கிராம வாழ்க்கையில் இப்படியும் இருக்கும்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 12, 2018
பார்வையிட்டோர்: 6,031 
 
 

அன்று என் கிராமத்துக்கு வந்திருந்தேன்.நல்ல வெயிலில், பஸ் கிடைக்காமல் நடந்து வந்ததில் களைப்பாய் இருந்தது.வந்தவுடன் அம்மா கொடுத்த ஒரு சொம்பு குளிர்ந்த தண்ணீரை குடித்தவுடன் உடம்பு கொஞ்சம் குளிர்வது போல் இருந்தது. வெயிலில் வந்தவுடன் உடனே தண்ணீரை அப்படி குடிக்க கூடாது என்று அடிக்கடி மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் வைத்தியன் நான். ஆனால் அனுபவப்படும்போது அதுவெல்லாம் ஞாபகத்துக்கு வருவதில்லை. அதுவும் மனோதத்துவ வைத்தியர் நான், எனது வைத்தியத்தில் பேச்சுதான் முக்கியம். நோயாளியின் கவலைகளிலிருந்து அனைத்தையும் பேச்சின் மூலம் சா¢ செய்ய வேண்டும். அடுத்தது தான் மருந்துக்கு செல்வோம்.

அம்மாவையும், அப்பாவையும் பேசாமல் டவுனுக்கு வரச்சொல்லி எவ்வளவு சொல்லியும் வரமாட்டேனெங்கிறார்கள்.அவர்களுக்கு இந்த கிராமம் அதை சுற்றி வயல் வெளிகள், தோட்டம், இவைகள்தான் முக்கியம்.இதற்கும், ஆசிரியராய் இங்கிருந்து தினமும் டவுனுக்கு சென்று அரசு பள்ளியில் பணி புரிந்து ஓய்வு பெற்று ஆறு வருடங்கள் ஆகிறது.இப்பொழுது அவருக்கு என்று இரண்டு ஏக்கரா தோட்டம் இருக்கிறது. அதில் விவசாயம் செய்து பொழுது போக்குகிறார்.

அம்மா காலை எழுந்து வீட்டு வேலைகளை முடித்து விட்டு அப்படியே ஒரு ரவுண்டு ஊரை சுற்றி வந்து அந்த ஊர் பெண்களுக்கு அரசாங்கம் சம்பந்தபட்ட விசய்ங்களை ஒளி(ஒலி)பரப்புவாள். நான் கூட அம்மாவை கிண்டல் செய்வதுண்டு, அம்மா இந்த ஊருக்கு நீதான் தொலைக்காட்சி, ரேடியோ எல்லாமும் என்பேன். அம்மா ஒரு புன் சிரிப்புடன் அப்படியே இருக்கட்டுமே என்பாள்.

அது மட்டுமல்ல அங்குள்ள பெண்களுக்கு குடும்ப பிரச்சினை என்றாலும் எங்கள் வீடுதான் ஒப்பாரி வைக்கவும், கண்டபடி பேசவும், சில நேரங்களில் எனக்கு கோபம் கோபமாக வரும். இன்னும் என் ஊர் மக்கள் இப்படி இருக்கிறார்களே என்று.என்ன செய்வது? நல்ல வேலை நான் பத்தாவதுக்கு மேல் வெளியூரிலே படித்து வைத்தியராவது வரை விடுமுறைக்கு மட்டுமே ஊர் வந்து செல்வேன். அதனால் இந்த தொந்தரவுகளிலிருந்து தப்பித்து விட்டதாக கருதினேன்.

அப்பா அதிகம் பேச மாட்டார், பெண்கள் சில நேரங்களில் தலைவிரி கோலமாக வருவார்கள், அப்பா அதிர்ச்சியோ, ஆச்சர்யமோ படவேமாட்டார். அம்மாவை சத்தம் போட்டு கூப்பிடுவார், அதன் பின் வெளியே வந்து வாசலில் உள்ள செருப்பை போட்டுக்கொண்டு வெளியேறி விடுவார்.இல்லாவிட்டால் தாழ்வாரத்தில் ஒரு நாற்காலி போட்டிருக்கும் அதில் போய் உட்கார்ந்து கொள்வார்.ஒரு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் ஆகியிருக்கும், உள்ளே தலை விரிகோலமாய் போன பெண் தலை முடி இறுக்கி கட்டி வெளியே வந்து வாத்தியாரய்யா போயிட்டு வாரேனுங்க !, என்று கையெடுத்து கும்பிட்டு விட்டு போவாள்.

எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.? என்ன பெண் இவள் போகும்போது எப்படி போனாள்? இப்பொழுது இப்படி வருகிறாள். இந்த அப்பாவாவாது இந்த பெண்ணை உள்ளே விடாமல் அனுப்பி வைப்பதற்கென்ன? இது என்ன வீடா? இல்லை வேறு ஏதாவதா? முணு முணுத்துக்கொள்வேன்.

மறு நாள் இதை விட ஆச்சர்யமாக இருந்த்து, அந்த பெண்ணின் கணவன் அப்பாவிடம் எதோ பவ்யமாக சொல்லிக்கொண்டிருந்தான். போகும்போது அவர் கையை பிடித்து ரொம்ப நன்றிங்க ஐயா ! என்று சொல்லி சென்றான்.நான் விடுமுறைக்கு வரும்போதெல்லாம் இந்த மாதிரி காட்சிகளை பார்த்து பார்த்து, ஒரு வித சலிப்பு வந்து விட்டது. இந்த ஊரை விட்டு போனால் போதும் என்றிருக்கும். இவர்களாவது சலிப்பு ஏற்பட்டு என்னோடு வந்து விட்டால்

நான் இந்த ஊருக்கு வரவேண்டிய அவசியமே ஏற்படாது.ம்ம்..சொன்னால் கேட்பார்களா? மனதுக்குள் அலுத்துக்கொள்வேன்.

இரவு பனிரெண்டு மணி இருக்கும் கதவு தட தட வென யாரோ தட்டும் சத்தம் கேட்டது. வெயிலில் வந்த களைப்பு,இரவில நல்ல தூக்கத்தில் இருந்த என்னை கதவை தட்டும் சத்தம் திடுக்கிட்டு விழிக்கச்செய்தது. அறையை விட்டு வெளியே வந்த பொழுது வெளிக்கதவு திறந்து இருக்க அப்பா, அம்மாவுடன் வெளியே யாருடன் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. யாரென வெளியே எட்டிப்பார்க்க ஒரு பெண் கையில் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தாள்

இந்நேரத்துக்கு இதென்ன பிரச்சினை, மெல்லிய கோபம் எட்டி பார்க்க,க்கும்..என்று கணைத்தேன். சத்தம் கேட்டவுடன் அப்பாவும்,அம்மாவும்,திரும்பி பார்த்துவிட்டு நீ போய் படுத்து தூங்கு என்று சொல்லிவிட்டு மீண்டும் அந்த பெண்ணுடன் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

சரி இவர்கள் வீட்டுக்குள் வர எப்படியும் ஒரு மணி நேரத்துக்குள் ஆகி விடும், கொட்டாவி விட்டவாறு அறைக்கு சென்று படுத்தேன். இடையில் தூக்கம் கலைந்ததால் இனி தூக்கம் வர ஒரு மணி நேரமாகிவிடும.

அப்பா அம்மாவுக்கு அப்படி என்னதான் பிடிப்பு இந்த ஊரில்? பக்கத்து டவுனில்தான் இருக்கிறேன், வர மாட்டேனென்கிறார்களே?அப்படி வந்தால் கண்ட நேரத்தில் இந்த மாதிரி அரட்டை அடித்துக்கொண்டிருக்க முடியாது. சலிப்புடன் புரண்டு புரண்டு படுத்தவன் எப்படி உறங்கினேன் என தெரியவில்லை.மறு நாள் வெளியே வந்த பொழுது வெயில் கண்ணை கூசிற்று.

அப்பாவுடன் பஸ் ஏற கிளம்பி விட்டேன். அவர் எதுவும் பேசாமல் என் கூடவே நடந்து வந்தார். நான் பேச்சை வளர்த்த, அப்பா நீங்க பேசாம அம்மாவை கூட்டிட்டு எங்கூடவே வந்துடுங்கப்பா, எதுக்காக தனியா இங்க கஷ்டப்பட்டுட்டு இருக்கறீங்க.

நாங்க கஷ்டப்பறதா யார் உங்கிட்ட சொன்னா?

அதான் தெரியுதே, எப்ப பார்த்தாலும் யாரோ ஒருத்தர் வீட்டுக்கு தலைவிரி கோலமா வந்துடறாங்க, இல்லையின்னா வீட்டுக்குள்ள வந்து அழுதுகிட்டு நிக்கறாங்க,நீங்க அவங்களை உள்ளே வச்சு சமாதானம் பேசிக்கிட்டு இருக்கறீங்க, அம்மாவுக்கு ஊர் வம்பெல்லாம் எதுக்கு? பேசாம டவுனுக்கு வந்துடுங்க.நான் ஹாஸ்பிடல்ல இருந்து வேலை முடிஞ்சு வந்துட்டு தனியா கிளினிக் நடத்துலாமுன்னு இருக்கேன். நீங்களும் என்னோட இருந்தீங்கன்னா எனக்கும் செளகரயமா இருக்கும்.

அப்பா சிரித்தவாறு உனக்கு துணைக்கு எப்ப வேணா ஆள் ரெடி, நீ ம்..ந்னு சொன்னால் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுடுவோம். அம்மாவும் நானும் ரொம்ப கஷ்டப்பட்றோமுன்னு உனக்கு யார் சொன்னா? நாங்க நிம்மதியா இருக்கோம்.

சும்மா ஊர்க்காரங்க எதையாவது சொல்லிகிட்டு நம்ம வீட்டுல வந்து அழுகறது எனக்கு பிடிக்கலப்பா.

நீ என்ன தொழில் செய்யறே?

அப்பாவின் கேள்வி என்னை திகைக்க வைத்தது.

இது என்ன கேள்விப்பா? சைக்கியாட்டிரிக், இல்லே சைக்காலஜி டாக்டரா இருக்கேன்.

அப்படீன்னா?

அப்பாவின் கேள்வி மீண்டும் என்னை திகைக்கவைக்க, உங்களுக்கு புரியாதாப்பா?, இத்தனை நாளா ஆசிரியரா இருந்திருக்கறீங்க?

அதாவது மனுசங்களுக்கு வருகிற மன வியாதிய குணப்படுத்தறது, அப்படித்தானே?

ஆமாம் என்று சொல்லாமலும், இல்லை என்று சொல்லாமலும் அப்பாவின் முகத்தை பார்த்தேன்.

குணா நீ சொல்ற இந்த அறிவியல் பூர்வமான வைத்தியம் ரொம்ப நல்லது, ஆனா இதை ஓரளவு படிச்சவங்க மட்டுமே தெரிஞ்சு உங்கிட்ட தன்னை குணப்படுத்த வர்றாங்க.

ஆனா நம்ம ஊர்ல இருக்கறது தற்காலிகமான மன வியாதிப்பா, புரியலியா,

திடீருன்னு புருசன் பொண்டாட்டி சண்டை வந்துடும், அவன் அடிச்சுட்டான்னு வச்சுக்க,அவனை பதிலுக்கு அவளால அடிக்க முடியலியின்னா உடனே நேரா உங்கம்மா கிட்ட வருவா கொஞ்ச நேரம் அவனை கண்டபடி பேசுவா, அரை மணி நேரம் முடிஞ்சுதுன்னா அவளே ஓஞ்சு போயி கிளம்பிடுவா. அதுக்குள்ள அவ்ளுடைய கோபம் எல்லாம் வடிஞ்சிருக்கும். அதுக்குள்ள, அவ புருசனுக்கும் கோபம் தணிஞ்சு என் கிட்ட வந்து மன்னிப்பு கேட்டுட்டு அவளை கூட்டிட்டு போவான், இல்லையின்னா அவளே வீட்டுக்கு போவா.

இப்ப இவங்களுக்குள்ள நடக்கற சண்டைய உங்க டவுனுக்குள்ள எத்தனை பேரு கண்டுக்குவீங்க,இதனால என்ன ஆகும் தெரியுமா, ஏதாவது வன்முறையா மாறரதுக்கோ அல்லது ஏதாவது செஞ்சுக்கறதுக்கு கூட வாய்ப்பு இருக்கில்லையா?

இந்த ஊர்க்காரங்களுக்கும் தெரியும். அம்மா கிட்ட போனா நம்ம பிரச்சினை சரியாயிடும், அப்படீன்னு, அதனால கோபிச்சுட்டு வந்துட்ட பொமபளங்க உங்க அம்மாகிட்ட வந்துட்டா, சண்டை போட்ட ஆம்பளங்க ஓரளவுக்கு சமாதானமாயிடுவாங்க. இதை நான் ஏன் சொல்றேன்னா, மறு நாள் காலையில நான் வெளியே போகும்போது அவங்கவங்க புருச மாரு அம்மாவை எப்படி கும்பிடுவாங்க. சில பேரு திட்டவும் செய்வாங்க, ஆனா அந்த குடுமபம் பிரியாமா இருக்க முடியுதில்லையா. இப்ப இதுனால எங்களுக்கு என்ன கஷ்டம் வந்துடப்போகுது? அவங்க சொல்றதை கேக்கறோம், அவ்வளவுதான் அதேதான் நீயும் செய்யறே.

நான் இப்படி ஒரு பார்வை இந்த ஊர் மக்களிடம் பார்க்காததற்கு என்னையே திட்டிக்கொண்டேன்

Print Friendly, PDF & Email
பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க...

1 thought on “கிராம வாழ்க்கையில் இப்படியும் இருக்கும்

  1. அருமை வாழ்த்துக்கள் தங்கள் எழுத்துப்பணி தொடரட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *