“என்னமா நீ?? என் மேலே நம்பிக்கை இல்லையா? எல்லா இடத்துக்கும் என் கூடவே வரணுமா? ” கடிந்து பேசிய சுகன்யாவை முறைத்தாள் அம்மா…. ” என்ன செய்ய சொல்றே? என் வயித்தில் நெருப்பை கட்டிண்டிருக்கேன்…. ஒரு பெத்த பெண்ணை கண்ணாணிக்கிற கேவலமான வேலையை பார்க்க வெச்சுட்டியே!! அவன் கூட சுத்தாதே , பேசாதேன்னு சொன்னா கேட்கறியா? இன்னும் நீயும் படிப்பை முடிக்கலே… அவனோ படிப்பை பாதியிலேயே விட்டுட்டு ஊரை சுத்தறான்! ஒரு உத்யோகம் இருக்கா? என்ன தகுதி இருக்கு அவன் குடும்பம் நடத்த? உன் அப்பா இருந்தால் இப்படியெல்லாம் செய்வியா? உன் அண்ணன் பாவம்… என்ன செய்வான்… ஒரு மாசத்தில் அவனுக்கு கல்யாணம்…. இப்ப உன் பிரச்சனை வேற… ” புலம்பித்தீர்த்தாள் அம்மா.
“சும்மா கத்தாதே… அதான் நான் அவனை மறந்துடறேனு வாக்கு கொடுத்திட்டேன்ல… அப்புறம் என்ன? ” வெறுப்பாய் பேசிய சுகன்யா விருட்டென்று பையை கையில் எடுத்துக்கொண்டாள்… அம்மா பின் தொடர்ந்தாள்…
கல்லூரி இறுதி ஆண்டு பரீட்சை …. அண்ணாவின் கட்டளைப்படி அம்மா கூடவே சென்றாள்… இருந்து கூட்டிவந்தாள்…
“விமலா…. நான் வரேண்டி…. பார்க்கலாம்…கட்டாயம் அண்ணா கல்யாணத்திற்கு வந்திடு ” சுகன்யா சொல்ல…. விமலா…” கட்டாயமடி… வரேன்… நீ தைரியமாக இரு… உன் அம்மா உன் மேலே ரொம்ப நம்பிக்கை வெச்சிருக்கா … அவாளுக்கு தெரியும் உனக்கு எது நல்லதுன்னு…. உன் மனசை திடப்படுத்திக்கோ” அறிவுரை கூறினாள்…
“சரி… நான் ஒன்னும் தப்பான முடிவு எல்லாம் எடுக்க மாட்டேன்…. ஆனால் திலீப்பை முழுசா என்னாலே மறக்க முடியலை… அதுதான் உண்மை…” சுகன்யா கூறியதும் சற்று அதிர்ந்தாள் விமலா… “ஏய்… என்னடி சொல்றே? பயமா இருக்கு… உங்க அம்மா என் கிட்டே நேத்திக்கு ரொம்ப நேரம் பேசினா… கட்டாயம் உங்க அண்ணா கல்யாணம் முடிந்த உடனே திலீப் நல்ல ஒரு வேலை தேடி செட்டில் ஆனவுடன் பேசலாம்னு இருக்கேனு சொன்னா.. அவர்கள் உணர்வுக்கும் மதிப்புக்கொடு… ” தன்னால் முடிந்ததை கூறினாள் விமலா..
“பார்க்கலாம்…. ! வரேன்…. அப்புறம் போன் பண்ணு” கூறிவிட்டு அம்மாவுடன் புறப்பட்டாள் சுகன்யா..
ஒரு வாரம் கழித்து ஒரு புத்தகம் தேவைக்காக சுகன்யா வீட்டிற்கு போன் செய்தாள் விமலா….. அதிர்ச்சி…. ” வை போனை…. ஒரு தடவை சொன்னால் புரியாது…. சுகன்யா உயிரோடு இல்லை…” மறு முனையில் சுகன்யா அண்ணன் கோபமாக….
” என்ன இது? உண்மையா? ஏன் ? ஒன்னும் புரியலையே… ” மனதிற்குள் போராட்டம்…” என்ன இந்த சுகன்யா? நாம அவ்வளவு பேசினோம்…. அவ அம்மா பாவம் எவ்வளவு பாசம், ஆசை வெச்சிருந்தா இவ மேலே! எல்லாத்தையும் குழி தோண்டி புதைச்சுட்டாளே…என்ன செய்யறது இப்போ? ” தவித்தது இதயம்… கை, கால் நடுங்கியது…. வீட்டில் யாருக்காவது சொல்லலாமா? உம… அம்மா கிட்ட மட்டும் சொல்வோம்.. இல்லைனா தப்பாயிடும்…. சொல்லிட்டு சுமியை கூட்டிட்டு சுகன்யா வீட்டிற்கு போகணும்…..
சுகன்யா அம்மா “ஓ! ” என்று அலறினாள் விமலாவையும், சுமையையும் பார்த்ததும்…
என்ன செய்வதென்று அறியாமல் விமலா அம்மாவை அணைத்துக்கொண்டாள்… அண்ணன் பக்கத்தில் இருந்தான்… அவனைப் பார்க்க பரிதாபமாகவும் , பயமாகவும் இருந்தது…
” என்ன ஆச்சு? ” மெதுவாக கேட்டாள் விமலா…அம்மாவால் பேசமுடியவில்லை…
சுகன்யா அண்ணன்தான் பேசினான்.
” எண்ணத்தை சொல்றது…. புத்திக்கெட்டவ….எவ்வளவு அட்வைஸ் பண்ணோம்… என் கல்யாணம் முடியட்டும் அப்புறம் பார்க்கலாம்…. அவனுக்கு வேலை எதுவும் இல்லை … கொஞ்சம் பொறு என்று…. பிடிவாதம்… எல்லாம் கெட்டுது….. இவளால் என் வாழ்வும் போச்சு…. அந்தப் பெண் என்ன பாவம் செஞ்சா??? இவ ஒருத்தியால இதோ மொத்தம் நாலு பேரு பாதிக்கப்பட்டிருக்கோம் அவளையும் சேர்த்து …. அப்புறம் அம்மா!
என்னத்தை சாதிக்க இந்த வேலை? எவ்வளவு நம்பினோம் அவளை…. முந்தாநாள் கடைக்கு போய் அவளுக்குப் பிடித்த இரண்டு பட்டுப் புடவை அப்புறம் ரொம்ப நாளா கேட்டுண்டிருந்த நெக்ல்ஸ்… எத்தனை ஆசை ஆசையா வாங்கித் தந்தேன்…. ” அழுகையை அடக்க முடியவில்லை அவனால்…
விமலா ” அண்ணா அழாதீங்க… நாங்களும் அவளுக்கு நிறைய சொன்னோம். …. அவளும் தைரியமானப் பொண்ணுதான்… எனக்கு உறுதி தந்தாலே தப்பான எந்த முடிவிற்கும் போகமாட்டேன்னு … ஆனால், இந்த முடிவுக்கு வருவான்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலே…”
” இந்தா பாருங்க அவ எழுதி வைத்திருக்கிற லெட்டரை…. பாவம் அந்தப்பையன் மாட்டிண்டான்… ” அண்ணா தாளாமல் சொல்ல லெட்டரை படித்தாள் சுமி..
” என்னுடைய காதலை ஏத்துக்க மறுத்துவிட்டான் திலீப் … அவன் பெற்றோர் கட்டாயத்தால் என்னை ஏமாற்ற முற்பட்டதால் நான் என் உயிரை விடும் முடிவிற்கு வந்துவிட்டேன்…. ” சுகன்யா…. …. கையெழுத்திட்டிருந்தாள்…. கீழே திலிப் முகவரி மற்றும் தொலைபேசி விவரங்களையும் எழுதி இருந்தாள் இந்தக் கடிதம் அவளின் அறை மேசைமீது வைத்திருந்ததாய் அண்ணன் கூறினான்…
போலீஸ் திலீப்பை விசாரிக்க ஸ்டேஷன் அழைத்து சென்றனர்….
” சே…! என்ன இவள்… ஏன் இப்படி? முட்டாள்தனம்? அந்தப் பையன் பாவம் இவளைத்தான் கல்யாணம் செய்துப்பேன்னு தவமா இருந்தான்…. அவனைப் போய் போலீசில் பிடித்து தந்துவிட்டாளே…. எல்லாம் முடிந்து விட்டது…. இனி என்ன செய்வது? ” விமலா புலம்பினாள்…
” தாங்க முடியலைடி விமலா…. இதோ இவன் கல்யாணமும் நின்னுடுறது… பெண் வீட்டிலிருந்து நேற்று வந்து ஒரு பிரளயமே பண்ணிட்டா… அவா மேல என்ன தப்பு…. இவ இப்படிப் பண்ணது ஒரு பெரும் அதிர்ச்சி….. பாரு… என் பையன் நிலைமையை…. எவ்வளவு கல்யாண கனவுகளோடு இருந்திருப்பான்…. எல்லாம் போச்சு இவளால்…. இவ மேலே எத்தனை நம்பிக்கை வைத்திருந்தேன்… இந்த மூணு மாசமா கூடவே போய் கூடவே வந்தேனே…. ” அம்மா தலையில் அடித்துக்கொண்டாள்..
“யாரு வீட்டிலே? வெளியே வாங்க… ” ஒரு பத்து பேரின் குரல் ஒன்றாய் கேட்க இவர்கள் அதிர்ந்தனர்…
வெளியே…. திலீப்பின் உறவினர்கள்…. ” என்ன இது நியாயம்? உங்க பொண்ணு தற்கொலை பண்ணிப்பாளாம்… எங்க பையனை தூக்கி உள்ளே வைப்பார்களா? என்னமா பெண்ணை வளர்த்திருக்கீங்க? என்ன பதில் ? பாவம் ஸ்டேஷன்ல அவனைப் பின்னி எடுக்கறாங்க… நீங்க இங்க கும்மாளம் அடிக்கறீங்களா? இதிலே கல்யாண ஏற்பாடு வேற? ” அதிகாரமாய் பேசினார்… ஒருவர்..
அம்மா கதிகலங்கிப்போனாள்… அண்ணாவிற்கு பேச விருப்பமே இல்லை…. யாரும் வாய் திறக்க வில்லை…
விமலா மெதுவாய் எழுந்து வெளியே சென்றாள்..கை கூப்பி நின்றாள்… ” தயவு செய்து புரிஞ்சுக்கோங்க…. நான் சுகன்யாவோட பிரென்ட் .. அவ செய்தது மிகப் பெரிய தவறு…. இவர்களும் மன உளைச்சலில் இருக்காங்க… அண்ணன் கல்யாணமும் நின்று போயிடுறது… அம்மா மிகவும் பாதிப்புக்கு உள்ளாயிருக்காங்க…. நீங்க கொஞ்சம் தயவு பண்ணுங்க… உங்க மகனை இந்த விவகாரத்திலிருந்து கட்டாயம் பேசி உடனே வெளியே எடுக்க ஏற்பாடு செய்யறோம்…. நீங்க மேலே மேலே இவர்களை தொந்தரவு செய்யறது சரியில்லை…. இங்கிருந்துப் போங்க …. ” தெளிவாய் பேசினாள் …. ஆனால் அவர்கள்… ” சும்மா வாயை மூடு… எப்ப வெளியே விடுவாங்க? இப்ப வரணும்… புரியுதா? ” ஒரு பெண்மணி சத்தம் போட அதற்குள் போலீஸ் அங்கு வரவே அனைவரும் அமைதி காத்தனர்…
அம்மா, அண்ணன் இருவரும் விமலாவையும், சுமியையும் அவரவர் வீட்டிற்கு போகும்படி கேட்டுக்கொண்டனர்…
அண்ணன் போலீசிடம் எழுத்து பூர்வமாய் திலீப்பை விடுவிக்க கோரி அதன்படி அவன் வெளி வந்தான்…
நான்கு மாதங்கள் கழித்து மிகவும் போராடி நிச்சயித்தப் படி அண்ணனின் கல்யாணம் ஒரு சிறு கோயிலில் நடந்தது…. விமலாவும், சுமியும் சென்றனர்…அம்மாவிற்கு சற்று ஆறுதலாய் இருந்தது…
” ஒரு பெண்ணின் முட்டாள்தனமான முடிவால் எத்தனை பிரச்சனைகள், வேதனைகள்…” மனதில் சுகன்யாவை வெறுத்தாள் விமலா… கொஞ்சம் கூட அவள் மேல் பரிதாபம் வரவில்லை.