கதையாசிரியர்:
தின/வார இதழ்: தென்றல்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 3, 2014
பார்வையிட்டோர்: 13,500 
 
 

“இவள் தன்னை உணர்ந்து அதன் மூலம் என்னை உணரும் ஒரு காலம் வரும். அது வரை, இவள் தன்னைப் புரிந்து கொள்ளப்படாதவளாயும் என்னிலிருந்து வேறுபட்டவளாயும் காண்பித்துக் கொள்வது தொடரும்.” இளம்பதின்ம வயது (‘டீனேஜ்’) மகளுடனான சிக்கலான உறவு பற்றி ஒரு தாய் சொல்வதாக எனது சிறுகதையில் இடம் பெறும் வரிகள் இவை.

1998-2003 காலகட்டத்தில், தாய்-மகள் உறவு பற்றி நிறையவே எழுதியிருக்கிறேன் என்று இப்போது தோன்றுகிறது. சிறுகதைகள் மட்டுமல்ல. 2001-இல் எழுதிய “இக்கரையில்…” நாவல் கூடப் பல தலைமுறைத் தாய்-மகள் உறவுகளின் தொகுப்பு என்பது என் முதல் வாசகரான கணவர் உள்படச் சில வாசகர்களின் கருத்து. இரண்டு வருடங்கள் கழித்து மீள் வாசிப்புக்குப் பின்னும் கருத்து மாறவில்லை.

அப்பாவும் தாத்தாக்களும் எனக்கு முக்கியமானவர்களே. ஆனால், அம்மாவும் பாட்டிகளும் உயிரணுக்களில் கலந்து நிற்கிறார்கள். இவர்களின் கனவுகள், அவற்றிலிருந்து தப்பிக்கும் தீவிரமான ஆசை என்னும் இரண்டு பெரும் எதிரெதிர்ச் சக்திகளே நான் நானாக உருவாகக் காரணமென்று நான் நம்புகிறேன்.

எந்தச் சமூகமும் பெண்களிடமே அதிக எதிர்பார்ப்புகள் கொண்டதாய் இருக்கிறது-இன்றும் கூட. இத்தகைய சூழலில், பொறுப்பு ணர்வுடன் கூடிய சுதந்திரத்தை அம்மா மகளுக்கு அளிக்கலாம். அல்லது தனது விலங்குகளையே எடுத்து மகளுக்கும் பூட்டலாம். என்னை விடுதலை செய்ததினால் என் அம்மாவை அறிவுச்சுடர் என்று நான் நினைக்கிறேன். விடுதலையை அழுத்தமாகக் கேட்கும் அறிவுச் சுடர் எனக்குள் இருந்ததாய் அம்மா நம்பி யிருக்கலாம்.

யார் முதல் அடி எடுத்து வைத்தார்கள் என்பதில் தெளிவில்லை. அம்மாவும் நானும் ஏதோவொரு வகையில் ஒருவரையொருவர் சார்ந்து கலந்து நின்றதாய்த் தெரிகிறது. பிரித்துக் காட்டுவது சுலபம் அல்ல. தாயும் மகளும் ஒருவரையொருவர் பாதிப்பது உண்மை; பாதிப்பின் தன்மை தனிப்பட்டது. ஒரு நளினமான நடனம் போன்றது. முதல் அடி எடுத்து வைப்பது யார், பின்பற்றுவது யார், என்பதை எளிதில் சுட்ட முடியாதது.

இதெல்லாம் என் இளம்பதின்ம வயதிலோ இருபதுகளிலோ எனக்குத் தெளிவாய்ப் புரிந்திருக்கவில்லை. நான் புரட்சிக்காரப் பாவனையில் தீவிரமாயிருந்தேன் அப்போது. அம்மாவின் எதிரில் வெளிப்படையாகப் புரட்சி செய்யாவிட்டாலும் என் மனதினுள் பெரிய புரட்சிகள் நடந்து கொண்டேயிருக்கும். அம்மாவின் காலமும் சூழலும் பின்தங்கியவை; அம்மாவால் என்னையும் என் உணர்வுப் பூர்வமான தேவைகளையும் புரிந்து கொள்ள முடியாது; அம்மாவுக்கு ஞானோதயம் வழங்கி அருள் பாலிக்கப் போவது நானே; இவை யெல்லாம் இளவயதில் நான் நினைத்தவை. மனிதச் சரித்திரத்தில் புரட்சிகரமான உணர்வுகள் கொண்ட ஒரே மகள் நான்தான் என்று அப்போது நினைத்துக் கொண்டிருந்தேன். இது எவ்வளவு குழந்தைத்தனம் என்பதும், இந்த மௌனப் புரட்சி என் அம்மா அறிந்ததுதான் என்பதும் இப்போது புரிகின்றன. என் மகளின் மௌனங்கள் என்னுடன் இப்போது பேசவில்லையா.?!

அன்று மகளாய் இருந்ததன் சில பரிமாணங் களை என் தாய்மை விளக்குகிறது இன்று.

“நீங்க பெண்ணியவாதி, அம்மா.” சில மாதங்களுக்கு முன் சென்னையில் அம்மாவைப் பார்த்த போது சொன்னேன்.

“நானா?” என்று சிரித்தார்கள் அம்மா. அந்தக் காலத்துக்கும் சமூகப் பின்னணிக்கும் ஏற்றபடி, மேல்படிப்புக்குப் போக முடியாமல், கல்யாணத்துக்குப் பின் வேலையை ராஜினாமா செய்து, கதை-கட்டுரை எழுதுவதை நிறுத்தி, உன் அப்பாவுக்கு மனைவியாக, மூன்று குழந்தைகளுக்குத் தாயாக வீட்டுக்குள்ளேயே வளைய வந்த நானா பெண்ணியவாதி என்றது அம்மாவின் மெல்லிய சிரிப்பு.

என்னுள் ஒரு மெல்லிய வேதனை. அம்மாவைப் பெண்ணாய் நினைக்க மறந்து விட்டேனே. அம்மாவின் கனவுகள்தானே என்னுள் விதைக்கப்பட்டு வளர்ந்திருக்கின்றன. “என்னை வளர்க்கலையா, அம்மா?”என்றேன். தமக்கு உள்ளிருக்கும் சக்தியையும் திறமையையும் தனக்கும் பிற பெண்களுக்கும் உணர்த்தி, வாழ்க்கையில் அவற்றைப் பயன்படுத்த ஏதுவான சூழலை உருவாக்கித் தரும் empowerment-தான் என் தனிப்பட்ட அகராதியில் பெண்ணியம்.

அம்மா புரிந்து கொண்டார்கள். பேச்சை மாற்றினார்கள். உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டாத தலைமுறை அது.

அவர்கள் கையோடு கொண்டு வந்திருந்த புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஓரங்கள் முக்கோணத் தொடராகக் கத்தரிக்கப்பட்ட, தங்கமாய்ப் பழுப்பேறிய சிறிய கறுப்பு-வெள்ளைப் புகைப்படங்கள்.

“விவேகானந்தா பாறை மேல மண்டபம் இல்லேம்மா?!” தூரத்துப் பின்னணியில் வெற்றுப்பாறை வினோதமாய்த் தெரிந்தது. பாறைக்கூட்டம் மேல் நுரைப்பூக்கள் சிதறும் கடற்கரையில் அம்மா. காற்றில் பறக்கும் புடவையையும், மண்ணில் பறக்க முனையும் தம்பியையும் இறுகப் பிடித்தபடி நிற்கும் அம்மா. ‘ரிப்பன்’ வைத்துக் கட்டிய இரட்டைச் சடையும், குட்டைப்பாவாடையுமாகப் பக்கத்திலேயே நான். தங்கை இன்னும் பிறந்திருக்கவில்லை. பழங்காலத்திய பெரிய அடுக்குக் கேமராவின் பின் அப்பா. அம்மாவின் முகத்தில் வழக்கமான புன்னகை. அந்தப் புன்னகைக்குப் பின்னிருந்த இழப்புகளையும் உணர்வுகளையும் முழுதாய்ப் புரிந்து கொள்ள எனக்கு இவ்வளவு காலம் தேவைப்பட்டிருக்கிறது.

“இது எப்போன்னு நினைவிருக்கா?” மறக்க முடியுமா. புகைப்படத்தில் கறுப்பும் வெளிர் சாம்பலுமாய்த் தெரியும் அந்த உடை உண்மை யில் கறுப்பும் நீலமும் கலந்த உடை. கறுப்புள்ள உடை என்று அம்மா அதைத் தேடியெடுத்துப் போடச் செய்தது ஞாபகம் இருந்தது. உடையில் கறுப்பு போதாது என்று சொல்லி, ஒரு கறுப்பு ‘ரிப்பனைக்’கத்தரித்து வளைத்து, தோளருகே ஊக்கால் குத்தி விட்டார்கள். பிறகு, தம்பிக்கு உடைமாற்றி விடப் போனார்கள். அப்பாவின் முகத்திலும் பரபரப்பு, இறுக்கம். வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்பினதும், சினிமாவுக்குப் போகவா இந்த ஏற்பாடு என்று ஒரே குழப்பம். தார்ச்சாலை வெயிலில் உருகிக் கொண்டிருந்தது. போக்குவரத்தே இல்லை. நெடுஞ்சாலையின் இரு பக்கங்களிலும் மக்கள் கூட்டம். நெரிசலின் வியர்வை. சப்தங்கள். அப்பா என்னையும் அம்மா தம்பியையும் தூக்கி வைத்துக் கொண்டார்கள். திடீரென்று மௌனம். சாலையில் திருவிழா ரதம் போல் ஒன்று எங்களைக் கடந்து போனது. ஒரு நிமிடம்தான். கனத்த மௌனத்துடன் கூட்டம் கலைந்து போனது. நேருவின் அஸ்தியைக் கன்னியாகுமரிக் கரைசலுக்குக் கொண்டு போகும் பாதை என்று அப்பா சொன்னார்கள். அன்றைய அரசியல்-பொருளாதார-வெளியுறவுக் கொள்கைகளை இப்போது அறிவுப்பூர்வமாக

என்னால் விமரிசனம் செய்ய முடியும். ஆனால், சிறுகுழந்தையாக அன்று என் மனதில் பதிந்த உணர்வு வேறு. இலட்சியக் கனவுகள் இன்னும் வாடியிராத ஓர் இளம் தேசத்தின் மக்கள் ஒன்றாகக் கூடி, ஒரு தலைவருக்குக் காட்டிய ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான எளிமையான மரியாதை அது. அம்மா கண்களில் இப்போதும் ஈரம்.

அம்மா இன்னும் நிறையப் படங்களை என்னிடம் தந்தார்கள். “அமெரிக்காவுக்குக் கொண்டு போக.”
“இங்கேயே நம்ம வீட்டிலே இருக்கட்டுமே, அம்மா?”

“ரொம்ப தூரத்திலே இருக்கிற உனக்குத்தான் ·போட்டோக்கள் வேணும். உன் மாமியார் சரின்னு சொன்னா, உன் மாமனாரோட சுதந்திரப் போராட்டத்து ·போட்டோக்களையும் எடுத்திட்டுப் போ. உன் மகளுக்குக் காட்டு. எல்லாத்தையும் பற்றிச் சொல்லு.” அம்மா என்ன நினைத்தார்களோ, ஒரு வினோதமான கேள்வி கேட்டார்கள். “·போட்டோலே இல்லாத எதுவும் உனக்கு நினைவிருக்கா?”

என் முதல் ஞாபகமாக ஏதோ ஒரு சிறுகதையில் கூட எழுதியதாய் ஞாபகம். சொன்னேன். அப்போது எனக்கு வயது மூன்றோ நான்கோ இருக்கும். ஒரு மழை முடிந்த சாயுங்காலம். அப்போதுதான் மதியத் தூக்கம் முடிந்த கலக்கத்தில், இது காலையா, பல் விளக்க வேண்டுமா என்று தெரியாமல் குழம்பிய நேரம். பச்சைக் கண் பதித்த ·பிலிப்ஸ் ரேடியோவுடன் சேர்ந்து பாடிக்கொண்டே எனக்குத் தண்ணீர்க்கா·பி கொண்டு வந்த அம்மா. “தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே….” ஜானகி போலவே கள்ளக்குரலில் பாடிய அம்மாவும், மப்பும் மந்தாரமுமாய் இருந்த வானமும், மறை வெறித்த வாசமும், உள்ளே தெறித்திருந்த மழையில் பாதத்தைச் சில்லிட்ட சிமெண்ட்டுத் தரையும், சன்னல் கம்பிகளின் நடுவே சிறகைச் சிலிர்த்துக் கொண்டிருந்த ஈரக்குருவியும்…இவையெல்லாம் இன்றும் கூட இந்தப் பாட்டைக் கேட்கும் போது தெரிவதைச் சொன்னேன்.

அம்மா ஆச்சரியப்பட்டார்கள். “வேறே என்ன நினைவிருக்கு?”

ஐந்தாம் வகுப்புப் பருவத்தில் அம்மாவின் அப்பாவின் புத்தகங்கள் அடங்கிய மரப் பெட்டியை ஒரு மழைநாளில் நானும் தம்பியுமாய்க் கண்டுபிடித்தது. இருவரின் முத்து முத்தான கையெழுத்துக் குறிப்புகளுள்ள நோட்டுப் புத்தகங்கள். மில்ட்டனின் ‘பாரடைஸ் லாஸ்ட்’டுடன் சேர்ந்து வெளிவந்த பாரதியாரின் முழுத்தொகுப்பு நூல். ஓரங்களில் கறையான் அரித்து, மண்ணிற அட்டையில் கறை படிந்த, ஆனால் இன்னும் படிக்கக்கூடிய பாரதி புத்தகத்தைக் கண்ட மகிழ்ச்சி. புரியாதோ என்கிற பயம். எப்படியோ புத்தகத்தை வாசித்து முடித்தது (நிறைய விஷயங்கள் புரிந்திருக்க வில்லை). அவரது முடிக்கப்படாத கதை எப்படி முடிந்திருக்கும் என்று நினைத்துக் குழம்பியது. இன்று வரை மனதில் ஆழமாய்ப் பதிந்திருக்கும் ‘வழக்கமாக ஹிந்துப் பெண்களிடம் காணப்படும் பொய்ந்நாணம் அவளிடம் இல்லை’ என்ற ‘சந்திரிகையின் கதை’ வரி……

“என் கதை போதும்மா, உங்க கதைகளைச் சொல்லுங்க.”

அம்மா இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் வான்வழித் தாக்குதலை எதிர்பார்த்திருந்த மதராஸ் பற்றிச் சொன்னார்கள். சுதந்திரம் கிடைத்த நள்ளிரவில் சீனித் தட்டுப்பாட்டினால், எல்லாருக்கும் அச்சுவெல்லம் கொடுத்தது பற்றிச் சொன்னார்கள். கறுப்புப்பண ஒழிப்புக்காக ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாத நோட்டுகளாக அறிவிக்கப்பட்டது பற்றிச் சொன்னார்கள். அம்மாவின் கிராமத்துக் கதைகளில் சிரிப்பும் உயிர்ப்பும் தளும்பின. அந்தக் கதைகளில் உள்ள பலரும் இப்போது இல்லை. வாழ்க்கை தொடரத்தான் செய்கிறது.

“அடுத்து எப்போ எங்க வீட்டுக்கு வருவீங்கம்மா? அவரும் உங்களை வரச் சொன்னாரே…”

“அதான் உங்க ரெண்டு பேர்கிட்டேயும் முந்தியே சொல்லிட்டேனே…இத்தனை வருஷம் வந்தாச்சு, இனி வர முடியாதுன்னு…”

“வறட்டுப் பிடிவாதம்மா…”

“சொந்த மண்லே, சொந்த வீட்டுலே சாகணும்னு நினைக்கிறது வறட்டுப் பிடிவாதமா?”

இதற்கு என்னிடம் பதில் இல்லை. விமான நிலையத்தில் விடைபெறும் போது வழக்கமான மௌனம். புலம் பெயர்தலுக்குச் சில விலைகள் உண்டு. இப்போது புரிகிறது.

மீண்டும் தாய்-மகள் உறவு பற்றி நினைத்துப் பார்க்கிறேன். அன்னையர் கனவுகளைச் சுமந்திருக்கும் நம் மூலம் அவர்களும் வருங்காலத்துக்கு முன்னகருகிறார்கள். இந்த நினைப்பின் மையத்தில் ஏதோ ஆறுதல் தெரிகிறது.

– ஜூன் 2003

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *