காளிங்கராயன் கொடை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 29, 2013
பார்வையிட்டோர்: 11,570 
 
 

“”””வாங்க தம்பீ, பட்டணத்துக்குப் போனதிலிருந்து கண்ணிலே கூடக் காண முடியறதில்லே. வாங்க, இப்படிப் பாயிலே உட்காருங்கோ”” என்று அந்தப் பெரியவர் அன்போடு என்னை வரவேற்றார். அந்தி வேளை, பகல் ஒளி மறைந்து இருள் கூடிக் கொண்டிருந்தது. பெரியவர் அப்பொழுதுதான் பண்ணையிலிருந்து வீட்டிற்குத் திரும்பியிருக்கிறார். அவருடைய மருமகள் ஒரு செம்பிலே தண்ணீரும், ஒரு தட்டத்திலே வெற்றிலைப் பாக்கும் கொண்டு வந்து வைத்துவிட்டு, உள் வீட்டுக் கதவருகிலே போய்ச் சற்று மறைவாக நின்று, “”””வீட்டிலே எல்லாரும் சுகமா இருக்காங்களாக?”” என்று அடங்கிய குரலில் கேட்டாள். “”””எல்லோரும் சௌக்கியந்தானுங்க”” என்று நான் பதில் சொல்லிக்கொண்டே பாயில் அமர்ந்தேன். “”””நம்ம சின்னப்பையன் முத்து வீட்டுக்காரி உங்க வீட்டைப் பற்றி நினைக்காத நாளே கிடையாது தம்பீ. நீங்க இந்த ஊரிலே இருந்தபோது அவர்கள் ரண்டு பேரும் அப்படி உயிருக்குயிரா இருந்தாங்கோ. ஏன் தம்பி, நீங்கள் தனியாத்தான் வந்தீங்களா?”” என்று பெரியவர் தமது மருமகள் கேட்ட கேள்விக்கு வியாக்கியானமாகப் பேசினார். என் மனைவியைப் பற்றித்தான் அவர்கள் அப்படி விசாரிக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் சட்டென்று விளங்காமலிருக்கலாம். ஆனால் எங்கள் நாட்டு மக்களுக்கு அது உடனே விளங்கும்.

“”””தனியாத்தானுங்க வந்தேன். அவளையும் கூட்டி வர வேணும்னா எங்கே முடியுது?”” என்றேன் நான். “”””ஆமா, உங்களுக்கு எத்தனை சோலியோ?… இருந்தாலும் எல்லோருமா வந்து நாலு நாளைக்கி இப்படி இருந்துட்டுப் போனா மனசுக்கு சந்தோஷமா இருக்கும். கட்டுத் தறியிலேயே கட்டிப் போட்டாப்புடி ஒரே பக்கத்திலே இருந்தா அவுங்களுக்கும் சலிச்சுப்போகும்”” என்று பெரியவர் தம் அனுபவத்திலே உறுதிப்பட்ட உண்மையை எடுத்துக் கூறினார்.
கொங்கு நாட்டிலே எங்கள் ஊரிலே இப்படி அன்போடு பேசி வரவேற்பது சாதாரணமாக பழக்கம். எனக்கு இந்தப் பேச்சைக் கேட்பதிலே தனி மகிழ்ச்சியுண்டு. இந்தத் தடைவ ஊருக்குச் சென்ற போதும் இந்த அன்புப் பேச்சைக் கேட்டு என் உள்ளம் பூரித்தது. கொங்கு நாட்டு வேளாளர்களின் பேச்சு ஓர் அலாதியான சுவையோடு இனிக்கும். அவர்கள் என் உறவினர்கள் என்பதால் மட்டும் அப்படி இனிக்கிறதென்று யாரும் நினைக்க வேண்டாம். அந்தக் கொச்சையான பேச்சிலே அத்தனை கனிவும் கபடமற்ற அன்பும் குழைந்து கிடப்பதை யாரும் எளிதில் உணர்ந்து கொள்ளலாம். நான் செம்பிலேயிருந்த தண்ணீரைக் கொஞ்சம் பருகி விட்டு வெற்றிலையை மடிக்க ஆரம்பித்தேன். எனக்கு வெற்றிலை போடும் பழக்கம் கிடையாது. ஆனால் எங்கள் ஊர்ப் பக்கத்திற்குச் சென்றால் வெற்றிலை போடாமல் இருக்க முடியாது. அங்கு வாழும் மக்களுடைய அன்பே மனமார ஏற்றுக் கொண்டதற்கு வெற்றிலை போடுவது ஓர் அடையாளம். ஒரு வீட்டிலே விருந்துண்ணாமல் கூட வந்து விடலாம். ஆனால் வெற்றிலையை ஏற்காமல் வந்துவிட்டால் அந்த வீட்டார் மனம் வருந்துவார்கள். எங்கள் மேலே மனசிலே என்ன வருத்தமோ?”” என்று அவர்கள் கவலைப்படத் தொடங்கி விடுவார்கள்.

“”””பட்டணத்திலே இந்த வருசம் மழைத்துளி எல்லாம் எப்படி?”” என்று மருமகள் இந்தச் சமயத்திலே கேட்டாள். “”””பட்டணத்திலே மழையைப் பற்றி அவுங்களுக்கு என்ன கவலை? அங்கேதான் பணமா விளையுது. நம்மைப் போலே நிலத்தை நம்பியா அவுங்க பிழைக்கிறாங்கோ?”” என்று பெரியவர் இடைமறித்துப் பேசினார். “”””இல்லீங்க. பட்டணத்திலேயும் மழை இல்லாது போனால் கஷ்டந்தானுங்க. குடிக்கக் கூடக் தண்ணீர் கிடைக்காது”” என்று நான் சொன்னேன். “”””அது வாஸ்தவம் தம்பீ, மழை இல்லாமல் போனால் எல்லோருக்கும் கஷ்டந்தான். இருந்தாலும் எங்க கஷ்டம் உங்களுக்கு வராது. நாங்கள் மழையை நம்பித்தான் பிழைக்க வேணும்”” என்று பெரியவர் விவசாயிகளுக்கு மழை எவ்வளவு முக்கியம் என்பதைக் குறிப்பாகக் காட்டினார்.

அந்த சமயத்திலே ஒரு தள்ளாத கிழவர் கைத்தடியை ஊன்றிக் கொண்டு தடுமாறித் தடுமாறி அங்கே வந்தார். அவரைப் பார்த்தவர்கள் அவர் குறைந்தது இரண்டு நாட்களாவது பட்டினியாக இருந்திருக்க வேண்டும் என்று உடனே கண்டு கொள்வார்கள். அவரை யாரென்று வீட்டுக்காரப் பெரியவருக்குத் தெரியாது. இருந்தாலும் வழக்கப்படி அவரை அன்போடு வரவேற்றுப் பாயில் உட்காரும்படி சொன்னார். “”””வெற்றிலை போடுங்கோ, எங்கேயோ ரொம்பத் தூரம் போய் வந்திருக்கிறாப்பிலே தெரியுது”” என்று பெரியவர் அவரை இன்னாரென்று தெரிந்து கொள்ளுவதற்காகக் குறிப்பாகக் கேட்டார்.

“”””ஆமாங்கோ, திருச்செங்கோட்டுக்குப் போய் மலையேறி அர்த்தனாரீசுவரரைத் தெரிசிக்க வேணும்ணு ரொம்ப நாளாகத் தவணை. அதுக்கு இப்பத்தான் வேளை வந்துகூடிச்சு”” என்று கிழவர் தமது நீண்ட பயணத்தைப் பற்றி விளக்கினார். “”””கால் நடையாகவே போய்விட்டு வந்துட்டாப்படி இருக்குது?”” என்று பெரியவர் மீண்டும் கேட்டார்.

“”””ஆமாங்க, அப்படித்தான் வேண்டுதலை செய்துக்கிட்டேன். வண்டி பூட்டவும் வசதி பத்தாதுங்க. எங்க ஊரிலிருந்து இருபத்தஞ்சு மைல் தானுங்கோ திருச்செங்கோடு போக ஒரு நாள் வர ஒரு நாள் அங்கே சுவாமி தரிசனத்துக்கு ஒரு நாள். அவ்வளவு தானுங்கோ, இந்த வயசிலும் எனக்கு அது கஷ்டமில்லீங்கோ”” என்றார் கிழவர். “”””இங்கிருந்து திருச்செங்கோட்டுக்கு நேராக காவிரியைத் தாண்டிப் போனாப் பத்து மைல் ஆகுது. அப்போ நம்ம ஊரு இங்கிருந்து இன்னும் மேக்கே இருக்குதுங்களா?”” என்று பெரியவர் விநயமாகக் கேட்டார். “”””ஆமாங்கோ, இங்கிருந்து இன்னும் பதினைஞ்சு மைல் போக வேணும். திருச்செங்கோட்டிலிருந்து நான் காலையிலே புறப்பட்ட நேரத்துக்கு இந்நேரம் ஊரே போய்ச் சேர்ந்திருக்க வேணும். இருபத்தஞ்சு மைல் ஒரே மூச்சிலே நடந்திடுவனுங்க… ஆனால் இன்னைக்கி அப்படி முடியல்லே.””

“”””அதுக்கென்னங்க? அப்படி அவசரமாகப் போகாவிட்டால் என்ன முழுகிப் போவுது? நாங்களெல்லாம் மனுசரு இல்லையா? இருந்து சாப்பிட்டு விட்டு இளைப்பாறி நாளைக்குப் போனாப் போகுது”” என்றார் பெரியவர். “”””அதுக்கொன்னும் உங்க வீட்டிலே குறைவில்லீங்கோ. நீங்கதான் ஊர் பண்ணாடின்னு கேள்விப்பட்டு ராத்திரிக்கு இங்கே தங்கியிருந்து போகலான்னு வந்தேன். இருட்டிலே கண் சரியாத் தெரியாதுங்கோ”” என்றார் கிழவர். “”””கண் தெரிஞ்சாலும் தெரியாது போனாலும் இருட்டிலே அப்படி எதுக்குப் போக வேணும்? இது உங்க வீடு மாதிரிதானுங்கோ. எழுந்திருங்கோ சாப்பிடலாம்”” என்று பெரியவர் அவரிடம் கூறிவிட்டு, “”””தம்பீ, நிங்களும் இன்னிக்கு இங்கேதான் சாப்பிட வேணும்”” என்று என்னிடம் சொன்னார்.
நான் அவருடைய அழைப்பை ஏற்றுக்கொண்டு உடனே எழுந்தேன். பட்டினியாக வந்திருக்கும் கிழவருக்கு உடனே உணவு தரவேண்டும் என்பது எங்கள் இருவருடைய உட்கருத்தாகவும் இருந்தது. ஆனால் கிழவர் பாயை விட்டு எழுந்திருக்கவில்லை. “”””நீங்கள் போய்ச் சாப்பிடுங்கோ. நான் இன்னைக்கு சாப்பிடறதில்லை. உடனே படுத்துக்க வேணும். அவ்வளவுதானுங்க”” என்று அவர் கூறினார். பண்ணாடி அவரை விடவில்லை. சாப்பிட்டே தீர வேண்டும் என்று கட்டாயப் படுத்தினார். வந்தவர் ஒரே மனமாக மறுத்துக் கொண்டே இருக்கவே பண்ணாடிக்கு ஒரு சந்தேகம் வந்தது. “”””கோயிலுக்குப் போய் வந்ததனால் விரதம் ஒண்ணும் இல்லையே?”” என்று அவர் கேட்டார். கோயிலுக்குப் போய்த் திரும்புகிறவர்கள் வீடு சேரும் வரை உண்ணாவிரதம் இருப்பதுண்டு.

“”””கோயிலுக்குப் போனதிலே விரதம் இல்லீங்கோ. ஆனால் வேறே ஒரு விரதம் இருக்குதுங்கோ. அதை அப்புறம் நீங்கள் சாப்பிட்டுவிட்டு வந்த பிறகு வேணும்னா சொல்லறேன். இப்போ நீங்கள் போய்ச் சாப்பிடுங்கோ”” என்றார் கிழவர். “”””எங்களுக்கு இப்போ அவசரம் இல்லீங்கோ. நாங்கள் வழக்கமாச் சாப்பிட இன்னும் நேரமாகும்”” என்றேன் நான். “”””அது தெரிஞ்சுது தம்பீ. எனக்காகத்தான் பண்ணாடியும் இத்தனை அவசரமாகச் சாப்பிட எழுந்திருக்கிறாங்கோன்னு நான் கண்டுக்கிட்டேன்… ஆனால் நான் சாப்பிடறது இல்லை”” என்றார் கிழவர். “”””ஏன் சாப்பிடறது இல்லைன்னு தெரியாமல் நாங்கள் போகப் போறதில்லை. வீட்டுக்கு வந்த விருந்தாளியை விட்டுப் போட்டு சாப்பிடற வழக்கம் எங்க வம்சத்திலேயே இல்லீங்கோ”” என்று உட்கார்ந்தார் பண்ணாடி.

பண்ணாடி அப்படி ஒரே தீர்மானமாக உட்கார்ந்த பிறகும், தாம் சாப்பிட மறுப்பதற்கு விளக்கம் சொல்லாமலிருப்பது சரியல்லவென்று கிழவருக்குப் பட்டது. “”””விருந்தாளியை விட்டுச் சாப்பிடறது உங்கள் வம்சத்திலே இல்லீங்கோ கொடுத்த தருமத்தை மறுபடியும் கையிலே தொடறது எங்க வம்சத்திலேயும் இல்லீங்கோ – ஏழையாப் போய்ட்டாலும் காளிங்கராயன் வம்சமுங்கோ நாங்கோ”” என்றார் கிழவர்.

“”””அப்படிங்களா? ரொம்ப சந்தோசமுங்கோ. அப்போ உங்களை நான் இனிமேலும் சாப்பிடக் கூப்பிட மாட்டேனுங்கோ விஷயம் தெரிஞ்சு போச்சு – ஆனால் வீட்டுக்கு வந்தவங்கள் பட்டினியாக இருக்கிறபோது நானும் சாப்பிடப் போறதில்லை… தம்பீ, நீங்க மாத்திரம் போய் சாப்பிட்டு வாங்கோ”” என்றார் பெரியவர். “”””எனக்கு மாத்திரம் எதுக்குங்கோ? என்றேன் நான். “”””தம்பீ, இப்போ நீங்க இந்த ஊருக்காரர் அல்ல. நீங்கள் விருந்தாளி தான். நீங்கள் சாப்பிட்டாக் குத்தமில்லை”” என்றார் பண்ணாடி.

இதே சமயத்தில் அவருடைய மருமகளும் வந்து என்னைச் சாப்பிட வற்புறுத்தத் தொடங்கவே நான் சமையற் பகுதிக்குச் சென்றேன். சாப்பிட்டுக் கொண்டே, “”””அவர் ஏன் சாப்பிட மாட்டேனென்று பிடிவாதமாக இருக்கிறார்?”” என்று கேட்டேன் மருமகள் சொன்ன பதில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “”””காளிங்கராயன் வம்சத்தார் நம்ம பக்கத்திலே தண்ணீர் கூடத் தொடமாட்டார்கள்”” என்றாள் அவள். “”””ஏன் அவர்களும் நம்மைப்போல வேளாளக் கவுண்டர்கள்தானே? நம்மைவிட உயர்ந்தவர்களா?”” “”””அப்படி ஒன்னும் இல்லை. ஆனால் காளிங்கராயக்கவுண்டர்தான் அந்தக் காலத்திலே சுமார் நூறு நூற்றப்து வருசத்துக்கு முன்னாலே நம்ம ஊருக்கு வாய்க்கால் வெட்டிவச்சார். அந்த வாய்க்கலிலிருந்து தண்ணீர் பாய்ஞ்சுதான் நம்ம ஊட்ரலே நெல் விளையுது””

“”””அது எனக்கும் தெரியும். அதனால்தான் இந்த வாய்க்காலுக்குக் காளிங்கராயன் வாய்க்கால் என்று பெயர் வந்திருக்கிறது. பவானி ஆறு காவிரியில் சங்கமமாகிற இடத்திலிருந்து வாய்க்கால் கொண்டு வந்திருக்கிறார்கள்”” என்று நான் மேலும் விளக்கம் கூறினேன். “”””ஆமாம். இந்த வாய்க்காலை வெட்டி வச்சதும் அந்த வம்சத்தார் எல்லோரும் மேற்கே குடி போய்விட்டார்களாம். தருமத்திற்காக அவர்கள் வெட்டிய வாய்க்காலிலுருந்து தண்ணீர் பாய்ஞ்சு விளைகிற அரசியை அவுங்க சாப்பிட மாட்டாங்களாம். அப்படி சாப்பிட்டால் தருமம் கெட்டுப்போகுமாம். அந்த வம்சத்திலே இப்போ ஏழையா இருக்கறவங்க கூட நம்ம பக்கத்திலே தண்ணீர்கூடக் குடிக்க மாட்டாங்கோ””

“”””அப்படியா?”” என்று நான் ஆச்சரியத்தில் முழுகி விட்டேன். எனக்கு அதற்குமேலே சாப்பிடக்கூட முடியவில்லை. அவசரம் அவசரமாக ஒருவாறு உணவை முடித்துக்கொண்டு அந்தக் கிழவர் தூங்குவதற்கு முன் அவரை நன்றாகப் பார்க்க வேண்டுமென்று வந்தேன். “”””ஏனுங்கோ, இந்தப் பக்கம் வர்றபோது உங்கள் வீட்டிலேயே செய்த கட்டு சோறாவது கொண்டு வரலாமே? அதைக் கூடக் காணமே?”” என்று பண்ணாடி கிழவரை அந்தச் சமயத்தில் கேட்டுக் கொண்டிருந்தார். அந்தக் கேள்வியைக் கேட்க வேண்டுமென்று நானும் எண்ணிக் கொண்டிருந்தேன். “”””கொண்டுகிட்டுத்தான் வந்தனுங்கோ. கோயிலுக்குப் போற போது காளிங்கராயன் வாய்க்கலைத் தாண்டித் தானுங்கோ போக வேணும். அப்படிப் போகிறபோது அந்த வாய்க்கால் கரையிலே ரண்டு மாடு மேய்க்கிற பசங்கள் கஞ்சிக்குச் செத்து உட்கார்ந்திருந்தாங்கோ, கண்ணெல்லாம் குழி பாஞ்சு கிடந்தது.””

“”””சரிசரி கட்டுச்சோத்து மூட்டையை அவுங்களுக்குக் கொடுத்திட்டீங்களா?”” “”””ஆமாங்கோ, வாய்க்கால் வெட்டி வச்சவன் வச்சான். ரண்டு வேளைக்குச் சோறு கூடப் போடப்படாதுங்களா? ரண்டு நாளைக்குப் பட்டினியாக் கிடந்தா நான் என்ன செத்தா போவனுங்க?”” கிழவர் பேச்சைக் கேட்டு எனக்கு அவரிடத்திலே மிகுந்த மரியாதை ஏற்பட்டது. காளிங்கராயனுடைய தாராள மனம் இன்னும் இருக்கிறதென்று நான் பூரிப்படைந்தேன். மறுநாள் காலையிலே அந்தக் கிழவரின் முகத்தைப் பகல் வெளிச்சத்திலே நன்றாகப் பார்க்கவேண்டுமென்று எனக்கு ஆசை. ஆனால் அந்த ஆசை நிறைவேறவில்லை. கிழக்கு வெளுக்கு முன்னமேயே கரிக்குருவி கூப்பிடுறபோதே எழுந்து அந்த கிழவர் கால்நடையாகத் தமது ஊருக்குப் போய்விட்டார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *