கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுபமங்களா
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 16, 2021
பார்வையிட்டோர்: 4,285 
 

“பொடி ஏறதுக்குள்ள வெட்டிக் கடாசிட்டுப் போவம்னு இல்ல. இப்பத் தான் சிலுத்துகிட்டு வர்ற சேவல்ங்க கிட்ட சிணுங்கிக்கிட்டு நிக்கிற பொட்டைங்க மாதிரி அசையுறாளுங்க.”

“ஆமா நீ ஒண்ணு … களகட்டப் போட்டா வாங்கி வாங்கிக் கொடுத் தாத்தான பூமி. அதான் பாறாங்கல்லு மாதிரி தூக்கித் தூக்கிப் போடுதே.”

“மழையப் பாத்து நாளாச்சின் னாலே இந்த மசுருதான். கிழவங் கிட்டப் படுக்குற குமரு கணக்கா பூமி முரண்டு புடிக்கறது.

“ச்சே… துெக்குத்தான் இந்த அத்த வேலைக்குப் போற இடத்துக்கு வயசுப் பொண்ணுங்கள இட்டுட்டு வாறக் கூடாதுங்கறது”.

“ஆமா… எல்லாம் வாயில விரல வச்சா கடிக்கத் தெரியாத பப்பாளுங்க. இதுங்கக் கத எனக்குத் தெரியா தாக்கும். ஆளாவறதுக்கு முன்னாடி ஆறு மாப்பிள்ளைங்க. ஆளான துக்குப் பின்னால நூறு மாப்பிள்ளைங் கள்னு அலையுற நாடுமாறிங்க…”

பேச்சு சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. இனி களைக்கொட்டு சப்தங்கள் வேகப்படும். பேச்சுக்கு வேலை. வேலைக்குப் பேச்சு. இது இல்லாமல் அது இல்லை. அது இல்லாமல் இது இல்லை.

அதுவும் இந்தப் பூவா கிழவி இருந்து விட்டால் மேலும் காயவைத்துத் தொம்பையில் கொட்டும் விதை மணிலா கணக்காக கலகலவென்று பேச்சும் இருக்கும். பேச்சுக்கு மிஞ்சிய வேலையும் இருக்கும்.

மெனை மெனையாய் வெட்டும் போது கூட அவள் மெனை பிந்திப் பார்த்தவர்கள் கிடையாது. அவ்வளவு கண்ணுங் கருத்துமாய்ப் பாடுபடுவாள். அது தன் வேலையாக இருந்தாலும் சரி…. பிறத்தியார் வேலையாக இருந்தாலும் சரி.

எந்த வேலைக்கு எவர் ஆள் கூப் பிடப் போனாலும் முதலில் பூவா கிழவியின் வாசலில் போய்தான் கால்கள் நிற்கும். அப்படியொரு தொழில் நேர்த்தி அவளுக்கு. களைவெட்ட… சுறும்பு அறுக்க… களை புடுங்க என்று மட்டும்தான் இல்லை… இரண்டு மூன்று அத்தியாவசியமான வியாதிகளுக்கும் அவளிடத்தில் போய் விட்டால் போதும். தோட்டத்துப் பக்கம் போய் திரும்பி வரும்போது கையில் வைத்து அறக்கிக் கொழ கொழத்த அடையாளம் தெரியாதப் பச்சிலை வரும். தயிரில் பச்சிலைச்சாறு பிழியப் பட்டதும் ஒரு மடக்கு விழுங்கி விட்டால் போதும். வியாதி சுத்தமாகி விட்டதாக அர்த்தம். டாக்டர்களாலேயே கை விரிக்கப்பட்ட… நாள் கடந்த கர்ப்பங்கள்… ஆண் பெண் என்கிற வித்தியாசம் தெரிகிற அள விற்கு முற்றிவிட்ட குழந்தைகளைக் கூட வெடிக்காத வெள்ளரிப் பழங் களாய் வெளியேற்றி விடுகிற சாமர்த் தியமும் இந்த ஊரில் பூவா கிழவிக்கு மட்டுமே கைவந்த கலை.

“நேத்திக்கு எப்பிடி வந்து எப்பிடி வெட்டிச்சிகள. இன்னிக்கு எம்மாஞ் சுழலு சுழல வேண்டியிருக்கு பாரு.”

“மெனப் புடிக்கும் போதே அடைச்சிப்புடுச்சி, வெட்டிட்டு வந் தீங்கன்னா அலுப்பு தெரியாது. முன்ன பின்ன வந்தா இப்பிடித்தான் ஆவும். போடுங்க…. போடுங்க.”

பூவா கிழவி நிமிர்ந்து பார்த்தாள். எல்லாத் திசைகளிலும் தீப்பிடித்து பூமி திகுதிகுவென எரிந்து கொண் டிருந்தது. மந்தை மந்தையாய் வெறி. பிடித்த நாய்கள் மூச்சிரைக்க ஓடுவ தாய்த் தூரங்களில் கானல்கள்.

‘நடுமணல்’ பக்கம் சுழல் காற்று கூளங்குப்பைகளை மனரிச் சுழற்றிக் கொண்டேபோய் வீரனார் கோயிலுக்கருகில் உயரமாய்க் கோபுரங்கட்டி இடித்துப் போட்டது.

டவுனுக்குப் போய் விட்டுத் திரும்பும் இரண்டு மூன்று தொமூர் சனங்கள் தலையிலும் இடுப்பிலும் மூட்டை முடிச்சுகளோடு பொடிக்குப் பயந்து குறுக்குப் பாதையில் ஓடிக் கொண்டிருந்தார்கள்.

“தேவிடியாளுக்குப் பொறந்த சூரியன் இப்படி மனுஷாளப் போட்டு வறுத்தெடுக்குறான” என்று முனகிக் கொண்டே முந்தானையை எடுத்து கழுத்து கை எல்லாம் துடைத்து விட்டு தலையில் முக்காடாகப் போட்டுக் கொண்டு குனிந்தாள்.

எள்ளுச் செடிகள் எண்ணெய் நெய்ப்போடு தளதளவென சிரித்துக் கொண்டிருந்தன. பூவா கிழவியின் தளர்ந்த மார்புகள் தாகப்பட்ட செடிகளுக்குப் பால் கொடுக்க ஆசைப்பட்டலை போல் அவள் களையெடுக்க எடுக்க.. தளிர் நுனிகளை உரசின. சில பெண்கள் வியர்வைக் கசகசப்பில் தொடைகளில் சேலை சிக்குகிறதென்று முட்டிக்கு மேல் வரை வழித்து விட்டுக் கொண்டார்கள். ஜாக்கெட் போட்ட குமருக்களுக்குப் பாவம்…முதுகு நனைந்து…நெஞ்சு நனைந்து…

கோவிந்தம்மா களை வெட்டுகிற வேகத்திலேயே மடி கனக்க கீரையும் பறித்துக் கொண்டிருந்தார்கள்.

எல்லோருடைய தலையிதும் முந்தானைகள் கூரை போட்டிருந்தன.

இவர்களை மேய்க்க வந்த கொல்லைக்காரரின் மருமகள் வெய்யிலுக்குப் பயந்து போய் தூரத்துக் கருவ மர நிழலில் அமர்ந்து கொண்டு அவ்வப்போது சில அதட்டல்களை அனுப்பிக் கொண்டிருந்தாள்.

வரப்பு நெடுக உயர உயரமாய் வளர்ந்திருந்த காசரைச் செடியில் சின்னச் சின்ன ரேடியோ ஸ்பீக்கர்கள் வைத்துக் கட்டிய மாதிரி பூக்கள் விரிந்திருந்தன. இவர்கள் பேச்சை ரசிக்கிற மாதிரி கருங்குருவி ஒன்று காசரைச் செடியொன்றில் வாலை ஆட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தது. களை கொட்டு கொத்தக் கொத்த கோடை களும் சும்மம் புல்லுகளும் தெறித்துத் தெறித்து விழுந்தன. சில களைகளை கையாலேயே பிடுங்கி எறிந்தாள் கிழவி.

“ச்சே எறும்புடி.. விரியம் புடுங்க மாதிரி புடுங்குதுங்க.”

“எப்பவும் களை வெட்டும் போது மட்டும் எறும்பு முட்டப் பாத்துட்டா களகொட்ட கொஞ்சம் தள்ளிப் போட்டுட்டுதான் போவனும். எறும்பு முட்டுல பட்டுச்சி….. அவ்வளவு தான் பொத பொதன்னு கிளம்பிடுங்க… அப்புறம் அதுல கடிச்சிது இதுல கடிச்சிதுன்னு புலம்பிப் பிரயோசனமில்லே.”

“இன்னும் ரெண்டு பொம்ப ளைங்க சேந்து வந்திருந்தாளுங்கன்னா இந்நேரம் மென முடிஞ்சி கரையேறி யிருக்கலாம். எங்க வர்றாளுங்க எள்ளுக்குக் களவெட்ட வந்தா தொறந்த வெளி. கரும்புக்குக் கள வெட்டப் போனா கருப்பங்கொல்லைக்குள்ளப் போயி மல்லாந்துக்கலாம். இங்க அது முடியுமா?”

“ச்சே இந்தக் கிழவிக்கு கூச்ச நாச்சமே கிடையாது.”

“ஆமா. உள்ளதச் சொல்லப் போனா நொள்ளக் கண்ணுக்கு நோப்பாளமாத்தான் இருக்கும்.”

தூரத்தில் சப்தம் கேட்டு அனை வரின் பார்வையும் திரும்பியது. சின்னப் பையன்கள் ஒரு நாய்க்குட்டியை விரட்டிக் கொண்டு ஓடினார்கள். அது ஒரு துணி முடிச்சைத் தூக்கிக் கொண்டு ஓடியது. அவர்கள் விடுவ தாக இல்லை . அதுவும் அகப்படுவ தாக இல்லை. நாய் ஆற்றுக்குள் இறங்க அவர்களும் இறங்கி மறைந்தார்கள்.

“அமாவாசையில பொறந்ததுங்க. நாய முடுக்கிட்டு ஒடுதுங்க. திரும்பி ரெண்டு புடுங்கு புடுங்கிச்சின்னா தெரியும்.”

ஆற்றுப் பள்ளத்திலிருந்து ஆண் களும் பெண்களுமாய்ப் பத்துப் பதினைந்து பேர் கரையேறி வந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் யார்….. எந்த ஊர் என்பதறிய எல்லோருக்கும் ஆவலாக இருந்தது. அவர்களே வரப்போரமாக வந்து கேட்டார்கள்…

“கீணனூர் போக வழி எதுங்க?”

“எங்கேருந்து வர்றீங்க?”

“பவழங்குடியிலேருந்து.”

“யாரு ஊட்டுக்கு?”

“பழைய மணியக்காரரு இருக்காரே… அவுரு அண்ணன் வூட்டுக்கு.

“என்ன விஷயம்?”

“பொண்ணு பார்க்க.”

“ஓ..”

“பொண்ணு எப்படிங்க?”

“பொண்ணு தங்கம்…. உங்க ஊருக்கு அவ மருமவளா வர்றதுக்கு நீங்க குடுத்து வச்சிருக்கணும். தா அந்தப் பெரிய வரப்பு மேலேயே போயி… அந்தக் காளவா தெரியும் பாருங்க… அதுக்குத் தெக்கால போனீங்கன்னா வாயக்காங்கர.. அது மேலேயே போனா ஊரு வந்துடும்” என்று கைநீட்டி வழி காட்டினாள் பூவா கிழவி.

அவர்கள் நடக்க ஆரம்பித்தார்கள்.

“யாரு தம்ம மருங்கூர மவளையா?”

“ம்..”

“அதப் போயா பூவா?!”

நாயை விரட்டிக் கொண்டு போன சிறுசுகள் மூச்சிரைக்க திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அந்தப் பேச்சை மாற்ற பையன்களைப் பிடித்தாள் பூவா.

“எதுக்குடா நாய விரட்டிகிட்டு ஓடுனீங்க?”

“நாயவா… அந்த நாயி கலுங்குப் பள்ளத்திலேருந்து துணிமுட்ட ஒண்ண தூக்கிட்டு ஓடிச்சி. விரட்டுனோம் ஆத்துக்குள்ளப் போயி ஓடமுடியாய போட்டுட்டு ஓடிடுசி. போயி பிரிச்சிப் பாத்தா ஆம்பளப் புள்ள ஆயா..மணலை சீச்சிப் பொதைச்சுட்டு ஓடியாந்துட்டோம்.”

“ஆம்பளப் புள்ளையா? கலுங்குப் பள்ளத்திலேருந்தா?”

“சரி சரி ஓடுங்க ….”

“அவர்கள் ஓடினார்கள். கானல் அலைகளில் ஒடுக்கு விழுந்து அடினார்கள்.”

“பூவா.”

“ம்..”

“யாருது அது?”

“எது?”

“நாய்த் தூக்கிட்டு ஓடுனுத அந்தப் புள்ள.”

“எவளுதோ… எனக்கென்ன தெரியும்.”

“ம்… ஆளு தளுக்குத்தான். உனக்குத் தெரியாம இந்த ஊருல ஒரு ரகசியமா?”

“அடியே….. அப்புறம் வாயில நல்லா வருது. பேசாம மெனையப் பாத்து களைய எடுப்பியா.”

பூவாவின் களைக்கொட்டு களை களை மட்டுமல்ல… நெரிசலான இடங்களிலிருந்த எள்ளுச்செடிகளையும் தேடியது.

– பெப்ரவரி 1991

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *