கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 7,806 
 
 

நான் லலிதாவிடம் சிவனைப் பற்றி , ‘உங்கள் மீது உயிரையே வைத்திருந்தான்’ என்று சொல்ல நினைத்ததும், ‘உங்களுக்குள் என்ன நடந்தது?’ என்று கேட்க நினைத்ததும், நேற்றிலிருந்து என்னென்ன பேசலாம் என்று மனதில் ஓடியது. அழிந்து விட்டு, சிவன் இருந்துகொண்டே இல்லாமல் ஆகிவிட்டதையும், நான், சிவன், லலிதா மூவரின் முக்கோண இழையில் இப்போதுள்ள சிவனின் இழைகளுமாய் நாங்கள் பயணித்துக் கொண்டிருந்தோம். அவள் முகத்தில் வேதனையோ, கண்ணீரையோ நான் காணவில்லை. ஆனால் சிவன் ஒரு உணர்வாய் அவளிடம் இருந்து வழிந்துகொண்டு இருந்தான். நாங்கள் சிவனின் வீட்டை அடைந்தபோது அவனின் இரு பெண்களும் பள்ளிக்கு இறங்கினர். லலிதா அந்தக் குழந்தைகளை அன்பு பொங்க பார்த்தாள். ‘பெருசு பூச்சி குரு, சின்னது ரவுடி’ என்பான் சிவன். சின்னவள் சைக்கிள் எடுக்க, பெரியவள் பின்னால் உட்கார்ந்தாள். போகும்போது, அம்மாவை அழவேணாம்னு சொல்லுங்க’ என்றாள் சின்னவள். எல்லோர் முகங்களிலும் நிழல் படிந்திருந்தது.

அவர்கள் கிளம்ப காத்திருந்ததுபோல சிவனின் மனைவி முந்தானையால் முகம் பொத்தி, ‘அதுங்க போகட்டும்னு இருந்தேன்’ என்று அழுதாள். ‘எல்லா சாமியையும் நேர்ந்துகிட்டேன், எதுக்கும் மனசில்லையே’ என்று ஏங்கி அழுதபோது தொண்டையை அடைத்தது. நாங்கள் உள்ளே போனதும், லலிதா வாசல் குறடிலும் நான் நாற்காலியிலும் உட்கார்ந்தோம்.

சிவனின் மனைவி உள்ளே போய் சிவனை அழைத்து வந்தாள். ஒரு பொம்மையை நடத்தி வருவது போல இருந்தது எனினும் அவள் செயலில் ப்ரியம் வழிந்தது. இளைத்து கறுத்திருந்தான். அப்போதுதான் குளிக்க வைக்கப்பட்டிருந்தான். வேட்டி மட்டும் இடுப்பில். கட்டிலில் இட்கார வைத்துவிட்டு, துண்டில் மேல் உடம்பை துடைத்துவிட்டு, பேன் போடும்போது, ‘கொஞ்சமா வச்சா புழுங்குமா, நிறைய வச்சா குளிருமான்னு மனசு பதறுது’ என்றாள்.

லலிதா சிவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். ‘நீங்க சாப்பிடுங்க’ என்றவளிடம் மறுத்தோம். ‘யார் வந்தாலும் சாப்பிடனும் அவங்களுக்கு’ என்று சொல்லிக்கொண்டே அவனுக்குத் தர இரண்டு இட்லிகளை கொண்டு வந்தாள். ‘சாப்பிடவேணாம், உயிரோட இருக்க வேணாம்னு மனசை மூடிகிட்டவங்களை என்ன பண்ண முடியும்? ஒரு வாய் ஆகாரம் வேணாம்னு இருக்கவுங்களை பார்த்தா என் நெஞ்சு பதறுதே’ என்று அவள் குமுறியபோது என்னால் தாங்க முடியவில்லை. ‘லலிதாகிட்ட ஒரு வாசனை இருக்கு குரு. என் ரத்தத்தை அமைதி பண்றது,’ என்றவனின் குரல் காதில் இருந்தது. ‘நான் அவளுக்குத் தாங்க முடியாம பண்ணிட்டேன்,’ என்று சொல்ல வந்தவனை கேட்டிருக்க வேண்டும்.

இரண்டு பெண்களில் ஒருத்தி அழுதபடியும், ஒருத்தி ஒரு துளி கண்ணீர் சிந்தாமலும் என்னை கரைத்துகொண்டு இருந்தனர். வெற்று பார்வையாய் அலைந்து கொண்டிருந்தது சிவனின் கண்கள்.

‘நான் கொடுக்கவா?’ என்று லலிதா கை நீட்டியபோது, சிவனின் மனைவி, ‘மெதுவா சாப்பிடுவாங்க’ என்று புன்னகை விரிய தட்டைக் கொடுத்தாள். கண்களை, முகத்தை துடைத்துக்கொண்டு, ‘காபி கொண்டு வரேன்’ என்று உள்ளே போனாள்.

லலிதா ஒவ்வொரு விள்ளலாய் ஊட்டினாள். நான் நிறைய சகோதரிகளுடனும் அவர்கள் குழந்தைகளுடனும் வளர்ந்தவன். எனக்கும் மூன்று குழந்தைகள். ஆனால் அங்கு நடந்துகொண்டிருந்த ஒரு உணவு ஊட்டலை இதுவரை எங்கும் கண்டதில்லை.

ஒரு பிரவாகமென லலிதாவில் இருந்து கருணையும், தாய்மையும் வழிந்துகொண்டு இருந்தது. அகிலத்தின் அன்னை போல் அவள் ஒளிர்ந்துகொண்டு இருந்தாள். ஒவ்வொரு விள்ளலுக்கும்,’ஆ,காட்டு சாமி, இது மட்டும்தான்,’ என்றும் பேசிக்கொண்டு இருந்தாள். கடைசியில் தண்ணீர் கொடுக்கும்போது உள்ளே இருந்து சிவனின் மனைவி வந்துகொண்டு இருந்தாள். நான் தவித்தேன். என் அசைவோ, சிவனின் மனைவி வரும் அசைவோ அவர்களைத் தொந்தரவு செய்துவிடும்.

என்னைப் பார்த்து என்ன புரிந்துகொண்டாளோ, காபி தம்பளர்களை மேஜையில் வைத்துவிட்டு சந்தடி இன்றி சுவரில் சாய்ந்துவிட்டாள் அவள்.

‘தண்ணி குடிம்மா, என் சாமி இல்ல’ என்று சிவனின் தலையை தன்னுடன் அணைத்தவளின் உலகத்தில் வேறு யாரும் இல்லை. சிவன் அவள் மீது அழுந்தினான். அவன் கை உயர்ந்து தாழ்ந்தது. மறுபடி,மறுபடி. நானும் சிவனின் மனைவியும் அசைவற்று இருந்தோம். என் நெஞ்சு இதயத்திற்கு எம்பியது.

சிவனின் கை லலிதாவின் இடுப்பில் அணைந்தது. மற்றொரு கை அவன் மடி மீது மூடி மூடி திறந்தது. தண்ணீர் டம்பளரை எட்டி வைத்துக்கொண்டிருந்த லலிதா, திடுக்கிட்டு, பின் அவனை, ‘என் சாமி’ என்று சேர்த்து அணைத்தாள்.

இரண்டு எட்டாக சிவனின் மனைவி ஓடி வந்து லலிதாவை கட்டிக்கொண்டு கதறியபோது நானும் மனம் விட்டு அழுதேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *