காசுப்பாட்டி

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 8, 2016
பார்வையிட்டோர்: 16,044 
 
 

வள்ளியம்மாளைப் பார்த்திருக்கிறீர்களா? மங்கலம் ரயில்வே பாலத்துக்குக் கீழாக நின்று காசு வாங்கிக்கொண்டிருப்பார். அந்த வழியில் பெரும்பாலும் லாரிகள்தான் செல்லும். பல்லடத்துக்குச் செல்லும் லாரிகள் அவை. லாரிக்காரர்கள் நிறுத்திக் காசு தருவார்கள் என்று சொல்ல முடியாது. ஒன்றிரண்டு ஓட்டுநர்கள் தருவார்கள். மற்றபடி சில [​IMG]பைக்’காரர்களும், கார்காரர்களும் தருவதை வாங்கிக்கொள்வார். ஒரு ரூபாய் கொடுத்தாலும் ஒன்றுதான்; நூறு ரூபாய் கொடுத்தாலும் ஒன்றுதான். ‘மவராசனா இரு! புள்ள குட்டிகளோட நல்லா இரு’ என்று வள்ளியம்மாள் வாழ்த்தித் தள்ளிவிடுவார். நூறு ரூபாய் என்பது ஒரு பேச்சுக்குச் சொல்வது. அவ்வளவெல்லாம் யாரும் தர மாட்டார்கள். ஒரு நாளைக்கு இருபதோ, முப்பதோ கிடைக்கும். அது வாய்க்கும் வயிற்றுக்குமே சரியாக இருக்கும்.

வள்ளியம்மாளுக்கு வீடு என்றெல்லாம் எதுவும் இல்லை. மங்கலம் பள்ளிக்கூடத்தின் கொட்டகையில் படுத்துக்கொள்வார். தலைமையாசிரியர் செய்து கொடுத்த சகாயம் அது. வள்ளியம்மாள் எப்படி இருப்பார் என்றே சொல்லவில்லை, பாருங்கள்… வெள்ளைப் புடவை, கூன் விழுந்த முதுகு, கையில் ஓர் ஊன்றுகோல் வைத்திருப்பார். யாரோ ஒரு புண்ணியவான் வெள்ளியங்கிரி மலையிலிருந்து வாங்கி வந்திருந்த, சீவிய மூங்கில் அது. வாயெல்லாம் பொக்கை. வயது அநேகமாக எண்பதைத் தொட்டிருக்கக் கூடும். அவருடைய மகன் சுப்பிரமணியத்துக்கு அறுபதைத் தாண்டியிருக்கும். மகன் இருந்து என்ன பிரயோஜனம்? பேர் சொல்லும் வாரிசாக இல்லை.
சுப்பிரமணியத்துக்கும் ஒரு பையன் இருந்தான். இளந்தாரி. பொறுப்பில்லாமல் சுற்றினான். வள்ளியம்மாளிடம் ‘ஆத்தா… ஆத்தா…’ என்று சுற்றிச் சுற்றி வருவான். ஆத்தா கொடுத்த காசில் டாஸ்மாக்கில் குடித்துவிட்டு, லாரிச்சக்கரத்தில் விழுந்தான். ஐப்பசி வந்தால், ஆறு வருடம் முடிகிறது. சுப்பிரமணியத்துக்கு அதுதான் பெருங்கவலை. ஒற்றை மகன் என்று ஆசையாய் வளர்த்த பாவிப்பையனை சதைக் கூழாக எடுத்து வந்திருந்தார்கள். சக்கரம் நடுவயிற்றில் ஏறியிருந்தது. கண்களையாவது மூடித் தொலைந்தானா? விறைத்துப் போய்க் கிடந்தான்.
[​IMG]​
அவனைத் தூக்கிக்கொண்டு போனபோது, ”அவனுக்குக் காசு கொடுக்காதீங்கன்னு சொன்னேனே, கேட்டீங்களா? கிழவி கொடுத்த காசில் குடிச்சு எம்பையன் என்னையவிட்டுப் போய்ட்டானே” என்று சுப்பிரமணியத்தின் மனைவியின் விரல், வள்ளியம்மாளை நோக்கித் திரும்பியபோது, நடுங்கித்தான் போனார். இடுகாடு போனவர்கள், ஆலமரத்தில் கிளிகள் அணையும் நேரத்தில் திரும்பி வந்தார்கள். வீட்டில் வெறுமை குடியேறியிருந்தது.

இப்போதெல்லாம் சுப்பிரமணியத்துக்கும் அவன் மனைவிக்கும் வேறு நினைப்பே இல்லை. குடியே முழுகிவிட்டதென, இருந்த முக்கால் ஏக்கரையும் விற்றுக் கஞ்சி குடித்துவிட்டார்கள்.

சுப்பிரமணியத்துக்கு ஏதோ பெருநோய் வந்திருக்கிறது. புற்றுநோயாக இருக்கக்கூடும் என்கிறார்கள். கோயம்புத்தூர் பெரிய ஆஸ்பத்திரியில் பார்ப்பார்கள் என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். சுப்பிரமணியம்தான் கண்டுகொள்வதில்லை. முன்பெல்லாம் குடித்த சோற்றோடு சேர்த்து ரத்தமும் எப்பவாவதுதான் வரும். அது இப்போது அடிக்கடி வருகிறது. மகனும் மருமகளும் இப்படிக் கிடக்கிறார்களே என வள்ளியம்மாள் அவர்களுக்குச் சுமையாக இருக்க விரும்பவில்லை. பேரன் போய்ச் சேர்ந்த ஆறாவது மாதமே இந்தக் கொட்டகைக்கு வந்துவிட்டார். அவ்வப்போது வந்து போகும் ரயில்கள்தான் கிழவிக்கு இரவுத் துணை. மேலே விட்டத்தைப் பார்த்தபடி யோசித்துக்கொண்டே படுத்திருப்பார். எப்போது தூங்குவார் என்று தெரியாது. மீண்டும் கண்களை மூடும்போது இன்னொரு ரயில் வந்து எழுப்பிவிட்டுச் செல்லும். எதை யோசிக்கப் போகிறார்? பழங்கதையைத்தான்.
வள்ளியம்மாளின் குடும்பம் வாழ்ந்து கெட்டது. ‘முப்பதாண்டு வாழ்ந்த குடும்பமும் இல்லை, முப்பதாண்டு கெட்ட குடும்பமும் இல்லை’ என்பது வள்ளியம்மாளுக்கு ஏனோ பொருந்தவேயில்லை. ஐம்பதாண்டுகளாகப் பள்ளத்திலேயே கிடக்கிறார்கள். பையன் பிறந்து பத்து வருடங்கள் வரைக்கும் நன்றாக இருந்தார்கள். ரெட்டை மாட்டு வண்டிப்பயணம், கழுத்து நிறைய நகை, வீட்டில் மட்டும் மூன்று பணியாட்கள் என ராஜ வாழ்க்கைதான். அதுபோக, தோட்டத்து ஆட்களின் கணக்கு தனி. சுப்பிரமணியை அழைத்துக் கொண்டு திருமண வீடுகளுக்கும், கோயில் திருவிழாக்களும் சென்று வருவதுதான் வள்ளியம்மாளின் வாழ்க்கையாக இருந்தது. அவள் உதடுகளைக் குவித்து, இரண்டு விரலை வைத்து, சிவந்த எச்சிலைத் துப்பிவிட்டு, லோலாக்கை ஒரு ஆட்டு ஆட்டிக் கொள்ளும் அழகுக்கே கோயில் கூட்டம் ஒரு விநாடி ஸ்தம்பித்துப் போகும். அப்படியிருந்த குடும்பம்தான் ஈரம் காயாத கட்டடம் போல சரிந்து வீழ்ந்தது.

ஆரம்பத்தில், தோட்டங்காடு போனதெல்லாம் வள்ளியம்மாளின் காதுக்கே வரவில்லை. கணக்குப்பிள்ளைக்கும், தர்மகர்த்தாவுக்குமாக எழுதி வைத்துப் பணத்தை வாங்கிக்கொண்டு போய் யாரிடமோ கொடுத்து வருகிறார் என்ற விவரம் தெரியத் தொடங்கியபோது, வெள்ளம் தலைக்கு மேலாக ஒரு ஜாண் போய்க்கொண்டிருந்தது. கிட்டத்தட்ட வீடு மட்டும்தான் பாக்கி.

மூக்கால் அழுதும் பயனில்லை. வள்ளியம்மாளின் கணவன் எங்கே போகிறான் என்ற விவரம் அவன் வாயிலிருந்து வரவே இல்லை. இவள் அழுவதைப் பார்த்து வண்டிக்காரன் சொல்லித்தான் அந்தத் தொடுப்பு விவகாரம் தெரிய வந்தது. அவள், சாமளாபுரத்தில்தான் குடியிருந்தாள். இந்த ஆளுக்குப் புத்தி வேண்டும். நமக்கும் பையன் இருக்கிறான் என்ற நினைப்பு இருந்தால் இப்படி அழித்திருப்பானா?
வண்டியைப் பூட்டிக்கொண்டு வள்ளியம்மாள் போனபோது, ஊரே அதிர்ந்து நின்று பார்த்தது. அவளது வேகம் அப்படி. போன வேகத்தில் சக்களத்தியை இழுத்துப் போட்டு அடித்தாள். அடிக்கக் கையை ஓங்கியபோதுதான் ஒரு விநாடி கவனித்தாள். அத்தனை அழகு அவள். புருவமும், கண்களும், கன்னங்களும் வள்ளியம்மாளையே ஒரு விநாடி திகைக்க வைத்ததென்றால், வள்ளியம்மாளின் கணவன் எம்மாத்திரம்? யோசனையைத் தள்ளிவிட்டு, ஓங்கிய கையை அவள் மீது இறக்கினாள். யார் வந்தும் தடுக்க முடியவில்லை. அவளுக்கு உதடு பிய்ந்து ரத்தமாக வழிந்தது. தாழ்வாரத்தில் செருகியிருந்த அருவாளை நோக்கி வள்ளியம்மாள் நகர்ந்தபோது, முந்தானை போனாலும் பரவாயில்லை, தப்பித்தால் போதும் என ஓடியவள்தான். அடுத்த மூன்றே நாட்களில் அவளைத் தேடி வள்ளியம்மாளின் கணவனும் பரதேசம் போனதுதான் மிச்சம். போனவன், குடியிருந்த வீட்டையும் கணக்குப்பிள்ளையிடம் கணக்கு செய்திருந்தான். வள்ளியம்மாளும் சுப்பிரமணியமும் வீதிக்கு வந்துவிட்டார்கள்.

கணக்குப்பிள்ளையின் மனைவிக்குச் சற்றுப் பெரிய மனசு. வள்ளியம்மாளின் நிலையைப் பார்த்துவிட்டு ஏரி ஓரமாகக் கொடுத்த முக்கால் ஏக்கர்தான் ஆத்தாளுக்கும் மகனுக்கும் இதுவரைக்கும் சோறு போட்டது. முக்கால் ஏக்கரை வைத்துக்கொண்டு, பஞ்சத்தில் வெறும் வயிற்றோடு கிடந்த காலமும் உண்டு. அதே முக்கால் ஏக்கர் பண்ணையத்தில் மிச்சம் செய்து, சுப்பிரமணியத்துக்கு வெள்ளி அரைஞாண் கயிறு வாங்கிய காலமும் உண்டு. அப்படிக் காப்பாற்றிய முக்கால் ஏக்கரையும் மகன் விற்றபோதுதான் வள்ளியம்மாள் முழுமையாக நொறுங்கிப் போனார். ஆனால், மகனை நொந்துகொள்ள முடியாது. அவன் பெற்ற மகனே போய்விட்டான்; இந்த முக்கால் ஏக்கரை தலையில் கட்டி சுடுகாட்டுக்கா இழுத்துப் போகப் போகிறான்? தொலையட்டும்.
[​IMG]வள்ளியம்மாளுக்கு தினசரி முப்பது ரூபாய் போதும். காலையில் மூன்று இட்லி; இரவில் மூன்று இட்லி. ஒரு இட்லி ஐந்து ரூபாய் ஆகிவிட்டது. மதியத்துக்கு ஒன்றுமில்லை. ஐந்து ரூபாய் மிச்சமிருந்தால், மாலையில் ஒரு டீ குடிப்பார். அதுவும் கூட, பள்ளிக்கூடம் இல்லாத நாட்களில்தான். பள்ளிக்கூடம் இருந்தால் குழந்தைகள் வந்து கைநீட்டுவார்கள். ஆளுக்கு ஒரு ரூபாய் என்று கொடுத்துவிடுவார். ‘இந்தக் காலத்தில் ஒரு ரூபாய்க்கு என்ன கிடைக்கிறது? இலந்த வடையைக்கூட இரண்டு ரூபாய் சொல்கிறார்கள்’ என்று சலித்துக்கொள்வார்.

வள்ளியம்மாளுக்குச் சர்க்கரையும் இருக்கிறது. சிறுநீர் கழித்த இடத்தில் கட்டெறும்பு ஊறுகிறதென நாச்சிமுத்து டாக்டரிடம் சென்றபோது, ரத்தத்தில் சர்க்கரை என்று உறுதிப் படுத்தியிருந்தார். இது நடந்து பத்து வருடங்களுக்கு மேலாக இருக்கும். பேரன் இருந்த வரைக்கும், சர்க்கரை மாத்திரையை வாங்கி வந்து தருவான். இப்போது அதுவும் இல்லை. பாழாய்ப்போன கண்ணுக்குத் தெரியாமல் கல் ஏறியிருக்கும் போலிருக்கிறது. வலது காலின் கட்டைவிரலில் வலியே இல்லாமல் புண்ணாகிக் கிடக்கிறது. கிழிந்த புடவையைப் புண்ணுக்குச் சுற்றிவிட்டுத்தான் இன்று நின்று கொண்டிருந்தார்.
அந்தி சாய்ந்துகொண்டிருந்தது. இந்தக் காலத்தில் மயில்கள் அதிகமாகிவிட்டன. அவை கத்தி கத்தித்தான் சூரியனையே விரட்டுகின்றன போலிருக்கிறது. கிழவிக்கு மனக்கணக்கு இருக்கிறது. கையில் பதினேழு ரூபாய் இருக்கிறது. ஆட்கள் கொடுக்கக் கொடுக்கவே எண்ணி வைத்திருந்தார். இரண்டு ரூபாய்க்கு வெற்றிலை பாக்கு வாங்கிவிட வேண்டும் என்று கணக்குப் போட்டுக்கொண்டு திரும்பினார். பள்ளிக்கூடக் குழாயில் எந்நேரமும் தண்ணீர் வரும். புழுதியைக் கழுவிவிட்டு, கால் புண்ணுக்குக் கட்டு மாற்ற வேண்டும் என்று நினைத்துக்கொண்டார். நினைத்தபடியே கொட்டகைக்குத் திரும்புகிற வழியில்தான் அந்த மஞ்சப்பை கிடந்தது. லட்சுமி படம் போட்டிருந்த பை அது. கிழவிக்கு ஆர்வம் தாங்கவில்லை. எடுத்துப்பிரித்தால், ஐந்நூறு ரூபாய்த்தாள் கட்டுகள். ஒரு லட்ச ரூபாயாவது இருக்கக்கூடும். கிழவிக்கு அதெல்லாம் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், பணம் என்று தெரிந்தது. கண்களில் ஒத்திக் கொண்டார். யாரும் பார்த்துவிடுவதற்குள்ளாக மடியில் வைத்துப் புடவையை இழுத்துவிட்டு, மறைத்துக்கொண்டார்.

இனி, கடைசி காலம் வரைக்கும் பிரச்னை இல்லை. சுப்பிரமணியத்திடம் பாதியைக் கொடுத்து, ஏதாவது மாத்திரை வாங்கித் தின்னச் சொல்ல வேண்டும். பெத்த பையன் ரத்த வாந்தி எடுப்பதைப் பார்க்கச் சங்கடமாக இருக்கிறது. அதுவும் அடிவயிற்றிலிருந்து கக்குகிறான். இரண்டு வீதிகள் தள்ளியும் அவன் கதறுவது கேட்கிறது. அவன் மனைவிக்கு இரண்டு தறிப்புடவை வாங்கித் தரச் சொல்லலாம். கிழிந்த துணிகளைத்தான் திரும்பத் திரும்பச் சுற்றிக்கொண்டிருக்கிறாள். அவளும் பாவம்தான். சுப்பிரமணியைக் கட்டிக்கொண்டு வந்ததிலிருந்து ஒரு நோம்பி நொடிக்குக்கூட வெளியில் போனதில்லை. கால் கிராம் தங்கம்கூட அவள் உடலைத் தொட்டதில்லை. கிழவிக்கு இதெல்லாம் வெகு ஆசைதான். ஆனால், கையில் பணம் இருந்தால்தான் எல்லாமும். வெறும் கையை வைத்துக்கொண்டு அவளுக்கு ஆசை காட்டுவதில் என்ன நியாயம் இருக்கிறது? அமைதியாக இருந்துவிடுவார். இப்போது இதையெல்லாம் செய்துவிட வேண்டும் என்று தோன்றியது.

வெகு அவசரமாக நடந்து சென்று, பாய்க்கு அடியில் அந்தப் பையைப் போட்டு மறைத்துவிட்டார். பொழுது சாயட்டும்; இருட்டியதும் சுப்பிரமணியத்தைப் பார்க்கப் போகலாம் என்று முடிவு செய்து கொண்டார். இப்போது சென்றால் ஒருநாளும் இல்லாத திருநாளாக கிழவி எதற்கு வருகிறாள் என்று அக்கம்பக்கத்தில் சந்தேகப்படுவார்கள். பெற்ற மகனின் வீட்டுக்குத்தான் செல்கிறார் என்றாலும், அங்கு சென்றே வருடக்கணக்கில் ஆகிறது. எதற்கு அடுத்தவன் புத்தியைக் குறுகுறுக்க வைக்க வேண்டும்? இருட்டட்டும்.

வள்ளியம்மாள் தண்ணீரில் புழுதியைக் கழுவிவிட்டு வந்து அமர்ந்தார். இருள் கவியத் தொடங்கியிருந்தது. நட்சத்திரங்கள் ஒன்றிரண்டு தெரிந்தன. நல்ல தருணம்தான். புண்ணுக்குக் கட்டு மாற்றிவிட்டால் கிளம்பிவிடலாம். கொட்டகையில் பல்பு எரிந்துகொண்டிருந்தது. மனம் இலகுவாகியிருந்தது. சாகிற தறுவாயில்தான் ஆண்டவன் கண் திறக்க வேண்டும் என்பதுதான் விதி போலிருக்கிறது. கணவனை ஒரு விநாடி நினைத்துப் பார்த்துக்கொண்டார். மகன் வீட்டுக்குச் செல்வதற்காக எழுந்தபோது, யாரோ இருவர் பைக்கில் வந்தார்கள். அதே இடத்தில் பையை வைத்துவிட்டுப் பாயினால் மூடி வைத்தார். அதே இடத்தில் அமர்ந்துகொண்டார். ஒருவேளை, பள்ளி ஆசிரியர்களாக இருக்கக்கூடும் என்றுதான் நினைத்தார்.

ஆசிரியர்கள் இல்லை. வேறு யாரோ.

”ஆயா….’என்று ஒரு குரல் அழைத்தது.

”ஆரு கூப்பிடறது?’ வள்ளியம்மாள் பதில் குரல் எழுப்பினார்.

அந்த உருவங்கள் நெருங்கி வந்தன. “பஞ்சாயத்து போர்டு ரங்கசாமி பையன் குமாரும்மா நானு’என்று, அவனே தொடர்ந்தான்… “இவுரு பக்கத்து ஊர்க்காரரு. பாலத்துக்கிட்ட வரும்போது பையைத் தொலைச்சுப் போட்டாராம். ஏதாச்சும் கண்ணுல பட்டுச்சா?’

கிழவிக்கு திக்கென்றானது. நெஞ்சுக்குள் ஏதோ அடைப்பதுபோல இருந்தது.

சுதாரித்துக்கொண்டு, “பார்க்கலையே’ என்றார். அவர் சொன்னது வெகு இயல்பாகத்தான் இருந்தது. அப்படியே முகத்தில் வித்தியாசம் தெரிந்திருந்தாலும், இந்த அரைகுறை வெளிச்சத்தில் அவர்களால் அதை உணர்ந்திருக்க முடியாது.

“ஒண்ணுங் கண்ணுல படலையே சாமீ” என்று திரும்பவும் அழுத்தமாகச் சொன்னார். அவர்களுக்குச் சந்தேகம் எதுவும் வந்திருக்காது என்றாலும், இன்னொரு முறை சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தார். சொல்லிவிட்டார். கூட வந்திருந்தவர் தலையில் கையை வைத்துக்கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டார். ஆனால், வள்ளியம்மாள் அசரவில்லை. தனது வாழ்நாள் கஷ்டத்துக்கான பதில் இப்போதுதான் கிடைத்திருக்கிறது. அதை இவ்வளவு குறுகிய நேரத்தில் இழக்க விரும்பவில்லை. தனது மகனும் மருமகளும் சந்தோஷமாக இருந்து பார்த்ததே இல்லை. இன்றைக்கு அதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது. அதை ஏன் கெடுப்பானேன்? எதுவுமே பேசாமல் நின்றிருந்தவர் ‘இன்னொருக்கா போய் பாருங்க’ என்றார்.

‘எல்லா இடத்திலும் தேடியாச்சு, ஆயா.

இனி கிடைக்காது. எம் பையன் சாவ வேண்டியதுதான்…’ பையைத் தொலைத்திருந்தவர் அழுதபடியே சொன்னார். எதனால் பையன் சாக வேண்டும்? ஏதாவது மருத்துவச் செலவாக இருக்கக்கூடும்; அல்லது, வேறு செலவாகக்கூட இருக்கலாம். அதையெல்லாம் கேட்கிற மனநிலையில் வள்ளியம்மாள் இல்லை. அவர்கள் அந்த இடத்திலிருந்து கிளம்பினால் போதும் என்றிருந்தது. அந்த நபரின் கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. ஏதோ சில கெட்ட வார்த்தைகளை உதிர்த்தார். அந்த வார்த்தைகள் பெரும்பாலும் அவரையே திட்டுவதாக இருந்தன. தன்னைத்தானே நொந்துகொள்கிறார் போலும்! வள்ளியம்மாள் சற்றுச் சலனமடைந்திருந்தாலும், காட்டிக் கொள்ளவில்லை. ரங்கசாமி பையன், “வாங்கண்ணா, போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லிடலாம்” என்றான். அவர்கள் போய்ச் சொல்வதற்குள், பணத்தை இடமாற்றிவிட வேண்டும் என்று வள்ளியம்மாள் நினைத்துக்கொண்டார். அவர்கள் வண்டியின் அருகில் சென்றிருந்தார்கள்.
இன்னொரு உயிர் போய்க்கொண்டிருக்கிறது. அவனுக்குத் தனது பேரன் வயது இருக்கக்கூடும். அந்த உயிரைப் பறித்து தாங்கள் மூன்று பேரும் சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டுமா என்றுகூட யோசனை வந்தது. சுப்பிரமணியமேகூட பணத்தைத் திருப்பித் தந்துவிடச் சொல்லக்கூடும். மனம் குழம்பியது.

பைக்கை மிதித்துவிட்டார்கள். இன்ஜின் உறுமத் தொடங்கிவிட்டது. அதற்குள் கிழவியின் மனம் மாறிவிட்டது. “அப்பு, இந்தப் பையான்னு பாரு!’ கிழவி சத்தம் போடவும், அந்த மனிதர் இறங்கி வெகு வேகமாக ஓடி வந்தார். வெகு சந்தோஷம் அவருக்கு. அதையும் மீறி கோபம் பொத்துக்கொண்டு வந்தது. சீட்டுப்பணம் மொத்தமாகப் போய்விட்டதே என்ற கவலையிலும், பையன் சாகக்கிடக்கிறானே என்ற வேதனையிலும் வெகுநேரமாக அலைந்திருக்கிறார். பசி காதை அடைத்துக்கொண்டிருந்தது. பணம் கிடைத்த சந்தோஷத்தைவிடவும், கிழவி தன்னை ஏமாற்றப்பார்த்திருக்கிறாள் என்ற எண்ணம்தான் பொத்துக்கொண்டு வந்தது. ரங்கசாமி பையன் வண்டியை நிறுத்திவிட்டு வருவதற்குள், ‘திருட்டு முண்ட… போலீஸுன்னு சொன்னதுக்கப்புறம் பயந்து கொடுக்கறியா?”என்று கிழவியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்.
வள்ளியம்மாள் துளிச் சத்தம்கூட இல்லாமல் சுருண்டு விழுந்தார். மூக்கில் ரத்தம் வருகிறது போலிருக்கிறது. மூச்சு இழுத்தது. ஆழமான மூச்சு அது. அது மிகுந்த திணறலுடன் வெளியேறிக்கொண்டிருந்தது. அருகில் வந்த ரங்கசாமி பையன், “ஏண்ணா அடிச்சீங்க?” என்றான். “சரி, தொலையட்டும். வாங்க, போயிற லாம்” என்று கையைப் பிடித்து இழுத்தான். இருவரும் வேகமாக நகர்ந்தார்கள். வள்ளியம்மாள் ஏதோ சைகையில் காட்டினார். தண்ணீர் கேட்பது போல இருந்தது. அவர் வண்டியில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்தார். [​IMG][​IMG]யாராச்சும் வந்தாங்கன்னா நம்மளைப் புடிச்சுடுவாங்க. பேசாம வாங்கண்ணா..!” குமார் மீண்டும் இழுத்தான். அவர்கள் கிளம்பும்போதும் பாட்டி கேவிக்கொண்டிருந்தார். கடைசி கேவல் கேட்டபோது, அந்த இடத்தில் நிலவைத் தவிர, வேறு யாரும் இல்லை.

– நவம்பர் 2014

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *