கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 8, 2024
பார்வையிட்டோர்: 3,383 
 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ம்மா….அதெல்லாம் எனக்குத் தெரியா இப்பவே வேங்கித் தாங்க”

இப்படித் தான் அவள் அடம் பிடித்துக் கொண்டிருந்தாள்.

அவள் எழுப்பும் குரல் கெஞ்சுதலாகவும் இருந்தது. நியாயமான கோரிக்கையாகவும் தென்பட்டது.

அன்றைய தினம் நடுப்பகலை அண்மித்துக் கொண்டிருந்த நேரம்.

புறக்கோட்டை பஸ் நிலையத்தைச் சுற்றி நடமாடிக் கொண்டிருந்த அப்பாவிச் சன நெரிசலைத் தன் கடுமையான வெப்பத்தால் துரத்திக் கொண்டிருந்தான் கதிரவன்.

ரூட் நேர அட்டவணைப் படி அந்த பஸ் வண்டி புறப்பட இன்னும் பதினைந்து நிமிடங்கள் தான் இருந்தன. வண்டிக்குள் பிரயாணிகள் சேர்ந்தவண்ணம் இருந்தனர்.

ஆரிபின் தம்பதிகள் தமது புத்திரி சகீலாவுடன் கொழும்புக்கு வந்து. அலுவல்களையெல்லாம் முடித்துக் கொண்டு. ஊர் திரும்பும் நோக்கோடு அந்த பஸ் வண்டியைப் பிடிப்பதற்காகத் தான் விரைந்து கொண்டிருக்கிறார்கள். மாறி மாறி ஓட்டமும் நடையுமாக.

பஸ்ஸில் சீற் பிடிக்க வேண்டுமே என்ற ஆதங்கம். நடைக்கு மேலும் ஒரு வேகத்தைக் கொடுத்தாலும், ஆளுக்காள் நீண்ட இடைவெளி. தகப்பனுக்குப் பின்னால் தூரத்தில் தாய். சற்றுப் பின்னால் மகள். அவர்களுக்குள்ளே ஏதோ ஒரு குடும்பப் பிரச்சினை சாடை மாடையாகத் தெரிகிறது.

ஒரு பூகம்பம் வெடிப்பதற்கோ என்னவோ…? சகீலாவின் செக்கச் சிவந்த முகம் அழுதழுது வீங்கிக் கிடக்கிறது.

சூரியன் கொடூரமாகச் சுட்டெரித்து மனிதக் கும்பலைக் கலைத் தாலும். வந்த அலுவல்களை முடித்துக் கொள்ளாமல் எப்ப டி……..?

பஸ் தரிப்பு நெருங்க நெருங்க சகீலாவின் விசும்பல் விஸ்வ ரூப மெடுத்துக் கொண்டிருந்தது.

நேரகாலத்தோடு சீற். பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவலில் தாயும் தகப்பனும் வண்டிக்குள் ஏறி விட்டார்கள். செய்வதறியாமல் அவளும் அழுதழுது பின் தொடர்ந்தாள்.

அவள் எதற்காக அடம் பிடிக்கிறாள்? வர வர நிலைமை உச்சக் கட்டத்திற்கே போய் கொண்டிருக்கிறதே!

நேரம் செல்லச் செல்ல பஸ்ஸுக்குள்ளும் அந்தப் போராட்டம் வலுவடைந்து கொண்டிருந்தது.

“இதென்ன பெரிய கரச்சலா இருக்கு.”

முன் வரிசையில் வசதியாக இருந்த ஒருவர் சலிப்புடன் தன் வெறுப்பைக் கொட்டுகிறார். அதற்கு மெருகேற்றுவது போல் பலரும் அவர்களைத் திரும்பித் திரும்பிப் பார்க்கின்றனர்.

‘இப்படிப் பட்டவங்க பயணம் போகப் படாது’ என்ற தோரணையில் மற்றுமொரு குத்தல். அடிக்கடி திரும்பித் திரும்பிப் பார்க்கும் ஒவ்வொரு பார்வையும் போதும். சகீலாவின் தாய் தந்தையருக்குப் பெரிதும் அவமானமாகப் போய் விட்டது.

“எனத்துக்குத் தான் இந்தச் சனியன கூட்டிக் கொண்டாந்தயோ தெரியா”

தாயும் தகப்பனும் குமுறுகிறார்கள். என்ன செய்வதென்றே தெரியாமல், பிரச்சினை அம்பலமாகி, குடும்ப மானமும் பஸ் ஏறி விட்டது.

அவள் மீண்டும் சப்தமிட்டு அழுதாள்.

“மூதேவி வாயப் பொத்திக் கொண்டு வா”

பொறுக்க முடியாத தாய்க்காரி சடையைப் பிடித்து இழுத்துச் சாடினாள். தகப்பன் காதைத் திருகி நோவினை ஏற்படுத்தினான். ஒரு காது இரத்தச் சிவப்பாகி நொந்தது. அவள் அதைப் பொருட்படுத்தவில்லை.

அவள் சிறுமிதான். ஆனால் இங்கிதம் தெரிந்தவள் மௌனமாகவே அழுது ஏங்கினாள். அவளது ஆயுதம் அது ஒன்று தானே.

தனது கோரிக்கையைப் பகிரங்கமாகவே பிரகடனப் படுத்தி விட்டாள். இறுதி முயற்சியாகத்தான்!

“ம்மா எனக்கு இப்பவே வேங்கித் தாங்க….ப்பா எனக்கு இண்டக்கே வேங்கித் தாங்க…!”

போராட்டத்தின் உச்சக் கட்ட சுலோகங்களை விட்டெறிந்தாள்.

அவர்களுடைய கைகளைப் பிடித்து இழுத்து இறங்குமாறு கெஞ்சினாள்.

மிகக் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்த பஸ் பிரயாணிகளுக்கு கருப் பொருள் கிடைத்து விட்டது.

“…புள்ள என்னதையோ ஆசெயா கேக்குது ஏன் வேங்கித் தராம இருக்கிறீங்க…புள்ள பாவம்…” ஊசியேற்றினாள் ஒரு மாது. பிரச்சினை சூடு பிடிக்கிறது.

இப்பொழுது பிரயாணிகளுள் மற்றுமொரு தாய்க்காரிக்குத் திடீரென்று ஒரு தீர்வு பிறந்தது.

“புள்ளயப் போட்டு அடிக்காதீங்கம்மா பஸ் போவ இன்னம் எவ்வளவோ நேரமீக்கு எறங்கிப் பெய்த்து அது கேக்கிற எப்பிள் பழமோ…ஐஸ்கிறீமோ…வேங்கிக் கொடுங்கம்மா”.

“பாவம்…புள்ள அழுதழுது மொகமெல்லாம் வீங்கிப் பெயத்து…”

இது தாய்மை உணர்வா? அனுதாபக் குரலா? தொந்தரவு சகிக்க முடியாமல் வெளியேற்றும் தந்திரமா? அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

வசதியாக இருக்கைகளில் உட்கார்ந்திருந்த பிரயாணிகள் அவர்களையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ‘இவர்களை எப்படி வெளியேற்றுவது…’ எதுவானாலும் பஸ் குறிப்பிட்ட நேரத்திற்குப் புறப்படாது என்பது மட்டும் சர்வ நிச்சயமாகிவிட்ட சங்கதி.

சோர்ந்து போய்விட்டிருந்த சிறுமி சகீலாவுக்கு பக்க பலம் கிடைத்துவிட்டது. மீண்டும் எங்கிருந்தோ ஓர் உற்சாகமும் உந்துதலும். மீண்டும் தன் பல்லவியை ஆரம்பித்து. விடாப்பிடியாக, உச்சஸ்தாயியில் தொடர்ந்தாள். காலம் கடந்து போனால் ஒன்றும் கிடைக்காது என்ற கருத்து அவள் குரலில் தொனித்தது.

சற்று முன்னால் ஒலித்த தாய்ப்பாசம் மீண்டும் தலையெடுத்தது.

இறுதியில் விதியின் கை தான் ஓங்கியது. அதை மாற்றும் மனித முயற்சிகளுக்குப் படுதோல்வி. ‘எல்லாம் நன்மைக்கே’ என்ற நம்பிக்கை வலுவடைந்தது.

அவர்கள் இறங்கத் தீர்மானித்தார்கள். அப்பொழுது கூட அநுதாபக் குரல் எழுப்பிய பெண்ணிடம்: “கோவிச்சுக் கொள்ளாதீங்க…இந்த பேக்க கொஞ்சம் வெச்சிட்டுப் போவா…?”

“அப்போவ்…வாணாம்…வாணாம்…கையோடகொண்டு போங்க…ஒங்கட சீற் ஒங்களுக்கு கிடைக்கும்…”

அவர்கள் சுமைகளோடு இறங்கினர்.

அந்தக் கணமே. அவர்களை அறியாமல் மகிழ்ச்சியான தென்றல் அவர்களைத் தழுவிச் சென்றது.

வெயிலுக்கு இதமாக இருந்தது. சகீலாவின் ஆர்ப்பாட்டத்திற்குப் பூரண வெற்றியா? தாயும் தந்தையும் மகளும் நடந்தார்கள்.

சூரியன் மீண்டும் அவர்களைத் துரிதப் படுத்துகிறது. அவர்களைத் தொடர்ந்து வேறு சிலரும் இறங்கி தேநீர்க் கடைக்கு நடந்தனர்.

வண்டி சற்று நெரிசல் குறைந்திருந்தது. சொகுசாகப் பிரயாணம் செய்ய விரும்பும் சீற்கார்களுக்கு இரைச்சல் எதுவுமின்றி ஆறுதலாக இருந்திருக்கும்

‘இன்ரசிற்றி’யில் போக வேண்டியவர்கள் இதில் போய் ஏன் சிரமப்பட வேண்டுமோ…!

தாயும் தகப்பனும் பரபரவென்று முன்னால் நடக்க, புதல்வி சகீலா ஓடவும் முடியாமல், நடக்கவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தாள்.

சகீலாவின் பிடிவாதத்திலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. இந்தப் பொன்னான சந்தர்ப்பத்தை விட்டுவிட்டால் இனி அவள் கொழும்புக்கு எப்பொழுது வரப்போகிறாள். தாயும் வரப் போவதில்லை. தகப்பன் வரக் கூடும். ஆயிரம் சோலிகளைத் தலையில் சுமந்து கொண்டு அலைச்சல்களுக்கு மத்தியில் மகளைப் பக்குவமாக அழைத்துக் கொண்டு வந்து சிரமப்படுவாரா…? நாட்களைத் தள்ளிக் கொண்டே போனாலும் இது போல் மீண்டும் அத்தி பூக்கப் போவதில்லை.

அவளைக் கூட்டிக் கொண்டு வருவதாயிருந்தாலும் அவருக்குக் கொழும்பில் வேறு எந்த வேலையும் இருக்கக் கூடாது. ஆனால் அது நடக்கப் போவதில்லை.

இன்றைக்கு வந்ததே ஒரு நல்ல ‘மூட்’ முழுக்குடும்பத்திற்கும் புதிய உடுப்பு வாங்குவதற்கும், மகள் ‘ஸ்கொலர்சிப் பரீட்சையில் சித்தியடைந்து, ஊரில் ஒரு பெரிய பாடசாலைக்கு அனுமதி கிடைத்துவிட்டதனால் மகளுக்குத் தேவையானவற்றை வாங்குவதற்கும் தான் அந்த நாளை அவர்கள் ஒதுக்கியிருந்தார்கள். வகுப்பாசிரியை வேறு ‘கெட்டிக்காரி’ என்று நற்சான்று வழங்கியிருக்கிறாள். உண்மையில் அவள் புத்திசாலி தான். சந்தேகமில்லை.

அவளுக்கு அதொன்றும் பெரிதல்ல. வகுப்பில் அவளுக்கும் மிர்சானாவுக்கும் தான் கடுமையான போட்டி. எல்லாப் பாடங்களிலும் கூடிய புள்ளிகளை எடுத்து முதலாம் ஆளாக வந்து மிர்சானாவை பின்னடையச் செய்தது கூட அவளுக்கு விண்வெளிச் சாதனையல்ல.

ஆனால் கொஞ்ச நாளாக டியூஷன் வகுப்புக்களுக்குப் போட்டுக் கொண்டு பெருமையடிக்கிறாளே ஒரு வகையான காப்புக்கள். அவை தான் அவளது கண்களுக்கு விருந்து. சகலரையும் கவரும் அவை போன்ற காப்புகள் தானும் அணிய வேண்டும் என்பது தான் அவளது நீண்ட நாள் ஆசை. அதே வகையான காப்புக்களை கிடைக்கா விட்டாலும் அதற்கு நிகரான, உயர்வான. பளபளப்பான காப்புகள் உடனடியாக வாங்கியாக வேண்டும் அவற்றைக் கொழும்பில் வாங்காவிட்டால் ஊரில் உள்ள கடைகளில் கிடைக்கப் போவதில்லை. ஒரு சிறுமி காப்பு வாங்க ஆசைப்படுவதில் என்ன தவறு?

மிர்சானாவைப் பொறுத்தவரையில் அவளுக்கு அவளது மாமா சிங்கப்பூரிலிருந்து கொண்டு வந்து அன்பளிப்புச் செய்திருக்கிறார்.

“இந்தச் சந்தர்ப்பதை தவற விடக் கூடாது” என்று அவள் நடாத்திய போராட்டம் இறுதியில் வெற்றி பெற்றிருக்கிறது. அவளது நடையில் ஒரு வகையான குதூகலிப்பும் தென்படுகிறது.

‘பாவம் வறுமைப்பட்ட குடும்பம்’ என்று அந்தப் பெண் கொடுத்த உந்து சக்தியும், ‘பஸ் இன்னும் சுணங்கும்’ என்ற எண்ணமும் தான் அவர்களை இறங்கச் செய்து. காப்புகள் கிடைக்கும் இடம் தேடத் துரிதப் படுத்தியது. புறக்கோட்டை தெருக்கள் அவர்களுக்குப் புதிது தான். உயர் வகைக் காப்புக்கள் கிடைக்கும் இடம் எது…?

அவர்கள் ஆளுக்காள் மோதிக் கொள்ளும் புறக் கோட்டையின் குறுக்குத் தெருக்கள் எங்கும் சுற்றிக் கொண்டிருந்தனர்.

“மூதேவி… சனியன் சுருக்கா வந்து தொலையடி இனி எப்பிடியும் மத்த பஸ் தான். ஊருக்கு எப்ப தான் போய்ச் சேருவமோ…இதுக்கு ஒண்டும் வெளங்குதில்ல. காப்பு…காப்பு…காப்புண்டு உசுரே எடுக்குது…”

தாய் தொடர்ந்து புலம்பிக் கொண்டிருக்கிறாள்.

“…வகுப்பில் அந்த மிர்சானா என்ன செய்யுதோ அததான் இதுவும் செய்யணும். அவங்க பணக்காரங்க இங்லன்டலருந்து வரும்…சிங்கப்பூரிலிருந்து வரும்…அவங்களுக்கு என்ன…?”

அந்தப் புலம்பல் ஓயவில்லை . கால்கள் மட்டும் கணவனின் அடிகளைப் பின் பற்றி இழுபட்டன.

“இந்த வருஷத்தோட படிப்ப நிப்பாட்டத்தான் இருந்த…ஸ்கொலர்சிப் பாஸ் பண்ணிட்டாவே, ஸ்கூலுக்குச் சேக்காட்டி ஊரும் ஒலகமும் கதை சொல்லுமே….ஸ்கொலர்சிப் பாஸ் பண்ணின புள்ளங்களுக்கு டொனேஷன் கேக்க மாட்டாங்களாம்…இவரும் (கணவன்) வாய் தொறந்து சொல்லிட்டாரே! அனுப்பத் தான் வேணும்…

பத்து நிமிடங்களுக்கு மேல் புறக் கோட்டை வீதிகளில் நடந்து திரிந்து, ஒரு வழியாக “இங்க வேங்கலாம்…’ என்று நிச்சயித்துக் கொண்ட பின்னர் பெற்றவர்களுக்குக் கூட மகிழ்ச்சிதான். மகளின் பிடிவாதத்திலிருந்து விடு பட்டுவிடலாம். இனி இந்தக் கடையில அந்தக் காப்புக் கிடைக்கும்.

அந்தக் களிப்பின் பிரதிபலனாக – அவர்கள் ஒரு கூல் ஸ்பொட்டிற்குள் நுழைந்தனர். ஒரு சிறிய மேசையை வட்டமிட்ட நாற்காலிகளில் அமர்ந்து கொண்டனர்.

மூவரும் குளிர்மை ஊட்டப் பட்ட பழச்சாறு அருந்தி அதன் இனிமையையும் சுவையையும் ருசித்தனர்.

தாய்க்கும் தகப்பனுக்கும் இப்பொழுது மற்றுமொரு கவலை. இந்த நேரத்துக்கு அந்தப் பஸ் போயிருக்குமே…இதுக்குப் பொறகு மத்த பஸ் எத்தன மணிக்கோ…? இது செஞ்ச வேலதான். காப்பு காப்புன்னு…இப்ப அது வேணுமா…?’

“நீங்க எப்பம்மா காப்பு வாங்கித் தந்தீங்க…செல்லுங்க பாப்பம்…”

“சரி சரி…வாய பொத்திட்டு வா…காப்ப வாங்கிட்டு சுருக்க போவம்…” என்று அவர்கள் வெளியேற எத்தனித்த போதுதான்

அந்தப் பேரிரைச்சல் காதுகளைத் துளைத்து இயல்பு நிலையைச் சீர்குலைத்தது. அப்படியொரு பலமான இரைச்சல்.

புறக் கோட்டையிலிருந்துதான் மக்கள் கூட்டம் கண் மண் தெரியாமல் சின்னாபின்னமாகிச் சிதறிக் கலைந்தனர் பாதுகாப்புத் தேடி.

கூல் ஸ்பொட் கடையின் உள்ளேயும் தாழ்வாரத்திலும் ஒதுங்கிக் கொள்ள விரைந்து வருகிறது ஒரு கூட்டம். வீதிகளில் நிலவிய ஒழுங்கும் அமைதியும் முற்றாகச் சீர் குலைந்து விட்டது.

அவர்கள் மூவரும் செய்வதறியாது ஒரு மூலையில் நெருக்குப் பட்டுக் கிடந்தனர்.

‘இனி என்ன நடக்கப் போகுதோ……..?’ ஆரிபின் மனைவியிடம் மெள்ள முணுமுணுத்தான்.

“சல்மா இந்த சல்லிய லேஞ்சில முடிச்சி பத்திரமா வை. புள்ளக்கி காப்பு வாங்குர சல்லி. மதாவியன்க வருவாங்க. கவனம் சல்லி…பஸ் டிக்கட் எடுக்க மட்டும் என்ட கையில இருக்கு…நீ பேசாம இருந்தா சரி…”

இந்த முணுமுணுப்பில் பொதிந்துள்ள உண்மை சகீலாவின் காதுகளில் புகுந்து அவளுடைய மென்மையான உள்ளத்தை என்னவோ செய்தது. அது அவள் சிந்தனையைத் தூண்டி விட்டதன் விளைவு ஒரு பாரிய மாற்றத்தையே ஏற்படுத்தி விட்டது.

காப்பு மிர்சானாவை அழகு படுத்தும் அந்தக் காப்பு தேவையில்லை.

அவளுக்கு வளையல் அணிந்து அழகு பார்க்கும் அந்த இயல்பான ஆசை அவளை அறியாமலேயே அவளது மனதைவிட்டு அடியோடு மறைந்து விட்டது.

இப்பொழுது ‘பயம்’ அவர்களைக் கௌவிப் பிடித்துக் கொண்டது. சில மணித்தியாலங்களுக்குப் பிறகு மீண்டும் வீதிகளில் கசமுசவென்று சன நடமாட்டம். மக்கள் புற்றீசல் போல் வெளியேறிக் கொண்டிருந்தனர். அதற்கிடையில் கடைகளுக் கெல்லாம் பூட்டு விழுந்துவிட்டது.

அத்தோடு சற்று நேரத்திற்கு முன் வெற்றிக் களிப்பில் நடைபயின்று கொண்டு வந்த சகீலாவின் துள்ளலும் நம்பிக்கையும் அடங்கிப் போய் விட்டிருந்தன.

அவளது பிஞ்சு உள்ளத்தில் நியாயமான அச்சம் குடிகொண்டு விட்டது. தோல்விகள் அவளைப் போன்ற வறுமைப் பட்ட சிறுமிகளுக்குப் புதிதுமல்ல!

சன நெருக்கம் முற்றாகக் குறைந்ததும் அவர்கள் மீண்டும் பஸ் நிலையத்தை நோக்கி நடந்தார்கள். மூவருக்கிடையில் ஒரு பேச்சும் இல்லை .

அப்பொழுதுதான் அவர்களுடைய மௌனத்தை உடைக்க, அந்த அதிர்ச்சியான செய்தி அவர்களுடைய காதுகளுக்குள் நுழைந்து வயிற்றில் புளி கரைத்தது.

ஒரு கணம் அப்படியே ஸ்தம்பித்துப் போய் சிலையாக நின்றார்கள்.

அவர்கள் பிரயாணம் செய்யவிருந்த அந்த பஸ் வண்டி குண்டு வெடியில் சிதறிவிட்டதாம்.

அவர்களுடைய உள்ளங்கள் அந்தப் பரபரப்பான சோகச் செய்தியை உள்வாங்கிச் சற்று நிதானித்து மீள் பரிசீலனை செய்து பார்த்தன.

அந்தக் கோரமான சம்பவத்தை நினைத்துக் கூடப் பார்க்க சக்தியற்றவர்களாய் –

தாய் தந்தையரின் மனங்களில் பாச உணர்வு சுரந்து பெருகிப் பிரவகித்தது.

அவள் மட்டும் அடம் பிடித்து, ‘காப்பு’, ‘காப்பு’ என்று ஓயாது நச்சரித்திருக்காவிட்டால்…

அவர்களுடைய பார்வை முற்றிலும் மகளையே மொய்த்தது. தாயும் தகப்பனும் மாறி மாறிப் பெருகி வரும் பாச உணர்வுகளை வெளியே கொட்டுகின்றனர்.

“ஊருக்குப் பெய்த்து கண்மணியின் கைகளுக்கு தங்கக் காப்பு செய்து போடுவம் என்ன…?” ஆரிபின் நிறைந்த மனதோடு சொன்னான்.

தாய்க்காரியின் கண்களில் நீர் முட்டியது.

ஆனந்தக் கண்ணீர்!

– மல்லிகை – ஏப்ரல் 2001.

– நாம் பயணித்த புகைவண்டி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: 2003, மல்லிகைப் பந்தல் வெளியீடு, கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *