காற்று வெளியல்ல, கால் விலங்குதான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 24, 2014
பார்வையிட்டோர்: 15,297 
 
 

சூரியக் கதிர்களை வாரி இறைத்த மாதிரி,, மேனி முழுக்கவல்ல, பருவத்துக்கு வராத மனசெங்கும் ஒரு பொன்னான உணர்ச்சிகளில் சூடேறித் தளும்பாத பட்டுச் சிறகுகளைக் கொண்ட மிக மென்மையான மனம் அப்போது அவளுக்கு. வயது ஒன்பதாகி விட்ட நேரம் அவளுக்கு முன்னால் காற்று வெளிச் சஞ்சாரமாக ஒளி வானமே தரைக்கு இறங்கின மாதிரி அவளுடைய அந்தச் சின்னஞ்சிறு கிராமம்.

யாழ்ப்பாண நகரை ஒட்டியல்ல அதற்கப்பால் வெகு தொலைவில் எட்டு மைல் கல் தூரத்தில் அவள் பிறந்து வளர்ந்து விளையாடித் திரிந்த, இன்னும் திரிகிற மண்ணே காட்சி மயமாய் விரிந்து கிடக்கிற , அவளின் அந்தப் பொன்னான கிராமம்., .அவளை உயிர்ப்பு மாறாமல் வாவென்று அழைத்தபடியே, கண்களுக்கு முன்னால் களை கட்டி நிற்கிறது. . எனினும் பெண்ணாகப் பிறக்க நேர்ந்த பாவங்கள் சூழ்ந்த பாழும் விதி வசத்தால், அவளை அப்படியே அந்த நிலையில் கருவறுத்துக் கொன்று போட அவளைச் சுற்றிச் சமூக வார்ப்பான ஒரு கொடிய விலங்கு வளையம்.. இந்த வளையத்தை விட்டு வெளியேறி மாசற்ற அந்த மண் அழைப்பு விடுப்பதற்கு இணங்க , சுதந்திரமாகக் கைகளை வீசிக் காற்று வெளிச் சஞ்சாரம் செய்ய இந்தச் சமூகம் அதைச் சார்ந்த மனிதர்கள் அவளைப் போக விட்டால் தானே . பாவம் அவள் தான் என் செய்வாள் , துளசி என்று உள்ளார்ந்த மணச் செறிவுடன் அவளுக்கு அப்பா எந்த வேளையில் பெயர் சூட்டினாரோ தெரியாது கண்ணைக் கவர்ந்து மயக்கிச் சரித்து விட்டுப் போகிற புற அழகு அவ்வளவாக இல்லாமற் போனாலும், மனசளவில் துளசி வாசம் மாதிரி அவள் நிலை.. மிகச் சின்ன வயதிலேயே மனதால் கறை பட்டுப் போகாத உத்தம குணங்களுடனேயே, , வாழ்வின் மையப் பகுதியை நோக்கி வளர்ந்து வருபவள். பிற உயிர்களைப் பேதம் பாராது மனப்பூர்வமாய் நேசிக்கத் தெரிந்தவள் ..வெறும் விளையாட்டு நினைப்புகளைத் தவிரப் பிரிந்து போய்ச் சேறு பூசிக் கொள்கிற மாதிரி வேறு உலகமிருக்கவில்லை அவளுக்கு/ .எனினும் வளர்ந்து பூச்சாண்டி காட்டுகிற நடைமுறை, உலகின் கண் முன்னே அவளின் நிலைமை வேறு. அவர்கள் சொன்னார்கள். அவள் இப்போது குழந்தையில்லையாம் நினைத்தபடி ஓடவும் வரம்புகளைக் கடக்கவும் அவளை இயங்க விடாமல்தடுத்தது ஒரு முள் வேலி.

ஏனென்றால் அவள் நிலைமை அப்படி அப்பொழுதே அவள் நல்ல வளர்த்தி. எக்கச்சக்கமாக மேனி முழுக்கச் சதை போட்டிருந்தது. அவள் சீக்கிரமே வயதுக்கு வந்து விடுவாளாம். .இந்நிலையில் காற்று வெளிச்சஞ்சாரம் தேவைதானா? அவளுக்கு அப்போது அது தேவையாக இருந்தது. காற்று வெளியில் பறப்பதற்கு இரு கால்கள் மட்டுமல்ல, மனமே தயார் நிலைதான்… எப்பேர்ப்பட்ட மனம்? அவளுக்கு மனம் ஒன்று இருப்பதாக யார் தான் அறிவார்.? இது பெண்ணுக்குச் சோதனையான காலம்.. இப்போது மட்டுமல்ல, என்றுமே பெண் என்பதால் கழுத்துக்குக் கயிறு தான்.

