கல்லுக்குழி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 3, 2016
பார்வையிட்டோர்: 7,432 
 
 

“ சித்ரா!….சித்ரா!…ஏண்டி அலாரம் அடிப்பது கூடத் தெரியாமே அப்படி என்னடி தூக்கம்?…எழுந்து வாடி!….”என்ற அம்மா கண்மணியின் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தாள் சித்ரா.

காலை ஐந்து மணி. அதற்குள் அம்மா ஆரம்பித்து விட்டாள் ‘படி!..படி!.’ என்ற ராமாயணத்தை!.

முகத்தைக் கழுவிக் கொண்டு, வேறு வழியில்லாமல், பாடப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள் சித்ரா.

இந்த வருடம் தான் பத்தாவது வகுப்பிற்கு போயிருந்தாள் சித்ரா. கண்மணிக்கு சித்ரா எப்படியாவது எம்.காம். முடித்து சி.ஏ. பாஸ் செய்து, கண்மணியின் தாத்தாவைப் போல் பெரிய ஆடிட்டர் ஆக வேண்டும் என்று ஆசை!

கண்மணியின் தாத்தா அனந்தசயனம் அந்தக் காலத்தில் கோவையிலேயே மிகப் பெரிய ஆடிட்டர். கோவையில் கோடீஸ்வரர்களுக்குப் பஞ்சம் இல்லை! தாத்தா வீடு ஆர்.எஸ். புரத்தில். பல கோடீஸ்வரர்கள் எல்லாம் இன்கம் டாக்ஸ் கணக்கை முடிக்க தாத்தாவிடம் தொங்கிக் கொண்டிருப்பதை, சின்ன வயசில் கண்மணி பார்த்திருக்கிறாள்!

அதிலிருந்து அவளுக்கு அந்த ஆடிட்டர் பதவி மேல் தீராத ஆசை! அப்பா காலத்தில் குடும்பம் பொருளாதாரத்தில் நசிந்து விட்டது. ஆர்.எஸ் புரம் வீட்டை விற்றபின், சிட்டியை விட்டு புற நகர் பகுதியான ஒண்டிப்புதூருக்கு குடி வந்து விட்டார்கள்.

மீண்டும் தன் மகள் காலத்திலாவது, அதே ஆடிட்டர் பதவி மூலம் பழைய நிலைக்கு வர வேண்டும் என்பதே கண்மணியின் லட்சியமாக இருந்தது!

பாவம், சித்ராவுக்குத்தான் கணக்குப் பாடம் வேப்பங்காயாக கசந்தது! அவள் செய்யாத முயற்சி இல்லை. எவ்வளவு பாடுபட்டாலும் நாற்பது ஐம்பது மார்க்குக்கு மேல் அவளால் வாங்க முடிய வில்லை!

மற்ற எல்லாப் பாடங்களிலும் தொன்னூறுக்கு மேல் தான் அவள் மதிப் பெண்கள் இருக்கும்! அது மட்டுமல்ல ஓவியம், இசை, நாட்டியம் போன்ற கலைகளில் அவள் தான் அந்த பள்ளியிலேயே எப்பொழுதும் முதலாவதாக இருப்பாள்!

பின்ணணிப் பாடகி சித்ராவை அந்தக் காலத்தில் சின்ன குயில் சித்ரா என்று சொல்வார்கள்! உண்மையிலேயை இந்தக் காலத்தில் சின்னக் குயில் சித்ரா என்றால் நம்ம சித்ராவுக்குத்தான் பொருந்தும்!

ஏதாவது கலை நிகழ்ச்சியில் அவள் பாடுவதை ஏ.ஆர். ரகுமானோ, இளைய ராஜாவோ பார்த்தால், கொத்திக் கொண்டு போய் விடுவார்கள்! கோவையில் நடந்த ஒரு ஓவியப் போட்டியில், முதல் பரிசை நடிகர் சிவக்குமார் கையால் சித்ரா பெறும் போட்டோவை வீட்டில் ஹாலில் பெருமையாக மாட்டி வைத்திருந்தாள்.

கண்மணிக்கு இதெல்லாம் சுத்தமாக பிடிக்காது! அதற்கு செலவிடும் நேரத்தில் நாலு கணக்குப் போடலாம் என்று நினைப்பாள்.

“அம்மா!…நானும் எவ்வளவோ கஷ்டப் பட்டுத்தான் கணக்குப் பாடத்தை கவனிக்கிறேன்!……இருந்தாலும் எனக்குப் புரிய மாட்டேன்கிறது!.. நான் என்னம்மா செய்யட்டும்?..”

“ உன் புத்தி டான்ஸு, பாட்டு, டிராயிங் என்று அலைந்தால் கணக்கு எப்படியடி வரும்?…உனக்கு பொழுது போக்கு அம்சம் தான் முக்கியமாத் தெரியுது…வாழ்க்கை முக்கியமாத் தெரியலே!…இப்படியே போனா நீ உருப்பட மாட்டே!…” என்று கத்தினாள்.

அதற்குள் கண்மணியின் கணவன் கணேசன் குறுக்கிட்டான்.

“ ஏண்டி உனக்கு அறிவு இருக்காடி?….குழந்தையிடம் பேசும் பேச்சா நீ பேசறது?..அவளுக்கு எது பிடிக்குமோ அதை நல்லாப் படிக்கட்டும்!…..அவள் போக்கில் விட்டு விடு..உனக்கு அவளை ஆடிட்டர் ஆக்க ஆசை…உங்க அப்பாவுக்கு அவளை இன்ஜினீயர் ஆக்க ஆசை..உங்கம்மாவுக்கு அவளை டாக்டர் ஆக்க ஆசை!….ஆனா படிக்கிற அவளுக்கு மட்டும் எந்த ஆசையும் இருக்கக் கூடாது!….இது என்னடி நியாயம்?…குடும்பத்தில் இருக்கும் எல்லோருடைய ஆசையும் ஒரு குழந்தையிடம் திணித்தா அது எப்படியடி நன்றாகப் படிக்கும்?….அந்தக் குழந்தைக்கு எது நல்லா வருதோ அதைப் படிக்கச் சொல்லிச் சொன்னாத் தான் நல்லாப் படிக்கும்!…”

“ கண்டதைப் படிச்சு….என்ன பிரயோசனம்?….அவ இஷ்டத்திற்கு விட்டா..பாட்டு படிப்பா.. இல்லாவிட்டா டிராயிங் இதெல்லாம் படிப்பா.. அதனாலே நயா பைசாவுக்குப் பிரயோசனம் உண்டா?…”

“ ஏண்டி….இப்படி படிப்பைக் கூட அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து உயர்ந்த படிப்பு, தாழ்ந்த படிப்பு என்று எடை போடறீங்க!….அதனாலே தான் நம்ம நாட்டிலே கல்வியின் தரம் சொல்லும்படியா இல்லே!..”

“ ஆமா!…இவரு பெரிய மேதை…பொண்ணுக்கு நாலு கணக்கு ஒழுங்காச் சொல்லித் தர துப்பில்லே!…பேச வந்திட்டாரு!…உங்க வேலையைப் பார்த்திட்டுப் போங்க,,,அவ படிப்பை நான் கவனிச்சுக்கிறேன்!…”

“ சொன்னாக் கேளு…..இந்த வயசு இரண்டும் கெட்டான் வயசு…நீ சித்ராவிடம் எப்ப பேசினாலும் படிப்பைப் பற்றித் தான் பேசறே! … வேறே பேச்சே பிரியமா நீ பேசி நான் பார்த்ததில்லே! ‘படி படி’ என்று எந்த நேரமும் அவளை உயிரை எடுத்தா அவளுக்குப் படிப்பு மேலேயே ஒரு வெறுப்பு வந்திடும்….அவ ஆசையா கேட்கிற பாட்டை கொஞ்ச நேரமாவது கேட்க விடு….…அவளுக்கு வராத பாடம் கணக்கு…நீ அதைபற்றியே எந்த நேரமும் அவ கிட்டப் பேசறே!……… அவளுக்கு எல்லாம் வெறுத்துப் போயிடும்!…அதனாலே பெரிய இழப்பு வந்தா நம்மால் தாங்க முடியாதடி!…”

“ நீங்க வாயை மூடிட்டு பேசாம போங்க…உங்க வாயிலே நல்ல வார்த்தையே வராது!..”

“ சரி! உன் இஷ்டம்!…” என்று முணுமுணுத்துக் கொண்டே போனான் கணேசன்.

கணேசன் ஒண்டிப்புதூரில் ஒரு நடுத்தரத் குடும்பத்தில் பிறந்தவன். கஷ்டப் பட்டு படித்து ஒரு பட்டம் வாங்கினான். அங்கு பக்கத்தில் சிங்கா நல்லூரில் ஒரு நல்ல வேலையும் கிடைத்தது. கண்மணி அவனுக்கு தூரத்து உறவு. பெரிய இடம். சமீப காலத்தில் அந்தக் குடும்பம் பொருளாதாரத்தில் கீழே போய் விட்டது. அதனால் வேறு வழியில்லாமல் கணேசன் ஒழுங்கான பையன் என்ற காரணத்தால், கண்மணியை கணேசனுக்கு கட்டிக் கொடுத்தார்கள். கணேசனும் கண்மணியை அனுசரித்தே குடும்பம் நடத்தி வந்தான். சித்ரா விஷயத்தில் அவள் நடந்து கொள்ளும் முறை அவனுக்கு சுத்தமாகப் பிடிக்க வில்லை!

ஒண்டிப்புதூருக்கும், சிங்காநல்லூருக்கும் மத்தியில் நேதாஜிபுரத்தில், அந்தக் காலத்திலேயே நிலம் வாங்கி கணேசனின் அப்பா வீடு கட்டியிருந்தார். அதில் தான் கணேசன் வசித்து வந்தான். அவன் வேலை செய்யும் தொழிற்சாலைக்கும் பக்கம். சித்ரா படிக்கும் ஒண்டிப்புதூர் பள்ளிக்கும் பக்கம். கணேசன் பைக்கில் வேலைக்குப் போய் வந்தான். சித்ரா தன்னுடன் படிக்கும் தோழிகளோடு பள்ளிக்கு தினசரி நடந்து போய் வருவாள்.

சித்ராவுக்கு தோழிகளோடு அரட்டையடித்துக் கொண்டே நடந்து போவதில் ரொம்ப விருப்பம். அன்று தோழிகள் ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டு போனார்கள்.

“ ஏண்டி நேற்று இரவு சூபர் சிங்கர் பைனல் நிகழ்ச்சி பார்த்தாயா?…”

“ அதை ஏன் கேட்கிறே? ராத்திரி பனிரண்டு மணிவரை பார்த்தேன்!….அப்புறம் அப்பா நாளைக்கு ஸ்கூலுக்குப் போக வேண்டாமா என்று திட்டினார்….அதற்குப் பிறகு தான் போய் படுத்தேன்!…”

“ என்ன இருந்தாலும் எனக்கு ஒரு வருத்தம்… நம்ம சித்ரா மட்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால்…ஈஸியாக முதல் பரிசைத் தட்டிக் கொண்டு வந்திருக்கலாம்!..” என்றார்கள் தோழிகள் எல்லொரும் கோரஸாக! .

அதற்கு காரணம் தினசரி ஸ்கூலுக்குப் போகும் பொழுதும், வீடு திரும்பும் பொழுதும் தோழிகள் சித்ராவைப் பாடச் சொல்லி மெய் மறந்து ரசிப்பது வழக்கம். சித்ராவும் எப்படியோ புதுப் படப் பாட்டுகள் அத்தனையும் தெரிந்து வைத்திருப்பாள்.

“அது என்னவோ வாஸ்தவம்தாண்டி!…அப்படி எல்லாம் போய் நம்ம சித்ரா கலந்து கொள்ள அவங்கம்மா விடமாட்டாங்கடி!…எப்பப் பாரு கணக்கு…… கணக்கு என்று ஒரே பைத்தியமா திரியுதடி!….”

அதுவரை அவர்கள் பேச்சை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்த சித்ரா குறுக்கிட்டாள்.

“ எங்கம்மாவைப் பற்றி பேசாதீங்கடி!…உங்களுக்கு எங்கம்மாவைப் பற்றி என்ன தெரியும்?…எங்க தாத்தா ஆடிட்டர் தொழிலில் கோவையில் கொடி கட்டி வாழ்ந்தவர்…சின்ன வயசில் எங்கம்மா ஆர். எஸ். புரம் தாத்தா பங்களாவில் சொகுசா வாழ்ந்தவங்க…எனக்கு நல்லா படிப்பு வருவதைப் பார்த்து என்னை

தாத்தா போல் வசதி வாய்ப்போடும், புகழோடும் வாழ வைக்க வேண்டுமென்று அவங்க ஆசைப் படறாங்க…..அதில் என்னடி தப்பு இருக்கு?…எனக்கு எல்லாப் பாடங்களும் நல்லா வருது…..இந்தப் பாழாப் போன கணக்கு மட்டும் வர மாட்டேன்குது….நான் என்ன செய்ய முடியும் அதுதாண்டி எனக்குப் புரியலே!…”

“சரி…சரி…..நீ உங்கம்மாவை எப்ப நீ விட்டுக் கொடுத்திருக்கே?…உன் புத்திதான் எங்களுக்குத் தெரியுமே!…” என்று தோழிகள் அந்தப் பேச்சை அதோடு முடித்துக் கொண்டார்கள்.

அன்று அரைப் பரிட்சை முடிந்து ஸ்கூல் திறந்திருந்தார்கள். வழக்கம் எல்லா ஆசிரியர்களும் திருத்திய பரிட்சைப் பேப்பர்களையும் மாணவ மாணவிகள் கையில் கொடுத்தார்கள்.

சித்ரா கணக்கைத் தவிர எல்லாப் பாடங்களிலும் தொன்னூறு தொன்னூற்றுக்கு மேல் வாங்கியிருந்தாள். கணக்கில் மட்டும் நாற்பதே மதிப்பெண்கள்! அவளை அறியாமல் கண்களிலிருந்து சொட்டுச் சொட்டாக விழுந்த கண்ணீர்த் துளிகள் கணக்குப் பேப்பரை நனைத்து விட்டன.

அம்மா ஆவலோடு இந்த மார்க்கைப் பார்க்க வீட்டில் காத்திருப்பாள் என்று நினைக்கும் பொழுது அவள் நெஞ்சு பாறையாக அழுத்தியது!

மாலை ஸ்கூல் விட்டதும் தோழிகள் நேதாஜி நகருக்குப் புறப்பட்டார்கள்.

அவர்களிடம் வந்த சித்ரா “நீங்க எல்லாம் போங்க!…நான் கொஞ்சம் ஸ்டேனரி கடையில் நோட்டு புக்ஸ் வாங்க வேண்டியிருக்கு!…என்னை அப்பா ஸ்கூல் விட்டதும் கடையில் போய் இருக்கச் சொன்னாரு..நான் சோமசுந்திரம் ஸ்டேஸனரி கடைக்குப் போறேன்….அப்பா வந்ததும் நான் நோட் புக்ஸ் வாங்கிட்டு அவரோடு பைக்கில் வந்து விடுகிறேன்!.” என்று தோழிகளை சித்ரா அனுப்பி வைத்து விட்டாள்.

மாலை ஆறு மணிவரை கண்மணி வாசலிலேயே சித்ராவுக்காக காத்திருந்தாள்.அதிசயமாக அன்று அவ்வளவு நேரமாகியும் சித்ரா வீடு திரும்ப வில்லை! கண்மணிக்கு ஒரே பதட்டமாகப் போய் விட்டது.

உடனே அவளோடு படிக்கும் தோழி புவனா வீட்டிற்குப் போய் கண்மணி பற்றி விசாரித்தாள். சித்ரா நோட் புக்ஸ் வாங்கிட்டு பைக்கில் அப்பாவோடு வருவதாகச் சொன்னதாக அவள் சொன்னாள்.

அப்படி ஒரு ஏற்பாடு இருப்பதாகத் தெரியவில்லை! கணேசன் சித்ராவைக் கேட்காமல் இது வரை எதையும் செய்ததில்லை! கண்மணிக்கு பகீரென்றது! உடனே செல்போனில் கணேசனுடன் தொடர்பு கொண்டாள். அவன் பதறி யடித்துக் கொண்டு ஓடி வந்தான்.

முதலில் கணேசன் ஒண்டிப்புதூர் சோமசுந்திரம் ஸ்டேஸனரி ஷாப்பிற்கு ஓடினான். அங்கு வேலை செய்யும் பரமசிவம் கணேசனுக்கு தெரிந்தவன். “அண்ணா!.. உங்க பெண் சித்ராவை எனக்குத் தெரியாதா என்ன….இன்று அவள் இந்தக் கடைப் பக்கமே வரவில்லை!…” என்று உறுதியாகச் சொன்னான்.

கணேசனுக்கு கைகால் எல்லாம் நடுங்கியது. உடனே அவனுடைய நெருங்கிய நண்பர்களை செல்போனில் உடனே வரும்படி அழைத்தான். எல்லோரும் பதறியடித்துக் கொண்டு வந்தார்கள்.

எல்லோரும் சித்ராவோடு பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவியின் வீடுகளுக்கும் போய் விசாரித்தார்கள். எங்கும் எந்தத் துப்பும் கிடைக்க வில்லை!

அன்று எல்லோருக்குமே சிவராத்திரி தான்! மறுநாளும் விடிந்து விட்டது!

கணேசனும் அவர் நண்பர்களும் அருகில் சூலூர், பல்லடம் போன்ற இடங்களுக்குப் போய் தெரிந்தவர்கள், உறவினர்கள் வீட்டில் எல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.

அதற்குள் கண்மணியின் பெண் சித்ரா காணாமல் போன விஷயம் காலனி முழுவதும் பரவி விட்டது!

பகல் இரண்டு மணி. எந்த தகவலும் கிடைக்க வில்லை! போலீஸூக்குப் போகலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள்!

நேதாஜிபுரத்தில் வம்பு பேசுவதற்கே என்றே ஒரு பெண்கள் கூட்டம் இருந்தது! அவர்கள் சித்ரா காணாமல் போன விஷயத்தை கண்ணும் காதும் வைத்து, கண்மணியின் பெண் சித்ரா யார் கூடவோ ஒடிப் போய்விட்டாள் என்று ‘குசு குசு’வென்று பேசத் தொடங்கி விட்டார்கள்!

“ இந்தக் காலத்துப் பெண்களையே நம்ப முடியாது! முளைச்சு மூணு இலை விடுவதற்குள்ளேயே எல்லோருக்கும் பாய் பிரண்டு வந்திடறாங்க!…”

“ எல்லாம் பிஞ்சிலேயே பழுத்துப் போயிடுது!…எல்லோருடைய கைகளிலும் லேட்டஸ் செல்போன் வச்சிருக்காங்க!…அதில் என்னவோ ‘வாட்ஸ்அப்’ என்று என்ன எழவோ வருதாமே….அதை ஸ்கூல் பொண்ணுக கும்பலா நின்று வேடிக்கை பார்த்திட்டிருந்தாங்க!…. நானும் என்னவோ ஏதோனு எட்டிப் பார்த்தேன்!…கருமாந்திரம் எல்லாம் படுக்கையறைக் காட்சிகள்……ஒருத்தருக்கு கூட துணி இல்லே!..”

“இப்ப ஏழாவது எட்டாவது படிக்கும் பையன்களும் பெண்களுமே அந்த மாதிரி காட்சிகளை நெட்டில் எடுத்து ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொள்கிறார்களாம்!…”

“ இந்த சித்ரா பொண்ணு பார்க்க எவ்வளவு லட்சணமா இருக்கு… அதுக்கு பாய் பிரண்டு இல்லாமலேயா இருக்கும்?…எந்த புத்தில் எந்த பாம்பு இருக்கிறதோ யார் கண்டாங்க!..எதோ கைக் குழந்தை தொலைந்த மாதிரி இங்கே ஆயாளும், அப்பனும் தேடறாங்க! அது எங்கே கும்மாளம் போடுதோ!..” என்று வாய்க்கு வந்த மாதிரி பேசினாங்க!

அன்று மாலை. நேதாஜி நகர் ரயில்வே கிராஸிங்கை ஒட்டினால் போல் இருகூர் போகும் பாதையில் ஒரு கல்லுக் குழி இருக்கிறது. அது குட்டையை விட பெரியது. கிட்டத் தட்ட ஒரு குளம் மாதிரி இருக்கும். குளத்தில் சுவர்

இருக்கும். இங்கு சுற்றிலும் பாறை இருக்கும் அவ்வளவு தான் வித்தியாசம்! மழை பெய்த சில மாதங்களுக்கு அதில் தண்ணீர் குளம் மாதிரி தேங்கியிருக்கும். அக்கம் பக்கத்து பெண்கள் அங்கு வந்து துணிகளை துவைத்து எடுத்துக் கொண்டு போவார்கள். வழக்கம் போல் வயசுப் பெண்கள் அரட்டை அடித்துக் கொண்டே துணி துவைத்துக் கொண்டிருந்தார்கள்! அவர்களுக்கு துணையாக வந்த பத்து வயசு சிறுமிகள் கரையில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

திடீரென்று அதில் ஒரு பெண் “ அக்கா!..அக்கா!..அந்த மூலையில் வந்து பார்… தலை முடி மாதிரி கருப்பாத் தெரியுது!..” என்று கூச்சல் போட்டாள்.

துவைத்துக் கொண்டிருந்த பெண்கள் எல்லாம் மேலே வந்தார்கள். அதில் ஒரு தைரியமான பெண் ஒரு தடியை எடுத்து வந்து குப்பை கூளங்களை ஒதுக்கி விட்டு, தலை முடி போல் கருப்பாக வட்டமாக தண்ணீருக்கு மேலே தெரிந்த பகுதியை குச்சியை வைத்து ஒரு அழுத்து அழுத்தினாள்.

மறு நிமிடம். தலையை முழங்கால்களுக்குள் வைத்து கால்களை கட்டிப் பிடித்த படி ஒரு பிணம் ஒரு சுற்று சுற்றியது!

“ ஐயோ! பிணம்!….பிணம்!..” என்று அலறியடித்துக் கொண்டு ஒடி வந்து விட்டார்கள்.

அந்த வழியாக தொழிற்சாலைகளுக்குப் போன பல ஆண்கள் ஓடிவந்தார்கள். சிறிது நேரத்தில் கயிறு கட்டி கல்லுக்குழிக்குள் இருந்த பிணத்தை வெளியே எடுத்துப் போட்டார்கள்.

அதற்குள் கல்லுக்குழிக்குள் ஒரு பெண் பிணம் என்ற செய்தி காட்டுத் தீயாகப் பரவி விட்டது! பக்கத்தில் நேதாஜிபுரத்தில் இருந்த எல்லோரும் ஓடி வந்து விட்டார்கள்.

அதற்குள் ஒரு பெண் அந்தப் பிணம் கண்மணியின் மகள் சித்ரா என்று அடையளம் சொன்னாள்.

பக்கத்து முள் புதருக்குள் இருந்த ஸ்கூல் பேக்கை ஒருவர் எடுத்து வந்து பிணத்திற்கு அருகில் போட்டார்.

கணேசனும், கண்மணியும் பிணத்தின் மேல் விழுந்து வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார்கள்!

அதற்குள் ஒருத்தி புத்தகப்பையில் இருந்து ஒரு கடிதத்தை எடுத்து கண்மணியின் கைகளில் கொடுத்தாள்!

கண்மணி அழுகையை நிறுத்தி விட்டு, கண்ணீர் வழிய அந்தக் கடிதத்தைப் படித்தாள்.

அம்மா!

என்னை மன்னிச்சிடு……..என்னால் உன் ஆசையை நிறைவேற்றி வைக்க முடியலே!..எனக்கு சித்திரம் நல்லா வருது…பாட்டு நல்லா வருது.. பி. சுசீலா அம்மா மாதிரி கூட பாடிடுவேன்!….நல்லா டான்ஸ் ஆட முடியும்….ஆனா நீ நினைச்ச மாதிரி எம்.காம். முடிச்சு சி.ஏ. படித்து பெரிய ஆடிட்டரா வர முடியாதம்மா…!….நானும் எவ்வளவோ கஷ்டப் பட்டுப் பார்த்தேன்!.. கணக்குப் பாடம் எனக்கு சுட்டுப் போட்டாலும் வர மாட்டேன்கிறது!…நான் என்னம்மா செய்யட்டும்? என்னால் சுத்தமா முடியலே!…அரையாண்டு மார்க் சீட் கொடுத்தாங்க…அதில் நான் கணக்கில் வாங்கியிருக்கும் மதிப்பெண்களைப் பார்த்தா நீ மனசு ஒடஞ்சு போயிடுவே!…..அதைப் பார்க்க எனக்கு தைரியமில்லே!…அதனாலே நான் போய் வருகிறேன் அம்மா!…என்னை மன்னிச்சிடு!

இப்படிக்கு

சித்ரா

கடிதத்தை படித்த கண்மணி கணேசனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு “ஐயோ!…அப்பவே நீங்க சொன்னீங்க……………இரண்டுக் கெட்டான் வயசு! குழந்தையை எந்த நேரமும் ‘படி படி’ என்று ரொம்பவும் தொந்தரவு பண்ணாதே… அதற்கு இந்த வயசிலே விளையாட ஆசையிருக்கும்! பாட்டுக் கேட்க……படம் பார்க்க ஆசையிருக்கும்…..எல்லாத்திற்கும் தடை போட்டு விட்டு ஒரேயடியா எந்த நேரமும் படிக்கச் சொன்னா அதற்கு படிப்பு மேலேயே ஒரு வெறுப்பு வந்திடும் என்று!…நான் கேட்கவில்லையே!..” என்று கதறினாள்.

அடுத்து நிமிடம் ஓடிப் போய் சித்ராவை மடியில் எடுத்துப் போட்டுக் கொண்டு, நெஞ்சில் ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டே, “ஐயோ! ……தெய்வமே! இது என்ன கொடுமை!. உலகத்தில் எல்லோரும் தான் தங்கள் குழந்தையின் திறமையும் தகுதியும் தெரியாமே ரொம்ப உசரத்திற்கு வர வேண்டுமென்று ஆசைப்படறாங்க!…நிறைய பெண்கள் தன் குழந்தை ஐ.ஏ.எஸ். படிச்சு கலெக்டர் ஆக வேண்டுமென்று ஆசைப் படறாங்க! எத்தனை பெண்கள் தங்க பெண் எம்.பி.பி.எஸ். படிச்சு டாக்டர் ஆக வேண்டுமென்றும், பி.இ. முடிச்சு இன்ஜினீயர் ஆக வேண்டும் என்று ஆசைப் படுவதில்லையா? நானும் ஒர சாதாரணப் பெண் தானே? நான் மட்டும் அப்படி ஆசைப் பட்டது தப்பா? எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு பெரிய தண்டனை? இவ்வளவு பெரிய இழப்பை எதற்கு எனக்கு மட்டும் கொடுத்தாய்?!..அல்லது மற்றவர்களுக்கு புத்தி புகட்ட என்னை நீ கருவியாக பயன் படுத்திக் கொண்டாயா?…. எனக்கு இந்த இழப்பை தாங்கும் சக்தி இல்லை!…தெய்வமே!…..என்னையும் என் அன்பு மகள் சித்ராவிடமாவது கொண்டு போய் சேர்த்து விடு!..என் சித்ரா….கண்ணு!…தங்கமே!… உன் அருமை தெரியாம தப்பு பண்ணிட்டேனடி!…இந்த அம்மாவை மன்னிச்சிடு!…இதோ நானும் உங்கிட்டேயே வந்திடறேன்!” என்று கதறியபடி நெஞ்சில் அடித்துக் கொண்டே கண்மணி திடீரென்று அந்தக் கல்லுக்குழிக்குள் குதித்து விட்டாள்!

அவளை அங்கு கூடியிருந்த ஆண்கள் உயிரோடு கரையில் கொண்டு வந்து சேர்க்க படாத பாடு பட்டார்கள்!

குழந்தைகள் விருப்பப் பட்டு படிக்கும் பாடத்தை படிக்க விடாமல், தங்களுக்குப் பிடிச்சதைப் படிக்கச் சொல்லும் பெற்றோர்களுக்கு சித்ராவின் இழப்பு ஒரு பாடமாக அமைந்து விட்டது!

– அமுத சுரபி ஜனவரி 2016

கடந்த 60 ஆண்டுகளில் கதை, கட்டுரை, நாவல்கள், தொடர்கதைகள் என 600-க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியிருக்கும் துடுப்பதி ரகுநாதன், 80 வயதைக் கடந்த நிலையில் இன்னும் சுறுசுறுப்பாய் எழுதிக்கொண்டிருக்கிறார். தற்போது கோவை நஞ்சுண்டாபுரம் சாலை நேதாஜி நகரில் வசித்து வரும் துடுப்பதி ரகுநாதனை சந்தித்தோம். “பூர்வீகம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள துடுப்பதி. பெற்றோர் செல்லப்பன்-செல்லம்மாள். ஜவுளி வியாபாரம். பெருந்துறை உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி முடித்துவிட்டு, கோவையில் தங்கி கூட்டுறவில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *