காற்றைப் போன்றதடி என் காதல்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 14, 2022
பார்வையிட்டோர்: 4,893 
 
 

சித்தப்பிரமை பிடித்தவனாகவே அவன் எனக்கு அறிமுகமானான்!

ஸ்காபரோ நகரில் எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இரண்டு பிரதான வீதிகள் குறுக்கறுக்கும் இந்தச் சந்திப்பிலுள்ள, இதே பஸ் தரிப்பு நிலையத்துச் சீமெந்து வாங்கில், அவன் அடிக்கடி உட்கார்ந்திருப்பான்.

சந்திப்பின் வடமேற்கு மூலையில் பேர்பெற்ற வர்த்தக வளாகம் ஒன்று அமைந்திருக்கிறது. ஏராளமான அலுவலகங்கள் அடங்கிய, பல அடுக்கு மாடிகள் கொண்ட ‘ப’ வடிவ வர்த்தக வளாகம். இதே கட்டடத்தின் தரைத் தளத்தில்தான் நான் பணியாற்றிவரும் அலுவலகமும் இருக்கிறது.

மடியில் வெடி கட்டி வைத்திருப்பவர்கள் போல, தத்தமது அலுவலகங்களை நோக்கி அவசர அவசரமாக விரைந்துகொண்டிருப்பவர்களை அவன் இலக்கின்றிப் பார்த்துக்கொண்டிருப்பான். தன்னைக் கடந்து செல்லும் பாதசாரிகளுள் யாரையோ அவனது விழிகள் தேடியலைவது போலிருக்கும்..

சலிப்பு ஏற்படும்போது, வானத்தை அண்ணாந்து வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பான். சிலவேளைகளில் தன்னிலை மறந்த சித்தர் போலச் சிரித்துக்கொண்டிருப்பான். அவ்வப்போது எழுந்து, எதேச்சையாக அங்குமிங்கும் நடந்துகொண்டிருப்பான்.

எப்போதாவது அருமையாக யாராவது ஒருவரிடம் –

‘கோப்பி குடிக்க வேணும் போல இருக்கு. ஒரு ரூனி வைத்திருக்கிறாயா?’ என்று கேட்பான்.

கிடைத்தால் சரி, இல்லாது போனால் –

‘ஒரு லூனியாவது…?’

சமூகம் விரும்பாத பிறழ்வு நடத்தைகள் கொண்ட அவன், உண்மையில் சித்தப்பிரமை பிடித்தவன்தானா? என்ற கேள்வியுடன் அடிக்கடி நான் அவனைக் கடந்து சென்றிருக்கிறேன்.

ஒரு வாரத்துக்கு முன்னர் ஒரு நாட்காலை, வேலைக்கு வரும்போது ரிம் ஹோர்ட்டன்ஸில் கோப்பியும் ப்பேகிளும் வாங்கி வந்தேன்.

காலைநேரக் குளிரில் குறாவியபடி, இதே வாங்கில் வழக்கம் போலக் குந்தியிருந்த அவன், கால்களில் சில்லுப் பூட்டியவர்களாய்ச் சதா ஓடிக்கொண்டிருக்கும் சனக் கூட்டத்துக்குள் தனது தேடலில் குறியாயிருந்தான்.

கோப்பியை நீட்டியபடி அவனை நெருங்கிய என்னைக் கண்டதும், சட்டென்று மறுபுறமாக முகத்தைத் திருப்பிக்கொண்டான். கோப்பியையும் ப்பேகிளையும் வாங்கில் அவனருகே வைத்துவிட்டு, நான் அலுவலகம் நோக்கி நடக்கலானேன்.

ஒரு நாலு அடி தன்னிலும் நடந்திருக்க மாட்டேன் – ஏதோவொரு சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்க்கிறேன்.

கோப்பியும் ப்பேகிள் பையும் நடைபாதையில் வீழ்ந்து கிடக்கின்றன!

குவளையின் மூடி கழன்று, பாதையில் கோப்பி கொட்டிக் கிடக்கிறது. பாதசாரிகள் விலகி, விரைந்து செல்கின்றனர்.

மறுபுறம் திரும்பியிருந்த அவனது முகத்தை என்னால் சரிவரப் பார்க்க முடியவில்லை.

தமிழனிடம் தமிழன் கைநீட்டி வாங்கிச் சாப்பிடுவதோ? என்ற தன்மான உணர்வு அல்லது வெட்க உணர்வு காரணமாக இருந்திருக்கலாம்தானே என்று எனது மனம் சமாதானம் சொன்னது!

கோப்பியைத் தட்டிக் கொட்டிய சம்பவத்துக்குப் பிறகு, அவனை நான் இரண்டொரு முறைதான் கண்டிருக்கிறேன்.

முகத்தைத் திருப்பி வைத்துக் கொள்வதற்குப் பதிலாக, நான் போய் மறையும்வரை அவன் தலை குனிந்திருந்தான்.

எப்போதும்போலக் கடைக் கண்ணால் அவனை அவதானித்தபடியே நான் அலுவலகம் நோக்கிப் போய் வந்துகொண்டிருந்தேன்.

புதிய குடிவரவாளர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்புத் துறைகளில் ஆலோசனைகளையும் வழிகாட்டல் உதவிகளையும் வழங்கும் எமது அலுவலகத்தில் ஒருநாள், நான் வேலையில் மூழ்கியிருந்த தருணம், றிஸெப்ஷனிஸ்ற் தொலைபேசியில் என்னைக் கூப்பிட்டுச் சொன்னாள் –

‘உன்னைத் தேடி, உனது நண்பன் வந்திருக்கிறான்’

‘நண்பனா…யாரது?’

‘வந்து பாரேன்’

கணினியில் செய்துகொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு, எழுந்து அலுவலகத்தின் வாசலை அண்டியிருக்கும் றிஸெப்ஷன் மேசையைச் சென்றடைந்தபோது, அங்கு அவன் எனக்காகக் காத்து நிற்பதைக் கண்டேன். என்னைக் கண்டதும் ஒரு கணம் தலை கவிழ்ந்தான். மீண்டும் நிமிர்ந்தபோது,

‘என்ன?’ என்று பார்வையால் வினவினேன்.

‘ஒரு லூனி கைவசமுண்டா?’ தயக்கத்துடன் கேட்டான்.

‘ஒரு டொலரை வைத்து என்ன வாங்கிச் சாப்பிட முடியும்? என எண்ணியவாறு, இன்னொரு டொலரைக் கூட்டி, ரூனி ஒன்றைப் பேர்ஸிலிருந்து எடுத்து நீட்டினேன்.

‘இல்லையில்லை…எனக்கு லூனி போதும்’ என்று சொன்னான்.

‘பரவாயில்லை.’ ரூனி நாணயத்தை அவனது கையில் திணித்தேன்.

றிஸெப்ஷனிஸ்ற் அங்கு நடப்பதை நோட்டமிட்டவாறு, தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளித்துக்கொண்டிருந்தாள்.

காசைக் கையில் வாங்கி எடுத்துக்கொண்டு வாசலை நோக்கித் திரும்பியவன், மீண்டும் ஒருமுறை என்னைப் பார்த்துக் கேட்டான் –

‘உங்களோடு கொஞ்சநேரம் பேசலாமா?’

‘நிச்சயமாக’

‘இன்றைக்கு?’

ஒரு கணநேர யோசனையின் பின் சொன்னேன் –

‘நாளைக்கு வேலை முடிஞ்சு போகும்போது, அந்தச் சந்தி வட – கிழக்கு மூலையிலிருக்கிற ரிம் ஹோர்ட்டன்ஸ் கோப்பிக் கடையிலை ஐந்து மணிக்கு வருவேன்.’

‘தங்கியூ…சீ யூ ருமோறோ, சேர்’

அவனுடன் தமிழில் மட்டும் பேசிய என்னோடு, தொடர்ந்தும் தனது அரைகுறை ஆங்கிலத்திலேயே பேசிவிட்டு அவன் போய் மறைந்தான்.

மறுநாள் மாலை அவனைச் சந்திக்கிறேன்.

இவ்வளவு அருகிலிருந்து அவனை ஒருபோதும் நான் பார்த்ததில்லை. என்னை நேருக்குநேர் பார்ப்பதைத் தவிர்க்க முற்படும் அவனது கண்களைச் சுற்றிக் கருமை அப்பியிருக்கிறது. முகத்தில் கோடுகள் விழுந்து சருமம் சுருங்கி இருக்கிறது. கைகள் நிதானமிழந்து பதகழிப்புடன் நடுங்குகின்றன. நீண்ட காலம் எண்ணை தண்ணி காணாமல் அவனது தலைமுடி சிலும்பிக் கலைந்து கிடக்கிறது. உடலிலும் உடையிலுமிருந்து, சற்றே சகிப்புக்குச் சவால் விடும் நெடியொன்று வளியோடு பரவி வருகிறது.

அந்த முப்பது வயது முதியவனைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது!

நான் வாங்கிக் கொடுத்த உணவை, இம்முறை மறுப்புச் சொல்லாமல் மனம் விரும்பிச் சாப்பிடுகிறான். சுடச்சுடக் கோப்பியை உறிஞ்சிக் குடிக்கிறான். பசியின் கோரம் தணியவே, தன்னை ஓரளவு தன்னிலும் நிதானப்படுத்த முயற்சித்துக்கொண்டு என்னோடு பேசத் தொடங்குகிறான் –

அவன் கிளிநொச்சியை அண்டியிருக்கும் சின்னக் கிராமம் ஒன்றில் வாழ்ந்துவந்த ஒரு வறிய குடும்பத்தில் பிறந்தவன். விபரம் விளங்காத வயதிலேயே தனது தந்தையின் நோய் தின்ற உடலை, பின்னர் தீ தின்று பசியாறக் கொடுத்துவிட்டு, விதவைத் தாயோடும் தங்கையர் இருவரோடும் வாழ்ந்து வந்தவன்.

இரண்டாயிரத்தேழாம் ஆண்டுவரை, இயக்கக் கெடுபிடிகளுக்கும் இராணுவ அட்டூழியங்களுக்கும் அடிக்கடி இலக்காகி வந்தவன். தன் தாயின் தளராத முயற்சியினால், கொடிய யுத்தக் காளவாயிலிருந்து தப்பியோடிக் கனடா வந்து சேர்ந்தவன்.

முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற மனித சாகர சங்காராத்தின் போது, தன் இளைய தங்கை உயிரிழந்தமையும், மூத்தவள் வலது காலைப் பறிகொடுத்து முடமாகிப் போனமையும், அம்மா நித்திய நோயாளி ஆனமையும் துயரச் செய்திகளாகவே வந்து கிடைக்கப்பெற்றவன்.

‘கைவசமிருந்த சிறுதுண்டுக் காணியையும், நகைநட்டுகளையும், வீட்டையும் அடகு வைத்து வெளியூருக்கு அனுப்பி, உன் உயிர்காத்த தாய்க்கும் தங்கையர்க்கும் என்ன செய்தாய்?’ என்ற மனச்சாட்சியின் குறுக்கு விசாரணைக்கு இன்றுவரை விடையின்றித் தவித்துக் கொண்டிருப்பவன்.

கனடாவுக்கு வந்துசேர்ந்த ஆரம்ப காலத்திலிருந்து, தனது காதலியைக் கரைசேர்ப்பதில் மட்டுமே குறியாய் இருந்தவன். கொழும்புக்குத் தப்பியோடிச் சென்று அங்கிருந்து சிங்கப்பூர், ஹொங்கொங், துருக்கி, மெக்ஸிக்கோ, யூஎஸ்ஏ, கடைசியில் கனடா என்று ஒன்பது மாதம் நத்தை போல ஊர்ந்து வந்து சேர்ந்தவளின் முழுச் செலவையும் தனது முதுகில் சுமந்தவன். கனடாவுக்கு வந்த பிறகும், அவளை செனெகா கல்லூரிக்கும் றயஸன் கல்லூரிக்கும் அனுப்பி, ஆங்கிலம், வர்த்தகம், கணினி அறிவியல் ஆகிய பாடங்களைப் படித்துத் தேர்ச்சி பெறவைப்பதற்குத் தேவைப்பட்ட முழுச் செலவினங்களுக்கும் பணத்தை வாரி இறைத்தவன்.

இப்போது இரண்டு வருடங்களாகப் பிரபல வங்கி ஒன்றில் அவள் கொழுத்த சம்பளத்துடன் வேலை செய்துவருவதற்கு இவனது முழு முயற்சியும் முன்னேற்பாடும்தான் காரணம்.

இவனைப் பொறுத்தவரை, ஊரில் படித்துவந்த காலத்தில் கெட்டிகாரன் என்று பேரெடுத்தவன். கனடாவுக்கு வந்த பிறகும் படிப்பைத் தொடர்ந்திருக்க வேண்டியவன். அவளைப் போலவே நல்ல வேலை ஒன்றைப் பெற்றுச் சிறப்பாக வாழ்ந்திருக்கக்கூடிய எல்லா ஆற்றல்களும் கொண்டவன். ஆனால் அவனோ தனது முன்னேற்றத்தைச் சிறிதேனும் மனதில் கொள்ளாமல், அவளுக்காகத் தன்னை அழித்தவன். கடனட்டைகளிலிருந்து அவளுக்கெனப் பெற்ற பெருந்தொகைப் பணத்தை வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்பதற்கென்று பல வருடங்களாகத் தன் உதிரத்தைப் பிழிந்துகொண்டிருந்தவன். பகலில் ஒரு ஃபக்ரறி வேலை, மாலையில் கிளீனிங் வேலை, வார இறுதியில் செக்கியூரிட்டி வேலை என்று சதா காலமும் இரவு பகலாக மாடாக உழைத்தவன். அவளது உயர்ச்சியும் மகிழ்ச்சியும்தான் தன் இலட்சியம் என்ற வெறியுடன் வாழ்ந்தவன்.

சிக்கனமான ஒரு பதிவுத் திருமணத்தின் பின்னர், அடுக்கக் குடிமனையிலிருந்து வெளியேறி, அவளது பெயரில் சொந்தமாக வீடும், காரும் வாங்கி, ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்து, ஒரு வருடம் வாழ்க்கை இன்பகரமாக உருண்டோடிக் கொண்டிருந்த தருணம் –

அவளது நடத்தையில் சிறு சிறு மாற்றங்கள் தென்படலாயின!

பிள்ளை பராமரித்தல், உடுப்புக் கழுவுதல், வீடு துப்புரவாக்குதல், கடை கண்ணிக்குப் போய்ச் சாமான் சக்கட்டு வாங்குதல், சமைத்தல் போன்ற வீட்டுப் பணிகளில் அவளது அக்கறை கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது.

ஆடையலங்காரம், சிகையலங்காரம், முகவலங்காரம், பாதணியலங்காரம் எனப் பலவகைப்பட்ட அலங்காரங்களிலும் அதிக ஆர்வம் காண்பித்தாள். பெருந்தொகைப் பணத்தை அவற்றில் செலவு செய்தாள். முகம் பார்க்கும் கண்ணாடியுடனும், கைத்தொலைபேசியுடனும் மிகையாகக் காலம் கழித்தாள். அதிகநேரம் பிள்ளையைப் பராமரிப்பு நிலையத்தில் இருக்கவிட்டு, வேலைக்கு முந்திப் போய்ப் பிந்தி வந்தாள்.

தனது நண்பர்களுக்கும் சகபணியாட்களுக்கும் அவனை அறிமுகம் செய்வதை வேண்டுமென்றே தவிர்க்கலானாள். விருந்துகள் விழாக்களுக்கு அவனின்றித் தனியே போய்வருவதற்குப் புதுப்புது உபாயங்களைக் கையாண்டாள்.

