அரை டஜனுக்குமேல் பிள்ளைகளைப் பெற்ற கணக்கம்மாள், சேரச்சேர பணத்தாசை, பெறப் பெற பிள்ளை ஆசை, என்ற சொலவடையை நிதர்சனமாக்கினாள். குழந்தைப் பாக்கியத்தில் பரம திருப்தியில இருந்தவள், பெருத்த உடல்வாகிலும் கடைசிவரை, பின்னடைவைச் சந்திக்கவில்லை. கண்ணாடியைப் பார்த்து தன்னைத்தானே மெச்சவில்லைதான், இருந்தாலும் அவளைக் காண்பவர்கள், ‘ஏந்தான் சிரமப்படுறீங்களோ, நடந்தா உடம்பைக் குறைக்கலாம்ல’ என்பார்கள். அதிலுள்ள அகப்பொருளை மட்டும் தெளிவாக உணர்ந்தவள்போல்,’ அது கிடக்கட்டும், விட்டுத் தள்ளுங்கள்’ என்று உறவுமுறை சொல்லி முடித்துக் கொள்வாள்.
அவளுக்கு கவலையெல்லாம், பெற்ற மொட்டையங்களைப்(ஆண்குழந்தைகள்) பற்றியல்ல. இரண்டு முதல் நான்கு வருட கால இடைவெளியில் ஈன்றெடுத்த,பெண் குழந்தைகள் மூன்று பேரையும் பற்றித்தான். கட்டையாகவும், கறுப்பாகவும் ஒரே உயரத்தில் வளர்ந்து நின்றதால் ‘ எப்படி கரைசேர்க்கப் போறேனோ’ என்ற அச்சமும் கூட, அவள் அடிக்கோருமுறை சுணங்கிப்போக காரணமாக இருந்திருக்கலாம். ” இருக்காதோ பின்னே! அவளும் பொம்பளைதானே” என்று சொல்லும் ஊர் மக்களின்,அந்த ஆதங்க வார்த்தை, பானை உடம்பை அவ்வப்போது,நகர்த்தி நடக்க அவளுக்கு உதவி செய்தது.
பாரதப்போரில், கிருஷ்ணனின் வெள்ளைக் குதிரைகள் பூட்டிய ரதத்தைப்போல், ஆண்டுகள் ஓடியது. அவகாசத்தைக் கட்டிப் போட்டுவிட்டு, அவசரகதியில் உருண்டது ஏனோ? “என்ன காரணமோ தெரியவில்லை. அதற்கு எப்படித் தெரியும்.. காலத்தின் குதிரைப் பாய்ச்சலைப் பார்த்து, ‘நாங்க என்ன இளைச்சவங்களா’ என்பது போல யதேச்சையாக, கணக்கம்மாளின் சௌபாக்கிய புத்திரிகளூம் உருன்டு திரண்டிருந்தார்கள். கனத்த பருவமேடுகளுடன், வளர்ந்து ஆளாகிய அந்த மூன்று இளவட்டக் குட்டிகளும்,, ஒரே உயரம், பருமனில், ஊர்த்தெருவை அளந்து கொண்டு வந்தார்கள்.
‘சும்மா இருப்பானா பாலு’ அறிமுகமானவர்களைச் சந்தித்தால் கூட, அவர்களின் விரல்களைப் பிடித்துச் சொடுக்குப் போடுபவனாச்சே”, இதனால் சுதாரித்துக் கொண்ட அப்பனும் ஆத்தாளும், வயசுக்கு வந்த மூத்தவளுக்கு, இரண்டு மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில், மாப்பிள்ளை பேசி முடித்தார்கள். திருமணமும் நடந்தேறியது. அவளது கணவன் வெகுநாட்களாக வேலையில்லாப் பட்டதாரியாகத் திரிந்தான். ஆமாம் VIPயாக.. இதெல்லாம் சோற்றுக்குத்தான் பாரம் என கேலிப்பேச்சு வேறு. இதில் அந்த இரண்டு குடும்பங்களுக்கும் கிடைத்த உருப்படியான பலன், வஞ்சக மில்லாத வயிறில் வாரிக் கொட்டிக் கொண்டதால், அரிசியும் பருப்பும்தான் காலியாகிக் கொண்டிருந்தது. அதை நிறைத்து வைத்த பாத்திரங்களை கழுவிக் காய வைக்க முடிந்தது. அப்போதெல்லாம் அவன் சுயசிந்தனையில் உதித்த ஒரே வேலை.. நாமகரணத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டதுதான்.
‘இந்தப் படுபாவியப் பயபுள்ளைய பெத்ததுக்கு, பெத்த வயித்துலெ பிரண்டையாலே அடிச்சிருக்கலாம்போலே’ என்று, சொந்தபந்தங்கள், அவன் ஆத்தா அப்பனுக்கு சூடு இறக்கினார்கள். அவனது ஆத்தாவின் பிரயத்தனத்தால் கிராம நிர்வாக அலுவலர் வேலை கிடைத்தது. மன்னிக்கவும் வாங்கப்பட்டது. இதனால் அவன் முகத்தில் தேஜஸ் வந்ததோ இல்லையோ, வாழ்க்கையில் புதுப் பொலிவைப் பெற்றான்., மனைவியுடன், இருபது கிலோமீட்டர் தூரத்தில் இருந்த நகரமொன்றில் குடியேறினான்.
கஷ்ட ஜீவனம்தான் விதி என முன்கூட்டியே அனுமானித்தவன், ஒரு ஓட்டு வீட்டில்தான் குடியேறினான். பக்த்திலிருந்த வீடுகள் விஸ்வரூபம் எடுத்து உயர்ந்து நின்றது,இது அவன் மனைவிக்கு நப்பாசையாக வளர்ந்து, அது நிதர்சனமாகாத கனவாகவே நீண்ட காலமாக நொண்டியடித்துக் கொண்டிருந்தது. இரவிலும் பகலிலும் பார்க்க நேரும் கணவனை, துரதிஷ்டம் என்று கருதி, முகத்தை அடிக்கடி வெட்டி சுளுக்கி கொள்வாள் அந்த பாதகத்தி.
பணிக்குச் செல்வதற்காக இருக்கையில் உட்கார்ந்திருந்தவனைப் பார்த்தவள், கட்டுத்தறியில் நிற்காத எருமையைப்போல, முகத்தை வெட்டிக் கொண்டு சமையலறைக்குள் புகுந்தாள், நீண்டநாளாக மதர்த்துப்போன பட்டாசாக இருந்தவன், கோபத்திற்கான காரணத்தை தெரிந்து கொள்வதற்காக “செல்லமணி” என்று அழைத்தான்.
‘என்ன’ என்று ஒருமையில் குரல்கொடுத்தபடி வந்தவள் “யாரோ கூப்பிட்டது மாதிரி சத்தம் வந்துச்சு, குப்பை அள்ற பய வந்தானா” என்று கேட்டாள்.
“இல்லை நாந்தான், நீ ஏங்கோபமாவே இருக்கே, மொகத்தை பாத்து பேசப் புடிக்கலலயா, என்னாச்சு உனக்கு?”
ஆமா என்றவள், முழங்காலிலிருந்து சேலையை உயர்த்தும்போது, உள்பாவாடை நுனி தரை தட்டி இருந்தது. தொடர்ந்தவள், “நாட்டுலெ நடக்குறதைப் பாத்தா, உங்க மூஞ்சீலே ழிக்கவே கசக்குது என்றாள்.
அரற்றியாவது கேட்டுவிட வேண்டும் என்ற முடிவில் இருந்தவன் பின்வாங்கினான். இடுப்புச் சேலை ஏற்ற இறக்கத்தைப் பார்த்து, சாதுப்பசுவாக மாறியவன்” ஏன், என்னாச்சு? ” என்றான்.
“ஆமா வந்து இவ்ளோ நாளாச்சு, சொந்தமா வீடு கட்டணும்னு, தோணலையா உங்களுக்கு..?”
“அதுக்கென்ன, எங்க அசோசியே ஷன்லே நல்ல அமௌண்ட் இருக்கு, எடுத்துக் கட்டிடலாம்”
“சரி, எப்போன்னு சொல்லுங்க, இந்த மாசக்கடைசிலே தட்சை பண்ணிடலாமா? “
“எல்லாகத்துக்கும் அவசரந்தானா, முதல்ல நா சங்கத்து காசை, ஏதாவது ஒண்ணு பண்ணி கைப்பத்தனும். அது நல்லபடியா முடிஞ்சா, பண்ணிடலாம்”
“சரிங்க.. வேகமாப் பண்ணுங்க… திருப்பிக் கொடுக்க வேண்டியது இல்லைல, என்னால முடியாது, நாங்க ஏற்கனவே வெண்ணெலைக் குடும்பங்கிறது (ஏழைக் குடும்ம்)ஊருக்கே தெரியும், அதையும் நீங்கதா பாத்துக்கோணும்”
“இதுக்கு நாம ரெண்டுபேரும், நாம பொட்டகத்தை திறக்கணும்னு அவசியம் வந்துடாது. கேள்வி வந்தா பசங்க கல்லாணம்போது தட்சிணையா வாங்குற பணத்தை, யூஸ் பண்ணிக்கலாம், உனக்கு சம்மதந்தானே” என்று சொல்லி முடித்தவுடன், அதே சிந்தனையில் நடந்து விட்டான்.
கவலையின்றிஆண்டுகள் கடந்து விட்டன. வீடு கட்டப்பட்டு புதுமனை புகுவிழா எடுக்கப்பட்டது. அதே நேரத்தில், வரும்படி வளர்ச்சியை இரடடிப்பாக்கத் திட்டமிட்ட செல்லமணி தமபதி, மூத்தவனுக்கு இரண்டாம் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தது. பெற்றோரின் குறிப்பறிந்து, முந்திக் கொண்டு காய்களை நகர்த்திய மூத்தவன், தம்பி மனைவியைத் தகாத உறவில் விழ வைத்தான். பெற்றோர் குறுக்கே நின்றதால் செய்வதறியாது திகைத்த அவனது தம்பி, இருப்பதைவிட இறப்பதே மேல் என, ஸ்லோ பாய்ஷனை சன்னஞ்சன்னமாக எடுத்துக் கொண்டான். சிகிச்சையில் சேர்க்கப்பட்டவன், பாடையில் விழுந்தான். அவனோடு உண்மையும் சேர்த்து சிதையில் மூட்டப்பட்டது.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல, மகனுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்த அப்பனும் ஆத்தாளும், மூத்த மருமகளை விவாகரத்துக் கேட்டு வீட்டுக்கு அனுப்பி விட்டனர். இதனால் கதி கலங்கி நிற்கும் மற்ற மூன்று மனைவிகளின் ரத்த உறவுகள், சேற்றில் வைத்த ஒருகாலை, எடுக்க முடியாமலும் கரையேற முடியாலும் நட்டாற்றில் நிற்கிறார்கள். பயந்துபோய் “தொலஞ்சு போங்க” என அவ்வப்போது தட்சிணை வழங்கி, அழுது கொண்டிருக்கிறார்கள்.
ஊர்முழுவதும் தீயாய் பரவியது செய்தி. ஆங்காங்கே கூடி நிற்பவர்களுக்கு இதை பேசுவதே வாடிக்கையாகி விட்டது. ஒரு பொழுதுபோக்காகவும் போனது.
“அடியே கேட்டியா நீ, அந்தப் பாழாப்போன செல்லமணி குடும்த்துலெ நடக்கிறதை”
“நீஞ்சொல்லித்தானா அதைத் தெரிஞ்சுக்கணும்.. அந்தச் சீப்பட்ட குடும்பம், மத்த மருமக்களை, காசுபணத்துக்காக குச்சுக்காரியாக்காம வச்சுருக்கே, இது போதாதா..! அதை நினைச்சு அவளுக சந்தோசப்படணும்”
“இப்ப பேரனுக்கு கல்லாணம் ஆகப்போகுதாம். அவனுக்குப் பொண்ணைக் கொடுக்கிறவங்க,மீட்ரு வட்டி, குதிரை வட்டின்னு வசூலிச்சு வசதியா வாழ்றாங்களாம், அது தெரியுமா…?”
ஓணாய்க்குப் பிறந்தது ஓணான் ஆகுமா என்பதற்கு இணங்க, பதிவு செய்யாத கல்யாண இடைத்தரகர்கள் மூலம் ஆங்காங்கே பேசி, செல்லமணியின் இரண்டாவது மகன்வழிப் பேரனுக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ளது.இப்போது இதுதான், ஊர்வாயில் செய்தியாகியுள்ளது.
கடைத்தெருவில் தேநீர் அருந்துபவர்கள், கொடுக்கும் பத்து ரூபாய்க்காக, இருக்கையிலிருந்து அசையாமல் அளந்து கொண்டிருந்தார்கள்.
“கேள்விப்பட்டியா, சுயமணி பேத்திக்கு, சூரம்புளி செல்லி இருக்காள்ல, அவ மகனை பேசி முடிச்சிட்டாங்களாம்”
“அப்ப செல்லமணியோட அடுத்த குறி, இப்ப கல்லாணம் பண்ணப் போறவதானா..?”
“பொல்லாத காலம் சொல்லாமத்தான் வருமுன்னு ஒரு உவகதை இருக்குல்ல, அப்டிக்கூட இருக்கலாம். போகப்போக தெரிஞ்சுக்குவாகல்ல” என்று சொல்லிக் கொண்டே, ஆளுக்கொரு திசையில் நடந்தார்கள்.
மாப்பிள்ளை பேசி முடித்துவிட்டு, வீடு திரும்பிய பெண் வீட்டார், வட்டித் தொழில் மூலம் குடும்ப பொருளாதாரத்தை விருத்தி செய்த, சுயமணியின் போட்டோவுக்கு முன் கையெடுத்து வணங்கி நின்றார்கள். கூடவே மணமேடை ஏறப்போகின்ற பெண்ணும், மணவாழ்க்கை இன்பமாக அமைய, தாத்தாவின் படத்தை பார்த்து கைகூப்பி வேண்டினாள். அவ்வப்போது கூந்தலைக் கோதி விட்டபடி, ஹாலுக்குத் திரும்பினாள்.
அங்கே, சுவற்றில் ஆணி அறைந்து வைக்கப்பட்ட, தாத்தா சுயமணியின் ஒட்டடை ஏறிப் போயிருந்த அந்தப் ழைய படம் அவள் கண்ணில் பட்டது. ஊதுபத்தி, சாம்பிராணி புகையை, ஒரு பொருட்டாக கருதாத சுயமணியின் படம், சிரித்துக் கொண்டிருந்தது. சப்தம் இல்லை, நீருலாவிய தண்ணீர்த் திவலைகள் போட்டோவில் வழிந்தது. அதில், அவருடைய ஆன்மாவின் கண்ணீரும் கலந்திருந்ததை, அவளால் உணரமுடியவில்லை.ஏனென்றால் பருவக் கனவு, ஐக்கிய வெறியைப் பற்றியே கற்பனை செய்து கொண்டிருந்ததால் அவளால் புரிந்து கொள்ள இயலவில்லை.” பாவிப் பசங்களா, பேத்தியாளை பாழுங்கிணத்துலே தள்ளீட்டீங்களடா என்று, அவரது ஆன்மா, நாட்டு நடப்பைப் புரிந்தவர்களுக்கு அசரீரியாய்க் கேட்டது.
அழத்தெரியாத இந்த தலைமுறை, அழக் கற்றுக் கொள்ளாமல் இருக்கலாமா.. முயற்சி செய்து முக்கியும் முட்டியும், எத்தனை நாட்களுக்குத் தான் கண்ணீரை வரவழைப்பது. பழகிப் போகட்டும்.இந்தக் குரங்குச் சேட்டை, வாழ்க்கையை எங்கே கொண்டுபோகப் போகிறது?
சிறுகதைகள் தளத்திற்கு நன்றி. அரசு ஊழியர் சங்கப் பொறுப்பாளர்கள் இப்படித்தாண் இருப்பார்களா. கண்ணைத் திறந்து விட்டீர்கள். நன்றி
V. Ramanathan
Teacher
விஏஓவாக இருந்த என்னை, பணிப்பாதுகாப்புக்காக சேரவேண்டும் என வற்புறுத்தினார்கள். இதனை நம்பி சங்கத்தில் சேர்ந்தேன். 20வருசதமாக இருந்த எனக்கு உதவி செய்யவில்லை. சந்தா,நன்கொடை என வசூல் செய்தார்கள். இந்த அட்டூழியம் பற்றி சொல்லி,கொடுத்த பணத்தை மீட்கப்போனபோது,பொதுச்செயலாளர் மனைவி கெட்ட வார்த்தையில் மிரட்டினார். இந்தக் கதையின் மூலம் எங்களுக்கு நாமம் கிடைக்குமா சார்
ச.நாகராஜன்
வீஏஓ ஓய்வு
வணக்கம், விருதுநகர் மாவட்டத்தில், வி. ஏ. ஓவாக இருந்து ரிட்டைடு ஆகிவிட்டேன். எங்கள் சங்கத்தில் பொதுச் செயலாளராக இருந்தரும், எங்களிடம் வசூல் செய்வார். இதேபோல், சங்கத்தில் இருந்த லட்சக்கணக்கான ரூபாயை கையாடல் செய்தார். இந்த அதிருப்தியில் தொடங்கிய இன்னொரு சங்கத்தில் சேர்ந்தோம். இந்தக் கதை பழைய நினைவுகளைக் கொண்டு வருகிறது. நன்றி
ந. மகாலிங்கம், vao(rtd)