ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே உறவினர் ஒருவரின் திருமண வீட்டுக்கு செல்வதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தோம். மணமகனும் மணமகளும் உத்தியோத்தர்கள். திருமணம் காலை பத்து மணிக்கும் பதினொருமணிக்கும் இடைப்பட்ட நல்வேளை. அதனால், வழமையாக வாரஇறுதியில் செய்யும் வேலைகளை முடித்துக்கொண்டு திருமணத்துக்கு போவது இலகுவாக இருந்தது.
திருமண மண்டபத்தை அடைந்தபோது, மோட்டார் சைக்கிளை நிறுத்துவதற்கு சரியான இடம்தேடி கண்கள் சுழன்ற போது: “அண்ணை இங்கே கொண்டாங்க, இந்த சைக்கிளுக்கு பின்னால நெருக்கமாக விடுங்க, கெல்மெற்றை கொண்டுபோங்க, “கான்டில் லொக்” போடவேண்டாம்” மண்டப செக்கியூரிட்டியின் குரலில் தென்படுவது வேண்டுதலா அல்லது கட்டளையா என்பதை உணரமுடியாமலேயே அவரின் கட்டளைக்கு பணிந்து பவ்வியமாக மோட்டார்சைக்கிளை அவர்சொன்னபடி நிறுத்தினேன். ஏனென்றால் நான் கொஞ்சம் நாகரீகமானவன் பாருங்கோ!!!
மோட்டார்சைக்கிளை மற்றவர் வண்டிகளுடன் அடுக்கியபின் மலங்க முழித்த எனக்கு செக்கியூரிட்டியின் அடுத்த கட்டளை குறிப்பறிந்து கிடைத்தது. “புங்குடுதீவு கலியாணம் முதல் மண்டபத்தில், கோப்பாய் கலியாணம் இரண்டாம் மண்டபத்தில்”
இப்பொழுது நான் ரொம்பவும் குழம்பி விட்டேன் நான் வந்த உறவினர் சுதுமலை அவர்கள் மாப்பிள்ளை வீடு. அவர்களின் பொம்பிளை யாழ்ப்பாணம் என்றல்லவோ சொன்னவர்கள்? என்னகக்குழப்பம் முகத்தில் தெரிய, “பொம்பிளை ஆக்கள் புங்குடுதீவு ஆக்கள்தான், இப்ப யாழ்ப்பாணத்தில் இருக்கினம் குழம்பாமல் வாங்கோ” என்ற மனைவியைப் பின்தொடர்ந்தேன்.
மண்டபத்துள் நுழையும்போதே என்னுடைய குழப்பம் பலரைத்தாக்கியிருப்பதை உணர்ந்து, “பொம்பிளை புங்குடுதீவுதான்… வாங்கோ வாங்கோ” என்று கூறியவாறு மண்டபத்துள் நுழைந்தோம். மண்டபத்தில் உறவினர்கள், உத்தியோகத்தர்கள் எனப்பலரை எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றமாயிருந்தது. மண்டபம் எதிர்பார்த்த அளவு நிரம்பி இருக்காததையிட்டு. என்னப்பா நிறையபேரை எதிர்பார்த்தேன்! ஆட்கள் குறைவாக இருக்கினம்.
“இப்பதானே பத்தரை மணி. எப்படியும் கலியாண வீட்டுச்சாப்பாட்டுக்கு பன்னிரண்டு மணியாகும்தானே?” என்ற மனைவியைப் பார்த்து, “கலியான வீடு பத்துக்கும் பதினொன்றுக்கும்இடையிலதானே?” என்ற என்னை ஏளனமாகப்பார்த்த மனைவி. “எல்லோரும் கணக்கான நேரத்துக்கு வருவினம் அட்சதையை போட்டு சாப்பிடபோகும்போது பாருங்கோவன்” என்றாள் மனைவி.
“அப்ப மாப்பிள்ளை ஊரறிய தாலிகட்ட மாட்டாரோ? அது சரி அவை இனி ஊரறிய தாலிகட்டினால்தான் என்ன?… இல்லாட்டி….. வேண்டாம், நமக்கேன் ஊர்வம்பு!” என மனதுள்ளேயே எண்ணிக்கொண்டேன்.
“ஏசி கோலில்” ஒரேமாதிரி உடை அணிந்த இரண்டு பையன்கள் குளிர்பாணம் வழங்கிக் கொண்டு வந்தார்கள். “என்னப்பா இப்ப இதுவும் ஒரு ஸ்ரைல் இப்ப மாப்பிள்ளையின் நண்பர்கள் எல்லோரும் ஓரேமாதிரி உடை அணிகிறது என்ன?” என்ற எனது குதர்க்கத்துக்கு, “ஐயோ அது கோல்க்காரன்களப்பா வரவர உங்ஙகளுக்கு மூளை மக்கிப்போகுது.” என்றாள். நானும் கபாலி பட ஸ்ரைலில் “மகிழ்ச்சி” என்றேன்.
மாப்பிள்ளை, வீடீயோக்காரன், போட்டோக்காரன், அழகுக்கலை நிபுணி என பல வில்லன்களை பொறுமையுடன் சமாளித்து பிரதான வில்லனான குருக்களிடம் இருந்து தாலியைப் பெற்று; வளைந்து மணமகளின் கழுத்தில் பிடித்துக்கொண்டு கொண்டு நிற்க பின்னால் நின்ற பெண்கள் தாலியை கட்டினார்கள், ம்ம்ம்…… இல்லை; சுரையைப் பூட்டினார்கள். என்னால் வீடியோ எடுப்பவர்களினதும் போட்டோ எடுப்பவர்களினதும் பின்புறங்களைத்தான் பார்க்க முடிந்தது. ஆனாலும் எனக்கு வந்த சந்தேகத்தை மனைவியிடம் கேட்டேன் “ஏனப்பா தாலிச்சுரை பூட்டுறதை கோல்க்காரர்கள் செய்யமாட்டினமோ? மனைவி முறைத்தாள். ஓ!! அப்படி செய்ய வீடியோகார அண்ணை விடமாட்டார் போல? என்று மனதுள் நினைத்துக்கொண்டேன்.
தற்செயலாக பின் திரும்பிப்பார்த்தேன்! மனைவியின் கருத்துக்கமைவாக நீண்ட இரண்டு “லைன்கள்” உருவாகியிருந்தன. ஒன்று அட்சதை போட்டு வரவை உறுதிப்படுத்த, மற்றையது சாப்பாட்டுக்காக: இப்ப நான் எந்த லைனுக்குப் போக?
ஒரு முடிவுடன் அட்சதை லைனின் முடிவிடத்தில் இணைந்துகொண்டோம். மிகவும் மெதுவாக பொறுமையுடன் மணமக்களை நோக்கி அடிமேல் அடிவைத்து முன்னேறிக்கொண்டிருந்தோம். திடீரென லைன் ஸ்தம்பித்து நின்றது. எட்டிப்பார்த்தேன். பெண்ணின் அலுவலக நண்பர்களாம் குழுப்போட்டோவுக்காக மணக்களின் கரையோரங்களிலும் முன்னுமாக அடுக்கப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.
எனக்கு பின்னால் நின்ற ஒருவர்: இந்த இடத்தில் உங்கள் குழப்பம் எனக்கு விளங்குகின்றது. “உங்களுக்கு வேண்டாம் குழப்பம் நான் நிற்பது எனது மனைவிக்கு பின்னால்தான். இப்ப உங்களுக்கு திருப்திதானே.” எனக்குப் பின்னால் நின்றவர் சொன்னார் “நல்ல காலம் அலுவல உத்தியோத்தர்கள் முழுப்பேரும் வரவில்லை.”
“ஏன் அண்ணை ஏதேனும் பிரச்சினையோ”
“இல்லை இல்லை இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை, அலுவலக நாட்கள் என்றால் அலுவலக நேரத்தில் நடந்தால் எல்லோரும் வருவினம். விடுமுறை என்றால் வீட்டுவேலைகள். அதுதான்”
நான் மீன்டும் “மகிழ்ச்சி” என்று மனதுள் நினைத்தவாறு மணமேடையை நோக்கினேன். பாவம் வீடியோக்காரர், சினிமாபட ஒளிப்பதிவாளர் கூட இப்படி மினக்கிட மாட்டாங்கள். வீடியோகமராவின் டிஸ்பிளேயின் ஊடாக யாரைத்தேடுகின்றான் என்றுதான் தெரியவில்லை. நீண்ட நேரமாக தேடுகின்றான். அவனது தேடலில், எனது பொறுமை கட்டுடைத்து வெளியேற எத்தனிக்கிறது. இருந்தும் பொறுமையுடன் இருந்தேன்: ஏனென்றால் நான் கொஞ்சம் நாகரீகமானவன்!!!
“உதென்னப்பா முன்னுக்கு இருந்ததுகள் இடைக்கால பூருதுகள்.” என்ற எனக்கு பக்கத்தில் நின்றவர் சொன்னார், “அவைக்கு பதிலா ஒருவர் லைனில் வந்தவர். அவையின்ர ஆட்கள் ஒன்றாகப் படமெடுக்கவேணுமாம்” பக்கத்தில் நின்றவரின் பதிலை விட, “இவர் எப்ப எனக்கு பக்கத்தில வந்தவர்” என்ற கேள்வி மண்டையை குடையும்போதே எனக்கும் மனைவிக்கம் இடையில் புகுந்து எமது லைனில் சங்கமமாகிவிட்டிருந்தார். எமது லைனில் இப்போது எந்த முன்னேற்றமும் இல்லை. நான் மட்டும் ஒரு அடி பின்னகர்ந்திருந்தேன். அவை படம் எடுத்து முடிய லைன் நகருந்தானே என்ற என் நினைவில், இடி விழுந்தது.
“இவை யாரப்பா மற்றப் பக்கத்தால கொஞ்சப்பேர் மாப்பிள்ளைத் தோழனுடன் மணமேடையில் ஏறுகினம்.” என்று தலையை நீட்டி எட்டிக் கேட்ட எனக்கு சலிப்புடன் பதிலிறுத்தாள் மனைவி. “அவை பொம்பிளை வீட்டுக்காரர், சாப்பிட்டுவிட்டு வந்தவை போட்டோ எடுக்கப்போகினம்போல? என்றவளை, “அப்ப இந்த லைன்?” மனைவியின் மௌனம் என்னையும் மௌனிக்கச்செய்தது. ஆனாலும் மனம் கபாலி ஸ்ரைலில்; “நெருப்புடா.. இவங்களக் கொழுத்துடா…” என்றது.
பல தான்தோன்றித்தனமான இடைச்செருகல்கள், மாப்பிள்ளை, பொம்பிளை வீட்டாரின் உட்புகுத்தல்கள் மத்தியில் ஒருவாறாக அட்சதை போட்டு, மணமக்களை வாழ்த்தி? வரவினை உறுதிப்படுத்த கைலாகு கொடுத்து, இரண்டாம் கட்டமான சாப்பாட்டு லைனுக்கு, மனைவிக்கு பின்னால் ஓடி வந்திருந்தும், எனக்கும் மனைவிக்கும் இடையில் பத்துப்பேர். கண்காளால் என் இயலாமையைத் தெரிவித்து கோப்பையை கையில் எடுத்துக்கொண்டு லைனில் நின்றிருந்தேன். இடையிடையே “குணாபட” கமல்ஹாசன் மாதிரி வலது இடமாக ஆடி ஆடி மயைவியையும் பார்த்துக் கொண்டிருந்த போதுதான் ஞபாகத்துக்கு வந்தது பழைய நிகழ்வொன்று. மணமகனின் சித்தப்பா ஒருவரின் திருமணத்துக்கு சிறுவனாக அப்பாவுடன் சென்ற போது, அப்பாவுக்கு முறையாக கைகழுவ செம்புடன் தண்ணீர் கொடுக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக திருமண வீட்டில் சாப்பிடாமலேயே அப்பா என்னைக் கூட்டிக்கொண்டு வீட்டுக்கு போனது. ஆனால் இன்று கை கழுவாமல்? இதுதான் காலக்கொடுமை என்பது. மனம் சோர பசியோ மனதை பார்த்து “அடங்குடா முதலில் விழுங்குடா” என்றது.
கோப்பையில் உணவினைப்போட்டபின் மனைவியை தேடிச் செல்ல, இடையில் “தம்பி நீ மணியத்தின்ர பெடிதானே? இஞ்ச வா இதில பக்கத்தில இருந்து சாப்பிடு” என்று வலுக்கட்டாயமா அமரவைத்தது ஒரு பெரிசு. வேறவழி அப்பாவின் பெயர்சொல்லி அமரச்சொல்லும்போது அமராது சென்றால் மரியாதை இல்லையே. ஏக்கதுடன் அமர்ந்து சோற்றினை வாயில் வைக்க, “தம்பி கொப்பர் என்ன செய்யிறார்? என்ற அவரது கேள்வி எனக்கு பிரக்கேற வைக்க… “கொப்பர் நினைக்கிறார் போல?” என்ற பெரிசைப்பார்த்துச் சொன்னேன் “அப்பா காலமாகி ஐந்து வருசம் ஆயிட்டுது ஐயா!” என்று.
“என்ன? மணியம் செத்துப்போனானோ?” என்ற கேள்வியில் அவர் வாயில் இருந்த பயற்றங்காய் என் கோப்பையில் விழ, எனது சாப்பாட்டினை நிறைவு செய்யவேண்டி நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகிய பரிதாபத்துக்குரிய ஜந்துவாய்; “மனதுள் போங்கடா நீங்களும் உங்கட கலியாணமும்” என நினைத்தவாறு மணடபத்தை விட்டு வெளியேறி மோட்டார் சைக்கிள் விட்ட இடத்துக்கு வர, மனைவி பீடாவை மென்றுகொண்டு “எப்படி கலியாண(வீடு)ஹோல்?” என்றாள்.
நான் மோட்டார் சைக்கிளின் கிக்கரை ஓங்கி உதைத்தவாறே “மகிழ்ச்சி” என்றேன் பல்லை நரும்பியபடி.
– இக்கதை 2016 இல் உதயன் பத்திரிகையில் வெளியானது.