கார் வாங்கிய கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 18, 2020
பார்வையிட்டோர்: 6,149 
 
 

”காலையிலேயே காரை கழுவ ஆரம்பிச்சாச்சா. ரிட்டயர்மென்ட் லைப்ல உங்களுக்கு நல்லா தான் பொழுது போகுது..”.

மனைவியின் குரலைக் கேட்டு ஈரத்துணியைப் பிழிந்தபடியே நிமிர்ந்தார் ராமநாதன். அருகிலிருந்த பெரிய பிளாஸ்டிக் பக்கெட் தண்ணீர் முழுவதும் காலியாகி இருந்தது.

“என்னடி கிண்டலா பண்ற…?

“இல்லைங்க இப்ப இருக்குற தண்ணி பஞ்சத்துக்கு குடிக்கிறதுக்கும் துணி துவைக்கவுமே தண்ணி இல்ல. ஏதோ நம்ம ஏரியா அவுட்டர்ல இருக்கிறதால கிரவுண்ட் வாட்டர் கொஞ்சம் இருக்கு…

சரி சரி டிபன் ரெடி ஆயிடுச்சு. கைகால் கழுவிட்டு சாப்பிட வாங்க…” என்றாள்.

நடுத்தர வர்க்கத்தினர் என்று சொல்லமுடியாவிட்டாலும் அதைச் சேர்ந்தவர் போல் தன்னை காட்டிக்கொள்வதில் ராமநாதனுக்கு விருப்பம் அதிகம். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

கார் வாங்க வேண்டும் என்பது அவரது வாழ்நாள் கனவு. மனைவி செண்பகத்துக்கு அதில் அவ்வளவாக விருப்பமில்லை. எப்படியோ அவளிடம் கெஞ்சிக் கூத்தாடி தன்னிடம் இருந்த கொஞ்சநஞ்ச பணத்தில் ஆறு மாதங்களுக்கு செகண்ட் ஹேண்ட் கார் ஒன்றை வாங்கினார். சிகப்பு நிறம் தான் அவருக்குப் பிடிக்கும் என்றாலும் வெள்ளை நிறத்தில் தான் அவருக்கு வாகனம் அமைந்தது .ஐந்து வருடங்களில் முப்பதாயிரம் கிலோமீட்டர் ஓடிய நிலையில் வண்டி நன்றாகத்தான் இருந்தது.

சிறு வயதிலிருந்தே இருசக்கர வாகனம் ஓட்ட கற்றுக் கொள்ளாமலே இருந்துவிட்டார். வேலைக்குச் சென்று வந்ததெல்லாம்கூட கம்பெனி பஸ்ஸில் தான்.

கார் வாங்கிய புதிதில் அவருக்கும் செண்பகத்துக்கு அடிக்கடி விவாதம் நடக்கும். கார் வாங்கிய பிறகுதான் அதை அவர் ஓட்டக் கற்றுக்கொண்டார்.

“தேவையா உங்களுக்கு இந்த வயதில் …எதுக்காக மெனக்கெடனும். ஒரு போன் செஞ்சா ஓலா உபர் வாடகை வண்டி வாசல்ல வந்து நிக்கும்… வீடு வாசல் வாங்க வழி இல்ல இதுல கார் அவசியமா. வாடகை வீட்டுல நிறுத்துறதுக்கு கூட வசதி இல்லாம ரோட்டுல நிறுத்த வேண்டியிருக்கு. வீட்டுக்காரர் வரும்போதெல்லாம் காரையே பார்த்துட்டு போறார். எப்போ வாடகை ஏத்திடுவாருன்னு எனக்கு பயமா இருக்கு..”

“அதெல்லாம் அந்தக் காலம்/ இப்போ இதெல்லாம் சகஜம். காரு டூவீலர் ன்னு இப்போ எல்லா வீட்டிலும் வண்டி இருக்கு… அத விடு…உன் பொண்ணும் பேத்தியும் இங்க வரும் போதெல்லாம் அவங்க வீட்டில இருக்கிற மாதிரியே கார்ல தான் எங்கேயும் போகணும்னு சொல்றாங்க… பஸ்ஸில எங்கேயும் போறதில்ல…” .

ஒவ்வொரு முறையும் அவர் கார் ஓட்டிச் சென்று திரும்பி வரும் வரை அவர் மனைவி குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பிய தாயைப்போல் தவியாய் தவித்து விடுவாள்.

“பாத்துப் போங்க வேகமாக ஓட்ட வேணாம். கவனமாய் இருங்க” என்று பத்து முறையாவது சொல்லிவிடுவாள். அதற்குக் காரணமாக அமைந்தது ஒரு சம்பவம்.

ஒரு நாள் மனைவியுடன் கோயிலுக்குச் சென்று திரும்பி வருகையில் ஸ்பீட் பிரேக்கர் ஒன்றின் முன் காரின் வேகத்தைக் குறைக்க பின்னால் பைக்கில் வேகமா வந்து கொண்டிருந்த கல்லூரி மாணவன் ஒருவன் சட்டென்று பிரேக் போட முயன்று இயலாமல் அவரது வாகனத்தின் பின் புறத்தில் டம்மென்று மோதி விட்டான். அதிர்ச்சியில் வாகனத்தை நிறுத்திவிட்டு கதவை திறந்து காரின் பின் புறம் வந்து பார்த்தார். அந்த இளைஞனின் பைக் ஒருபுறமும் கிடந்தது. அவன் மறுபுறமுமாக விழுந்து கிடந்தான். நல்லவேளையாக அந்த நேரத்தில் வேறு வாகனங்கள் பின்புறம் வரவில்லை. அந்த இளைஞனுக்கும் பெரிதாக காயம் இல்லை அவனை கை பிடித்து தூக்கிவிட்டார். அதற்குப் பிறகுதான் காரின் பின்புறத்தைக் கவனித்தார் நன்றாக அடி வாங்கிய வந்தது அப்பளம் போல் நசுங்கி போய் இருந்தது. தனது கனவு வாகனத்தில் இப்படி சேதம் ஆகி விட்டது அவருக்கு வருத்தமாக இருந்தது.

அவனது பைக் சரிந்ததில் இண்டிகேட்டர் லைட் மட்டும் உடைந்திருந்தது. காரில் பின் புறத்தை சரிசெய்ய எப்படியும் நாலாயிரமோ அதற்கு மேலும் செலவாகும் என்று தோன்றியது அவருக்கு. இருந்தாலும் அந்த இளைஞனுக்குப் பெரிதாக காயம் ஏற்படவில்லை என்பது அவருக்கு நிம்மதியாக இருந்தது.

“ஏம்பா பார்த்து வரக்கூடாதா… இப்படியா வந்து மோதிடுவே. பலமாஅடி பட்டிருந்தா என்ன ஆயிருக்கும். அப்படி என்ன தலை போற அவசரம்…”, அந்த இளைஞனிடம் சற்று கோபமாகச் சத்தம் போட்டார்.

யார் செய்த புண்ணியமோ அவன் தலை போகவில்லை என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.

ஜீன்ஸ் பேன்ட் டீ ஷர்டில் தாடியுடன் இருந்தவன் தன் மீது தவறு இருந்ததால் பேசமுடியாமல் சில வினாடிகள் திகைத்து நின்றாள். காரின் பின்புறத்தைப் பார்த்ததும் அவன் முகம் அதிகமாக கலவரப்பட்டது. எங்கே தன்னிடம் கார் டேமேஜ் ஆனதற்காகப் பணம் கேட்டு விடுவாரோ என்ற பயத்தில் அந்த இளைஞன்

“சாரி சாரி சார் சாரி சார்… மன்னிச்சிடுங்க…” என்று அவரிடம் பலமுறை மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தான்.

“ஒன் பேர் என்ன… எங்க இருக்க… வீடு எங்க இருக்கு…”

“முருகன் சார். இன்ஜினியரிங் காலேஜ்ல படிச்சிட்டு இருக்கேன். காலேஜ் ஹாஸ்டல்ல தங்கி இருக்கேன்”

“எந்த ஊருப்பா… உங்க அப்பா கிட்ட பேசனும்…போன் நம்பர் சொல்லு.”

“வேண்டாம் சார். நான் தஞ்சாவூர் பக்கம். அப்பா கிராமத்தில் விவசாயம் பண்ணிட்டு இருக்காரு. அவருக்கெல்லாம் சொல்ல வேண்டாம் சார்”

அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது இருந்தது அவன் மேல் பரிதாபப்பட்டு…

“சரி பாத்து போ… இனிமே இப்படி வேகமாக வண்டி ஓட்டாதே” என்று சொல்லி அனுப்பி விட்டார்.

அவர் மனைவி செண்பகமோ… “இனிமே உங்க கூட கார்ல வரத்துக்கு எனக்கு பயமா இருக்கு. அந்த பையனுக்கு ஏதாவது ஆகியிருந்தால் என்ன ஆயிருக்கும் யார் பொறுப்பு தேவையா இந்த கார் பயணம்” என்றாள்

அதற்குப் பிறகு சில நாட்கள் அந்தக் காரை ஓட்டாமல் போர்த்தி வைத்திருந்தார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு காரை சரி செய்து மீண்டும் பழையபடி எடுத்து ஓட்ட ஆரம்பித்து விட்டார்.

அன்று அவருடைய நெருங்கிய நண்பர் சுந்தரம் ராமநாதனைப் பார்க்க வீட்டுக்கு வந்திருந்தார்.

என்னப்பா ரிட்டயர்மென்ட் லைஃப் எப்படி இருக்கு…

ஏதோ போய்கிட்டு இருக்கு என்றவர் நான் கார் வாங்கி இருக்கிறேன். உனக்கு காட்டணும்னு நெனச்சேன். வாசல்ல நிக்குது வா பார்க்கலாம்… பெருமையாகத் தனது காரை காட்டினார். பிறகு இருவரும் காபி சாப்பிட்டுக் கொண்டே பேசிக்கொண்டு இருந்தனர்.

எனக்கு ரிட்டயர்மென்ட் லைப் ரொம்ப போரடிக்குது எங்கேயாவது பார்ட் டைம் வேலை கிடைச்சதுனா சொல்லு…கொஞ்சம் வருமானமும் கிடைக்கும்… என்ற ராமநாதனின் மனதுக்குள் கார் பெட்ரோல் மற்றும் இதர செலவுகளுக்கு ஆகும் என்று நினைத்துக் கொண்டார்.

அப்போது சுந்தரம்.. தனது நண்பர் ஒருவரின் கம்பெனில பகுதி நேர வேலைக்கு ஆள் தேவைன்னு சொல்லி இருந்தது நினைவுக்கு வர…

“இருப்பா. என் பிரண்ட் ஒருத்தர்கிட்ட இப்போதே கேட்டுப் பார்க்கிறேன்..”.என்றவர் அவருக்கு உடனடியாக போனும் செய்துவிட்டார்.

மறுமுனையில் பேசியவர் தான் இப்போது வெளியூர்ல இருப்பதாகவும் நாளை மதியம் சென்னைக்குத் திரும்பி மறுநாள் காலை மும்பைக்கு 15 நாட்கள் பிசினஸ் விஷயமா செல்ல இருப்பதாகவும் கூறினார். மறுநாள் மாலையில் ஏழு மணிக்கு மேல் வேலை விஷயமாக தன்னை வந்து சந்திக்குமாறும் கூறினார்.

சுந்தரத்தின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த ராமநாதனிடம்…

“உன் நல்ல நேரம். நாளைக்கே உனக்கு வேலை கிடைச்சாலும் கிடைச்சிடும். நான் சொல்ற அட்ரஸுக்கு போய் சுந்தரமூர்த்தி சாரைப் பார்த்துடு. நாளைக்கு மறக்காம ஈவினிங் ஏழு மணிக்கு மேல போய் பாத்துட்டு வந்துடு..”.என்றார் சுந்தரம்.

சற்று நேரம் பேசி விட்டு விடைபெற்று சென்றார் சுந்தரம்.

இந்த விஷயத்தை மனைவியிடம் சொல்ல… “பேஷா…போயிட்டு வாங்க. எனக்கு கொஞ்சம் வீட்டில நிம்மதியாக இருக்கும்.” என்றார்.

மறுநாள் மாலை ஏதோ புதிதாக வேலைக்குப் போகிற மாதிரி நன்றாக உடை உடுத்திக்கொண்டு லேசான பரபரப்பு தொற்றிக் கொள்ளப் புறப்பட்டு சென்றார். இரவில் சாலையில் வாகனத்தை செலுத்துவது ராமநாதனுக்குச் சற்று சவாலான இருந்தது. எதிரில் வரும் சில வாகனங்களின் முகப்பு விளக்குகள் அதிகப் பிரகாசத்துடன் முகத்தில் அடித்தன. எனவே காரை மெதுவாகவும் கவனமாக ஓட்டிக் கொண்டே சென்றார்.

அப்போது எதிர்புறமாக விலை உயர்ந்த கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. முகப்பு விளக்குகள் போதாதென்று கண்களை பொசுக்கும் வகையிலும் கூடுதலாக எல்இடி விளக்குகளும் அதில் பொருத்தப்பட்டிருந்தன . விளக்கில் இருந்து விழுந்த வெளிச்சம் பூதாகரமாக அவர் கண்ணில் விழுந்தது. ஓரிரு வினாடிகள் எதுவும் தெரியவில்லை. அந்த அபரிமித வெளிச்சத்தில் முதலில் சற்று தடுமாறினாலும் கவனமாகவே இருந்தார் ராமநாதன். ஆனால் எதிர்புறம் செல்போன் பேசிக்கொண்டே வேகமாக கார் ஓட்டி வந்தவர் தனக்கு இடது புறமாக நெருக்கமாகக் கடந்த ஒரு இருசக்கர வாகனத்தில் மோதி விடாமல் இருக்க தனது வாகனத்தைச் சற்று வலதுபுறமாகச் சற்று அதிகமாக ஒடித்தார்.

இதை சற்றும் எதிர்பாராத ராமநாதன் தனது வாகனத்தை பிரேக்கை அழுத்தி தானும் இடது புறமாக சற்று விலக முயன்றார். ஆனாலும் அதற்குள் எதிர் பாராத விதமாக இருவரின் வாகனங்களும் உரசிக் கொண்டன.

இரு வாகனங்களிலும் முன்புற விளக்குகளும் சேதமாகி இருந்தன. கூடுதலாக அந்த விலை உயர்ந்த வாகனத்தில் பேனட்டும் சேதமாகி இருந்தது இருந்தது

அந்தக் காரிலிருந்து இருவர் இறங்கினர், ஒருவர் பார்ப்பதற்கு பெரிய மனிதரை போலிருந்தார். நல்ல உயரமாக ஆஜானுபாகுவாக இருந்த அவரின். கை விரல்களிலும் கழுத்திலும் பளபளவென்று தங்கம் ஜொலித்தது. மற்றொருவர் அவருடைய உறவினர் என்பது பேச்சில் தெரிந்தது .

தன் மீது தவறு என்றாலும் வாகனத்திலிருந்து இறங்கி தன் வாகனத்தில் சேதம் ஆகியிருப்பதைப் பார்த்த உடனே அவர் பேச ஆரம்பித்தது வேறு விதமாக இருந்தது.

“ஏன்யா ள் போர்டு போட்டுக்கொண்டு இப்படியா கண்ணு மண்ணு தெரியாம கார் ஓட்டிட்டு வந்து இடிக்கிறது” : என்று அப்படியே கதையைத்தான் மாற்றி ராமநாதன் மீது பழி போட்டு விட்டார். சர்க்கரை. மற்றும் இரத்த அழுத்த நோயாளியான ராமநாதன் பதட்டத்திலிருந்து மீள்வதற்குள் உரத்த குரலில் பேச ஆரம்பித்துவிட்டார் எதிர்புறமாக வந்நவர். பதிலுக்கு நீங்கதான் வேகமா வந்து வந்து இடிச்சிட்டீங்க என்று விவாதித்தார் ராமநாதன்.

ஆனால் அவரது விவாதம் எடுபடவில்லை. அந்த பெரிய மனிதர் தனது செல்பேசியில் யார் யாருக்கோ போன் செய்தார். மேலும் தன் செல்போனில் இருவரது வாகனங்களையும் மாற்றி படம் பிடித்தார். அவருடன் இருந்தவரோ ராமநாதனை முறைத்துப் பார்த்த வண்ணமிருந்தார். இருட்டில் சாலையில் விபத்தை நேரில் பார்த்தவர் எவருமில்லை.

“என் காருக்கு ரொம்ப டேமேஜ் ஆயிருக்கு இதுக்கு பதில் சொல்லுங்க. இல்லனா ஸ்டேஷனுக்கு போகலாம்…” என்றார்.

அவரைப் பார்த்தால் எதற்கும் தயாராக இருப்பவர் போலிருந்தது. அவரிடம் தர்க்கம் செய்து ஜெயிக்க முடியாது. மேலும் ஸ்டேஷனுக்கு எல்லாம் போய் பிரச்சினையை பெரிதாக்க விரும்பவில்லை ராமநாதன். அப்படியே போனாலும் அந்த மனிதரை எதிர்த்து தன் வாதம் எடுபடுமா என்பதும் தெரியவில்லை. ஒருவேளை தன்பக்கம் ஜெயித்தாலும் அதற்கு எவ்வளவு நேரமாகுமோ அவருக்கு நேரத்துக்கு மாத்திரைகள் சாப்பிடாவிட்டால் உடல்நிலை மோசமாகிவிடும்.

எனினும் ராமநாதபுரம்

“சார் என் வண்டிக்கும் டேமேஜ் ஆகி இருக்கு. நாம இரண்டு பேரும் அவங்கவங்க இன்சூரன்ஸ் மூலம் டேமேஜ் சரி பண்ணிக்கலாம்.

இப்போ நான் அவசரமாகப் போக வேண்டியிருக்கு…” என்றார்.

“அவசரமாக போக வேண்டி இருந்ததால் தான் வந்து இடிச்சுட்டிங்களா. எங்களுக்கும் வேலை இருக்கு என்னோட காருக்கு டேமேஜ் அதிகமாயிருக்கு செலவும் அதிகமாகும். இன்சூரன்ஸ்ல முழு தொகையும் கிடைக்காது பக்கத்துல இருக்கிற மெக்கானிக் ஷாப்பில் போய் எவ்வளவு செலவாகும் என்று கேட்டு முடிவு பண்ணுவோம்.”

இருவரும் அருகில் உள்ள மெக்கானிக் ஷாப்பிற்கு செல்ல அந்த மெக்கானிக் ஷாப் இருந்தவர் இருவரது வாதத்தையும் கேட்டார். அப்போது அந்த பெரிய மனிதரின் செல்பேசியில் அழைத்த சிலர் அவர் பக்கம் பேசுவதற்காக அங்கு வந்திருந்தனர். இந்த நிலைமையில் அந்தப் பெரிய மனிதர்களின் வாகனத்தை மட்டும் பரிசோதித்துவிட்டு இருபதாயிரம் ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்று சொல்லிவிட்டார் மெக்கானிக் ஷாப்பில் இருந்தவர். மேலும் முகப்பு விளக்குகள் போன்ற எளிதில் உடையும் பாகங்களுக்கு இன்ஸ்யூரன்ஸ் கவர் ஆகாது என்றும் அதற்கான செலவை தனியாகத் தான் செய்தாக வேண்டும் என்றார்.

அந்த வகையில் அவர் கணக்கின்படி இன்சூரன்ஸ் தொகை போக ஏழாயிரம் ரூபாய் வரை செலவாகும் என்றார். இராமநாதனைப் பார்த்து இன்சூரன்ஸ் போக மீதி தொகை மட்டும் நீங்க கொடுத்தா போதும்… என்றார் அந்த பெரிய மனிதர்.

ராமநாதனின் காருக்கும் கிட்டத்தட்ட நாலாயிரம் ரூபாய் வரை சேதாரம் ஆகி இருந்தது. ஆனால் அதைப்பற்றி யாரும் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. மெக்கானிக் ஷாப் ஓனரிடம் கேட்டபோது…’மூவாயிரம் ரூபாய் வரை ஆகும் என்றார். உங்களுக்கும் இன்ஷூரன்ஸ் தொகை போக மீதி கைக்காசு கொஞ்சம் செலவாகும். அதை நீங்கள்தான் உங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்’ என்று சொல்லிவிட்டார்.

ராமநாதனின் நண்பரொருவர் இதுபோன்ற பஞ்சாயத்துக்களில் கைதேர்ந்தவர். அவருடன் தொலைபேசியில் பேசிப் பார்த்தார். ஆனால் அவரோ வெளியூரில் இருப்பதாகவும் வருவதற்கு இன்னும் மூன்று நாட்கள் ஆகும் சொல்லிவிட்டார்.

பிறகு இருவரும் பேசி தீர்க்க முயல இராமநாதன் ஆறாயிரம் ரூபாய் தர வேண்டும் என்று முடிவானது. ராமநாதனின் செல்போன் எண்ணையும் விலாசத்தைப் பெற்றுக்கொண்ட அவர் தன்னுடைய தொலைபேசி எண்ணையும் அவரிடம் தந்துவிட்டு இன்னும் இரண்டு நாட்களுக்குள் பணத்தைக் கொடுத்து விட்டால் சுமுகமாகப் பிரச்சனையை முடித்துக் கொள்ளலாம் என்று சொன்னார்.

அவருக்கு இருக்கிற வசதிக்கு இந்தத் தொகை ஒரு பெரிய விஷயமில்லை. இதில் தவறு எல்லாம் அவர் பக்கம் இருக்க மிகவும் சாமர்த்தியமாகப் பேசி தன்னிடம் இருந்து அந்தத் தொகையை பறிப்பதிலேயே அவர் குறியாக இருந்தது ராமநாதனுக்கு வேதனையாக இருந்தது. அந்த மனிதரை எதிர்க்க முடியாத தன் இயலாமையின் மீது ஆத்திரமும் வந்தது. இந்தக் கலவரங்கள் நடந்து முடிகையில் இரவு மணி பத்தை எட்டி விட்டிருந்தது. நேரம் செல்ல செல்ல சக்கரரை நோயாளியான அவருக்கு பசியும் சோர்வுமாக இருந்தது

அந்தப் பெரிய மனிதரை அழைத்துச்செல்ல அவரது வீட்டிலிருந்து வேறு ஒரு பெரிய கார் வந்திருந்தது.

ராமநாதன் களைப்புடன் வீட்டுக்குப் புறப்பட தயாரானார்.

அப்பொழுது ராமநாதனுக்கு தான் பெருந்தன்மையுடன் அந்தக் கல்லூரியில் இளைஞனை மன்னித்து விட்ட சம்பவம் ஞாபகத்திற்கு வந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *