குழந்தை உள்ளம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 5, 2020
பார்வையிட்டோர்: 5,361 
 
 

செல்லம்மாவுக்கு உடம்பு மட்டும் குணமாயிருந்தா, மற்றப் பிள்ளைங்க மாதிரி எவ்வளவு குதூகலமா ஆடிப்பாடி விளையாடும்!”

பக்கத்தில் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளைக் கண்டதும், சிங்காரத்திற்கு அந்த ஓர் எண்ணம் மாறி மாறித் தோன்றியது. மரம் செதுக்கிச் சீர்பண்ணிக்கொண்டிருந்த அவனுக்கு மேலே வேலை ஓடவில்லை. அவன் கண்களின் ஓரத்தில் கண்ணீ ர் பரவியது.

“உடம்பு காயலாக் கிடக்கும் மகளை விட்டுப்பிட்டு ஏதுக்கு வேலைக்கு வரணும்? வந்த புறம் மனம் நொந்து ஏன் இம்பிட்டுத் துடிதுடிக்க வேணும்?” என்று வேறு சிந்தித்து மூளையைக் குழப்பிக்கொண்டான் சிங்காரம்.

அவன் நினைவுப் பிரகாரம் அன்றைக்கு வேலைக்கு வராமலிருந்திருக்கலாம்; ஜீரமடித்துக் கிடக்கும் கண்ணான மகளின் அருகில் இருந்து வேண்டியதைச் செய்து, மனத்திற்கு அமைதியை ஓரளவு தேடிக்கொண்டும் இருக்கலாம். ஆனால், அன்றையப் பொழுதைக் காலதேவன் தன் கைப்பிடினின்றும் நழுவவிட்டாக வேண்டுமல்லவா? பணத்துக்கு என்ன செய்வது?

தினம் தினம் ஏதாவது வேலை செய்தால்தான் அவனுக்கும் மகளுக்கும் சாண் வயிற்றைக் கழுவி மூடமுடியும். செல்லம்மாவுக்குக் காய்ச்சல் விஷம்போல ஏறியிருந்ததால் முந்தின நாள் வேலைக்குப் போகவில்லை. அதன் பலன் அன்று சாப்பாட்டிற்குத் திண்டாட்ட மாகிவிட்டது. இந்த இக்கட்டான நிலையே சிங்காரத்தைக் காலையில் வேலைக்குச் செல்லத்தூண்டியது.

நைந்து போன பாய்மீது முடங்கிக் கிடந்தாள் செல்லம்மா. தலைமாட்டில் அகல் விளக்கு மங்கலாக எரிந்தது. இரண்டு நாளாகக் காய்ச்சலில் கஷ்டப்பட்ட குழந்தையின் முகம் வாடிவிட்டது. எண்ணெய் படாமல் சிக்கல் பாய்ந்திருந்த தேசத்தை மெல்லக் கைவிரல்களால் கோதியவண்ணம் தன் மகளை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் சிங்காரம்.

செல்லம்மாவுக்குக் கிட்டத்தட்ட எட்டு வயதிருக்கும். ஆனால் அந்த எட்டு வருஷங்களில் முழுசாக ஏழு வருஷங்கள் தாம் தாயின் பராமரிப்பில் வளர அதன் தலையில் ‘லவிதம்’ இட்டிருந்தது போலும். அப்புறம் தாயற்ற மகளுக்குத் தந்தையின் பொறுப்புடன் தாயின் ஸ்தானத்தையும் சேர்த்து நிர்வகிக்க வேண்டியவனானான் அவன்.
காய்ச்சி வைத்திருந்த கஞ்சியைக் குவளையில் சீராக ஊற்றி மகளிடம் நீட்டினான். ‘மடமட வென்று குடித்தாள் செல்லம்மா.

“இன்னும் கொஞ்சம்?”

“ஊஹும்! வேணாம்!”

தலையணையை இசைவாக வைத்துப் படுக்க வைத்தான் சிங்காரம்.

“அப்பா ”

“தூங்கலையா கண்ணு?”

“அப்பா, பார்த்தியா மறந்து பூட்டேன். சாயந்திரமா மேஸ்திரி ஐயா வந்துட்டுப் போனாரு பணத்துக்கு…”

சிங்காரத்தின் மன அமைதியைப் பறித்துச் சென்றது, செல்லம்மா கூறிய சேதி, அவன் கலங்கினான். கடன்பட்ட நெஞ்சமாயிற்றே! மனைவியின் பிரசவத்திற்கென ஐம்பது ரூபாய் கடன் வாங்கியிருந்தேன் மேஸ்திரியிடத்தில், பிள்ளையும் தாயும் வேறாகப் புனர்ஜன்மமெடுத்துச் சுகமுடன் பிழைக்க வேண்டுமேயென்று. டாக்டர் பீஸிற்குக் கரைந்தது மேற்படி பணம். அவன் போதாத காலம் மனைவி பிரசவத்தில் இறந்துவிட்டாள். கடன் பட்டதுதான் கண்ட பலன்.

சாப்பாட்டின் நினைவே சிங்காரத்துக்கு இல்லை. தலைகனக்க தரையில் துணியை உதறி விரித்தான். விழி , வெள்ளத்தில் மிதந்தது.

அடுத்த நாள், சுடு சோறு வடித்துச் செல்லம்மாவுக்கு ஊட்டிவிட்டான். மிகுதியை நாலு வாயாக உருட்டிப் போட்டுக் கொண்டு வேலைக்குப் புறப்பட எத்தனித்தான். ஜூரத்தின் அடையாளம் கொஞ்சமும் குறையாமல் இருந்தது செல்லம்மாவுக்கு. சிங்காரத்திற்கு இதைக் காண மனம் குமுறியது. அவன் உடல் நடுங்கினான்; உள்ளம் சோர்ந்தான்.

‘சிங்காரம்!’ என்று அழைத்தவாறு உள்ளே பிரவேசித்த மேஸ்திரியைக் கண்டதும் அவனுக்குத் ‘திக்’ கென்றது. ‘வாங்க ஐயா!’ என்று உபசரித்தான்.

“சிங்காரம், பாவம் புண்ணியத்துக்கு மனசு இரக்கப்பட்டு, நோட்டு சாட்டுக்கூட இல்லாமல், ஐம்பது ரூபாய் சுளையா எண்ணித் தந்ததுக்கு இதுதான் பண்ணுவியா அல்லது இன்னமும் பண்ணப் போறியா? பணத்தைக் கொடுத்துப்புட்டு இப்படி நடையாய் நடக்கிறேன் பாரு. அதுக்கு என் புத்தியைச் சொல்லவேணும்! கடைசியாகச் சொல்றேன் எந்தக் குடி எக்கேடு கெட்டாலும் கடன் தொகை சாடா பொழுதுக்குள்ளே என் கைக்கு வந்துப்பிடணும்! சொன்ன பேச்சுக்கு மறுபேச்சுக்கு கிடையாது!….” என்று பொரிந்து கொட்டினார் மேஸ்திரி.

எதேச்சையாக அவர் திருஷ்டி அருகில் கலவரத்துடன் படுத்திருந்த செல்லம்மாமீது சென்று திரும்பிற்று. மின்னல் குமிழ் போன்ற அவள் கண்கள் மேஸ்திரியை ஏக்கத்துடன் துருவின. ஒரு கணம் துள்ளிக் குதித்தார் மேஸ்திரி.

“சிங்காரம், எத்தனை நாளாக என் பணத்தைத் தண்ணீரில் அடிக்கத் திட்டம் போட்டிருக்கிறாய்? உன் மகள் கழுத்திலே போட்டிருக்கும் அந்தச் சரட்டை வித்துப் பணத்தைக் கொடு! இல்லாட்டி அந்தச் சரட்டைக் கடனுக்கு என்னிடம் கழற்றிக்கொடு! கொஞ்ச நஞ்சம் குறைஞ்சாலும் பரவாயில்லை. கடன் கழிஞ்சாக் காற்றுப்போல…”

நெருப்பைத் தீண்டியவன் மாதிரி திகைத்துவிட்டான் சிங்காரம்.

“ஐயா, உங்க கடனை எப்பாடு பட்டுத் தலையை அடகு வச்சாகிலும் கொஞ்ச நாளிலே கட்டிப்பிடுறேனுங்க. பொறுத்தது பொறுத்திட்டிங்க. இன்னும் கொஞ்சம் பொறுங்க. உங்க பிள்ளை குட்டிங்க நல்லாயிருக்கும். ஆனா மகள் சரட்டை மட்டும் உயிர் போனாலும் கழற்றமாட்டேனுங்க…”

கண்ணீரை விலக்கிக்கொண்டான் சிங்காரம். செல்லம்மாவின் கழுத்தை விட்டுச் சரட்டை அகற்ற அவன் பஞ்சை மனம் சம்மதிக்கவில்லை . காரணம், அச்சரடு மரணப்படுக்கையில் உழன்ற அவன் மனைவி தன் ஞாபகார்த்தமாக என்றும் இருக்கவேண்டுமென்று மகளுக்குப் பூட்டியே ஆபரணம் அது. ஆனால் மேஸ்திரிக்கு இதில் ஏதோ சூது இருப்பதாகத் தோன்றவே கோபம் கொந்தளித்தது.

“அயோக்கியன்! இன்று பொழுதுக்குள் கடன் பட்டு வாடா ஆகிப்போடணும்! இல்லாவிட்டால் நாளை விடிவதற்குள் உன் குடிசை பறிபோயிடும்! ஜாக்கிரதை!”
தகப்பனுக்கும் மேஸ்திரிக்கும் நடந்த சம்பாஷணை பூராவையும் ஒன்றுவிடாமல் கேட்டுக்கொண்டிருந்த செல்லம்மாவுக்கு அழுகை பீறிட்டது.

“அப்பா, எதுக்காக இம்பிட்டு யோசனை பண்றீங்க? மூச்சு விடாமே என் சரட்டை அந்த ஐயாகிட்டக் கொடுத்துக் கடனை அடைச்சுப்பிடுங்க. பெரிய மனுசங்க பொல்லாப்பு நமக்கு ஏன்? நமக்கும் ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் நல்ல காலம் பிறக்காமலா போயிரும்? அப்போ வேறே ஒரு சரடு செஞ்சுக்கலாம்….” என்பதாக விக்கலுக்கும் விம்மலுக்கும் மத்தியில் கூறினாள் செல்லம்மா.

தன் புதல்வியின் அறிவைக் காணச் சிங்காரத்துக்கும் அழவேண்டும் போலிருந்தது. ஆகட்டும் கண்ணு!’ என்று சொல்லிச் சரட்டைக் கழற்ற நெருங்கினான் அவன். வேறு வழி?

அதே சமயம், “மேஸ்திரி எசமான்! உங்க மகள் கமலாவைப் பாம்பு கடிச்சு ரொம்பத் தடபுடலா இருக்குங்க!” என்று ஓடிவந்து சொன்னான் வேலைக்காரப் பையன்.
அவ்வளவுதான்! மேஸ்திரிக்கு உலகமே சுற்றியது! கை கால்கள் நடுங்கின. தன் குழந்தை ஆசை காட்டி அழகு காட்டி மனத்தை மகிழச் செய்த நிகழ்ச்சிகள் அடுக்கடுக்காக மனத்திரையில் விரிந்தோடின. மகளின் வதனத்தில் ஆசை கொண்ட மட்டும் பதித்த அன்பு முத்தங்களை ஒவ்வொன்றாக நினைவுபடுத்திப் பார்த்தார். ஒரு நிமிஷம் பயங்கர நினைவுகள் அவரை வாட்டி எடுத்தன.

மந்தரித்து எந்த விஷக் கடியையும் போக்குவதில் சிங்காரம் மிகவும் பிரக்யாதி பெற்றவன் என்ற எண்ணம் மின்னல் போல மேஸ்திரியின் மனத்தில் உதித்தது. “மகள் உயிர் சிங்காரத்தின் கையிலே தான் இருக்குது; அவன் மனது வச்சாக் கமலாவை உயிரோடே காணலாம். ஆனா கொஞ்ச முந்தி தயவு தாட்சண்யமின்றிப் பேசின எனக்கு அவன் இரக்கப்படுவானா? பகவானே!” எனத் தன்னுள் நினைத்துப் பார்த்த மேஸ்திரி, அப்போதுதான் சிங்காரம் அவன் மகளின் மீது கொண்டிருக்கும் பாசத்தை உணர்ந்தார். தனக்கு வந்தால் அல்லவா தெரியும் தலைவலியும் காய்ச்சலும்! அவனைக் கடிந்து சரட்டைக் கழற்றிக் கொடுக்கும்படி நிர்ப்பந்தப்படுத்தியதற்குத் தண்டனையாக இச்சம்பவம் நேர்ந்திருக்குமோ என்றுகூட நினைக்கலானார்.

“மேஸ்திரி ஐயா, இந்தாங்க சரடு; கடனுக்கு வச்சுக்குங்க! எதுக்கு இப்படி மலைச்சுப் போய் நிக்கறீங்க? வாங்க உங்க வீட்டுக்கு. பாம்பு விஷத்தை மந்திரிச்சுக் கண்சிமிட்டிற நேரத்திலே தணிச்சிடறேன்!” என்றான் சிங்காரம் பதட்டத்துடன்.

மேஸ்திரிக்குத் தன் செவிகளை நம்பவே முடியவில்லை.

“சிங்காரம், என் சின்ன புத்தியாலே உன்னைச் சந்தேகிச்சுத் தப்பா நெனைச்சேன். என்னை மன்னிச்சுப்பிடு. நான் சொல்றதைத் தட்டாமல், அந்தச் சரட்டை உன் மகள் கழுத்திலே போட்டுப்பிட்டு ஓடிவா! என் மகள் உயிரைக் காப்பாத்தித் தந்தா அதுவே நீ எனக்குக் கோடி ரூபாய் கொடுத்த மாதிரி…”

சிங்காரம் பின்தொடர, மேஸ்திரி ஓட்டமும் நடையுமாகச் சென்றார். சென்று பார்த்தார், அவர் வீட்டில் கண்ட காட்சி அவரைப் பிரமிக்கச் செய்தது. சர்வ சாதாரணமாகக் குதூகலத்துடன் நின்றுகொண்டிருந்தாள் அவர் பெண் கமலா. அப்படியென்றால் விஷம் தானாகவே அகன்று விட்டதா, என்ன?

“அப்பா, முதலிலேயே சொல்லிடுறேன். நீங்க என்னையோ, நம்ப வேலைக்காரனையோ கோவிச்சுக்கப்படாது. செல்லம்மாவுக்கு மேலுக்கு முடியலைன்னு கேட்டதும் பார்க்க ஓடியாந்தேன். அப்பத்தான் நீங்க அது அப்பாவைக் கண்டபடி, கோவிச்சுக்கிட்டு, சரட்டைத் தரத்தான் வேணுமின்னு கண்டிச்சிங்க. அப்போ இருந்த அவரு மனசு உங்களுக்கு எப்படித் தெரியும்? என்னைப் பாம்பு கடிக்கதாகப் பொய் சொல்லியனுப்பினேன். கடைசியா என் தந்திரமும் பலிச்சுது. எனக்கு மந்திரிக்கச் செல்லம்மாவின் அப்பாரு வேண்டியிருந்ததாலேதானே உங்க மனசு திடுமின்னு மாறிச்சு? இல்லையானா அந்த ஆளைச் சும்மாவா விடுலிங்க? அப்பா, செல்லம்மாவும் நானும் உயிருக்குயிர். அவங்க ஏழைங்க கடனைப்பத்தி இனித் தொந்தரவு பண்ணாதிங்க!” என்றாள் கமலா.

தன் ஆசை மகளைப் பாம்பு தீண்டவில்லை என்றறிந்ததும் மேஸ்திரிக்குப் போன உயிர் திரும்பிற்று. சிறு குழந்தையானாலும் விதரணை புரிந்த பெரியவர்களைப் போன்று பேசிய தன் புதல்லியின் உயரிய மனப்பண்பையும், தந்திரத்தையும் கண்டு அப்படியே அன்போடு அவளை அணைத்துக்கொண்டார்.

தன்னைப்பற்றி இவ்வளவு அக்கறைப்பட்டிருக்கும் மேஸ்திரி மகளைக் கண் கொட்டாது பார்த்து நின்ற சிங்காரத்தின் கண்களின்றும் கண்ணீர் வழிந்தது.

– பூவையின் சிறுகதைகள் – முதல் பதிப்பு – டிசம்பர் 2003 – பூவை பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *