம் கொடுத்தாச்சு. நம்ம எம்.டி., முடிஞ்சா மேரேஜ்க்கு வர்றேன்னிருக்கார். அட்வான்சா வாழ்த்து தெரிவிச்சார்.”

“”பாஸ்போர்ட், விசா எல்லாம்…”

“”அதுக்கு தான் சார் அலைஞ்சிட்டுருக்கேன். அது இருக்கட்டும், நீங்க அந்த தேதியில என்ன பிரச்னைன்னு சொல்லிருங்க. என்னவா இருக்கும்ன்னு, யோசிச்சு யோசிச்சு, தலை வலிக்கிற மாதிரி இருக்கு. நீங்க இவ்வளவு நாளா என்னோட வெல் விஷர் மாதிரி இருந்தீங்க… அது தான் விடாப்பிடியா கேட்குறேன்.”

யோசித்தேன். இனிமேலும் மறைப்பது நன்றாக இருக்காது எனத் தோன்ற, சரவணன் சொன்னதை, நிர்மலா மேடத்திடம் சொல்ல ஆரம்பித்தேன். கேட்டு முடித்தவர் முகம் கலவரமானது.

“”நிஜமாவே கூட்டுத்தொகை அஞ்சு வர்ற தேதியில கல்யாணம் செய்றவங்களுக்கு குழந்தை பிறக்காதா சார்?”

“”ஆமா மேடம். அப்படித்தான் சொல்றாங்க. 5,14,23 இந்த தேதிகள்ல கல்யாணம் செய்றவங்க, குழந்தை பாக்கியம் இல்லாத ட்ரீட்மென்டுக்கு வந்ததா, அந்த டாக்டர், “ஸ்டாடிஸ்டிக்ஸ்’ வச்சிருக்கிறாராம். டாக்டர் சொன்னதைக் கேட்ட சரவணனும், அவங்க சொந்தக்காரங்க, நண்பர்கள்ல குழந்தை இல்லாதவங்களோட லிஸ்ட் எடுத்து, “செக்’ செய்து பார்த்திருக்கிறான். அவங்களோட திருமணத்தேதி கூட்டுத்தொகையும் அஞ்சு வந்துச்சாம். இந்த விஷயத்தை சொன்னவர், ஒரு டாக்டர். சோதிச்சுப் பார்த்தவர் யாரையும் நம்பாத ஒரு ஆடிட்டர். அதுதான் இது மூட நம்பிக்கையின்னு ஒதுக்கித் தள்ள முடியல.”

நிர்மலா மேடம் ரொம்ப பயந்து விட்டார். “ஏண்டா சொன்னோம்’ என உறுத்த ஆரம்பித்தது எனக்கு.

“”பாருங்க மேடம். இது ஒரு புள்ளி விவரம் அவ்வளவு தான். இது எல்லாருக்கும் பொருந்தும்ன்னு சொல்ல முடியாது. உங்க விஷயத்துல இது தப்பாக்கூட போகலாம்.”

“”இல்ல சார்… நாடு விட்டு நாடு போயி, குழந்தை இல்லாமப் போனா…”

“”அய்யோ மேடம், நீங்க இந்த அமெரிக்க மாப்பிள்ளை அமைஞ்சதும், எனக்குப் போன் பண்ணி என்ன சொன்னீங்க. “இவ்வளவு நாளா, நான் உச்சரிச்சுக்கிட்டு இருந்த ராம நாமம், எனக்கு, “ராமகிருஷ்ணன்’னு பேர் வச்சிருந்த, ஒரு நல்ல சாந்தமான மாப்பிள்ளைய தேடித் தந்திருச்சுன்னு “சொன்னீங்கள்ல, அதே ராம நாமத்தை உச்சரிச்சுக்கிட்டே இருங்க… குழந்தையும் லவ குசனாவே பிறக்கட்டும்.”
என்னுடைய இந்த பதில், நிர்மலா மேடத்தை திருப்திபடுத்தியிருக்க வேண்டும். முகம் கொஞ்சம் சமாதானம் காட்டியது.

“”ஏன் சார்… இதுக்கு அந்த டாக்டர் ஏதாவது தீர்வு சொன்னாராமா?”

“”வந்து…”

“”சொல்லுங்க…”

“”இல்ல…”

“”சும்மா சொல்லுங்க…”

“”சாந்தி முகூர்த்தம், அந்த தேதியில அமையாமப் பார்த்துக்கிட்டா கூட போதுமாம்,” என்றேன் தயங்கி.

நிர்மலா மேடம் முகத்தில் மறுபடி குழப்பம்.

கேசவனின் திருமணத்திற்காக சாத்தூர் வந்திருந்தோம். தன் தம்பி திருமணம் என்பதால், என்னையும், பிரபாகரனையும் ஒரு வாரம் லீவு போட வைத்து அழைத்து வந்திருந்தாள் மகேஸ்வரி. நானும் விருப்பமுடனேயே லீவு போட்டுவிட்டு வந்திருந்தேன்.

“கேசவன் எனக்காக, மகேஸ்வரிக்காக, பிரபாகரனுக்காக, எத்தனையோ நல்ல விஷயங்கள் செய்திருக்கிற நல்ல மனிதன். ஆனாலும், ஐந்தாம் தேதியில் திருமணம் செய்கிறாரே, ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறோமே, புள்ளி விவரக்கணக்கு பலித்துவிட்டால் என்ன ஆவது?’ என, குழப்பச் சிலந்திகள் மனதுக்குள் கூடு கட்டிக்கொண்டே தான் இருந்தன.

“”ஏன்மா… அட்லீஸ்ட் பர்ஸ்ட் நைட்டையாவது தள்ளிப்போடச் சொல்லவா?” என்றேன் கடைசி முயற்சியாய் மகேஸ்வரியிடம்.

“”பேசாம இருங்க… நிர்மலா மேடத்தைக் குழப்பி விட்ட வரைக்கும் போதும். உங்க புள்ளி விவரக்கணக்கை மடிச்சு, பத்திரமா நீங்களே சட்டைப்பைக்குள்ள வச்சுக்கங்க… இது ஒரு விஷயமுன்னு, இதைப்போயி கேசவன் கிட்ட சொல்லி, அவன் அதையே நெனச்சுக்கிட்டு இருந்து ஏடாகூடமா ஏதும் ஆயிரப்போகுது.”

நான் வாயை மூடிக்கொண்டேன். ஆனாலும், மனசுக்குள் உறுத்தல் குறையவில்லை. அள்ளிக் கொஞ்சுகிற கேசவனுக்கு, கொஞ்சுவதற்கு பிள்ளை இல்லாமல் போனால் நன்றாகவா இருக்கும்?

அந்த ஞாயிற்றுக்கிழமை காலையில், மீன் மார்க்கெட்டில் வாங்கிய மீனோடு வீட்டுக்குள் நுழையப்போன என்னை, வெளியில் கிடந்த புதுச் செருப்புகளும், உள்ளிருந்து ஒலித்த சிரிப்பு சப்தங்களும், எதிர்கொண்டு வரவேற்றன. யார் வந்திருப்பது? கையில் குழந்தையோடு நிர்மலா மேடமும், உடன் அவரின் அம்மாவும்.

“”வாங்க… வாங்க… ரெண்டு வருஷமா தொடர்பே இல்லையே,” நிர்மலா மேடத்தின் கையிலிருந்த குழந்தையைக் கையில் வாங்கிக் கொண்டேன். பையன் மிக அழகாக இருந்தான்.

“”பேர் என்ன லவகுசனா,” என நான் கேட்க,

“”கதிரவன்” என்றார் இயல்பாய். நானும், மகேஸ்வரியும் திடுக்கிட்டு, நிர்மலா மேடத்தை பார்க்க, ”

“ஆமா சார்… நீங்க சொன்ன பிறகு தான் என் பிரார்த்தனைய அதிகமாக்கி, சதா அதே நினைவா இருந்து குழந்தையை பெத்துட்டேன். அதனால தான் உண்மையோ, பொய்யோ, சரியான சமயத்துல சொல்லி, என்னைய உஷார் படுத்துன உங்க பேரையே பையனுக்கு வச்சிட்டேன். எல்லா பேருலயும் கடவுள் இருக்கார் சார், நேர்ல வந்து சர்ப்ரைஸ் கொடுப்போம்ன்னு தான் போன் பண்ணவே இல்லை சார்.”

நான் பேசத் தோன்றாமல் பார்த்துக் கொண்டிருக்க, நிர்மலா மேடம் மகேஸ்வரியிடம் கேட்டார்: “”உங்க தம்பிக்கும் அஞ்சாம் தேதி தான் கல்யாணம்ன்னு அன்னிக்கு போன் பண்ணுனப்ப சொன்னீங்களே… அவருக்கு குழந்தை பிறந்திருச்சா, என்ன குழந்தை?”

“”இல்ல அவன் ரெண்டு மூணு வருஷத்துக்கு குழந்தை வேணாமுன்னு தள்ளிப் போட்டிருக்கான்,” என்றாள் மகேஸ்வரி பதட்டமாய்.

“”சீக்கிரம் பெத்துக்கச் சொல்லுங்க. ஸ்டாடிஸ்டிக்ஸ் பலிச்சிடப் போகுது,” சிரிப்பும், வார்த்தையுமாய் சொன்னார் நிர்மலா மேடம்.

பேசிக்கொண்டிருந்து விட்டு, சாப்பிட்டு விட்டு, எங்கள் வீட்டு புகைப்பட ஆல்பத்தை பார்த்தார் நிர்மலா மேடத்தின் அம்மா.

பிரபாகரனும், குருவியுமாய் இருந்த புகைப்படங்களைப் பார்த்து விட்டு விவரம் கேட்டார். பிறகு யோசனையுடன், “”இன்னும் குருவி வீட்டுல கூடு கட்டுதா தம்பி,” என்றார்.

“”ஆமம்மா… குருவிகளை நாங்க தொந்தரவு செய்யிறதில்ல. அதனால குஞ்சு பொரிக்கிறது ரெகுலரா நடக்குது,” என்றேன்.

இதை கேட்ட அவர், ஏதோ சிந்தனையில் மூழ்கினார். எந்த மூட நம்பிக்கையை என்னுள் திணிக்கப் போகிறாரோ என்று நான் பயந்தேன்.

– டிசம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *