குமாரமூர்த்தி மாமா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 15, 2023
பார்வையிட்டோர்: 3,308 
 

குமார மூர்த்தி மாமா மோசம்போட்டர்.. . அப்பா செத்தபோது வாணியிண்ட அடி வயிற்றில இருந்து உருண்டு திரண்டு துன்பக்கனல் ஒண்டு நெஞ்சை எரிச்சுப்ப் புறப்பட்டுதே அதுபோல … …பெருமூச்சால் அந்த கனலினை அணைக்க முயற்சி செய்தும் அவளால ஏலாமல் போட்டுது. அவளிண்ட . மனம் நிலைகொள்ளாம தத்தளித்துக் கொண்டிருந்துச்சுது.

மாமாவுக்கு கன்னங்கரிய கருங்காலி போல உறுதியான உடல்வாகு. தீட்சன்னியமான ஊடுருவிநோக்கிற கண்கள் …..ஒரு புன்னகையால தன்னுள்ளே ஒளிந்திருக்கிற ஆன்மாவிண்ட தூய்மையை வெளிப்படுத்துற அபூர்வ மனிசரில அவர் ஒருத்தர்..

வாணியிண்ட அப்பா குமாரவடிவேலர் அவளுக்கு மேல வச்சிருந்த நேசத்துக்குச் கொங்சமும் குறையாத அன்பயில்லே வாணியில காட்டினது அந்த மனுசன்

மூர்த்தி மாமா வாணிக்கு சொந்தக்காரரில்ல. வாணியிண்ட அப்பாண்ட பாலியகாலச்சினேகிதர்.. வாணிக்கு நினவு தெரிந்தகாலம் தொட்டு அவள் வீட்டுக்கு வந்து போறவர். குமார வடிவேலருக்கு பத்திரிகையில வேல. . இதனால் ஓரளவு பிரபலமான ஆள். அவரைப் பாக்க அவற்ற கூட்டாளிகள் கனக்கப் பேர் வந்து போறவ. ஆனா அவயில ஒரு சிலர் மட்டுமே குமார வடிவேலற்ற மனசுக்கு மிக நெருக்கமானவையா இருந்தினம். அவை வாணிண்ட அம்மாவுக்கு அண்ணனாகவும் வாணிக்கு மாமாவாகவும் உறவுமுறைபோல பழகுவினம் .குமாரவடிவேலருக்கு பண நெருக்கடி எண்டாலும் மனநெருக்கடி எண்டாலும் அவைதான் கைகொடுத்து தோள்கொடுத்து உடனிருப்பினம் .

அவயிலும் மூர்த்திமாமா எண்டால் வாணிக்கு மிச்சம் ஸ்பெசல். மூர்த்திமாமாவிண்ட மகள் மணிமேகலை வாணியிண்ட நெருங்கிய நண்பி. பள்ளிதொடக்கம் பல்கலைக்கழகம் வரை ஒன்றாகப்படிக்கிற அபூர்வ வாய்ப்பு அவைக்குக் கிடைச்சிருந்திச்சு.

மேகலை ,வாணி வீட்டில நாட்கணக்கில ஏன் கிழமைக் கணக்கில கூடத்தங்கியிருக்கிறாள். வாணியும் அப்படித்தான்.அதனால மணிமேகலை வீட்டார் வாணிய தங்கட வீட்டுப் பிள்ளையாகவும் மேகலையை வாணி வீட்டார் தங்கட வீட்டுப் பிள்ளையாவும் நினைச்சு நடக்கிறது இயல்பா இருந்துச்சு. வாணிக்குச் சொந்த தாய்மாமன் இருந்தாக் கூட மூர்த்திமாமா வீட்டில அவளுக்குக் கிடைத்த சுதந்திரமும் உரிமையும் கிடைச்சிருக்குமோ எண்டது ஐமிச்சம்தான்.

வாணிக்கு நல்லா நினைவிருக்குது. அவளுக்கு அப்ப எட்டு வயசுக்குக் கீழதான் இருக்கும்.மூர்த்தி மாமா மேகலையை வாணி வீட்டில விடிட்டு போகேக்க சாப்பிட ஏதாச்சும் கொண்டுவருவார் . வாணி இரட்டைச் சந்தோசத்தில திளைப்பாள்..ஆனா மேகலை வாணியை அவள் வீட்டுக்கு அழைக்கேக்க வாணிக்குப் போக விருப்பமில்லாமல் இருக்கும்.

மாமா தமிழ் வாத்தியார். அவற்ற வீட்டில எழுதப்படாத விதி ஒண்டு இருந்திச்சு..ஓவ்வொருநாள் காலையிலையும் அவற்ற வீட்டுப் பிள்ளையள் திருக்குறளையும் தேவாரப் பதிகங்களையும் பாடமாக்கி ஒப்புவிக்க வேணும் . அந்த விதி அவயிண்ட வீட்ட போற வாணிக்கும் பொருந்தும். மேகலை உட்பட அவளிண்ட அக்கா இரண்டு பேருக்கும் ஞாபகசக்தி அதிகம். எந்த விசயத்தையும் அவை தங்கட மூளைக்குள்ள ஸ்கான் பண்ணி வைச்சிருப்பதாகவும் கேட்டோன்ன கொம்பூட்டர் மாதிரி சொல்லுறதாயும் வாணிக்குத் தோணும்,. வாணிக்கோ சுட்டுப்போட்டாலும் பாடமாக்கவராது. அல்லது வாரது எண்டு பஞ்சிக்கு மறு விளக்கம் கொடுத்தாளோ தெரியாது. .

ஏழுமணிவரை தூங்குமூஞ்சியாப் படுத்திட்டு அரக்கபரக்க பள்ளிக்குச் செல்லும் அவளுக்கு வெள்ளன நாலு மணிக்கே எழும்பிக் குளிச்சு சாமிகும்பிட்டிட்டு புத்தகங்களோட அமரும் மேகலா வீட்டாற்ற பழக்கம் உவப்பா இல்லை.

மாமா நாலே முக்காலில் இருந்து ஆறு மணிவரை பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பார். இந்த நடைமுறையை வாணியும் மேகலையும் பல்கலைக் கழகம் போனாப்பிறகுகூட அவர் மாத்தேல்ல.

வாணியும் மேகலையும் BSC maths செய்தவ. மேகலையிண்ட அக்கா ஜானகி மருத்துவம் படிச்சா. சின்னக்கா மாதவி புவியியல் பட்டதாரி. ஆனாலும் அந்த மூண்டு பேருக்குமே தமிழ் இலக்கியத்திலையும் உலக இலக்கியங்களிலையும் தத்துவியலிலையும் நல்ல பரிச்சயமுண்டு. மாமா சங்க இலக்கியங்களை படிப்பிச்ச விதமே தனிதான். பெரும்பாணாற்றுப்படையும் சிறுபாணாற்றுப்படையும் அவர் படிப்பிக்கேக்க நாசியில நிணம் உருகிற வாசனையோட ஊண்சோறும் கண்ணெதிரே விரியும். கண்ணகியிண்ட அறம் மட்டுமல்லாம மாதவி மணிமேகலையிண்ட அவலமும் மனசை உருக்கும். கம்பனிலையும் இளங்கோவிலையும் அவருக்கு இருந்த பிரியம் தான் பெண்கள் மூண்டு பேரிண்ட பெயர்களிலையும் வெளிப்பட்டிச்சு…மாமா கொடுத்த அறிவுப்பொக்கிசம்தான் மாதவி அக்கா பெண் கவிஞர்களில குறிப்பிடத்தக்கவவா இருக்கக் காரணம் .

குமார வடிவேலரும் மாமாவும் மணித்தியாளக் கணக்கில இலக்கியம், தத்துவம், அரசியல் பற்றிப்பேசுவினம். மாமாவுக்கு படைப்பாற்றல் மட்டும் இருந்தா அவர் பெரிய படைப்பாளியாக இருப்பார் எண்டு குமாரவடிவேலர் தமது நண்பர்களுக்கு அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார்..

ஒரு மனிதன் நல்லவனாக இருக்கலாம் .ஆனா உன்னதமானவன் அவன் எண்டத உணர்த்திற தருணங்கள் வாழ்வில சில சமையங்களிலதான் அமையும்.

அண்டைக்கு வாணி தடுமாறி நிக்கேக்க மாமா இல்லாட்டி அவளிண்ட வாழ்வே திசை மாறியிருக்கும்.

கண்ணன், மாமாண்ட அண்ணற்ற மகன் .வாணி மாமாவீட்டுக்குப் போகும் போதெல்லாம் அவன்தனது சித்தப்பா வீட்டைச் சுத்திக்கொண்டு திரிவான். சிறுவயதிலேயே வாணிக்கு அவன் மேல ஈர்ப்பு இருந்திச்சு. கண்ணனுக்கும் தான். பதினாறு பருவத்தை அடைஞ்ச போது ஏதோ ஒரு கிழர்ச்சி….. அதனைக் காதலாக இருவரும் அர்த்தப்படுத்திக் கொண்டிச்சினம்.

பாரதி ராஜாவின் அலைகள் ஓய்வதில்லைப் படம் வந்த மூட்டம்.

அவை இரண்டுபேரையும் உலகத்திலேயே தாங்கள் தான் உன்னதமானகாதலர் என எண்ண வைச்சுது. அதில ஒண்டும் தவறில்லைத்தான். ஆனா அந்தப்படம் கண்ணண்ட மனசில விபரீத எண்ணத்தை உருவாக்கினதுதான் அபத்தம்.

கண்ணனின் குடும்பம் செல்வத்தில மிதந்தது எண்டா வாணிண்ட குடும்பம் ரெண்டுங்கெட்டான் தான் .போர்வைய தலைக்கு எடுத்துப் போத்தினா கால மூட எலாது. கால மூடினா தலைக்குக் காணாது எண்ட நிலை. . தமிழ் சமூகத்தில எழுத்தை மட்டுமே நம்பி வாழிறவண்ட நிலை வேறுவிதமா இருக்கப்போகுதே?

குமார மூர்த்தி மாமா மிகவும் எளிமையான ஆள்த்தான் ஆனா அவரிண்ட குடும்பப் பின்னணி சமூகத்தில உயர்ந்திருந்துச்சு..மாமி உட்பட மாமாவிண்ட சகோதரங்கள் எல்லோரும் உயர்சாதித்தடிப்புக் கொண்டவ… பொருளாதாரத்திலையும் படிப்பு ,உத்தியோகத்திலையும் அமைஞ்ச சமூக அந்தஸ்தால பெருமை பிடிச்சவையா இருந்திச்சினம்..

இந்த ஏறத்தாழ்வை எப்பொழுதும் சரிப்படுத்த முடியாது எண்டும் பெத்தவை பிரிச்சிடுவினம் எண்டும் கண்ணன் முழுசா நம்பிறதா வாணிக்குச் சொன்னான்.

தன்னைக் பிச்சுவின் இடத்திலையும் வாணியை மேரியிண்ட இடத்திலையும் வைச்சு இளமைக் கிழர்ச்சியில ஊசலாடிய அவன் வாணியையும் அந்தமனனிலைக்கு உட்படுத்தி வீட்டைவிட்டு ஓடிப்போய்ச் கலியாணம் செய்யலாம் எண்ட முடிவுக்கு வரச்செய்தான்.

இரண்டு பேரும் மட்டக்களப்புக்கு போக முடிவுசெய்து ரெயில்வே ஸ்ரேசனுக்குப் போக வெளிக்கிட்டினம். மட்டக்கள்ப்பில கண்ணனிண்ட சினேகிதர் இருக்கினம். அவை அவனுக்கு உதவிறதா சொல்லியிருந்தினம்.

வாணி மாமாவிண்ட வீட்ட நிண்டதால வசதியாப் போச்சுது. மாமாதான் வாணிய அவளிண்ட வீட்ட கொண்டு விடுறதா இருந்திச்சு.ஆனா கண்ணன் தான் கொண்டு போய் விடுறதா மாமியிட்ட சொன்னான். கண்ணன் முன்னும் பலதடவை வாணியை கூட்டிச்செல்லிறதால மாமிக்குச் சந்தேகம் வரேல்ல….. .

ஆனா கண்ணன்ட முகத்தில இருந்த கள்ளத்தனமும் வாணியிண்ட மனப்பதட்டமும் நிலைகொள்ளாத தன்மையும் மாமாவுக்கு ஏதோ சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கவேணும்.

அவர் இவையப் பின் தொடர்ந்து போனார். வாணியிண்ட வீட்ட போகாமல் ரயில் நிலையத்துக்கு போனது அவற்ற சந்தேகத்த உறுதிப்படுத்திச்சு. மாமா அவை இரண்டுபேருக்கு முன்னால போய் நிண்டதும் ஒரே அதிர்ச்சியாப் போயிட்டுது.கண்ணனுக்கு கையும் ஓடேல்ல காலும் ஓடேல்ல.கண்ணனுக்கு மாமாமேல மரியாதை கலந்த பயம். மாமா இவனை வீட்டுக்கு போ எண்டு சொன்னோன அவன் தயங்கித் தயங்கி இடத்தவிட்டு களண்டிட்டான்.

மாமா வாணியிடம் அப்பொழுது சொன்னவைதான் அவளுடைய வாழ்க்கையை ஸ்திரப்படுத்திச்சு.

“வாணி நான் காதலுக்கு எதிரியில்ல. உங்கட வயசு காதலிக்கிற வயசும் தான் . ஆனா கலியாணம் முடிக்கிற வயசில்ல. நீங்கள் படிச்சு ஒரு வேலையைத் தேடி அப்பவும் இதேயளவு காதலோட இருந்தீங்கள் எண்டா நான் உங்கட கலியாணத்தை ஆர் எதிர்த்தாலும் செய்து வைப்பன்”

அவர் தன்ற வார்த்தைய கட்டாயம் நிறைவேற்றுவார் எண்டதில வாணிக்குச் துளியளவுகூடச் சந்தேகம் இருக்கேல்லை. ஏனெண்டால் அவரிண்ட நேர்மையைப்பற்றி அவள் சரியாகத்தான் தெரிஞ்சுவைச்சிருந்தாள்.

ஆனாலும் வாணி, கண்ணனை கலியாணம் செய்யேல்ல. கண்ணன் தன் பெயருக்கு பொருத்தமானவந்தான் என்பதை அவள் காலகதியில் தெரிஞ்சுகொண்டாள். அவனை நம்புவது மண்குதிரையக் கொண்டு ஆத்தில இறங்கிறதுக்கு சமன் என்பதை காலம் அவளுக்கு உணர்த்திச்சு. இப்ப கண்ணன் கனடாவில அவன் வாழ்வில் குறுக்கிட்ட அஞ்சாவது பெண்ணான வெள்ளை காரியோட living together இல் இருக்கிறானாம். மேகலைதான் சொன்னவள்….

வாணிக்கு நல்லதொரு துணைய தேடித்தர குமாரமூர்த்தி மாமாதான் குமாரவடிவேலுவுக்கு உதவினவர். இப்ப வாணி உள்நாட்டிலேயே இரண்டு பிள்ளையளோட சீரும் சிறப்பா வாழுகிறாள்.

இது மட்டும் இல்லை .குமாரமூர்த்தி மாமா குடும்பத்ததில நடந்த ஒரு சம்பவம், வாணி மனசில உயந்த இடத்த மாமா பிடிக்கக் காரணமா இருந்திச்சு.

மேகலை, யூனிவேசிற்றியில படிக்கேக்க பார்த்திபன் எண்ட ஒரு பெடியன காதலிச்சவள். நல்ல பெடியன் . நல்லாபடிச்சதால யூனிவேசிற்றியிலேயே விரிவுரையாளரா வேலையும் கிடைச்சுது.

ஆனா அவண்ட குடும்பம் அந்தஸ்தில மட்டுமில்ல, சாதியிலையும் குறஞ்சதுதான்.

இதால மேகலை வீட்ட அவளிண்ட அம்மா உட்பட எல்லாரும் அவையிண்ட காதலை சரியா எதிர்த்திச்சினம் . தங்கட குடும்பத்திண்ட மானம் மரியாதய எல்லாம் போயிடும். அதுக்குப்பிறகு தான் உயிரோட இருக்க மாட்டா எண்டு அம்மா வெருட்டினா.அவை எல்லோரையும் எதிர்த்துக்கொண்டு அவேண்ட சந்தோசத்தை அழிச்சுப்போட்டு தான் ஒரு வாழ்க்கையை தேடிக்கொள்ள வேணுமா எண்டு மேகலைக்கே தோனிப்போச்சு. அவள் தான் பார்த்திபனை விட்டுட்டு அப்பா அம்மா சொல்லிற பையன கட்டிறன் எண்டு தன்ற அம்மாவுக்குச் சொன்னாள். அம்மாவுக்கு தங்கட கௌரவமும் மானமும் காப்பாத்தப்பட்டிட்டு எண்டு பெரிய சந்தோசம்.

ஆனா மாமா மேகலையைக் கூப்பிட்டு இப்படிக்கேட்டார்…

“கலா உன்ற கலியாணம் பற்றி என்ன முடிவு எடுத்திருக்கிறாய்?”

“என்ற ஒருத்தியிண்ட சந்தோசத்துக்காக எங்கட குடும்பத்துக்கு தலையிறக்கம் ஏற்படுத்த நான் விரும்பேல்ல”.

“என்ன சொல்லிறாய். ஆருக்கும் பயந்து பேசிறியோ?” அவர்குரலில் சந்தோசம் இல்லாதது மேகலைக்கு ஆச்சரியமாத்தான் இருந்திச்சு.

“நீங்கள் சொல்லிற மாப்பிள்ளையை கட்டிறன்” இப்பிடி மேகலை சொல்லேக்க குரல் நடுங்கித் தழுதழுத்தது.

“நீ என்ன பரத்தையா…?”

மேகலை இதச் சற்றும் எதிர்பாக்கேல்ல.மாமா பச்சையா இந்த வார்த்தையச் சொள்ளியிருந்தா…?அப்பிடி மாமாவால சொல்லஎலாதுதான்.

அவர் சொன்ன வர்த்தையிண்ட உஸ்னத்த தாங்கேலாமல் அவள் நடுங்கிப் போனாள்…..

தன்ற கோழைத்தனதை எண்ணி வெட்கித் தலைகுணிஞ்சாள்.

குடும்பத்தவர் எல்லாற்றை எதிர்ப்பையும் மீறித் தானே முன் நிண்டு மேகலைக்கும் பார்த்தீபனுக்கும் கலியாணம் செய்து வச்சார் குமார மூர்த்தி மாமா.

இப்ப மேகலை குடும்பத்த எல்லாரும் ஏத்திட்டினம் .அவள் நல்ல சந்தோசமா இருக்கிறாள்.

சொல்லும் செயலும் முரண்பட்டிருக்கிற இந்த உலகத்தில குமார மூர்த்தி மாமா போல சிலர் இருக்கத்தான் செய்யினம்.

அவற்ற உடம்பு தென்முகம் பாத்துக் கிடத்தப்பட்டிருக்கு. அவரது காலடியில இருந்த வாணியிண்ட மனசிலையும் மேகலையிண்ட மனசிலையும் ஒரே எண்ணந்தான் ஓடிக்கொண்டிருந்தது.

“அப்பா….

மாமா…..,

நீங்கள் எங்கட தெய்வம்!.

தெய்வமா இருந்து எப்பவும் எங்களுக்கு வழிகாட்டுங்கோ.”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *