“சங்கர் முந்திமாதிரி இல்லேம்மா. சிடுசிடுங்கிறாரு!”
சங்கரை அனுபமா தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தியபோது, தான் உண்மையை மறைக்காது சொன்னது எவ்வளவு நல்லதாகப் போய்விட்டது!
‘இவங்கப்பா காண்ட்ராக்டில வீடு கட்டற தொழிலாளியா இருந்தவரு. வேலை பாக்கிறப்போ ஒரு விபத்திலே போயிட்டாரு,’ என்று ஆரம்பித்து, வயிற்றுப் பிழைப்புக்காகத் தான் வேலை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதைத் தெரிவித்தாள்.
அனுபமாவின் அழகில் கிறங்கிப் போயிருந்தவனுக்கு அந்தஸ்து வித்தியாசம் ஒரு பொருட்டாகப்படாது என்று தான் எண்ணியது பொய்த்துவிட்டதே!
“விடுடி. ஏதோ, காதல், கீதல்னு நீதான் பேத்திக்கிட்டு இருந்தே! இப்பவாச்சும் புரிஞ்சுதா?” என்று மகளைச் சமாதானப்படுத்த முயன்றாலும், அத்தாயின் மனது துடித்தது.
அடுத்த காரியத்தில் இறங்கினாள். “அமெரிக்காவில இருக்கிற அந்த டாக்டர் ஒன்மேல ஆசைப்பட்டு, வலிய வந்து கேட்டான். நீதான் பிடிகுடுத்துப் பேசல. இப்ப என்ன சொல்றே?”
அனுபமாவுக்கும் அம்மா சொன்னபடி கேட்பதுதான் புத்திசாலித்தனம் என்று தோன்றிப்போயிற்று. ‘நீ சமையல்காரி மகள்தானே!’ என்று நாளைக்கே கொடுமைப்படுத்தி விட்டால்?
எப்போதும் தன்னைப் புகழ்ந்தபடியே இருந்தபோது தேவைப்பட்ட காதலனுடைய இன்னொரு முகம் தெரிந்தபோது, அதை ஏற்கும் துணிவிருக்கவில்லை அவளுக்கு.
“நான் என்ன செய்ய முடியும், சங்கர்?எனக்காகவே வாழறாங்க அம்மா. அவங்க காட்டற மாப்பிள்ளைக்குக் கழுத்தை நீட்ட வேண்டியது கடமை இல்லையா?” என்று வசனம் பேசி, துளிக்கூட சலனமில்லாது, மூன்று வருடப் பிணைப்பைத் துண்டித்துக்கொண்டாள்.
`இப்பவே இந்தக் கழுத்தை நெரிச்சுப் போட்டுடறேன். அப்புறம் எப்படி இன்னொருத்தனுக்கு அதை நீட்டுவே, பாக்கலாம்!’ துடித்த கரங்களையும், மனத்தையும் அடக்கினான் சங்கர்.
“வாழ்த்துகள்! கோடீஸ்வரியா மேல்நாட்டிலே வாழப்போறே! அப்போ இந்த ஏழையை எப்பவாவது நினைச்சுப் பாத்துக்க!” அடைத்த குரலில் சொல்லிவிட்டு, தலையை அதீதமாகக் குனிந்தபடி அவ்விடத்தைவிட்டு நகர்ந்தான்.
எத்தனை, எத்தனை கனவுகள்! எல்லாவற்றையுமே இல்லை குலைத்துவிட்டாள்!
(நாம்ப ரெண்டு பேருமே நல்ல அழகு. இல்லே, அனு? நான் பகுதி நேர மாடல். நீ — கல்லூரியின் அழகு ராணி. நமக்குப் பிறக்கிற குழந்தையை அழகுப் போட்டிக்கு அனுப்பணும்!)
அழகாவது, மண்ணாவது!
அனுவின் பாராட்டுக்கென பார்த்துப் பார்த்து வளர்த்த மீசையையும், கிருதாவையும் வெறுப்புடன் பார்த்தான்.
தோற்றத்தில் கவனம் குறைய, அது வேறு திசையில் திரும்பியது.
என்னதான் படித்துப் பட்டம் வாங்கிவிட்டாலும், யோசிக்காமல் செலவழிக்க முடியாத தன் நிலையை எண்ணி, தன்னைத்தானே பார்த்துப் பரிதாபப்பட்டுக் கொண்டான்.
மகனைப் பார்த்து லட்சுமி கலங்கினாள். “முப்பத்தி மூணு வயசு ஆகிட்டதேடா. இப்ப இல்லாம, எப்ப கல்யாணம் செய்துக்கப்போறே?” என்று அரற்றினாள்.
“எல்லாப் பொண்ணுங்களுக்கும் பணம்தாம்மா பெரிசு! அதான் ரெண்டு எடத்திலே வேலை பாத்து, குருவிபோல பணம் சேக்கறேன்!” தன்னை அழகால் மயக்கி, ஏமாற்றிய அனுபமாவைப்பற்றித் தாயிடம் தெரிவித்தான்.
“நல்ல பிள்ளைடா, நீ! இதுக்காகவா சாமியார் வேஷம் போட்டே? அந்தமாதிரி பணப்பிசாசோட குடும்பம் நடத்தினா, நல்லாவா இருந்திருக்கும்? அட, இந்தப் பொண்ணு இல்லாட்டி, ஒலகத்திலே வேற பொண்ணே கிடையாதா?”
சங்கர் சமாதானமடையவில்லை என்பதை அவன் தளர்ந்த உடலே காட்டிக்கொடுத்தது.
விடாப்பிடியாகத் தாய் தொடர்ந்தாள்: “இந்தமட்டும் காலைச் சுத்தின பாம்பு கடிக்காம விட்டுச்சேன்னு கடவுளுக்கு ஒரு கும்பிடு போடுவியா! என்னமோ.., தேவதாஸ் கணக்கா ஆடறியே!”
அவனுக்காக ஏதேதோ கூறினாலும், லட்சுமியின் மனமே ஆறுதல் அடையவில்லை.
தன் மகனை ஒரு பெண் புறக்கணிப்பதா?
வர வர, காலம் ரொம்பத்தான் கெட்டுவிட்டது. முன்பெல்லாம், `இதோ, இவர்தான் உன் புருஷன்!’ என்று கைகாட்டுவார்கள் பெரியவர்கள். முன்பின் தெரியாதவருடன், அவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், சேர்ந்து வாழவில்லை நாங்களெல்லாம்?
போகிறது! ஏதோ சிறு பெண். பகட்டுக்கு ஆசைப்பட்டிருக்கலாம். அவளுடைய தாய்க்கு புத்தி எங்கே போயிற்று? பெண்ணைக் கண்டித்து இருக்க வேண்டாம்?
இப்போதிருக்கும் பெண்களுக்கு வெட்கம், மானம் எதுவும் கிடையாது. நாலு பேர் பார்க்க கைகோர்த்துக்கொண்டு, கண்டவனுடன் ஊர் சுற்றுவது, அவன் அலுத்தவுடன் வேறு ஒருத்தனை தேடிப்போவது! சீ!
தான் பார்த்தேயிராத அனுபமாவின்மேல் துவேஷத்தை வளர்த்துக்கொண்டாள் லட்சுமி. மகனைத் தன்னிடமிருந்து பிரிக்கப் பார்த்தவள் என்ற குரோதமும் அதில் கலந்திருந்தது.
மகனும் தன்னைப்போல் அவளை வெறுக்கத் தொடங்கியிருப்பான் என்று நம்பியிருந்தவளை அயரவைத்தான் சங்கர்.
“அம்மா! இன்னிக்கு அனுவைப் பாத்தேன். அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகலே!” அவன் முகத்திலிருந்த பரவசம் அவளுக்கு ஆத்திரமூட்டியது.
“அதைப்பத்தி நமக்கென்ன! ஒன்னை `வேணாம்’னு திமிராப் போனவ இல்லே! அவ பேச்சு இனிமே எதுக்கு?”
சங்கருக்கு இருந்த மனநிலையில் தாயின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
“அந்தப் பணக்காரன் இருந்தானே, அவனுக்குக் குணமோ, அழகோ கிடையாதாம். அனு எங்கிட்ட, `அந்த ஆளு ஒங்க கால்தூசுகூட பெற மாட்டாரு, சங்கர்!’ அப்படின்னு அழமாட்டாக்குறையா சொன்னா!”
“இப்பத்தான் புத்தி வந்திச்சாமா?”
“கேளுங்களேன்! அவனோட காதலிங்களைப்பத்தி இவகிட்டேயே அளந்திருக்கான். இவ கலங்கிப்போயிருக்கா, பாவம்! `அங்க இதெல்லாம் சகஜம்! படிச்ச பொண்ணுங்கிறே, நீ என்ன இப்படி பத்தாம்பசலியா இருக்கியே!’ன்னு கேலி செஞ்சானாம்!”
“இப்போ அவனையும் விட்டுட்டு நிக்கறாளா?” லட்சுமியின் குரலிலிருந்த ஏளனத்தை அவன் கவனிக்கவில்லை.
“அதுவும் நல்லதுக்குத்தான். இல்லேம்மா? `நம்ப ரெண்டு பேருக்கும்தான் முடிபோட்டிருக்கு. அதை யாராலே மாத்த முடியும்?’ அப்படின்னு சொல்லிட்டு வந்தேன்”.
லட்சுமிக்குப் எரிச்சல் பிறந்தது. `இந்த ஆம்பளைங்களுக்கே மானம், ரோஷம் எதுவும் கிடையாது. காணாமப்போன பந்து கிடைக்கிறமாதிரியான சமாசாரமா காதலும், கல்யாணமும்? வேணாம்னு போனவ, இப்ப இவன் கையில நாலு காசு சேர்ந்திருக்கிறது தெரிஞ்சு போய், திரும்பி வந்திருக்கா. இவனுக்கு எங்கே போச்சு புத்தி? நாளைக்கே கல்யாணமாகி, இதைவிடப் பணக்காரனா ஒருத்தனைப் பாத்தா, என்ன செய்வாளாம்? இவ நாலு வருஷம் சங்கரோட சுத்திட்டு, வேற ஒருத்தனைக் கட்டிக்க சரிங்கலாம். அந்த ஆம்பளை மத்த பொண்ணுங்களோட பழகினது மட்டும் தப்பாப் போயிடுச்சா?’ என்று, பொதுவாக எல்லா ஆண்களையும், அனுபமாவையும் மனதுக்குள் திட்டித் தீர்த்தாள்.
நீண்ட கைவிரல்களின் நுனியில் சிவப்புத்தொப்பிபோல் அழகாகச் சிவந்திருந்த மருதாணியைப் பார்த்தாள் அனுபமா. புன்னகை பிறந்தது.
தனித்திருக்கும்போது சங்கர் என்ன சொல்வார்? அவளுடைய அழகை எவ்வளவு புகழ்ந்தாலும் அலுக்காதே அவருக்கு!
பக்கத்தில் அமர்ந்திருந்த சங்கர், ஏதோ போட்டியில் வெற்றி பெற்றதுபோல் மிதப்பாக இருந்தான்.
மாலையும், கழுத்துமாக கணவருடன் சேர்ந்து மாமியாரை முதலில் நமஸ்கரித்த அனுபமா, ஆசீர்வாதத்திற்காகக் காத்திருந்தாள்.
அவளுக்கு மட்டும் கேட்கும் விதத்தில், “இன்னும் நீ சின்னப்பிள்ளை இல்ல. நிமிஷத்துக்கு நிமிஷம் எதை எதையோ நினைச்சு ஆசைப்படற புத்தியை இதோட விட்டுட்டு, பொறுப்பா நடந்துக்கப்பாரு!” என்ற வார்த்தைகள் வந்தன லட்சுமியின் உதட்டிலிருந்து.
சற்றும் எதிர்பாராத அந்தக் கண்டனத்தைக் கேட்டு, அனு மயங்கி விழுந்தாள்.
திருமணத்துக்கு வந்திருந்தவர்களுக்கு ஒரே குழப்பம். காதல் கல்யாணம் என்றார்களே! ஒரு வேளை, மசக்கையோ?
`என்ன சீக்கோ உள்ளுக்குள்ளே! ஒடம்பு தளதளன்னு இருக்கிறதாலே மயங்கிட்டான்!’ என்று முணுமுணுத்தபடி, இரண்டு பெண்களின் உதவியோடு அனுபமாவைப் படுக்கையில் கிடத்தினாள் லட்சுமி.
ஒன்றும் புரியாது, பிரமையாக நின்றிருந்த மகனைப் பார்த்ததும், `என் பேச்சைக் கேட்டானா? நன்றாகப் படட்டும்!’ என்று கறுவத்தான் முடிந்தது அவளால்.
கசமுசா என்று எழுந்த குரல்கள் சங்கரின் காதிலும் விழாது போகவில்லை. அவனுக்குத் தலைகுனிவாய் இருந்தது.
`நல்லா யோசிச்சியாப்பா?’ என்று, கல்யாணத்துக்குமுன் அம்மாதான் எத்தனை தடவை கேட்டாள்?
அப்போதே யோசித்திருக்க வேண்டும். இனி என்ன செய்ய முடியும்!
`செய்து காட்டுகிறேன்!’ என்று கறுவிக்கொண்டான்.
அப்போது கண்விழித்த அவனது புது மனைவி, “மணிக்கணக்கில ஹோமப்புகையில ஒக்காந்திருந்தது! தலையை சுத்திக்கிட்டு வந்திடுச்சு!” என்றாள், மெல்லிய குரலில். கால் தடுக்கி, கீழே விழுந்த குழந்தை, அம்மா கவனிக்கிறார்கள் என்று தெரிந்ததும், பெரிதாக அழுதபடி இரக்கத்தைத் தேடுமே, அந்த மனப்பக்குவம்தான் அவளுக்கு இருந்தது.
சங்கர் பல்லைக் கடித்துக்கொண்டான். எங்கே தான் அவளை நெருங்கிவிடுவோமோ என்று வந்த வார்த்தைகள்!
“பெரிய பணக்காரனோட வாழப்போறோம்னு கனவு கண்டுக்கிட்டு இருந்தவ, இல்ல? யாரையோ மனசில வெச்சுக்கிட்டு, இன்னொருத்தனோட வாழ முடியுமா, என்ன!”
சங்கர் தன்மேல் கொண்டிருந்த காதலோ, எதுவோ, இன்னொருவனை நாடித் தான் போனபோதே அழிந்துவிட்டது! இப்போது குரோதமும், பழிவாங்கும் எண்ணமும்தான் அவ்விடத்தில்!
தன்மேலும் தவறு இல்லையா?
மனம் இடித்துக்காட்ட, அனுபமாவின் இன்பக்கனவுகள் பொடிப்பொடியாக நொறுங்கின.
நரகமான ஒரு வாழ்க்கையை எப்படித் தவிர்ப்பது என்று குழம்ப ஆரம்பித்தாள்.