ஒரு சாதாரண தொழிலாளியின் மனைவி எனத் தன்னை இனங்காட்டிக் கொள்ளத் தயங்கினாள்!

ஒருநாள் மாலை, ஒரு அலுவலகக் கட்டடத்தின் அறைகளை அவன் கூட்டித் துடைத்துத் துப்புரவு செய்துகொண்டிருந்தபோது வந்த அநாமதேய அழைப்பு ஒன்று, அவனது தொலைபேசியில் செய்தி ஒன்றை விடுத்திருந்தது.

அவன் அச்செய்தியை நம்பவில்லை.

இரண்டு நாட்களின் பின்னர் வந்த இன்னோரு அநாமதேய அழைப்பு, அச்செய்திக்கு ஆதாரம் சொன்னது.

திடீர்ச் சுகவீனமென்று மேற்பார்வையாளருக்குப் பொய் சொல்லிவிட்டு, அவன் நேராக வீடு சென்று அவளுக்காகக் காத்திருந்தான்.

பராமரிப்பாளரிடமிருந்து குழந்தையை எடுத்துக்கொண்டு, ஏழரை மணி போல வீடு வந்து சேர்ந்த அவள், வீட்டில் அந்த நேரம் அவனைச் சற்றேனும் எதிர்பார்த்திருக்கவில்லை.

‘இவ்வளவு நேரமும் பிள்ளையைப் போய்க் கூட்டிக்கொண்டு வராமல், எங்கை போய் வாறாய்?’

‘நானெங்கை போறது? ஒஃப்பீஸிலை கட்டாயம் செய்து முடிக்கவேண்டிய ஒவர்ரைம் வேலை இருந்தது.’

‘ஒஃப்பீஸிலையா இல்லை, ஆச. புசநநம சுநளவயரசயவெ வேலையா?’

சற்றும் எதிர்பார்க்காத கேள்வியால் தடுமாறிப் போனவள், அவனை வெறித்துப் பார்த்தாள்.

‘சொல்லு…5:30 தொடக்கம் ஆச. புசநநம சுநளவயரசயவெ ஓவர்ரைம் வேலை இருந்ததோ?’

அவளது முகத்தில் எந்தவித அச்சமோ அவமானமோ தென்படவில்லை. உறங்கிக்கொண்டிருந்த குழந்தைமீது கண் பதித்திருந்தாள்.

‘என்ன…பேசாமலிருக்கிறாய்?’

‘ஓம்…என்னோடை வேலை செய்யிற ஒரு ஃப்றெண்டோடை சாப்பிடப் போனேன். அதுக்கிப்ப என்ன?’

எதிர்த் தாக்குதலுக்குத் தயார் என்பதை அவளது பதில் சொல்லியது.

‘அந்த ஃப்றெண்டு பெம்பிளையோ, ஆம்பிளையோ?’

‘உண்மையான ஒரு ஆம்பிளைதான்!’

‘அப்பிடியோ?…எவ்வளவு நாளாக இது நடக்குது?…சொல்லு…எவ்வளவு நாளா இது நடக்குது?…’

அவள் மௌனமாக இருந்தாள்.

‘சொல்லேண்டி…வாயுக்கை என்ன கொழுக்கட்டையே…அவனுக்கும் உனக்குமிடையிலை…அந்த நாய்ப் பயலுக்கும் உனக்குமிடையிலை என்னடி தொடுசல்…?’

‘ஓம் தொடுசல்தான்… அவருக்கும் எனக்குமிடையிலை தொடுசல்தான்…அவரொண்டும் நாய்ப் பயலுமில்லை…உன்னைப் போலை குப்பை வாளியுமில்லை…’

‘என்னடி சொன்னாய்…எப்ப துவக்கமடி நான் உனக்குக் குப்பை வாளியானது?…என்ரை பிள்ளைக்காகப் பார்க்கிறான்…இல்லாட்டி… உன்னை நான்…’

கைகால் பதறித் துடிக்க, ஆத்திரத்துடன் அவளை நெருங்கினான்.

கைகால் பதறித் துடிக்க, ஆத்திரத்துடன் அவளை நெருங்கினான்.

சண்டைக்குத் தயாரான பேட்டுக்கோழி போல, குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவளும் சிலிர்த்தெழுந்தாள்!

‘என்னை…என்ன செய்ய முடியும், உன்னாலை? அவள்…அவள்…உன்ரை பிள்ளையெண்டு உனக்கார் சொன்னது…?’

வானம் இடிந்து அவனது தலையில் வீழ்ந்தது!

ஒரு வாரமாக அவனை நான் காணவில்லை. இன்று வேலைக்கு வரும் வழியிலும், என் கண்ணில் அவன் அகப்படவில்லை!

அன்றைய சந்திப்பின் பின்னர், அவனுக்காக மனம் அடிக்கடி என்னை இம்சித்துக்கொண்டிருக்கிறது.

அவளது வாயிலிருந்து அப்படி ஒரு வார்த்தை வந்து விழுமென்று அவன் கனவிலும் எண்ணியதில்லை. துரோகத்தின் வலியினால், அவனது உடலின் ஒவ்வொரு உயிர்க் கலமும் நொந்து நொடிந்துபோனது!

வாழ்க்கை எனும் அணிநடையில் கம்பீரமாக நிமிர்ந்து நடக்க நினைத்தவன், இப்போது நொண்டி நொண்டி நடக்கும் நோயாளியானான். போதைப் பொருட்களுக்கும் மதுபானங்களுக்கும் அடிமையாய்ப்போன தெருப் பிச்சைக்காரனானான்!

‘காற்றைப் போன்றதடி என் காதல். அது கண்ணுக்குப் புலப்படாதுதான். உன்னால் அதை உணரக்கூடவா முடியாமற் போயிற்று?’ எனக் கேட்டுக் குழந்தையாய் அழுதான்!

அவன் ஓர் அநாதையாகிப் போன கதை சொல்லி அழுத காட்சி மனதைக் கசக்கிப் பிழிகிறது!

என்னதான் ஆறுதல், அறிவுரை சொல்லியும் – அவனது மனதில் ஒரு சிறுதுளி நம்பிக்கையை உயிர்ப்புடன் விதைக்கும் முயற்சியில், அன்று நான் தோற்றுப் போன துயரத்தை எண்ணி வருந்தியவாறு, நேராக எனது மேசைக்கு வந்து, கணினியுள் முகம் புதைக்கிறேன்.

றிஸெப்ஷனிஸ்ற் சத்தமின்றி, மெதுவாக எனது மேசை முன்னால் வந்து நிற்கிறாள்.

‘க்குட் மோர்ணிங்…’ சொல்லி, வழமை போலச் சுகம் விசாரித்தபடி, கணினியுள் கண்களை ஓட விடுகிறேன்.

பதிலேதுமில்லாததால், தலை தூக்கி அவளைப் பார்க்கிறேன்.

எனது காதருகே சற்றுக் குனிந்து, மெதுவாகச் சொல்கிறாள் –

‘நேற்று மாலை அந்தச் சந்திப்பில், அவன் காரடித்துச் செத்துப் போனான்!’

இதயம் ஒரு கணம் நின்று துடிக்கிறது!

‘விபத்தென்று சொல்கிறார்கள். தற்கொலை என்றும் கதை அடிபடுகிறது.’

எனக்கு அனுதாபம் தெரிவிப்பதுபோலக் கூறிவிட்டு, தனது இருக்கையை நோக்கி அவள் திரும்பி நடக்கிறாள்.

உணர்வற்ற ஜடமாக கணினித் திரையைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

திரையில் மங்கலாய்…வெகு மங்கலாய்…அவன் குற்ற உணர்வோடு கூனிக் குறுகி என்னைப் பார்த்துக் கைநீட்டியபடி…

‘பசிக்குது சேர்,…ஒரு லூனி கிடக்குமா…?’

சித்தசுவாதீனம் செத்துப்போனது!

– ஜீவநதி – டிசெம்பர் 2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *