(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தேவாவின் மனைவி முதலில் அதிர்ச்சியடைந்தாலும் கணவனது உள்ளம் குழுந்தைகளுக்காக ஏங்குவது கண்டு தலையாட்டினாள். அதனால் நாளை காலை கேட்டுவிட வேண்டும் என திடசங்கற்பம் பூண்டவனாக உறங்கினான் தேவா. அவன் கனவில் அந்தக் குழந்தையை தூக்கி முத்தமிட்டு, விளையாட்டுப் பொருட்களாய் வாங்கி அடுக்கி.. எத்தனை ஆசைகள்? எத்தனை கற்பனைகள்?
மக்கள் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தனர். பிச்சைக்காரப் பெண்ணை திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தனர். அந்த பிஞ்சு முகம் இன்று நிர்ச்சலமாக இருந்தது. சதாவும் முகத்தை சுருக்கிக்கொண்டு சிணுங்கும் அந்தக் குழந்தை இன்று இப்படி அயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பதை எல்லோருமாக பார்த்துக் கொண்டு இருந்தார்கள். குழந்தை அழவில்லை என்பதற்காக அதைப்போட்டு அடித்த அடியில் மூர்ச்சையாகி…
பிச்சைக்காரியின் முகத்தில் சிறிதும் சலனமிருக்கவில்லை. அவளைப் பார்க்கும் போது தாய்ப் பாசம் என தரணியில் பேசப்படும் யாவும் பிழைத்துப் போனது போல் தோன்றிற்று. தாயின் சேலையை சப்பிக்கொண்டும் அடம் பிடித்தழுது கொண்டும் வலம் வரும் அந்த குழந்தை.. தாயைப் போலவே எப்போதுமே கையை விரித்து பணம் கேட்டவாறு வரும் அந்தக் குழந்தை இப்படி பேச்சு மூச்சற்று கிடக்கிறதே!
அன்றும் அப்படித்தான். தேவா அலுவலகம் செல்வதற்கு வழக்கமாக ஏறும் பஸ்ஸில் ஏறிக் கொண்டான். அயன் பண்ணிய நீளக் கை ஷேர்ட், பேர்ப்யூம் வாசனை என அழகனாகச் செல்லும் அவன் வசதியாக ஓரிடத்தில் அமர்ந்து கொண்டான்.
கழிந்து போன இளமையின் நினைவுகளில் மூழ்கிப் போயிருந்த அவன் அக்குழந்தை அவனது தோற்பட்டையை தொடும் வரை சுய நினைவுக்கு வரவில்லை. திரும்பிப் பார்த்தான். அவன் கண்களில் அனல் தெரித்தது. இளையான்கள் மூக்கைச் சூழ்ந்திருக்க ஏதோ மிச்சம் மீதிகளை சாப்பிட்ட கையுடன் அவனைத் தொட்டதால் ஷேர்ட் அழுக்காகி இருந்தது. குழந்தையை கொஞ்சிக் கொண்டிருக்கும்போது அது உதைத்தால் நாம் மீண்டும் குழந்தையை உதைக்கிறோமா? இல்லையே. அவனும் அந்தரப்பட்டுப் போனான். ஒரு கணம் முறைத்துப் பார்த்தான். இவன் முறைக்கிறானா சிரிக்கிறானா என அறியாத குழந்தை அவனைப் பார்த்து அழகாய் சிரித்தது. அதைப் பார்த்தவனுக்கு உள்ளுக்குள் சுரீர் என்றது.
‘ச்சீ… பச்ச புள்ளய போய் கோவிச்சிக்கிறமே?
அப்படியே பாசம் வந்து கொட்டினாலும் தூக்கிக் கொஞ்சத்தான் முடியுமா? பஸ்ஸிலுள்ளவர்கள் இவனை வினோதமாக பார்க்க மாட்டார்களா? பேசாமல் திரும்பிக்கொண்டான். அன்றைய நாள் முழுவதும் அந்த குழந்தை அவனது நினைவுகளில் வந்துபோனது. வேலை முடிந்து வீட்டுக்குப்போகையில் வழக்கம் போலவே அன்றும் மனைவி அழுது கொண்டிருந்தாள்.
ஆண்டவா! இந்த பிரச்சினைக்கு முடிவு எப்போது வருமோ? சில வேளைகளில் நேரம் கெட்ட நேரத்தில் அழுது கொண்டிருக்கும் மனைவியை பார்த்து கோபம் வரும். என்றாலும் இவளை சதாவும் குறை சொல்லும் அயல் வீட்டுப் பெண்களையும் எத்தனை முறை கண்டித்தாயிற்று? இவனிலும் அவளிலும் எந்தக் குறையுமில்லை. ஏனோ ஆண்டவன் குழந்தை பாக்கியத்தை இவர்களுக்குக் கொடுக்கவில்லை. இவளது தங்கையின் பிள்ளைகளை வாரியணைத்து இருவருமாக கொஞ்சும் போது அதைப் பார்ப்பவர்களுக்கும் இயற்கை மீது கோபம் கோபமாய் வரும்.
கவனிப்பாரற்று கிடப்பதால்தானே அந்தக்குழந்தை இப்படி இருக்கிறது? ஒழுங்காக குளிப்பாட்டி அழகாய் அணிவித்தால்? இவன் ஆசைப்பட்டு என்ன பயன்? மனைவியும் அம்மாவும் சம்மதிக்க வேண்டுமே? அது சாத்தியப்படக் கூடிய ஒன்றா? பலவாறு சிந்தித்தான். தினமும் அழுது கொண்டே பஸ் ஏறும் பிச்சைக்காரியிடம் என்னவென்று போய் பேசுவது? வாய்க்கு வந்தது போல அவள் ஏதாவது சொல்லி விட்டால் பெருத்த அவமானமாக போய் விடுமே.
அன்றொருநாள் கூட யாரோ ஒரு பெண் தன் பிள்ளைக்கு வைத்திருந்த பிஸ்கட்டை இந்தக் குழந்தைக்கு கொடுத்ததற்காக எப்படியெல்லாம் வசைபாடினாள் இந்தப் பிச்சைக்காரி? அந்த பெண்ணின் முகம் வெட்கத்தால் அப்படியே சிவந்து போயிற்றே. அப்பேர்ப்பட்ட இவளிடம் போய் ‘உன் பிள்ளையை தத்ததெடுக்கவா?’ என்று கேட்க முடியுமா? இன்னொரு நாள் வழக்கமாக அவள் அந்த குழந்தையுடன் பஸ்ஸில் ஏறினாள். அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது குழந்தை. அதை தட்டியெழுப்பினாள் அந்தத்தாய். பார்த்துக் கொண்டிருந்த இவனுக்கு பெரும் ஆச்சரியமாய் போயிற்று.
வேலையில்லாத நாட்களிலும் அவன் நேர காலத்துடன் எழும்பினால் இன்னும் கொஞ்சம் தூங்கி எழுமாறு கூறும் இவனது அம்மா எங்கே? தூங்கும் பச்சைப் பிள்ளையை எழுப்பி விடும் அவள் எங்கே? மீண்டும் கவனித்தான். குழந்தை மீண்டும் அவளது தோளில் சாயும் போது அவள் அங்குமிங்கும் நோட்டம் விட்டாள். இவன் பார்ப்பதை அவள் காணவில்லை போலும். யாரும் அறியாத வண்ணம் குழந்தையின் தொடையில் கிள்ள, குழந்தை வீறிட்டுக் கதறி அழுதது. அவன் மலைத்துப் போனான். அழும் குழந்தையை காட்டி அவள் பணம் பெற்றுக்கொண்டிருந்தாள்.
வேலை விட்டு ஒரு தினம் வந்து கொண்டிருந்தான். கையில் வைத்திருந்த டொபி மனதை என்னவோ செய்தது. அவன் ஒரு முடிவுக்கு வந்தான். மனைவியிடம் பேசி அவள் சம்மதம் பெற்று நாளைக்கு எப்படியாவது இந்த பிள்ளையை தனக்கு தர முடியுமா என இவளிடம் கேட்டுவிட வேண்டும். எனினும் ஒரு பிச்சைக்காரியின் பிள்ளை என்றால் யாரும் விரும்பப் போவதில்லை என்பதை நன்கறிவான். அதனால் தனது அலுவலக நண்பனுடைய தோழியின் பிள்ளை என கூறியே வீட்டாரிடம் சம்மதமும் வாங்கிக்கொண்டான்.
இப்போது குழந்தையும் தாயும் வழமையாக நடமாடும் இடத்திற்கு தேவா வருகின்றான். பொலிசார் ஏதோ விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அழ வைப்பதற்காக தாய் அடித்த அடியால் திணறிய குழந்தை இறந்து கிடக்கின்றது!!!
– வைகறை (சிறுகதைகள்), முதல் பதிப்பு: நவம்பர் 2012, இலங்கை முற்போக்கு காலை இலக்கிய மன்றம்.