கலியுகம்…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 5, 2023
பார்வையிட்டோர்: 1,786 
 
 

ஸ்ரீலதா, கையில் ஒரு புத்தகம் பேருக்கென்று வைத்துக்கொண்டிருந்தாள். ஆனால், அவளின் கவனம் அதில் கடுகளவு கூட இல்லை… உடம்பு சரி இல்லை என்று இரண்டு நாட்கள் பள்ளியும் செல்லவில்லை….

அம்மா அவ்வப்பொழுது ஸ்ரீலதாவை கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்… ” ஏன் ஏதோபோல இருக்கா? சரியில்லையே….” மனசு அடித்துக் கொண்டது அம்மாவிற்கு…… வெளி காட்டிக்கொள்ளவில்லை….

அன்று இரவு அம்மா அரை தூக்கத்தில் இருந்தாள் ஸ்ரீலதாவின் சிறு முனகல் சப்தம் கேட்டுக்கொண்டே இருந்தது….. அழுகிறாள் என்று தெளிவாய் தெரிந்தது அம்மாவிற்கு……

காலை…. “ஸ்ரீ…. இன்னிக்கு ஸ்கூல் போறியா? எப்படி இருக்கு உடம்பு?” மிகவும் கனிவோடு கேட்டுக்கொண்டே காபியுடன் வந்தாள் அம்மா….. “இன்னிக்கு ஒரு நாள் போகலேமா… நல்லா தூங்கணும் போல இருக்கு…. ” அம்மாவின் கையை பிடித்தவாறே கூறிய ஸ்ரீலதாவின் தலை முடியை வருடியவாறு….. “சரி… ரெஸ்ட் எடு… அப்பாவும் இன்னிக்கு மத்தியானம் ஊரிலிருந்து வந்திடுவா….” கூறிவிட்டு சமைக்க சென்றாள்.

“ஸ்ரீலதா அப்பா வருவதற்குள் இவ கிட்ட பேசிடனும்…..”முடிவெடுத்தாள்.

சமையல் முடித்தாள்…. கொஞ்சம் சோபாவில் சாய்ந்த அம்மா பக்கம் வந்த ஸ்ரீலதா,,,, ” உன் மடியிலே படுத்துக்கறேன்மா ” என்று கேட்டாள்…

“வா…ஸ்ரீ.. படுத்துக்கோ…. “என்று தன் 15 வயது பெண்ணை அழைத்து தன் மடியில் படுக்க வைத்தாள்.

ஓ ! என்று திடீரென்று அழ ஆரம்பித்த ஸ்ரீலதாவை தடவிக்கொடுத்து அம்மா…”என்ன அச்சு? ” என்றாள் பதட்டமாய்…

“அம்மா… எனக்கு நல்ல ஜுரம் இருந்தது…. இரண்டு நாளைக்கு முன்னாடி…நீதானே பக்கத்துக்கு வீட்டு சுப்ரியாவோட டாக்டர் சுந்தர் கிட்ட போசொன்னே…. நீ பாட்டியோட அவசரமா வெளியே போயிருந்த…. ” அப்பாவியாய் , அழுகுரலில் பேச ஆரம்பித்த ஸ்ரீலதாவை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அம்மா…

“ஆமாம்… அதுக்கென்ன…? “

“நாங்க ரெண்டுப் பேரும் போனோம்…. சுப்ரியாவை வெளியே உட்கார சொல்லிட்டு என்னை மட்டும் கூட்டார்…. நான் போனப்புறம் எனக்கு தெர்மோமீட்டர் வெச்சு பார்த்துட்டு, என் மேலே அங்கே இங்கே தொட்டு பார்த்தார். அப்புறம் என் டிரஸ் கிழட்டி ஏதோ டெஸ்ட் செய்யறேன்னு செய்தார்… எனக்கு ஒண்ணுமே புரியலே….. அப்படியே ஷாக் ஆயிட்டேன்… அப்புறம் ஒரு இன்ஜெக்ஷன் போட்டுட்டு …. சுப்ரியாவை கூப்டு ஒரு பிரெஸ் கிரிப்ஷன் கொடுத்தார்….வெளியே வந்துட்டோம்….. அவ கிட்ட ஒன்னும் சொல்ல முடியலே….. என்னமோ பண்ணித்து….. ” கொஞ்சம் கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு மேலும் பேச ஆரம்பித்தாள்….. “ அம்மா… அந்த டாக்டர் ஏன்மா அப்படி செய்தார்? உன் கிட்டே எப்படி சொல்றதுன்னு தெரியலே….. 3 நாளா எனக்குள்ளேயே அழுதுண்டிருந்தேன்மா ” முடித்து அம்மாவை கட்டிக் கொண்டாள் …..

அம்மாவின் கண்கள் சிவந்தன…. அவளின் முதல் வேலை ஸ்ரீலதாவை சமாதானப் படுத்துவது…

“ஸ்ரீ… இதோ பாரு….. நீ ஒன்னும் பயப்படாதே…….. அது தெரிஞ்ச டாக்டர்தான்….. நான் கேட்டுக்கறேன்….. நீ இதை மனசிலே போட்டு அலட்டிக்காதே கண்ணா….ஒரு கசப்பு மாத்திரை சாப்பிட்டு உடம்பு சரி ஆறதில்லையா…? அது போல நினைச்சுக்கோ….. அம்மா இருக்கேன்….. என் கிட்ட சொல்லிட்டே…. பார்த்துக்கறேன்…… நீ இனி அழக்கூடாது….. இதை மறந்துட்டு எப்போதும் போல இருக்கணும்….. அம்மா சொன்னா கேட்பயே…. ” ஸ்ரீலதாவின் கண்களை துடைத்து அவளை ஆசுவாசப் படுத்தி…. முதலில் அவளுக்கு சாப்பாடு ஊட்டினாள்……

துக்கம் தொண்டையை அடைத்தது…

“டாக்டர்… சுந்தர்….! சுமார் 30 வருடங்களாய் பழக்கம்…… சீ….! இவ்வளவு கீழ்தரமானவரா? கேவலம்….!! இத்தனைக்கும் இரண்டு வீடுகள் தள்ளிதான் அவர் கிளினிக், வீடு எல்லாம்….நம்பித்தானே குழந்தையை அனுப்பினேன்….. காய்ச்சல் அதிகம் என்று சொன்னாள்.. பாவம் 3 நாளா மனசிலே போட்டு துடிச்சிருக்கா….. அவருக்கும் இவள் வயதில் ஒரு பொண்ணு இருக்கு…… அந்த ஒரு எண்ணம் கூடவா இல்லை…..? நேத்து கூட பார்த்தேன் வாக்கிங் போகும் போது … தூ…! வக்கிர புத்தி….! என்ன செய்யலாம்…?. இவ அப்பா கிட்ட சொல்லலாமா? என் கிட்ட சொல்றதையே விரும்பாத ஸ்ரீலதா அப்பாக்கு தெரிந்தால்? நொறுங்கிடுவா! இப்போதைக்கு வேண்டாம்…. ஆனால்,, என்ன தண்டனை இந்த மாதிரி கேவல மனிதருக்கு? அப்படியே விட்டால்? ” சரி யோசிப்போம்…. சுதாரித்துக் கொண்டு அப்பொழுதுதான் தன் பாரத்தை இறக்கி வைத்த திருப்தியில் சற்று கண் அயர்ந்த ஸ்ரீலதா…பக்கத்தில் அமர்ந்து அவள் நெற்றியை தடவினாள் ஆனால் மனம் அடங்கவில்லை….! கொதித்தது….

“வெளியே யாரிடம் சொல்வது? சொன்னால் குழந்தை நிலை? கேஸ் போடலாம்.. ஆனால், இவ வாழ்க்கை ? ஆனால்? அவனை ( அவர் போய்விட்டது…) சும்மா விடக்கூடாது……. கண்கள் சிவந்தன…… ஸ்ரீக்கு அவன் கெட்டவன்… இனி இதுபோல நேரங்களில் எப்படி ரியாக்ட் செய்யவேண்டும் என்பதை சொல்லித்தரணும் …. பொறுமை அவசியம்… இப்போதைக்கு ஸ்ரீலதாவிற்கு ஆறுதலாய் நடந்துக்கணும்….. இது எந்த அளவிற்கு அவள் மனதை பாதிச்சிருக்குன்னு முழுசா தெரியலே…..தெய்வமா நினைத்துவணங்கவேண்டிய டாக்டர் இப்படி? அவமானம்……

சரி..!. அவர் வந்துவிடுவார்….. சமாளிக்கணும்……

ஸ்ரீலதா எழுந்தாள்…. அப்பா அதற்குள் வந்துவிட்டார்….. ஆனால் களைப்பாய் இருந்ததால் அப்படியே சாப்பிட்டு தூங்கிவிட்டார்….. அம்மா மெதுவாய் ஸ்ரீலதாவிடம் பேச்சு கொடுத்தாள்

“ஸ்ரீ… தூங்கினியா? இந்தா சூடா காபி சாப்பிடு…

இதோ பாரு…. அந்த டாக்டர் நல்லவன் இல்லை…. நான்தான் புரிஞ்சுக்கலே… சாரி கண்ணா…உன்னை அவன் கிட்ட போகசொல்லிருக்க கூடாது….. இனி இந்த மாதிரி ஒரு சூழ்நிலை வந்தால் யாராக இருந்தாலும் உன் செருப்பை எடுத்து அடி … இல்லைனா… உன் கைப்பக்கம் இருக்கும் எந்தப் பொருளாக இருந்தாலும் பரவாயில்லை ஒரே குத்து இல்லை அடி …. சரியா? பயப்படாதே…. இதை மறந்திடு… ஆனால் இது ஒரு பாடம்…. ஓகே… அப்பா வந்திருக்கா .. போய் பாரு… இதைப் பற்றி பேசாதே… அம்மா பார்த்துக்கறேன்…. “

“சரி மா….. தேங்க்யூ …. ” அம்மாவிற்கு ஒரு முத்தம் கொடுத்து சென்றாள் .

அவள் முகத்தில் ஒரு தெளிவு இருப்பதை கவனித்தாள் அம்மா.

ஸ்ரீலதாவிற்கு சமாதானம் சொன்னாளே தவிர இவளின் மனம் இன்னும் கொதித்தது….. பூஜை அறை சென்று குத்துவிளக்கு ஏற்றினாள்…. மனமார பகவானைப் பிரார்த்தனை செய்தாள்.

மறுநாள் காலை வெளியில் ஒரே கூட்டம்….. சப்தம் கேட்டு கதவைத் திறந்தனர்…

“பாவம்…. இப்படியா அல்ப ஆயிசுலே போய்ட்டாரு டாக்டர்…. யாரு இட்ட சாபமோ தெரியலே…! “

ஆம்… டாக்டர் . சுந்தர்.. இறந்துவிட்டான்…… கதறல், அழுகை, எல்லாம் முடிந்து மாலைக்குள் நிசப்தம்….

அம்மாவிற்கு தான் படித்தது நினைவிற்கு வந்தது… “கலியுகத்திலே ….! ஒருவன் தப்பு செய்தா அவனுக்கு தண்டனை அன்றே கொடுக்கும் தெய்வம்…. !” உண்மை என்று படித்த பொழுது நம்பவில்லை… இன்று…. கண்முன்….. ..

ஸ்ரீலதா அம்மாவிடம் வந்தாள் … ” ஸ்ரீ… !” என்று அவளை இறுக்க அணைத்துக் கொண்டாள் அம்மா..

ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு வந்தாள் ஸ்ரீலதா…….

காலச்சக்கரம் சுழன்றது…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *