கல்யாண வயசில் ஒரு பிள்ளை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 10,768 
 

மல்லேஸ்வரம் எட்டாவது குறுக்குச் சந்தில் நடைப் பயிற்சியாகப் போய்க்கொண்டு இருந்தேன். கன்னிகாபரமேஸ்வரி கோயிலை நெருங்கிய போது, யாரோ என் முதுகைத்தொட்டதை உணர்ந்து, திரும்பிப் பார்த்தேன். ஒரு பெரியவர், ‘‘நீங்கள் தமிழர்தானே?’’ என்று கேட்டார்.

‘‘ஆமாம். எப்படிக் கண்டுபிடிச்சீங்க?’’ என்று புன்னகைத்தேன்.

‘‘உங்களை மூணு நாலு தடவையா கவனிச்சிட்டு வரேன். உங்க முகத்தைப் பார்த்து, நீங்க தமிழராகத்தான் இருக்கணும்னு யூகிச்சேன். உங்க சொந்த ஊர் எது?’’ என்று கேட்டார்.

‘‘வட ஆற்காடு ஜில்லா வேலூர் எனக்குப் பூர்விகம். ஆனா, வேலை நிமித்தமா நாடு பூராவும் சுத்திட்டிருந்ததால, ஊர்ப் பக்கம் போயே 25 வருஷங்களுக்கு மேல் ஆச்சு. இப்போ பிள்ளையுடன் பெங்களூர் வாசம்’’ என்றேன்.

‘‘உங்களை ஒண்ணு கேக்கணுமே?’’

‘‘கேளுங்களேன்…’’

‘‘கல்யாண வயசில் எனக்கொரு பையன் இருக்கான். உங்களுக்குத் தெரிஞ்ச பொண்ணு யாராவது இருந்தா சொல்லுங்களேன்!’’

‘‘நீங்க எங்கே இருக் கீங்க?’’

‘‘சம்பிகே ரோட்டில், 8&வது 9&வது க்ராஸ் ரோட்டுக்கு நடுவிலே ஒரு குட்டிச் சந்தில், மூணாவது வீடு. எங்க சந்துக்கு நேர் எதிரே ஒரு ஸ்வீட் கடை இருக்கு. நல்ல குடும்பத்தைச் சேர்ந்த, அடக்கமான பொண்ணா இருந்தா…’’

‘‘அது இருக்கட்டும். நீங்க முக்கியமா பையனைப் பத்தி ஒண்ணுமே சொல்லலையே? அவன் வயசு என்ன, என்ன படிச் சிருக்கான், எங்கே வேலை செய்யறான், சம்பளம் எவ்வளவு, என்ன மாதிரி பெண் எதிர்பார்க்கிறான், பெண் வேலைக்குப் போகணுமா, வேணாமா இப்படிப் பல விவரம் தெரிஞ்சாதானே அதுக்கேத்த இடமா பார்க்க முடியும்?’’ என்றேன்.

‘‘பையன் பேர் கிரி. வயசு 26. படிப்பு பி.டெக்., விப்ரோவில் வேலை. சம்பளம் 40,000. உயரம் 5 அடி, 8 அங்குலம். தங்க மான பையன்!’’

‘‘சரி, உங்க பேர்..?’’

‘‘ராமச்சந்திரன். நீங்க…’’

‘‘நான் நாகராஜன். சரி, உங்க அட்ரஸ் குடுங்க. இன்னும் ஒரு வாரத்துக் குள்ளே உங்களுக்குப் பெண் ணின் ஜாதகம் அனுப்ப ஏற் பாடு செய்யறேன்’’ என்று கூறிவிட்டுக் கோயிலுக்குள் போனேன். அவர் திரும்பிப் போய்விட்டார்.

என்னுடைய உறவினர் ஒருவர் பசவங்குடியில் இருந்தார். கல்யாண வயசில் ஒரு பெண் உண்டு. அதே போல் என் ரயில்வே சக ஊழியர் ஒருவர் அல்சூரில் இருந்தார். அவருக்கும் கல்யாண வயசில் ஒரு பெண். இரண்டு பேருக்கும் ராமச்சந்திரனின் விலாசத் தைக் கொடுத்து, பையனைப் பற்றிய விவரங்களைச் சொல்லி, ஜாதகம் அனுப்பச் சொன்னேன்.

நாலே நாளில் இருவரும் போன் செய்து, ஜாதகம் அனுப்பிவிட்டதாகவும், பையன் ஜாதகம் கிடைத்ததும் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாகவும் சொன்னார்கள்.

ஒரு வாரத்துக்குப் பிறகு, ராமச்சந்தி ரனை வழியில் சந்தித்தேன். ‘‘ரொம்ப தேங்க்ஸ் சார்! நீங்க சொன்னதா ரெண்டு பேர்பெண்ஜாதகத்தை அனுப்பியிருக்காங்க. பதில் எழுதணும்’’ என்றார்.

‘‘ஏன்… பையன் ஜாதகத்தை அனுப்பலையா?’’ என்று கேட்டேன்.

அவர் தயங்கியபடியே, ‘‘பையன் ஜாதகம் தயாரா இல்லே. ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினீயர்கிட்டே பிறந்த தேதியும் நேரமும் தந்து, ஜாதகம் தயாரிக்கச் சொல்லி இருக்கேன்..!’’

எனக்குச் சற்றே கோபம் வந்தது. ‘‘என்ன போங்க… ஜாதகத்தைக்கூட வெச்சுக்காம யாராவது பொண்ணு வேணும்னு கேட்பாங்களா?’’ என்றேன்.

‘‘மன்னிச்சுடுங்க. இன்னும் ரெண்டே நாள்ல ஜாதகத்தை அனுப்பிடறேன்’’ என்று கூறிவிட்டு, அவசர அவசரமாகப் புறப்பட்டுப் போனார்.

மேலும் ஒரு வாரம் சென்றது. என் உறவினர், நண்பர் இருவருக்கும் போன் செய்து ஏதாவது தகவல் உண்டா என்று விசாரித்தேன். ‘‘ராமச்சந்திரனிடமிருந்து இன்னி வரைக்கும் ஒரு தகவலும் இல்லை’’ என இரண்டு பேருமே பதில் அளித்தனர். எனக்குப் பெருத்த ஏமாற்ற மாக இருந்தது. அவர் ஏன் இன்னும் ஜாதகம் அனுப்பாமல் இருக்கிறார்? தன் பையன் கல்யாண விஷயத்தில் அவருக்கு உண்மையில் அக்கறை இல்லையா? அல்லது, ஜாதகம் கணிப்பதில் தாமதமா?

மறுநாள் ‘வாக்’ போன போது, ராமச்சந்திரன் சிக்கினார்.

‘‘என்ன சார், இன்னும் ஜாதகம் அனுப்பலையாமே?’’ என்று சற்று சூடாகக் கேட்டேன்.

அவர் அசுவாரஸ்யமாகச் சொன்ன பதில் என்னை எரிச்சலூட்டியது. ‘‘சொல்றேனேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க… ஜாதகத்திலேயே எனக்கு நம்பிக்கை கிடையாது. மனப் பொருத்தம் இருந்தா போறுமே! பெண்ணைப் பெத்தவங்களை ஒரு நடை எங்க வீட்டுக்கு வந்து பையனைப் பார்க்கச் சொல்லுங்க. பிடிச்சிருந்தா, எங்களை அழைச்சிட்டுப் போய்ப் பெண்ணைக் காட் டட்டும். ஜாதகத்துக்காக ஏன் காத்திருக்கணும்?’’

‘‘உங்களுக்கு வேணா ஜாதகத்துல நம்பிக்கை இல்லாம இருக்கலாம் சார்! அதுக்காகப் பெண்ணைப் பெத்தவங்களும் அப்படி இருக்கணும்னு எதிர்பார்க்கக் கூடாது!’’ என்றேன் கடுமையாக.

‘‘தப்புதான். நாளைக்கே ஜாதகம் அனுப்பிடறேன்!’’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

அன்று ஞாயிற்றுக் கிழமை.

வழக்கம்போல் சம்பிகே சாலையில் நடந்துகொண்டு இருந்தேன். என் பார்வையில் ராமச்சந்திரன் சொல்லி யிருந்த ஸ்வீட் கடைபட்டது. நேர் எதிரே ஒரு சந்தும் இருந்தது. சிறிது யோசித்து விட்டு, அந்தச் சந்துக்குள் நுழைந்தேன். மூன்றாவது வீட்டு வாசலில், ‘ராமச்சந்திரன்’ என்ற பெயர்ப் பலகை காணப்பட்டது. ஆவலுடன் கதவைத் தட்டி, ‘‘சார்!’’ என்று கூப்பிட்டேன்.

கதவைத் திறந்துகொண்டு இளம் பெண் ஒருத்தி வந்தாள்.

‘‘யார் வேணும்?’’

‘‘ராமச்சந்திரன் இருக்காரா?’’

‘‘அப்பா வெளியே போயிருக்காரே!’’

‘‘கிரிங்கறது..?’’

‘‘என் அண்ணாதான். எதுக்கு அவனைப் பத்தி விசாரிக்கிறீங்க?’’

‘‘உங்க அப்பா அவனுக்கு யாராவது நல்ல பொண்ணு இருந்தா சொல்லச் சொன்னார். ரெண்டு ஜாதகம் சொன்னேன். ஆனா, ஏனோ தெரியலே… சார் அது விஷயமா எந்த ஆர்வமும் காட்டலே…’’ & நான் சொல்லி முடிப்பதற்குள், அந்தப் பெண் விக்கி விக்கி அழத் தொடங்கினாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

பிறகு அழுகையை நிறுத்திவிட்டுக் கண்களைத் துடைத்துக்கொண்டு சொன்னாள்…

‘‘ஸாரி அங்கிள்! அப்பா வால அடிக்கடி இதே பிரச்னை. சந்திக்கிறவங்க கிட்டே எல்லாம் ‘பைய னுக்கு வரன் வேணும்’னு கேட்டுட்டு இருக்கார். அப்பாவுக்கு புத்தி பிசகி டுச்சுன்னு நினைக்கிறேன்… ரொம்ப ஸாரி!’’

‘‘அதிருக்கட்டும்மா… கிரி..?’’

‘‘அதோ..!’’ என்று கை காட்டினாள்.

‘‘ஸ்கூட்டர் ஆக்ஸிடென்ட்டில் காலமாயிட்டான்! வர ஜனவரியோடு ஒரு வருஷம் பூர்த்தியாகுது!’’ என்றாள்.

அவள் கை காட்டிய இடத்தில், சுவரில் ஓர் இளைஞனின் பெரிய சைஸ் படம் மாட்டப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது.

வெளியான தேதி: 13 டிசம்பர் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *