கல்லறை ஜன்னல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 4, 2022
பார்வையிட்டோர்: 3,465 
 
 

சேதுராமன் தன் மூத்த மகனைப் பற்றி அடுக்கடுக்காய் சொன்னதும் என்னால் நம்ப முடிய வில்லை. கண்ணபிரான் சிசுபாலன் பேரில் சொல்லும் குற்றச்சாட்டுகள் போல ஒவ்வொன்றாய் வரிசைப் படுத்திச் சொல்லவும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

கவலையை விடுங்கள் நான் வந்து பேசுறேன் நான் சொன்னால் அவன் ஓரளவுக்கு கட்டுப்படுவான் என்றேன் நான் முந்திரிக் கொட்டையாக.

வேண்டாம் உங்களை எடுத்தெறிஞ்சு பேசுவான், வீணா மனக்கஷ்டம் வரும். நீங்க கேட்க வேண்டும் என்பதற்காக நான் சொல்லலை, மனுஷாலை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சொன்னேன் என்றார்.

பாவம் மனுஷன் எப்படி கெத்தா இருந்தார், இன்றைக்கு ஷேவ் பண்ணக்கூட வழி இல்லாமல் விதியத்து போய் நிற்கிறார். காரணம் மகன் வீட்டைவிட்டு போ.. போ.. என்று துரத்துகிறானாம்.

காட்டுமிராண்டி என்றால் பழக்க வழக்கம் புரியாதவன், பண்பு தெரியாதவன், நாகரீக உடைகள் உடுத்தாதவன் என்று தான் எனக்கு தெரியும். பெற்றவர்களுக்கு துரோகம் செய்து, கூடப்பிறந்தவனுக்கு குழிப்பறித்து, சரியில்லாத சகவாசக்காரர்களுடன் சேர்ந்து நிம்மதியில்லாமல் தினம் தினம் அல்லல் படும்பவர்களும் அந்த வகை பட்டியலில் இடம் பெற வேண்டியவர்கள் தாம்.

விக்னேஷ் மேற்சொன்னது மட்டுமல்லாமல் சொல்லாத ஏனைய துர்குணங்களையும் ஒருங்கே கொண்டிருப்பது தெரிய வந்த போது மனசு கசந்தது. இப்படி ஒரு பிள்ளையை பெற்றதற்கு பதில் சேதுராமன் ஆண்மையற்றவனாக இருந்திருக்கலாம் என்று தோன்றியது எனக்கு.

பல்வேறு தாலுக்கா கருவூலத்தில் வேலைப்பார்த்து அலுத்து சலித்து ஒரு வழியாக ஓய்வு பெற்று குடும்பத்துடன் சொந்த ஊரான அரியலூர் வந்து தங்கிவிட்டேன். கிட்டத்தட்ட இருபது வருஷங்கள் கழித்து அவரை சந்திக்கிறேன். நண்பர் தான் ஆயினும் வாடா போடா என்று தோளில் கைப்போடும் அளவில் பால்ய சினேகிதம் கிடையாது.

அருகிலுள்ள பெரம்பலூர் கருவூலத்தில் வேலை பார்க்கிற போது பழக்கமானவர் தாம் சேதுராமன். இவரின் மூத்த மைந்தன் விக்னேஷ், இளைய மைந்தன் அமுதன்.

சேதுராமன் பெரம்பலூர் கருவூலத்துக்கு அருகாமையில் சொந்தமாக இ.சேவை மையம் நடத்தி வந்தார். நகராட்சி அலுவலகம், வருவாய்த்துறை அலுவலகம், சார்-பதிவாளர் அலுவலகம் ஒருங்கிணந்த நீதி மன்றங்கள் என ஒவ்வொன்றும் அடுத்தடுத்து இருப்பதால் சேதுராமனின் இ.சேவை மையத்துக்கு ஏகப்பட்ட மவுசு. ரேஷன் கார்டு, ஆதார்கார்டு, பான்கார்டு போன்ற அத்தியாவசிய ஸ்மார்ட் காடுகள் பெற விண்ணப்பித்தல், திருத்தம் செய்தல், லாமினேஷன் செய்தல், அரசு நலயுதவித்திட்டம் குறித்தான படிவங்கள் விற்பனை செய்தல் என்று எந்த நேரமும் சேவை மையம் பிசியாக இருக்கும்.

சின்ன வேலையான ஜெராக்ஸ் எடுக்க சென்றாலும், கணினி தட்டச்சு செய்யும் டாக்குமெண்ட் வேலையானாலும் பொறுமை காத்து நிற்க வேண்டும். த்ச்சொ.. என்று சலித்துக் கொண்டாலும், சீக்கிரம் என்று துரிதப்படுத்தினாலும் உனக்கு முன்னால் வந்தவர்கள் சும்மா நிற்கிறார்களில்ல. உனக்கு என்ன அவசரம், பொறு. . என்று பார்வையில் பதில் சொல்லும் சிடுமூஞ்சியை சகித்து.. வேலை முடிந்ததும் அப்பாடா என்று தான் வாடிக்கையாளர்கள் திரும்புவார்கள். அவ்வளவு பிசி.. வருமானமும் கணிசமாக வந்தது. இந்த சிறு தொழிலதிபர் சேதுராமன் சிறுவிவசாயுமாவார். சொந்தமான நஞ்சையும் தோட்டமும் உண்டு.

சபலப்புத்தியுள்ளவர்கள் சில்லரையைப் பார்த்து விட்டால் சிரிக்கும் சிங்காரிகளுடன் சிநேகம் நாடுவார்கள் போலும். சேதுராமன் அப்படிப்பட்ட சோக்காலியாகத் தான் இருந்தார். அவருடன் நெருங்கி பழகிய போது ஆரம்பத்தில் இது எனக்கு தெரியாமற் இருந்தது. கல்யாணம் ஆகியும் கட்டுத்தறி காளையாகத்தான் இருந்தார்.

நான் அப்போது கல்யாணமாகாமல் கன்னிகளை வெறித்துப் பார்க்கும் வேட்கை உள்ளவனாய் தான் இருந்தேன். மைனசும் மைனசும் சேர்ந்தால் பிளஸ் ஆகிற மாதிரி நட்புக்கு வால்வ்யூ கூடியது.

சார் எப்போ வந்தாரு என்ன சொல்லிட்டுப் போறாரு என்று மனைவி மைதிலி கேட்டாள்.

மூத்தவன் விக்னேஷ் தடால்லடியா அடாவடி காரியம் பண்ணிக் கஷ்டப்படுத்துறானாம், அழாத குறையா சொல்லிட்டு போறார் மனுஷன்.

உங்களை பஞ்சாயத்து பண்ண கூப்பிடுறாரா? நீங்க எங்கேயும் போய் நாட்டாண்மை பண்ண வேண்டாம். சரியா.,?

ஏன் அதுல என்ன தப்பு இருக்கு.?

சரியோ தப்போ ஒத்துவராத விஷயம். இவரை பொறுத்த வரையில் காம்ப்ரமைஸ் என்பது கழுதையை போன்றது. முன்னால் போனால் கடிக்கும் பின்னால் போனால் உதைக்கும். வேண்டாம் நீங்க போகாதீங்க.

அவருக்கு என்னை விட நீ தான் அதிகமா விசுவாசமா இருக்கனும். அவரு உன்னோட பாஸ் இல்லையா?

அது இருபது இருபத்திரெண்டு வருஷத்துக்கு முன்னால, இப்போ இல்லை. இன்றைக்கு நீங்கத்தான் பாஸ். சரியா?

ஆர்டர் போடுவதும் அதிகாரம் பண்ணுவதும் நீயாகத்தானே இருக்கே. என்னைப் போய் பாஸ் என்கிறே, என்றேன் சிரித்துக் கொண்டே.

முறைத்துப் பார்த்தாள். பார்வையில் முதிர்ந்த காதலும் அக்கறையும் தெரிந்தது.

கடந்து போன காலங்கள் சிலருக்கு கசப்பாக இருக்கும் சிலருக்கு கடினமாக இருக்கும் அதனை நினைத்து அசைபோட்டு பார்க்குற போது சில விஷயங்கள் நமக்கு நாமே எச்சில் உமிழும் கேவலத்துக்கும் படு மோசமாக இருக்கும். அப்படி என்னை நானே வெறுத்த சமயங்களும் உண்டு.

திருமணத்துக்கு முன் ஆர்வம் ஆசையாக பொங்க, ஆசைகள் திரண்டு அது காதலாக விஸ்வரூபம் எடுத்து உள்ளத்தையும் உடலையும் வாட்டி வதைக்கின்ற போது கல்லறைக்குள் இருந்து கொண்டு ஜன்னலைத் தேடும் அவஸ்தையாக இருக்கும். ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி பருவவயதின் பால் உணர்வானது சங்கடங்களைக் கொடுக்கும் சாபக்கேடு. மனதை கட்டுப்படுத்துவது தான் அதற்கான பரிகாரம்.

சபலம் சிலருக்கு ருசி மீது ஏற்படும். சிலருக்கு காமத்தின் பேரில் ஏற்படும். முன்னது வயிற்றுப் பசியை உண்டு பண்ணும், இரண்டாமது உடல் பசியை உண்டு பண்ணும். வயசு கோளாறால் வாலிபத்தின் காம உணர்ச்சியால் ஏற்படும் உடல் தாகத்தை தணிக்க நானும் ஒருபோது சல்லாபம் கொள்ள நினைத்தது உண்டு.

பார்க்கும் பெண்களெல்லாம் வசப்பட வேண்டும் என்று உள்ளம் ஆர்ப்பரிக்கும். ஆசைநாயகன் என்னும் பதவிக்கு ஆழகும் ஆண்மையும் இருந்தால் மட்டும் போதாது ஆளுமையில் அடாவடியும் அஞ்சாநெஞ்சனாகவும் இருக்க வேண்டும். அது எனக்கு ‘செட்’ டாகாத விஷயமாக இருந்தது.

அலுவலகத்தில் எனக்கு கீழே வேலைப்பார்க்கும் மாதவியை பார்க்குற போது இச்சைக்கூடிய ஆசைகள் ஆர்ப்பரிக்கும். அவள் திருமதி தான் ஆயினும் அவளின் அழகை பார்வையால் பருகும் போது திகட்டாத இனிப்பு உள்ளத்தில் ஊடுருவும். கருவண்டாய் அலைபாயும் கண்கள், ஒட்டு மாவடுவாய் எடுப்பான நாசி, அத்திப்பழ நிறமாய் ஆரஞ்சு அதரம், முந்தானையில் இலை மறைகாயாய் தனங்கள், மூடியும் மூடாமலிருக்கும் இடுப்பின் மினுமினுப்பு, தொடைகளின் வடிவங்களின் நடுவே விசிறி மடிப்பு கொசுவம் இவைகள் தாம் அவ்வப்போது என்னை தடுமாற வைக்கும். அவளிடம் உறுத்தலான ஒரு விஷயம் இருக்கிறதென்றால் அது அவள் கழுத்தில் தொங்கும் மஞ்சள் கயிறுதான். கன்னியம் கருதி தடம் மாறாமல் என் கற்பு நெறியை கடைப்பிடித்தேன். அது தான் எனக்கு பின்னாளில் கௌரவத்தின் கிரீடமாக இருந்தது.

மனசுக்குப் பிடித்தமானவள் மற்றொருவனிடம் பேசிப்பழகினால் சகித்து கொள்ள முடியவில்லை. அன்று சேதுராமன் எனது அலுவலகத்தில் மாதவியின் அருகில் உட்கார்ந்து சிரித்து பேசிக்கொண்டிருந்தான். பார்த்ததும் பொறாமையால் அடிவயிறு பந்தாக சுருட்டிக் கொண்டது.

இவன் எப்படி? இங்கே? இவளிடம்? என்ற கேள்விக்கனைகள் இதயத்துக்குள் குத்தி குடைந்தது. மாதவி எனக்கு காதலியும் கிடையாது மனைவியும் கிடையாது பின் ஏனிந்த பொறுமல்.? அப்போது புரியவில்லை. இதயத்தின் தாகம் என்று இப்போது புரிந்தது.

மாதவியிடம் அலுவலக வேலையாக பேசியிருக்கிறேன். அவளும் சமயத்தில் எனது மேஜை அருகே வந்து சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றிருக்கிறாள். மற்றபடி சொந்த விஷயம் எதுவும் பேசியது கிடையாது. ஆனால் ஆசையும் ஆவலும் சேர்ந்து மனசு ‘ஜொள்ளு’ விடும்.

அதிகாரத்தின் பேரில் கீழ்நிலை பணியாளர்களிடம் கெட்டப் பெயர் வாங்கினாலும் மேநிலை அலுவலரிடம் நல்ல பெயர் வாங்குவதில் முனைப்புடன் இருப்பேன். அது பதவி அதிகாரத்துக்குப் பொருந்தும் பல்லைக் காட்டுவதற்கு பொருந்தாதல்லவா? வேலையிலும் சரி ‘விவகாரத்திலும்’ சரி அலுவலகத்தில் முறைகேடு செய்வது என்பது எனக்குப் பிடிக்காது. செய்பவர்களை அறவே பிடிக்காது.

சில சந்தர்ப்பங்களில் மாதவி வேலையில் குறை வைத்திருந்தாலும் வேலையே செய்யாமல் இருந்தாலும்…

மாதவியிடம் என்னால் கண்டிப்புடன் நடந்து கொள்ள முடியறதில்லை. காரணம் அவளுடைய வனப்பும் ஈர்ப்பும் தான். சிற்றின்பத்தின் விளைவாக அவள் மீது ஆசைகள் அதிகரிக்கும் போது அவளை காதலித்தால் என்ன? கல்யாணம் செய்து கொண்டால் என்ன? மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்று அனுபவம் இல்லாமலா சொல்லி வைத்தார்கள்? கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்., மாதவி மனசை மாற்ற முடியாதா என்ன? என்ற சிந்தனைகள் இதயத்துக்குள் வேரூன்றும் போது அவளை விவாகரத்து வாங்கி வரச்சொல்லி கல்யாணம் பண்ணிக்கலாம் என்ற விபரீத எண்ணமும் உதயமாகும்.

நட்பு கொண்ட புதிதில் சேதுராமனின் உதவியுடன் அல்லது ஒத்துழைப்புடன் கலவி பாடத்தை படிக்க எனக்குள்ளும் ஆசை பிறக்கும். அது குறித்து சேதுராமனிடம் பேச விழையும் போது அந்த விருப்பத்தை தயக்கம், பயம், சமூக அந்தஸ்து மூன்றும் சேர்ந்து பூதாகாரமாய் நின்று அச்சுறுத்தும்.

இருப்பினும் ஆவலாக இருக்கும் மனதை அடக்கி வைக்கும் பொருட்டு ‘ஒரு தடவை மட்டும்’ என்ற விருப்பத்தில் தயங்கி தயங்கி எண்ணத்தை வெளிப்படுத்தினேன். கல்யாணம் ஆனால் எல்லாம் சரியாகும் என்றான். சாத்தான் வேதம் ஓதுது என்று மனதுக்குள் அவரை திட்டி கொண்டு, மாதவி பேரில் உண்டான பழக்கத்தின் உண்மை தன்மையை கேட்டு நச்சரித்தேன். சிரித்து மழுப்பியதோடு அல்லாமல் தான் அப்படிப்பட்டவன் இல்லை என்று சாதித்தான். பொய் சொல்லுகிறாய் என்று குறை சொன்னேன்.

குற்றம் சாட்டும் போது நியாயமாக ரோஷம் வந்திருக்க வேண்டும் அது ஏற்படாத பட்சத்தில் உண்மையின் சொரூபம் சிரிப்புக்குள் மறைந்து இருப்பது தெரிந்தது. ஏமாற்றுக்காரன் ஒருவனின் மனம் பல உளவியல் தந்திரங்களை செய்யும். அதில் முதலாவது தங்களின் தப்புக்குண்டான தடயங்களை மறைக்க எந்த ஒரு எல்லைக்கும் செல்வார். இரண்டாவதாக ஏமாற்றுபவர் தங்களுடன் கூட்டாளிகளை கூட்டு சேர்க்கவோ சேர்க்கை விவரங்களை பகிர்ந்து கொள்ளவோ மாட்டார். இப்போது தெரிந்த விஷயம் அப்போது அறிவுக்குப் புலப்படவில்லை.

ஆசைக்கும் காதலுக்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் வேளையில் தான் மைதிலி எனக்கு மனைவியாகக் கிடைத்தாள்.

தலைச்சன் குழந்தை பெண்ணாகப் பிறந்தால் அது குடும்பத்துக்கு சுபிக்ஷத்தை கொடுக்கும் என்பார்கள். மைதிலி பிறந்தவுடன் அப்படித்தான் இருந்தது. அடுத்தடுத்து குழந்தைகள் பிறப்பும், படிப்பு பராமரிப்பு செலவும் வருமான பற்றாக்குறையும் தொடர்ந்து இருக்க சான் ஏறினால் முழம் வழுக்கும் என்னும் கோட்பாட்டில் குடும்ப நிலை கீழே சரிந்தது.

குடும்பத்தின் வறுமையால் அவளால் பிளஸ்டு க்கு மேல் படிக்க முடியவில்லை. ஏழ்மை நிலையில் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாய நிலைக்கு உள்ளானாள். சாந்த முகம் அமைதியான தோற்றம் எளிமையான உடை நெற்றியில் மிளகளவு பொட்டு கீழே விபூதி கீற்று இவைகளெல்லாம் அவளின் அழகுக்கு அழகு சேர்த்தது. முதல் பார்வையிலேயே மனதைப் பறிகொடுத்தேன். மரத்துக்கு மரம் தாவும் குரங்கு போல ஆசைகள் அலைபாய்ந்தது.

பெண்கள் விஷயமாக மேலும் தொல்லைக் கொடுக்க எண்ணி சேதுராமனின் இ – சர்வீஸ் சென்டருக்குச் சென்ற போது தான் மைதிலியை சந்தித்தேன். அவ்வேளை கொஞ்சம் ஃப்ரியாக இருந்தது. ஆனால் சேதுராமன் இல்லை. தயங்கிய போது உங்களுக்கு என்ன வேணும் என்று கேட்டாள். கேட்டவளை ஏறிட்டுப் பார்த்தேன்

அட இங்க ஒரு தேவதை இருக்கே. கல்யாணம் ஆகாமல் கண்ணுக்கு லட்சணமா அழகா இருக்காளே, கல்யாணம் ஆனவளை நினைத்து ஏங்குவதை விட இவளை அடைய ஏன் முயற்சி பண்னக் கூடாது.,? என் மனசு குரங்காய் மாறியது.

சொல்லுங்க உங்களுக்கு என்ன வேணும்? மறுபடியும் ஒலித்தது.

குரல் கூட இனிமையாக இருக்கிறது. அதன்டு பேசமாட்டாள் போலும் நினைத்துக் கொண்டு தயக்கத்துடன் இல்ல சேதுராமனை பார்க்கனும் என்றேன்.

அவர் வெளியே போயிருக்கார், உங்களுக்கு என்ன வேணும்.

அப்புறம் வந்து பார்க்குறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். யாரோ இவளை மைதிலி என்று விளிக்கும் போது ‘மைதிலி’ பெயர் பசக்கென்று நெஞ்சில் ஒட்டிக்கொண்டு மனசு மைதிலியையே சுற்றிக் கொண்டிருந்தது.

அன்பாய் இருப்பவர்கள் ஏழ்மையின் அழகை நேசிப்பார்கள். ஆடம்பரமாய் இருப்பவர்கள் பணக்காரத் தோரணையை விரும்புவார்கள். வளர்ந்த சூழ்நிலையும் வாழ்ந்த வசதியையும் பொறுத்து விருப்பமும் வேறுபடுகிறது.

விருப்பம் வறுத்தெடுக்கும் போது கால்கள் மைதிலியை தேடி வேகமெடுத்தது. இரண்டொருமுறை வலியச் சென்று பேச்சுக் கொடுத்தேன். மூன்று நான்கு இளம்பெண்கள் வேலைப் பார்க்குற இடத்தில் நான் மைதிலியை நாடிச் செல்வதும் மைதிலிக்காக வெயிட் பண்ணுவதும் சந்தோஷமாக இருந்தது.

டாக்குமெண்ட் ஒன்று டைப் செய்ய மேட்டர் கொடுத்த போது அதைப் பார்த்தவள் டிரெஷரி வொர்க் மாதிரி இருக்கே, சரியா என்று கேட்டாள்.

ஆமாம் ரொம்பவும் கேர்ஃபுல்லா செய்யனும்.

ஓ.. நீங்க டிரெஷரில் தான் வேலை பார்க்குறீங்களா.,?

எஸ். சீனியர் செக்‌ஷன் ஹெட். பெருமையாக அவள் மனதை வருடும்படி சொன்னேன்.

டைப்பிஸ்ட் இருப்பாங்களே.. சரியா.?

அ..ஆ.. இருங்காங்க. ஆனா.. அது..வ..ந்.. இந்த கேள்வியை எதிர்ப்பார்க்காத நான் கொஞ்சம் தடுமாறினேன். பிறகு இருக்காங்க. ஆனா.. அது..வ..ந்.. வந்து அஆ அவங்களுக்கு விரல்ல படுவம் இது கொஞ்சம் அர்ஜன்ட் ஒர்க் அதான்.. என்றேன்.

பொய் என்று தெரிந்து மெல்லியதாக சிரித்துக் கொண்டு பியூன்கிட்ட கொடுத்து விட்டிருக்கலாமே.. என்று கேட்டாள்.

…நான் மேலும் ஒரு பொய்யை தேடிக் கொண்டிருக்கையில்

என்ன சரியா.? என்று கேட்டாள்.

அஆ.. சரிதான். ஆனா இது அர்ஜன்ட் ஒர்க்.. ன்னு சொன்னேனே.

சரி.. நீங்க போங்க. நான் டைப் மேட்டரை சார் கிட்ட கொடுத்தனுப்புறேன். சரியா.?

இல்ல நான் இருந்து வெயிட் பண்ணி வாங்கிட்டுப் போறேன். அர்ஜென்ட் ஒர்க் மட்டுமல்ல கான்ஃபிடன்ஸ்ஸும் கூட. வீணா பாவம் அவருக்கு ஏன் சிரமம்.

ஐய்யோ.. அவருக்கு சிரம்மெல்லாம் கிடையாது. இதை ஒரு வாய்ப்பா கருதி ரொம்ப இன்ட்ரெஸ்டா செய்வாரு.

ஏன் அப்படி.,?

உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோன்னு எனக்கு தெரியலை. தெரிய வருகிறபோது ஏன்னு நீங்களே புரிஞ்சுக்குவீங்க .. சரியா.?

ஒரு வேளை மாதவிக்கும் சேதுராமனுக்கும் இடையே உள்ள உறவைப் பற்றி நாசுக்கா சொல்றாளோ.. கில்லாடி தாம்,

மாதவியிடம் கூடாஉறவு கிட்டாத போதிலும் நன்மையே என்று ஆறுதல் கொள்ளாமல் எப்படி சேதுராமனால் மட்டும் இப்படியெல்லாம் நடந்து கொள்ள முடிகிறது என்ற ஆதங்கம் மேலோங்கும் நிலையில் மைதிலி மயில் தோகையாய் மனதை வருடினாள். அவளிடமிருந்து நட்பு கிடைத்தது என்பதை விட காதல் கிடைத்தது என்று சொல்லலாம். எனக்கொரு காதலி கிடைத்து விட்டாள் என்ற மகிழ்ச்சியில் வாழ்க்கையில் பிடிப்பு ஏற்பட்டது. இருப்பினும் கல்யாண வயதில் ‘அது’ ஆகாத நிலையில் ஆசைகளும் ஆர்வமும் ஏற்படுவது பருவகாலத்தின் விளைச்சலாய் இருந்தது.

பருவத்தின் அறுவடை காலமாய் எனக்கு கல்யாணம் ஆயிற்று. அதற்கு காரணமானவர் சேதுராமன் தான். அவர் தான் மைதிலி வீட்டுக்கும் என் வீட்டுக்கும் நடையாய் நடந்து காதலுக்கும் பிடிவாதத்துக்கும் சமரசம் செய்து கல்யாணத்தை நடத்தினார்.

அதற்கு முன்பாக மற்றொரு தடவை மைதிலியை சந்திக்க சென்ற போது…

என்ன சார்.. முன்ன ஒரு நாள் டைப்பிஸ்டுக்கு விரல்ல படுவம் இப்போ என்ன பியூனுக்கு கால்ல ஆணியா? அவரால நடக்க முடியாதா? என்ன சரியா என்று கேட்டு சிரித்தாள். சிலந்தி வலைக்குள் சிக்கிய பூச்சிப்போல அந்த சிரிப்புக்குள் நான் சிக்கிக்கொண்டேன்.

இல்ல.. நான் சேதுராமனை பார்க்கனும் என்றேன்.

பக்கத்தில் இருந்த ஒருத்தி நமட்டு சிரிப்புடன் இன்னோருத்தியிடம் ஏய்.. நம்ம பாஸ் மாதவிக்காக ட்ரெஷரிக்கு போறதும் ட்ரெஷரி ஆபிசர் மைதிலிக்காக இங்க வர்றதும் வேடிக்கையா இருக்குல்ல என்று கிசுக்சுக்கவும் வேடிக்கை இல்ல.. வாடிக்கை.என்று நையாண்டி பேசவும்

ச்சூ.. கொஞ்ச நேரம் பேசாமல் இருக்க மாட்டீங்களா. என சிடுசிடுத்து அவர்களின் பேச்சினை தடுத்து நிறுத்தினாள் மைதிலி. அப்போது மைதிலியின் மனத்திரையில் நிழலாய் என் உருவத்தைப் பார்த்தேன். அவளின் இதயத்தில் எங்கோ ஒரு மூலையில் நான் இருப்பது எனக்கு தெரிய வந்த போது எனது உற்சாகம் அளவில்லாமல் ஆனது.

சார்.. அவர் இல்லை. எங்கேயோ வெளியில் போயிருக்கார். வந்ததும் நீங்க வந்ததா சொல்றோம். சரியா என்றாள்.

அடுத்த இரண்டு நாளில் சேதுராமன் என்னிடம் தன்னை தேடிவந்த விவரத்தை கேட்கவும் பாவி.. நான் உன்னை எதுக்குப் பார்க்கனும், நான் மைதிலியை பார்க்க வந்தேன் பொய்க்காக உன்னை சொன்னேன் என்று நினைத்து யோசித்தேன். இவனிடம் சொல்லுவதில் தவறில்லை என்று முடிவெடுத்து மைதிலியை விரும்புவதாகவும் கல்யாணம் செய்து கொள்ள ஆசைப் படுவதாகவும் சொன்னேன். எனக்காகவோ இல்லை மைதிலிக்காகவோ இல்லை நட்புக்காகவோ முழுமூச்சில் ஈடுபட்டார். நல்ல வேளையாக அவள் கண்களிலும் கடவுளிடத்திலும் கருணை பிறந்தது.

கல்யாண பத்திரிக்கை வைக்க ரெண்டுபேரும் சேதுராமன் வீட்டுக்குச் சென்றோம். அண்ணி.. அண்ணி.. என்று அழைத்தப்படி வீட்டுக்குள் சென்றாள் மைதிலி. அண்ணி கலகலப்பாக பேசி மகிழ்ச்சியினை தெரிவித்தார்.

அது என்ன அண்ணி.,? அக்கான்னு கூப்பிடலாம், இல்ல மேடமுன்னு கூப்பிடலாம்! ஒரு வேளை தூ..ரத்து சொந்தமா என்று சந்தேகத்துடன் கேட்டப் போது அருமையான விளக்கம் கொடுத்தாள்.

அதெல்லாம் ஒண்ணுமில்ல, சேதுராமன் சாரை நான் முதலில் அண்ணான்னு அழைத்தபோது அவர் விரும்பலை. மாத்தி யோசித்து சார்ன்னு அழைக்கிற போது முதலாளி ஸ்தானத்தில் சுயவிருப்பத்தை திணிக்க நினைத்தார். இதனை எதிர்க்கும் விதத்திலும் அவரின் நடத்தையை வெளிப்படுத்தும் விதத்திலும் மேடத்திடம் பழக்கம் வைத்துக் கொண்டேன். அவர் கொஞ்சம் பய உணர்ச்சிக்கு ஆளானதை தெரிந்து அண்ணி என்று அழுத்தமாக அழைத்துப் பேசிப்பழகினேன். அக்கான்னு கூப்பிட்டால் அவருக்கு மச்சினிச்சி நினைப்பு வரும். அண்ணி என்றால் தங்கச்சி எண்ணம் தோணும். தப்பான கண்ணோட்டம் ஏற்படாது. அதான் அண்ணி.. சரியா.?

எனக்கு அவளை நினைக்க பெருமையாக இருந்தது. எனது காதல் உணர்வுகளுடன் அவளின் கருத்தை ஒப்பிடும் போது என் மனமும் முகமும் கறுத்து சிறுத்து போனது. பக்கத்தில் நடந்து வந்த மைதிலி நான் மௌனமானதை கண்டு முன்னாள் வளைந்து என் முகத்தை உற்றுப்பார்த்து என்ன ஆச்சு.? எல்லாம் சரிதானே என்று கேட்டாள்.

ம். . சரி தான். ஆனால் ஏன் அவர் இப்படி நடந்து கொள்கிறார்.? அவருக்கு குடும்பம் இருப்பது எனக்குத் தெரியாது. மனைவி புள்ளைங்க ரெண்டுபேர் இருக்கும் போது எப்படி அவரால் குடும்ப துரோகம் செய்ய முடியுது.?

ஆரம்பத்தில் மாதவிக்கும் சேதுராமனுக்கும் இடையே உள்ள சினேகித உறவு வரயறையைத் தாண்டி உடலுறவுக்கு படுக்கையறை வரையில் நுழைந்த விஷயம் கோமதிக்குத் தெரியாது. தெரிய வந்த போது அடக்கு முறைக்கும் ஆதரவற்ற நிலைக்கும் தள்ளப்பட்டாள். எனக்கு பரிதாபம் ஏற்பட்டது. சின்னக் குழந்தைகளை வைத்துக் கொண்டு அவள் என்ன செய்வாள்.?

ஒரு நாள் அனுசரனை தேடி அண்ணா நீங்க அவர் கூட சினேகிதம் வச்சுரிக்கீங்களே எது நல்லது எது கெட்டதுன்னு எடுத்துச் சொல்லி புரியவைக்கக் கூடாதா என்று கேட்டாள்.

இதுவும் கடந்து போகும் நீ மனசை தளறவிடாதே, ஏதோ பொறாத காலம் சகவாசம் வச்சுக்கிட்டான் சட்டுன்னு விட்டுட்டு வரமுடியாது. கெட்ட சகவாசம் என்பது புலிவாலை பிடித்த மாதிரி, கொஞ்சம் கொஞ்சமாய் பட்டு திருந்துவார் அதுவரையில் நீ பொறுமையாக இரும்மா.

எப்படிண்ணா நான் சும்மா இருக்கிறது ஒரு புள்ளைக்கு இரண்டா பெத்தெடுத்தும் திருந்தலைன்னா என்ன ஜென்மம் அவர் அப்படி என்னத்த காணாததை கண்டிட்டார் அவ காலடியே கதின்னு கிடக்கிறார் என்று அங்கலாய்க்கும் போது. . .

என்னை மாதிரியா அவர். . ஆரம்பத்தில் அவளிடம் தானே காணாததைக் கண்டான் என்று நினைத்து, இவனை குத்தம் சொல்லி என்ன பிரயோஜனம் எல்லாம் அவளை சொல்லனும் கண்டும் காணாமல் போய்கிட்டு இருக்கானே அவ புருஷனை சொல்லனும், இப்படிப்பட்ட கேடு கெட்டவர்கள் இருக்கிறதால் தான் நல்லவர்கள் கூட பொல்லாதவராகி விடுகிறார்கள் என்று உத்தமனாய் நியாயம் சொன்னேன்.

நல்ல வேளையாக சேதுராமனை போல் பசுத்தோல் போர்த்திய புலியாகவோ இல்ல நரியாகவோ வேடமிடும் கதிக்கு நான் ஆளாகவில்லை. இருந்திருந்தால் சமூக அந்தஸ்தும் பொருளாதாரமும் மேம்பட்டிருக்காது என்று நினைத்துக் கொள்வேன்.

காணாத சொர்க்கத்தை சாந்தி முகூர்த்தம் காட்டியது. அந்த சுகமான கூடல்கள் உள்ளத்துக்குள் பனிச்சாரலாக படிந்து குளிர்ச்சியான இன்பத்தை கொடுத்தது. காம உணர்வால் தொடர்ந்து உடல் சூடேறவும், பனிச்சாரலால் அது குளிரவும், பின் மீண்டும் சூடு வியாபித்து தகிக்கவும் அது அணைப்பில் விடுதலை பெறுவதுமான நிகழ்வுகள் நிலைத்து நின்று வாழ்வியல் அர்த்தத்தையும் தத்துவத்தையும் உணர்த்தியது.

தப்பான சேர்க்கையின் போது மிகக் கவனமாக இருப்பவர்கள் தாம் பின்னாளில் பகீரங்க குற்றவாளியாக குடும்ப கூண்டில் சட்டத்தால் விதிக்கப்படாத தண்டனையை பெறுவார். இப்போ சேதுராமன் அந்த நிலமைக்கு வந்து விட்டார். சுயநலத்துடன் துணைப்போனது தப்பான காரியமாக தோன்றியது. ஒரு வேளை உரிமை எடுத்து தவறைச் சுட்டிக்காட்டியிருந்தால் அந்த பழக்கத்தை கைவிட்டிருப்பாரோ?! ஏனோ எனக்குள் உறுத்தலாயிருந்தது.

வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர் கஷ்டப்படுபவர் திறமைசாலி என்றெல்லாம் பெயர் சூட்டிக்கொண்டவர் ‘சின்னவீட்டால்’ சின்னா பின்னமாகி விட்டார்.

நண்பர் ஏற்கனவே ஒரு கற்பனையை வைத்திருப்பார் போலும். அவர் தம் துணைவியாரிடம் எந்த சந்தேகமும் வராத வகையில் நடந்து கொண்டது ஆச்சரியத்தை கொடுத்தது.சந்தர்ப்பவசத்தால் ஏற்படும் சந்தேகத்தை நிவர்த்திக்கும் போது தனக்குள் எந்த ரகசியமும் இல்லை என்ற வகையில் பேசி நம்பவைப்பது துரோகத்தின் உச்சக்கட்டம்.

இப்படி ஏமாற்றுபவர்கள் ஒரு பேட்டர்ன் வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். இந்த பேட்டர்னை அடையாளம் காண்பது கடினமயினும் சாத்தியமற்றதல்ல என்று அவரது துணைவியாருக்கு தெளிவுப் படுத்தியிருக்க வேண்டும். நண்பராய் ஒரு கட்டத்தில் தயங்கி இருந்தாலும் குடும்ப நண்பராய் ஆனபோது இதனை பட்டவர்த்தனமாக இல்லையாயினும் சூசகமாவது உணர்த்தி இருக்க வேண்டும். இன்று குடும்பம் பிளவு பட்டிருக்காது. சேதுராமனுடன் நானும் சேர்ந்து குற்றவாளிக் கூண்டில் நிற்பதாக உடல் கூசியது.

காலம் கடந்த ஞானம் கடலுக்குள் மூழ்கிய கப்பல் போன்றது. தொலைந்து போனதை மீட்க முடியாது. முயற்சி செய்யும் விதத்தில் விக்னேஷிடம் பேசினேன்.

விக்னேஷ் உன் அப்பா உன்னை நினைத்து ரொம்ப கவலைப் படுகிறார். உம் தகாத நடவடிக்கையை கண்டு மனம் கலங்கி கண்ணீர் வடிக்கிறார். நீ ஏன் அவரை போலீஸ், கோர்ட் ன்னு இழுக்குறே மோசடி செய்து வீட்டை அபகரிக்கிறே, சதிதிட்டம் போட்டு பெற்றவர்களுக்கு துரோகம் பண்றே.. என்று நியாயம் கேட்டேன்.

யேன் அங்கிள் அவர் நடந்துகுறது மட்டும் சரியா? சம்பாதிக்கிறேன் என்கிற பேருல சம்பாத்தியத்தை கண்டவகிட்ட கொடுக்குறாரு ஏன்னு கேட்டால் நான் சம்பாதிக்க்கிறேன் அப்படித்தான் நடந்துக்குவேன் என்கிறார்.

தாத்தா கொடுத்த நிலத்தையும் தோட்டத்தையும் வித்து அழிச்சுட்டார். பிசினஸ் முன்னப்போல இல்லை போட்டி சர்வீஸ் சென்டர்கள் நிறைய வந்து வருமானமும் குறைஞ்சுப் போச்சு. உருப்படியா எங்களை படிக்க வச்சு நல்லதொரு வேலைக்கு அனுப்பலை.

அமுதனுக்கு கொஞ்சம் கம்ப்யூட்டர் நாலட்ஜ் இருக்குறதால, அவர் பார்த்து வந்த பிசினஸை அவன் பிடுங்கிக்கிட்டான். இருக்குறது இந்த ஒரு வீடுதான் இதையும் அழிச்சுட்டு எங்களை தெருவுல வுட பார்க்குறாரு. என்னை நம்பி வந்தவளை வீடு வீடா பிச்சை எடுக்க வைக்குறதா அதான் உஷாராயிட்டேன். வஞ்சகமா பேசி வூட்டை என் பேர்ல மாத்திக்கிட்டேன்.

போர்ஜரி பண்ணி பேங்க் பேலன்ஸை காலி பண்ணினேன்.

அவரைப் போல நான் கெட்ட வழியில் போய் அழிக்க நினைக்கலை, இருக்குறதை காப்பாற்ற போராடிகிட்டு இருக்கேன் என்றான். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. சேதுராமன் என்னிடம் பொய் சொல்லியிருக்கக் கூடாது.

“ஆன முதலில் அதிகம் செலவானால்
மானமிழந்து மதிகெட்டு போன திசை
எல்லார்க்கும் கள்ளனாய் எழுபிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லானாம் நாடு ”

ஔவையார் கூறிய நல்வழி கருத்து தான் ஞாபகத்துக்கு வந்தது. இதில் “ஆன காமத்தால் கண்டபடி சுற்றினால்” என்று முதல் வரியை மட்டும் மாற்றிக் கொள்ள வேண்டும். என்ன சரியா?!.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *