கானல் மழை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 15, 2021
பார்வையிட்டோர்: 2,474 
 

ஆசையாக அவிழ்த்த பரோட்டா பார்சலின் மத்தியில் உப்பு நீர் துளி துளியாக வடிந்து கொண்டிருக்க, அதை அப்படியே வைத்துவிட்டு கண்களை கசக்கிக் கொண்டே அம்மாவிடம் சென்றான் முரளி.

“அவன் என்ன சொன்னான்?”

“அதெல்லாம் ஒன்னுமில்லப்பா அவர் பேச்சே அப்படி தான், அவருக்கு முறையாக பேசத் தெரியாது”

தேம்பி தேம்பி அழுதவாரே “அதற்காக அவன் என்ன வேணாலும் பேசுவானா?”.

“சரி டா அழாத, போய் சாப்பிடு. இதென்ன எனக்கு புதிதா? பார்த்துக் கொள்ளலாம். நீ போ”

“அதெல்லாம் எனக்கு ஒன்னும் தேவையில்ல, அவனுக்கு எவ்வளவு குடுக்கணும்?”

“ஐயாயிரம் கொடுக்கணும் தம்பி, உன் அண்ணன் வெளிநாடு செல்ல அவன் வாங்கிய கடன்”

“நாளைக்கு ஏற்பாடு செய்கிறேன், அவன் மூஞ்சியில் விட்டெறியுங்கள்” என்று அழுதவாறு சொல்லிக் கொண்டே, உண்ண வைத்திருந்த பரோட்டா பொட்டலத்தை சாலையோரக் குப்பையில் வீசினான் முரளி.

கடன் கொடுத்தவர் பெயர் கருப்பையா, வயது 55. ஐந்து நிமிடத்திற்கு முன் முரளியின் அம்மா சுஜாதாவிடம் கருப்பையா கொட்டிய நெருப்பு “நாளை நான் வருவேன், நீ எவனுக்கு முந்தானை விரிப்பியோ தெரியாது. நாளைக்கு இந்நேரம் பணம் வந்திருக்கணும். இல்ல நடக்கிறதே வேற” என்பது தான்.

உண்ணப் போகும் முன் தொண்டை ஏங்கும் ஏக்கத்துடன் வற்றிய வாயை தண்ணியில் நனைத்துவிட்டு, வயிற்றுக்கு ஆறுதல் கூறி கனத்த நெஞ்சுடன் உறங்கிப் போனான் முரளி.

வாசலில் இருந்த கருப்பியின் வயிறு முரளி விட்டெறிந்த பரோட்டோவினால் நிரம்பியது. நிம்மதியாக உறங்கியது கருப்பி.

விடியலில் விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விழித்த முரளிக்கு அவன் மேனேஜரிடம் இருந்து கைபேசியில் அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்று “சொல்லுங்க சார்” என்றான்.

“முரளி உன் வங்கிக் கணக்கில் பதினைந்தாயிரம் டெபாசிட் செய்துவிட்டோம். பத்தாயிரம் உன் மாத சம்பளம், ஐயாயிரம் தங்கும் விடுதி மற்றும் உணவிற்கான செலவு. வருகிற செப்டம்பர் 18 இல் உனக்கு கொல்கத்தாவில் பயிற்சி தொடங்கும். செப்டம்பர் 16 அன்று மாலை ஆறு மணி ரயிலுக்கு டிக்கெட் முன்பதிவு செய்துள்ளோம். ரயில் டிக்கெட் மற்றும் தங்கும் விடுதி குறித்த விவரங்களை உனக்கு மின் அஞ்சலில் அனுப்பியுள்ளேன், சரி பார்த்துக்கொள். அங்கு சென்றதும் விடுதி காப்பாளருக்கு கைபேசியில் அழைப்பு விடுத்தால் போதுமானது. அவரே உன்னை ரயில் நிலையத்தில் வந்து அழைத்துச் செல்வார். மூன்று மாதம் பயிற்சி முடித்து இங்கு வந்ததும், நீயும் தனியாக பணிக்கு செல்லலாம். நன்றாக அனைத்தும் கற்றுக் கொண்டு வா, வாழ்த்துகள். வேறு எதுவும் செலவு அதிகமானால் அதற்கான ரசீதை மட்டும் பத்திரமாக சேகரித்து வைத்துக் கொள். பயிற்சி முடிந்து ஊருக்கு வரும்போது அதை கம்பெனியில் காட்டி பணம் பெற்றுக் கொள்ளலாம்” என்றார் மேனேஜர் சுந்தரம்.

“சரி சார், ரொம்ப நன்றி” என்றான் முரளி.

“சரி பா பார்த்து கிளம்பு, வேறு எதுவும் குழப்பம் இருந்தா என்னோட எண்ணுக்கு அழைப்பு விடு” என்று கூறி அழைப்பைத் துண்டித்தார் சுந்தரம்.

நேராக முதலில் ATM சென்று பத்தாயிரம் பணத்தை எடுத்துவந்து அம்மாவிடம் கொடுத்தான் முரளி.

“எப்படி டா பணம் வந்தது” என்றாள் சுஜாதா.

“அம்மா பயிற்சி நாள் எப்போ எங்கேனு சொல்லிட்டாங்க. அடுத்த வாரம் செப்டம்பர் 16 இரவு கொல்கத்தா கிளம்ப வேண்டும். முன்பணமாக இந்த மாத சம்பளம் மற்றும் தங்கும் செலவிற்காக சேர்த்து பதினைந்தாயிரம் கொடுத்தார்கள். ஐயாயிரத்தை அந்த மதிப்பிற்குரிய கடன்காரனுக்கு கொடுத்துவிட்டு, ஐயாயிரத்தை இந்த மாத செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள்”.

உடனே நேராக கருப்பையா வாசலில் போய் நின்று “இந்தாங்க உங்க பணம்! இனிமேல் வீட்டு வாசலுக்கு வரக் கூடாது” என்று கூறி பணத்தை ஒப்படைத்துவிட்டு வீட்டிற்குத் திரும்பினாள் சுஜாதா.

மாலையில் சாலையின் எதிர்புறம் சென்று கொண்டிருந்த சுஜாதாவைப் பார்த்த கருப்பையா, “ஏன் மா கோபித்துக் கொண்டாயா? நான் உனக்கு உறவுக்காரன் தானம்மா. ஏதோ கோபத்தில் பேசிட்டேன் மா, மன்னித்துக் கொள்ளம்மா” என்றார்.

“எனக்கு கோபமெல்லாம் இல்லை. விதியை நொந்து கொள்கிறேன், என் கணவனில்லாமல்” என்று கூறி கலங்கியவாறு நடையைக் கட்டினாள் சுஜாதா.

நான்கு நாட்கள் கழித்து மாரடைப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கருப்பையா. அப்போதும் அவரின் உடல்நிலையை விசாரித்துவிட்டு, அவருடைய மனைவிக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வந்தாள் சுஜாதா. அடுத்த நாள் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் கருப்பையா.

கருப்பையாவின் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு எடுத்து வரப்பட்டு, இறுதி சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இறுதி சடங்கில் சுஜாதா நின்று கொண்டிருக்கும் வேளையில் சோவென மழை கொட்ட, அங்கிருந்த கூட்டத்தில் இருந்து ஒரு பேச்சுக் குரல் “நல்லவங்க இறந்தா மழை பெய்யுமுனு சொல்லுவாங்க பா” உடனே அதற்கு பதில் குரலாக “ஆமாம் பா ஆமாம் பா உண்மை தான், நல்ல மனுஷன் யா பாவம்” என்றது மற்றொரு குரல்.

ஆம் உலகில் இன்று எத்தனையோ நல்ல மனிதர்கள் இறந்திருக்கலாம் என்ற மன ஓட்டத்துடனும், பிள்ளைகள் கூட இல்லாத கருப்பையா மனைவியின் நிலை குறித்த மன கலக்கத்துடனும், அந்த கூட்டத்திலிருந்து விடைபெற்று கானல் மழையில் நடையைக் கட்டியது இரண்டு கால்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *