கல்வீட்டுக்காரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 12, 2024
பார்வையிட்டோர்: 333 
 
 

தன்னிலும் பார்க்க தன் மனைவி பல மடங்கு சாப்பிடுவார் என்பதை கண்டுபிடிக்க அவருக்கு 20 வருடங்கள் எடுத்தன. அவர் ஒன்றும் சொந்த மனைவி சாப்பிடுவதற்கு எதிரியல்ல. நல்ல மனுசர். எதற்காக அவரிடமிருந்து மனைவி மறைத்தார்? பசிக்கு சாப்பிடுவதும் ஒரு குற்றமா? ’நான் உம்முடைய புருசன்தானே. இதிலே என்ன ஒளிவுமறைவு’ என்றார். ஒரு வருடமா? இரண்டு வருடமா? 20 வருடங்களாக அவரிடமிருந்து மரகதசவுந்தரி ஒளித்திருக்கிறார். ஒரு நாளைக்கு மனைவியிடம் காரணத்தை கேட்கவேண்டும் என்று நினைத்தார். அந்த நாள் வரவே இல்லை. அவர் சிலநாட்களிலேயே இறந்துபோனார்.

மரகதசவுந்தரி அன்று சமையல்காரி சமைத்த உணவை இரண்டு பிள்ளைகளுக்கும் கொடுத்தார். கணவனுக்கும் மேசையில் பரிமாறினார். பிறகு வழக்கம்போல தனக்கு பசிக்கவில்லை, பின்னர் சாப்பிடுவதாகச் சொன்னார். கணவரும் சரி என்று சொல்லிவிட்டு புறப்பட்டார். மரகதசவுந்தரி வாழையிலையிலோ பிளேட்டிலோ உண்பதில்லை. ஒரு குண்டானில் சோறு, கூட்டு, குழம்பு, பாரைக் கருவாட்டுப் பொரியல் என்று நிறைத்து, மணிக்கட்டுவரைக்கும் கை சோற்றுக்குள் புதைந்துபோக குழைத்தார். அந்த நேரம் பார்த்து ஏதோ காரியமாக சமையலறைக்குள் கணவர் நுழைந்தார். மரகதசவுந்தரி ஒரு காலை மடித்து, ஒரு காலை நீட்டி தரையிலே குண்டானுக்கு முன் உருட்டிய சாதத்துடன் அமர்ந்திருந்தார். கணவர் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

அரசரத்தினம் பரம்பரை பணக்காரர். அவருக்கு வன்னியில் நெல் வயல்கள், பளையில் தென்னந் தோப்புகள், நீர்வேலியில் வாழைத் தோட்டங்கள் என பலதும் இருந்தன. வேலைக்காரர்களுக்கும், எடுபிடிகளுக்கும் குறைவில்லை. பணக்காரர்கள் நல்லவர்களாக இருப்பதில்லை. இவர் நல்லவர். பல வருடங்களுக்கு முன்னர் மரகதசவுந்தரியை ஒருநாள் கோயில் கூட்டத்திலே பார்த்தார். கும்பலிலே அந்தப் பெண் உட்கார்ந்திருந்தபோது சாதாரணமாகத்தான் தென்பட்டாள். அவள் கண்கள் மயிலிறகில் இருக்கும் கண்கள் போல அகலமாக இருந்தன. எழுந்து நடக்கத் தொடங்கியவுடன் அவளுடைய சின்ன இடை அப்படியும் இப்படியுமாக ஆடியது. அது விநோதமாக இருந்தது. அவளைத்தான் மணமுடிப்பேன் என்று வீட்டில் சொல்லிவிட்டார். மரகதசவுந்தரி வசதியில்லாத குடும்பத்தில் இருந்து வந்தவளாதலால் ஒருவித தடங்கலும் இன்றி திருமணம் சிறப்பாக நடந்தது.

திருமண நாள் இரவு தம்பதிகளை உட்காரவைத்து உணவு பரிமாறினார்கள். மரகதசவுந்தரிக்கு காதுகளில் பசி ஆணை ஒலித்தபடியே இருக்கும். அம்மா அவளை அடிக்கடி திட்டுவார். ’உனக்கு இரண்டு சகோதரங்கள். நீயே எல்லாத்தையும் விழுங்கிவிடுகிறாய். குண்டோதரன் வயிற்றில் புகுந்த வடவைத்தீபோல உன் வயிற்றிலும் பசி அணைக்கமுடியாமல் எரிகிறது. மணமுடித்தால் உன் கணவன் உன்னை நாலு நாளில் துரத்திவிடுவான்.’ தாயாரின் எச்சரிக்கையை மரகதசவுந்தரி நினைத்துக் கொண்டாள். தம்பதிகளுக்கு இலை படைத்து ஒரே அளவு பதார்த்தங்களை வைத்தார்கள். இருவரும் சாப்பிடுவதை உன்னிப்பாகக் கவனித்தபடியே சுற்றத்தார் சுற்றி நின்றனர். கணவர் இலையில் படைத்த அத்தனை உணவையும் தின்று தீர்த்தார். மரகதசவுந்தரி நாலு மடங்கு சாப்பிடக் கூடியவள். ஆனாலும் பசியை அடக்கிக்கொண்டு தன் உயிரை விடுவதுபோல பாதி உணவை இலையில் விட்டாள். சுற்றத்தாருக்கு மிக்க மகிழ்ச்சி. அம்மா அடிக்கடி சொல்லும் வடவைத்தீயை அவள் வென்றுவிட்டாள்.

முதல் இரவுக்கு அவர்களைஅறையின் உள்ளே தள்ளிப் பூட்டினார்கள். பிரமிப்பூட்டும் பெரிய வீடு. வீட்டைச் சுற்றியுள்ள தோட்டத்தின் ஒரு கரையில் நின்று பார்த்தால் எதிர் கரையில் மனிதர்கள் சின்னனாகத் தெரிவார்களாம். என்ன அலங்காரமான அறை. ஆனால் பசி அவளை ஒன்றையும் அனுபவிக்க விடவில்லை. கணவர் அவள் இடுப்பை சுற்றி வளைத்தபோது காதல் மூளவில்லை, அங்கே பசிக்கனல்தான் மூண்டது. இடது கையால் கன்னத்தை அசையாமல் பிடித்து, இடம் தேர்வு செய்து முத்தம் கொடுத்தார் கணவர். ஒரு மாதிரி முதல் இரவு கழிந்து கணவர் தூங்கியதும் தட்டிலே மீந்து கிடந்த பலகாரங்களை அள்ளி வாயில் திணித்து பசியை ஓர் அளவுக்கு தணித்துக்கொண்டாள்.

மரகதசவுந்தரிக்கு இரண்டு மகள்கள். ஒருத்திக்கு 16 வயது, பெயர் இளவரசி; குந்தவைக்கு 14 வயது. மகள்களைக் கண்டிப்புடன் வளர்த்தார். கணவருடைய மரணப்படுக்கை ஆணைப்படி இளவரசியை அமெரிக்க மிஷன் உடுவில் மகளிர் கல்லூரியில் படிப்பித்து அங்கேயே ஓர் ஆசிரியை ஆக்கவேண்டும் என்பது அவர் லட்சியம். தெற்காசியாவிலேயே முதல் இடத்தில் இருக்கும் வதிவிட வசதி கொண்ட கல்லூரியில் படிப்பதென்பது எத்தனை மதிப்பான காரியம்.

வழுவழுப்பான இரண்டு பெரும் தூண்களுக்கு மத்தியில் அமைந்த விறாந்தையில் தேக்கு மரத்தில் செய்து மெத்தை போட்ட ஒரு சாய்வு நாற்காலி இருந்தது. அதிலே வீற்றிருந்து மரகதசவுந்தரி வீட்டு தோட்டத்தை ரசிப்பார். கேட்டின் இரு பக்கமும் போகன்வில்லா பூத்துக் குலுங்கும். மாமரங்களும், பலா மரங்களும், வேப்ப மரங்களும் இலுப்பை மரமும் நீண்டு வளர்ந்திருக்கும். இலுப்பை பூ பட்டுப்போல விழுந்து தரையை மறைக்கும். இலுப்பை பூ தாகத்துக்கும் சாப்பிடலாம்; பசிக்கும் சாப்பிடலாம். சிறுவயதில் தான் பசிதாங்காமல் இலுப்பைப் பழங்களாகத் தின்றது நினைவுக்கு வந்தது. 100 இலுப்பை கொட்டைகளை சேகரித்து தந்தால் அம்மா ஒருசதம் கொடுப்பார். அதற்கு கடையில் சீனிபிஸ்கட் வாங்கி சாப்பிட்டது எத்தனை மகிழ்ச்சியான நினைவு. சிறிது காலம் வீட்டில் அம்மா காய்ச்சிய இலுப்பெண்ணெய் மணமாகவே இருக்கும்.

எல்லையற்ற அதிகாரம் போல் மகிழ்வளிக்கக்கூடியது இந்த உலகத்தில் ஒன்றுமே இல்லை. பாவாடை நாடாவை தளர்த்திவிட்டு, தரையில் உட்கார்ந்து, குண்டான் சட்டிக்குள் கையை நுழைத்து, சோற்றுடன் பாரைக் கருவாட்டை சுட்டோ, பொரித்தோ, பொடிப்பொடியாக்கியோ குழைத்து குழைத்து உண்பதன் இன்பத்துக்கு ஈடு இந்த உலகில் வேறு உள்ளதா என யோசிப்பார். தன் தாயாரை நினைத்து மெலிதாகச் சிரிப்பார்.

ஒருநாள் காலை பத்து மணியிருக்கும். தோட்டக்காரர்கள் தங்கள் தங்கள் வேலைகளில் மூழ்கியிருந்தார்கள். கணக்கப்பிள்ளை குனிந்த தலை நிமிராமல் எழுதிக்கொண்டிருந்தார். மரகதசவுந்தரி அசைந்து வெளியே வந்தார். இருபது வருடங்களுக்கு முன்னர் இருந்ததுபோலவே கம்பீரமாகக் காணப்பட்டார். இரண்டு பிள்ளைகளின் தாய் என்றாலும், குண்டான் குண்டானாக சாப்பிட்டாலும், அவருடைய இடையின் அளவு ஓர் இஞ்சுகூட அதிகரிக்கவில்லை. கறுப்பு கரை வைத்த வெண்பச்சை பருத்திப் புடவையில் மிகையில்லாத அலங்காரம். 38 வயது என்று சொல்லவே முடியாது. இடுப்பிலே கையை வைத்து அடியெடுத்தவர் ஒரு காட்சியை கண்டு அப்படியே நின்றார். 100, 200 தேங்காய்கள் குவிந்திருக்க அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து அலவாங்கில் குத்தி உரித்தான் வேலைக்காரன். ஒரே கதியில் வேலை நடந்தபோது ஓர் இசை கூடி வருவதுபோல அந்த நேரம் ரம்மியமானது. ஓர் அணில் குடுகுடுவென்று ஓடி வந்து நின்று இரண்டு கால்களையும் தூக்கி இப்படியும் அப்படியும் பார்த்தது. வேலைக்காரன் எதிர்பாராத ஒரு காரியம் செய்தான். கையிலே வைத்திருந்த தேங்காயை தலைக்கு மேல் தூக்கி அப்படியே அணில்மேல் போட்டான். அது சத்தம் காட்டாமல் இறந்துபோனது.

மரகதசவுந்தரி அதிர்ந்துபோய்விட்டார். கோபத்தில் முகம் சிவக்க கோழிபோலக் கத்தினார். ‘அந்த அணில் உனக்கு என்ன பாவம் செய்தது. உன்னை தின்ன வந்ததா? பயமுறுத்தியதா? அல்லது உன் வேலைக்கு இடைஞ்சலாக இருந்ததா? அது தன் பாட்டுக்கு இந்த உலகத்தின் அழகை கொஞ்சம் கூட்டியது. இது குற்றமா? படு பாவி, உனக்கு இங்கே வேலை இல்லை, போ’ என்று துரத்திவிட்டார். அவர் வாழ்க்கையையே மாற்றிப்போட்ட தருணம் அது. அவர் கணவர் சாந்தமானவர். ஒருவரையும் வேலையை விட்டு நீக்கியதில்லை. மரகதசவுந்தரியை கல்வீட்டுக்காரி என்று சனங்கள் அழைக்கத் தொடங்கியது அதன் பின்னர்தான். கண்டிப்பானவர் என்ற செய்தி பரவிவிட்டது. நெல் வயல்காரர்களும், தென்னந் தோப்புக்காரர்களும், வாழைத் தோட்டக்காரர்களும் கேள்வி கேட்காமலே பதில்களுடன் காத்திருந்தனர். கணக்கப்பிள்ளையும் ஓர் அதிசயத்தை கண்டார். சென்ற இரண்டு வருடங்கள் ஈட்டிய லாபத்திலும் பார்க்க கடந்த ஆறுமாதங்களில் அதிகமான லாபம் கிடைத்தது.

கதையின் நடுவுக்கு வந்த பின்னரும் முக்கியமான ஒருத்தரை இன்னும் அறிமுகம் செய்யவில்லை. கல்வீட்டில் இருந்து அரைமைல் தூரத்தில் ஒரு பலசரக்கு கடை இருந்தது. அந்தக் கிராம மக்களும் அதைச் சுற்றியுள்ள கிராமத்துச் சனமும் சாமான்கள் வாங்க வருவார்கள். எந்த நேரமும் சனக் கூட்டத்துக்கு குறைவில்லை. முதலாளி சாமான்களை விற்கும்போது வாடிக்கையாளர்களின் பெயர்களைச் சொல்லி காசை வாங்குவார். பெயரைச் சொன்னால் அவருக்கு முகம் தெரியும். இது பெரிய கலை. அவருடைய விலைகள் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் சனங்களிடையே அவருக்கு மதிப்பு இருந்தது.

இவருக்கு ஒரு மகன் இருந்தான். பெயர் செல்வகுமரன். வயது 19, 20 என்று வைத்துக் கொள்வோம். எஸ்.எஸ்.சி சோதனை இரண்டு தடவை பெயில் என்பதால் தகப்பனுடன் கடையை பார்த்தான். ’நீ சும்மா வந்து கடையில் என்னோடு நின்றால் போதும். வியாபாரம் என்பது என்ன? வாடிக்கையாளர்களை தெரிந்து வைத்திருப்பதுதானே’ என்பார். நீளக் கால்சட்டையும், பச்சை கலரில் கோடுபோட்ட சட்டையும் அணிந்து ஸ்டைலாக காட்சியளிப்பான். சுருள் சுருளான கேசம். வைலர் கைக்கடிகாரம் தெரிவதுபோல கையை சுருட்டியிருப்பான். முடியை கைகளால் அடிக்கடி கலைப்பான். சும்மா இருக்கும்போதே அவனுக்கு சிரிப்பதுபோல முகம். அவன் சிரித்தால் எதிரில் நிற்பவர் மயங்கிவிடுவார். அப்படி ஒரு வசீகரம்.

தகப்பன் பார்த்தார் செல்வகுமரன் நிற்கும் நேரங்களில் எல்லாம் வியாபாரம் கூடியது. அவன் ஆட்கள் பெயர்களை மனனம் செய்வதில்லை. அவன் செய்வதெல்லாம் ஒரு சிரிப்புத்தான், அதில் ஏதோ மாயசக்தி இருந்தது. கல்வீட்டுக்காரர்கள் மட்டும் பலசரக்கு வாங்குவதற்கு வருவது கிடையாது. வாரத்துக்கு என்ன தேவை என்று கல்வீட்டிலிருந்து டெலிபோனில் செய்தி வரும். கடைப்பையன் ஒருவன் சாமான்களை கொண்டுபோய் இறக்கி வைப்பான். மாதமுடிவில் கணக்கப்பிள்ளை பணம் அனுப்புவார்.

அப்படித்தான் ஒருநாள் கடைப்பையன் இல்லாதபடியால் செல்வகுமரன் சாமான்களை சைக்கிளில் ஏற்றி கல்வீட்டுக்கு சென்றபோது வீட்டில் இளவரசி இருந்தாள். சைக்கிள் ஓட்டி வந்த வாலிபனைக் கண்டதும் அவள் இதயம் நின்றது. இத்தனை அழகான ஒருத்தன் இந்தக் கிராமத்தில் இருக்கிறானா? அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தாள். அவனுடைய கண்கள் முதலில் சிரித்தன. பின் வாய் மெல்லத் திறந்து சிரித்தது. ஒருவித திட்டமிடாமல் இயல்பாகவே இவையெல்லாம் நடந்தன. ஒரு முழுநிமிடம் சைக்கிளை விட்டு இறங்காமல் காலை நிலத்தில் ஊன்றியபடி கண்களை எடுக்கமுடியாமல் நின்றான். இளவரசி ஏதோ பெயர் சொல்லி கத்தியபடியே உள்ளே ஓடினாள். இதுவரை காலமும் கடைப்பையன்தான் இந்த வீட்டுக்கு சாமான்கள் விநியோகித்தான். ’இனிமேல் நான்தான்’ என்று செல்வகுமரன் தீர்மானித்தான்.

அன்று முழுக்க இளவரசி பேய் அறைந்தவள் போல நடமாடினாள். தன் அறையில் போய் படுத்துக் கொண்டாள். அவளுக்கு தனிமை தேவையாக இருந்தது. அவன் சைக்கிளில் வந்து சறுக்கியபடி திரும்பியவிதம், கீழே இறங்காமல் சைக்கிள் கைப்பிடியை பிடித்து நிலத்தில் கால் ஊன்றி நின்றது, அவளைப் பார்த்து மெல்லிய புன்னகை செய்தது எல்லாம் திருப்பித் திருப்பி படம்போல மனதில் ஓடியது. ஒரு சாதாரண பலசரக்குக்கடை வேலைக்காரன் இத்தனை அழகானவனா? என்ன ஸ்டைலாக தோற்றமளித்தான். அவளால் நம்பமுடியவில்லை.

இரண்டு நாட்கள் ஓடின. மனசு பதற்றம் ஓயவே இல்லை. தங்கை குந்தவையிடம் கெஞ்சினாள், ’வா, அந்தக் கடை மட்டும் போய் வருவோம். எனக்கு ஒற்றை ரூல் கொப்பி ஒன்று வீட்டுப்பாடம் எழுத அவசரமாக வேணும்.’ ‘ஐயோ, நான்வர மாட்டேன். அம்மா தோலை உரிச்சுப் போடுவா.’ ’சீ போ. உன்னை தங்கச்சி என்று சொல்ல வெட்கமாயிருக்கு.’ ’வேலைக்காரனிடம் சொன்னால் அவன் வாங்கி வருவான்.’ ’அவனுக்குத் தெரியாது. நான்தான் கொப்பியில் ரூல் சரியாய் அடித்திருக்கா என்று பார்த்து வாங்கவேணும்.’ ’அக்கா, அந்தக் கடைக்கு கிட்டவே போக ஏலாது. ஒருநாள் ஒருத்தன் ‘கல்வீட்டுக்காரியின் மகளும் கல்நெஞ்சுக்காரி’ என்று என் காதுபடவே பேசினான். ’சரி, நீ வராவிட்டால் போ. நான் போறன்.’ ’நுள்ளாதே, நுள்ளாதே வாறன். அம்மாட்ட பிடிபட்டால் நீதான் காப்பாற்ற வேணும்.’ ’சரி சரி வா. என்ன சிரச்சேதம் செய்யப் போறாவா?’

கடையிலே அவன் மட்டும் இருந்தான். அவன் நாலைந்து கொப்பிகளை எடுத்துக் காட்டினான். இவள் ஏதோ புடவை வாங்க வந்ததுபோல ஆற அமர ஒவ்வொன்றாக வெய்யிலில் பிடித்து ஆராய்ந்தாள். கோடுகள் சரியாக ஓடுகின்றனவா எனச் சோதித்தாள். ஒற்றையை இரண்டு விரலாலும் பிடித்து உரசிப் பரிசோதித்தாள். அவன் தலையை மட்டும் கிட்ட நீட்டி ‘எந்த ஸ்கூல்? என்றான். பின்னர் ’என்ன படிக்கிறீர்?’ என்றான். அவள் சொன்ன பதில் வார்த்தைகள் அவனை நோக்கிப் போய் பதி வழியிலேயே முடிந்துவிட்டன. ஒரு கொப்பி வாங்கி முடிய பத்து நிமிடம் ஆனது. பின்னர் ஒரு பேனை வேண்டுமென்றாள். அவன் பல பேனைகளை எடுத்து வைத்தான். அவள் கடுதாசியில் தன் பெயரை எழுதிப் பார்த்தாள். பின்னர் தன் வீட்டு டெலிபோன் நம்பரை எழுதிப் பரிசோதித்தாள். பிறகு பேனை சரியில்லை என்று திருப்பிக் கொடுத்துவிட்டு சடாரென்று புறப்பட்டாள். குந்தவைக்கு எரிச்சல். ஒரு எளவு பிடித்த கொப்பிக்கு இவ்வளவு நேரமா?

செல்வகுமரனிடமிருந்து முதல் தொலைபேசி இரண்டு நாள் கழித்து சிலோன் ரேடியோவில் அவள் ’இசைச் சித்திரம்’ கேட்டுக் கொண்டிருந்தபோது வந்தது. டெலிபோன் எப்பொழுதும் பூட்டியிருப்பதால் இளவரசி அழைக்க முடியாது, ஆனால் வரும் அழைப்புகளை ஏற்று பேசலாம். அம்மா தோட்டத்தை மேற்பார்வை செய்யப் போயிருந்தார். இளவரசி ’ஹலோ’ என்றதும் அவனுக்கு தெரிந்துவிட்டது. தன் பெயரைச் சொன்னான். இவள் ’தெரியும்’ என்றாள். ’ரூல் கொப்பி சரியா?’ என்றான். ’ஓம்’ என்றாள். ’வீட்டுப் பாடம் செய்தீர்களா?’ என்றாள். ’ஓம்.’ ‘உங்கள் வகுப்பில் எத்தனை மாணவிகள்?’ ’என்ன என்ன பாடம் எடுக்கிறீர்கள்?’ ’நானும் தபால் மூலம் படிக்கிறேன். என்னிடம் நல்ல வேதியியல் நோட்ஸ் இருக்கு, உங்களுக்கு வேணுமா?’ என்றான். திடீரென்று கோட்டைத் தாண்டினான். ’எனக்கு உங்கள் நினைப்பாகவே இருக்கு.’ அவள் சொன்னாள் ’எனக்கும்தான்.’

அடிக்கடி பேசிக்கொண்டார்கள். அவர்களுக்காகவே சங்கேத வார்த்தைகள் உருவாகின. கடிதங்கள் பறந்தன. ஒருநாள் இரவு உணவு நேரத்தின்போது மரகதசவுந்தரி ஓர் அறிவித்தல் செய்தார். ’இன்றுதான் கடிதம் வந்தது. இனிமேல் இளவரசி உடுவில் பெண்கள் கல்லூரி விடுதியில் தங்கிப் படிப்பாள்.’ எத்தனை அழுது கூத்தாடியும் இளவரசியின் எதிர்ப்பு பலனளிக்கவில்லை. உடுவில் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தாலே அது தனி மதிப்புத்தான். பைத்தியம் பிடித்ததுபோல இளவரசி முதல் ஒரு மாதத்தை விடுதியில் கழித்தாள். மாத முடிவில் அம்மா வந்து வீட்டுக்கு அழைத்துப்போனார். சனி, ஞாயிறு தங்கிவிட்டு திங்கள் காலை திரும்பவேண்டும். சனிக்கிழமை போனது. அவன் அழைக்கவில்லை. சரி, ஞாயிறு அழைப்பான் என நினைத்தாள். அது எப்படி முடியும்? அம்மா வீட்டிலே இருந்தார். ஏமாற்றமாகிவிட்டது. அடுத்தநாள் அதிகாலை புறப்பட வேண்டும்.

படுக்கையில் உருண்டு கொண்டிருந்தாள். தூக்கமே வரவில்லை. நடுச் சாமம் எழும்பி யன்னலில் போய் நின்றாள். நீல நிற இருட்டு. தொழுவத்தில் மாடுகள் நின்றன. உற்றுப் பார்த்தபோது ஏதோ அசைந்தது. ஓர் உருவம் கைகாட்டியது. இதயம் படபடவென்று எலும்பை உடைத்து வெளியே வரத் துடித்தது. மெதுவாக இறங்கி பின் கதவு வழியாக வெளியே வந்தாள். செல்வகுமரன் நின்றான். இடது கன்னத்தில் சந்திர ஒளிபட்டு தகதகவென்று அவன் மின்னினான். அழுகை பீறிட்டுவர அப்படியே கட்டி அணைத்தாள். இரவு ஒன்பதிலிருந்து அங்கே காத்து நின்றதாக அவன் சொன்னான்.

இப்படியே சந்திப்பு தொடர்ந்தது. உலகத்துக் காதலர்கள் பெற்றோரிடம் பிடிபடுவதுபோல இவர்களும் ஒருநாள் அகப்பட்டார்கள். செல்வகுமரன் எழுதிய கடிதம்தான் காரணம். முதல்நாள் யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரில் எம்.ஜி.ஆரின் ’அடிமைப்பெண்’ முதல் காட்சி பார்த்துவிட்டு அதிலே ’ஆயிரம் நிலவே வா’ என்று வரும் பாடலில் ஒரு வரியை திருடி எழுதியிருந்தான். ’நள்ளிரவு துணையிருக்க, நாமிருவர் தனியிருக்க.’ இந்த வரிதான் பிடிபட்டது. மரகதசவுந்தரி கோபம் வந்தால் கணவர் வைத்திருந்த அலங்காரப் பிரம்பை வெளியே எடுப்பார். சும்மா ஒரு வெருட்டுத்தான். அவர் பிரம்பை உருவி எடுத்ததும் வேலைக்காரர்கள் வெளியே ஓடிவிட்டார்கள். குந்தவை பாய்ந்து வந்து தாயாரை கட்டிப்பிடித்தாள். மூன்று நாட்கள் பேச்சு வார்த்தை இல்லை. இளவரசி சாப்பிட மறுத்தாள். அவள் சொல்லிவிட்டாள் ’எனக்கு கல்யாணம் என ஒன்று நடந்தால் அது செல்வகுமரனுடன்தான்.’

செல்வகுமரனும் பெற்றோரும் ஒரு நல்ல நாள் வெற்றிலை, பாக்கு, பழம் வைத்த தட்டுடன் பெண் பார்க்க வந்தார்கள். மரகதசவுந்தரி நினைத்ததற்கு மாறாக அவர்கள் நல்ல பண்பாடு உள்ளவர்களாக காணப்பட்டார்கள். மாப்பிள்ளை திடமான உடல்கட்டுடன் மரியாதை தெரிந்தவனாக இருந்தான். இப்படி ஓர் அழகன் இந்த ஊரில் இருக்கிறானா என இளவரசி அதிசயித்ததுபோல தாயாரும் வியந்தார். உடனேயே மனதில் சம்மதம் தோன்றிவிட்டது. அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம், ஆனால் ஒரு நிபந்தனை. மகள் படிப்பை தொடர்ந்து கணவர் ஆசைப்பட்டதுபோல உடுவில் மகளிர் கல்லூரியில் ஆசிரியையாக அமரவேண்டும். எல்லோருக்கும் அதில் சம்மதம்.

திருமணம் முடிந்த பின்னர் இளவரசி விடுதியில் போய் தங்கினாள். இரண்டு வாரத்துக்கு ஒருமுறை மரகதசவுந்தரியின் ஏ30 கார் போய் அவளை அழைத்து வரும். இரண்டு நாட்கள் செல்வகுமரன் அவர்களுடன் வந்து தங்குவான். இது தொடர்ந்தது. சிலசமயங்களில் தாயார் கார் அனுப்பாமல், ’படிப்பு முக்கியம்’ என்பார். இளவரசியை ஓர் அடிமையாகவே மரகதசவுந்தரி நடத்தினார்.

ஒருநாள் குந்தவையிடமிருந்து இளவரசிக்கு கடிதம் வந்தது. குந்தவை கடிதம் எழுதுவதே இல்லையாததால் அதனை அவசரமாகப் பிரித்தாள்.

’எடி அக்கா,

நீ போய் விடுதியில் உட்கார்ந்து கொள். உனக்கு என்ன? நான் இங்கே இடிபட்டுக் கொண்டிருக்கிறேன். என்னை படிக்கவேண்டாம் என்று சீமாட்டி நிறுத்திவிட்டார். உன்னுடைய பழைய பூப்போட்ட கிமோனாவை எனக்கு தந்து அதை வீட்டு வேலைக்கு போடச் சொல்கிறார். அட்டூழியம் என்றால் தாங்க முடியவில்லை. இந்த ஊருக்கு அவர்தான் ராணி என்ற நினைப்பு. அவவின் மண்டை முழுக்க பாரைக் கருவாடுதான். நான் துணியிலே பூக்கள் செய்து வீணாகிறேன். என்னுடைய முறைப்பாடுகளைக் கேட்க ஒருவருமில்லை. அடிக்கடி அப்பாவின் பிரம்பை வெளியே எடுக்கிறார். குத்துச்சண்டை வீரர் தலையை கைகளால் மூடிக்கொண்டு சுற்றிச்சுற்றி ஓடுவதுபோல நான் ஓடுகிறேன். நான்தான் இங்கே நிரந்தர வேலைக்காரி. எத்தனை கிள்ளும் உன்னிடம் வாங்குவன். ரூல் கொப்பி வாங்க உன்னுடன் நூறு தடவையும் நான் வரத் தயார். எனக்கு மீசை முளைத்துவிட்டது. அதைப் பார்ப்பதற்காவது உடனே வா.’

இளவரசிக்கு ஒன்றுமே புரியவில்லை. அன்றே தாயாரை வந்து தன்னைக் கூட்டிப்போகும்படி அழைத்தாள். தாயார் வந்தார், ஆனால் கூட்டிப்போகவில்லை. ’என்னுடைய பிரம்புக்கு வேலை வைக்காதே. உனக்கு ஒரு நிபந்தனை போட்டு உன் திருமணத்தை முடித்துவைத்தேன். அப்பாவின் கடைசி ஆசையை நிறைவேற்றுவது உன் கடமை. உனக்கு என்ன அவசரம், 19 வயதுதானே ஆகிறது. படிப்பை நிறுத்தலாம் என்று கனவிலும் நினைக்காதே.’ ’என்னை இப்படி படி படி என்று வதைக்கிறாய். குந்தவையை படிக்கவேண்டாம் என்று நிறுத்திவிட்டாயே.’ ’அதை விடு. அந்த மூதேவிக்கு படிப்பு ஏறாது.’

அம்மாவின் பிடியிலிருந்து விலக ஒரேயொரு வழிதான் இருந்தது. படிப்பை முடித்துவிட்டு குமரனுடன் எங்கேயாவது தூரதேசத்துக்கு ஓடிவிடுவது. அப்பா சொன்னாராம்; நான் அந்தக் கனவை நிறைவேற்ற வேண்டுமாம். பாவம் குந்தவை, அவள் தனித்துவிட்டாள்.குதிரைக்குட்டி போல துள்ளித் துள்ளி திரிவாள். அவள் மகிழ்ச்சியை தேடிப் போவதில்லை. உயிர் வாழ்வதே அவளுக்கு மகிழ்ச்சிதான்.

குந்தவையின் இரண்டாவது கடிதத்தை பதைபதைப்புடன் திறந்தாள்.

’எடி அக்கா,

உனக்கு மூளையே கிடையாது. நிலைமை மோசமாய் போகிறது. சீமாட்டி காலை மாற்றிப் போடுவதுபோல ஆட்களை மாற்றுகிறார். துப்பல் பணிக்கத்தை உடைத்ததற்காக நேற்று வேலைக்காரியை வீட்டுக்கு அனுப்பிவிட்டார். அணிலைக் கொன்றதற்காக ஒரு வேலைக்காரனைத் துரத்திய அம்மா இல்லை இது. அவருடைய தோலுக்குள் இன்னொரு அம்மா இருப்பது உனக்குத் தெரியாது. நான் சொல்லச் சொல்ல நீ கேட்பதே இல்லை. உன்ரை ஆசைப் புருசன் இப்ப இலுப்பைப் பழம் தின்ன வரும் வௌவால்களை இரவில் வலைவைத்து பிடிக்கிறார். அவற்றின் நரி மூஞ்சி பார்க்கச் சகிக்காது. சமையல்காரி அதை சமைத்து கொடுக்கிறாள். உனக்குத் தெரியும், அது வாயால்தான் கக்கா செய்யும். அதன் இறைச்சி சமைத்தால் மூன்று நாள் வீடு மணக்கும். நீ அங்கே படிச்சுக் கிழி. சீமாட்டியின் ராச்சியம் உச்சத்துக்கு போய்க் கொண்டிருக்கிறது. இதுதான் கடைசி. இனியும் நான் செத்த பிணமாகிய உனக்கு கடிதம் எழுதப்போவதில்லை.’

இளவரசிக்கு கைகள் நடுங்கின. அம்மா கார் அனுப்பப் போவதில்லை. விடுதியில் அனுமதி வாங்கிப் புறப்பட முடியாது. இரவு உணவு சமயம் ஒருவரும் அறியாமல் கேட் ஏறிக் குதித்தாள். எந்த பஸ், எங்கே எடுப்பது என ஒன்றுமே தெரியாது. சிநேகிதி சொன்னதுபோல ஆவுரஞ்சிக் கல்லுக்கு பக்கத்தில் நின்றாள். இரண்டு பஸ் பிடித்து வீடு வந்துசேர்ந்தபோது ஒன்றிரண்டு நட்சத்திரங்கள் அணைந்துவிட்டன. தாயார் புயல்போல சீறிக்கொண்டு பிரம்பை எடுத்தாலும் எடுப்பார். சமையல்காரியின் பின் கதவு வழியாக மெல்ல சமையல் அறைக்குள் நுழைந்தாள். அம்மா சாப்பிடும் குண்டான் வழித்து துடைத்து கழுவாமல் கிடந்தது. இந்த வயதிலும் ஒரு குண்டான் பசியா? வீடு முழுக்க பிரேதம் அழுகிய மணம்.

தங்கையின் அறைக் கதவு பூட்டாமல் கிடந்தது. எட்டிப் பார்த்து எழுப்புவோமா என்று யோசித்தாள். பின்னர் நேரே போய் அம்மாவின் கதவை தட்டினாள். மறுபடியும் தட்டினாள். ’ஆர்’ என்ற அதட்டல் குரல் வந்தது. பதில் பேசாமல் நின்றாள். ஆவேசமாகக் கதவை திறந்த மரகதசவுந்தரி வாய் பிளக்க அப்படியே நின்றார். குலைந்த ஆடை. கலைந்த கேசம். முகத்திலே கோபம் கொதிக்க ’என்ன இளவு இந்த நேரம்?’ என்றார். இவள் பதில் பேச முன்னர் இன்னொரு காட்சியை கண்டாள். தபால் மூலம் படிப்பவனும், வௌவால் இறைச்சி தின்பவனுமான இவளுடைய புருசன் மெதுவாக வெளியே வந்து குனிந்த தலையுடன் நின்றான். எந்த நேரமும் வசீகரமாகக் காணப்படும் அவன் வதனம் அத்தனை கோரமாக மாறியிருந்தது. இளவரசியின் தேகம் அனலாக எரிந்தது. தொண்டைக்குள் ஒரேசமயத்தில் பல வார்த்தைகள் உண்டாகி சிக்குப்பட்டன.

’நீ ஒரு தாயா? உன் சொந்த மகளை நடுத்தெருவுக்கு துரத்திவிட்டாயே. நீ பேய். நீ பிசாசு. வஞ்சகி, என் புருசனைப் பறித்த நீ நல்லாயிருப்பாயா? உனக்கு வெட்கமே இல்லையா?’

மரகதசவுந்தரி கோழிக்குரலில் கூவினார்.

’வாயை பொத்தடி. என்னடி வெட்கம். நான் என்ன வீதி வீதியாய் அலைஞ்சு வேசை ஆடினேனா? இது என் சொந்த மருமகன். சொந்த மருமகன்.’

– July 2022

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *