கவிதா விட்டத்தை வெறித்தபடி கிடக்கிறாள். .அவள் மனதுபோல அதுவும் இருண்டுகிடந்தது. நேரம் அதிகாலை மூன்று இருக்கக்கூடும்.அவளால் ஒருகணம் கூட நித்திரை கொள்ள முடியவில்லை. தன் வாழ்க்கை பற்றிய பயம் பெரும் பூதமாய் வடிவுகொண்டு அவளை வெருட்டிக்கொண்டிருந்தது..

கடந்த பத்து நாடகளாய் சிவானந்தன் ஆஸ்பத்திரியில் கோமாவில். உடல் அசைவற்று கிடக்கிறான். அவள் அழைக்கும்போதெல்லாம் முகம் கோனலாகிக் கண்ணீர் வடிகிறது. அந்தக்கண்ணீரை முழுமையாய் மொழிபெயர்க்க முடியாவிட்டாலும் தனக்காக உள்ளம் வருந்தி வடிக்கும் கண்ணீர் அது என மட்டும் அவள் புரிந்து கொள்கிறாள்.
ஆனால் நேற்று கண்ணீர்கூட வற்றிவிட்டதோ,,,’? எந்த அசைவும் காட்டவில்லை..
அவன் பிழைப்பதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்பதை நேற்று மாலை மருத்துவர் அவளுக்குக் கூறியதில் இருந்து அவள் மனதின் நிம்மதி முற்றாகப் போயிருந்தது.
அவளுக்கும் சிவானந்தனுக்கும் கலியாணமாகி இருபத்தி மூன்று வருடங்கள் முடிந்துவிட்டன. அவர்கள் ஒன்றும் ஆதர்ச தம்பதிகள் இல்லை. மனம் சிறிதும் ஒட்டாத வாழ்க்கை தான்.
சிவானந்தனுக்கு கவிதா இரண்டாந்தாரம்தான். அவனது முதல் கலியாணம் சில மாதங்களிலேயே விவாகரத்தில் முடிந்துவிட்டது.
சிவானந்தனின் தாயின் நிர்பந்தித்ததால் கவிதாவின் கழுத்தில் அவன் தாலிகட்டிவிட்டான்.
கவிதாவுக்கு தகப்பனில்லை. விதவைத்தாயால், தானாக வந்த வெளிநாட்டு சம்பந்தத்தை விட்டுவிட முடியவில்லை.
பொருத்தமில்லாத இருவருக்கிடையே ஒரு திருமண பந்தம்.
அவள் இத்தாலிக்கு ஒருவாறு வந்துவிட்டாள்.
கவிதா மிகவும் சுமார்தான் . உடல் சற்று பருமன் தான்,,,
தொய்வுநோய்வேறு ,…
சிவானந்தன் நல்ல உயரம் பார்க்க நல்லாக இருப்பான்.
இந்தப்பொருத்தமின்மை மட்டும்தான் சிவானந்தனை உறுத்திக் கொண்டிருந்ததாகச் சொல்லமுடியாது..அவனுக்குத் தனது திருமண உறவிலும் தனது தாய் வீட்டு உறவுகளில் தான் கூடிய நாட்டம் இருந்தது. அவர்களுக்கு உழைத்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதில் தான் அதிக சந்தோசத்தை அவனடைந்தான். இதனாலோ என்னமோ கலியாணம் செய்த புதிதில் காரணமில்லமலே சிவானந்தன் கவிதாவின் மீது எரிந்து விழுந்தான். அவனது ஏச்சும் பேச்சும் கவிதாவின் மனதில் வெறுப்பையும் விரத்தியையும் ஏற்படுத்தின.அவளும் விவாகரத்துச் செய்து பிரிந்து விடலாமோ என்று பலதடவைகள் எண்ணி இருக்கிறாள்.
விவாகரத்தின் பின் தாய்க்குப் பாரமாக இருந்துவிட நேருமே என்ற பயம் மட்டுமல்ல அவள் அப்போது கருவுற்றிருந்தாள். அதனால் எடுத்தோம் கவுத்தோம் என்று அவளால் முடிவெடுக்க முடியவில்லை.
ஆனால் அந்தக்குழந்தை ஐந்து மாதக் கருவாக அழிந்தபோது கவிதா மிகவும் உடைந்து போனாள்.
அதன் பின் இரண்டுதடவைகள் குழந்தை உரு வானதும் கவிதாவின் மனதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பின் மூன்று மாதத்திலும் ஐந்து மாதத்திலும் அழிந்துபோனதும்.. பிறக்காமலே அவை அவளது ஆசைகள் கனவுகளையும் அடியோடு அழித்துப் போயின. அவள் மனமும் வரண்டு புண்ணானது.
ஏற்கெனவே தொய்வுடம்புக்காரியான அவளது உடல் அரோக்கியம் மட்டுமல்லாமல் மன ஆரோக்கியமும் சிதைந்து சிலகாலம் மனக்குழப்பத்திற்கும் மருத்துவம் செய்யவேண்டிய நிலைக்கு அவள் உள்ளானாள்.
இதன் பின் சிவானந்தனுக்கும் கவிதாவுக்கும் இடையேயான உறவில் மேலும் விரிசல் உண்டாகிவிட்டது. அப்பொழுதெல்லாம் சிவானந்தனின் ஏச்சும் பேச்சும் கூட அவளுக்குப் பழக்கமானது.
ஒரு கூரைக்குள் இருவரும் இரு வேறு உலகில் வாழத்தொடங்கினர்.
சிவானந்தனின் உழைப்பின் பெரும் பகுதி அவன் குடும்பத்தினருக்கே செலவானது, மிகுதி வீட்டு வாடகை வீட்டுச் செலவு எனப் போய்விட்டதால் எந்தச் சேமிப்பையும் அவன் கொண்டிருக்கவில்லை.
கவிதா வேலைக்குப் போவதை அவன் அனுமதிக்கவில்லை என்பது மட்டுமல்ல கவிதாவின் உடல் நிலை கூட அவள் வேலைக்கு செல்லும் அளவுக்கு இருக்கவில்லை என்பதுதான் உண்மை .
கடந்த சில அண்டுகளாக சிவானந்தனும் களைத்துப் போனானோ என்னவோ ஏசுவதை நிறுத்தி இருந்தான்.சற்றுச் சுமூகமாகத்தான் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.
அதுவும் கொரோனாவின் வருகைக்குபின் சிவானந்தன் அடிக்கடி நோயுற்றபோது கவிதாவைப்பற்றி சிந்தித்தான்போலும் , தனக்குப் பின் கவிதா தனித்துவிடுவாளே அவளுக்கு என எந்த ஆதாரத்தையும் தான் ஏற்படுத்தவில்லையே என்ற குற்ற உணர்வு அவனைச் சுடத்தொடங்கியிருக்க வெண்டும்..
தனக்கு ஏதாவது நிகழ்ந்தால் இத்தாலியில் கவிதாவால் தனித்து வாழமுடியாதே என அவனது நெருங்கிய நண்பனான பகீரிடம் சொல்லிக் கவலைப் பட்டிருக்கிறான்.
கவிதாவிடம் கூட கடந்தசில மாதமாக அன்பாக ஆதரவாகப் பேசத்தொடங்கி இருந்தான்.
அனால் காலங்கடந்த ஞானத்தால் என்ன பயன்….?
கவிதாவுக்கு ஒரே ஒரு சகோதரிதான் ,அவவும் திருமணமாகி சிங்கப்பூரில் வாழ்கிறா,
கவிதாவின் தாய் ஊரில் இருந்தவா. அவவும் கடந்த வருடம் இறந்து விட்டதால் கவிதாவுக்கு நெருங்கிய உறவு என்று ஊரில் யாரும் இல்லை. மற்றைய நாடுகள் போன்று இத்தாலி வசதி வாய்ப்புகள் தரும் நாடுஅல்ல. ஐம்பத்தி நான்கு வயதுவரை வேலை செய்யாதிருந்துவிட்டு இனி வேலைதேடிச் செய்வது என்பது எவ்வளவுகடினமானது , சிவானந்தனுக்கு ஏதும் நிகழ்ந்துவிட்டால்,,,,.உறவு என்று ஆருமற்ற தனிமையில்….அவனின் சொற்ப பென்சனில் எப்படி வாழப்போகிறோம்.… மூளையைப்போட்டுக் கசக்கி பிழிந்ததில் கவிதாவுக்கு தலை பயங்கரமாக இடிக்கிறது. நாக்கு வறண்டு அண்ணத்துடன் ஒட்டிக்கொள்கிறது .தண்ணி குடிக்கவோ மாத்திரைபோடவோ அவளுக்குத் தோன்றவில்லை.
மனமும் உடலும் சோர்ந்த போது அரைமயக்கமாய்த் தூக்கம்… அதில் எதோ எதோ கனவு….அதுவும் தெளிவில்லாத காட்சிச் சுறுளாய்.. சுனாமி அலை.. …விண்ணுக்கும் மண்ணுக்குமாய் பெருகிவர அதில் சிவானந்தன் இழுபட்டுப்போவதாய்.. அவள் கைபற்றலுக்கு அகப்படாது நழுவிச் செல்வதாய்,,,பிணக் குவியலிடையே கண்ணீர் பெருக்கெடுத்தநிலையில் அவன்கிடப்பதாய்…
காதுச் சவ்வை அதிரவைப்பதாய் ஒலிச்சிதறல்…. அவள் திடுக்கிட்டு விழிக்கிறாள்…
காலை ஐந்துமணிக்கு ஆஸ்பத்திரிக்கு போவதற்காக வைத்த அலாரத்தின் ஓலியோடு ஆஸ்பத்திரியிலிருந்து அவளது செல்லுக்கு வந்த அழைப்பும் இணைந்து ஒலிக்கிறது.