கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 5, 2020
பார்வையிட்டோர்: 5,963 
 

கையில் டீ டம்ளரோடு அமர நாற்காலி தேடி கடந்த 5 நிமிடங்களாக ஆணும் பெண்ணும் குழு குழுவாக அமர்ந்திருக்கும் அந்த சிற்றுண்டியகத்தின் நால பக்கமும் தன் கண்களால் துளாவி தனக்கும் தன் தோழிக்கும் அமர இருக்கை தேடி கொண்டிருந்தது குமுதினியின் விழிகள். தினமும் சாயந்திரம் மூன்று மணி முதல் நான்கு மணி வரை இப்படி தான் அந்த சிற்றுண்டியகத்தில் கூட்டம் நிரம்பி வழியும். அதனாலேயே குமுதினியும் ஷாகனாவும் பெரும்பாலும் நான்கு மணிக்கு மேல் தான் காப்பி சாப்பிட செல்வார்கள். ஆனால் இன்று ஷாகனாவிற்கு தாங்க முடியாத தலைவலி காரணத்தால் சூடாக காப்பி குடித்தால் கொஞ்சம் இதப்படும் என்று கருதி குமுதினியையும் உடன் அழைத்துவிட்டு இந்த கூட்ட நெரிசலான நேரத்தில் காபி அருந்த வந்து விட்டாள்.

சிற்றுடியகத்தின் டீ கடையில் இருந்த நெரிசலுக்கு குமுதினிக்கு மட்டுந்தான் டீ கைக்கு வந்திருக்கிறது. தலைவலிக்காக காபி குடிக்க வந்த ஷாகனா ஆணும் பெண்ணும் தெரிந்து கொண்டிருக்கும் அந்த நெரிசலில் ‘அண்ணா இங்க இன்னொரு காபி’ என்று நெரிசலின் ஒரு பக்கம் நின்று கத்தி கொண்டிருந்தாள். அவள் வருவதற்குள் இருக்கை பிடிக்கும் இலக்கோடு 5 நிமிடங்களாக போராடி கொண்டிருக்கும் குமுதினியின் விழிகளில் இறுதியாக வலது புற ஓரத்தில் இருந்த அந்த வட்ட மேஜையையும் அதனை சுற்றி இருந்த நான்கு ஒற்றை நாற்காலி இருக்கையையும் தங்கள் காபி முறையை முடித்த நான்கு பேர் காலி செய்து விட்டு கிளம்புவது தென்பட தன்னை போலவே கூட்டத்தில் நாற்காலிக்காக தன் கண்களால் வலை வீசி கொண்டிருக்கும் மற்றவர் யாரேனும் அதனை கைப்பற்றும் முன்பு தான் அதனை கைப்பற்றும் இலக்கு கொண்டு, வேகமாக சென்று அந்த இருக்கையை பிடித்துவிட்டு, ஷாகனாவை தேடி தன் விழிகளை அந்த டீ கடை கூட்டத்தில் செலுத்த வெற்றிகரமாக கையில் டம்ளரோடு அந்த கூட்டத்தில் இருந்து மீண்டு வந்து கொண்டிருந்தாள் ஷாகனா. தான் இருக்கும் இடத்தை ஷாகனாவிற்கு தென்பட செய்ய ஒற்றை கையை தலைக்கு மேல் உயர்த்தி காற்றில் ஆட்டினாள் குமுதினி. குமுதினியை தேடி கண்கள் அலைபாய செய்து கொண்டிருந்த ஷாகனா காற்றில் அலைந்து கொண்டிருந்த அந்த கைகளை அடுத்த சில விநாடிகளில் கண்டுவிட்டாள். நடுவே ஆங்காங்கே நின்றிருந்த ஒரு சிலரிடம் எக்ஸ்கூஸ்மி என்று அனுமதி பெற்று அந்த வல பக்க இருக்கையை நோக்கி முன்னேறி சென்று குமுதினி எதிரே அமர்ந்தாள்.

‘ஷப்பா. காஃபியை கையில வாங்க முன்னாடி ஒரு வழி ஆயிட்டேன் அந்த கரெளட்ல.’

“ஆமா நானும் தான்.அப்புறம் இந்த சேர் பிடிக்க அதைவிட பெரிய பாடா போச்சு”

“இவ்ளோ பெரிய ஆபிஸிற்கு இத்னோன்டு கஃபிடேரியா கட்டி வச்சா இப்படி தான் ஆகும். அறிவு கெட்டவனுங்க” என்று பேசிக்கொண்டே இருவரும் தங்கள் கைகளில் இருந்த சுடுபானத்தை பருக மேஜை மீது இருந்த ஷாகனாவின் தொலைபேசி அலறியது. அழைப்பை ஒற்றை விராலால் துண்டித்து ‘அப்புறம் அந்த கோடிங் லாஜிக் கண்டுபிடிச்சியா’ என்று காபியை குடித்துக்கொண்டே பேச்சை தொடர்ந்தாள் ஷாகனா.

‘அது ஒரு புது லாஜிக்…’ என்று குமுதினி தொடர மீண்டும் ஷாகனாவின் போன் அலறியது. அலட்சியமாக அதை தன் ஒற்றை விரலால் துண்டித்துவிட்டே ‘ம்ம் நீ சொல்லு’ என்றாள் ஷாகனா.

‘’அதான் அதுக்கு ஒரு புது லாஜிக் ட்ரை பண்ணேன். வந்து….’ என்று குமுதினி தொடர மீண்டும் அந்த தொலைபேசி அவளை இடைமறித்தது. ‘ப்ப்ஜ்’ என்ற எரிச்சலோடு அதை துண்டித்தாள் ஷாகனா. ஏற்கனவே குடித்து காலி ஆகியிருந்த டீ கப்பை கையில் பிடித்தபடியே ஷாகனா துண்டிக்கும் அந்த இணைப்பு யாரென்று இப்பொழுது தான் அவள் டிஸ்பிளேயை பார்க்கிறாள் குமுதினி.

‘இரு முதல்ல இந்த நம்பர பிளாக் பண்ணிகிட்டு வரேன். அப்ப தான் நிம்மதியா இருக்க முடியும்’ என்று முனுமுனுத்தபடியே பாதி காலி செய்யப்பட்டிருந்த தன் கையில் இருந்த காபி டம்ளரை மேஜையில் வைத்துவிட்டு தன் இருகைகளாலும் அந்த கைபேசியை எடுத்தாள் ஷாகனா.

‘நேற்று வரை நல்லா தானா பேசிகிட்டு இருந்தா அவனோட. அதுக்குள்ள என்ன ஆச்சு இரண்டு பேருக்கு நடுவிலேயும். அதுவும் பிளாக் பண்ற அளவுக்கு’ என்று மனதிற்குள் குழம்பி கொண்டிருந்தாள் குமுதினி.

வேக வேகமாக அந்த நம்பரை பிளாக் செய்து பெருமூச்சு எறிந்தபடி கைபேசியை மேஜையில் வைத்துவிட்டு மீண்டும் காபி டம்ப்ளரை கையில் எடுத்தாள் ஷாகனா.

‘டீ என்ன ஜனாவோட சண்டையா. ஏன் முகத்தில இவ்ளோ கோபம்’ என்று தன் கையில் இருந்த காலி டம்ப்ளரை மேஜையில் வைத்தபடியே கேட்டாள் குமுதினி.

‘சண்டையெல்லாம் இல்ல. அவனுக்கும் எனக்கும் செட் ஆகாதுன்னு ஒரு வாரமாவே தோணிட்டு இருந்திச்சு. அதான் நேத்து ராத்திரி பேசுறப்பா இனிமே நம்ம பேச வேண்டாம் பிரேக்கர் பண்ணிக்கலாம்னு கிளியரா சொல்லிட்டேன். பட் அவன் புரிஞ்சிக்காம திரும்ப திரும்ப டிஸ்டர்ப் பண்ணிகிட்டு இருக்கான்.’ என்று இடை இடையே நிறுத்தி காபியை ரசித்து குடித்தபடியே கூறினாள் ஷாகனா.

‘என்ன சொல்ற. நாலு வருஷமா லவ் பண்ணிகிட்டு இப்ப இப்படி பேசுற’ என்று ஆச்சரியத்தோடு கேட்டாள் குமுதினி.

‘ஆமாடீ லவ் ஓகே. ஆனா கல்யாணம்னு வரப்ப ரெண்டு வீட்டுக்கும் செட் ஆகாதுடி. அது போக போக தான் புரியுது. அதுக்காக அம்மா அப்பாவ கஷ்ட படுத்திட்டு ஓடி போய் கல்யாணம் பண்ண எனக்கு விருப்பம் இல்ல’ என்று காலி செய்த காபி டம்ளரை மேஜையில் வைத்த படியே கூறினாள் ஷாகனா.

மூன்று வருடங்களுக்கு முன்னர் இதே காரணத்தை கூறி ஆறு வருட காதலுக்கு பின்னர் தன்னை உதறி விட்டு போன தன் காதலனின் நினைவு குமுதினிக்கு வர சற்று மெளனமாக இருந்துவிட்டு பின்பு தொடர்ந்தாள் குமுதினி. ‘இருந்தாலும் ஒருத்தர லவ் பண்ணிகிட்டு இன்னொருத்தர எப்படி மேரேஜ்…’ என்று தயங்கி தயங்கி அவள் இழுக்க.

‘அதுக்கு என்ன பண்றது.செட் ஆகாம கல்யாணம் பண்ணிகிட்டு கஷ்ட படுறதுக்கு இது எவ்வளவோ பெட்டர். இப்ப என்ன தப்பு பண்ணி கற்பையா இழந்திட்டேன். ஜஸ்ட் பேசி பழகினோம் அவ்ளோதானே.’ என்று அசால்டாக பதில் கூறினாள் ஷாகனா.

‘கற்பு உடம்புக்கு மட்டுந்தான் இருக்கா. மனசிக்கு இல்லையா.‌ஒருத்தர நினைச்ச மனசுல எப்படி இன்னொருத்தர நினைக்க முடியும்.கல்யாணம் பண்ணிக்க செட் ஆகாதுனா எதுக்கு லவ் பண்ணணும்.லவ் பண்ணும் போது கோமாவில் இருந்த மாதிரி திடீர்னு இவங்களுக்கு கல்யாணத்துக்கு காதலிச்சு அந்த உறவு செட் ஆகாதுன்னு எப்படி தோணுது’என்று தன்னுள் நினைத்தபடியே அமைதியாக மேஜையை பார்த்தபடி குனிந்து அமர்ந்திருந்தாள் குமுதினி.

‘என்ன பேச்சையே காணோம். உனக்கும் தான் சொல்றேன். விட்டுட்டு போனவன நினைச்சு ஆல்ரெடி மூணு வருஷத்த வேஸ்ட் பண்ணியது போதும். ஒழுங்கா மேட்ரி மோனில போய் ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ’ என்று அதட்டலாய் கூறினாள் ஷாகனா.

அதற்கும் மெளனமாகவே குமுதினி அமர்ந்திருக்க அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல் தானும் மெளனமானாள் ஷாகனா. சிறிது நேர மெளன இடைவெளிக்கு பிறகு இருவரும் பணிக்கு திரும்பினர்.

அன்று பணி முடித்து வீடு திரும்பிய பிறகும் அந்த உரையாடல் மீண்டும் மீண்டும் குமுதினியின் காதுகளில் ஒலித்து கொண்டிருந்தது.

அவளின் காதல் வாழ்க்கை முடிந்து பிறகு எதிலும் பிடிப்பில்லாமல் ஏதோ உயிருள்ள வரை வாழ வேண்டும் என்ற நினைப்பிலும் வாழ பிடிக்காவிட்டாலும் கடவுள் தந்த வாழ்க்கையை முடிக்க தனக்கு உரிமை இல்லை என்ற எண்ணத்தினாலும் பத்துக்கு பத்து என்ற ஒற்றை குடித்தன அறை ஒன்றை வாடைகைக்கு எடுத்து அதிலேயே ஒரு மூலையில் சமையல் செய்து இன்னொரு மூலையில் தன் உடலை சுருக்கி உறங்கி, தினமும் காலையில் எழுந்து வேலைக்கு சென்று ஒரு பிடிப்பில்லா இயந்திர வாழ்க்கையை தான் அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

இப்படி யாராவது தன் காதல் பற்றியோ தன் காதலன் பற்றியோ பேசி விட்டாள் அந்த இயந்திர வாழ்க்கையும் பசி தூக்கம் மறந்து இன்னும் முடங்கி கொள்ளும் அவளின் அந்த நாள். இன்றும் அப்படிப்பட்ட ஒரு நாள் தான் அவளுக்கு.

‘எனக்கும் அம்மா அப்பா இருந்திருந்தா எனக்காக இல்லாட்டியும் அவங்களுக்காக இந்நேரம் நான் கல்யாணம் பண்ணியிருந்திருப்பேனோ என்னவோ. அப்படி யாரும் இல்லாததால தான் இன்னும் என் மனசோட கற்பை காப்பாத்திகிட்டு மனசாட்சிபடி வாழ முடியுது. வாழ்க்கையோட உண்மையை காப்பாத்திக்க தான் கடவுள் எனக்கு உறவே தரலபோல’ என்று மனதிற்குள் நினைத்தபடியே அன்றைய இரவு உணவிற்கு அடுப்பின் அருகே இருந்த தண்ணீர் பானையில் இருந்து தண்ணீரை மோந்து குடித்துவிட்டு வாழ்க்கையின் மன உண்மைகளை காப்பாத்தி தான் வாழ்ந்து கொண்டிருக்கும் திருப்தியில் டம்ளரை பானை மேல் கவிழ்த்தாள் குமுதினி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *