நான் முடிவு செய்துவிட்டேன். இனி உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை. யாருக்காக வாழவேண்டும்? என் மனைவியின் முகத்தைப் பார்த்தேன். அவளுடைய முகமும் என் எண்ணங்களையே பிரதிபலித்தது.
‘‘நாம இனிமே உயிரோட இருக்கக் கூடாதுங்க. போயிட லாம்’’ வேதனையாக என் மார்பில் சாய்ந்துகொண்டாள்.
ஜவுளிக்கடை வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தது ஒரு காலம். பழம் நிறைந்த மரத்தை பறவைகள் தேடி வருவது போல் எப்போதும் உற்றார், உறவினர் கூட்டம் சூழ்ந்து நிற்கும். தடாலென ஏறிக்கொண்டிருந்த ஏணி சரிந்ததைப் போல் வியாபாரத்தில் பயங்கர சரிவு. எப்படி எப்படியோ முயன்றும் கடன்களை மட்டுமே அடைக்க முடிந்தது.
இருந்ததைப் பிரித்துக்கொள்ளத் தெரிந்த பிள்ளைகளுக்கு வெறுங்கையோடு நிற்கும் எங்களை வைத்து கஞ்சி ஊற்ற மனமில்லை. இதன்பிறகும் வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? இந்த நன்றிகெட்ட நாய்களின் கையில் எங்கள் பிணம்கூட கிடைக்கக் கூடாது.
கைச்செலவுக்கு மட்டுமே இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு வாழ்க்கைப் பாதைக்கு துணையாக வந்தவளை மரணப்பாதையில் அழைத்துச் சென்றேன். ஊரைவிட்டு தள்ளி இருந்த ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்தேன். ஒரு நாள் பொழுதை நன்றாக சாப்பிட்டு, நிறைய பேசி, சந்தோஷமாகக் கழித்துவிட்டு இணையாக பிரிந்துவிட வேண்டும்.
என் மடியில் தலை வைத்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த மனைவியின் நரையோடிய கூந்தலை மெல்லத் தடவினேன். சாவிலும் உடன் வரும் தைரியம் யாருக்கு வரும்? பெருமையாக அவளை அணைத்துக் கொண்டேன். அதேசமயம் கதவு தட்டப்பட்டது. திறந்தேன்.
ஹோட்டலின் சிப்பந்தி நின்றிருந்தான். இல்லை..நின்றிருந்தார். வயது எப்படியும் ஐம்பத்தைந்தாவது இருக்கும். நரை ஆரம்பித்த தலை.
பொதுவாக எல்லா ஹோட்டல்களிலும் இளம் வயது ஆண்களையே இந்த வேலையில் பார்த்த எனக்கு அவர் ஆச்சர்யமாகத் தெரிந்தார்.
‘‘குட்மார்னிங் சார். லன்ச் இங்கே கொண்டு வரட்டா.. இல்லை, நீங்களே கீழே வந்து சாப்பிடறீங்களா?’’
அந்த வயதுக்கு அவர் பணிவாக கைகட்டியபடி நின்று கேட்டது எனக்கு என்னவோ போலிருந்தது. வயதில் கிட்டத்தட்ட எனக்கு சமமாக இருந்தவரை எனக்காக சாப்பாடு கொண்டுவரச் சொல்ல மனம் இடம் தரவில்லை.
இப்பொழுது கீழே போய் சாப்பிடலாம். இரவுக்கு ஏதாவது டிபன் வாங்கிக்கொண்டு வந்துவிடலாம். வாங்கி வைத்திருக்கும் விஷத்தை அதோடு சேர்த்து சாப்பிட்டுவிடலாம்.
‘‘நாங்க கீழே வந்து சாப்பிட்டுக்கறோம்.’’ என்றேன்.
அவர் போய்விட்டார்.
நானும் என் மனைவியும் கீழே போனோம்.
ஒரு ஓரமாக இருக்கை தேடி அமர்ந்தோம். அந்தப் பெரியவர்தான் எங்களுக்கு உணவு பரிமாறினார்.
விழிகளில் கனிவு, வார்த்தைகளில் பரிவு, சிரித்த முகம், வாலிபனைப்போல சுறுசுறுப்பு, ஓடி ஓடி தேவையை விசாரித்த பாங்கு, தேவைப்பட்டதை உபசரிக்கும் விதம்.. ஏனோ மனம் அவர் பின்னாலேயே ஓடியது.
‘சர்வர் வேலை ஒரு சாதாரண வேலை. இதில் என்ன பெரிய சம்பளம் கிடைத்துவிடும்? இந்த வயதில் எப்படி இவரால் ஒரு வாலிபனுக்கு உரிய துள்ளலுடன் வேலை செய்யமுடிகிறது? வயது ஏற ஏற வாழ்க்கை பாரமும் ஏறி அழுந்தாத மனிதர்கள்கூட உண்டா?
உணவில் விரல்களை அளைந்த வண்ணம் சாப்பிடப் பிடிக்காமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்த என் காதுகளில், பக்கத்து மேஜையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர், எதிரே இருந்தவரிடம் சொல்லிக்கொண்டிருந்தது தெளிவாகவே விழுந்தது.
‘‘அந்த சர்வரைப் பாரேன்..’’
‘‘ஏன் அவருக்கென்ன?’’
‘‘அவரை சாதாரண சர்வரா நினைக்காதே! ஒருகாலத்துல இதேமாதிரி ஒரு ஹோட்டலுக்கு சொந்தக்காரரா இருந்தவர்!’’
அதிர்ந்தேன். அந்த உரையாடலில் உன்னிப்பானேன்.
‘‘என்ன சொல்றே நீ?’’
‘‘ஆமா! பெரிய பணக்காரர். ராஜா மாதிரி வாழ்ந்தவர். கல்லடி பட்ட கண்ணாடி மாதிரி விதி விளையாடிடுச்சு. பயங்கர நஷ்டம். பாவம், மனுஷன் தெருவுக்கு வந்துட்டார். சொந்தபந்தமெல்லாம் விலகிப்போயிடுச்சு. இப்போ.. இந்த ஹோட்டல்ல ஒரு சாதாரண சர்வரா வேலை பார்த்து வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்கார்.’’
‘‘அடப்பாவமே! என்ன கொடுமை இது! ஆனாலும், அவரைப் பார்த்தா இத்தனை பெரிய இழப்பை சந்திச்சவரா தெரியவே இல்லையே! சின்னப் பையன் மாதிரி துறுதுறுனு இருக்காரே..!’’
‘‘எல்லாராலயும் இப்படி இருக்க முடியாது. அதுக்கெல்லாம் இரும்பு இதயம் வேணும்’’
அந்த வார்த்தைகள் என்னை பிரமிக்க வைத்தன. என் விழிகள் என் மனைவியைப் பார்த்தன. அவளும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய முகத்தைப் பார்க்கும் சக்தியை இழந்து தடுமாறினேன்.
இனம்புரியாத மன அழுத்தத்துடன் அறைக்குத் திரும்பினோம். ஒருவரோடு ஒருவர் பேச வெட்கப்பட்டவர்களைப்போல அமர்ந்திருந்தோம். நான்கு மணிக்கு காபி கோப்பைகளுடன் அந்தப் பெரியவர் எங்கள் அறைக்கு மீண்டும் வந்தபோது, நான் என்னையும் மீறி அவருடைய கைகளைப் பற்றிக்கொண்டு மனம் கசிந்தேன்.
‘‘சார்.. உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன். எப்படி ஒரு ஹோட்டலுக்கு சொந்தக்காரரா வாழ்ந்துட்டு, இப்ப ஒரு ஹோட்டல்ல சர்வரா வேலை செய்ய முடியுது?’’
அவர் சிரித்தார். ‘‘பணத்தைத்தானே இழந்தேன்? தன்னம்பிக்கையை இழக்-கலையே! நாம பொறக்கும்போது ஆண்டவன் நம்ம கையில ரூபாய்த் தாளைக் கொடுத்து அனுப்பறதில்லை. தன்னம்பிக்கையை கொடுத்து அனுப்-பறான். அவன் தந்த தன்னம்பிக்கையாலதான் மல்லாந்து கிடக்கற நாம குப்புற விழறோம். கை ஊன்றி மண்டி போட்டு நடக்கறோம். விழுந்து எழுந்து நடக்கறோம். அறிவு வளராத பருவத்திலே எத்தனை முறை விழுந்தாலும் எழத் தெரிஞ்ச நாம, வளர்ந்த பின்னாடி விழுந்தா எழாம போனா எப்படி?
பரமஹம்சர் அழகா ஒரு விளக்கம் தருவார். பன்னிரெண்டு வருஷம் மழை பெய்யலைன்னாலும் மனசு தளராம, கையில விதையை வெச்சுக்கிட்டு மழை வராம எங்கே போய்டும்னு நம்பிக்கையோட விவசாயி காத்துக் கிட்டிருப்பான். ஒவ்வொரு மனுஷனும் விவசாயி மாதிரிதான் வாழணும்னு சொல்வார். நானும் நம்பிக்கைங்கற விதையை கையில வச்சிருக்கேன். அதுதான் இந்த சர்வர் வேலை. தொலைச்ச இடத்துலதானே தேட முடியும். அதான் வேற வேலைக்கு போகாம சர்வர் வேலைக்கே வந்தேன். மறுபடியும் என்னால ஒரு ஹோட்டலுக்கு சொந்தக்காரனா வரமுடியும். வரணும்ங்கற வெறி, ஓடி ஓடி சர்வ் பண்ணும்போது எனக்குள்ள வருது..’’
அவர் சொல்லச் சொல்ல, எனக்கு அவமானமும் வெட்கமும் சூழ்ந்தாலும் அதையெல்லாம் மீறிக்கொண்டு ஏதோ ஒரு உத்வேகம் பீறிட்டுக்கொண்டு வந்தது. உற்சாகம் பொங்க என் மனைவியை அணைத்துக்கொண்டேன். அந்த அணைப்பில் புதுவாழ்வுக்கான தெம்பை இருவருமே உணர்ந்தோம்.
– மார்ச் 2007
அறிவு வளராத பருவத்திலே எத்தனை முறை விழுந்தாலும் எழத் தெரிஞ்ச நாம, வளர்ந்த பின்னாடி விழுந்தா எழாம போனா எப்படி?
விழுந்தவன் எழவேண்டும் என்ற தன்னம்பிகை ஊட்டும் சிறுகதை
ராமகிருஷ்ண பரமஹம்ஸரினி அருள் வாக்கை கோடிட்டுக் காட்டியிருப்பது மிகப் பொருத்தம்.
கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்
ஜூனியர் தேஜ்