(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
எனது பழைய நண்பன் சேகரனை எதிர்பாராத விதமாக அன்று சந்தித்தேன்.
நான் றோட்டோரமாக பைஸிக்கிளில் சென்று கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் அவன் வந்தான். என்கூடப் பள்ளிக்கூடத்தில் படித்த அதே ஆள்தான். நின்று கதைக்க வேண்டுமென்று தோன்றிற்று. நான் சேகரா” என்றுகூறிக்கொண்டேபைஸிக்கிளிலிருந்து இறங்கினேன்.
அதே ஆள்தான். சிவப்பு நிறம், சுருட்டைமயிர் எல்லாம் அப்படி யேயிருந்தன. ஆனால் அவன் கண்கள் குருடடைந்தவைபோல் காணப்பட்டன. நான் “சேகரா” என்று மீண்டும் கூப்பிட்டேன். ஆனால் அவன் என்னை அறிந்துகொள்ளவில்லை. எனக்கொரு சந்தேகமுண் டாயிற்று; ஒரு வேளை குருடாய்த்தான் போய்விட்டானோ?
“யாரது?” என்றானவன்.
“என்ன தெரியவில்லையா? ராமலிங்கம், உன்னோடு படித்தவன்.”
“சா ராமலிங்கமா!” என்று கூறியவண்ணம் அவன் என்னைப் பிடிப்பதற்குக் கையை நீட்டினான். அப்போதும் நான் கவனித்தேன். அவன் எங்கெல்லாமோ கையை அலைத்து விட்டுப் பின்னரே என்னைக் கண்டு கொண்டான்.
“என்ன சேகரா, கண்ணில் ஏதாவது கோளாறோ?”
“ஆமாம், நான் குருடனாய்ப் போய்விட்டேன். அதுதானே இந்தப் பிரம்பு?” அவன் பிரம்பை மேலே உயர்த்திக் காட்டினான்.
நான் திகைத்துவிட்டேன். அவன் பள்ளிக்கூடத்தில் என்னுயிர்த் தோழன். அப்படிப்பட்ட வன் குருடனாவதென்றால் ….? எனக்குப் பெரிய மனக்கஷ்டமாயிருந்தது.
“எனக்கொன்றும் தெரியவில்லையே, விளங்கச் சொல்லன்.”
“அது ஒரு நீண்ட கதை. சொல்கிறேன். என்று கூறி என்னென்னெல்லாமோ அறிவுரை யின் பிறகு சொல்ல ஆரம்பித்தான்.
“நான் இப்போது குருடாகியிருப்பது இரண்டாவது தடவை. அதாவது முதல் ஒருதரம் குருடாகிச் சொஸ்தமானேன். பிறகு நானே என்னை மறுபடியும் குருடாக்கிக்கொண்டேன்.– “உன்னுடைய புதிர் எனக்கு விளங்கவில்லை. விளங்கும்படி சொல்லு – அந்த மரநிழலில் போயுட்கார்ந்து சம்பாஷிப்போம் வா” என்றேன் நான்.
“இருவரும் போயுட்கார்ந்தோம். அவன் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தான்.”
“உனக்கு நாங்கள் பள்ளிக்கூடத்தில் படித்த காலம் நினைவிலிருக்கிறதா? எவ்வளவு சந்தோஷமாய்க் காலத்தைக் கழித்தோம். அதை இப்போது நினைத்துப் பார்த்தால் ஏதோ அரைகுறையாய் நினைவிலிருக்கும் சொப்பனம் போல்தான் எனக்குத் தோன்றுகிறது. அப்போது நீதானே என் உயிர்த்தோழன்? இப்படி அரைவாசியில் நாங்கள் ஒருவருடன் ஒருவர் சம்பந்தமில்லாது போய்விடுவோமென்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. அந்தக் காலத்தில் உன்னைக் காணாது ஒருநாளைக் கழிப்பதென்றால் எனக்கெவ்வளவு மனக்கஷ்ட மாயிருந்தது? அப்படிப்பட்ட இரண்டு சிநேகிதர்கள் இவ்வளவு காலம் பிரிந்திருந்தது ஒருவரை யொருவர் காணாமல் – ஒருவர் புதினம் ஒருவருக்குத் தெரியாது – இப்படியெல்லாமிருப்பது ஆச்சரியமில்லையா?”
அவன் இங்கே கதையை நிற்பாட்டி ஒரு பெருமூச்சு விட்டான்!
“இதென்னடா, கதையைச் சொல்லாமல் இவன் வேறு ஏதேதோ சொல்கிறான்” என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். அவன் தொடர்ந்தான்.
“ஆமாம். உனக்கொன்றும் தெரியாது. உன்னிடம்தான் என் அந்தரங்கங்களையெல் லாம் சொல்லுவது வழக்கம். ஆனால் உன்னிடம் கூட நான் அவளைப் பற்றிச் சொல்லியது கிடையாது.”
அவள் எங்கள் பாடசாலைக்கணித்தாயிருந்த பெண்கள் கல்லூரியில் மற்றிக்குளேஷன் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள். எங்களுக்கிடையில் எப்படியாக முதன் முதல் பரிச்சய முண்டாயிற்று என்று எனக்கு நினைவில்லை. ஆனால் நாங்கள் எப்படியோ உயிர்க் காதலராகிவிட்டோம்.
அவளையேயல்லாமல் வேறொருவரையும் மணப்பதில்லை என்று அந்தரங்கத்தியாக நான் அவள் முன்னிலையில் எத்தனையே தடவை கூறியிருக்கிறேன். ஆனால் விதிதான் ஒன்று எதற்கும் குறுக்கே நிற்கிறதே? மனப்பூர்வமாக என்னைக் காதலித்து வந்த அவளுக் கும் எனக்கும் எதிராக அது சதிசெய்துவிட்டது. நான் படிப்பு முடிந்து எனது கிராமத்திற்குச் சென்றேன். அங்கு சென்ற பிறகு அவளிடமிருந்து எனக்குப் பல கடிதங்கள் வந்தன. ஒரு வொன்றும் உணர்ச்சிப் பிரவாகமாயிருக்கும். அவற்றைக் காணும்போது அவளையே காண் பதுபோல் எனக்குத் தோன்றும். ஏதோ கிட்டாத பாக்கியத்தை அடைந்து விட்டது போல் நான் புளகாங்கிதமாவேன். ஆனால் இது தெய்வத்திற்குப் பொறுக்கவில்லையோ? அவளுடைய மோஹன சொரூபத்தை நீண்டகாலம் நான் கண்டுகளிக்கவில்லை.
கண்கெட்ட கடவுள் என் கண்களைக் கெடுத்துவிட்டது. எங்களுாரில் இருந்தாற் போலி ருந்து அம்மை நோய் திடீரெனப் பரவ ஆரம்பித்தது. எங்கள் வீட்டில் என்னுடைய தாயாருக் கும் எனக்கும் அம்மை வார்த்தது. அதனால் நான் குருடானேன். இரண்டு கண்களும் பொட் டையாகிவிட்டன. ஆனால் வேறு இடங்களில் ஒரு குருடனுக்கேற்படக்கூடிய கஷ்டம் எனக் கேற்படவில்லை. எனக்கு வேண்டிய பண வருவாயிருந்தது. ஆகையினால் வாழ்க்கைக்கு உழைக்க வேண்டுமென்று இருக்கவில்லை.
எனக்கு இருபத்தைந்து வயதாகியிருந்தது. அம்மாவுக்கும், அப்பாவுக்கும் நான் ஒரே ஒரு செல்லப்பிள்ளை. எனக்குக் கலியாணம் கட்டிவைத்து விட வேண்டுமென்று அவர்க ளுக்கு ஆவலாயிருந்தது. வேண்டிய பொருள். படிப்பு. அழகு. குணம் எல்லாம் எனக்கமைந் திருந்தபடியால் “குருடனாகிவிட்டானே என்றும் பார்க்கமாட்டார்களென்பது அவர்களது எண்ணம். ஒரு நாள் இதைப்பற்றி என்னோடு கதைத்தார்கள். நான் கலியாணம் முடிப்பதென் றால் இப்படி அட்வகேட் சிங்காரவேலுவின் மகள் ராஜம்மா என்ற பெண் பட்டினத்தில் என்கூடப் பரிச்சயமாயிருந்தவள், அவளைத்தான் கலியாணம் பண்ணிக்கொள்வேன். இல்லாவிட்டால் இல்லை” என்று தீர்க்கமாய்க் கூறிவிட்டேன்…. இங்கு கதையை அவன் நிறுத்தினான்.
எனது மனம் படபடத்தது. “திகீர்” என்ற உணர்ச்சி என்னுடம்பில் ஓடிச் சென்றது. நான் அதை மறைத்துக்கொண்டு கேட்க ஆரம்பித்தேன். அவன் தொடர்ந்தான்.
“நான் எனது முடிவைத் தெரிவித்துவிட்டேனா? பின்னர் என் மனத்தில் ஒரு சந் தேகமுண்டாகியது. ராஜம் நான் குருடென்று தெரிந்து என்னை மணக்க மறுத்துவிட்டால் . ஆனால் அவள் கொண்டுள்ள காதல் எவ்வளவு உண்மையானது என்று எனக்குத் தெரிந்தி ருந்தபடியால் அந்தச் சந்தேகத்தை மேலும் நான் வளரவிடவில்லை . அப்படி ஒன்றும் நேராது என்று திடப்படுத்திக்கொண்டேன்.
சில நாட்கள் சென்றபின் என்னுடைய தந்தையார் என்னைக் கூப்பிட்டு, துக்கமும், சோர்வும் கலந்த குரலில் சொன்னார்.
“நீ சொன்ன பெண்ணின் தகப்பனார் சிங்காரவேலுவைக் கண்டேன். அவருக்கு எல்லாஞ் சம்மதந்தான். ஆனால் உன் கண்கள் பொட்டையென்பதால்” அவர் இதைக் கூறும் போது தேம்பியழ ஆரம்பித்து விட்டார். என்னாலும் தாழ முடியவில்லை . என் மனமும் மிக வருந்திற்று.
இதற்கு இரண்டு வாரங்களின் பிறகு பின்னரும் என்னைக் கூப்பிட்டுக் கதைக்க ஆரம்பித்தார்.
“வேறொரு இடத்தில் ஒரு பெண் பார்த்திருக்கிறேன்.” “எனக்கு வேறொரு பெண்ணும் வேண்டாம்.”
“என்னடா செய்வது? நீ கொடுத்து வைத்தது அவ்வளவு. இவளும் நல்ல அழகு.”
எனக்குச் சிரிப்பு வந்தது: “காணக் கண்ணில்லை . அழகிருந்தென்ன பிரயோசனம்?” “மேலும் படித்திருக்கிறாள். நன்றாய்ப் பாடுவாள்.”
“அதெல்லாம் அவளோடேயே இருக்கட்டும் நான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வில்லை அப்பா: என்னைத் தொந்தரவு படுத்தாதேயுங்கோ.”
இது நடந்து இரண்டு மாதம் கடந்தது. பின்னருமொருதரம் என்னைக் கூப்பிட்டுக் கதைத்தார். இந்த முறை அவருடைய பேச்சு உற்சாகமாயிருந்தது. மகிழ்ச்சி பொங்குவது போலிருந்தது.
“அட்வகேட் சிங்காரவேலுவைப் பின்னரும் கண்டேன். கடைசியாய் நிச்சயமாகி விட்டது. நீ சொன்ன பெண்ணே உனக்குக் கிடைத்து விட்டாள்.”
எனக்கென் காதுகளை நம்பமுடியவில்லை . எனது குருட்டுக் கண்களில் ஒளிவந்து சேர்ந்துவிட்டது போன்ற சந்தோஷமுண்டாயிற்று. கடைசியில் என் ராஜம் எனக்கேயாகி விட்டாளென்று மகிழ்ந்தேன்.
கலியாணமும் ஆர்ப்பாட்டமாய் முடிந்தது. குருட்டுக் கண்ணுடன் அவள் கழுத்தைத் தடவிக் கண்டுபிடித்த நான் தாலியைக் கட்டும்பொழுது என் கண்களில் ஜலம் ததும்புவதுபோலி ருந்தது. ஆனந்த பரவசத்தால் உண்டாகிய கண்ணீர் அது. “குருடனாகிவிட்டேனே” என்று நினைத்து நான் விட்ட கண்ணீர் என்று சிலர் அதைக்கருதியிருக்கலாம்.
ஆனால் என்ன ஆச்சரியம்: கலியாணமாகி இரண்டு நாட்கள் கடந்தன. நான் பள்ளிக கூடத்தில் படித்த ராஜம்மாவை நேசித்தது போல் இப்போதிருக்கும் ராஜம்மாவை நேசிக்க முடியவில்லை போல எனக்குத் தோன்றியது. இவ்வளவுக்கும் நானவளிடத்தில் ஒரு வித்தியா சத்தையும் காணவில்லை. மூன்று வருடங்களின் முன்னர் கேட்ட அவள் குரலுக்கும், இப்போது கேட்ட குரலுக்கும் எனக்கு வித்தியாசந் தோன்றவில்லை. அவள் நடந்ததைப் போல் தான் இவளும் நடந்தாள். அவள் சிரித்து விளையாடியது போல்தான் இவளும் சிரித்து விளை யாடினாள். ஆங்கிலங்கலந்து பேசினாள். ஆனாலும் என் மனதில் ஒரு அதிருப்தியிருந்தது. ஆனால் அவள் நான் குருடனென்பதை லட்சியம் செய்யாது மிக நேர்மையாக நடந்து கொண்ட முறையும், அன்பொழுகப் பேசிவந்த ரீதியும் எனக்கு ஆச்சரியத்தையும், அவளிடம் ஒருவித நன்மதிப்பையும் பெருக்கிக்கொண்டு வந்தன.
ஒரு வாரந்தான் கழிந்தது. எனது நண்பன் வரதன் என்னைப் பார்க்க வந்தான். அவன் என்னிடம் “பட்டினத்தில் ஒரு ரஷ்யன் ஐ ஷ்பெஷலிஸ்ட்” (கண் வைத்தியம்) வந்திருக்கிறார். உன்னைப்போல் இடையிட்டு வந்த குருட்டைச் சில இடங்களில் சொஸ்தமாக்கியிருக்கிறாராம். ஏன் நீயும் அவரிடம் போய் சிகிச்சை பெறக்கூடாது?” என்று கூறினான்.
எனக்கு நம்பிக்கை பிறக்கவில்லை . ஆனால் சொஸ்தமாகி விட்டால்…….? ஆகா! எவ்வளவு சந்தோஷமாயிருக்கும்? ராஜம்மாவுக்கு மனத்தில் ”என் கணவன் குருடன்” என்ற குறை. கவலையிருந்தால் அது நீங்கிவிடுமே! அவள் எவ்வளவு சந்தோஷப்படுவாள்.
கடைசியாய், “எதற்கும் பார்ப்போம்” என்று கிளம்பிவிட்டேன். ஒரு ஒன்றரைமாக காலத்தின் பின்னர் ஆச்சரியப்படும்படியாய் எனக்கு தெளிவான கண்பார்வை ஏற்பட்டுவிட்டது. என்னுடைய தகப்பனார் பட்ட சந்தோஷம் சொல்லி முடியாது.
ஐயாயிரம் ரூபாவை டாக்டருக்கு “பீஸா”கக் கொடுத்தார். வழிநெடுக ராஜாத்திக்கேற்படக் கூடிய சந்தோஷம் பற்றி மனராஜ்யம் செய்தபடியே வீடு வந்து சேர்ந்தேன்.
வீட்டு வாசலில் ஆவலும் மகிழ்ச்சியும் பொங்குகின்ற முகத்துடன் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். என்னை ஆச்சரியத்துடன் நோக்கினாள். ஆனாலிவள் ஏன் இங்கு வந் தாள்? ஒரு வேளை ராஜத்தின் சிநேகிதி யாராவதாயிருக்கலாம் என்று எண்ணிக்கொண்டே உள்ளே போனேன்.
“ராஜம் ராஜம்” என்று ஆவலுடன் கூவினேன். “என்ன” என்றுகொண்டே அந்தப்பெண் என்னிடம் ஓடிவந்தாள். “உன்னையல்ல ராஜம் எங்கே? காணவில்லை?”
அவள் என்னைப் பரிதாபகரமாய்ப் பார்த்தாள். “நான் தான் ராஜம். என் பெயர் கமலா. உங்களுடைய தகப்பனார்தான் அந்தப் பெயரை எனக்கு வைத்தார்” என்று அந்தப் பெண் தழ தழத்த குரலில் சொன்னாள்.
நான் திகைத்துவிட்டேன். என்னால் பேசமுடியவில்லை . “இது இமிட்டேஷன் ராஜம். அதனால்தான் இவளை அவள்போல் நேசிக்க முடியாதிருந்தது. என்று கண்டுகொண்டேன். என் மனத்தில் ஏதோ பெரிய சூறாவளி ஏற்பட்டுவிட்டது போலிருந்தது. ஒன்றும் பேசாமல் என் அறைக்கு ஓடினேன்.
நான் அங்கே செய்யத் துணிந்து செய்து முடித்துவிட்ட காரியத்தை நினைக்க இப்போதும் மனநடுக்கமுண்டாகிறது. ஒரு முரட்டு உணர்ச்சி என்னை அந்நேரத்தில் ஆட்டி வைத்தது. மேசையிலிருந்த ஒரு குண்டூசியை எடுத்து ஏமாற்றமடைந்த என் கண்களை நானே குத்திக்கொண்டேன். அப்படி நான் குத்திக்கொண்டு விட்டாலும் நல்லதாய்ப் போயிற்று. இல்லா விட்டால் பொன்னிருதயம் படைத்த அந்த உத்தம மனைவியை நான் அவளை நேசிக்க வேண்டியளவு நேசித்திருக்க மாட்டேன். விழித்துக்கொண்டிருக்கும் போது அவளை என் ராஜம்மாபோல் கருத முடியவில்லை . ஆனால் குருடாகியிருக்கும் பொழுது அவளிடம் ராஜத்தின் அம்ஸங்கள் தலைதூக்கி நிற்பதைக் காண்கிறேன். இப்பொழுது நீ என்னைக் கேட்டாயானால் அந்த ராஜத்தைவிட இவளை மேலாக நேசிக்க நான் கற்றுக்கொண்டேன். அவளே இந்தக் குருடனுக்குக் கண்ணாய் விளங்குகிறாள்.”
அவன் இங்கு நிறுத்தினான். அவளுடைய மனத்தில் ஒருவித சாந்தம் பிறந்தது போலிருந்தது. அவன் முகத்தில் ஒருவித அமைதி நிலவிற்று.
ராஜம்மாவைப்பற்றி எனக்குத் தெரிந்த கதையைச் சொல்லி அவனைக் கஷ்டப்படுத்த விரும்பவில்லை . “நான் போய் வருகிறேன்” என்று கிளம்பினேன். வழி நெடுகிலும் ஒரே சிந்தனை. என்னுடைய மனைவியைப்பற்றி தான். என் மனதில் நெடுங்காலமாக விடை தேடிக்கொண்டிருந்த ஒரு கேள்விக்கு இன்றுதான் மறுமொழி கிடைத்தது. நான் ஆபீஸி லிருந்து நேரஞ்சென்று திரும்ப சில நாட்களில் அவள் கண்கலங்கிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்ததைக் கண்டிருக்கிறேன். தன் நிர்ப்பிரயோசனமான இளமைக் கனவுகள் பலிதமாகாததையிட்டுத்தான் அவள் அப்படி உள்ளம் வெதும்பியிருக்க வேண்டும். அவள் மனக் குறைவுக்கு இந்த ஜன்மத்திலை மருந்து கிடைக்கப்போவதில்லை. ஒரு வேளை மறுஜன்மத்தில் கிடைக்குமோ?
– ஈழகேசரி – 15.05.1947.
– ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.