கால் மணி நேரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 21, 2019
பார்வையிட்டோர்: 10,792 
 
 

“எம் புள்ளையை ஸ்கூல்ல யாரோஅடிச்சிட்டாங்கலாம்… அலுவலகத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பி அழைப்புமணி அடித்துக் காத்திருந்த குமாரை வரவேற்றது மனைவி விமலாவின் குரல்.

மணி ஏழைக் கடந்து விட்டிருந்ததைக் காட்டிய கடிகாரத்தின் விநாடி முள் வழக்கத்தை விட அதிகமாகத் துடிப்பது போலிருந்தது அவனுக்கு. நாள் முழுக்க கணினித்திரையை வெறித்தபடி வேலை பார்த்த கண்களில் அயர்ச்சி. இருசக்கர வாகனத்தில் அரைமணி நேரப் பயணம். களைப்பு தீர ஆயாசமாய் சற்று அமரநினைத்தவனை கலவரப்படுத்தியது அவளின் பேச்சு. அறைக்குள் சென்று உடைமாற்றிக் கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தான். மின் விசிறியிலிருந்து வந்த காற்று சற்று சூடாக இருந்தாலும் வெளியிலிருந்து வந்தவனுக்கு தேவலாம் என்றுபட்டது.

தொலைக்காட்சியில் தொடர் ஓடிக்கொண்டிருந்தது . ரிமோட் எங்கே என்று தேடி வால்யுமைக் குறைத்தான்.

“யாரோ கூட படிக்கிற பையனாம்…எம் புள்ளையை அடிக்கிறதுக்கு அவன் யாரு…கையில் எப்படிக் கீறியிருக்கிறான். நகம் பதிச்சி செவந்து போயிருக்கு. நகம் பட்டா விஷமுன்னு சொல்வாங்க. டிடி போடனுமா… பிள்ளையா பெத்திருங்காங்க எந்தத் தருதலையோ…கண்டவன் எல்லாம் என் புள்ள மேல எப்படிக் கை வைக்கலாம். கேக்குறத்துக்கு ஆள் இல்லன்னு நினைச்சுட்டாங்க போல இருக்கு”;

“நாளைக்கு சனிக்கிழமை. லீவு தானேன்னு எங்கேயும் வெளியே போயிடாதீங்க. சாயந்தரம் பையனை ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வரும்போது நீங்களே போய் என்னா ஏதுன்னு விசாரிங்க…அந்தப் பையனைப் பார்த்து கண்டிச்சிட்டு வாங்க…” காபியை வைத்துவிட்டுச் சென்றாள்.

வார இறுதியில் சனிக்கிழமையன்று மட்டும் குமார் தவறாமல் பள்ளிக்குச் சென்று மகன் விக்கியை அழைத்து வருவதுண்டு.

“சரி சரி நான் பாத்துக்குறேன் நீ கவலைப் படாதே…”மனைவியைச் சமாதானப்படுத்தியவன் மகன் விக்கியை பார்த்துக் கேட்டான்.

“விக்கி இங்க வாப்பா. ஸ்கூல்ல… யாரு உன்னை அடிச்சாங்க…”

வீடியோ கேமில் விரல்களை வேகமாக அழுத்தி விளையாடிக் கொண்டிருந்தது பத்து வயது பிள்ளை… “கொஞ்சம் இருங்க டேடி வந்துடுறேன்… முடியப்போகுது” என்றது.

‘எப்பப்பாரு விளையாட்டு தானா போதும் விளையாடுனது. இங்கே வா அப்பறம் விளையாடலாம். முதல்ல கேக்குறதுக்கு பதில்சொல்லு…எங்கிட்ட எவ்வளவு பேசினே. உங்க டேடி கிட்டேயும் சொல்லு அப்பத்தான் அவருக்கும் புரியும். முதல்ல கையில எப்படி கீறியிருக்கான்னு காட்டு…”

அம்மாவின் குரலைக் கேட்டுக் கொண்டே வந்து நின்றது பிள்ளை.

“கிளாஸில் யோகேஷ் இல்லை டேடி. அவன் எனக்குத் தெரியாமல் சங்கர் மாமா எனக்கு கிப்ட் கொடுத்த ஃபாரின் பேனாவை எடுத்து வச்சிக்கிட்டிருந்தான். பாக்ஸிலிருந்ததே ஏன்டா எடுத்தே. குடுடா அது என் பேனான்னு கேட்டா, தரமுடியாது போடான்னு சொன்னான். அவன்கிட்ட இருந்து பேனாவை பிடுங்கிட்டேன். அதனால என்ன அடிச்சுட்டான். இந்த கையில நகத்தால கீறிட்டான்”.

பிள்ளையின் கையில் அவ்வளவு ஆழமாகக் கீறல் இல்லையென்றாலும் அடிவாங்கிக் கொண்டு வந்திருப்பதைப் பார்த்ததும் ஆத்திரமாக வந்தது.மனதுக்குள் வலியுடன் ஆழமாகக் கீறல் விழுந்தது. அவர்கள் ஒரு நாளும் பிள்ளையை அடித்ததில்லை. சத்தம் போட்டுப் பேசுவது கூட எப்போதாவது தான்.

“நீ மிஸ் கிட்ட எதுவும் சொல்லலையா…”

“இல்லை டேடி அப்ப கிளாஸ் முடிஞ்சிருச்சு”.

“நாளைக்கு நான் வந்து பாக்கிறேன். அந்தப்பையன் கிட்டே தேவைப்பட்டா அவங்க டாடி மிஸ்ன்னு எல்லார் கிட்டேயும் நானே பேசி அந்த பையனுக்கு பனிஷ்மென்ட் வாங்கித் தரேன். இல்லைன்னா அவன் மன்னிப்பு கேட்கனும். இதை சும்மா விடக்கூடாது”.

இரவில் உறங்கப்போகும் முன் “பிள்ளைங்க சண்டையில பெரியவங்க தலையிட்டா விஷயம் பெரிசாகிடும். சில சமயங்களில் அது விபரீதமா போயிடும்.சின்ன வயசுப் பிள்ளைகள் இப்படி சண்டைவரது சகஜம்தான்… குழந்தைங்க பெரியவங்களை மாதிரி இல்லை எதையும் அவ்வளவு சீரியஸா எடுத்துக்க மாட்டாங்க. இதெல்லாம் தானா சரியாயிடும். பாத்து பக்குவமா பேசுப்பா” அம்மா கமலம் மனைவிக்குத் தெரியாமல் வந்து பேசினாள்.

.”அதுக்காக யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்து விட்டு போகட்டும் என்று சும்மா விடமுடியாது.எப்படியும் பதிலுக்குபதில் கொடுத்தால்தான் பயம் வரும்…இதை நான் பாத்துக்கறேன். எல்லாம் எனக்குத் தெரியும்…” என்று தன் தாயின் வாயை அடைத்தான்..

மறுநாள் மதியம் முதலே நச்சரிக்கத் தொடங்கினாள் விமலா. யாராயிருந்தாலும் சும்மா விடாதீங்க. அப்பத்தான் நம்ம பிள்ளை மேலே இனிமே யாரும் கையை வைக்கமாட்டாங்க. வீட்டிலிருந்து பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டவன் பிள்ளை அடிவாங்கிய விஷயத்தையே மீண்டும் மீண்டும் நினைத்தபடி பயணித்தான். பள்ளிக்கூடத்தை நெருங்குகையில் முதியவர் ஒருவர் சாலையில் தீடிரென குறுக்கே வர சட்டென்று பிரேக் பிடித்தான். சக்கரம் சறுக்கிட நல்ல வேளையாக அவர் மேல் மோதிவிடாமல் சாலையோரம் மணல் கொட்டியிருந்த இடத்தில் வண்டியுடன் சாய்ந்தான். விழுந்தாலும் காயம் எதுவும் ஏற்படவில்லை. சுதாரித்துக் கொண்டு எழுந்து பாத்து வரக்கூடாதா என எரிச்சல் பட்டு பின் வாகனத்தை இயக்கி பள்ளிக்கு எதிர்புறம் சாலையோரம் நிறுத்தினான்

நாலு மணிக்கு ஸ்கூல் விடும். இன்னும் கால்மணி நேரம் இருந்தது. பள்ளிக்கூட கேட் வாசலில் காத்திருந்தான்.வெயில் சற்று தணிந்திருந்தாலும் வெக்கையும் புழுக்கமும் அதிகமாகவே இருந்தது. இந்த கால் மணிநேரம் அங்குக் காத்திருக்க வேண்டும் என்று நினைக்கையில் மேலும் வெறுப்பாக இருந்தது. நேற்று மாலை தொற்றிக் கொண்ட கோபம் இன்று மாலை இந்தக்கணம் வரை அவனுக்குள் அப்படியே இருந்தது.

காயங்களையும் சோகங்களையும் மெல்ல மெல்ல ஆற்றிவிடுகிற கால இடைவெளிகள் கூட கோபத்திடம் தோற்றுவிடுகிறதோ. அது பல சமயங்களில் கோபத்தை வெறுப்பை மேலும் வளர்த்துவிடுவதுமுண்டு.

ஆண்கள் பெண்கள் பெரியவர்கள் என அங்கே பலர் தங்கள் குழந்தைகளுக்காகக் காத்திருந்தனர். வாசலில் ஐஸ் கிரிம் மாங்காகீற்று விற்பவர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர். எதிரில் காலியாக இருக்கும் பேக்கரியும் கடைகளும் இன்னும் சற்று நேரத்தில் இந்த சாலையைப் போலவே பரபரப்பாகிவிடும்.

அப்போது ” சார் பைக்கிலிருந்து விழுந்தப்ப உங்க பேன்ட் பாக்கெட்டிலிருந்து பர்ஸ் விழுந்திடுச்சி. கொஞ்ச தூரத்தில பைக்கில வந்தபோதே நான் பாத்துட்டேன். அவன் தவற விட்டிருந்த அந்த பர்ஸை காட்டி சார்…

“இது உங்களுடையதுதானே…”என்றார்.

பதற்றத்தில் அனிச்சையாகப் பைக்குள் கைகள் துழாவின. .

“ஆமாங்கசார் என்னோடது தான் உள்ளே மூவாயிரத்து இருநூறு ரூபாய் பணம் என் போட்டோ ஐடிகார்டு எல்லாமிருக்கு .வண்டி ஸ்கிட் ஆனப்ப பர்ஸ் விழுந்ததை கவனிக்காம வந்துட்டேன்.. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சார்..” என்றான் உணர்ச்சி பொங்க.

“நல்ல வேளை என் கையில கிடைச்சது. சிலசமயங்களில் யாராவது சத்தம் போடாம எடுத்திருந்தாங்கன்னா போயிருக்கும் சார்” என்றார்.

நன்றியுடன் அவரைப்பார்த்து சிநேகமாக புன்னகைத்தான்.

அவரிடம் நான் குமார் என்று அறிமுகம் செய்து கொண்டான்.”என் பேர் சுந்தரம் பழக்கடை வைத்திருக்கிறேன்” என்றார் அவர்.

“பழக்கடையா…”

“இப்பல்லாம் பழம் காய்கறிக் கடைகள் குறைஞ்சி போச்சு. எங்க பார்த்தாலும் மொபைல் கடைதான் இருக்கு” சொல்லிச் சிரித்தான்.

“ஆமாசார் மக்களும் அதைத்தான் விரும்புறாங்க” என்றார்.

அப்போது சாலையில் கார் ஒன்று வேகமாக கடந்து போக “ஸ்கூல் ஏரியானு பாக்கமா கண்ணு மண்ணு தெரியாமா எவ்வளவு வேகமா போறாங்க பாருங்க”, என்றார்.

“ஆமா ஸ்பீட் பிரேக்கர் போடுறதா சொனானாங்க இன்னும் போடாமா இருக்காங்க” என்றான் பதிலுக்கு.

“சார் உங்களுக்குத் தேவைப்படும் போது கடைக்கு வாங்க…” நட்புடன் புன்னகைத்தபடி விசிட்டிங் கார்டை கொடுத்தார் சுந்தரம் .

“அவசியம் வரேன் சார்” என்றவன், பேசிக்கொண்டே இருக்கையில் ஸ்கூல் பெல் அடித்தது. இருவரும் கைகுலுக்கி கொண்டு விடை பெற்றனர்.

விஸ்தாரமான பள்ளிக்கூட வளாகம். கூட்டமாய் பிள்ளைகள் வெளியேறத் துவங்கினர். எல்கேஜி, யுகேஜி என முதலில் சின்னக் குழந்தைகள் வரிசையாக வந்தனர். சீருடையில் எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி இருந்தனர். எளிதில் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத படி முயல் கூட்டம் நகருவது போல் வளாகமெங்கும் குழந்தைகள். அந்தக் கூட்டத்தில் நம்மால் அவர்களைத் தேடமுடியாது. அவர்கள்தான் முதலில் நம்மை முதலில் அடையாளம் கண்டு பிடித்து விடுவார்கள்.அங்கு வரும் போதெல்லாம் அந்த காட்சியை ரசித்துப் பார்த்திருக்கிறான்.எத்தனை பேருக்குப் பள்ளியில் சேர்ந்த முதல் வருடம் ஞாபகம் இருக்கும்…அந்த ஆரம்ப நாட்களில் அவன் எப்படி இருந்தான் என்பது சுத்தமாக நினைவிலில்லை. ஆனாலும் அவனுக்கும் குழந்தையாக மாறி பள்ளிக்கூடம் போகவேண்டும் என்ற ஏக்கம் ஏற்படுவதுண்டு. மாலையில் விடும் போது புத்தக மூட்டையின் பாரம் தெரியாமல் புன்னகைத்தபடி வகுப்பிலிருந்து வெளியே வரவேண்டும் என்றெல்லாம் நினைத்திருக்கிறான்.

ஆனால் இன்றோ அவனுடைய மனநிலை முற்றிலும் வேறுமாதிரி இருந்தது. அவனுக்குள் பிள்ளை நேற்று அடிவாங்கியதே பெரிதாகப் படர்ந்திருந்தது. அதையே நினைத்து நினைத்து மனம் கலவரப்பட்டது. யார் என்று பார்த்துக் கண்டிக்க வேண்டும் இந்தப் பிரச்சனையை இப்படியே விடக்கூடாது… யாராயிருந்தாலென்ன… நீயா நானா என்று பார்த்துவிட வேண்டும். வன்மம் தலைக்கேறியது. உடலை முறுக்கிக் கொண்டு பள்ளி வளாகத்தில் நுழைந்தான்.

சுமக்க முடியாத மூட்டையாக ஷோல்டர் பேக்கை சுமந்தபடி வெளியே வந்தான் விக்கி. ஸ்கூல் விட்ட சந்தோஷம் ஒரு பக்கம். சற்றுத் தொலைவிலேயே அப்பாவைப் பார்த்து விட்ட பூரிப்பு மறுபுறம். கைகளை ஆட்டிக்கொண்டு வேகமாக வந்தது பிள்ளை. அருகில் வந்து அப்பாவின் கையை பிடித்துக்கொண்டு ஐஸ்கிரீம் வண்டியைக் காட்டியது.

“விக்கி. உன்னை அடிச்சது யாருன்னு காட்டு முதல்ல. அவனைப் பாத்து கண்டிக்கனும். யார் அது. எங்கே இருக்கான் அவன்…இன்னைக்கு மறுபடியும் ஏதாவது வம்பு பண்ணினா…” கோபமாகக் கேட்டான்.

“இல்லை டேடி யோகேஷ் ஒன்னும் பண்ணலை.”..என்றபடி சற்று நேரம் கூட்டத்தில் இங்குமங்கும் தேடிய பிள்ளை

“அதோ அங்க இருக்கான் டேடி” என்றது. ஆவேசத்துடன் பிள்ளை கைகாட்டிய பக்கம் பார்த்தான். சுந்தரத்தின் கைகளைப் பற்றிக் கொண்டு நின்றது யோகேஷ். அப்படியே திகைத்துப் போய் நின்றான் சில வினாடிகள். அந்தக் கால் மணிநேரத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் அவரை சந்திக்க நேர்ந்தது… இப்போது அவர் தன்பக்கம் திரும்பாமல் இருக்கவேண்டும் என்று நினைத்தான் குமார்.

“வேணாம் விடுங்க டேடி” என்றது பிள்ளை.

“வாங்க போலாம்…”

பிள்ளை கையை பிடித்து இழுக்க அந்த பிஞ்சுக் கரங்களில் கட்டுப்பட்டு ஐஸ்கிரீம் வண்டியை நோக்கி நகர்ந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *