கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 14, 2021
பார்வையிட்டோர்: 3,114 
 
 

(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒவ்வொரு முதல் தேதியும் மாணிக்கம் கடன் வசூல் செய்ய சிவசங்குவின் ஆபீஸ் வாசலில் ஆஜராகி விடுவார். தம்புச் செட்டித் தெருவில் உள்ள அந்தக் கம்பெனியின் வாசலில் ரஸ்தாவில் நின்றுகொண்டு ஜன்னல் வழியே மாணிக்கம் உள்ளே எட்டிப் பார்ப்பதும், சிவசங்கு தலையை உள்ளே இழுத்துக் கொண்டு ‘பைல்’ கட்டுகளுக்கிடையே முகத்தைப் புதைத்துக் கொள்வதும், காரியாலய நண்பர்கள் கண்டும் காணாதது போலிருந்து ரசித்த ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு. பதினைந்து நிமிஷ விளையாட்டிற்குப் பிறகு சிவசங்கு – என்ன இருந்தாலும் கடன் வாங்கியவர் தானே? தோல்வியை ஒப்புக் கொண்டு , எச்சில் துப்பும் வியாஜமாக வெளியே வருவார். அப்புறம் எல்லாம் வழக்கம் போல்! இவர் கெஞ்ச, அவர் மிரட்ட, இவர் தன் குடும்பக் கஷ்டங் களைக் கூறி அழ, அவர் தன் நெருக்கடியைச் சொல்லிக் கெஞ்ச, மறுபடியும் இவர் மிஞ்ச….

மாணிக்கம் இத்தனைக்குப் பிறகு அப்படி ஒன்றும் பிரமா தமாக வசூல் செய்துவிட முடியாது. சிவசங்கு சம்பளம் என்று ஏதாவது வாங்கினால்தானே? பணத்தைக் கையால் தொடுவதில்லை யென்ற ரகம்தான். சம்பளப் பட்டியலில் கையெழுத்தை மட்டும் ராயசமாகப் போட்டுவிடுவார். “அதில் ஒன்றும் குறைச்சலில்லை. கையெழுத்து பிரமாதமாக இருக்குன்னுதானே இங்கே வேலையே கொடுத்தான்.’ கையெழுத்து சோறா போடுகிறது. தலையெழுத்து இத்தனை மோசமாக இருக்கிறதே ! சம்பளத்தில் முக்கால்பங்கு ஆபீசி லேயே பிடித்து ‘ விடுகிறான் ! மீதி என்ன, பிச்சைக் காசு.

நான்கு வருஷத்துக்கு முன்னால் பெண்ணுக்குக் கல்யாணம் செய்துவிட வேண்டுமென்று சிவசங்குவின் மனைவி தலைகீழாய் நின்றாள். அவரும் ஆபீஸ் அலைச்சலுக்கு நடுவே ஓடி, ஆடி அலைந்து எவனோ ஒருவனை மாப்பிள்ளை என்று பிடித்து வந்து கொட்டு மேளம் கொட்டி கல்யா ணத்தை முடித்து விட்டார். அதற்கென்று பிராவிடண்டு பணத்தில் கடன் வாங்கியாகிவிட்டது. கடன் வாங்கின அந்த இரண்டாயிரம் ரூபாயை வாங்கிக்கொண்டு பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்ட புண்ணியவான், அந்தக் கடன் கால்வாசி அடை படுவதற்குள்ளேயே கண்ணை மூடிவிட்டு, சிவசங்குவின் பெண்ணை சிவசங்கு வீட்டுக்கே அனுப்பி வைத்துவிட்டான். கல்யாணச் செலவினால், பின்னால் பெண்ணை வளர்க்கும் செலவு குறையும் என்று புள்ளிக் கணக்குப் போட்டுப் பார்த்து ஆசைக் கோட்டை கட்டிய சிவசங்கு இந்த நிகழ்ச்சியால் அசந்துவிட வில்லை. இம்மாதிரி சோதனைகள் எல்லாமே தன்னைப் போன்றவர்களுக்காகவே யன்றி பின் வேறு யாருக் காகவாம்? அவர் அப்படித்தான் எண்ணினார்.

பெண்ணைப் பற்றி இரண்டாவது முறை கவலைப்படத் தொடங்கிய போது, சம்பளத்தில் வெட்டு விழ ஆரம்பித்து விட்டது. கடனை அடைக்காவிட்டால், கம்பெனிக்காரன் விட்டு விடுவானா? அதை முதலில் பிடித்துக் கொண்டு மீதியைத் தானே தருகிறான்! இந்த அமளிக்கு நடுவே சிவசங்குவின் மனைவிக்கு உடற்கோளாறு வந்து சேர்ந்தது. பசிக்கும்; சாப்பிட்டால் ஜீரணமாகாது ; சாப்பிட முடியாது.

சாப்பிடாமலிருக்கவும் முடியாது. கூடவே பெண்ணைப் பற்றிய ஏக்கம்! வைத்தியம் வேண்டாமென்று அந்த அம்மாள் கண்டித்துச் சொன்னாள். ஆனால் ஊரறியத் தன் சுக துக்கங்களில் பங்கெடுக்கச் சம்மதித்த அவளை, அந்த நிலையில் வைத்திய உதவியில்லாமல் விட்டால் அந்தப் பாபம் தன்னைச் சும்மா விடாது என்ற பயம் உண்டு சிவசங் குவுக்கு. பணத்தைப் பணமென்று பாராமல் செலவிட்டார். அதுவும் கடன் தான். செலவழித்த பணம் முழுவதையும் ஒரு பண முடிப்பாகக் கட்டி, யமனிடம் லஞ்சமாகக் கொடுத் திருந்தால் ஒருவேளை அவன் அந்த அம்மாளை விட்டுவிட்டுப் போயிருப்பானோ என்னவோ? அந்த மருந்துப் புட்டிகளும் இஞ்செக்ஷன் குப்பிகளும் மட்டும் மசியாமல் சிவசங்குவின் உழைத்த காசையும், உற்சாகத்தையும் விழுங்கி ஏப்பம் விட்டதோடு திருப்தியடையாமல், அவரது மனைவிளக்கின் உயிரையே குடித்துவிட்டுத்தான் ஓய்ந்தன.

அழ வேண்டிய தெம்பும் உணர்ச்சியும் கூட இல்லை சிவசங்குவுக்கு. அவருக்கு ஒரே கவலை! எத்தனை கடன் வாங்கினோம், எப்படி அடைப்போம் என்று. அவருக்கு எத்தனை வருஷ சர்வீஸ் பாக்கி, மாதம் எவ்வளவு பிடிக்க வேண்டும் என்று கணக்கிடத்தான் ஆபீசிலேயே ஐந்நூறு ரூபாய் சம்பளத்தில் ஒருவர் கோட்டும், சூட்டுமாக இருக் கிறாரே, ஆகவே அந்தப் பிரச்னையும் சிவசங்குவுக்கு எழ வில்லை .

நூற்றைம்பது ரூபாய்க்குக் கையெழுத்துப் போட்டு விட்டு ஐம்பது ரூபாயுடனும், நாற்பது ரூபாயுடனும் வீடு திரும்பும் துணிச்சலும், அந்த ரூபாய்க்குள் வாழ்க்கையை ஓட்டி விடுகிறோம் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருந் தது. அதுவும் வேடிக்கைதான்! வீட்டில் உப்பு இல்லை, புளி இல்லை என்று வாயைத் திறந்து சொல்ல மாட்டாள் அவரது உடன் பிறந்த தங்கை – அதுவும் ஒரு நாதியற்றது தான்! அண்ணனிடம் சொல்லி அவரைக் கலங்க அடிப்பா னேன் என்று பச்சாத்தாபத்தில், தானே மளிகைக் கடை யிலும், செக்குமேட்டிலும் கடன் சொல்லி, சாமான் வாங்கி வந்து குடித்தனம் நடத்தினாள். அண்ணனுக்கு நன்மை செய்வதாக எண்ணி அவள் செய்தது அந்த அண்ண னுக்குத் தெரியவே தெரியாது. நாற்பது ரூபாயில் மூன்று, நான்கு ஜீவன்களும் வாழ்கிறோமென்று சிவசங்கு நம்பியது அவரது குற்றமில்லை. அவரது தங்கையின் குற்றமுமல்ல தான்!

ஏதோ ஒரு நாள் பைக்ராப்ட்ஸ் ரோடில், மளிகைக்கடை மாணிக்கம், வழிமறித்துக் கேட்டபோது தான் சிவசங்கு வுக்கு ‘தான் ஒரு கடனாளி, மாணிக்கத்திடமும்’ என்ற விஷயம் தெரிய வந்தது! தெரிந்தவுடன் விடுவிடென்று வீட்டுக்குப் போய் – இரைச்சல் போட்டார் மகளிடமும், தங்கையிடமும். வேறு என்ன செய்து விட முடியும்? கடனையா அடைக்கப் போகிறார்!

“எல்லாம் உங்களுக்காகத்தானே அண்ணா? உங்க ளுக்கு இருக்கிற கவலையிலே இத்தையும் வேறே சொல்லணு மான்னு தான் ….” என்று புதுமையான சமாதானம் ஒன்று சொல்லி பிலாக்கணம் வைத்தாள் தங்கை.

‘பொங்கிப் போட்டுக் கொண்டிருக்கும் புண்ணிய வதியைக் கோபித்துத்தான் என்ன லாபம்? நம்ம பெண்ணுக்கும் உலக அனுபவம் கிடையாது. உலகத்திலே மனுஷின்னு தலைகாட்டற முன்னே தான் கதவை அறைஞ்சு சாத்திட்டாங்களே. உம்… உம்…..’

இரண்டு கையாலும் நெற்றிப் பொட்டை அமுக்கி விட்டுக் கொண்டார் சிவசங்கு. ரொம்ப இதமாக இருந்தது. மாணிக்கம் அன்று தெருவில் கேட்டதோடு நின்று விடவில்லை. கடனைக் கொடுத்துவிட்டு, நடையாக நடப்ப தற்கோ , சால்ஜாப்பு சமாதானங்களைக் கேட்டுக் கொண்டு திரும்பவோ சலித்துக் கொள்ள முடியுமா? பார்த்த இடத்தி லெல்லாம் சிவசங்குவிடம் பாக்கியைக் கேட்டுத் தொந் தரவு’ செய்தார். அவரை சமாதானப்படுத்த – பணத்தைத் தருவது தவிர வேறு வழியேயில்லை. ஆகவே சம்பளம் வாங்கும் தேதியன்று இரவு எட்டு மணிவரை ஆபீசிலேயே உட்கார்ந்திருந்து விட்டு, ஊரடங்கியபின் திருடனைப் போல வீட்டுக்குள் நுழைவார் சிவசங்கு. மாணிக்கத்திடம் முதல் தேதி தப்ப வேறு வழி? இரண்டாம் தேதியோ, பின்னரோ வந்தால் கையில் பணமில்லை என்று – உண்மையை தைரிய மாகச் சொல்லி விடலாமல்லவா?

இந்தச் சூழ்ச்சியைக் கண்டு கொண்டார் மாணிக்கம். ‘சிங்கத்தை குகையிலேயே பிடிக்கவேண்டும்’ என்று சிவசங்குவின் ஆபீசை முற்றுகையிடத் தொடங்கினார். இரண்டு, ஒன்று, அரை கால்- கிடைத்தவரை லாபம்தானே என்று வசூலிப்பார். குருவி மூக்கால் சேர்ப்பது போல மாணிக்கம் தன் கடனை சுயமுயற்சியால் அடைத்துக் கொண்டிருந்தார் ! அப்பேர்ப்பட்ட புண்ணியவான் –

“இந்த மொதத்தேதி அலுவலா ஆம்பூர் வரையிலெ போறேன். ஊரிலே இருக்க மாட்டேன். வர பத்து நாள் மேலே ஆகும். காரியம் முடியறதைப் பொறுத்து … ஆகை யாலே உம்மைத் தொந்தரவு செய்ய மாட்டேன். அடுத்த முதத் தேதி ஸப்ஜாடா தீத்துடணும்” என்று எச்சரிக்கை விடுத்தபோது அது எச்சரிக்கையாகவே தோன்றவில்லை சிவசங்குவுக்கு. ஒரு பெரிய வரம்’ அளிக்கப்பட்டதாகவே தோன்றியது. ஒரு முதல் தேதிக்கு அவருக்கு மன்னிப்பு ! எத்தனை பெரிய விஷயம். அதுவும் அந்த – வரப் போகிற – முதல் தேதி ..

முந்தைய மாதமே ஆபீஸ் கடன் அநேகமாக அடை பட்டு முடிந்து விட்டது. வேதனைக்குப் பின் பெற்றுப் போட்டுவிட்ட தாய் போல கடைசித்தவணை செலுத்திய நிம்மதியில் சிவசங்கு திளைத்திருந்தார். வெளியிலிருந்த கடன்களிலும் ஓரளவு தீர்த்தாகி விட்டது. கடன் அடை யவும் ரிடயராகவும் சரியாகத் தானிருக்கிறது. கையிலே வர்ர பணம் கொஞ்ச நஞ்சம் கடனை அடைக்கப் போதும். ராஜாளி மாதிரி வட்டம் போடுகிற ஆட்களிடம் தப்ப முடியுமா? சில்லறைக் கடன் தான் கொஞ்சம் நின்று போய்விட்டது. பெட்டிக் கடைக்காரனிடம் முப்பத்தைந்து ரூபாய் வரை ஏறிவிட்டது. ஸ்வீட், காரம் சாப்பிடாமல், பூவன்பழம், ரஸ்தாளிப் பழம் உரித்துப் போட்டே இப்படி இதுக்கு மேல் நாம் சாப்பிட்டால், செலவு நம்மையே சாப்பிட்டு, ஏப்பம் விட்டிருக்கும். ‘பங்க்’ நாயரும் நம்ம மொகத்துக்காக விரட்டாமல் இருக்கான். வேறொருத்தனா யிருந்தா , மேத்துண்டை யல்ல பிடுங்குவான். நாமும் மரியாதையைக் காப்பாத்தணும், இந்த மாசம் அவனுக்கு ஒரு பத்து ரூபாத்தாளாவது கண்ணிலே காட்டணும். நாளை மறுநாள் அவன் கடைக்குப் போகவாணாமா?

‘உடன் பிறந்த பிறப்பு எனக்கென்று உழைச்சு ஓடாய்த் தேயுது. அதற்கு ஒரு புடவையாவது வாங்கவேண்டும். அவளுடைய மகள் – அந்தக் குஞ்சுக்கு, பட்டுப் பாவாடை யில்லாவிட்டாலும், கொஞ்சம் சுமாரான துணியிலாவது தைக்கணும். நமக்கும் …. கோட்டில் இருக்கும் கிழிசலில், ஆள் என்ன, ஆனையே புகுந்து புறப்படலாம் போல இருக்கு. உடம்பை மூட பனியன், பனியன் கந்தலை மறைக்க சட்டை , அந்தச் சட்டையோட பவிசு , தெரியாம மூட கோட்டு போட்டால், அது பெரிசா பல்லை இளிக்கிறது? ஒரு நல்ல கோட்டு , அட இனிமே கோட் எதுக்கு? அடெண்டர் கிருஷ்ணன் போடறானே அந்தத் துணியிலே ஜோரா ஒரு சட்டை தைச்சு …. அது இல்லாட்டியும், நல்ல பனியனாவது இரண்டோ , ஒண்ணோ வாங்கித்தான் ஆகணும்.

‘நமக்கும் நேரங்கெட்ட நேரத்திலே இருமலும் இளைப்பும். அதுக்கு ஏதாவது மருந்து மாயம் தின்னாத் தான் தேவலை. திடீர்னு நாம மண்டையைப் போட்டுத் தொலைச்சா. வீட்டிலிருக்கிற படைங்க பரதேசிக் கோலம் போடவேண்டி வந்துடும். முடிஞ்ச வரை உடம்பைக் காப் பாத்தி. உடம்பைத் தேச்சுச் சம்பாதிக்க வேண்டியது தான். சுவரை வச்சுத்தானே சித்திரம் எழுதணும். நம்ம ஆயுர் வேத டாக்டர் சர்மாகிட்டயாவது, கோட்டைத் தெரு பண்டிதர் கிட்டயாவது லேகியமோ ஏதோ வாங்கி முழுங்க வேண்டியதுதான். இத்தினி நாள் சம்பாதிச்சுக் கொட் டிட்டு, நமக்குன்னு ஒரு பத்து ரூபா செலவழிக்க என்ன? உழைச்சு உழைச்சு ஊரான் கிட்ட கொடுக்கத்தானே சரியா யிருந்தது. இந்த முதல் தேதி நமக்குன்னு கட்டாயமா ஒரு பத்து ரூபா எடுத்துக்க வேண்டியது தான். எடுத்துக் கத்தான் போறேன். யாரு நம்மைக் கேக்கறது?

‘கேட்க உரிமையிருந்தவளே என்னை வாயைத் திறந்து கேட்டதில்லை! அட ! அவள் போய் மூன்று வருஷமாயி டுத்தா? நாளைத்தானே பெளர்ணமி? இன்னும் இரண்டு நாளிலே திதிகூட வந்திடுமே! இந்தத் தடவை அவ மனசு குளிர நல்லாவே ஏதாவது செய்யணும். அவ மனசு குளிர்ந் தாத்தான் இங்கே இருக்கிறவங்க நல்லா வாழலாம். குடும்ப நன்மைக்காகவாவது அந்தப் பத்து ரூபா செலவு செய்து தான் ஆகணும்.

‘அப்படி இப்படி கணக்குப் போட்டுப் பார்த்தா, கையில் இருக்கிற ரூபாய் அத்தனைக்கு மல்லவா செலவு வருகிறது ! அட , அப்படி வந்தாத்தான் என்ன? இத்தனை நாள் சம்பாதிச்சுக் கடன்காரன் மடியிலே கொட்டியாச்சு. இந்தத் தடவை வாயிதா தள்ளிப்போட்டானே புண்ணிய வான். இந்த ரூபாயை நமக்காகவும், நம்ம குடும்பத்துக் காகவும்தான் செலவழிச்சிடுவமே ! செலவும், செலவழிக்கிற ஆசையும் பிரமாதமாய்த்தானிருக்கு.

யோசித்துக் கொண்டே வந்த சிவசங்கு, சைனா பஜாரில் அந்தப் பெட்டிக் கடை வாசலில் நின்று வெறித்துப் பார்த் தார். கோட் பையைத் தடவிப் பார்த்தார். சம்பளத்தில் முக்கால் பகுதி – நியாயமான பிடித்தங்கள் போக மீதி – அப் படியே அங்கே இருந்தது. பர்சைக் கையிலெடுத்தார். காசை எடுத்து அலட்சியமாக வீசி ஒரு சிகரெட் வாங்கினார். பரம்பரையாக சிகரெட் பிடிக்கும் பாணியில், வலக்கையால் சிகரெட்டைப் பிடித்து, இடக்கை உள்ளங்கையில் வைத்து நாசூக்காகத் தட்டினார். சிறிது நேரம் கையில் வைத்து உருட்டினார். பின்னர் அதைப் பற்ற வைத்துக் கொண்டு, ஒய்யாரமாக சைனாபஜார் கும்பலில் நெளிந்து, புகுந்து ஹைகோர்ட் கடற்கரையை நோக்கி நடந்தார்.

வெண் மணலில் உட்கார்ந்து கொண்டதும், பழையபடி அவரது பிரச்னைகள் பெரும் பூதங்களாக அவர் மனக் கண் முன் தாண்டவமாடத் தொடங்கின.

‘பணமில்லாத போதுதான் இந்த எழவு பிரச்னைகள் தொல்லை கொடுத்தன. பணம் கையில் வந்தும், எப்படிச் செலவு செய்வதென்று மறுபடியும் குழப்பமா? நல்ல வேடிக்கையடா இது!’

எதிரே பால்கோவா விற்றுக் கொண்டு ஒருவன் வந்து கொண்டிருந்தான். பழையபடி சிவசங்கு சிந்தனையில் லயித்தார்.

‘வீட்டில் தகப்பனில்லாத அந்தக் குழந்தை ஒன்று மூன்று நான்கு வருஷமாய் இருக்கிறதே ! ஒரு நாளாவது அதன் கையிலே இந்தா என்று ஒரு இனிப்புப் பண்டம் வாங்கித் தந்திருக்கிறோமா? ஒவ்வொரு வேளைச் சாப்பாடும் தான் விருந்து பட்ட பாடு படுகிறது. அதுவுமில்லாமல் வீட்டிலே இனிக்கப் பேசி எத்தனையோ நாளாயிட்டுதே! திங்கறது எங்கே? பாவம், குழந்தை. நம்ம கஷ்டத்துக்காக அதுக்கு ஒன்றும் செய்யாமலிருந்தோமே. சே ! இன்றைக்கு இரண்டு பொட்டலமாவது வாங்கி விடுவது. சம்பளப் பணத்திலே நம்ம செலவில் முதற் செலவுதான் இப்படி ஒரு நல்ல செலவாயிருக்கட்டுமே!’

செலவுப் பிரச்னையைச் சமாளிக்க சுபமான ஆரம்பம் செய்யும் திருப்தியுடன், மனநிறைவுடன் கோட் பைக்குள் கைவிட்டார் சிவசங்கு. கையை அவர் வெளியே எடுக்கவேயில்லை .

கையை வெளியே எடுத்தால், பர்ஸ் பையில் – அது இருந்த இடத்தில் – இல்லை என்ற பயங்கரத்தைக் கண்ணால் பார்க்க வேண்டி யிருக்குமே ! சமுத்திரத்தில் நான் சிந்திய கண்ணீர் எங்கே என்று தேட முடியுமா? இடிந்துபோய் நின்ற சிவசங்குவுக்கு என்ன செய்வது, என்ன கேட்பது என்று எதுவும் புரியவேயில்லை. மயக்கம் வந்த நிலையில் மணலில் படுத்து விட்டார்!

இனி அவருக்குக் கவலையில்லை. பணத்தை எப்படிச் செலவு செய்வது என்று மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. அந்த அவசிய மில்லாமல் சைனா பஜாரிலேயே ஒரு தேர்ந்த கரம் சிவசங்குவின் பிரச்னைகளை ஒரு தினுசாகத் தீர்த்து விட்டது!

– ஸ்ரீரஞ்சனி

– சிறுகதைக் கோவை (பதின்மூன்று சிறந்த எழுத்தாளர்களின் உயர்ந்த ஓவியங்கள்), முதற்பதிப்பு: மே 1961, எஸ்.ஆர்.சுப்பிரமணிய பிள்ளை பதிப்பகம், திருநெல்வேலி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *