குப்புசாமியும் குலோப்ஜாமூனும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 21, 2015
பார்வையிட்டோர்: 7,505 
 
 

மாலை நான்கு மணிக்கு வெளியே கிளம்ப ஆயத்தமானார் குப்புசாமி.

“அப்பா இப்ப எங்க வெளிய கிளம்புறீங்க? ஒரு அரை மணி நேரம் பொறுங்க, நான் தயாரிக்கப் போகிற சுவீட் நல்லா இருக்கான்னு டேஸ்ட் பண்ணிப் பாருங்க” என்று வேண்டினாள் அவரது செல்ல மகள் மல்லிகா.

“வீட்ல எதுக்கும்மா நான் ஸ்வீட் சாப்பிடணும், பெங்களூர்ல ஹோட்டல் ஸ்வீட்டெல்லாம் எப்படீன்னு பார்த்துட்டு வந்து சொல்றேன்” மகள் மல்லிகாவின் பதிலுக்கு காத்திராது வெளியேறினார் குப்புசாமி.

ஆனால் மல்லிகா செய்யப்போகும் இனிப்பைத்தான் தான் அன்று சாப்பிட்டாக வேண்டிய அவசியத்தை அப்போது அவர் உணரவில்லை. அன்று மாலைதான் தன் கிராமமான திம்மராஜபுரத்திலிருந்து, தனிக் குடித்தனம் நடத்தும் தன் மகள்-மாப்பிள்ளையைப் பார்ப்பதற்காக முதல் தடவையாக பெங்களூர் வந்திருந்தார் குப்புசாமி.

துப்புரவான தார் சாலையில் நடந்து செல்கையில், பெங்களூரின் உடம்பை வருடும் குளிரும், வெய்யில் இல்லாத மேகமூட்டமும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.

வயது ஐம்பதுக்கு மேல் என்றாலும் குப்புசாமி சற்று ஷோக் பேர்வழி.

தினமும் காலையில் முகச் சவரம் செய்து கொள்வார். ஒரு நாளில் இரண்டு முறை குளிப்பார். நேர்த்தியாக உடையணிந்துகொண்டு மணக்க மணக்க யார்ட்லி பவுடர் அப்பிக்கொண்டு சிரித்துக் கொண்டேயிருப்பார்.

நாக்கு நீளம். மனிதர் வக்கணையாகச் சாப்பிடுவார்.

முன்னோர்கள் விட்டுச் சென்ற சொத்துக்களை தின்றே தீர்த்து விடுவது என கங்கணம் கட்டிக்கொண்டவரைப் போல் தினமும் மாலையில் திம்மராஜபுரத்திலிருந்து டவுன் பஸ் பிடித்து, திருநெல்வேலி ஜங்க்ஷன் சென்று ஒரு குறிப்பிட்ட ஹோட்டலில் அல்வாவிலிருந்து ஆரம்பித்து, கார வகைகளின் இடைச்செருகல்களில் லயித்து சப்புக்கொட்டி ரசித்து சாப்பிடுவார். கடைசியாக ஒரு திக்கான காப்பியில் முடித்துக் கொண்டு தன் வாயில் அந்த காப்பியின் மணம் மாறாதவாறு பார்த்துக் கொள்வார்.

வீட்டில் இருக்கும்போது, எப்போதும் எதாவது மென்று கொண்டேயிருப்பார்.

நொறுக்குத்தீனி எப்போதும் வீட்டில் இருக்க வேண்டும். அவ்விதம் இல்லாத சமயங்களில் தன் மனைவியை நொறுக்கிவிடுவார். அவர் தூங்கும்போதுதான் அவருடைய வாய் அசையாது. அதுகூட அவர் புறத் தோற்றத்தை வைத்துதான் சொல்லமுடியுமே தவிர, அசையாத வாய்க்குள் தட்டை, சீடை என்று எதாவது ஊறிக் கொண்டிருக்காது என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது.

குப்புசாமி கரிய நிறம். வாட்டசாட்டமான அஜானுபாகான உடம்பு. அரக்கை சட்டை என்றோ அல்லது முழுக்கை சட்டை என்றோ சொல்லமுடியாத நிலையில், ஒரு தொள தொள சட்டையணிந்து கொண்டு கணுக்காலுக்கு மேல் ஒரு நான்கு முழ வேட்டியைக் கட்டிக்கொண்டு பார்த்தாலே சிரிப்பு வரும் தோற்றம்.

அவர் மனைவிக்கு குப்புசாமியின் ஷோக்குகள் சற்றும் பிடிப்பதில்லை.

அவர் வாழ்க்கையில் செய்த ஒரே உருப்படியான காரியம், மகள் மல்லிகாவை ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்ததுதான் என்று அடிக்கடி சொல்லிக் காண்பிப்பாள்.

சாலையின் திருப்பத்தில் ஹோட்டல் சந்திரிகா என்கிற பெயர்ப் பலகையினால் கவரப்பட்டு, சற்று நின்று யோசித்தார் குப்புசாமி. பர்சை தொட்டுப் பார்த்துக் கொண்டார். கன்னடம் தனக்கு பேசத் தெரியாதே என சற்று தயங்கினார். பிறகு தைரியமுற்று ஹோட்டலினுள் நுழைந்தார்.

ஹோட்டல் சுத்தமாகவும், சுறுசுறுப்பாகவும் இருந்தது. பலவிதமான உணவு வகைகளின் வாசனை அவரின் மூக்கைத் துளைத்தது. வாசனை பிடிக்கும்போதே நாக்கில் எச்சில் ஊறத் தொடங்க கூட்டி விழுங்கினார்.

காலியாக இருந்த ஒரு டேபிளில் அமர்ந்தார். சர்வர் எவரும் அவரருகே உடனடியாக வராததால், இதுவே நம்ம திருநெல்வேலியாக இருந்தால் சர்வர் சரவணன் ஒரு சல்யூட் அடித்துவிட்டு அவரைக் கேட்காமலே ஐட்டங்களை வரிசையாகக் கொண்டு வந்திருப்பானே என்று நினைத்துக் கொண்டார். சற்று நேரத்தில், “ஏனு பேக்கு?” என்ற சர்வரின் கேள்வியால கலையப்பட்டார்.

“ஸ்வீட் என்ன” என்று டெலிகிராப் பாஷையில் கேட்க சர்வர், “பாசந்தி, ரசமலாய், பாதுஷா, ஜாங்கிரி, ரசகுல்லா, குலோப்ஜான்” என்று வேகமாகச் சொன்னான்.

அவன் சொன்ன பெரும்பாலான பெயர்களை கேள்விப் பட்டிராவிடினும் – குலோப்ஜான் என்ற பெயர் கடைசியாகச் சொல்லப்பட்டதாலும், தன்னுடன் பள்ளியில் படித்த இன்குலாப், பள்ளி வாத்தியார் ஜான் பெயர்கள் நினைவில் நின்றதாலும், “குலோப்ஜான் பேக்கு” என்றார்.

சிறிது நேரத்தில் சர்வர் கொண்டுவந்து அவர் முன் வைத்தான்.

அழகான கிண்ணத்தில், ஜீராவில் மூழ்கியபடி பழுப்பு நிறத்தில் இரண்டு ஸ்பூன்களுக்கு மத்தியில் வீற்றிருந்தது குலோப்ஜாமூன்.

இதுவரை சாப்பிட்டிராத ஐட்டம் என்பதால் குப்புசாமிக்கு நாக்கில் ஜலம் ஊறியது. ஸ்பூன் உபயோகித்து பழக்கப் படாதவராகையால் அதை கையினால் எடுத்துச் சாப்பிடலாமா என்று யோசித்தார். அதே சமயம் கையினால் எடுத்துச் சாப்பிட்டால் சுற்றி இருப்பவர்கள் கிண்டலாக நினைப்பார்களே என தயங்கி சற்றும் முற்றும் பார்த்தார்.

அவரை எவரும் குறிப்பாக கவனிக்கவில்லையாயினும் சாப்பிடும்போது யாராவது பார்த்து விட்டால் என்ன செய்வது என சங்கோஜித்தபடி ஸ்பூனினால் குலோப்ஜாமூனை மெல்ல நெருடினார். அது ஜீராவில் முங்கி முங்கி மேலே வந்து குப்புசாமியை எட்டி, எட்டிப் பார்த்தது.

அதை ஸ்பூனினால் விண்டு விண்டு சாப்பிட வேண்டும் என்கிற முறை தெரியாமல் முழு ஜாமூனையும் ஸ்பூனில் தக்க வைத்துக்கொண்டு எதோ சாகசம் செய்யத் தயாராவதைப்போல், கால்களைப் பரப்பி, தான் அமர்ந்திருந்த நாற்காலியை சற்று இழுத்து டேபிளுக்கு அருகே கொண்டு வந்தார். அப்படியே ஸ்பூனினால் முழுதாக வாய்க்குள் போட்டுக்கொண்டு மென்று விடுவது என்கிற திட்டத்தில் உறுதியாக இருந்து, ஒரு முறை சற்றும் முற்றும் பார்த்துக்கொண்டார்.

பிறகு ஸ்பூனில் மையமாக ஜாமூனை எடுத்துக்கொண்டு அதை வேகமாக பாஸ்கெட்பால் போடும் பாவனையில் வாய்க்குள் போட முயற்ச்சிக்க – அந்தோ பரிதாபம், ஜாமூன் குறி தவறி அவர் வாய்க்குள் செல்லாது அவரின் கன்னத்தை உரசியபடி பின் பக்கமாக பயணித்து அங்கிருந்த சர்வர் மேல் படாது அவன் கையில் வைத்திருந்த சட்னி வாளியினுள் ‘சொளக்’ என்ற சப்தத்துடன் விழுந்தது. சட்டினியின் கெட்டித் தன்மையால் சிறிது சிறிதாக மூழ்கி உள்ளே சென்று மறைந்தது.

சர்வர் குப்புசாமியை எரித்து விடுவதைப்போல் முறைத்துப் பார்த்து கன்னடத்தில் எதோ திட்டிவிட்டு கரண்டியினால் சட்னியைக் கலக்கி குலோப்ஜாமூனை உருத்தெரியாமல் கரைத்து விட்டான்.

குப்புசாமிக்கு முகத்தில் சுரத்தே இல்லை. சர்வரிடம் ஈனமான குரலில் “பில், பில்” என்றார். சாப்பிடாத குலோப்ஜாமூனுக்கு காசு அழுதுவிட்டு

ஹோட்டலைவிட்டு வெளியே வந்தார்.

பாயாசத்தில் விழுந்த அப்பளம் மாதிரி தொய்ந்துபோனார் குப்புசாமி.

வீட்டையடைந்ததும் அவர் மகள் “நான் செய்த ஸ்வீட் எப்படியிருக்குன்னு டேஸ்ட் பண்ணி பாருங்கப்பா” என்று ஒரு எவர்சில்வர் கிண்ணத்தை ஸ்பூனுடன் வைக்க, குப்புசாமி ஆவலுடன் எட்டிப் பார்த்தார்.

உள்ளே இரண்டு குலோப்ஜாமூன்கள் ஜீராவில் மிதந்தன.

குப்புசாமி முதல் காரியமாக அந்த ஸ்பூனை எடுத்து அருகேயிருந்த வாஷ்பேசினில் எறிந்தார்.

பிறகு ஒரு உத்வேகத்துடன் கட்டைவிரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் மூன்றையும் கின்னத்தினுள் விட்டு, இரண்டு ஜாமூன்களையும் ரசித்துச் சாப்பிட்டவுடன் கிண்ணத்தில் மிச்சமிருந்த ஜீராவை சொர் என்ற சத்தத்துடன் உறிஞ்சிவிட்டு ஹா ஹா என்று தொடர்ந்து பெரிதாகச் சிரிக்க அவரது மகள் ஒன்றும் புரியாமல் விழித்தாள்.

அப்போது அங்கு வந்து சேர்ந்த குப்புசாமியின் மாப்பிள்ளை அப்புசாமி, மாமனாரிடம் விவரம் கேட்க – குப்புசாமி அன்று நடந்த சம்பவங்களை ஒன்றும் விடாது சொல்ல – மூவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *