கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 25, 2018
பார்வையிட்டோர்: 8,338 
 

ச…ரி….க…ம…ப…த…நி…

சரிகமபதநி..நிதபமகரிச….ஆ….அ…ஆ…அஅ

“ஏன்டி தனக்கு வராத சங்கீதத்த இத்தன கஸ்ட்டப்பட்டு வரவெக்கொனுமா?” வாப்பாவின் குரல். “அவர்தான் உயிரோடு இல்லையே..பின்ன..எப்படி?” என்ற மன பயத்தை வெளியே காட்டாமல் இன்னும் அந்த அறையையிலேயே இருக்கிறாள்.

அறையென்றாலும் அறை அப்படியொரு அறை. வெள்ளை மை பூசப்பட்ட சுவர்கள். பெரிய அளவான மாதக் கலெண்டர் ஒன்று தொங்கவிடப்பட்டிருக்கா? இல்லை. சரி வாப்பாவின் புகைப்படம் பிரேம் பண்ணி மாட்டியிருக்கா அதுவுமில்லை. சுவர் மணிக்கூடு… இல்லை. விதவையோ என்று நினைக்கத் தோன்றும் வெறும் வெள்ளைச் சுவரோடு ஒட்டினாற்போலிருக்கும் கதவின் பக்கமாக வாப்பாவின் கறுப்புக் குடை மட்டும்.

சிவப்புச் சீமெந்து இழுத்த தின்ணை, ஒரு பன் பாய், பெரிய கொட்டன் பஞ்சு நிறைத்த தலையணை, இளஞ்சிவப்புப் போர்வை. சில தினங்களாக பாயின் கீழ் குடியிருந்த ஒரு தொகை எறும்புகள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன. அபாரமானதொரு அணிவகுப்பு.

“ச..ரி…க..ம…ப…த..நி…..” என்று தொடங்கிய ஸ்வரங்களை நிறுத்தி போர்வையை விலக்கிவிட்டு எறும்புகளின் அணிவகுப்போடு தவழ்ந்து கதவு வரைக்கும் சென்றுவிட்டாள் அனுஷா. கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்த கணவன் “நாளை கோர்ட்டுல தீர்பாகிடும் அனு” இப்ப நீ என்ன பண்ணப்போற?” என்று கேட்டுக்கொண்டு கதவைத் திறந்தபடியே வைத்துச் செல்கிறான் பக்கத்து பாத் ரூமிற்கு.

தின்ணையில் கைகளை அழுத்தி எழுந்துகொண்டு பாத் ரூம் கதவருகே சென்று “முடிவைப் பார்த்துச் சொல்லுங்கோ” என்றாள்.

“ம்..சரி..சொல்றன்” என்றான் பதிலுக்கு.

அந்த இசைக் கல்லூரியில் நடன தாரகையாக, பாடும் குயிலாக அனுஷா டீச்சர். நடிகை பானுப்ரியாவின் நடன கேசட்டுகளையும், திரைப்படங்களையும் விடாது பார்த்துவந்த ஆர்வம்தான் ஆடவைத்துவிட்டது. அவள் குரலில் எப்போதும் ஒரு இனிமை கலந்திருக்கும்.

ஒரு வருடம் கூட இல்லை.

எட்டு மாதங்கள் நிறைவுபெற இன்னும் சில தினங்களே இருக்கின்றன. அதற்குள் பாதியில் முறிந்து விழுந்தது கனவு.

வீட்டில் கல்யாணப் பேச்சு. காலில் ஒரு நீளமான பாம்பு சுற்றிக்கொண்டாற்போல் உணர்வில் அனுஷா.

“எனக்கு இப்ப இந்த கல்யாணம் பண்ணிக்கிற எண்ணமில்ல. உங்களுக்கு நான் நடனம் ஆடுறதுதான பிரச்சின.. நான் ஆடப்போகமாட்டன் வீட்டுல இருந்துக்கிறன்… ஆனா இந்த கல்யாணக் கதய மட்டும் மறந்திடுங்க சொல்லிட்டன்.” இது அனுஷா.

“எப்ப என்ன செய்யனுமென்னு எங்களுக்குத் தெரியும் வாப்பா மட்டும் இப்ப மௌத்தாகாம இருந்திருக்க இன்னேரம் பளாரென ஒன்டு போட்டிருப்பார் உனக்கு” இது உம்மா.

“ஆ…என்ற வாப்பா அப்புடியான ஆளில்ல” இது அனுஷா.

இப்போது கழுத்திலும் பாம்பைச் சுற்றி காட்டில் விட்டாற்போல் உணர்வு அவளுக்கு.

எவ்வளவு அழுதும் காரியத்தில் வெல்ல முடியாமல் போயிற்று அவளுக்கு.

கல்யாணத்திற்குப் பிறகு

சில நாட்கள் அதே உணர்வில் வாழ்ந்தவளை அவன் நெருங்கி கழுத்தில் சுற்றியிருந்த அந்த நீளமானபாம்பையும், காலில் சுற்றியிருந்த நீளமான பாம்பையும் மெதுவாக பிரித்தெடுத்து அதன் பாதையில் போக விட்டு அவள் தோளிலே கைகளைப் போட்டு அதே காட்டுக்குள் அழைத்துச் செல்கிறான். அங்கு இருக்கும் அழகிய மரங்களின் வனப்பையும், பறவைகள் ஒலியையும், அமைதியையும் அவளை அனுபவிக்க விடுகிறான். அதே கல்யாணக் காட்டிற்குள் இன்பமாய், மனம் குதூகலித்துப்போய் வாழ்வின் நாட்களை கடந்துகொண்டும், தினம் கணவன் கொண்டுவந்து கொடுக்கும் பல நிற குருவிகளையும், கிளிகளையும் மற்றும் லவ் பேட்ஸ்களையும் வளர்க்க ஆரம்பித்துவிட்டாள். வீட்டில் எங்கு பார்த்தாலும் அழகிய பறவைகளாகவே தெரிந்தன.

ஜன்னல் கட்டுகளில் ஏறி நடந்து விளையாடும் கிளிகள் ஒரு புறம். அலுமாரிகளில் சிறகடித்து ஓடி; பல வித குரல்களை எழுப்பும் லவ் பேட்ஸ்களும் பார்ப்பதற்கு கொள்ளை அழகாக இருந்தது அனுக்கு.

இப்படியான கணவன் மார்களை காண முடியுமா? என்று அனுஷாவின் உம்மாவை பூரிப்படையச் செய்துவிட்டான்.

அனுஷாவின் விரலில் தொடங்கி தோள் வரை சில கிளிகள் நடந்து திரியும். கிளிகளும் லவ் பேட்ஸ்களுமாக 504. வெள்ளை முயலும் நான்கு இருக்கின்றன.

“ச…ரி….க….ம….ப….த….நி…”இது அனுஷா.

“ச.ரி.க.ம.ப.த.நி.” இது கிளிகள்.

தனது நடனத்தையும், சங்கீதத்தையும் கிளிகளுக்கு கற்றுக்கொடுக்க ஆரம்பித்துவிட்டாள். இதில் பேரானந்தப்பட்டான் அவள் கணவன்.

“ச……..ரி…….க…….ம…….ப…….த…நி…”

அவள்.

“சரிகம..பதநி..” இது கிளிகள்”

மழைக்கும், மரங்களுக்கும் விவாகரத்து முடிந்தாற்போல் சூடு. இன்னும் சில மாதங்களுக்கு இப்படியே. அன்று காலை ஆறு மணியிருக்கும்; பறவைகளுக்கென்று அமைக்கப்பட்ட பெரிய கூடு, அடுத்தாற்போல் ஒரு பகுதி பூச் செடிகள். பச்சைப் புற் தரையும். காட்டிலிருந்து திசைமாறி வந்திருக்கலாம் அந்த வெள்ளை ஆண் மயில். வாசலில் தன் தோகையை விரித்து ஆடுகிறது. அந்த காலை வேளையில் முதன் முதலாக வீட்டில் கண் விழிக்கும் அனுஷா வாசலுக்கு வந்தவுடன் முகத்தில் யாரோ அடித்ததுபோன்று உணர்ந்தாள். மயிலின் ஆட்டத்திற்கு முன்னால் தனது நாட்டியம் வெறும் தூசு என மனதுள் எண்ணிக்கொண்டு மயிலையே பார்த்து நிற்கிறாள். பின்னால் உம்மாவும் அவரசமாக இயற்கைக் காற்றைச் சுவாசிக்க விரும்பி மூச்சித் திணறிய மனிசி மாதிரி அடித் தொண்டை வழியாக ஒரு இருமல் சத்தத்தை வைத்து; தானும், சில மாதங்களுக்கு தனது ஒரு காலாக மாறிவிட்ட கைப் பிடி வைத்த தடியுமாக நின்றாள். அண்மையில்தான் அனுஷாவின் உம்மாவுக்கு நடக்க முடியாமல் போனது. டாக்டர் சொற் பிரகாரம் மருந்தும் மாத்திரையும், ஊன்று தடியுமாக சில மாதங்களையோ, வருடங்களையோ கழிக்க வேண்டும் அல்லாஹ்வுக்குத்தான் அது வெளிச்சம்.

“கொஞ்சம் வழி விட்டு நில்லு மன” இது உம்மா.

“அங்கப் பாரு உம்மா அழக..மயிலு ஆடுற அழக…என்ற கமெரா போன எடுத்துண்டு வாரன்” பெட் ரூம் பக்கம் நோக்கி ஓட்டம் பிடிக்கிறாள். மெலிந்த உடல் ஓடி மறைந்ததும், மீண்டு திரும்பியதும் சில நொடிப் பொழுதுகளே.

“இப்புடியான பறவையள் இப்பதான்டி மகள ஊருக்குள்ள வருது. முன்னெல்லாம் யுத்தமும், எங்க பாத்தாலும் துவக்கு வெடிச் சத்தமும் மனிசனுக்கே வெட்டக்கி எறங்கேலா..என்ன ஒரு பயங்கர காலமடி.. உங்க வாப்பாவும் வயல பாத்துட்டு வாரன் என்டு போன மனிசன்தான்டி மையத்தா வந்தாரு” கண்ணீர் மெல்ல வடியும் முகத்துடன் அனுஷாவின் உம்மா.

பறவைகளின் சந்தோசத்தில் நாம் பங்கெடுக்கும்போது நமது சந்தோசத்தில் பறவைகளும் பங்கெடுக்கும். சந்தோசத்தில் மட்டுமல்ல அப்படி சந்தர்ப்ப வாதியான மனித குணம் அவைகளுக்கு இல்லை என்பதை அனுஷாவின் பறவைகளிடத்தில் கண்டுகொள்ள முடியும். அவளுடன் கூடவே உறங்கும் சில கிளிகளும். அனுஷா எழுந்து நடனம் ஆடினால் தானும் ஆடும். ஒவ் என்னா ஒரு காட்சியது.

விடிந்தும் எழுந்திருக்கவில்லை சார்லிஹசன். அனுஷாவின் கணவன். அப்போ இன்று விடுமுறை நாள். இவர் சார்லி சப்லின் ( Charlie chaplin) இன் பரம ரசிகன். தன் மொபைலுக்கு நண்பனொருவன் அனுப்பிய Charlie chaplin இன் நகைச்சுவை வீடியோவைப் பார்த்து வயிறு குலுங்கி இரித்துக்கொண்டு படுக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை. இனி இவர் எழுந்திருக்க காலை ஏழு மணியையும் தாண்டும். சில நேரம் டீயை அருந்திவிட்டு மீண்டும் ஒரு மணிநேரம் உறங்குவான். எல்லா லீவு நாட்களிலும் இப்படித்தான் சொல்லி வைத்தாற்போல் நடக்கும்.

“ஹி….ஹி…ஹா…ஹி” இந்த சிரிப்புச் சத்தம் விட்டு விட்டு வரும். அரை மணிக்கும் மேலாகும் ஓய்வதற்கு.

ஒரு மறை இப்படித்தான். கல்யாணமான புதுசு. ஊர் அருகே இருக்கும் வனப் பகுதி. நீரோடைகள், அழகிய பச்சை மரங்கள், உள்ளே இருக்கும் ஒற்றை வழிப்பாதையினூடாக அனுஷாவை அழைத்துக் கொண்டு போகும் வழியில் நாவற் பழங்கள், காரப்பழம் எல்லாம் பறித்துக் கொடுத்து,Charlie chaplin இன் நகைச் சுவை ஒன்றை நடித்துக்காட்டி அவளை வயிறு குலுங்க சிரிக்கச் செய்தான்.

“ஒன்று சொல்லட்டுமா?” இது அனுஷா

“இல்ல பத்து சொல்லு” இது சார்லிஹசன்.

“காதலுக்கு கண் இல்லன்னு சொல்லி புளிச்சுப்போச்சு..காதலுக்கு கால் இல்ல.. இருந்தா இங்க வந்திருக்குமா?”

“அப்புடியா? நம்ம காதலுக்கு சிறகு இருக்கு அது தெரியுமா?”

அதுக்காக பறந்து போயிடாதீங்கோ”

“விடுமுறை நாளின் படுக்கையை விட்டெழுந்து ஒரு இருமலுடன் வாசல் நோக்கி வந்தான் சார்லிஹசன். மருமகனுக்கான மரியாதையை தன் தளர்ந்த புன்னகையால் செலுத்தினாள் மாமி.

அதிகமான பாதணிகளைச் சுமக்காத வாசற் படி, விரிந்த மணல் வாசல். பறவைகளின் கூட்டைத் திறந்துவிட்டு வந்தான் சார்லிஹசன். இப்போது “பறவை வாசல்” காட்சியளித்தது. நீண்ட நேரமாக தோகை விரித்து ஆடிய மயில் எழுந்து பறந்து செல்கிறது. கமெரா போனும் கையுமாக நிற்கும் அனுஷா. காலை வெய்யிலின் கதிர் வீச்சு ஆரம்பம். இளங்காற்று. என்று பொழுது ஒரு தினுசாக இருந்தது.

“பட…பட…பட…ட….பட…”என்ற சிறகுகளின் ஓசையை எழுப்பி 504 பறவைகளும் எழுந்து ஒரு திசையை நோக்கிப் பறக்கின்றன. சிறகிலிருந்து வந்த சத்தத்திற்குப் பயந்த வெள்ளை முயல்கள் ஓடிப்போய் சுவரில் உடலைப் பதித்து ஒடுங்கி நிற்கின்றன.

“என்ற றகுமானே..” இரு கைகளையும் மேலே உயர்த்திக் கொண்டு அனுஷா.

அன்று பிரிந்துபோன அனுஷாவின் சந்தோசம் இன்னும் மீண்டு வரவில்லை. எதுவும் நிலையில்லாத வாழ்வுதான் இது. எல்லாம் புதிய மாற்றங்களையே எதிர்பார்க்கின்ற நிலையில் அவள் கண்களுக்குள் இன்னும் அந்தப் பறவைகளின் கால்கள் நடனமாடிக்கொண்டேயிருக்கின்றன.

நாளைய டீவி நாடகத்தில் வழங்கப்படவிருக்கும் நீதிமன்றத் தீர்பை எதிர் பார்த்து மீண்டும் அறைக்குள் சென்றாள்.

அனுஷாவின் பழைய துடிப்பையும், சந்தோசத்தையும் திருப்பிப் பெற தினம் இறைவனைப் பிராத்தித்துக் கொண்டிருக்கும் தாய்க்கும், கணவனுக்கும் மத்தியில் வீடு முழுவதும் பேரமைதியும், நிறுத்த மறந்த வரவேற்பறை மின் விசிறிக் காற்றின் சத்தமுமே வியாபித்திருந்தது.

பாத் ரூமை விட்டு வெளியே வந்தவன் தனக்கும் அனுஷாவிற்கும் இரண்டு கப் டீயினை சுவையாக தயாரித்துக்கொண்டான். அறையுனுள் சென்று டீயை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் பார்த்து அருந்தும்போது அந்த பழைய புன்னகையினை மெல்ல வெளியேற்றி கணவன் மனதை சற்று புதுப்பித்துவிட்டாள்.

இந்தக் காலத்தில் படித்த, அதுவும் நல்ல உத்தியோக மாப்பிள்ளை கிடைப்பதென்பது குதிரைக் கொம்பதான். ஒரு காசும் சீதனம் வாங்காமல் அனுஷாவை மணந்து ஆனந்தமாய் வைத்திருக்கும் சார்லிஹசன் போன்று ஒருத்தனைக் காட்ட முடியுமா? என்பது எப்போதும் அனுஷாவின் தாய் மனதில் பதிந்துவிட்ட சவால்தான். இப்போது அந்த நான்கு வெள்ளை முயல்களையும் கவனித்துக்கொண்டு தன் பொழுதைக் கழித்து மகளுக்கு ஆறுதலையும், புத்திமதிகளையும் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

மறு நாள் டீவி நாடகத்ததின் கடைசிப் பகுதியான நீதி மனறத் தீர்ப்பை அனுஷாவிடம் சொல்ல வேண்டிய கடமையுடன் தான் மனேஜராக கடமையாற்றும் வங்கிக்குச் செல்லும் ஆயத்தங்களைச் செய்தடி

“அனுஷா…” என்றான்

“ஓய்….” என்றவாறு வெளியே வந்து சார்லிஹசனின் பக்கத்தில் நின்றாள்.

“நீ எதிர் பார்த்த தீர்புதான்..கால் இல்லாம கஸ்டப்படுற வினோத் குடும்பத்துக்குத்தான் நீதி கிடைச்சிருக்கு அனு.”

என்று சொல்லிக்கொண்டு தனது இடது பக்க பாதி பொய்க் காலினை முடங்கால் மூட்டில் வைத்துப் பொருத்தி சரி பார்த்துக் கொண்டான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *