ஊரிலிருந்து அப்பா வருவதாக அலைபேசியில் அவர் சொல்லக் கேட்டவுடன் சந்திர மோகனுக்கு எதிர்ப்பார்பு ஆரம்பித்துவிட்டது. இந்த முறை எப்படியும் ஷன்முகப்ப்ரியாவைப் பற்றி சொல்லி விட வேண்டும். சென்ற முறை ஊருக்கு சென்ற போது பிரியா குறித்து பேச எத்தனித்த போதெல்லாம் ஏதோ வேறு விஷயம் வந்து விட, எடுத்துச் சொல்ல சரியான தருணம் அமையவில்லை.
எப்படி ஆரம்பித்தது என்று மோகனுக்கே தெரியாமல்தான் ஷன்முகப்ப்ரியாவை அவன் வாழ்க்கையில் ஒரு பங்காக உணரத் தொடங்கினான். அவள் குறித்து அவ்வளவு தீவிரமாக அப்பாவிடமும், அம்மாவிடமும் சொல்ல முடியுமா என்ற ஒரு தயக்கம் இயல்பாகவே அமைந்து விட்டது.
கள்ளக்குறிச்சியை, தாண்டி சின்ன சேலம் செல்லும் வழியில், மெயின் ரோட்டிலிருந்து கிட்டத்தட்ட மூன்று கிலோ மீட்டர் தள்ளியிருந்தது சந்திர மோகனின் கிராமம். வீட்டில் விவசாயம்தான் என்றாலும் கூட, வெங்கடாசலம், சந்திர மோகனை நல்ல படிப்பு, படிக்க வைக்க வேண்டும் என்று கள்ளக்குறிச்சியில் படிக்க வைத்தார். பின்னர் நாமக்கல் போர்டிங் ஸ்கூல், சென்னையில் பொறியியல் படிப்பு, மற்றும் தகவல் தொழில் நுட்பத்தில் பெருகி வரும் வேலை வாய்ப்பில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை என்று சந்திர மோகனுடைய இன்று வரையிலான வாழ்க்கை சரித்திரம் மிகவும் சாதாரணமானது.
ஷன்முகப்ப்ரியா அவன் வாழ்க்கையில் வராமலிருக்கும் வரையில் அவன் கூட எல்லோரையும் போல் கம்பெனி பஸ்சில் சென்று, காண்டீனில் வயிறு வளர்த்து, சனி, ஞாயிறுகளில் ஏதாவது ஒரு ‘மால்’லில் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான்.
அலைபேசி மணியடித்தது. எடுத்தால் அம்முனையில் வெங்கடாசலம், தான் கோயம்பேடு வந்து விட்டதாகவும், அவனுடன் அரை மணி நேரம் பேசி விட்டு, உடல் நலமில்லாமல் படுத்துக் கிடக்கும் தன் மாமாவை, சூளை வரையில் சென்று பார்த்து விட்டு அன்றிரவே ஊரு திரும்பிவிடப் போவதாக சொன்னார்.
சந்திர மோகனுக்கு அலுப்பாக இருந்தது. கிடைக்கும் இந்த அரை மணி நேரத்தில் ஷன்முகப்ப்ரியவைப் பற்றி என்ன சொல்ல முடியும். ஒவ்வொரு முறையும் இப்படியே தள்ளிப் போய்க் கொன்டிருக்கிறது. தவறுகள் வெளியே தெரியக் கூடிய தருனங்களுக்கு மிக அருகாமையில் தான் இருப்பதை அவன் உணர்ந்திருந்தான்.
ஹாங்கரில் மாட்டியிருந்த ஜீன்சையும், ஒரு டீ ஷர்ட்டையும் அணிந்துக் கொண்டு, அறையை பூட்டி விட்டு, சாவியை ஜன்னலைத் திறந்து, சுற்றும், முற்றும் பார்த்து விட்டு, காலெண்டர் ஆணியில் மாட்டிவிட்டு, பல்சரில் கோயம்பேடு நோக்கி பயணிக்க ஆயத்தமானான்.
அலைபேசி மீண்டும் ஒலித்தது.
“மச்சி, பெருசு ஊரிலிருந்து வந்திருச்சு. நான் கோயம்பேடு போயிட்டு வரேன்.”
“டேய், பாத்திரமெலாம் கழுவி வெச்சுட்டயா?”
“வந்து பாக்கலாம்டா. எப்படியும் நைட் ஷிப்ட்டுக்கு நான் வரும் போது எல்லாத்தையும் ரெடி பண்ணிடறேன்.”
“ஓகேடா, அப்புறம் மறக்காம ஷன்முகப்ப்ரியா மேட்டர பெருசுககிட்ட இந்த முறை சொல்லிடு”
“ பாக்கலாம், சரி சாவிய வழக்கமா வெக்கற இடத்துலதான் வெச்சிருக்கேன். சீக்கிரம் வந்திட்டா எழுந்து, கொஞ்சம் வேலைய முடிச்சுடு. வரட்டா”
மெதுவாக பயனித்துக் கொண்டு, மணப்பாக்கம் சிக்னலில் நின்றுக் கொண்டிருந்த போது, மீண்டும் அலைபேசி அலறியது. மீண்டும் அப்பா அவன் வருவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்டார்.
“அப்பா, போரூரில் இருந்து கோயம்பேடு வர எப்படியும் பதினஞ்சு கிலோ மீட்டர் இருக்கலாம். இந்த டிராபிக்ல, இப்பதான் புறப்பட்டிருகேன். இன்னமும் குறைஞ்சது, முக்கால் மணி நேரம் ஆகும். நீங்க வேணா டிபன் செஞ்சுட்டு வெயிட் பண்ணுங்க”
“இல்ல மோகன், மாமன்டூர்ல வண்டி நிறுத்தினான். அங்க ஒரு காபி குடிச்சது. இன்னமும் வயிறு சரியில்லை. நான் இங்கயே காத்திருக்கேன்”
‘சரிப்பா” என்று ‘கட்’ செய்து மீண்டும் தன் பயணத்தை தொடர்ந்தான்.
வேங்கடாசலத்துக்கு காத்திருப்பது புதிதல்ல. வானம் பார்த்து, மழைக்காக காத்திருந்து, காத்திருந்து விவசாயத்தின் மீதே ஒரு வெறுப்பு ஏற்ப்பட்டுதான் சந்திர மோகனை நல்ல பள்ளியில் சேர்த்து, நல்ல கல்வி கொடுக்க வேண்டும் என்று ஆர்வம கொண்டார்.
தாசில்தாரும், வீஏஓவும் அவர் ஊருக்கு வரும் போது அவர்களுக்கு அளிக்கப் படும் மரியாதையையும், அழுக்கு படாத, மடிப்பு கலையாத அவர்களின் உடையும், அவருக்கு சந்திர மோகனை அவர்களிடத்தில் வைத்து பார்க்க தோன்றியது.
அப்போதுதான் கல்வியின் அருமை புரியத் துவங்க அவனது கல்வியின் முன்னேற்றத்துக்காக ஒவ்வொரு படிக்கட்டிலும் அவனை ஏற்றிவிட, கீழிருந்து காத்திருக்க துவங்கினார். சுமாராக படித்த சந்திர மோகனுக்காக மிகப் பொறுமையாகவும், ஒரு தவமாகத்தான், அவர் அவன் பாதையை இட்டுச் சென்றார்.
மிகச் சொற்ப்பமான மதிப்பெண்கள் வாங்கி தேறிய அவனை நாமக்கல் பள்ளியில் சேர்த்து, பின்னர் ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்த்த போது அவருக்கு கொஞ்சம் புரிந்தது, தன் மகன் அரசு அதிகாரியாக ஆகப் போவதில்லை என்பது. அந்தளவுக்கு அவருக்கு சிறிது மன வருத்தம்தான். என்றாலும் கூட, அவன் தற்போது வேலை செய்யும் மென் பொருள் நிறுவனக் கட்டிடங்களை பார்த்த போது கொஞ்சம் சந்தோஷமாகத்தான் இருந்தது.
அவனுடன் வேலை செய்யும் அனைவரும் ஆங்கிலப் புலமையுடன், பன்மொழி அறிந்தவர்களாய், பல விதமான வாகனங்களில் ஆண், பெண் பேதமின்றி பயனிப்பதைக் காண்கையில் வேங்கடாசலதுக்கு கொஞ்சம் பதற்றமாகத்தான் இருந்தது. என்றாலும் மனதளவில் அவரால், ஏற்றுக் கொள்ள முடிந்தது. கல்வி அனைவரையும் சமமாகி விடக் கூடும் என்பதை அனுபவங்களில் மூலமாய் உணர்ந்திருந்தார். அதற்கான பக்குவமும் அடைந்திருந்தார்.
அலைபேசி சினுங்கியது.
“என்னங்க ஊர் சேர்ந்தாச்சா?’
“ஆமா தனம். இப்பதான் கோயம்பேடு வந்தேன். மோகன்கிட்ட பேசி இருக்கேன். வரேன்னு சொல்லி இருக்கான். அதுதான் காத்துகிட்டிருகேன்.”
“டிபன் செஞ்சுட்டீங்களா.?”
“ இன்னமும் இல்லை. மோகன்கூட சாப்பிடலாமுன்னு இருக்கேன்”
“சுகர் மாத்திரை சாப்பிட்டுருங்க. மறந்துடாதீங்க”
“சரி தனம”
“அப்புறம் அந்த விழுப்புரம் சம்பந்தம் விஷயம். பக்குவமா அவங்கிட்ட சொல்லிடுங்க”
“ஆகட்டும் தனம்.” என்று சொல்லி பேச்சை நிறுத்தினாலும் மனசுக்குள் கவலையாக இருந்தது. மோகன் பத்தாவது படிப்பு முடிந்தவுடன் அவரிடமிருந்து பிரிந்து விட்டான். படிப்பு காரணமாக, வேலையின் காரணமாக கிட்டட்தட்ட பன்னிரண்டு வருடமாக அவரிடம் எந்த விதமான நெருக்கமும் இல்லாமல் ஒரு கடமை உணர்வுடன் சந்திர மோகன் இருப்பதாக அவருக்கு தோன்றியது.
அவன் கல்யாணத்தைப் பற்றி இதுவரையில் பேச எதுவாக சமயம் எதுவும் ஏற்ப்படவில்லை. சென்ற முறை அவன் ஊருக்கு வந்த போது அது குறித்து அவன் மன நிலை என்ன என்று கேட்க எண்ணியிருந்தாலும், சரியான் வாய்ப்பு அமையவில்லை. இம்முறை எப்படியும் பேசியே ஆக வேண்டும்.
அவனது மனநிலை குறித்து மிகவும் கவலையாக இருந்தது. படித்து இருக்கிறான். நல்ல வேளையில் இருக்கிறான். தனக்கு மனைவியாக போகிறவள், உடன் பணி புரியும் பெண்களைப் போல இருக்க வேண்டும் என்று அவன் எதிர்ப் பார்த்தால், தன்னால் ஈடு செய்வது கஷ்டம் என்பது வேங்கடசலதுக்கு புரிந்திருந்தது. சில துளியாய் மழைத் தூறல் விழ நிழற்க் குடை கீழ் புகுந்தார்.
மோகன் மழையில் வருவதானால் இன்னமும் நேரமாகி விடுமே என்று யோசனையுடன் காத்திருந்தார்.
வடபழனி சிக்னல் தாண்டி, கோவிலுக்கு முன்பிருந்த பேருந்து நிலையம் வரும் போது, சந்திர மோகனின் அலைபேசி சினுங்கியது.
“மோகன். பிரியா பேசறேன்”
“சொல்லு பிரியா. என்ன விஷயம்?”
“முக்கியமான விஷயம் ஒன்னு பேசணும். எனக்கு பயமாயிருக்கு”
“பிரியா கொஞ்ச நேரம் கழிச்சு பேசறேன். ஊருலயிருந்து அப்பா வந்திருக்கார். அவர பாக்கத்தான் நான் கோயம்பேடு வரைக்கும் போயிட்டு இருக்கேன்.”
“என்கிட்டே சொல்லவேயில்ல”
“ ப்ப்பத்தான், அரை மணி நேரம் முன்னாடிதான் அப்பா வரது எனக்கே தெரியும். ஏதோ பெரியவர் ஒருத்தர் உடம்பு சரியில்லேன்னு பாக்க சென்னை வந்திருக்கார். அப்படியே என்னையும் பாத்திட்டு போயிடுவார்.”
“மோகன் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் ஒன்னு பேசணும்”
“சாரி பிரியா. நான் கோயம்பேடு வரைக்கும் போயிட்டு இருக்கேன். அப்பாவைப் பார்த்திட்டு, நம்ம விஷயமும் பேசிடலாமுன்னு பாக்கறேன். அவருக்கிட்ட பேசிட்டு அப்புறம் உனக்கு போன் செய்யறேன்.”
“சரி மோகன். எனக்கு கொஞ்சம் பயமாயிருக்கு. மாமாகிட்ட பேசிட்டா நல்லதுன்னு தோணுது. நீங்க பேசினதுக்கு அப்ப்புறம்தான் எங்க அப்பா, அம்மாகிட்ட பேசணும்.”
“சரி பிரியா நான் கூப்பிடறேன்”
அவனிடம் பேசி முடித்தபோது, ப்ரியாவுக்கு வயிற்றில் ஏதோ செய்வது போல் தோன்றியது. ஏதாவது ஆகியிருக்குமோ என்று அச்சமாக இருந்தது.
சொல்ல, சொல்ல கேட்காமல் எத்தனை முறையாகி விட்டது. மோகனிடம் அவள் பழக ஆரம்பித்து மூன்று மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் இது எத்தனை முறையாம். அதற்குள் எப்படி இந்த அளவுக்கு தான் மோகனிடம் தன்னை அளித்து விட்டோம் என்று எண்ணியபோது பயமாக இருந்தது.
முதலில் தொட்டு பேசி, கண்ணீர் சிந்தி, பின்னர் அவர்கள் இருவரும் கலந்து, கூடியது எல்லாமே கனவு போல் அவளுக்கு இருந்தது. எவ்வளவுதான் பிரயத்தனம் செய்துக் கொண்டு, எந்தப் பிரச்சனையுமில்லாமல் இருக்க தற்காப்பு எடுத்துக் கொண்டாலும் இந்த முறை தள்ளிப் போன போது கொஞ்சம் அச்சமாக இருந்தது.
அவளது அறையில், அவளுடன் தங்கியிருந்தவள்கூட ஏதாவது மருத்துவமனை ஒன்றில் பரிசோதனை செய்து முடிவை பார்த்து விடலாம் என்று யோசனை தெரிவித்து இருந்தாள். ப்ரியாவுக்கும் அதில் நம்பிக்கை என்றாலும், மோகனைக் கூட்டிக் கொண்டு மருத்துவமனையில் பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஆசையாக இருந்தது.
எப்படியும் இந்த இரண்டு மாதங்களுக்குள் கல்யாணம் செய்து விட்டால் எந்த ப்ரச்சனையும் இல்லை. பெரியவர்கள் பார்த்து ஆடி மாதம், நல்ல முஹூர்த்தம் என்று தள்ளிப் போட்டால் வேறு வழியில்லை. இது தேவையில்லை என்ற முடிவு எடுக்க வேண்டும் என்று எண்ணினாள்.
மனசுக்குள் சிரிப்பாக இருந்தது. குழந்தை எதுவும் உண்டாகக் கூடும என்ற நிச்சயமில்லை. மோகன் வீட்டில் சம்மதிப்பார்களா என்பதும் நிச்சயமில்லை. மோகன் வீட்டில் சம்மதித்தாலும் தங்கள் வீட்டில் சம்மதிப்பார்களா என்று கவலையாக இருந்தது.
அக்காவுக்கு இன்னமும் கல்யாணம் ஆகவில்லை. இந்தச் சூழலில் இந்தக் குழந்தை பிரச்சனை, எப்படியிருந்தாலும் தான் நிச்சயமாய் கல்யாணத்தை தள்ளிப் போட்டே தீர வேண்டும் என்று எண்ணியபோது கொஞ்சம் தெளிவான மாதிரி இருந்தது.
அவளது ஷிப்ட் மதியம் மூன்று மணி முதல் இரவு பன்னிரெண்டு மணி வரையில். ராமாபுரத்தில் அவள் தங்கியிருந்த வீட்டின் முன் வந்தது ‘காபி’ல் அழைத்துச் சென்று, இரவில் சரியாக விட்டு விடுவார்கள். புதிய, புதிய டிரைவர்களுடன் அவள் வேலைக்கு சென்று வரும் போது ஆரம்பத்தில் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. இப்போதெல்லாம் உடனே தூங்கி விடுவது வழக்கம். எப்போது புறப்பட்டோம், எப்போது சேர்ந்தோம் என்று தெரியாமல் மொபைல் போனில் பாடல்களைக் காதுகளில் ஸ்பீக்கர் மாட்டிக கொண்டு, கேட்டுக் கொண்டே அவளது பயனங்கள் தொடர்ந்தது.
மோகனுடன் போகும் போது பல்சர் வேகத்தில், முகத்தில் காற்று ஜிலீரிட பயோனம் செய்வாள். ஸ்பீக்கர் போனின் ஒரு முனை அவளது காதிலும், மற்றோருமுனை மோகனின் காதிலும் வைத்து இசை, இசைக்க மனம் பர,பரக்கும். மோகனுடன் பழக ஆரம்பித்த நாட்களை விட, அவனுடன் சேர்ந்து இருக்கும் நாட்கள், ஒவொரு நாளும் அவளுக்கு சந்தோஷத்தையும், நிறைவையும் அளித்தது.
மோட்டார் பைக்கில் அவர்கள் இருவரும் சேர்ந்து செல்லும் போது எதிரே வரும் புது மணத் தம்பதிகளையும், கைக் குழந்தையுடன் பயணிக்கும் இளம் ஜோடிகளையும் பார்க்கும் போது அவளுக்கு வெட்கமாக இருக்கும். மோகனை நெருக்கிக் கொண்டு உட்க்கார்ந்துக் கொள்வாள். .
மற்றவர்களையெல்லாம் பார்க்கும் போது மோகன் எவ்வளவோ பரவாயில்லை என்றே அவளுக்கு தோன்றியது. அளவாக சிகரட் பிடிப்பான். சில சமயம் பீர் சாப்பிடுவான். ஹோட்டலுக்கு அவளுடன் செல்லும் போதெல்லாம் , அவனே அவளுக்கு தேவையானவற்றை ஆர்டர் செய்வான். எப்போது கூப்பிட்டாலும் வந்து, அவளுக்காக காத்திருந்து சனி, ஞாயிறுகளில் அழைத்துச் செல்வான். அலைபேசியில் எப்போது மிஸ்சுடு கால் கொடுத்தாலும், உடனே கூப்பிடுவான். அவளது அலைபேசிக்கு ரீ-சார்ஜ் செய்வான். அவள் ஊர் போகும்போதெல்லாம் சென்ட்ரல் அல்லது, கோயம்பேடு வரை வந்து , விட்டு செல்வான். ஊரிலிருந்து திரும்பியவளை கூட்டிச் செல்வான். ஷாப்பிங் போகும் போது, கால கடுக்க அவளுடன் வந்து கடையில் காத்திருப்பான்.
அவனுடன் அவள் போகும்போது ஓர் அசாதரணமான தைர்யம் அவளுக்கு இருந்தது. தான் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உணர்வே அவளுக்கு சுதந்திரமான மனப்பான்மையை அளித்தது. அவள் ஒரு பள்ளிச் சிறுமியை போல மகிழ்ச்சியுடன், யார், எவரைப் பற்றியும் கவனிக்க வேண்டிய அவசியமும் இல்லாமல் அவனுடன் நேரங்களை செலவழிக்க முடிந்தது.
மோகனை திருமணம் செய்துக் கொண்டால், இப்போது அவன் செய்து கொண்டிருப்பதைத் தவிர வேறு என்ன விசேஷமாக செய்து விடப் போகிறான் என்று யோசித்த போது ப்ரியாவுக்கு ஆயாசமாக இருந்தது. மிஞ்சிப் போனால், கெஞ்சி, கெஞ்சி உடலுறவு செய்வான். குழந்தைப் பிறப்பு, உடம்பு சரியில்லை என்றால் ஆஸ்பத்திரி வரக கூடும். சமையல் கூட கொஞ்சம் சுமாராக செய்வான். பாத்திரம் தேய்ப்பான் என்று எண்ணியபோது, இதையெல்லாம் திருமணத்துக்கு பின்னர் செய்வானா என்று யோசித்தால் புதிராக இருந்தது.
அவள் நண்பர்களிடம் விசாரித்த போது, அவன் அநியாயத்துக்கு நல்லவனாய் இருந்தான். மோகனின் நட்பு வட்டம் மிகக் குறுகியதாய் இருந்தது என்ற போது அவள் சந்தோஷமடைந்தாள். அவளைத் தவிர அவன் வெகு சிலருக்கு மட்டுமே நேரம் ஒதுக்க வேண்டியிருக்கும் என்ற போது அவளுக்கு அது மகிழ்ச்சியை அளித்தது.
அக்காவின் திருமணம் மட்டுமே தனக்கு இப்போதைய பிரச்சனை என்பது ப்ரியாவுக்கு தெளிவாக புரிந்தது. அலைபேசியின் ஒலி அழைப்பு அவளை நிதானத்துக்கு கொண்டு வந்தது.
“பிரியா நான் ஜெய் பேசறேன்”
“சொல்லுக்கா”
“நான் இன்னைக்கு சாயந்திரம் ஊருக்கு போறேன். அதுதான் உனக்கு போன் பண்ணினேன்”
“இப்ப வரியா அக்கா”
“இல்ல, எனக்கு ஆபிஸ் முடிஞ்சு போக லேட்டாயிடும். மூணு மணிக்கு புறப்பட்டாதான் சென்ட்ரலுக்கு அஞ்சு மணிக்குள்ள போக முடியும். அப்புறம் ட்ரெயின் புடிச்சா ஏழு, எழரைக்குள்ள ஊர் போயிடலாம்”
“என்னக்கா திடீர்னு?”
“ஏதோ, கல்யாண விஷயம்னு அப்பா சொன்னாரு. ஆமா என்ன சமைச்ச”
“பிரட் டோஸ்ட்”
“அதுக்கு பேரு சமையலா? வர, வர ரொம்ப சோம்பேறி ஆயிட்ட பிரியா. எடை குறைக்கறேன்னு, சாபிடாம இருந்தா ஒல்லியாய் அசிங்கமாயிடுவ. நல்லா சாப்பிடு பிரியா”
“சரிக்கா” என்று மேலும் பேசி முடித்தாள்.
எந்தப் பிரச்சனையும் இல்லாவிட்டால் நல்லது என்று அவள் மனம் வேண்டிக் கொண்டது. மோகனை அழைத்துக் கொண்டு மருத்துவமனையில் ஓர் சோதனை செய்து விட்டால் போதும் என்று நினைத்துக் கொண்டாள். குழந்தை பிறக்கக் கூடும் என்றால் நிச்சயமாய் இப்போது இது தேவையில்லை என்று நினைத்தாள்.
முதல் குழந்தையை தவிர்த்தால், அடுத்தக் குழந்தை பிறக்க காத்திருக்க நேரிடும் என்று முன்னர் எங்கோ படித்தது ஞாபகம் வர, கவலையுடன் டிவியை ஆன் செய்துக் கொண்டு அதற்கு முன் அமர்ந்தாள்.
சந்திர மோகன் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் உள்ளே நுழைந்த போது, வானம் வெளுத்து விட்டிருந்தது. வழியெல்லாம் மழை நீர் தேங்கியிருக்க, மெட்ரோ வேலைகள் ஓரளவு முடிந்திருக்க வாகனங்கள் மிக மெதுவாக ஊர்ந்து பயனித்ததில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பயணம் ஆனது. மழை நீரில் ஆங்காங்கே இருக்கக் கூடிய பள்ளங்களைத் தவிர்க்க, பெரிய வாகனங்களும், இரு சக்கர வாகனங்களும் ஊர்ந்து செல்வதில், சென்னையின் மழை நாட்கள் கொஞ்சம் எரிச்சலூட்டுவதாய்தான் இருக்கும். ஒரு சராசரி சென்னை வாசியாக இருந்து நினைக்கையில் மழை நாட்கள் சந்தோசம் துளிர் விடச் செய்யும். அதில் முதல் காரணம், கோடையில் தண்ணீர் பிரச்சனையை குறைக்கக் கூடும் என்பதுதான்.
வெங்கடாசாலம், சந்திர மோகனை கண்டவுடன் தலையசைத்து தான் இருக்குமிடத்தை தெரிவிக்க முயன்றார். அதற்குள் அவரது அலைபேசி அழைத்தது.
“அப்பா, எங்கிருக்கீங்க?”
“நேரா பாரு. மாங்காடு போற பஸ் நிக்கும் பாரு. அந்த ஸ்டாண்ட்ல இருக்கேன். நீ எனக்கு தெரியற பாரு”
“சரிப்பா” என்று சொல்லி அவன் கைப்பேசியை வைப்பதை வேங்கடசலம் கவனித்தார். சந்திர மோகன் அவர் இருக்கும் இடத்தைப் பார்த்து முகத்தில் புன்சிரிப்புடன் பல்சரில் வந்தான்.
“அப்பா, ஏறிக்குங்க”
கொயம்பேடுன் பின் புற வழியில், காய், கறி சந்தையை தாண்டி, சின்மயா நகர், விருகம்பாக்கம், உள்ளே குறுகிய சந்துகளில் அவர்கள் இருவரும் சென்றுக் கொண்டிருந்தார்கள். வழக்கம் போல் அம்மா எப்படியிருகிறாள். ஊரில் எல்லோரும் சௌக்கியமா. விவசாயம் எப்படி என்ற அவனுடைய கேள்விகள்.
அவன் உடம்பு மெலிந்து விட்டதாய் அவர் கவலை தெரிவித்து நல்ல சாப்பாடு சாப்பிட்டு வந்தால் நல்லது என்று அவர் சொல்லி கொண்டு வந்தார். திடீரென்று ஓர் மௌனம நிலவியது. வெறுமே வண்டி சென்றுக் கொண்டிருந்தது. ஏதாவது பேசியே தீர வேண்டும் என்று சந்திர மோகனுக்கு ஒரு அவசரம் ஏற்ப்பட “ஏம்ப்பா, சாபிட்டாச்சா?” என்று கேள்வி எழுப்பினான்.
“இல்ல மோகன், மாமன்டூர்ல காபி சாப்பிட்டேன்”
“கிட்டத்தட்ட நாலு மணி நேரம் ஆகிருக்குமே அப்பா. இருங்க, எதாவது சாப்பிட்டுவிட்டு போகலாம்” என்று நூறடி சாலையில் ஒரு உணவகத்தின் முன்பு வண்டியை நிறுத்தினான்.
சப்பை மூக்கு சப்ளையர் டேபிள் துடைக்க, தமிழ்ப் பெண் வந்து தண்ணீர் வைத்துப் போனாள். கருப்பு பேண்ட்டும், வெள்ளைச் சட்டையும் அணிந்து, மெனு கார்டு நீட்டி அவனுடைய ஆர்டரை பெற்றுக் கொள்ள மின்னணுக் கருவியுடன் பேரர் நின்றுக் கொண்டார்.
இரண்டு மசால் ரோஸ்ட் ஆர்டர் செய்ய, வேறு ஒருவரிடம் சீட்டைக் கிழித்து கொடுத்து விட்டு பேரர் நகர்ந்துக் கொண்டார்.
தொலை பேசி சினுங்கியது, வெங்கடாசலம் எடுத்தார்.
“என்ன கிருஷ்ணமூர்த்தி…. இப்பத்தான் பையன பார்த்தேன்….. பையன் எங்கூடத்தான் இருக்கான்…. சாப்பிட ஹோட்டல்லதான் இருக்கேன்… இன்னமும் விஷயத்த சொல்லல….. கேட்டுக்குவான்னுதான் நினைக்கறேன்….. அவங்கம்மாவுக்கு பிடிச்சு போச்சு…. எனக்கும்தான்…. படிச்சு இருக்குல்ல….. கொஞ்சம் நாளான சரியாயிடும்…… அவங்க வேலைக்கு போறதுன்னாலும் பரவயில்ல…… நாம கூடவா இருக்கப் போறோம்… இந்தச் சென்னை மாதிரி ஊருல ரெண்டு பெரும் வேலைக்கு போறது நல்லதுதான்…. நம்ம காலத்துல, பெரியவங்க எது சொன்னாலும், மறு பேச்சு கேட்காம சரின்னுடுவோம்…. இப்பல்லாம் அப்படியா….ரொம்பவெல்லாம் எதிர்பார்கல…..அவங்களுக்கும் ஒரே பொண்ணு….. அப்புறம் என்ன கேட்கறதுக்கு இருக்கு…. நல்ல வசதியும், மரியாதையுமா நடத்திக் குடுத்தா போதும்… மத்தபடி என்ன எதிர்ப்பார்க்கிறது….
அலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் அப்பாவைக் கவனித்துக் கொண்டே மசால் தோசையை பிய்த்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான் சந்திர மோகன். அவன் பேசுவதைக் கூட அறியாதவாராய், வேங்கடசலமும் சாப்பிட்டுக் கொண்டே விடாமல் பேசிக் கொண்டிருந்தார்,
சந்திர மோகனுக்கு தன்னுடைய கல்யாண விஷயம் பற்றித்தான் அவர் பேசிக் கொண்டிருக்கிறார் என்று புரிந்தது. அவர் பேசி கொண்டிருப்பதை நிறுத்தி விட்டால் உடனடியாக ஷண்முக ப்ரியாவின் விஷயத்தை எடுத்து விட வேண்டும், வேறு வழியில்லை என்று தோன்றியது.
அவனது சட்டைப் பையில் இருந்த அலைபேசி சினுங்கியது. உடனே, எடுத்து பேச, அம்முனையில் ப்ரியாவின் குரல் கேட்டது.
“சொல்லுடா… அப்பாவைக் கூட்டிட்டு இப்பதான் கொயம்பேடுலிருந்து வரேன்… ஆமாம் இப்பதான்… மசால் தோசை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். … ஆமாம் போன வாரம் நாம வந்தக் கடைதான்…. அடுத்த முறை வரும்போது நிச்சயமா உனக்கு மசால் தோசை வாங்கித் தரேன்…. ஆமா, அதே ப்ளூ ஜீன்சும், ப்ளாக் டீ ஷர்ட்டும்தான்….. என்ன செய்யறது இதைதான் துவைக்காமலே போட்டுக்க முடியும்…. ஆமா, அப்புறம் போய் பாத்திரம் கழுவி வைக்கணும்….ஆமா, ஆபிசு கேண்டீன்ல சாப்பிட்டிடுவேன்…. என்ன சொல்ற?… குளிக்கலையா… இப்படி மழை பெஞ்சுக்கிட்டுருக்கு, வெளிய வந்தா தொப்பலா குளிச்சுடிவியே…. என்ன சந்தேகமாயிருக்கு?… அதுவா, ச்சே.. அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல, எல்லா எச்சரிக்கையும் எடுத்துக்கிட்டுதான செஞ்சோம்…. அப்படியா,,, சில சமயம் அப்படித்தான் எதாவது ஏடா, கூடமா நடந்திரும்…. டாக்டர்க்கிட்ட எதுக்கு போகணும்…. எனக்கு வெட்கமாயிருக்கு…. அது உண்மையாயிடுச்சுன்ன்னா…. வெச்சுக்கலாம்…. என்ன முடியாதா…. உங்கக்காக்கு முதல்ல ஒரு கல்யாணம் நடக்கணும்முனு இது பாஸிடிவா இருந்தாகக் கூட அழிச்சிடுவோம்முனு சொல்றது நியாமேயில்ல ப்ரியா……
பதற்றமாகவும், கம்மிய குரலில் சந்திர மோகன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தபோது வேங்கடசலத்துக்கு துக்கமாயிருந்தது. ஏதோ கொஞ்சம் புரிவது போல இருந்தது. அவன் பேசி முடித்த பின் அவரிடம் என்ன சொல்லப் போகிறான் என்பதை ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தது. அது உண்மையாக இருந்து விட்டாலும் கூட பரவாயில்லை என்று தோன்றியது. சந்திர மோகன் அலைபேசியில் பேசுவதை நிறுத்தி விட்டு அவரிடம் என்ன சொல்லப் போகிறான் என்பதைக் கேட்பதற்காக மசால் தோசையுடன் காத்துக் கொண்டிருந்தார் வெங்கடாசலம்.