கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 6, 2021
பார்வையிட்டோர்: 2,687 
 

‘போதைதான் தைரியம் !’ என்று தீர்மானித்துக் கொண்டு டாஸ்மாக் கடைக்கு வந்தான் குமரேசன்.

பையில் பணம் எடுத்து ஒரு முழு பாட்டிலை வாங்கினான். அப்படியே அருகில் உள்ள சால்னா கடைக்குச் சென்று… ஊறுகாய், தேக்க இலையில் ஒரு முட்டை தோசையும் குடல் கறியும் வாங்கிக் கொண்டு எதிரில் உள்ள மரத்தடிக்கு வந்து எல்லாவற்றையும் எதிரில் பரப்பி அமர்ந்தான்.

‘மூச்சு முட்டக் குடித்துவிட்டு இன்றைக்கு இதற்கு முழுக்கு . இதுதான் கடைசி !’ மனசுக்குள் சொல்லி பாட்டிலைத் திறந்தான்.

இடுப்பில் சொருகி சட்டையை விட்டு மறைத்திருந்த வீச்சரிவாள் உடம்பை உறுத்தியது.

பாட்டிலை வாயில் வைத்து சாய்த்து மிடறு விழுங்கியவன் தலையைச் சிலுப்பி உறுகாயைத் தொட்டுக் கொண்டான்.

சாராயத்திற்கு அது ஆதரவாக இருந்தது. அடுத்து அதற்கு இணை சேர்க்கும் வகையில் முட்ட தோசையில் கொஞ்சம் விண்டு குடல் கறியையும் சேர்த்து சாப்பிட்டான்.

அருமையாக இருந்தது.

மறுபடியும் மிடறு விழுங்கி…. விழுங்கி….முக்கால் அளவு பாட்டில் உள்ளே இறங்கிய பிறகுதான் கண்களைப் போதை மறைக்க ஆரம்பித்தது.

தலை கொஞ்சம் கிறுகிறுத்தது.

ஆறு மாதங்களுக்கு முன்பு….. இவன் மனைவி வசந்தி வீட்டில் குத்துக் காலிட்டு கோபமாக அமர்ந்திருந்தாள்.

இவன் எப்போதும் போல் போதையுடன் வீட்டு வாசலில் நுழைந்தான்.

“இந்தா! அப்படியே வெளியில போயிடு !” அவன் அங்கிருந்தபடியே கத்தினாள்.

குமரேசன் ஒன்றும் புரியாமல் சுற்றும் முற்றும் பார்த்தான்.

“இந்தா ! உன்னைத்தான் !” அவள் ஆத்திரத்துடன் அவனைச் சொன்னாள்.

“எ…. என்னை… என்னையா சொன்னே..?” தடுமாற்றத்திலும் அவனுக்கு அதிர்ச்சி. அதிர்ந்தான்.

“ஆமாம் !!” அவள் ஆணித்தரமாகச் சொன்னாள்.

ஆணான இவனுக்கு எப்படிப் பொறுக்கும்…?

“அடி.. முண்ட..!” கத்தி ஆவேசமாக அவளை நோக்கி நகர்ந்தான்.

“இதோ பாரு கிட்ட வராதே. அப்புறம் நான் கொலைக்காரியாய் மாறிடுவேன் !” வசந்தி பயப்படாமல் நேரடியாய் நிமிர்ந்து பார்த்து எச்சரித்தாள்.

எதிரி மிரண்டால்தான் விரட்டுகிறவனுக்கு இளக்காரம். மிரளாமல் துணிந்து எதிர்த்தால்…விரட்டுகிறவனுக்கு அச்சம். !

இந்த அச்சம் குமரேசனுக்குள்ளும் வந்தது.

“எதுக்கு என்னைக் கொலை செய்வே…?” நின்றான்.

“குடிச்சி குடிச்சி குடும்பத்தையேக் கெடுத்தால் கொலை செய்யாமல் கொஞ்சவா செய்வாங்க…?’ ‘

என்ன பதில் சொல்ல..? நின்றான்.

வசந்தி விடவில்லை.

“இப்போ குடிச்சிட்டு வந்து நிக்கிறதுக்கு ஏது காசு..?” காட்டமாகக் காட்டமாகக் கேட்டு கொண்டையை அள்ளி முடிந்து கொண்டு எழுந்தாள்.

“ம்ம்… கடன் வாங்கினேன். !” அவனும் அசராமல் சொன்னான்.

“யார்கிட்ட வாங்கினே..?’ ‘

“என் நண்பன்கிட்ட..”

“பொய் ! புது வீட்டுக்காரன்கிட்ட வாங்கி இருக்கே. !

ஐயோ..! ஐயோ..! நான் என்னத்தைச் சொல்வேன். நீ குடிச்சுட்டு வந்து அடிக்கிற கூத்து தாங்காமாத்தான் , இந்த வீட்டுக்காரன் இந்த மாசமே கால் பண்ணுன்னு உத்தரவு போட்டான்.

கையில் மடியில பணமில்லே. சொன்ன சொல் காப்பாத்தலேன்னா அசிங்கம்ன்னு நினைச்சு கோடி வீட்டு குப்பையிக்கிட்டே போய் கதறி அழுது தவணைக்குப் பணம் வாங்கி வீடு பார்த்து முன் பணம் கொடுத்தேன்.

பாவி ! நாங்க இங்கே குடி வரலை. அங்கேயே இருக்கப் போறோம். பணத்தைக் கொடுங்கன்னு வாங்கி இப்படி குடிச்சிட்டு வந்து நிக்கிறீயே.. நீ மனுசனா..???

நாளைக்கு இந்த வீட்டை விட்டு வெளிக் கிளம்பி எங்கே நிற்பேன். புளிய மரத்தடியில் பொங்கித் திங்க முடியுமா..? வயசுக்கு வந்து பொண்ணு இருக்கா. பொண்டாட்டி புள்ளைங்களையெல்லாம் நினைச்சுப் பார்க்காம அப்படி என்னய்யா குடியில இருக்கு..? இப்படி செய்ஞ்சுட்டு வந்து நிக்கற உன்னை கொலை செய்தா என்ன தப்பு..?” –

ஆத்திரம் ஆவேசமாகப் பேசினாலும்…. பாவம் வசந்தி பெண் ஜென்மம். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத நிலை. சுவரில் சரிந்து கவிழ்ந்து விம்மினாள்.

குமரேசனுக்கு மனசுக்குக் கஷ்டமாக இருந்தாலும் யோசிக்க அவகாசமில்லை. போய் படுக்கையில் விழுந்தான்.

மயக்கத்தில் கண்ணயர்ந்தான்.

எவ்வளவு நேரம் தூங்கினானோ இவனுக்குத் தெரியாது.

கண் விழித்துப் பார்த்தபோது வீட்டில் இவன் மட்டுமே இருந்தான்.

ஒரு நாதி இல்லை. ஒரு சாமான் சாட்டுகளில்லாமல் வீடு சுத்தமாகத் துடைக்கப் பட்டிருந்தது.

தன்னை கூட எழுப்பாமல் வீட்டைக் காலி செய்து விட்டு மனைவி, மக்கல் எங்கே போனார்கள்..? துடித்துப் பிடித்து எழுந்தான்.

அக்கம் பக்கம் தேடினான்.

வீதியில் ஓடினான்.

குப்புசாமி வீட்டு வாசலில் தட்டு வண்டி நின்றது. இவன் மனைவி, பெண் பிள்ளைகள் எல்லோரும் அதிலிருந்து சாமான்களை இறக்கிக் கொண்டு கொல்லப் பக்கம் சென்று வந்தார்கள்.

வீட்டுக் குறட்டில் ஊர் பெரிய மனிதர் குப்புசாமி வெள்ளை வெட்டி, சட்டையில் அவ்ர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“வசந்தி !” குமரேசன் கூவி ஓடினான்.

“நில்லுடா அங்கே..!” குப்புசாமி எழுந்து நின்று அதட்டினார்.

இவன் சட்டென்று நின்றான்.

“ஐயா..! என் பொண்டாட்டி புள்ளைங்க…”தடுமாறினான்.

“அப்படின்னு சொல்லி இந்தப் பக்கம் தலை வைச்சு படுக்கக் கூடாது.!” அவர் வாயிலிருந்து வார்த்தைகள் கறாராக வெளி வந்தது.

“இந்த நிமிடத்திலிருந்து இந்த வசந்தி, அவ புள்ளைங்க உன்னுது இல்லே என்னுது. அடைக்கலம். இப்போதான்…. தான் நிராதரவாய் நிக்கிற உன் யோக்கியதைச் சொல்லி வசந்தி வந்து அழுதாள். கவலைப்படாதே ! கொல்லை வீட்டுல குடி இரு. என் வீட்டுல, வயல்ல வேலை செய்ன்னு சொல்லி கொண்டு வந்திருக்கேன்.

குடும்பத்தை நினைக்காம குடிச்சு குடிச்சுப் பாழாப்போன நீ அந்த குடியோடேயே தனியா இருந்து குடும்பம் நடத்து. மறந்தும் உன் பொண்டாட்டி புள்ளைங்கன்னு இங்கே வந்து நிக்கக் கூடாது. அப்படியே வந்தாலும் நீ இந்த குடியை விட்டு வரணும். அப்போதான் உனக்கு மன்னிப்பு, மாப்பு கொடுத்து உன் குடும்பத்தை விடுவேன். அதுக்கும் ஆறு மாசம்தான் காலம் கெடு. தவறி மீண்டும் நீ குடியைத் தொட்டால் வசந்தி உன்னோட வாழமாட்டாள். விவாகரத்து வரும் !” நெற்றியடி அடி அடித்து அமர்ந்தார்.

துவண்டு வந்தான்.

எங்கும் இருக்க இடமில்லாமல் கையில் இருக்கும் காசை வைத்துக் கொண்டு இஷ்டத்திற்கு குடித்தான். எத்தனைக் காலத்திற்குத்தான் இஷ்டத்திற்குக் குடித்துவிட்டு அங்கு இங்கு புரள முடியும்..?

அதற்கு முடிவு கட்டத்தான் இதோ வீச்சரிவாள், குடி, முடிவு…எல்லாம்.

இவன் மனைவி மக்களை வெட்டி சாய்க்கப் போகின்றானா…? மனம் திருந்தி வாழப் போகின்றானா…? இல்லை போதையிலேயே பாடையில் போகப் போகின்றானா….?

யாருக்குத் தெரியும்…? !

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *