குட்டிக்கதை மன்னன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 27, 2012
பார்வையிட்டோர்: 7,776 
 
 

குட்டிக் கதை மன்னன் அங்கமுத்துவை நேரில் சந்தித்தபோது ஆச்சர்யமாக இருந்தது. நிச்சயமாக 60 வயதுக்கு மேல்தான் அங்கமுத்து என்பவர் இருப்பார் என்று நினைத்தேன். விலாசத்தைக்கொண்டு அங்கமுத்துவின் வீட்டைத் தேடிச் சென்றபோது, ”பள்ளிக்கூடம் விட்டு வர்ற நேரம்தான். அப்படி நாற்காலியில் உட்காருங்க” என்று அவனது தாயார் சொன்னார். அங்கமுத்து 5-ம் வகுப்பு மாணவன் என்பதே என் ஆச்சர்யம்.

ஒரே நேரத்தில் ஆயிரம் கதைகள் சொல்லக்கூடிய 12 வயதுகூட நிரம்பாத சிறுவனைச் சந்திக்கப்போகிற ஆவலும், ஆயிரம் கதைகள் எப்படி இருக்கும்என்ற உற்சாகமும் எனக்குள். திண்ணையிலிருந்து எழுந்து வீட்டை எட்டிப்பார்த்தேன். ”சும்மா உள்ளே வாங்க” என்று ஒரு பெண் குரல் கேட்டது. உள்ளே போவதற்குத் தயக்கம். மெள்ள நடந்தேன். முன்அறை இருட்டாக இருந்தது. ஏதோ நாட்டு மருந்தின் வாசனை. அந்த இடத்திலிருந்து வீட்டின் பின் பகுதியைப் பார்க்க முடிந்தது. தென்னை மரங்கள் இருப்பது போன்ற சத்தம்.

பள்ளிக்கூடம் முடிந்து அங்கமுத்து வந்தான். பள்ளிச் சீருடையில் அவனைப் பார்த்ததும், முதலில் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் சொன்னேன். அவன் பாராட்டுகளைக் கேட்டுக் கேட்டுச் சலிப்படைந்திருப்பான் போல. அலட்சியமாகக் கேட்டுவிட்டு, அடுத்தது என்ன என்பது போல பார்த்தான்.

எனக்குச் சூடாக தேநீரும் அவனுக்கு ஏதோ ஜூஸும் தந்தார்கள். அங்கமுத்து வேண்டாவெறுப்பாக அதைக் குடித்து முடித்தான். அவன் கண்களைத் தற்செயலாகப் பார்த்தேன். வெளிவாசலையும் வீட்டின் பின் பகுதியையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே இருந்தான். வெளியே பால் ஐஸ், கப் ஐஸ், சேமியா ஐஸ் என்று மணி அடித்துக்கொண்டே ஐஸ் விற்கிற சத்தம் கேட்டது. உடனே என்னருகில் வந்தவன், ”சார் சார், சேமியா ஐஸ் வேணும் சார்” என்றான். சரி என்று சொல்லி வாசலுக்கு நடந்தேன். அங்கமுத்து என் கையைப் பிடித்துக்கொண்டு, ரகசியமாக ஐஸை வாங்கி ஒளித்துவைத்துக்கொண்டு வீட்டின் பின் பகுதிக்கு வந்துவிட வேண்டுமெனச் சொன்னான்.

ஐஸை வாங்கிக்கொண்டு வீட்டின் பின் பகுதிக்குச் சென்றேன். நான்கு தென்னை மரங்களும் ஒரு பெரிய வேப்பமரமும் இருந்தது. அந்த இடமே பார்ப்பதற்கு அழகாக இருந்தது. வேம்புக்குப் பின் பக்கம் ஒரு மரவீடு இருந்தது. அங்கமுத்து மரத்துக்குப் பின்னால் ஒளிந்து நின்றிருந்தது தெரிந்தது. என்னை அழைத்தான். சேமியா ஐஸ்தானே என்று வெடுக்கெனப் பிடுங்கிக்கொண்டான்.

தான் ஐஸ் சாப்பிடுவதை யாரும் பார்த்துவிடக் கூடாது என்ற பயத்துடனே அவசர அவசரமாகச் சாப்பிட்டான். அந்தப் பயத்திலும் ஒழுகக் கூடாது என்றும் சட்டையில் எங்காவது பட்டுவிடக் கூடாது என்றும் எச்சரிக்கையாக இருந்தான்.

”உனக்கு கதை எல்லாம் யாரு சொல்லிக்கொடுத்தது?” என்று கேட்டேன். ”எனக்கு எல்லாக் கதையும் தெரி யும்” என்றான் அங்கமுத்து அலட்சியமாக.

”ஸ்கூலில் உன்னோட படிக்கிற பசங்களுக்கு நீ சொல்ற கதைகள் பிடிக்குமா?”

”என்னோட ஃப்ரெண்ட்ஸ் என்னை உட்காரவெச்சுக் கதை கேட்பாங்க. சொல்வேன். கதை சொல்லிக்கிட்டே இரும்பாங்க. சொல்லிக்கிட்டே இருப்பேன். அப்புறம் எழுந்திருச்சு விளையாடப் போயிருவாங்க. அவங்ககூட விளையாடப் போனா சேர்த்துக்க மாட்டாங்க. ‘நீ எங்ககூட விளையாடக் கூடாது. சும்மா மரத்துக்குக் கீழே உட்கார்ந்திரு. நாங்க விளையாடி முடிச்சுட்டு வந்ததும், கதை சொல்லு’ன்னு சொல்லி விளையாட்டில் சேர்த்துக்க மாட்டாங்க” என்றான்.

”உனக்கு என்னன்ன விளையாட்டு தெரியும்?”

”எனக்கு எல்லா விளையாட்டும் தெரியும் சார். ஐஸ் ஒன், காவியம் மணிக் காவியம், கிட்டிப்பிள்ளை, சாப்பா கல்லுன்னு எல்லாம் தெரியும். ஆனா, அம்மாவும் அப்பாவும் விளையாடக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க” என்றவன், தோட்டத்தில் மறைத்துவைத்திருந்த தீப்பெட்டி அட்டைகளை எடுத்துக் காட்டினான். யாருக்கும் தெரியாமல் எல்லோரும் தூங்குகிற மதிய நேரம் தான் மட்டும் தனியாக விளையாடுவதாகச் சொன்னான். எனக்குப் பரிதாபமாக இருந்தது. அவனது வருத்தத்தைச் சற்று மாற்றம் செய்வது மாதிரி ”ஏதாவது கதை சொல்லேன்?” என்றேன்.

”எத்தனாவது கதை சொல்லட்டும்? இல்லே, முதல் கதையிலேர்ந்து சொல் லவா?” என்று கேட்டான். எனக்கு எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. மனதில் 517 என்ற எண் தோன்றியது. நம்பரைச் சொன்னேன். அவன் கதையைச் சொன்னான்.

”ஒரு கிளி பறந்து வந்தது. கொய்யா மரத்தின் மேல் அமர்ந்தது. கொய்யாப் பழங்களைச் சாப்பிட வேண்டுமென ஒரு பழத்தைக் கொத்தியது. அந்த கொய்யாப் பழம் சொன்னது. ‘கிளியே, நாளைக்குத் தான் என்னை சாப்பிடக்கூடிய தினம். இன்னிக்கு எனக்கு முன்னால் பிறந்த, எனது அண்ணனை நீ சாப்பிடணும். அவன் ரொம்பக் கனிஞ்சுட்டான்’ என்றது. கிளியும் சரி என்று பக்கத்திலிருந்த கொய்யாப் பழத்தைக் கொத்திச் சாப்பிட்டுவிட்டுப் பறந்து போய்விட்டது.”

கதை முடிந்துவிட்டது. அவனையே பார்த்துக்கொண்டு நின்றேன். ஒரு நிமிடம் என்னையே மறந்துவிட்டேன். ஆயிரம் கதைகளை உடனே கேட்கும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது.

அங்கமுத்துவிடம், ”ஆயிரம் கதைகளையும் சொல்” என்றேன். அவன் தன் தாத்தாவைப் பார்த்துவிட்டுப் பிறகு சொல்வதாக, தாத்தா இருக்கும் மரவீட்டுக்கு அழைத்துச் சென்றான். அவனது தாத் தாவுக்காக தனியாகக் கட்டப்பட்ட மர வீடு அது. ஜன்னல்கள் இல்லாத அந்த அறையில் கட்டிலில் படுத்திருந்தார்.அங்கமுத்துவின் அப்பாவின் அப்பா அவர். அவரது பெயரும் அங்கமுத்துதான்.

தனது பேரனையும் என்னையும் அருகில் உட்காரச் சொன்னார். அவரது முகம் பசுமை இழந்த ஆலம் இலையைப் போல இருந்தது. ”எந்த ஊருலேருந்து வர்றீங்க?” என்று என்னிடம் கேட்டார். நான் என் ஊர் பெயரைச் சொன்னேன். அவர் உடனே ”ஊரே ஏலக்காய் வாசனை அடிக்கும்” என்றார். தாத்தா படுத்திருந்த கட்டிலின் மேல் ஏறி நடக்கத் தொடங் கினான் அங்கமுத்து. கீழே குதிப்பதும் பிறகு கட்டிலில் ஏறி நடப்பதுமாக இருந்தான்.

”கதையெல்லாம் நல்லா சொல்றானா?” என்று அவ னது தாத்தா என்னிடம் கேட்டார். ”ஒரு கதை மட்டும் தான் கேட்டேன். நல்லா இருக்கு. எல்லாக் கதைகளை யும் கேட்டுட்டுத்தான் போவேன்” என்றேன்.
”அவனா திடீர்னு கதை கதையாச் சொல்றான். எப்படின்னே தெரியலே. நானும் சின்னப் பிள்ளையில் அவனை மாதிரி கதையாச் சொல்லிட்டு இருப்பேன். வயசாக, வயசாக அந்தக் கதையெல்லாம் மறந்துபோச்சு. கதையால எங்கப்பாகூட பேசறதையே விட்டுட்டேன். ஏன்னே தெரியல?” என்றவர் கொஞ்ச நேரம் அமைதி யாக இருந்துவிட்டு, தனது பேரனிடம் ”போடா… தம்பிக்குக் கதை சொல்லு” என்றார். நாங்கள் இரு வரும் மரவீட்டைவிட்டு வெளியே வந்தோம். வீட்டின் வாசலில் உட்கார்ந்தோம்.
”சார்… தீப்பெட்டி அட்டையைவெச்சு விளையாட லாமா சார்?” என்று கேட்டான்.

”அப்புறமா விளையாடலாம். இப்ப ஒரு கதை சொல்லு” என்றேன். உடனே டக்கென்று பட்டனைத் தட்டிவிட்ட ரேடியோ பாடுவது போல், ஒரு கதை சொன்னான்.

”ஒரு கொய்யாக் காய் காற்றில் உதிர்ந்து, விழுந்து விட்டது. விழுந்த காய் உருண்டுகொண்டே மரத்தில் ஏறி, தான் இருந்த இடத்துக்குப் போனது. அந்தக் காய் இருந்த இடத்தில் அப்பத்தான் ஒரு பூ பூத்திருந்தது. அந்தக் காய், தன் அம்மா மரத்திடம் தான் என்ன செய்வது என்று கேட்க வேண்டுமெனக் கீழே மீண்டும் உருண்டுவிழுந்தது.” கதை முடிந்துவிட்டது. கதை அவன் சொல்லி நிறுத்திய இடத்திலிருந்துதான் தொடங்கும் என்று நினைத்தேன். ஆனால், சடக்கென்று கதையை முடித்துவிட்டான். ”சரி, இன்னொரு கதையைச் சொல்லு” என்றேன். ”எங்க அப்பா வந்துட் டாரு. அவரு இருக்குறப்ப கதை சொல்லக் கூடாது. சொன்னா, வீட்ல பெரிய சண்டை வரும். அப்புறம் சாயந்தரமானா, பணியாரம் வாங்கித் தர மாட்டாரு. அப்பா போவட்டும் சார். அப்புறமா சொல்றேன்” என்றான்.

எனக்கு அங்கமுத்துவின் அப்பாவைப் பார்த்து பேச வேண்டுமெனத் தோன்றியது. ‘குட்டிக் கதை மன்னன்’ என்று சமீபத்தில் கலெக்டரிடம் பரிசும் பாராட்டும் பெற்ற போட்டோ வீட்டில் தொங்கிக் கொண்டு இருந்தது. நாட்டு மருந்து வீசும் அறையிலிருந்து அங்கமுத்துவின் அப்பா வந்தார். அவராகவே தன்னுடைய பெயர் முத்துராமன் என்று அறிமுகம் செய்துகொண்டார்.

அவர் தான் கொண்டுவந்த பொட்டலத்தைப் பிரித்து அங்கமுத்துவுக்குத் தந்தார். அங்கமுத்து சூடாக இருந்த பணியாரங்களை வாயில் ஊதி ஊதித் தின்னத் தொடங்கினான். பணியாரத்தின் வாசனை அவன்அறை யைவிட்டுப் போகும் வரை இருந்தது.

முத்துராமன் இருந்த அறை முழுக்க நாட்டு வைத்தியப் புத்தகங்களும் மருந்து பாட்டில்களும் நிறைந்து இருந்தன. அந்த வீட்டுக்கும், அவர் இருந்த அறைக்கும் சம்பந்தமே இல்லை. ”நீங்க என்ன வேலை செய்றீங்க சார்?” என்று அவரிடம் கேட்டேன். பதில் ஒன்றுமே சொல்லவில்லை. அவர் அமர்ந்திருந்த நாற்காலிக்கு எதிரே உட்காரச் சொன்னார்.

” எங்கப்பா நாட்டு வைத்தியர். மஞ்சள் காமாலைக்கும் பூச்சிக்கடிக்கும் மருந்து தருவாரு. அவர் இருந்த ரூம்தான் இது. நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிறதே இல்லை சார். முப்பது வருஷம் ஆச்சு. அப்படியே எல்லாம் போயிட்டு இருக்கு. பரம்பரை வியாதி மாதிரி சார். எங்க அப்பா அவங்க அப்பாகிட்டே பேச மாட்டார்னு எங்க அம்மா சொல்லியிருக்கு. இப்பப் பாருங்க, என் பையனை ஒரு நாளைக்கு ரெண்டு நிமிஷம் மட்டும்தான் நேராப் பார்க்க முடியுது. பணியாரத்தை வாங்கிட்டு உடனே போயிடுறான். லீவு நாள்லகூட என்கூட பேசுறதில்ல.”

எனக்கு சங்கடமாகப் போய்விட்டது. குட்டிக் கதை மன்னன் என்று மாவட்ட ஆட்சியரிடம் பரிசு பெற்ற நபரைப் பற்றி செய்தி சேகரிப்புக் காக வந்த இடத்தில், ஒருவருடைய குடும்ப விஷயத்தைக் கேட்பது அவ்வளவு நன்றாக இருக்காது என்று பேச்சை மாற்றினேன்.

”சார், ஆயிரம் கதைகள் சொல்ல எப்படி உங்க பையன் கத்துக்கிட் டான்? நீங்க அந்த கதையை எல்லாம் கேட்டிருக்கீங்களா?” என்று அவரிடம் கேட்டேன்.

”அந்த கதைகள் எல்லாம் எங்க குடும்பத்துல இருக்கிறவங்க பரம் பரை வழியா வர்றது சார். எப்படி இவ்வளவு கதைகளும் தெரியும்னு கேட்டா, பதில் சொல்லத் தெரியாது. இதை நீங்க நம்ப மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும் சார்” என்றார்.

”அங்கமுத்து எப்படி இவ்வளவு சின்ன வயசுல அவ்வளவு கதை களையும் ஞாபகம்வெச்சு கரெக்ட்டா சொல்றான்?”

”பூவழகி கதையைச் சொன்னானா?” என்று கேட்டார்.

”இல்லையே.”

”பூவழகி என்ற கொய்யா மரத்திலிருந்து காய் ஒன்று உதிர்ந்துவிட்டது. காற்று காலம். உதிர்ந்த காய், ‘தான் இன்னமும் அம்மரத்தில் வளர்ந்து கொண்டு இருக்க வேண்டுமென்றும், தவறுதலாக காற்றில் உதிர்ந்துவிழுந்து விட்டோம். இப்போது அந்த இடத் தில் ஒரு பூ பூத்துவிட்டது. தான் இனி எந்த இடத்தில் வாழ முடியும்’ என அழுதபடியே தனது தாய் பூவழகியிடம் கேட்க வேண்டித் திரும்பவும் கீழே இறங்கியது. பூவழகியிடம், ‘என்னை காற்று உதிர்த்துவிட்டது நீ ஏன் பார்த்துக்கொண்டு இருந்தாய், நான் இன்னமும் உன்னுடன் வாழ வேண்டிய காலம் உள்ளதே. இப்படிச் செய்துவிட்டாயே’ என தரையில் புரண்டு அழுதது. பூவழகி தன் பிள்ளையைப் பார்த்து, ‘நீ என்னுடன் வாழ்கிற காலம் முடிந்து விட்டது. மண்ணில் புதைவதே உத்தமம். உன்னை யாரும் தின்ன மாட்டார்கள். மண்ணில் புதைந்து என் அருகிலேயே இருப்பாய்’ என்று கூறியது.”

முத்துராமன் இந்தக் கதையை கூறியதும் அங்கமுத்து இதே கதையை வேறு மாதிரி சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. நான் அவரிடம் அதைச் சொல்லவில்லை. அவர் தனது மர பீரோவிலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து என்னிடம் காண்பித்தார்.

அவருக்கு சிறு வயதில் ‘குட்டிக் கதை மன்னன்’ என்று பரிசு தந்த போது எடுத்த படம். நான் பார்த்து விட்டு திரும்பத் தந்ததும், அந்தப் படத்தைத் துடைத்துக்கொண்டே இருந்தார். ”வயசாக, வயசாக ஒவ்வொரு கதையா மறந்துட்டு வருது. இப்போ நான் சொன்ன கதையைத் தவிர வேறு எந்தக் கதையும் ஞாபகத்திலே இல்லை” என்றார்.

எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. விடைபெற்றுக் கொண்டு கிளம்பியபோது என் கைகளைப் பிடித்துக்கொண்டு, ”என் பையன் என்கூட கடைசி வரை பேசாமலே இருந்திடுவானோன்னு பயமா இருக்கு சார்!” என்றார்.

நான் அவர் முகத்தைப் பார்க்கவே இல்லை. தலையைக் குனிந்து கொண்டே வந்துவிட்டேன்!

‘சரி, இன்னொரு கதையைச் சொல்லு” என்றேன். ”எங்க அப்பா வந்துட்டாரு. அவரு இருக்குறப்ப கதை சொல்லக் கூடாது. சொன்னா, வீட்ல பெரிய சண்டை வரும். அப்புறம் சாயந்தரமானா, பணியாரம் வாங்கித் தர மாட்டாரு!”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *