இன்று லண்டனில் இலங்கையை விட மோசமான வெயில்.நான் போட்டிருக்கும் சேர்ட்டை வியர்வை நனைத்த விட்டது.பக்கத்த நீச்சல் தடாகத்தில் குழந்தைகள் குதித்து விளையாடும் சப்தம் காதைப் பிளக்கிறது.இதமான மெல்லிய தென்றல் உடலைத் தடவிச் செல்கிறது.மூக்குக்கண்ணாடியைக் கழட்டிக் கைக்குட்டையாற்; துடைத்தவிட்டு போட்டுக் கொள்கிறேன்.
அக்கம் பக்கமெல்லாம் ஆரவாரம்.அவற்றைக் கடந்து எங்காவது தனியான இடம் தேடிப் போகவேண்டும் போலிருந்ததால் வீட்டை விட்டு வெளியே வந்தேன். என்மனைவி ஒன்றும் சொல்லாமல் என்னை ஆச்சரியத்துடன் பார்த்தாள்;;.ஆனால் அவள் என்ன நினைப்பாள் என்று எனக்குத் தெரியும்.’ சும்மா மனதைக் குழப்பிக் கொண்டு யோசிக்காமல் கடவுள் விட்டவழியில் ஏதோ எல்லாம் நல்லாக நடக்கட்டும் என் நினையுங்கோ’
நான் என் மனைவியை ஏறிட்டுப் பார்க்கிறேன்.இருபத்தைந்து வருடங்கள் ஒன்றாக இருந்துவிட்டோம்.ஆனால் இன்னும் பல விடயங்களை மனம் விட்டுப் பேசாமலிருக்கிறோம் என்று எனக்குத் தெரியும்.விடயங்களை மனம் விட்டுப் பேசும் வழக்கம் வீட்டிலிருந்தால் எங்களுக்குப் பிறந்த மகள் நேற்று வரைக்கும் நல்ல பிள்ளையாக இருந்துவிட்டு இன்றைக்கு ஒரு கடிதத்தைக் கையில் தந்துவிட்டுத் தன் காதலனுடன் உல்லாசப் பிரயாணம் போயிருப்பாளா?
இன்று சனிக்கிழமை லண்டன் வழக்கம்போல் திருவிழாக்கோலம் கொண்டிருககிறது..கடைகள் நிறைந்த தெருக்கள் மிக ஆரவாரமாகவிருக்கிறது. ‘வெள்ளெனக் கடைக்குப்போக வேணும்’என்று என் மனைவி கீதா நேற்று சொன்னாள்.அத்துடன் என் மகளும் தனது சினேகிதிகளுடன் உல்லாசப் பிரயாணம் போவதையும் சொல்லியிருந்தாள்.அதனால் இன்று அதிகாலையில் எல்லோரும் எழும்பி விட்டோம் என்று சொல்வதை விட காலை நான்கு மணிக்கே வெளிச்சம் வந்து எங்களை எழுப்பி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். எனது மகளுக்குக் கிட்டத்தட்ட இருபத்தொரு வயது.பல்கலைப் படிப்பு முடியப்போகிறது.எங்களுக்குப் பெருமைதான்.என் நினைவுகள் தொடர்கின்றன.
இலங்கையில் நாங்கள் இருக்கும்போது எங்களின் மூத்தமகன் அங்கு பல்கலைக்கழகம் சென்றான்.அத்துடன் அவன் நாசமாகிப் போனான் என்று திட்டிக்கொண்டிருந்த எங்களுக்கு,லண்டன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மகள் ஒழுங்காக இருக்கிறாள் என்ற பெருமைப் பட்டோம்.
இப்போது?
தற்போது எனது மகள் அனுசூயா செய்யும் வேலையை விட எனது மகன் செய்த வேலை பெரிய வித்தியாசம் இல்லை என்றுதான் நினைக்கத் தோன்றகிறது.நான் இலங்கைப் பல்கழக விஞ்ஞானப் பட்டதாரி.குடிப் பழக்கமில்லாதவன். பட்டப் படிப்பு முடிந்ததும் தாய் தகப்பன் சொற்படி கீதாவைத் திருமணம் செய்தேன்.அடுத்த வருடமே அழகிய ஆண் குழந்தை சத்தியன் பிறந்தான்.அந்தச் சந்தோசம் அவன் இருபத்திரண்டு வயதாகும் வரை நீடித்தது.
பல்கலைப் பட்டம் பெற்றபின் கொஞ்சகாலம் வேலையற்றிருந்தான்.தெரிந்தவர்களிடம் பல்லைக் காட்டி அவனுக்கு ஒரு வேலை கிடைக்கப் பண்ணினேன். அக்கால கட்டத்தில் மகள் அனுசூயாவை லண்டனுக்கு அனுப்பி வைத்தோம். மகன் சத்தியன் ஒருநாள் இடி விழுந்தாற்போல் ஒரு செய்தியைச் சொன்னான்.அவன் ஒரு பெண்ணை விரும்புவதாகவும் அவள் ஒடுக்கப் பட்ட சாதியைச் சேர்ந்தவள் என்றும் சொன்னான்.நாங்கள் என்ன சொன்னாலும் அதைப் பற்றிக் கவலைப் படாமல் அவன் அந்தப் பெண்ணைத்தான் தீருமணம் செய்யப் போவதாகவும் சொன்னான்.அவனுக்குச் சொல்ல எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
எனது மனைவி வாரக்கணக்காக அழுதாள்.எங்களுக்கு மட்டும் தெரிந்த விடயம் ஊருக்கெல்லாம் தெரிந்து,ஒவ்வொருவரும் ஓராயிரம் அர்த்தங்களுடன் எங்களைப் பார்த்தபோது எனக்கு என்னவோ செய்தது.என் மகளுக்கு அந்த விடயம் ஒன்றும் தெரியாது. அவள் தனது இரண்டாம் வருடப் படிப்பை லண்டனில் முடித்துக் கொண்டிருந்தாள்.எங்களுக்கிருந்த எல்லாவிதமான பூமி,காணி அத்தனையையும் விற்றுவிட்டு லண்டனுக்கு வந்த சேர்ந்;தபோது தனது தமயன் சத்தியனைப் பற்றி அனுசூயா எத்தனையோ கேள்விகள் கேட்டாள். ஏதோ மழுப்பிப் பல மறுமொழிகளைச் சொன்னோம்.
கொஞ்ச காலத்தில் மகன் பற்றிய அந்தப் பழைய புண் மாறிக் கொண்டுவரும்போது இன்று காலை இப்படி ஒரு இடி.என் மகள் எழுதிய கடிதம் இன்னும் எனது சட்டைபபையில் கிடக்கிறது.என்மகளின் பாசத்தைப்போல்,வியர்வையில் நனைந்த அவள் கடிதம் என் உடப்போடு ஒட்டிக்கிடக்கிறது.அவள் தனது கடிதத்தில் அதிகம் எழுதியிருக்கவில்லை.
அழகிய ஆங்கில எழுத்து வரிகளில் சில வரிகளை எழுதியிருக்கிறாள்.’கெதியில் என் படிப்பு முடியப்போகிறது.அத்துடன் எனக்கு இருபத்தொரு வயதும் முடியப்போகிறது.என்னுடன் படிக்கும் ஜெரமியைத் திருமணம் செய்வதாக முடிவு கட்டிவிட்டேன்.அம்மாவுக்க முன்னால் சொல்லி அம்மா அழுவதைப் பார்க்க எனக்குப் பிடிக்காது.எனது வெளியே செல்லும் ஹொலிடேய் பதினான்கு நாட்களுக்குள் முடிவுகட்டி எனக்கு ஆசிர்வாதம் தருவீர்கள் என்ற நம்புகிறேன்’.
அவள் தனது கல்யாணத்திற்கு பெற்றேரிடம் அனுமதி கேட்கவில்லை;. இந்தக் கடிதம் ஒருவிதமான அழைப்பிதழ்.மகன் சத்தியன் நேராக வந்து தாய் தகப்பனிடம் தனது காதல் விடயத்தைச் சொன்னான்.அதனால் அவன் தாய் எவ்வளவு கண்ணீர் வடித்தாள் என்ற எனக்குத் தெரியும்.
ஆனால் எங்கள் மகள்?
இன்று காலை அவள் எங்களுடன் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. பிரயாணம் செல்லும் அவசரம் என நினைத்துக் கொண்டோம்.அவள் தனது பெட்டிகளை அடுக்கிக் கொண்டிருந்தாள்.தனது சினேகிதகளுடன் சேர்ந்து கொண்டு இத்தாலிக்கு உல்லாசப் பிரயாணம் போவதாக எங்களுக்குச் சொன்னாள்.
நேற்றிரவு படுக்கும்போது,’நான் உங்களைக் கல்யாணம் முடிக்கிறவரைக்கும் தனியாகக் கடைக்குக்கூடப் போனதில்லை’என்று கீதா சொன்னாள்..நான் சிரித்தேன்.’பெண்களுக்க வெளியே போக விருப்பம் இல்லாமலில்லை.ஆனால் ஆண்கள் அவர்களை விடமாட்டார்கள்.எங்கள் நாட்டின் பண்பாடு,கலாச்சாரம்,சட்டம் எல்லாம் ஆண்களுக்கு ஒன்று பெண்களுக்கு ஒன்று என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன’.நான் சொன்னதை என் மனைவி கேட்டுக் கொண்டிருந்தாள்.
இப்போது என் மகள் எங்கே இருப்பாள்? அவளின் சினேகிதிகளுடனும் அன்பனான ஜெரமியுடனும்?
என்னால் மேலதிகமாக யோசிக்க முடியவில்லை.சென்ற வாரம் ஒரு கல்யாண வீட்டுக்குச் சென்றிருந்தோம்.லண்டனில் இப்படி ஒரு அழகிய தமிழ்த் திருமண திருவிழாவா என்று பிரமிக்கும்படி அந்தத் திருமணம் நடந்தது.அன்று எங்களுக்குத் தெரிந்த சினேகிதர்கள் சிலர் நேரடியாகவும் ஒருசிலர் மறைமுகமாகவும் எப்போது எனது மகளுக்குத் திருமணம் என்று கேட்காமல் கேட்டார்கள்.
என்ன மறுமொழி சொல்வேன்?
இலங்கையில் எனது மகன் ஒரு ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்ணுடன் ஓடியதுபோல் எனது மகள் லண்டனில் வெள்ளைக்காரனுடன் ஓடிப்போய்விட்டாள் என்று இவர்களுக்குச் சொல்வதா? இலங்கையிலிருந்தால் எனது மகளும் தனது தமயன்மாதிரி செய்துவிடுவாள் என்று பயந்து லண்டன் வந்து என்ன பலன்?
நான் நடந்து கொண்டிருக்கும் வூல்விச் நகரப் பூங்காவனம்.இருளில் அமிழத் தொடங்குகிறது.வெயிலுக்கு வந்து பார்க்கில் படுத்திருந்த சில வெள்ளையர்கள் நித்திரையாகிப் போய்விட்டார்கள்.
இன்னும் பதினான்கு நாட்களில் வீடுதிரும்பவிருக்கும் மகளுக்கு என்ன மறுமொழி சொல்வது? என்ன மறுமொழி என்றாலும் தனக்கு ஒத்துக்கொள்ளத் தக்கதாக இல்லாவிட்டாலும் எங்கள் மறுமொழி பற்றி அனுசூயா எந்த அக்கறையும் எடுக்கப் போவதுமில்லை என்றும் எனக்குத் தெரியும்.
வீட்டுக்கு வருகிறேன். இந்தியன் கடையில் வாங்கிய முருங்கைக்காய்க் குழம்பு நன்றாக் இருந்தது.கடைசி மக்கள் இருவருக்கும் சோறு கறி அதிம் பிடிக்காதபடியால் பாணில் மார்மைட்டைப்பூசிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.என்ன வாழ்க்கை? ஒருபிடி சோற்றுக்கு வழியில்லாமல் இலங்கையில் பலர் பட்டினியிருக்கிறார்கள். இலங்கையில் பிறந்த லண்டனில் வாழும் எனது குழந்தைகளுக்கு சோறும் கறியும் அதிகம் பிடிக்காமல் போய்விட்டது.எனது கடைசி இரண்டு மக்களின் வயது. பத்தும் பதினாறும்.அவர்களுக்குத் தமக்கையின் விடயம் தெரியுமா என்பது எனக்குத் தெரியாது.
பதினாறு வயது மகன் பத்மன் ஒரு ஆமைமாதிரி அடக்கமாக இருப்பான். எதையும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற தேடலைத் தெரியாதவன்.மிகவும் அப்பாவியாகவிருப்பான். கடைசி மகள் சார்மிணி ஒரு கள்ளம் கபடமற்ற பெண்.டெலிவிசனில் வால்ட் டிஸ்னி படத்தை விட வேறோன்றிலும் பெரிதான அக்கறை கிடையாது.
என்மனைவி சாமான்களைத் தாறுமாறாகப் போட்டடிக்கும் விதத்தில் அவள் மன ஆத்திரம் எனக்குப் புரிகிறது. இரவு படுக்கையில்,’நீங்கள் வாயை மூடிக்கொண்டிருக்கிறீர்கள். அதுதான் மகன் இலங்கையில் அப்படிப் போனான்.இவள் அனுசூயா லண்டனில இப்படிப் போனாள். எல்லாம் என்ர தலைவிதி’ என்று கீதா அழுதபடி சொன்னாள்.
‘உன்னுடைய தலைவிதி நன்றாகத்தான் இருக்கிறது. எங்களுடைய மகளின் தலைவிதிதான் வெள்ளைக்காரன் தலையோடு கட்டிக் கிடக்கு’என் குரலில் ஆத்திரமில்லாதது அவளுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியிருக்க வேண்டும்.அவள் சட்டென்று என் பக்கம் திரும்பினாள். இருட்டில் அவள் முகத்தைப் பார்க்க முடியவில்லை.ஆனாலும் அவள் முகம் எப்படியிருக்கும் என்று எனக்குத் தெரியும்.எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருக்கும்.நான் அவள் பக்கம் எனது முதுகைக்காட்டித் திருப்பிப் படுத்து முகத்தை ஜன்னல் பக்கம் செலுத்தினேன்.அவளுடைய கோபமான மூச்சுக் காற்று எனது முதுகில் படர்ந்தது.அதைத் தொடர்ந்து அவளின் மெல்லிய விம்மல் கேட்டது.
‘கீதா நீ அழுவதால் எந்தப் பிரயோசனமும் இல்லை’
‘நீங்கள் அனுவின் அப்பா.அந்நியனைப்போலக் கதைக்கத் தேவையில்லை.அவள் வந்தவுடன் ஒரு முடிவு கேளுங்கோ’
ஆத்திரத்தில் அவள் குரல் படபடத்தது. என் மனம் எனது மனைவிக்குப் பரிதாபப் பட்டது.அவளுக்கு நாற்பத்தைந்து வயது. உலகத்தின் வேகமான சமுதாய மாறுதல்கள் பற்றிய போக்கு அவளுக்கு இன்னும் சரியாகத் தெரியாது.
‘கீதா, எங்கள் மகன் சத்தியனுக்கு இப்போது இரண்டு குழந்தைகள்.அப்போது நாங்கள் சொன்னது எதையும் அவன் கேட்கவில்லையே’
‘அவன் பெடியன்,எப்படிப் போனாலும் உலகம் ஒன்றும் பெரிதாகச் சொல்லாது.ஆனால் பெண்ணின் நடத்தையைப் பார்த்து என்னைத்தான் உலகம் தூற்றும்’ கீதா குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
‘கீதா,லண்டனில உன்னைத் தூற்றப் போகிற ஒவ்வொருத்தர் குழந்தைகளும் எப்படி வளரப்போகிறார்கள் என்பது இன்னும் கொஞ்ச வருடங்களில் தெரியும். மாறுகின்ற உலக யதார்த்தங்களை நீயோ நானோ பிடித்து நிறுத்த முடியாது’ நான் என் மனைவிக்கு அன்புடன் சொல்கிறேன்.அவள் அழுகை அடங்க எவ்வளவோ நேரம் எடுத்தது.
இத்தாலியிpருந்து கொண்டு வந்த அழகிய பளிங்குச் சிலைகள்,படங்கள் என்பவற்றை எனது மகள் அனு எடுத்து எங்களுக்குக் காட்டிக் கொண்டிருந்தாள்.கீதா மகளைக் கண்டதும் தனது முகத்தை நீளமாக வைத்துக் கொண்டிருக்கிறாள்.அனுவின் தனது தாயின் முகத்தைச் சாடையாகப் பார்த்துக் கொண்டாலும் கண்டும் காணாதமாதிரி தனது சாமான்களை தம்பிக்கும் தங்கைக்கும் காட்டிக் கொண்டிருந்தாள்.
தாய்க்கும் மகளுக்கும் தங்கள் உணர்ச்சிகளைக் காட்டிக் கொள்வதிற்தான் எவ்வளவு வித்தியாசம்? மகளின் மேலைநாட்டுப் படிப்புத் தந்த பின்னணியில் அனு தன் உணர்வுகளைப் பெரிதாகக் காட்டிக் கொள்ளாமலிருக்கிறாள்.
நான் இப்படியா எனது தாய் தகப்பனுடனிருந்தேன்? ஆனால் எனது மகளுக்கு நான் விட்டுக் கொடுக்கப் போவதில்லை. நான் சொல்லப்போகும் முடிவு மகளுக்குச் சாதகமாகத்தானிருக்கப் போகிறது.ஆனால் அவள் அந்தப் பேச்சைத் தொடங்கமுதல் நானாகத் தொடங்கப் போவதில்லை.
இரவு சாப்பாடு முடிந்தவடன் குழந்தைகள் டெலிவிசன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.வெளியில் நல்ல நிலவு. ஆனால் சூடு இன்னும் தணியவில்லை. வியர்வைக்குப் பயந்து வெளியில் கதிரையைப்போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.பூரணைக்கு அடுத்து நாள் நிலா தனது முழு வட்டத்தையிழந்து வானில் வலம் வந்து கொண்டிருந்தது.
என் மனைவி எனக்கான சாப்பாட்டுடன் வெளியே வந்தாள்.அவள் இன்றெல்லாம் என்னுடன் பேசவில்லை. அவள் மனதில் என்ன மாதிரியான சூறாவளி நடந்தகொண்டிருக்கிறது என்று எனக்குத் தெரியும்.
‘ஹலோ’ என்ற சத்தம் கேட்டு நாங்கள் இருவரும் திரும்பினோம்;. அழகிய நிலா வெளிச்சத்தில் எங்கள் அழகிய மகள் அனுசூயா ஒயிலாக நடந்த வந்தாள். தோள் பட்டையில் விழும் அளவுக்கு அவளின் தலைமயிரை வெட்டியிருந்தாள்.மெல்லிய தென்றலில் அவள் தலைமயிர் அவளின் அழகிய முகத்தைத் தடவ முயன்று கொண்டிருந்தது.
‘நேற்றைக்கு இதே நேரம் நாங்கள் ரோம் நகரிலிருந்தோம்.அங்கிருந்த உடைந்த கட்டிங்களைப் பார்க்கும்போது, நாங்கள் இலங்கையில் அனராதபுரத்தில் பார்த்த பழைய கட்டிடங்களைப் பார்ததது ஞாபகம் வந்தது அம்மா’
அனுசூயா சத்தோசத்துடன் சொன்னாள்.அவளுக்குப் பதின்மூன்று வயதாகவிருக்கும்போது அநுராதபுரம் போய் வந்திருக்கிறோம்.’பழைய கலைகள் அவையிருக்கும் இடங்களைப் பொறுத்து வேறுபாடாக இருக்கலாம்.ஆனால் உடைந்த பழைய கட்டிடங்களைப் பார்க்கும்போது ஒன்றோடு ஒன்றை ஒப்பிட்டுப் பார்க்கத்தான் மனம் சொல்கிறது’அவள் சொல்லிக் கொண்டிருந்தாள். நான் ‘ உம் என்றேன். பழைய கட்டிடங்களை மட்டுமா ஒப்பிடவேண்டும்?
எங்கள் மகள் இன்னும் அவள் எங்களுக்குத் தந்துவிட்டுப்போன கடிதத்திற்குப் பதில் என்ன என்று எங்களை இதுவரை கேட்கவில்லை.எனக்கென்னவோ கீதாவின் முகத்தைப் பார்க்கப் பரிதாபமாகவிருந்தது.’குட்நைட் அனு’ என்ற சொல்லி விட்டு நான் எழுந்தேன்.
‘அப்பா’ என்ற அனுவின் குரல் கடிவாளம் போட்டு இழுத்ததுபோல் இருந்தது.நான் மேலே நடக்கவில்லை.
‘அம்மாவைப் பார்க்கத் தெரியுது நீங்கள் இருவரும் என்ன யோசிக்கிறீர்கள் என்று..’ அனு தாயைப் பார்த்தாள்.கீதாவின் குரல் உயர்ந்தது. ஏதோ சொல்ல வாயெடுத்தாள்.’ உ~;’ என்று கீதைவை அடக்கினேன். மெல்லமாக மகள் பக்கம் திரும்பி, ‘உனது அன்பன் ஜெரமிக்கு எப்போது வசதி உங்கள் கல்யாணத்துக்கு என்று சொன்னால் நல்லது.எனக்கு லீவு எடுக்க வசதியாகவிருக்கும்’ நான் எனது மகளின் முகத்தைப் பார்க்காமல் மேலே நடக்கிறேன்.
என்மனைவி இன்னும் அழுது கொண்டிருக்கிறாள்.நான் எனது மகளுக்கு அப்படி விட்டுக் கொடுத்திருக்கக் கூடாதாம். எவ்வளவு பேதையாக இருக்கிறாள் எனது மனைவி?
‘அவளுக்கு எங்கள்முறைப்படி கல்யாணம் செய்ய எவ்வளவு ஆசையாக இருந்தேன்’ கீதா குழந்தை மாதிரிக் கேவிக்கேவி அழுகிறாள்.
‘ஜெரமியைக் கேட்டால் அவன் எங்கள் கோயிலுக்கு வந்து எங்கள் மகள் கழுத்தில் தாலி கட்ட மறுப்பான் என்ற நான் நினைக்கவில்லை’ நான் ஏதோ ஒரு நம்பிக்கையுடன் எனது மனைவிக்குச் சொல்கிறேன்.
எனது மகளைப் பற்றி எனக்குத் தெரியும் எங்களைப் பற்றித் தெரியாதவனில் கண்மூடித்தனமாக விழுந்திருக்க மாட்டாள்.
சொந்தக்காரர் மட்டுமல்ல கலயாணத்திற்கு வந்திருந்த அத்தனைபேரும் ஆச்சரியப் பட்டார்கள்.திருமண சடங்கில் ஐயர் சொல்லிக் கொண்டிருக்கும் மந்திரம் ஒன்றும் அவனுக்குப் புரியாவிட்டாலும் எனது மகளின் கணவனாகப ;போகும் ஜெரமி என்ற ஆங்கிலப் பையன் அமைதியுடன் சடங்குகளைப் பின் பற்றினான்.ஜெரமி மிக பக்குவமாக எனது மகளின் கழுத்தில் மங்கள முடிச்சைப்போட்டான்.கல்யாணம் முடிந்ததும் பாரிசுக்குப் பறந்தார்கள். தேனிலவு காதலர்களின் தேவலோகமான பாரிஸ் நகரித்திலாம்.
அவர்கள் சென்றதும் என் மனைவி கீதா இன்னும் அழுகிறாள். அனு ஒரு தமிழனைச் செய்யாத குறை அவளுக்கு.எங்கள் பிடிவாதத்தால் அனு ஆங்கிலேயனான ஜெரமியைத் திருமணம் செய்யாமல் இருந்தால்,மகளின் ‘முதுகன்னி’நிலை பற்றி கீதா எதிர்காலத்தில் நீண்டகாலம் அழுது கொண்டிருந்திருக்கலாம்.அத்துடன் தனது மகள் அனுசூயா வெள்ளைக்காரனுடன் ‘ஆடியவள்’ என்ற கெட்ட பெயரை அவள் தாங்கியிருக்கவே மாட்டாள்.
பேனையையும் பேப்பரையும் எடுக்கிறேன்.எனது மகன் சத்தியனுக்குக் கடிதம் எழுதவேண்டும்.எனக்கு அவனின் குழந்தைகளை-எனது பேரப் பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது.கீதாவும் சந்தோசப்படுவாள் என்று எனக்குத் தெரியும்.அன்புக்கு எல்லையில்லை,காதலுக்குப் பேதமில்லை என்பதை கீதா உணர்ந்து கொள்வாள்.
– ‘அக்கரைக்கு இக்கரை பச்சை’என்ற பெயரில் வீரகேசரி-இலங்கை.15.08.1976 -சில வார்த்தைகளும் வசனங்களும் கதையின் தெளிவைக் காட்ட மாற்றப் பட்டிருக்கினறன