அந்தக் கயிற்றில் இப்போது அவள் மாட்டிக் கொண்டிருக்க நேர்ந்தது., அதை விடக் கொடூர கொடுமை அவள் பெண் என்பது மாறப் போவதில்லை. அது ஒரு பிறவிச் சாபமாய் அவளின் உயிருக்கே உலை வைத்து விட்டுப் போகும் .அதை அவள் அந்த வயதிலேயே காண நேர்ந்தது.

ஒரு சமயம் பெரியக்கா அபிராமியுடன், கல்லூரியில் ஒன்றாகப் படிக்கிற அவளின் சினேகிதி வீட்டிற்கு வந்திருந்தாள். மாலை அக்கா தினமும் கல்லூரிக்குப் போய் வரும், வானில் கூடவே அந்த நித்யாவும் வந்திறங்கும் போது, துளசி ஆர்வமாக வாசலில் நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.. வீட்டிற்குள் அடைந்து கிடப்பது போர் அடித்ததால், அந்தப் புது விருந்தாளியின் வருகை அவளுக்கு இனம் புரியாத மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவள் அக்காவை விட நல்ல நிறம். பூசினாற் போல மெல்லிய உடல் வாகு/ பேசும் போது கண்கள் சிரிக்க, முகத்திலே அபூர்வமான ஒளிக் கீற்றுத் தோன்றியது.. உள்ளே சென்று நீண்ட நேரமாய் அவளுக்குப் பக்கத்திலே அமர்ந்து கலகலவென்று சிரித்த முகத்துடன் அவள் பேசுவதை நாள் முழுக்ககக் கேட்டுக் கொண்டிருகலாம் போலிருந்தது..

அவள் வெளிப்படையாக விகல்பமின்றி எல்லோருடனும் சகஜமாகவே பழகினாள் அந்நியத்தன்மை விட்டுப் போன இந்த நெருக்கம், அவளுக்கு இயல்பான ஒரு சாத்வீக குணமாய் எல்லோரையும் வசீகரித்தது . குறிப்பாகத் துளசிக்கு அவளது இந்த நெருக்கம்,, அப்போதைய மனோ நிலையில் பெரும் சந்தோஷத்தையும் திருப்தியையும் அளித்தது.. அவள் வெகு நேரமாய் நித்யா அருகிலேயே தன்னை மறந்து நின்று கொண்டிருந்தாள்.

அவள் உரும்பிராயிலிருந்து வந்திருப்பதாக அக்கா கூறினாள். ஒரு கிழமை வரை அவள் அங்குதான் நிற்கப் போகிறாள்.. அரிக்கன் லாந்தர் விளக்கொளிதான் அப்போதெல்லாம்.. இன்னும் அவர்களின் ஊருக்கு மின்சாரம் வரவில்லை இருந்தாலுமென்ன.. துளசியின் கண்களுக்கு முன்னே அக்கிராமம் முழுவதுமே ´ஒளி வார்ப்பான, களை கட்டி நிற்கிற ஒரு சொர்க்க பூமிதான்.

அவளுக்கு அந்தக் கிராமத்தின் இனிய தடங்கள் மிகவும் பழகிப் போனவை. அதன் இயல்பான பெருமைகளோடு வாழத் தெரிந்த பளிங்கு மனதைக் கொண்டிருக்கிற ஒரு பாமரச் சிறுமி அவள். இதை யாருமே கண்டு கொண்டதாகத் தெரியவில்லை அவள் மூச்சோடு மூச்சாய் ஒன்றுபட்டிருந்த அவளுடைய அழகிய அந்தக் கிராமம் அவளில்லாமல் ஒழிந்து போன காட்சித் தடங்களுடன் வெறுமை கொண்டு நிற்பது போ;ல் பட்டது.

அதனோடு ஒன்றுபட்டு விளையாடித் திரிந்த காலம் செல்லரித்துப் போன ஒரு கனவு போலாயிற்று. இப்போது அவள் வீட்டை விட்டு வெளியே வருவது கூட இல்லை பள்ளிக்கூடம் போய் வரும் போது மட்டும் தான் அவளுக்கு விடுதலை அதுவும் சாமத்தியப்பட்டு விட்டால் காரில் போய் வருவதற்கு வசதியாக அவளை வேறு கல்லூரிக்கு மாற்றி விடுவார்கள் அதுவும் அக்கா போய் வருகிற கல்லூரியாகக் கூட இருக்கலாம் எதுவாயிருந்தாலென்ன, படிப்பு முக்கியம். அதை விட வாழ்க்கை முக்கியம் .எதிர்முரணான விபரீத அனுபவங்களுக்கு முகம் கொடுத்து, வாழ்க்கையில் மிகவும் நொந்து போய் மனம் சலித்துப் போகிற அசாதாரண சூழ்நிலை வராமல் எப்படித் தப்பித்துக் கொள்கிறது என்று அவளுக்கு அந்த வயதில் புரிய மறுத்தது.

அக்காவும் நித்யா அக்காவுமாய்ச் சேர்ந்து இரவு முழுக்க ஒரே அரட்டை தான் துளசி வெகு நேரம் வரை விழித்திருந்து அவர்கள் பேசுவதையே மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தாள் அவள் இது வரை அறிந்திராத ஒரு புது உலகமாய் பரந்த அளவில் வியாபித்திருகிற நித்யாவின் மாசற்ற மகோன்னதமான அன்பு நிழலின் கீழ்,, வாழ்க்கை பற்றிய எல்லாத் துயர நினைப்புகளும் ஒழிந்து அல்லது விடுபட்டுப் போய்த் தான் புதுப் பிறவி எடுத்து மலர்ந்திருப்பதாக அவளுக்கு உணர்வு தட்டிற்று அந்த உயிரின் தடம் அப்படியொரு ஒளி வெள்ளமாய்ப் பிடிபட்ட மகிழ்ச்சியில் தூக்கம் மறந்து போன கண்களுடன் நிறைந்த பிரகாசத்தில் அவளின் முகம் ஒளிர்வதைக் கண்டு திடுமெனக் குரலை உயர்த்தி அக்கா கூறினாள்.

“இப்பதான் இவளின்ரை முகத்திலை சந்தோஷக் களையை நான் பார்க்கிறன்” இந்த வயசிலை வீட்டுக்குள்ளை இப்படிச் சிறை வைக்கிறது பெரிய கொடுமையில்லையா?”

“ஏன் அப்படிச் செய்யினம்”?

“இவள் அதீத வளர்த்தி,.. கெதியிலை பெரிசாகி விடுவாளாம்” அது தான் இந்த விலங்கு

“நல்ல வேடிகை . இப்ப எல்லாத்தையும் அனுபவிக்கிற வயதிலே என்னவொரு கொடுமை. நான் கையோடு இவளைக் கூட்டிக் கொண்டு போறன்”

“உது நடவாது அப்பா உடன்படமாட்டார்”

“ஏன்? எதற்காகவாம்?”

‘உனக்குத் தெரியாது எங்கடை சமூக நிலை இவளை உன்னோடு அனுப்பினால் சனங்கள் ஒரு மாதிரிக் கதைப்பினம்” அப்பா அது தான் யோசிப்பார்”

“ நான் அவரோடு கதைக்கிறன்”

அவள் தர்க்கரீதியாக அப்பாவோடு, கதைத்து வென்ற பின் துளசி அவளோடு உரும்பிராய் போவதென்று முடிவாயிற்று பிறகு துளசிக்குக் காலகள் நிலை கொள்ளவில்லை. அவளின் உலகம் வாழ்வின் கறைகள் படியாத ஒரு புண்ணியபூமி. மானஸீகமாய் அதனோடு ஒன்றுபட்டு வாழ்வதே இயல்பாக இருந்தது அவளுக்கு ஊருக்குப் பயந்தால் வாழ்ந்த மாதிரித் தான் வாழ்க்கையென்பது எங்கேயோ துருவ விளிம்பில் நிற்கிறது. அதனிடையே மூச்சு விடாமல் துரத்துகிறது பெண்ணென்ற ஒலி. அதன் துரத்தலை உணர்ந்தவாறே நித்யாவுடன் உரும்பிராய்க்கு வந்து சேர்ந்தாள் துளசி.. இந்த முறை தீபாவளிக் கொண்டாட்டம் கூட அங்குதான். நித்யா கையோடு அதற்கான உடுப்புகளை எடுத்து வந்து விட்டாள்., வெறும் பருத்தியிலான பாவாடை சட்டை மட்டும் தான்.. அப்பா அதற்கு மேல் போக மாட்டார். வசதியில்லை . துளசிக்கு எல்லாம் ஒன்று தான். அந்த வயசிலும் மனசு தான் முக்கியம் அது சுயாதீனமாக இயங்கினாலே போதும். அவள் அவளாகவே இருக்க வேண்டும். .கறைகளற்ற வானம் அவள் கைக்கு வந்தாலே போதும்.

உரும்பிராய் மண்ணிலே வானம் முட்டிக் கொண்டு நின்றது. அவள் சுதந்திரமாக நித்யாவுடன் கை கோர்த்துக் கொண்டு எல்லா இடமும் போய் வரத் தொடங்கினாள். அவளுக்குத் தெரியும் வானம் எங்கேயிருக்கிறதென்று. . மனிதர்கள் குறுக்கீடு இல்லாத வரை வாழ்க்கை அவள் கைகளில் மட்டுமல்ல மனதிலும் ஒரே குளிர்ச்சித்

தொடராய் அது பிடிபடும்.

இங்கு வந்த பிறகு, நெருடல் மிகுந்த உறவுகளே மறந்து போயின. காலில் விலங்கு அறுபட்டுப் போன மாதியும் இருந்தது. ஒரு நாள் நித்யா கேட்டாள்.

“இப்ப உமக்குச் சந்தோஷம் தானே?”

“எல்லாம் இஞ்சை இருக்குமட்டும் தானே அங்கை திரும்ப வீட்டை போறதை நினைச்சால் ஒரே வெறுப்பாயிருக்கு”

“நீர் ஒன்றும் போக வேண்டாம்”

“அதெப்படி? அதுவும் எத்தனை காலத்திற்கு?”

“எல்லாம் நான் பார்த்துக் கொள்ளுறன்”

தீபாவளி முடிந்த பிறகு அவளைக் கூட்டிக் கொண்டு போக அப்பாவே நேரில் வந்து விட்டார்.அவர் இரு தலைமறைகளத் தாண்டிய அந்தக்காலத்து மனிதர். கட்டுப்பாடு மிக்க நடைமுறை வாழ்க்கையில் அபார நம்பிக்கை கொண்டிருப்பவர்.. அக்கா மூலம் விலாசம் அறிந்து அவர் அங்கு வந்து சேர்ந்த போது நித்யா தான் அவரை எதிர் கொண்டாள் அவளுக்கு இரு சகோதரிகள் மூத்த சகோதரிக்கு வீட்டிலே கல்யாணத்திற்காக வரன் பார்த்துக் கொண்டிருந்த நேரம். நித்யாவின் அப்பா குமாரசாமி ஸ்டேசன் மாஸ்டராக இருந்து ஓய்வு பெற்றவர்.. அவருக்கு வீட்டிலே தங்கியிருந்து துளசியுடன் மனம் விட்டுக் கதைப்பதற்குக் கூட நேரம் கிடைப்பதில்லை.. நித்யாவின் அம்மாவுக்குத் துளசியை நன்கு பிடித்து விட்டது.. வந்த கொஞ்ச நாளிலேயே அவள் அவர்களின் வீட்டுச் செல்லப்பிள்ளை போலாகியிருந்தாள்

எதிர்மறையாக அப்பா வந்து சேர்ந்ததும், மனதில் பயம் மூண்டது. அவரோடு வீட்டிற்குப் போக நேர்ந்தால் மீண்டும் சிறை வாசம் தான் வானம் அவளின் இருப்பை விட்டுத் தொலைந்து போகும்/ இப்படித் தொலைந்து போவதற்கே தன்னுடைய வாழ்க்கை இருப்பதாக அவள் பயம் கொண்டாள்.. பெண்ணாகப் பிறந்து விட்ட பாவத்துக்காக இப்படியே கழுவாய் சுமந்து சாக வேண்டியது தான் என்று தோன்றியது.

அப்பா வந்த போது அவள் நித்யாவின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்து நின்றிருந்தாள். அவளின் மனநிலையை அறிந்து கொண்டவள் போல் அவரின் முகம் பார்த்து நித்யா துணிச்சலோடு கூறினாள்.

“துளசி எங்களுடனேயே இருக்கட்டும் . அவள் சந்தோஷம் முக்கியமல்லே”

“இல்லை அறிவுபூர்வமாய் சில விடயங்களை நாங்கள் யோசிக்க வேண்டியிருக்கு இவள் இன்னும் கொஞ்ச நாளிலை சாமத்தியப்படப் போறாள். எப்படி விட முடியும்? இவ்வளவு நாளும் இருக்க விட்டதே பெரிய காரியம். இப்ப நான் இவளைக் கூட்டிக் கொண்டு போகாவிட்டால் என்ன நடக்கும் ? வீண் அவப் பழிதான் மிஞ்சும்”

“ஆர் மீது?”

“எங்களைக் குற்றம் சொல்ல மாட்டினமே சரி பேச நேரமில்லை. நீ வெளிக்கிடு துளசி”

நித்யாவுக்குப் பெரிய மன வருத்தமாக இருந்தது. அவர் கூறுகின்ற நடைமுறை ஒழுக்க விழுமியங்கள் சார்பான இந்த வாழ்க்கைச் சித்தாந்தம் , அன்பையே எதிர்பார்த்து ஏங்கி நிற்கிற , இந்தச் சின்னஞ் சிறு பெண்ணுக்குப் புரிகிற வேதமா அது? இதை அவருக்குப் புரிகிற மாதிரி எடுத்துச் சொல்ல வேண்டிய தார்மீகக் கடமை தனக்கிருப்பதாக அவளுக்குப் பட்டாலும், அந்த வேளையில் அவரை எதிர்த்துப் பேச

ஏனோ அவளுக்குத் துணிவு வரவில்லை. அங்கு நிலவிய கனத்த மெளனத்தைக் கிழித்துக் கொண்டு அவர் சொன்னார்.

“ வெளிக்கிடு துளசி”

மறு பேச்சில்லாமல் தங்களிடம் மனம் கரைந்து விடை பெற்றுக் கொண்டு , அவள் அவர் வழி நிழல் வெறித்துப் போவதையே பார்த்தவாறு நித்யா சமைந்து போய் நின்றிருந்தாள்.

அவளை அப்படித் தவிக்க விட்டு விட்டு வீடு வந்து சேர்ந்த துளசிக்கு இருப்புக் கொள்ளவில்லை இஷ்டத்துக்கு வெளியே போய் வர அவள் கால்கள் துடித்தன எனினும் வீட்டிலே இருந்து வேலை பழகு என்று அப்பா கண்டிப்பாகச் சொல்லி விட்டார்/ அதற்கான காலமிது அவள் பெண் பிள்ளை என்பதால் சராசரி ஆண்களைப் போல அவளுக்கு வாழ்ந்து அனுபவிக்கிற உரிமைகளெதுவும் இருக்கவில்லை. இந்த வயதில் கூட அவள் சுதந்திரமாக வெளியே போனால் சமூகம் குற்றக் கண் கொண்டு பார்க்கும். அவளுக்கோ காற்று வெளிச் சஞ்சாரமாக உலகைப் பார்க்க வேண்டும். அப்படி முன்பு சுற்றித் திரிந்தவள் தான் இப்பொழுதோ அவளின் கால்களின் விலங்கு அப்பாவின் கரங்களில். ஒரு நாள் அதை அறுத்துக் கொண்டு போக அவள் தயாரானாள்.

அப்பாவிடம் மன்றாட்டமாகக் கேட்ட பிறகே அனுமதி கிடைத்தது. அவள் நெடுநாளாய்ப் போய் வந்த நெருங்கிய ஓர் உறவினர் வீட்டிற்கே தன்னிச்சையாகப் போகக் கிளம்பினாள்.. அவள் வெளியே வந்து ஒரு யுகமே போய் விட்ட மாதிரித் தோன்றியது .. போகும் வழியில் எதிர்ப்பட்டவர்களெல்லாம் அவளை வித்தியாசமாகப் பார்த்து மேய்ந்து விட்டே போனார்கள் அது ஏன் என்று அவளுக்குப் புரியாவிட்டாலும், ஒரு நினைவு இடறியது தான் உரும்பிராய் போய் வந்திருப்பது காரணமாக அது இருக்கலாம் அதென்ன அவ்வளவு பெரிய குற்றமா?

புரியவில்லை அவளுக்கு. இது இப்படியிருக்கத் தன்னுடைய சித்தப்பா வீட்டில் வரவேற்பு எப்பயிருக்குமோ அதையும் ஒரு கை பார்த்து விடுவம் அவரின் வீடு நல்ல குளிர்ச்சியாக இருந்தது. நீண்ட வழிக்கு ஒரே கமுகும் தென்னையுமாய் ஒரே சோலையாக இருந்தது. அந்தக் குளிர்ச்சியைச் சந்தோஷமாக அனுபவித்தவாறே அவள் வீட்டின் பின் புறமாகப் போய் அடுக்களைப் படியேறி வரும் போது ஒரு தடித்த ஆண் குரல் கேட்டது.

“வாரும் உரும்பிராய்ப் பெட்டை வந்து உருளைக்கிழங்குக்குத் தோலுரியும்”

குரல் வந்த திக்கை நோக்கி அவள் மன வருத்தத்தோடு நிமிர்ந்து பார்த்தாள் அக்குரலுக்குரியவன் வேறு யாருமில்லை அந்த வீட்டுச் சமையல்காரன் சுப்பையாதான். அவனைச் சின்ன வயதிலிருந்தே அவள் அறிவாள். சித்தியோடு மிக நெருக்கமாக உறவு கொண்டாடுகிற தருணங்களில் அவன் ஒரு நிழல் போல அவள் கண்களில் தென்பட்டு மறைந்து போயிருந்தாலும் இன்று அதிசயமாக அவன் இப்படி உரிமையோடு அடைமொழி வைத்துத் தன்னைக் கூப்பிட்டது ஒரு மாறுபாடான புதிய செய்தியாய் அவளை நெஞ்சில் அறைந்தது.

“நான் உரும்பிராய் போய் வந்தது இவனுக்கு எப்படித் தெரிந்தது? நான் அப்படிப் போனது அவ்வளவு பெரிய குற்றமா? சித்தி ஆட்கள்தான் இதைப் பெரிதுபடுத்திக் கதைச்சிருப்பினம்.. இப்பவே இப்பfடியென்றால், நான் சாமத்தியப்பட்ட பிறகு என்னை விட்டு வைக்குமே இந்தச் சமூகம்? என்னை எப்படியெல்லாம் தோலுரிச்சு வேடிக்கை பார்க்குமோ? சீ நினைக்கவே மனம் வேரோடு சாய்ந்து போற மாதிரி இருக்கு இதுக்கு முடிவுதான் என்ன?

அவளுக்குப் புரியவில்லை அவளிடம் இப்படியான உறுத்துகின்ற வாழ்க்கையின் அனுபவங்கள் பற்றி , விடையறிய முடியாத பல கேள்விகளே எஞ்சியிருந்தன. அந்நிலையில் அவனை நிமிர்ந்து பார்க்கவே மனம் கூசியது அவளுக்குப் பெரும் அவமானமாகப் போய் விட்டது துக்கம் நெஞ்சை அடைத்தது இதைப் பகிர்ந்து கொள்ள அவன் ஆளில்லை என்று முழு நம்பிக்கையோடு அவள் நினைவு கூர்ந்தாள். அப்போது அவள் அப்படி முகம் கறுத்து நிற்பதைப் பார்த்துப் புரிந்து கொள்ள முடியாமல் போன இயலாமையோடு அவளை மீண்டும் சீண்டி வம்புக்கு இழுப்பது போலக் குரலில் கேலி தொனிக்க அவன் கேட்டான்.

“என்ன துளசி? பிரமை பிடிச்ச மாதிரி நிக்கிறாய்? இன்னும் உனக்கு அந்த நினைப்புப் போகேலையோ.? உரும்பிராய் என்ன அவ்வளவு பெரிய சொர்க்கமா?”

அவளுக்குப் பதில் கூற வரவில்லை ஒரு பெண்ணாகப் பிறக்க நேர்ந்த பாவத்தால் அவளின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளத் தவறிய, எதிர்முரணாக நேர் நின்று மோதி அவளைப் பூண்டோடு கருவறுத்து விட்டுப் போக அவன் வாய் வார்த்தையான இந்த ஒரு அம்புப் படுக்கையிலான பலி பீடம் மட்டுமல்ல, இப்படி இன்னும் எத்தனையோ கசப்பான அனுபவங்கள் தன்னை உயிர் குதறிக் காவு கொள்ளக் காத்துக் கொண்டிருப்பதாய் அவள் பெரும் அதிர்ச்சியுடன் நினைவு கூர்ந்தாள் அதன் பிறகு அங்கு நிற்கவே அவளுக்குப் பிடிக்கவில்லை.

– மல்லிகை (ஏப்ரல் 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *