கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 11,156 
 

காலையில் கண்விழித்தபோது மழை பெய்யும் சத்தம் கேட்டது. கதவை திறக்காமல் ஜன்னலை மட்டும் திறந்து பார்த்தேன். மழையில் தெரு குளித்திருந்தது இந்த மழை இரவே துவங்கியிருக்க வேண்டும். தூக்கத்தில் கவனிக்கவில்லை மழையுடன் சேர்ந்து வந்த காற்றின் வாசனையில் சற்று நேரம் லயித்தேன். இரவு தூக்கத்தில் கண்ட கனவு நினைவு

வந்தது. அந்த கனவிற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. ஆனால், கொஞ்ச நாளாகவே எனக்கு அந்தக் கனவு தொடர்ந்து வருகிறது. வெட்ட வெளி பொட்டல் காடு நட்ட நடுவே ஒரு வட்டக்கிணறு. அந்தக் கிணறு என்னை அழைப்பதை போலிருக்கிறது. நான் அதை நோக்கி செல்கிறேன். கிணற்றை நெருங்கும் போது கனவு கலைந்து விடுகிறது. ஒவ்வொரு முறையும் இப்படித்தான் நடக்கிறது.

என் கனவை பற்றி வீட்டில் சொன்னேன். “”இதெல்லாம் ஒன்றுமில்லை” என்றார்கள். நண்பர்களிடம் சொன்னேன். சிரித்தார்கள்.

கிணறுஎந்த அர்த்தமும் இல்லாத அந்த அமானுஷ்ய கனவை மறந்து விடத்தான் நினைத்தேன். முடியவில்லை, தொடர்ந்து வந்த இரவுகளிலும் கனவுகளில் அதே கிணறு.

வேறு வழியில்லாமல், என் கனவைப் பற்றி எனது வலைப்பூவில் எழுதினேன். கொஞ்ச நாள் கழித்து பார்த்தால், இரண்டு பேர் அதே கனவை தொடர்ந்து பார்ப்பதாக எழுதியிருந்தார்கள். நான் குழம்பிப் போனேன். தீர்வை தேடிப் போனால் பிரச்னை பெரிதாகிறதே என் கனவில் நான் பார்த்த அதே கிணறு, மற்றவர்களின் கனவிலும் வருமா?

கனவுகளின் பலனை சொல்பவரைப் பார்க்கும்படி ஒருவர் கூறினார். இது நல்ல ஐடியா என்று தோன்றியது. அப்படி யாராவது சென்னையில் இருக்கிறார்களா? என்று விசாரித்தேன். அது அவ்வளவு சுலபமான வேலையாக இருக்கவில்லை, இதில் கூட போலிகள் இருந்தனர். ஆனால் நிறையபேர் சிபாரிசு செய்த ஒரே பெயர் டயானா.

கனவுகளின் பலனைச் சொல்வதில் இன்று முதல் இடம். அவரைச் சந்திக்க நேரம் கிடைப்பதே கஷ்டம், ஆலோசனைக்கட்டணம் ஆயிரம் ரூபாய்.

“”சொல்லுங்க, உங்க கனவு என்ன?” நான் சொன்னேன்.

என் வலது கையை, தன் இடது கையால் தொட்டு பற்றிக் கொண்டார். என் கண்களைப் பார்த்தார். அந்த கண்கள் மீன்களாக மாறி என் கண்களுக்குள் நீந்துவதைப் போலிருந்தது

“”உங்க மனதில் இப்ப அந்த கனவை நினைத்துக் கொள்ளுங்கள்”

அப்படியே செய்தேன்.

கொஞ்ச நேரம் மெளனமாக இருந்த டயானா, மெல்ல புன்னகைத்தார்.

“”சிம்பிள் அந்த கிணறு உங்களிடம் எதையோ சொல்ல விருப்புகிறது”

“”எதை?”

“”அதை அந்த கிணற்றிடம் கேளுங்கள்”

“”அது?”

“”அதை நீங்கள் தான் தேட வேண்டும்”

“”ஆனால் இதே கனவு மத்தவங்களுக்கும் வந்திருக்கே?”

“”அது சாத்தியம் தான். அந்த கிணறு என்னமோ சொல்லத் துடிக்கிறது. அதை தேடிப்போய், கேட்கப் போகிறவர்கள் யார்? என்பது தான் விஷயம்”

“”நான் மட்டும் ஏன் அந்த கிணற்றைத் தேட வேண்டும்? அதைப் பற்றி தெரிந்து கொள்வது தான் எனக்கு வேலையா?” என்று தான் நினைத்தேன். அதே கனவு தொடர்ந்து வருவது கூட எனக்கு இப்ப பிரச்னையாக தெரியவில்லை. ஏதோ ஒரு விஷயம் அந்த கிணற்றை நோக்கி என்னை இழுத்தது. அந்த கிணறு என்னதான் சொல்லும் என்கிற ஆர்வம் உண்டானது.

கிணறுகளை பற்றி இணையத்தில் தகவல் தேடினேன். அப்பத்தான் இப்னே பதூதா பற்றி தெரிந்தது.

நாடோடியாக திரிபவர். கிணறுகளின் காதலன். என் கனவை பற்றி எழுதினேன். பதில் வரும் என்று காத்திருந்தேன். காணோம். தினமும் ஆவலுடன் எனக்கு வரும் மின் அஞ்சல்களை பார்ப்பேன், இப்னே பதூதா விடமிருந்து எந்த தகவலுமில்லை.

ஒரு வாரம் கழிந்திருக்கும் கொஞ்சமும் எதிர்பார்க்காத சமயத்தில் இப்னே பதூதா பதில் அனுப்பியிருந்தார்.

“அந்த கனவு உங்களுக்கும் வருவதில் மகிழ்ச்சி. நீங்கள் தேடும் அந்த கிணறு உங்கள் மாநிலத்திலேயே, மேல்பட்டி என்கிற சிற்றூரில் இருக்கிறது. அந்த கிணற்றை தேடிப் போறீங்களா? எச்சரிக்கையுடன் இருங்கள். இதற்கு முன் அதை தேடிப் போன சிலர் திரும்பி வந்ததாகத் தெரியவில்லை. ஒரு வேளை அந்த கிணறே அவர்களை விழுங்கியிருக்க வேண்டும்’

எனக்கு வயிற்றைப் பிசைந்தது. கிணற்றைத் தேடிபோகும் நினைப்பைக் கை விடத்தான் நினைத்தேன். முடியவில்லை, நடப்பது நடக்கட்டும் என்று புறப்பட்டேன்.

ஒரு வழியாக மேல்பட்டிக்கு சென்ற பிறகு டீக்கடைக்கு சென்றேன். மெல்ல பேச்சுக் கொடுத்தேன். அங்கேயிருந்த முதியவரைக் காட்டினார்கள். நாயுடுவிற்கு எண்பது

வயதிருக்கும். நன்றாகத்தான் இருந்தார். அவருக்கு வணக்கம் சொல்லி வந்த விஷயத்தை சொன்னேன்.

“”பட்டணத்திலிருந்து வரியா?”

தலையசைத்தேன்.

“”டீ வாங்கித் தருவியா?”

சம்மதித்தேன்.

எனக்கு ஸ்ட்ராங் டீ அவருக்கு சைனா.

அவர் அழைத்து சென்ற இடம் ஊரைவிட்டு சற்று தள்ளியிருந்தது. ஆனால் நடக்கும் அளவு தொலைவுதான். அந்த நிலப்பகுதி கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து கிடந்தது.

நிறைய புளிய மரங்கள். சில சவுக்கு மரங்கள். இவற்றால் ஒரு காட்டைபோல் அந்த இடம் காட்சியளித்தது. அங்கு நிலவிய பேரமைதி பயத்தை தந்தது.

புதர்கள் வழியே அழைத்துச் சென்றார் பெரியவர். “”அதோ” என்று கை காட்டினார்.

என் கண்ணுக்கெதிரே நான் கனவில் கண்ட கிணறு. மெல்ல நடந்து அதன் அருகே சென்றேன். விளிம்பில் கையைப் பிடித்து எட்டிப் பார்த்தேன். தண்ணீர் இருந்தது நன்றாக கவனித்தேன். ஒரு ஆமையும் சில தவளைகளும் கண்ணில்பட்டன. வேறு எதுவும் தெரியவில்லை. என் கண்களில் மாற்றத்தைப் பார்த்த பெரியவர் ஒரு பீடியை பற்ற வைத்தபடி பேசினார்.

“”ரொம்ப வருஷம் முன்னாடி நடந்த சம்பவம் நேற்று தான் நிகழ்ந்தது போல நினைவிருக்கு” என்று பீடிகையுடன் ஆரம்பித்தார்.

“”பெரிய விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவன் தமிழரசன். படிக்காதவன்தான். அவன் நிறமே தார் மாதிரிதான் இருக்கும். ஆனால் மின்னல் மாதிரி ஒரு வசீகரம் அவன் முகத்தில் இருந்தது. அதைப்பார்த்து தான் உமா அவன் மீது ஆசைப்பட்டாள். உமா மகேஸ்வரி, அப்ப அவ எட்டாவது படித்துக் கொண்டிருந்தாள். அந்த சமயம் அது பெரிய படிப்பு. தொடர்ந்து படிக்கிறதை விட்டுவிட்டு, அவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டா. நல்லாத்தான் இருந்தாங்க. தேவதை மாதிரி இருந்தவளை ஊரே தெய்வச்சிலை போல பார்த்தது. கல்லடி கூட படலாம் கண்ணடி படக்கூடாது. யாருடைய பெருமூச்சோ அக்னியாக அவங்க வாழ்வை சாம்பல் ஆக்கிருச்சி”

பெரியவர் இருமினார்.

“”அவன் வாங்கித் தந்த சிவப்பு கலர் புடவையில் அவள் அழகு இன்னும் ஜொலிக்கும். அதை கட்டிக் கொண்டு கண்ணாடியில் தன்னையே பார்த்து ரசிப்பாள் உமா.

தன்னை சீவி சிங்காரித்து, அலங்கரித்துக் கொள்வாள். அவனுக்காக காத்திருப்பாள் ஆனால் அவனோ தன் வேலையாய் அலைந்து கொண்டிருப்பான். அவனுக்கு அவன் நிலம் தான் முதல் மனைவி. அவள் துவைத்துப் போட்ட துணியை போல துயரத்தில் தோய்ந்து போவாள்.

பொழுதை போக்கத்தான் உமா பக்கத்து ஊரிலிருந்த நூலகத்துக்குப் போக ஆரம்பித்தாள். நூலகர் அழகேசன் தமிழரசனுக்கு நண்பன்தான். அவளுக்குக் கதை புத்தகங்கள், நாவல்கள் எடுத்து கொடுப்பார்.

அவள் அதை எடுத்து வந்து வீட்டில் மணிக்கணக்கில் இமைக்காமல் படித்துக் கொண்டிருப்பாள். தமிழரசன் வீட்டிற்கு வரும்போது உமா இருக்கமாட்டாள். நூலகத்தில் இருப்பாள். நூலகருக்கும் இலக்கியத்தில் ஈடுபாடு என்பதால் உமாவுடன் பேசிக் கொண்டிருப்பார். நேரம் போவதே தெரியாது.

ஒரு முறை திரும்ப வீட்டிற்கு நடந்து செல்ல உமா சிரமப்பட்டபோது தன் சைக்கிளில் அவளை அழைத்து சென்ற அழகேசனை ஊரில் சிலர் பார்க்கவும் செய்தனர்.

அதைக் கேள்விப்பட்ட தமிழரசன், அப்ப அதை பெருசாக எடுத்துக்கல”

பெரியவர் இன்னொரு பீடியைப் பற்ற வைத்தார். தன்னிடமிருக்கும் எந்தப் பொருளையும் யாராவது ஆசைப்பட்டு கேட்டால் கொடுத்து விடுவாள் உமா. அவள் கைவிரலில் தங்க மோதிரம் இல்லாததை விசாரித்தான். தமிழ், அவள் சிரித்தபடி சொன்னாள்.

“”என் தோழி வள்ளி விரும்பினா. தந்துட்டேன்”

“”யார் எதை ஆசைபட்டு கேட்டாலும் கொடுத்துவிடுவாயா?”

உமா தலையசைத்தாள்.

“”யாராவது உன்னையே கேட்டால்?”

அவனை பொய் கோபத்துடன் பார்த்து, “”சண்டாளா?” என்று அடிக்கப் பாய்ந்தாள். அவன் பயந்ததைப் போல நடித்து ஓட அவள் துரத்தினாள். அவள் கையில் அவன் சிக்கியபோது, கொலுசு சத்தம் கேட்டது.

“”கவிதா வருகிறாள்”. அவங்க வீட்டு வேலைக்காரி, கறுப்பாக இருந்தாலும் களையாக இருப்பாள் கவிதா. ஊரில் பலருக்கு அவள் மேல் ஆசை. அதில் அவளுக்கு திமிர் கலந்த பெருமை, ஆனால் யார் வலையிலும் அவள் சிக்கவில்லை”

பெரியவருக்கு பேசி தொண்டை வற்றியிருக்கணும், நாக்கை ஈரப்படுத்தினார். என்னிடமிருந்த தண்ணீர் பாட்டிலைத் தந்தேன். இரண்டு மிடறு குடித்தார்

“”திடீரென்று ஒரு சமயம் அவர்கள் வீட்டுக்கு வந்தான் அழகேசன். நாட்டுக்கோழி அடிச்சு குழம்பு வெச்சு, இனிப்பு, பழங்களுடன் இரவுச் சாப்பாடு. அவன் அதற்கு முன்பும் பலமுறை அவர்கள் வீட்டிற்கு வந்திருக்கிறான்.

மூவரும் பேசிக் கொண்டிருந்தனர். இரவு நெடுநேரமானது. அவ்வப்போது அழகேசனுடைய பார்வை உமா மீது விழுவதையும் அவள் கண்களை தாழ்த்திக் கொள்வதையும் தமிழரசன் கவனித்தான்.

“”ரொம்ப நேரமாயிடுச்சு. வீட்டுக்குப் போற வழியில் பாம்புங்க தொல்லை வேற” என்றபடி அழகேசன் எதற்கோ கோடிட்டான்.

“”ஏங்க, இன்னைக்கு ஒரு ராத்திரி ஸார் இங்கேயே தங்கட்டுமே?” உமாவின் குரலில் கெஞ்சல்.

அது தமிழுக்கு பிடிக்காவிட்டாலும், வேறு வழியின்றி சம்மதித்தான்.

அவர்கள் வீட்டுக்கு பின்புறம் ஒரு சிறிய அறை இருந்தது. அதை அழகேசனுக்கு ஒதுக்கினார்கள்.

இரவு எதேச்சையாக தமிழரசனுக்கு விழிப்பு ஏற்பட்டது. பக்கத்தில் உமாவைக் காணோம். அவன் உடம்பு முழுக்க மின்சாரம் பாய்ந்ததைப் போலிருந்தது. எழுந்து ஜன்னலை திறந்து அழகேசன் தங்கியிருந்த அறையை நோட்டமிட்டான்.

அங்கு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்தில் கதவை திறந்து கொண்டு யாரோ வருவதைப் பார்த்தான். அன்று பெளர்ணமி இரவு. நல்ல வெளிச்சத்தில் கசங்கியிருந்த சிவப்புப் புடவை கருமையாகத் தெரிந்தது.

ஆவேசத்தில் தமிழ் அறையிலிருந்து வெளியேறினான். அவர்களை அப்படியே கையும் களவுமாய் பிடித்து கொன்றுவிடத் துடித்தான். திடீரென அங்கு வந்த நான்கு போலீஸ்காரர்கள், அவனது நிலத்தில் கள்ள சாராயம் காய்ச்சியதாக பிடித்து சென்றார்கள். ஒரு வாரம் சிறையில் இருந்தான். அப்ப நானும் அவனுடன்தான் இருந்தேன்.

எதுவும் பேசமாட்டான்.. இரவெல்லாம் தூங்கவும் மாட்டான்.

எப்பொழுதும் சுவரையே முறைத்துப் பார்த்த படி இருப்பான் அவன் கண்கள் சிவந்து போகும் மண்டையை இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டு, ஓர் ஓரமாக உட்கார்ந்து விடுவான். என்னோட ஆறுதலும் அவனுக்கு உதவலே. அவனுடைய பார்வை சுவர்மீது நிலைத்திருக்கும்.

“”என்ன பார்க்கிறே?”

“”ஐயா, அங்க பார்த்தீங்களா?”

நான் சுவரை பார்த்தேன். ஏதோ கிறுக்கல்கள்.

“”அதில் எனக்கு உமாவும் அழகேசனும் தெரியறாங்க. அவங்க ரெண்டு பேரும் ஒண்ணாயிட்டாங்க, ஒருத்தருக்குள் ஒருத்தர் கரைஞ்சு இப்ப பூஜ்யமாயிட்டாங்க”

அவனுக்கு எதைச் சொல்லிப் புரிய வைப்பது என்று எனக்கு தெரியலே, எதையும் கேட்கும் மனநிலையில் அவன் இல்லை. ஒரு வாரம் கழிஞ்சிருக்கும். நாங்க நிரபராதின்னு விடுவிச்சாங்க”.

பெரியவர் பேசறதை நிறுத்தி பெரு மூச்சு விட்டார்.

“”எப்பவாவது அவன் தண்ணீ அடிப்பான். ஆனா, அன்னைக்கு நிறையவே குடித்தான். நான் தடுத்தும் கேட்கலே. போதையில் தடுமாறியடி உமாவை தேடிச் சென்றான். அப்ப இந்த கிணற்றில்தான் உமா தண்ணீர் சேந்திக் கொண்டிருந்தாள்.

காலடி சத்தம் கேட்டு திரும்பினாள்.

“”எப்ப வந்தீங்க?”

“”உன்னை தேவதைன்னு நினைச்சேன். நீயே…” என்று அசிங்கமாகத் திட்டினான்.

அவள் சுதாரிப்பதற்குள், அவன் அவளைக் கிணற்றில் தள்ளிவிட்டான்.

கிணற்றில் விழுந்தவள் உயிருக்காகத் துடிப்பதை குரூர திருப்தியுடன் பார்த்து ரசித்தான்.

அவள் உடல், தலை, கடைசியாக கைகள் மூழ்குவதற்கு முன் அவனுக்கு சைகை காட்டியது. அவளைப் பழி தீர்ப்பதிலேயே குறியாக இருந்தவனுக்கு, அதெல்லாம் பெரிதாகப் படவில்லை, அவள் முழுசாக கிணற்றில் மூழ்கிய பின்புதான் வீட்டிற்கு திரும்பினான். எதிரே கவிதா.

“”நீ வேலைக்காரியா? வீட்டுக்காரியா?” என்றான். அவளுக்குப் புரியவில்லை.

“” என் பொண்டாட்டியோட புடவையை நீ எப்படி கட்டலாம்?”

சிவப்புப் புடவையில் கவிதா.

“”ஐயா இதை உமாக்காதான் எனக்கு பத்துநாள் முன்னாடி கொடுத்தாங்க”

தமிழுக்குப் போதை இறங்கிவிட்டது. அவளை முறைத்தபடி கேட்டான்.

“”உண்மையைச் சொல்லுடி”

“”எந்த உண்மை?”

அவள் முகத்தில் குத்தினான். கண்ணீரும் ரத்தமும் கன்னங்களில் வழிய, அவள் திக்கித் திணறி ஒத்துக் கொண்டாள். அன்று இரவு அழகேசனுடைய அறைக்குச் சென்றவள் கவிதாதான்.

நொறுங்கிப்போய் அப்படியே கீழே உட்கார்ந்தான் தமிழரசன். பச்சைத் தண்ணியில் குளித்தவன் தன் இரண்டு கைகளையும் தேய்த்துக் கழுவினான். “”எவ்வளவு கழுவியும் இந்த இரத்தக்கறை போகமாட்டேங்குதே” என்று அழுதான். இரண்டு நாள் வீட்டிலே முடங்கி கிடந்தான் மூன்றாவது நாள் ஒரு முடிவுக்கு வந்தவனாய் போலீஸ் ஸ்டேசனுக்குச் சென்றான்.

தான் தன் மனைவி மீது வீணாக சந்தேகப்பட்டு கிணற்றில் தள்ளி கொன்று விட்ட உண்மையைச் சொன்னான். அவனை அழைத்துக் கொண்டு போலீசார் இந்த கிணற்றுக்கு வந்தனர். இரண்டு பேர் கிணற்றில் இறங்கித் தேடினர். உமாவின் பிணம் கிடைக்கவில்லை.

தமிழரசனுக்கு அதிர்ச்சி.

“”பொய்யாடா சொல்றே?”

“”நான் ஏன் ஸார் பொய் சொல்லணும். இந்த இரண்டு கைகளால் அவளை கிணற்றில் தள்ளிக் கொன்ற பாவி நான். அவ பத்தினி. எனக்கு தூக்குத் தண்டனை கொடுங்க ஸார்”

“” இவன் பொய்தான் சொல்றான். இவனோட பொண்டாட்டி கொஞ்ச நேரம் முன்பு தான் தன் கள்ளக் காதலனுடன் மதராஸக்கு ரயிலில் போயிருக்கா. ஊர்க்காரங்க பார்த்திருக்காங்க”

அழகேசனுடன் ஓடிப்போனது உமா இல்லை என்று அவனுக்கு தெரியும். ஆனால் அவன் சொன்னதை மத்தவங்க நம்பவில்லை. எல்லோரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

அவன் மட்டும் இந்த கிணற்றையே சுற்றி வந்தான். கிணற்றுக்குள் எட்டிப் பார்த்து கத்துவான்.

“”உமா என்னை மன்னிச்சுடு” அந்த குரல் எதிரொலித்தது. சாப்பிடாமல் தூங்காமல் பித்து பிடித்தவன் போல, இந்த கிணற்றுக்கு பக்கத்திலேயே கிடப்பான்.

“” உமா உனக்கு மரணம் தான் விடுதலை. எனக்கு இனி வாழ்வு தான் தண்டனை” என்று முனகுவான். அதைப் போலவே ஒவ்வொரு கணமும் சித்தரவதையை அனுபவித்தான் அதற்கு பிறகு தமிழரசன் எங்கே போனான், என்னவானான் என்று யாருக்கும் தெரியலே”

நான் கண் கலங்குவதைக் கண்ட பெரியவர் சிரித்தார்.

“”இதுவரைக்கும் நான் சொன்னதை கேட்டு யாரும் அழுததில்லை. முதல் முறையாக நீங்க அழறதை பார்க்கிறேன். மறதின்னு ஒண்ணு இல்லைனா எல்லாரும் பைத்தியமாக அலைய வேண்டியதுதான். ஊர்க்காரங்க அதை மறந்துட்டாங்க. தண்ணீர் எடுக்கவும் இந்த கிணற்றுக்கு வருவதில்லை. இந்த கிணற்று தண்ணீரில் இரத்த வாடை அடிப்பதாக சொன்னாங்க. உங்களைப்போல சிலர்தான் அவ்வப்போது இந்த கிணற்றை பற்றி விசாரிக்க வருவாங்க. யாரும் நான் சொன்னதை நம்பலே. போலீஸ் தஸ்தாவேஜில் இருப்பதைதான் நம்பினாங்க. நீங்களே சொல்லுங்க தம்பி, போலீஸ்காரங்க சொல்றது எல்லாம் உண்மையா?”

“”இல்லை” என்றேன்.

“”எனக்கு ஒரு சந்தேகம் தம்பி. இந்த கிணற்றை பற்றி கேள்விபட்டு யார் யாரோ எங்கிருந்தெல்லாமோ வராங்க. ஆனா, அந்தக் கனவு ஏன் இந்த ஊர்க்காரங்களுக்கு வரலே?”

பெரியவர் சொன்னது எனக்கு வியப்பாக இருந்தது. நல்ல வேளை. கையோடு லேப்டாப் கொண்டு வந்திருந்தேன். திறந்து துழாவினேன் என்னைப் போல அந்த கனவைப் பார்த்ததாக, எனக்கு தெரிவித்தவர்களை பற்றி ஆராய்ந்தேன். எனக்கு ஓர் அதிசயம் காத்திருந்தது. அவர்களும் எழுத்தாளர்கள். நம் மூலமாக அந்த கிணறு உண்மையை உலகிற்குச் சொல்ல விரும்புகிறது போல் தெரிகிறது.

சென்னைக்குத் திரும்பிய பிறகு, நான் என் வலைப்பூவில் ஒரு கிணற்றின் கதையை எழுத ஆரம்பித்தேன். இனி அந்தக் கனவு வராது என்ற நம்பிக்கையில் அன்று இரவு தூங்கப் போனேன்.

– மார்ச் 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)